Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 104

104 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
    என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிக மேன்மையானவர்!
நீர் மகிமையையும், கனத்தையும் அணிந்திருக்கிறீர்.
    ஒருவன் அங்கியைத் தரித்திருப்பதைப் போல நீர் ஒளியை அணிந்துகொண்டிருக்கிறீர்.
நீர் வானங்களைத் திரைச் சீலையைப்போல விரிக்கிறீர்.
    தேவனே நீர் அவற்றிற்கு மேலாக உமது வீட்டைக் கட்டியிருக்கிறீர்.
அடர்த்தியான மேகங்களை இரதமாக நீர் பயன்படுத்திக்
    காற்றின் சிறகுகளின் மீது அமர்ந்து வானத்தின் குறுக்காகச் செல்கிறீர்.
தேவனே, உமது தூதர்களைக் காற்றைப் போல் உண்டாக்கினீர்.[a]
    உமது ஊழியக்காரரை அக்கினிப்போல் உருவாக்கினீர்.

தேவனே, நீர் பூமியை அதன் அஸ்திபாரங்களின் மீது ஸ்தாபித்தீர்.
    எனவே அது ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை.
நீர் அதனைத் தண்ணீரால் போர்வையைப் போன்று மூடினீர்.
    தண்ணீர் மலைகளை மூடிற்று.
நீர் கட்டளையிட்டபோது, தண்ணீர் விலகியோடிற்று.
    தேவனே, நீர் தண்ணீரைப் பார்த்துச் சத்தமிட்டீர், அது விலகியோடிற்று.
தண்ணீர் பர்வதங்களிலிருந்து கீழே பாய்ந்து பள்ளத்தாக்குகளில் சென்று,
    பின்பு நீர் அவற்றிற்கென வைத்த இடங்களுக்கெல்லாம் சென்றது.
நீர் கடல்களுக்கு எல்லையை வைத்தீர்.
    தண்ணீர் மீண்டும் ஒருபோதும் பூமியை மூடுவதற்கென எழும்பாது.

10 தேவனே, நீரூற்றுகளிலிருந்து நீரோடைகளாக நீர் ஓடும்படி செய்தீர்.
    பர்வதங்களின் நீரோடைகளினூடே அது கீழே பாய்கிறது.
11 நீரோடைகள் எல்லா காட்டு மிருகங்களுக்கும் தண்ணீரைத் தருகின்றன.
    காட்டுக் கழுதைகளும் அங்கு வந்து தண்ணீரைப் பருகுகின்றன.
12 வனத்தின் பறவைகள் குளங்களின் அருகே வாழவரும்.
    அருகேயுள்ள மரங்களின் கிளைகளில் அவை பாடும்.
13 மலைகளின்மேல் தேவன் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
    தேவன் செய்த பொருட்கள் பூமிக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கின்றன.
14 மிருகங்கள் உண்ணும்படியாக தேவன் புல்லை முளைத்தெழச் செய்கிறார். அவர் நமக்குத் தாவரங்களைத் தருகிறார்.
    நம் உழைப்பில் அவற்றை வளர்க்கிறோம்.
    அத்தாவரங்கள் பூமியிலிருந்து நமக்கு உணவைத் தருகின்றன.
15 நம்மை மகிழ்விக்கும் திராட்சைரசத்தையும்
    நமது தோலை மிருதுவாக்கும் எண்ணெயையும்,
    நம்மை வலுவாக்கும் உணவையும் தேவன் நமக்குத் தருகிறார்.

16 லீபனோனின் பெரிய கேதுரு மரங்கள் கர்த்தருக்குரியவை.
    கர்த்தர் அம்மரங்களை நாட்டி, அவற்றிற்குத் தேவையான தண்ணீரைக் கொடுக்கிறார்.
17 அம்மரங்களில் பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்டும்.
    பெரிய கொக்குகள் தேவதாரு மரங்களில் வாழும்.
18 காட்டு ஆடுகளுக்கு உயர்ந்த பர்வதங்கள் இருப்பிடமாகும்.
    குழிமுயல்களுக்குக் கன்மலைகள் மறைவிடமாகும்.

