Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 40:1-8

இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்.

40 கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் கேட்டார்.
    அவர் என் கூப்பிடுதலைக் கேட்டார்.
அழிவின் குழியிலிருந்து கர்த்தர் என்னைத் தூக்கியெடுத்தார்.
    சேற்றிலிருந்து என்னைத் தூக்கினார்.
என்னைத் தூக்கியெடுத்துப் பாறையின் மீது வைத்தார்.
    என் பாதங்களை உறுதியாக்கினார்.
தேவனை வாழ்த்திப் பாடும் புதுப்பாடலை கர்த்தர் என் வாயில் வைத்தார்.
    எனக்கு நிகழ்ந்த காரியங்களைப் பலர் காண்பார்கள்.
    அவர்கள் தேவனைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள் கர்த்தரை நம்புவார்கள்.

ஒருவன் கர்த்தரை நம்பினால் அவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான்.
    பிசாசுகளிடமும், பொய்த்தெய்வங்களிடமும் உதவி கேட்டு செல்லாத ஒருவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான்.
எனது தேவனாகிய கர்த்தாவே, நீர் அற்புதமான காரியங்கள் பலவற்றைச் செய்திருக்கிறீர்!
    எங்களுக்காக அற்புதமான திட்டங்களை வகுத்திருக்கிறீர்!
கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை!
    நீர் செய்த காரியங்களைக் குறித்து நான் மீண்டும், மீண்டும் கூறுவேன்.
    அவை எண்ணிலடங்காதவை.

கர்த்தாவே, நீர் இவற்றை எனக்குத் தெளிவாக்கினீர்!
    உமக்குப் பலிகளோ, தானியக் காணிக்கைகளோ தேவையில்லை.
    உமக்குத் தகன பலிகளோ, பாவப்பரிகார பலிகளோ தேவையில்லை.
எனவே நான், “இதோ, நானிருக்கிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும்.
    நான் வருகிறேன் புத்தகத்தில் என்னைக் குறித்து இது எழுதப்பட்டிருக்கிறது.
என் தேவனே, நீர் விரும்புவதைச் செய்ய நான் விரும்புகிறேன்.
    உமது போதனைகளை நான் படித்திருக்கிறேன்.”

லேவியராகமம் 15:25-31

25 “ஒருத்திக்கு மாதவிலக்கு அல்லாத நாட்களிலும் அவளிடம் இரத்தம் கசிந்தால் அப்போதும் அவள் விலக்கானவள் போலவே கருதப்பட வேண்டும். 26 அந்த நாட்களிலும் அவள் படுக்கும் படுக்கையும் விலக்கான நாட்களுக்குரிய படுக்கை போன்று தீட்டாகும். அவள் அமரும் இருக்கையும் விலக்கத் தீட்டைப் போன்றே கருதப்படும். 27 இத்தகையவற்றைத் தொடுகிற எவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலை வரை தீட்டாய் இருப்பான். 28 அவளது தீட்டு நின்றதும் ஏழு நாட்கள் அவள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகே அவள் சுத்தமாகிறாள். 29 எட்டாவது நாளில் அவள் இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரு புறாக்குஞ்சுகளையோ கொண்டு வந்து அவற்றை ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 30 ஆசாரியன் அவற்றில் ஒன்றைப் பாவப்பரிகார பலியாகவும், இன்னொன்றை தகன பலியாகவும் செலுத்த வேண்டும். கர்த்தருடைய சந்நிதியில் அவளை இவ்வாறு ஆசாரியன் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.

31 “இஸ்ரவேல் ஜனங்கள் தீட்டு இல்லாதவர்களாக இருக்க எச்சரிக்கை செய்யுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் எனது ஆராதனை கூடாரத்தைத் தீட்டுள்ளதாக்குவதுடன், அவர்கள் அழிந்தும் போவார்கள்” என்று கூறினார்.

லேவியராகமம் 22:1-9

22 தேவனாகிய கர்த்தர் மோசேயிடம், “ஆரோனிடமும் அவனது குமாரர்களிடமும் கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் எனக்குக் கொடுக்கும் பொருட்கள் பரிசுத்தமானவையாக இருக்கும். அவை என்னுடையவை. எனவே ஆசாரியர்களாகிய நீங்கள் அவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் பரிசுத்த பொருட்களை உங்கள் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தினால் நீங்கள் என் பெயருக்கு மரியாதை செலுத்தவில்லை என்று பொருள்படும். நானே கர்த்தர். உங்களது சந்ததியார் எவரும் அப்பொருட்களைத் தொட்டால் அவர்கள் தீட்டுள்ளவர்களாகிறார்கள். அவர்கள் என்னிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அப்பொருட்களை எனக்குக் கொடுத்தனர். நானே கர்த்தர்.

