Revised Common Lectionary (Complementary)
இசைத்தலைவனுக்காக தாவீது பாடிய பாடல்.
31 கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன்.
என்னை ஏமாற்றாதேயும். என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்.
2 தேவனே, எனக்குச் செவிகொடும்.
விரைந்து வந்து என்னைக் காப்பாற்றும்.
எனது பாறையாய் இரும். எனக்குப் பாதுகாப்பான இடமாயிரும்.
எனக்குக் கோட்டையாயிரும். என்னைப் பாதுகாத்தருளும்.
3 தேவனே, நீரே என் பாறை.
எனவே, உமது நாமத்தின் நன்மையால் என்னை நடத்தி, வழி காட்டும்.
4 என் பகைவர்கள் எனக்கு முன்னே கண்ணியை வைத்தார்கள்.
அவர்கள் கண்ணிக்கு என்னைக் காப்பாற்றும். நீரே என் பாதுகாப்பிடம் ஆவீர்.
5 கர்த்தாவே, நான் நம்பவல்ல தேவன் நீரே.
என் உயிரை உமது கரங்களில் நான் வைத்தேன். என்னைக் காப்பாற்றும்!
19 தேவனே, உம்மைப் பின்பற்றுவோருக்காக பல அதிசயமான காரியங்களை நீர் மறைவாய் வைத்திருக்கிறீர்.
உம்மை நம்பும் ஜனங்களுக்கு எல்லோர் முன்பாகவும் நற்காரியங்களைச் செய்கிறீர்.
20 தீயோர் நல்லோரைத் தாக்க ஒருமித்துக் கூடுகிறார்கள்.
அத்தீயோர் சண்டையிட முயல்கிறார்கள்.
ஆனால் அந்நல்லோரை மறைத்து அவர்களைக் காப்பாற்றும்.
உமது அடைக்கலத்தில் வைத்து அவர்களைப் பாதுகாத்தருளும்.
21 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
நகரம் பகைவர்களால் சூழப்பட்டபோது அவர் தம் உண்மையான அன்பை அதிசயமாக எனக்கு வெளிப்படுத்தினார்.
22 நான் அஞ்சினேன், “தேவன் பார்க்கமுடியாத இடத்தில் நான் இருக்கிறேன்” என்றேன்.
ஆனால் தேவனே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
உதவிக்கான என் உரத்த ஜெபங்களை நீர் கேட்டீர்.
23 தேவனைப் பின்பற்றுவோரே, நீங்கள் கர்த்தரை நேசியுங்கள்.
தம்மிடம் விசுவாசமுள்ள ஜனங்களை கர்த்தர் காக்கிறார்.
ஆனால் தங்கள் வல்லமையைக் குறித்துப் பெருமை பாராட்டுவோரை கர்த்தர் தண்டிக்கிறார்.
அவர்களுக்கான தண்டனையை தேவன் அளிக்கிறார்.
24 கர்த்தருடைய உதவிக்காகக் காத்துக் கொண்டிருக்கிற ஜனங்களே,
வலிமையும் துணிவும் உடையோராயிருங்கள்!
தேவனும் இஸ்ரவேலரும் உடன்படிக்கையை செய்துகொள்கிறார்கள்
24 தேவன் மோசேயை நோக்கி, “நீயும் ஆரோன், நாதாப், அபியூ, மற்றும் இஸ்ரவேலின் 70 மூப்பர்களும் (தலைவர்கள்) மலையின் மேல் வந்து என்னைத் தூரத்திலிருந்து தொழுதுகொள்ள வேண்டும். 2 பின்பு மோசே மாத்திரம் கர்த்தரிடம் நெருங்கி வருவான். மற்றவர்கள் கர்த்தரை நெருங்கி மலை மீது ஏறி வரக்கூடாது” என்றார்.
3 கர்த்தர் கூறிய எல்லா விதிகளையும், கட்டளைகளையும் மோசே ஜனங்களுக்குக் கூறினான். எல்லா ஜனங்களும், “கர்த்தர் கூறின எல்லா கட்டளைகளுக்கும் நாங்கள் கீழ்ப்படிவோம்” என்று ஏகமாய் பதிலுரைத்தனர்.
4 எனவே மோசே ஒரு சுருளில் கர்த்தரின் கட்டளைகளை எழுதினான். மறுநாள் காலையில் மோசே எழுந்து மலையடிவாரத்தில், ஒவ்வொரு கல்லும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிக்கும் வகையில் பன்னிரண்டு கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். 5 பின் மோசே இஸ்ரவேலின் வாலிபர்களைப் பலி செலுத்தவதற்காக அழைத்தனுப்பினான். தகன பலியாகவும் சமாதான பலியாகவும் அவர்கள் இளங்காளைகளைப் பலியிட்டனர்.
6 மோசே இம்மிருகங்களின் இரத்தத்தை எடுத்து வைத்தான். அந்த இரத்தத்தில் பாதியைக் கிண்ணங்களில் ஊற்றினான். மீதியைப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.
