Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 11:18-21

18 “நான் இன்று உங்களுக்குத் தருகிற இந்தக் கட்டளைகளை எப்போதும் உங்கள் உள்ளங்களில் வையுங்கள். அவற்றை எழுதுங்கள், கட்டுங்கள், அணிந்துகொண்டு, அல்லது உங்கள் கண்களில் படும்படி எப்போதும் உங்களின் ஞாபகத்தில் இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். 19 இந்தச் சட்டங்களை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். உங்கள் வீடுகளில் இருக்கும்போதும், வீதிகளில் நடக்கும்போது, தூங்குவதற்கு முன்பும், எழுந்தப் பின்பும், எப்போதும் இவற்றைப் பற்றியேப் பேச வேண்டும். 20 உங்கள் வீட்டுக் கதவுகள் மீதும், வாசல்களிலும் இந்தக் கட்டளைகளை எழுதி வையுங்கள். 21 அப்போது உங்கள் முற்பிதாக்களிடம் கர்த்தர் கொடுத்த வாக்கின்படி உங்களுக்குச் சுதந்திரமாக வாழக் கொடுத்த நிலத்தில் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நீண்ட காலம் வாழலாம். இந்த பூமியின்மேல் வானம் உள்ளளவும் நீங்கள் நீண்டகாலம் வாழலாம்.

உபாகமம் 11:26-28

இஸ்ரவேலர் தெரிந்துகொள்ள வேண்டிய ஆசீர்வாதங்கள் அல்லது சாபங்கள்

26 “நீங்கள் தெரிந்துகொள்ள நான் இன்று உங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறேன். இதோ! ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். இவற்றில் நீங்கள் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 27 நான் இன்று உங்களுக்குக் கூறியிருக்கிறபடி உங்கள் தேவனாகிய கர்த்தர் தந்த கட்டளைகளுக்கு செவிகொடுத்து கீழ்ப்படிந்து, அவற்றைக் கடைப்பிடித்தால் நீங்கள் ஆசீர்வாதம் பெறுவீர்கள். 28 ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதையும், பின்பற்றுவதையும் மறுத்தால் சாபத்தைப் பெறுவீர்கள். ஆகவே, நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்டபடி வாழ்வதை நிறுத்திவிடாதீர்கள். அதுமட்டுமின்றி அந்நிய பொய்த் தெய்வங்ளைப் பின்பற்றாதிருங்கள். கர்த்தரைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆனால் அந்தப் பொய்த் தெய்வங்களைப்பற்றி உங்களுக்குத் தெரியாது.

சங்கீதம் 31:1-5

இசைத்தலைவனுக்காக தாவீது பாடிய பாடல்.

31 கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன்.
    என்னை ஏமாற்றாதேயும். என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்.
தேவனே, எனக்குச் செவிகொடும்.
    விரைந்து வந்து என்னைக் காப்பாற்றும்.
எனது பாறையாய் இரும். எனக்குப் பாதுகாப்பான இடமாயிரும்.
    எனக்குக் கோட்டையாயிரும். என்னைப் பாதுகாத்தருளும்.
தேவனே, நீரே என் பாறை.
    எனவே, உமது நாமத்தின் நன்மையால் என்னை நடத்தி, வழி காட்டும்.
என் பகைவர்கள் எனக்கு முன்னே கண்ணியை வைத்தார்கள்.
    அவர்கள் கண்ணிக்கு என்னைக் காப்பாற்றும். நீரே என் பாதுகாப்பிடம் ஆவீர்.
கர்த்தாவே, நான் நம்பவல்ல தேவன் நீரே.
    என் உயிரை உமது கரங்களில் நான் வைத்தேன். என்னைக் காப்பாற்றும்!

சங்கீதம் 31:19-24

19 தேவனே, உம்மைப் பின்பற்றுவோருக்காக பல அதிசயமான காரியங்களை நீர் மறைவாய் வைத்திருக்கிறீர்.
    உம்மை நம்பும் ஜனங்களுக்கு எல்லோர் முன்பாகவும் நற்காரியங்களைச் செய்கிறீர்.
20 தீயோர் நல்லோரைத் தாக்க ஒருமித்துக் கூடுகிறார்கள்.
    அத்தீயோர் சண்டையிட முயல்கிறார்கள்.
ஆனால் அந்நல்லோரை மறைத்து அவர்களைக் காப்பாற்றும்.
    உமது அடைக்கலத்தில் வைத்து அவர்களைப் பாதுகாத்தருளும்.
21 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
    நகரம் பகைவர்களால் சூழப்பட்டபோது அவர் தம் உண்மையான அன்பை அதிசயமாக எனக்கு வெளிப்படுத்தினார்.
22 நான் அஞ்சினேன், “தேவன் பார்க்கமுடியாத இடத்தில் நான் இருக்கிறேன்” என்றேன்.
    ஆனால் தேவனே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
    உதவிக்கான என் உரத்த ஜெபங்களை நீர் கேட்டீர்.

23 தேவனைப் பின்பற்றுவோரே, நீங்கள் கர்த்தரை நேசியுங்கள்.
    தம்மிடம் விசுவாசமுள்ள ஜனங்களை கர்த்தர் காக்கிறார்.
ஆனால் தங்கள் வல்லமையைக் குறித்துப் பெருமை பாராட்டுவோரை கர்த்தர் தண்டிக்கிறார்.
    அவர்களுக்கான தண்டனையை தேவன் அளிக்கிறார்.
24 கர்த்தருடைய உதவிக்காகக் காத்துக் கொண்டிருக்கிற ஜனங்களே,
    வலிமையும் துணிவும் உடையோராயிருங்கள்!

