Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 105:1-11

105 கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
    அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்.
    அவர் செய்யும் அற்புதங்களைத் தேசங்களுக்குக் கூறுங்கள்.
கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்.
    அவருக்குத் துதிகளைப் பாடுங்கள்.
    அவர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைக் குறித்துக் கூறுங்கள்.
கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்துப் பெருமைகொள்ளுங்கள்.
    ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரைத் தேடிவந்தீர்கள். சந்தோஷமாயிருங்கள்!
வல்லமைக்காக கர்த்தரிடம் போங்கள்.
    உதவிக்காக எப்போதும் அவரிடம் போங்கள்.
அவர் செய்யும் வியப்பிற்குரிய காரிங்களை நினைவுகூருங்கள்.
    அவர் செய்த அதிசயங்களையும் ஞானமுள்ள முடிவுகளையும் எண்ணிப் பாருங்கள்.
நீங்கள் அவரது பணியாளாகிய ஆபிரகாமின் சந்ததியினர்.
    நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாக்கோபின் சந்ததியினர்.

கர்த்தரே நமது தேவன்.
    கர்த்தர் உலகம் முழுவதையும் ஆளுகிறார்.

தேவனுடைய உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருங்கள்.
    ஆயிரம் தலைமுறை வரையிலும் அவரது கட்டளைகளை நினைவுகூருங்கள்.
தேவன் ஆபிரகாமோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.
    தேவன் ஈசாக்கோடு ஒரு வாக்குறுதியைச் செய்தார்.
10 பின்பு அவர் அதனை யாக்கோபிற்கு ஒரு சட்டமாகச் செய்தார்.
    தேவன் இஸ்ரவேலோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.
    அது என்றென்றும் தொடரும்!
11 தேவன்: “நான் கானானின் தேசத்தை உனக்குக் கொடுப்பேன்.
    அத்தேசம் உனக்குச் சொந்தமாகும்” என்றார்.

சங்கீதம் 105:37-45

37 பின்பு தேவன் தமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றார்.
    அவர்கள் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துச் சென்றனர்.
    தேவனுடைய ஜனங்கள் எவரும் தடுக்கிவிழவில்லை.
38 தேவனுடைய ஜனங்கள் செல்வதைக் கண்டு எகிப்து மகிழ்ந்தது.
    ஏனெனில் அவர்கள் தேவனுடைய ஜனங்களுக்கு அஞ்சினார்கள்.
39 தேவன் தமது மேகத்தை ஒரு போர்வையாகப் பரப்பினார்.
    தமது ஜனங்களுக்கு இரவில் ஒளி தரும்படி ஒரு நெருப்புத்தூணை தேவன் பயன்படுத்தினார்.
40 ஜனங்கள் உணவுக்காக வேண்டினார்கள், தேவன் காடைகளைக் கொணர்ந்தார்.
    தேவன் பரலோகத்திலிருந்து மிகுதியான உணவைக் கொடுத்தார்.
41 தேவன் கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் கொப்பளித்து வெளியேறிற்று.
    பாலைவனத்தில் ஒரு நதி ஓட ஆரம்பித்தது.
42 தேவன் அவரது பரிசுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார்.
    தேவன் அவரது தாசனாகிய ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார்.
43 தேவன் அவரது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வரவழைத்தார்.
    மகிழ்ச்சியான பாடல்களைப் பாடிக்கொண்டு ஜனங்கள் களிப்போடு எகிப்தைவிட்டுப் புறப்பட்டு வந்தார்கள்!
44 பிற ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டை தேவன் தமது ஜனங்களுக்குக் கொடுத்தார்.
    பிற ஜனங்கள் உழைத்துப் பெற்ற பொருட்களை தேவனுடைய ஜனங்கள் பெற்றனர்.
45 ஏன் தேவன் இதைச் செய்தார்?
    அப்போதுதான் அவரது ஜனங்கள் அவரளித்த சட்டங்களுக்குக் கீழ்ப்படிய முடியும்.
அவர்கள் கவனமாக அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.

கர்த்தரைத் துதியுங்கள்!

யோசுவா 1:1-11

இஸ்ரவேலரை வழிநடத்துவதற்கு கர்த்தர் யோசுவாவைத் தெரிந்தெடுத்தல்

மோசே கர்த்தருடைய ஊழியனாக இருந்தான். நூனின் குமாரனாகிய யோசுவா மோசேயின் உதவியாளனாக இருந்தான். மோசே மரித்த பிறகு, கர்த்தர் யோசுவாவிடம் பேசினார். கர்த்தர், எனது ஊழியனாகிய மோசே மரித்துவிட்டான். இப்போது நீயும் இந்த ஜனங்களும் யோர்தான் நதியைத் தாண்டி, நான் இஸ்ரவேல் ஜனங்களாகிய உங்களுக்குக் கொடுக்கின்ற தேசத்திற்குள் நீங்கள் செல்லவேண்டும். நான் இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுப்பதாக மோசேக்கு வாக்களித்திருந்தேன். எனவே நீங்கள் காலடி எடுத்து வைக்கும் இடத்தையெல்லாம் உங்களுக்கே கொடுப்பேன். பாலைவனத்திலிருந்தும், லீபனோனிலிருந்தும் பெரிய நதியாகிய ஐபிராத்து வரைக்குமான ஏத்திய ஜனங்களுக்குரிய, தேசம் உங்களுக்குரியதாகும். மற்றும் உங்கள் எல்லைக்குள் இங்கிருந்து (சூரியன் மறைகிற இடமாகிய) மேற்கில் மத்தியதரைக் கடல் வரைக்குமுள்ள தேசம் இருக்கும். நான் மோசேயோடு இருந்தது போல் உன்னோடும் இருப்பேன். உன் ஆயுள் உள்ளமட்டும் உன்னை யாரும் எதிர்க்கவோ தடுக்கவோ முடியாது. நான், உன்னைக் கைவிடமாட்டேன். ஒருபோதும் உன்னைவிட்டு விலகமாட்டேன்.