7 விசேஷ உடன்படிக்கை பொருந்திய சுருளை எல்லா ஜனங்களும் கேட்கும்படியாக மோசே வாசித்தான். அதைக் கேட்டதும் ஜனங்கள், “கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த சட்டங்களைக் கேட்டோம். அவற்றிற்குக் கீழ்ப்படிய சம்மதிக்கிறோம்” என்றார்கள்.
8 பலிகளின் இரத்தத்தைச் சேகரித்து வைத்திருந்த கிண்ணத்தை மோசே உயர்த்தி, இரத்தத்தை ஜனங்கள் மீது தெளித்தான். அவன், “கர்த்தர் உங்களோடு ஒரு விசேஷ உடன்படிக்கையைச் செய்தார் என்பதை இந்த இரத்தம் குறிக்கிறது. தேவன் கொடுத்த சட்டங்கள் இந்த உடன்படிக்கையை விளக்குகின்றன” என்றான்.
யூதர்களும் நியாயப்பிரமாணமும்
17 நீ என்ன செய்யப்போகிறாய்? நீ யூதனென்று சொல்லிக்கொள்கிறாய். நீ நியாயப் பிரமாணத்தில் விசுவாசம் வைத்து தேவனுக்கு நெருக்கமாய் இருப்பதாகப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறாய். 18 தேவன் உனக்கு என்ன செய்ய விரும்புகிறார் என்று உனக்குத் தெரியும். நீ நியாயப்பிரமாணத்தைக் கற்றவனாதலால் உனக்கு எது முக்கியமானது என்றும் தெரியும். 19 என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிற மக்களுக்கு நீங்களே வழிகாட்டி என எண்ணிக்கொள்கிறீர்கள். பாவ இருட்டில் உள்ள மக்களுக்கு நீங்களே வெளிச்சம் என்று நினைத்துக்கொள்கிறீர்கள். 20 அறிவற்ற மக்களுக்குச் சரியானதைக் காட்ட முடியும் என்று கருதுகிறீர்கள். இன்னும் கற்கவேண்டிய அவசியம் உள்ளவர்களுக்கு நீங்களே குரு என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் நியாயப்பிரமாணம் இருப்பதால் எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றும், எல்லா உண்மைகளும் உங்களிடம் இருப்பதாகவும் எண்ணுகிறீர்கள். 21 நீங்கள் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறீர்கள். நீங்கள் ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது? நீங்கள் மற்றவர்களிடம் களவு செய்யக்கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே களவு செய்கிறீர்கள். 22 நீங்கள் மற்றவர்களிடம் விபச்சாரம் செய்யக் கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே அதே பாவத்தைச் செய்யும் பாவிகளாக இருக்கிறீர்கள். சிலைகளை நீங்கள் வெறுக்கிறீர்கள். ஆனால் அதே கோவில்களைக் கொள்ளையடிக்கிறீர்கள். 23 நீங்கள் தேவனுடைய நியாயப்பிரமாணம் பற்றிப் பெருமையாகப் பேசுகிறீர்கள். ஆனால் அதை மீறி நடந்து தேவனுக்கு அவமானத்தை உருவாக்குகிறீர்கள். 24 “யூதர்களால்தான் யூதர் அல்லாதவர்கள் தேவனைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்”(A) என்று வேத வாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.
25 நீங்கள் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடித்தால்தான் விருத்தசேதனம் செய்துகொண்டதில் பொருள் உண்டு. நீங்கள் சட்ட விதிகளை மீறுவீர்களேயானால் நீங்கள் விருத்தசேதனம் செய்தும் அது பயனற்றதாகிறது. 26 யூதர் அல்லாதவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களே. எனினும் அவர்கள் சட்டவிதிகளின்படி வாழ்வார்களேயானால் அவர்களும் விருத்தசேதனம் செய்துகொண்டவர்களாகவே கருதப்படுவர். 27 யூதர்களாகிய உங்களுக்கு எழுதப்பட்ட சட்டவிதிகளும், விருத்தசேதனமும் உள்ளன. ஆனால் அவற்றை நீங்கள் மீறுகிறீர்கள். எனவே தம் சரீரங்களில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களாக இருந்தும் கூட சட்ட விதிகளை மதித்து நடப்பவர்கள் உங்கள் குற்றத்தை நிரூபித்து விடுகிறார்கள்.
28 சரீரத்தால் யூதனாகப் பிறந்தவன் எவனும் உண்மையில் யூதன் அல்லன். உண்மையான விருத்தசேதனம் என்பது சரீரத்தளவில் செய்யப்படுவது அல்ல. 29 மனத்தளவில் யூதனாக இருப்பவனே உண்மையான யூதன். உண்மையான விருத்தசேதனம் இருதயத்தில் செய்யப்படுவது. அது ஆவியால் செய்யப்படுவது. அது எழுதப்பட்ட ஆணைகளால் செய்யப்படுவதல்ல. ஆவியின் மூலம் இதயத்தில் விருத்தசேதனம் செய்யப்படும் ஒருவன் மக்களால் புகழப்படாவிட்டாலும் தேவனால் புகழப்படுவான்.
2008 by World Bible Translation Center