Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல், “தாவீது அபிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான்” என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறிய சமயத்தில் பாடப்பட்ட பாடல்.
52 பெரிய மனிதனே, நீ செய்யும் தீய செயல்களைக் குறித்து ஏன் பெருமை கொள்கிறாய்?
நீ தேவனுக்கு முன் மதிப்பற்றவனாவாய்.
நாள் முழுவதும் தீமை செய்யவே திட்டமிடுகிறாய்.
2 நீ மூடத்தனமான திட்டங்களை வகுக்கிறாய்.
உன் நாவு தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போன்று ஆபத்தானது.
நீ எப்போதும் பொய் பேசி, யாரையேனும் ஏமாற்ற முயல்கிறாய்.
3 நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையை விரும்புகிறாய்.
உண்மையைக் காட்டிலும் பொய்பேச முயல்கிறாய்.
4 நீயும் உனது பொய்கூறும் நாவும் ஜனங்களைத் துன்புறுத்த விரும்பும்.
5 எனவே தேவன் உன்னை என்றைக்கும் அழிப்பார்!
அவர் உன்னை உனது வீட்டிலிருந்து[a] இழுத்து எறிவார்.
அவர் உன்னைக் கொல்வார், உனக்குச் சந்ததி இராது.
6 நல்லோர் இதனைக் காண்பார்கள்.
தேவனுக்குப் பயந்து அவரை மதித்து வாழ அவர்கள் கற்பார்கள்.
அவர்கள் உன்னைப் பார்த்து நகைத்து,
7 “தேவனைச் சார்ந்து வாழாத மனிதனுக்கு நிகழ்ந்ததைப் பாருங்கள்.
அம்மனிதன் தனது செல்வமும், பொய்களும் தன்னைக் காக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான்” என்பார்கள்.
8 ஆனால் நான் தேவனுடைய ஆலயத்தில், நெடுங்காலம் வாழும் பச்சையான ஒலிவ மரத்தைப்போலிருப்பேன்.
தேவனுடைய அன்பை நான் என்றென்றும் நம்புவேன்.
9 தேவனே, நீர் செய்த காரியங்களுக்காக நான் உம்மைத் துதிப்பேன்.
நான் உமது நாமத்தை உம் சீடர்களுக்கு முன்பாகப் பேசுவேன்.
ஏனெனில் அது மிகவும் நல்லதாக இருக்கிறது.
ஆசீர்வாதமும் சாபமும் பற்றி வாசித்தல்
30 அப்போது யோசுவா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை ஏபால் மலைமீது கட்டினான். 31 இஸ்ரவேலின் ஜனங்களுக்குப் பலிபீடத்தை எப்படிக் கட்டுவதென்று கர்த்தருடைய தாசனான மோசே கூறியிருந்தான். மோசேயின் சட்ட புத்தகத்தில் விளக்கப்பட்டிருந்தபடி யோசுவா பலிபீடத்தைக் கட்டினான். வெட்டப்படாத கற்களால் பலிபீடம் கட்டப்பட்டது. அக்கற்களின் மீது எந்த கருவியும் பட்டிருக்கவில்லை. கர்த்தருக்குத் தகன பலிகளை அப்பலிபீடத்தில் செலுத்தினர். சமாதான பலிகளையும் செலுத்தினர்.
32 அவ்விடத்தில் யோசுவா மோசேயின் சட்டங்களைக் கற்களில் எழுதினான். இஸ்ரவேலின் ஜனங்கள் எல்லோரும் பார்க்கும்படியாக அவன் இதைச் செய்தான். 33 பரிசுத்தப் பெட்டியைச் சூழ்ந்து தலைவர்களும், அதிகாரிகளும், நியாயாதிபதிகளும், இஸ்ரவேலரும் நின்றனர். கர்த்தருடைய உடன்படிக்கையுள்ள பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து வந்த லேவி கோத்திரத்தின் ஆசாரியர்களுக்கு முன்னே அவர்கள் நின்று கொண்டிருந்தனர். இஸ்ரவேலின் ஜனங்களும், பிறரும் அங்கே நின்றிருந்தனர். பாதி ஜனங்கள் கூட்டத்தினர் ஏபால் மலைக்கு முன்பும், மற்றொரு பாதியினர் கெரிசீம் மலைக்கு முன்னேயும் நின்றார்கள். கர்த்தருடைய தாசனாகிய மோசே ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக இப்படி செய்யும்படி ஜனங்களிடம் கூறியிருந்தான்.
