Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல், “தாவீது அபிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான்” என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறிய சமயத்தில் பாடப்பட்ட பாடல்.
52 பெரிய மனிதனே, நீ செய்யும் தீய செயல்களைக் குறித்து ஏன் பெருமை கொள்கிறாய்?
நீ தேவனுக்கு முன் மதிப்பற்றவனாவாய்.
நாள் முழுவதும் தீமை செய்யவே திட்டமிடுகிறாய்.
2 நீ மூடத்தனமான திட்டங்களை வகுக்கிறாய்.
உன் நாவு தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போன்று ஆபத்தானது.
நீ எப்போதும் பொய் பேசி, யாரையேனும் ஏமாற்ற முயல்கிறாய்.
3 நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையை விரும்புகிறாய்.
உண்மையைக் காட்டிலும் பொய்பேச முயல்கிறாய்.
4 நீயும் உனது பொய்கூறும் நாவும் ஜனங்களைத் துன்புறுத்த விரும்பும்.
5 எனவே தேவன் உன்னை என்றைக்கும் அழிப்பார்!
அவர் உன்னை உனது வீட்டிலிருந்து[a] இழுத்து எறிவார்.
அவர் உன்னைக் கொல்வார், உனக்குச் சந்ததி இராது.
6 நல்லோர் இதனைக் காண்பார்கள்.
தேவனுக்குப் பயந்து அவரை மதித்து வாழ அவர்கள் கற்பார்கள்.
அவர்கள் உன்னைப் பார்த்து நகைத்து,
7 “தேவனைச் சார்ந்து வாழாத மனிதனுக்கு நிகழ்ந்ததைப் பாருங்கள்.
அம்மனிதன் தனது செல்வமும், பொய்களும் தன்னைக் காக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான்” என்பார்கள்.
8 ஆனால் நான் தேவனுடைய ஆலயத்தில், நெடுங்காலம் வாழும் பச்சையான ஒலிவ மரத்தைப்போலிருப்பேன்.
தேவனுடைய அன்பை நான் என்றென்றும் நம்புவேன்.
9 தேவனே, நீர் செய்த காரியங்களுக்காக நான் உம்மைத் துதிப்பேன்.
நான் உமது நாமத்தை உம் சீடர்களுக்கு முன்பாகப் பேசுவேன்.
ஏனெனில் அது மிகவும் நல்லதாக இருக்கிறது.
12 “ஆனால் ஒருவன் ஞானத்தை எங்கே காண்பான்?
நாம் எங்கு புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்?
13 ஞானம் எத்தனை விலையுயர்ந்தது என நாம் அறியோம்,
பூமியின் ஜனங்கள் நிலத்தைத் தோண்டி, ஞானத்தைக் கண்டடைய முடியாது.
14 ஆழமான சமுத்திரம், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது.
கடல், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது.
15 மிகத்தூய பொன்னாலும் கூட, உங்களால் ஞானத்தை வாங்கமுடியாது!
ஞானத்தை வாங்கப் போதுமான அளவு வெள்ளி இவ்வுலகில் இராது!
16 ஓபீரின் தங்கத்தாலோ, கோமேதகத் தாலோ, இந்திர நீலக்கல்லாலோ,
நீங்கள் ஞானத்தை வாங்க முடியாது.
17 ஞானம் பொன் அல்லது படிகத்தைக் காட்டிலும் சிறப்பானது!
பொன்னில் பதிக்கப்பெற்ற விலையுயர்ந்த கற்களால் ஞானத்தை வாங்கமுடியாது.
18 பவளம், சூரியகாந்தம் ஆகியவற்றிலும் ஞானம் உயர்ந்தது.
சிவந்தக் கற்களைக் காட்டிலும் ஞானம் விலையுயர்ந்தது.
19 எத்தியோப்பியா நாட்டின் புஷ்பராகம் ஞானத்தைப்போன்று விலைமதிப்பபுடையதல்ல.
தூயப் பொன்னால் உங்களால் ஞானத்தை வாங்கமுடியாது.
20 “எனவே ஞானம் எங்கிருந்து வருகிறது?
எங்கு நாம் புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்?
21 பூமியின் உயிரினங்களுக்கு எல்லாம் ஞானம் மறைந்திருக்கிறது.
வானத்துப் பறவைகள் கூட ஞானத்தைக் காண முடியாது.
22 மரணமும் அழிவும், ‘நாங்கள் ஞானத்தைக் கண்டதில்லை.
நாங்கள் அதைக் குறித்த வதந்திகளைக் காதினால் மட்டும் கேட்டோம்’ என்கின்றன.
23 “தேவன் மட்டுமே ஞானத்தின் வழியை அறிகிறார்.
தேவன் மட்டுமே ஞானம் இருக்குமிடத்தை அறிகிறார்.
24 பூமியின் இறுதிப் பகுதிகளையும் தேவனால் பார்க்க முடிகிறது.
வானின் கீழுள்ள எல்லாவற்றையும் தேவன் பார்க்கிறார்.
25 தேவன் காற்றிற்கு அதன் வல்லமையை அளித்தார்.
கடல்களை எத்தனை பெரிதாக படைக்க வேண்டுமென்று தேவன் முடிவெடுத்தார்.
26 எங்கே மழையை அனுப்புவதென்றும்,
இடி முழக்கங்களை எங்கே செலுத்துவதென்றும் தேவன் முடிவெடுக்கிறார்.
27 தேவன் ஞானத்தைக் கண்டு, அதைப் பற்றி யோசித்தார்.
ஞானத்தின் மதிப்பை தேவன் கண்டு, அதனை ஏற்றுக்கொண்டார்.
28 தேவன் மனிதரை நோக்கி, ‘கர்த்தருக்கு பயப்படுங்கள், அவரை மதியுங்கள்.
அதுவே ஞானம் ஆகும், தீமைச் செய்யாதீர்கள் அதுவே புரிந்து கொள்ளும் திறன் ஆகும்!’” என்றார்.
இரண்டு வழிகள்
(லூக்கா 13:24)
13 “பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில் நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் நுழைகிறார்கள். 14 ஆனால், மெய்யான வாழ்விற்கான வாசல் மிகவும் குறுகியது. மெய்யான வாழ்விற்குக் கொண்டு செல்லும் பாதையோ கடினமானது. மிகச் சிலரே அப்பாதையைக் கண்டடைகிறார்கள்.
மக்களின் செயல்களைக் கவனியுங்கள்
(லூக்கா 6:43-44; 13:25-27)
15 “போலி தீர்க்கதரிசிகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களிடம் வரும் போலி தீர்க்கதரிசிகள் செம்மறியாட்டைப் போல இனிமையானவர்களாய்க் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள், ஓநாய்களைப்போல அபாயமானவர்கள். 16 அவர்களது செயல்களிலிருந்து நீங்கள் அவர்களைக் கண்டு கொள்ளலாம். எவ்வாறு திராட்சைப்பழம் முட்புதரிலும், அத்திப்பழம் முட்செடிகளிலும் காய்ப்பதில்லையோ அவ்வாறே நல்லவை தீய மனிதர்களிடமிருந்து வருவதில்லை. 17 அதுபோலவே, ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனிகளையே கொடுக்கும். தீய மரங்கள் தீய பழங்களையே கொடுக்கும். 18 அது போலவே, நல்ல மரம் தீய கனியைத் தரமுடியாது. கெட்ட மரம் நல்ல கனியைத் தரமுடியாது. 19 நல்ல கனிகளைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும். 20 போலியான மனிதர்களை அவர்களின் செயல்களிலிருந்து நீங்கள் அறியலாம்.
2008 by World Bible Translation Center