Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 105:1-11

105 கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
    அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்.
    அவர் செய்யும் அற்புதங்களைத் தேசங்களுக்குக் கூறுங்கள்.
கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்.
    அவருக்குத் துதிகளைப் பாடுங்கள்.
    அவர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைக் குறித்துக் கூறுங்கள்.
கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்துப் பெருமைகொள்ளுங்கள்.
    ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரைத் தேடிவந்தீர்கள். சந்தோஷமாயிருங்கள்!
வல்லமைக்காக கர்த்தரிடம் போங்கள்.
    உதவிக்காக எப்போதும் அவரிடம் போங்கள்.
அவர் செய்யும் வியப்பிற்குரிய காரிங்களை நினைவுகூருங்கள்.
    அவர் செய்த அதிசயங்களையும் ஞானமுள்ள முடிவுகளையும் எண்ணிப் பாருங்கள்.
நீங்கள் அவரது பணியாளாகிய ஆபிரகாமின் சந்ததியினர்.
    நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாக்கோபின் சந்ததியினர்.

கர்த்தரே நமது தேவன்.
    கர்த்தர் உலகம் முழுவதையும் ஆளுகிறார்.

தேவனுடைய உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருங்கள்.
    ஆயிரம் தலைமுறை வரையிலும் அவரது கட்டளைகளை நினைவுகூருங்கள்.
தேவன் ஆபிரகாமோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.
    தேவன் ஈசாக்கோடு ஒரு வாக்குறுதியைச் செய்தார்.
10 பின்பு அவர் அதனை யாக்கோபிற்கு ஒரு சட்டமாகச் செய்தார்.
    தேவன் இஸ்ரவேலோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.
    அது என்றென்றும் தொடரும்!
11 தேவன்: “நான் கானானின் தேசத்தை உனக்குக் கொடுப்பேன்.
    அத்தேசம் உனக்குச் சொந்தமாகும்” என்றார்.

சங்கீதம் 105:37-45

37 பின்பு தேவன் தமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றார்.
    அவர்கள் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துச் சென்றனர்.
    தேவனுடைய ஜனங்கள் எவரும் தடுக்கிவிழவில்லை.
38 தேவனுடைய ஜனங்கள் செல்வதைக் கண்டு எகிப்து மகிழ்ந்தது.
    ஏனெனில் அவர்கள் தேவனுடைய ஜனங்களுக்கு அஞ்சினார்கள்.
39 தேவன் தமது மேகத்தை ஒரு போர்வையாகப் பரப்பினார்.
    தமது ஜனங்களுக்கு இரவில் ஒளி தரும்படி ஒரு நெருப்புத்தூணை தேவன் பயன்படுத்தினார்.
40 ஜனங்கள் உணவுக்காக வேண்டினார்கள், தேவன் காடைகளைக் கொணர்ந்தார்.
    தேவன் பரலோகத்திலிருந்து மிகுதியான உணவைக் கொடுத்தார்.
41 தேவன் கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் கொப்பளித்து வெளியேறிற்று.
    பாலைவனத்தில் ஒரு நதி ஓட ஆரம்பித்தது.
42 தேவன் அவரது பரிசுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார்.
    தேவன் அவரது தாசனாகிய ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார்.
43 தேவன் அவரது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வரவழைத்தார்.
    மகிழ்ச்சியான பாடல்களைப் பாடிக்கொண்டு ஜனங்கள் களிப்போடு எகிப்தைவிட்டுப் புறப்பட்டு வந்தார்கள்!
44 பிற ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டை தேவன் தமது ஜனங்களுக்குக் கொடுத்தார்.
    பிற ஜனங்கள் உழைத்துப் பெற்ற பொருட்களை தேவனுடைய ஜனங்கள் பெற்றனர்.
45 ஏன் தேவன் இதைச் செய்தார்?
    அப்போதுதான் அவரது ஜனங்கள் அவரளித்த சட்டங்களுக்குக் கீழ்ப்படிய முடியும்.
அவர்கள் கவனமாக அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.

கர்த்தரைத் துதியுங்கள்!

நீதிமொழிகள் 4:10-27

10 மகனே, நான் சொல்வதைக் கவனி. நான் சொல்லுகிறபடி செய்தால் நீ நீண்ட காலம் வாழலாம். 11 நான் உனக்கு ஞானத்தைப்பற்றிப் போதித்திருக்கிறேன். நான் நேரான பாதையில் உன்னை வழிநடத்திச் சென்றிருக்கிறேன். 12 இப்பாதையில் தொடர்ந்து செல், உனது கால்கள் எந்த வலைக்குள்ளும் அகப்படாது. இடறிவிழாமல் உன்னால் ஓடமுடியும். நீ செய்ய முயலுகிற செயல்களில் எல்லாம் பாதுகாப்பாக இருக்கலாம். 13 எப்போதும் இந்த அறிவுரைகளை நினைவில் வைத்துக்கொள். அவற்றை மறக்காதே. அவை உனது ஜீவனாகும்.