34 சட்டங்களில் கூறப்பட்ட எல்லாவற்றையும் அப்போது யோசுவா வாசித்தான். ஆசீர்வாதங்களையும், சாபங்களையும் குறித்து வாசித்தான். சட்ட புத்தகத்தில் எழுதியிருந்த முறைப்படியே எல்லாவற்றையும் வாசித்தான். 35 இஸ்ரவேலரோடு வாழ்ந்த அந்நியரும், எல்லாப் பெண்களும், குழந்தைகளும் அங்கிருந்தனர். மோசே கொடுத்த ஒவ்வொரு கட்டளையையும் யோசுவா வாசித்தான்.
யூதர்களும் பாவிகளே
2 மற்றவர்களைக் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்க உன்னால் முடியும் என நீ எண்ணுவாயானால் நீயும் குற்ற உணர்விற்குரியவன்தான். பாவம் செய்பவனாகவும் இருக்கிறாய். அவர்களுக்குத் தீர்ப்பளிக்கிற நீயும் அதே பாவச் செயல்களைச் செய்கிறாய். உண்மையில் நீயே குற்றவாளியாக இருக்கும்போது நீ எவ்வாறு மற்றவர்களைக் குற்றம் சாட்டமுடியும். 2 இத்தகையவர்களுக்கு தேவன் தீர்ப்பளிப்பார். அவரது தீர்ப்பு நீதியாய் இருக்கும். 3 அத்தவறான செயல்களைச் செய்பவர்களுக்கு நீயும் தீர்ப்பளிக்கிறாய். ஆனால் அதே தவறுகளை நீயும் செய்கிறாய். தேவனுடைய தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்பது உனக்குத் தெரியுமா? 4 தேவன் உன்னிடம் மிகக் கருணையோடும் பொறுமையாகவும் இருக்கிறார். அவரிடம் திரும்பி வருவாய் எனக் காத்திருக்கிறார். ஆனால் அவரது கருணையைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறாய். ஏனென்றால் உன் இதயத்தையும் வாழ்வையும் நல் வழியில் திருப்பும் அவரது நோக்கத்தை நீ உணர்ந்துகொள்ளவில்லை.
5 நீ கடினமாகவும் உறுதியாகவும் இருக்கிறாய். நீ மாற மறுக்கிறாய். உன் தண்டனையை மிகுதிப்படுத்துகிறாய். தேவனுடைய கோபம் வெளிப்படும் நாளில் நீ தண்டனையைப் பெறுவாய். அன்று மக்கள் தேவனுடைய சரியான தீர்ப்பினை அறிந்துகொள்வர். 6 ஒவ்வொரு மனிதனும் செய்த செயல்களுக்கேற்றபடி அவனுக்கு தேவன் நற்பலனோ, தண்டனையோ கொடுப்பார். 7 சிலர் தேவனுடைய மகிமைக்காகவும், கனத்துக்காகவும், என்றும் அழிவற்ற வாழ்வுக்காகவும் வாழ்கிறார்கள். நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இத்தகு வாழ்வை அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நித்திய வாழ்வை தேவன் தருகிறார். 8 மற்றவர்களோ சுய நலவாதிகளாகி, உண்மையைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர். அவர்கள் பாவத்தின் வழி நடப்பவர்கள். இவர்களுக்கு தேவன் தண்டனையையும், கோபாக்கினையையும் வழங்குவார். 9 முதலில் யூதர்களுக்கும் பின்பு யூதர் அல்லாதவர்களுக்கும், தீங்கு செய்கிற எவருக்கும் தேவன் துயரமும், துன்பமும் கொடுப்பார். 10 முதலில் யூதர்களிலும் பின்பு யூதர் அல்லாதவர்களிலும் நன்மை செய்கிற எவருக்கும் தேவன் மகிமையையும், கனத்தையும், சமாதானத்தையும் தருவார். 11 தேவன் அனைத்து மக்களுக்கும் ஒரேவிதமாகவே தீர்ப்பளிப்பார்.
2008 by World Bible Translation Center