“ஆரோனின் சந்ததிகளில் எவருக்காவது தொழுநோய் இருந்தால் அல்லது உடற்கழிவுகள் இருந்தால் அவனது தீட்டு நீங்கும்வரை பரிசுத்த உணவை உண்ணக்கூடாது. இது, தீட்டுள்ள ஆசாரியர்கள் அனைவருக்கும் உரிய விதியாகும். ஒரு ஆசாரியன் பிணத்தைத் தொடுவதன் மூலமோ, தன் விந்துக்கழிவின் மூலமோ தீட்டு அடையலாம். தீட்டுள்ள எந்த ஊர்கின்ற மிருகங்களை அவன் தொட்டாலும் தீட்டு அடையலாம். தீட்டுள்ள மனிதனைத் தொட்டாலும் ஆசாரியன் தீட்டு அடையலாம். எது அவனைத் தீட்டுப்படுத்தியது என்பது ஒரு பொருட்டல்ல. ஒருவன் மேற்கூறியவற்றுள் ஏதாவது ஒன்றினைத் தொட்டால் அதன் மூலம் அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருக்கிறான். அவன் பரிசுத்தமான உணவு வகைகளில் எதையும் தின்னக் கூடாது. அவன் தண்ணீரால் தன்னைக் கழுவிக்கொண்டாலும் அவன் பரிசுத்த உணவை உண்ணக் கூடாது. சூரியன் மறைந்த பிறகே அவன் தீட்டு இல்லாதவன் ஆகிறான், பிறகு அவன் பரிசுத்த உணவை உண்ணலாம்.

“ஒரு மிருகம் தானாகவோ அல்லது இன்னொரு மிருகத்தாலோ செத்துப் போயிருக்கலாம். எனினும் ஒரு ஆசாரியன் அதனை உண்ணக்கூடாது. அவன் அதனை உண்டால் அதனால் தீட்டுள்ளவன் ஆகிறான். நானே கர்த்தர்.

“ஆசாரியன் எனக்குச் சேவை செய்வதற்கென்று சிறப்பான நேரங்கள் உள்ளன. அந்த நேரங்களில் அவர்கள் கவனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். பரிசுத்தமானவற்றைப் பரிசுத்தமற்றதாகச் செய்துவிடக் கூடாது. அவர்கள் கவனமாக இருந்தால் அழிந்து போகமாட்டார்கள். கர்த்தராகிய நான் அவர்களைச் சிறப்பான வேலைக்கென்று தனியாகப் பிரித்துவைத்திருக்கிறேன்.

2 கொரி 6:14-7:2

கிறிஸ்தவர் அல்லாதவர்களோடு வாழ்வது எப்படி?

14 நீங்கள் விசுவாசம் இல்லாத மற்ற மக்களைப் போன்றவர்கள் அல்லர். எனவே நீங்களாகவே சென்று அவர்களோடு சேராதீர்கள். நல்லவையும் கெட்டவையும் சேரக் கூடாது. வெளிச்சமும் இருட்டும் சேர்ந்திருக்க முடியாது. 15 எப்படி கிறிஸ்துவும் சாத்தானும் உடன்பாடுகொள்ள முடியும்? ஒரு விசுவாசிக்கும், விசுவாசம் இல்லாதவனுக்கும் பொதுவாக என்ன இருக்க முடியும்? 16 தேவனுடைய ஆலயமானது வெறும் சிலைகளோடு எவ்வாறு ஒப்பந்தம் செய்ய முடியும்? நாம் ஜீவனுள்ள தேவன் வாழும் ஆலயங்களைப் போன்றுள்ளோம்.

“நான் அவர்களோடு வாழ்வேன்; நடப்பேன்; நான் அவர்களது தேவனாக இருப்பேன்.
அவர்களே எனது மக்களாக இருப்பார்கள்.”(A)

17 “எனவே அவர்களை விட்டுவிட்டு வெளியே வாருங்கள்.
    அவர்களிடமிருந்து தனியாக உங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள்.
சுத்தமில்லாத எதையும் தொடவேண்டாம்.
    நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.”(B)

18 “நான் உங்களின் பிதாவாக இருப்பேன். நீங்கள் எனது குமாரர்களாகவும்
    குமாரத்திகளாகவும் இருப்பீர்கள் என்று எல்லா வல்லமையும் கொண்ட கர்த்தர் கூறுகிறார்”(C)

என்று தேவன் கூறுகிறார்.

அன்புள்ள நண்பர்களே! தேவனிடமிருந்து இந்த வாக்குறுதிகளைப் பெற்றிருக்கிறோம். எனவே, நாம் நம் சரீரத்தையும், ஆத்துமாவையும் அசுத்தப்படுத்தும் எதனிடமிருந்தும் முழுக்க, முழுக்க விலகி நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் நமது வாழ்க்கை முறையிலேயே மிகச் சரியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் தேவனை மதிக்கிறோம்.

பவுலின் மகிழ்ச்சி

எங்களுக்காக உங்கள் இதயங்களைத் திறந்து வைத்திருங்கள். நாங்கள் யாருக்கும் தீமை செய்ததில்லை. நாங்கள் எவரது நம்பிக்கையையும் அழித்ததில்லை. எவரையும் ஏமாற்றியதில்லை.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center