14 தீயவர்கள் நடந்துசெல்லுகிற பாதையில் நீ போக வேண்டாம். அவர்களைப்போல வாழாதே. அவர்களைப் போன்று இருக்கவும் முயலவேண்டாம். 15 பாவத்திலிருந்து விலகி இரு. அதன் அருகில் போகாதே. நேராகக் கடந்துசெல். 16 தீமையைச் செய்துமுடிக்கும்வரை கெட்டவர்களால் தூங்கமுடியாது. அடுத்தவனைப் புண்படுத்தாமல் அவர்களால் தூங்கமுடியாது. 17 அவர்களால் மற்றவர்களுக்குத் தீமை செய்யாமலும் மற்றவர்களைப் புண்படுத்தாமலும் வாழமுடியாது.

18 நல்லவர்கள் அதிகாலை வெளிச்சத்தைப் போன்றவர்கள். சூரியன் உதிக்கும்போது நாளானது பிரகாசமும், மகிழ்ச்சியும் அடைகின்றது. 19 ஆனால் தீயவர்களோ இருண்ட இரவைப் போன்றவர்கள். அவர்கள் இருளில் காணாமற்போவார்கள். அவர்கள் தங்களால் பார்க்க முடியாதவற்றில் விழுந்துவிடுவார்கள்.

20 என் மகனே, நான் சொல்லுகின்றவற்றைக் கவனி. என் வார்த்தைகளை ஜாக்கிரதையுடன் கேள். 21 என் வார்த்தைகள் உன்னைவிட்டுப் போகாதபடி பார்த்துக்கொள். நான் சொல்லுகின்றவற்றை நினைவுபடுத்திக்கொள். 22 என்னைக் கவனிக்கின்றவர்களுக்கு எனது போதனைகள் வாழ்வைத் தரும். எனது வார்த்தைகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். 23 உன் எண்ணங்களில் எச்சரிக்கையாக இருப்பது உனக்கு மிக முக்கியமானதாகும். உன் எண்ணங்கள் உன் வாழ்வைக் கட்டுப்படுத்தும்.

24 உண்மையை வளைக்காதே. சரியில்லாதவற்றைச் சரியென்று சொல்லாதே. பொய்களைச் சொல்லாதே. 25 நல்ல மற்றும் ஞானமுள்ள உன் குறிக்கோள்களிலிருந்து விலகிவிடாதே. 26 நீ செய்கின்றவற்றில் எச்சரிக்கையாக இரு. நல்ல வாழ்க்கையை நடத்து. 27 நேரான பாதையில் இருந்து விலகாதே. அப்பாதையே நல்லதும் சரியானதும் ஆகும். ஆனால் எப்பொழுதும் தீமையில் இருந்து விலகியிரு.

லூக்கா 6:12-19

அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தல்

(மத்தேயு 10:1-4; மாற்கு 3:13-19)

12 அக்காலத்தில் இயேசு பிரார்த்தனை செய்யும்பொருட்டு ஒரு மலைக்குச் சென்றார். இரவு முழுவதும் தேவனிடம் பிரார்த்தனை செய்தவாறே அம்மலையில் இருந்தார். 13 மறு நாள் காலையில் இயேசு தனது சீஷர்களை அழைத்தார். அவர்களுள் பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு “அப்போஸ்தலர்கள்” என்று பெயரிட்டார். அவர்கள்:

14 சீமோன் (இயேசு அவனுக்கு பேதுரு என்று பெயரிட்டார்)

அந்திரேயா என்னும் பேதுருவின் சகோதரன்,

யாக்கோபு,

யோவான்,

பிலிப்பு,

பர்தொலொமேயு,

15 மத்தேயு,

தோமா,

யாக்கோபு (அல்பேயுவின் குமாரன்),

சீமோன் (செலோத்தே என்று அழைக்கப்பட்டவன்)

16 யூதா, (யாக்கோபின் குமாரன்) யூதாஸ்காரியோத் என்பவர்கள் ஆவார்கள்.

இந்த யூதாஸ் இயேசுவைப் பகைவர்களிடம் ஒப்படைத்தவனாவான்.

போதனையும்-குணமாக்குதலும்

(மத்தேயு 4:23-25; 5:1-12)

17 இயேசுவும் அவருடைய சீஷர்களும் மலையிலிருந்து இறங்கினர். இயேசு சமவெளியான இடத்தில் நின்றார். அவருடைய சீஷர்கள் கூட்டமாக அங்கே குழுமியிருந்தனர். மேலும் யூதேயா, எருசலேம் ஆகிய பகுதிகளிலிருந்தும், தீரு, சீதோன் ஆகிய கடலோரத்துப் பட்டணங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் அங்கு வந்திருந்தனர். 18 அவர்கள் இயேசுவின் போதனைகளைக் கேட்கவும் தங்கள் நோய்களில் இருந்து குணம் பெறவும் அங்கு வந்தனர். பிசாசின் அசுத்த ஆவிகளால் துன்புற்ற மக்களை இயேசு குணமாக்கினார். 19 எல்லா மக்களும் இயேசுவைத் தொடும்படியாக முயன்றனர். ஏனெனில் அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டது. இயேசு அவர்கள் எல்லோரையும் குணப்படுத்தினார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center