“யோசுவா, நீ வல்லமையும், தைரியமும் உள்ளவனாக இருக்கவேண்டும்! இந்த ஜனங்கள் தமக்குரிய தேசத்தைப் பெறும்படி நீ அவர்களை வழிநடத்த வேண்டும். இந்நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக நான் அவர்கள் முன்னோர்களுக்கு வாக்களித்தேன். ஆனால் நீயும் மற்றொரு காரியத்தில் உறுதியோடும், தைரியத்தோடும் இருக்க வேண்டும். எனது ஊழியனாகிய மோசே உனக்குக் கொடுத்த கட்டளைகளுக்குக் கண்டிப்பாக நீ கீழ்ப்படியவேண்டும். நீ அவற்றைச் சரியாகப் பின்பற்றினால், நீ செய்கிற எல்லாவற்றிலும் வெற்றி அடைவாய். சட்ட புத்தகத்தில் எழுதியிருப்பவற்றை எப்போதும் நினைவுகூர்ந்து, இரவும் பகலும் அதைப்படி. அப்போது அப்புத்தகத்தில் எழுதியிருப்பவைகளுக்கு நீ கீழ்ப்படிய முடியும். இதைச் செய்தால், நீ செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் ஞானமுள்ளவனாய் வெற்றி காண்பாய். நீ உறுதியும், தைரியமும் உடையவனாய் இருக்க வேண்டுமெனக் கட்டளையிட்டதை நினைவில் வைத்துக்கொள். எனவே பயப்படாதே, நீ போகுமிடங்களில் எல்லாம் தேவனாகிய கர்த்தர் உன்னோடிருப்பார்” என்றார்.

யோசுவா பதவி ஏற்குதல்

10 யோசுவா, ஜனங்களின் தலைவர்களுக்கு ஆணைகளைக் கொடுத்தான். 11 அவன், “முகாம்களுக்குச் சென்று ஜனங்களிடம் தயாராகும்படி கூறுங்கள், மேலும் ஜனங்களிடம் ‘கொஞ்சம் உணவைத் தயாரியுங்கள். இன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் நாம் யோர்தான் நதியைக் கடக்கப் போகிறோம். தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற தேசத்திற்குப் போய் அதைச் சுதந்தரிப்போம்’ எனச் சொல்லுங்கள்” என்றும் சொன்னான்.

1 தெசலோனிக்கேயர் 3:1-5

நாங்கள் உங்களிடம் வர முடியவில்லை. ஆனால் காத்திருப்பது மிகவும் கொடுமையாக இருந்தது. ஆகையால் உங்களிடம் தீமோத்தேயுவை அனுப்பத் தீர்மானித்தேன். நான் மட்டும் அத்தேனேயில் இருந்தேன். தீமோத்தேயு எங்கள் சகோதரன். தேவனுக்காக அவன் எங்களோடு பணியாற்றுகிறான். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை நாங்கள் கூறிட தேவன் உதவுகிறார். நீங்கள் உங்கள் விசுவாசத்தில் பலம் பெறவும், உங்களை உற்சாகமூட்டவும் தீமோத்தேயுவை அனுப்பி வைத்தோம். எங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களால் நீங்கள் மனம் தவிக்காமல் இருக்கும்பொருட்டு தீமோத்தேயுவை அனுப்பினோம். இத்தகைய துன்பங்களைச் சகித்துக்கொள்ளவே நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நாங்கள் உங்களோடு இருந்தபோது கூட இப்படி பலவிதமான துன்பங்களை ஏற்க வேண்டும் என்பது பற்றி ஏற்கெனவே கூறியிருக்கிறோம். எனவே இவை நாங்கள் சொன்னபடிதான் நிகழ்ந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்காகத்தான் நான் உங்களிடம் தீமோத்தேயுவை, உங்கள் விசுவாசத்தைப்பற்றி அறிந்துகொள்ள அனுப்பி வைத்தேன். மேலும் என்னால் காத்திருக்க முடியாத நிலையில் தான் நான் தீமோத்தேயுவை அனுப்பி வைத்தேன். மக்களைத் தீயவற்றினால் இழுத்து கவர்ச்சிக்கும் பிசாசு உங்களைத் தோல்வியுறச் செய்துவிடுவானோ என்றும் எங்களின் உழைப்பு வீணாய்ப் போகுமோ என்றும் நான் பயந்திருந்தேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center