ரோமர் 1:16-17

16 நான் நற்செய்தியைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன். விசுவாசமுள்ள அனைவரையும் இரட்சிக்கவும், முதலில் யூதர்களையும் பின்னர் யூதர் அல்லாதவர்களையும் இரட்சிக்கவும் தேவன் பயன்படுத்திய வல்லமை இந்த நற்செய்தியே ஆகும். 17 தேவன் எவ்வாறு நீதிமான்களை உருவாக்குகிறார் என்று நற்செய்தி காட்டுகிறது. மக்களை நீதிமான்களாக தேவன் உருவாக்கும் வழிமுறையானது விசுவாசத்திலேயே தொடங்கி முடிகிறது. எழுதியிருக்கிறபடி “தேவன் மேலுள்ள விசுவாசத்தால் நீதிமான் என்றென்றும் வாழ்ந்திருப்பான்.”[a]

ரோமர் 3:22-28

22 இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தின் மூலம் தேவன் மக்களை சரியான வழிப்படுத்துகிறார். கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கும் எல்லாருக்கும் தேவன் இதைச் செய்தார். எந்த வேறுபாடும் இல்லை. 23 மக்களனைவரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையைப் பெறத் தகுதியில்லாதவராகிவிட்டனர். 24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவில் உள்ள இரட்சிப்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுவார்கள். 25 விசுவாசத்தின் மூலம் பாவிகள் மன்னிக்கப்பட தேவன் இயேசுவை ஒரு வழியாக வகுத்தார். இயேசுவின் இரத்தத்தால் தேவன் இதைச் செய்தார். எது சரியானதோ, நியாயமானதோ அதையே தேவன் செய்வார் என்பதை இது காட்டும். கடந்த காலத்தில் தேவன் மிகப் பொறுமையாக இருந்தார். மக்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்காமல் விட்டார். 26 இவ்வாறு தேவன் சரியான வழியில் நியாயம்தீர்ப்பார் என்பதை இன்று இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிக் காட்டியுள்ளார். அதே நேரத்தில் இயேசுவில் விசுவாசம் உள்ள எவரையும் தேவன் நீதிமான்களாக்குகிறார்.

27 எனவே நம்மை நாமே மேன்மை பாராட்டிக்கொள்ள ஏதேனும் காரணம் உள்ளதாக இல்லை. எதற்காக இல்லை? சட்ட வழிகளின்படி வாழ்வதால் அல்ல, விசுவாசத்தால் மட்டுமே. நாம் பெருமை பாராட்டுவதை நிறுத்த வேண்டும். எதற்காக? 28 ஏனென்றால் ஒருவன் சட்டவழிகளின்படி வாழ்வதால் நீதிமானாக முடியாது; இயேசுவை விசுவாசிப்பதன் மூலமே நீதிமானாக முடியும். இதுவே நமது நம்பிக்கை.

ரோமர் 3:29-31

29 தேவன் என்பவர் யூதர்களுக்கு மட்டும் உரியவர் அல்லர். அவர் யூதர் அல்லாதவர்களுக்கும் உரியவரே. 30 ஒரே ஒரு தேவனே உள்ளார். அவரே யூதர்களையும் அவர்கள் விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்குகிறார். அவ்வாறே யூதரல்லாதவர்களையும் ஆக்குகிறார். 31 விசுவாசத்தின் வழியைப் பின்பற்றுவதன் மூலம் சட்ட விதிகளை அழித்துவிடுகிறோமா? இல்லை. இவ்வாறு நாம் உண்மையாகச் சட்டத்தைக் கைக்கொள்கிறோம்.

மத்தேயு 7:21-29

21 “என்னைத் தம் கர்த்தர் என்று கூறும் எல்லோரும் பரலோகத்திற்குள் நுழைய முடியாது. பரலோகத்தில் உள்ள என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்கள் மட்டுமே பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியும். 22 இறுதி நாளன்று பலர் என்னிடம் ‘நீரே எங்கள் கர்த்தர். உம்மைப் போற்றினோம். அசுத்த ஆவிகளை உம் பெயரால் விரட்டினோம். அற்புதங்கள் பல செய்தோம்’ என்று கூறுவார்கள். 23 அவர்களிடம் நான் ‘என்னை விட்டு விலகுங்கள். தவறு செய்தவர்கள் நீங்கள். உங்களை எனக்குத் தெரியாது’ என்று வெளிப்படையாகவே சொல்வேன்.

இரண்டுவித மனிதர்கள்

(லூக்கா 6:47-49)

24 “என் போதனைகளைக் கேட்டு அதன்படி நடக்கிற எவனும் புத்தியுள்ளவன் ஆவான். புத்தியுள்ள மனிதன் தன் வீட்டைப் பாறையின் மேல் கட்டினான். 25 கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்று வீசி வீட்டைத் தாக்கியது. பாறையின் மேல் கட்டப்பட்டதால் அந்த வீடு இடிந்து விழவில்லை.

26 “என் போதனைகளைக் கேட்டுவிட்டு அதன்படி நடக்காதவர்கள் புத்தியற்ற மனிதனைப் போன்றவர்கள். புத்தியற்ற மனிதன் மணல் மீது தன் வீட்டைக் கட்டினான். 27 கனமழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்றுவீசி வீட்டைத்தாக்கியது. பலத்த ஓசையுடன் வீடு இடிந்து விழுந்தது.”

28 இயேசு இவற்றைக் கூறி முடித்தபொழுது, மக்கள் அவரது போதனைகளைக் குறித்து வியப்படைந்தனர். 29 வேதபாரகராகிய நியாயப்பிரமாண ஆசிரியர்களைப் போலல்லாது, இயேசு அதிகாரம்மிக்கவராகப் போதனை செய்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center