19 தேவனே, விடுமுறை காலம் தொடங்குவதை அறிவிக்கும்படி எங்களுக்கு சந்திரனைத் தந்தீர்.
    எப்போது மறைய வேண்டுமென்பதை சூரியன் எப்போதும் அறியும்.
20 எல்லா காட்டு மிருகங்களும் வெளியே வந்து
    சுற்றித்திரிகிற காலமாகிய இரவாகும்படி இருளை நீர் உண்டாக்கினீர்.
21 தேவன் கொடுக்கிற உணவிற்காக வேண்டுகிறது போல
    தாக்கும் சிங்கங்கள் கெர்ச்சிக்கும்.
22 அப்போது சூரியன் எழும்பும்,
    மிருகங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குப் போய் ஓய்வெடுக்கும்.
23 அப்போது ஜனங்கள் தங்கள் வேலைகளுக்காகச் செல்வார்கள்,
    அவர்கள் மாலைவரை பணிபுரிவார்கள்.

24 கர்த்தாவே, நீர் பல அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர்.
    பூமி, நீர் உண்டாக்கின பல பொருள்களால் நிரம்பியிருக்கிறது.
    நீர் செய்யும் ஒவ்வொன்றிலும் உமது ஞானத்தைக் காண்கிறோம்.
25 சமுத்திரத்தைப் பாருங்கள், அது எவ்வளவு பெரியது!
    பல உயிர்கள் அங்கு வாழ்கின்றன!
    எண்ணமுடியாத சிறியதும் பெரியதுமான உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன.
26 நீர் உண்டாக்கின கடல் விலங்கான லிவியாதான் கடலில் விளையாடும்போது
    கப்பல்கள் சமுத்திரத்தின் மேல் பயணம் செய்கின்றன.

27 தேவனே, எல்லாக்காரியங்களும் உம்மைச் சார்ந்திருக்கின்றன.
    தக்கநேரத்தில் நீர் அவற்றிற்கு உணவைக் கொடுக்கிறீர்.
28 தேவனே, எல்லா உயிரினங்களுக்கும் அவை உண்ணும் உணவை நீர் கொடுக்கிறீர்.
    நல்ல உணவால் நிரம்பிய உமது கைகளை நீர் திறக்கிறீர், அவை வயிறு நிரம்பும்வரை அவற்றை உண்ணும்.
29 நீர் அவற்றை விட்டு விலகும்போது அவை அஞ்சும்.
    அவற்றின் சுவாசம் அவற்றைவிட்டு நீங்கும்.
அவை சோர்ந்து மரிக்கும்.
    அவற்றின் உடல்கள் மீண்டும் புழுதியாகிவிடும்.
30 ஆனால் கர்த்தாவே, நீர் உமது ஆவியை அனுப்பும்போது அவை ஆரோக்கியம் பெறும்!
    நீர் மீண்டும் நிலத்தைப் புதிதாகமாற்றுவீர்.

31 கர்த்தருடைய மகிமை என்றென்றும் தொடரட்டும்!
    கர்த்தர் தாம் உண்டாக்கின பொருள்களைக் கண்டு களிப்படையட்டும்.
32 கர்த்தர் பூமியைச்சற்றே பார்த்தால் அது அதிரும்.
    அவர் மலைகளைத் தொட நேர்ந்தால் அவற்றிலிருந்து புகையெழத் தொடங்கும்.

33 என் ஆயுள் முழுவதும் நான் கர்த்தரைப் பாடுவேன்.
    நான் வாழும்வரை கர்த்தரைத் துதித்துப் பாடுவேன்.
34 நான் கூறுபவை அவரை மகிழ்ச்சியாக்கும் என நம்புகிறேன்.
    நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
35 பூமியிலிருந்து பாவம் மறைந்து போகட்டும்.
    தீயோர் என்றென்றும் அழிந்து போவார்களாக.

என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
    கர்த்தரை துதியுங்கள்!

1 இராஜாக்கள் 17:1-16

எலியாவும் மழையற்ற காலமும்

17 கீலேயாத்தின் திஸ்பியன் நகரில் எலியா என்ற தீர்க்கதரிசி இருந்தான். இவன் ராஜாவாகிய ஆகாப்பிடம், “நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஊழியம் செய்பவன். அவரது வல்லமையால், வருகின்ற சில வருடங்கள் மழையும் பனியும் இல்லாமல் போகும் எனக் கூறுகிறேன். நான் கட்டளையிட்டால்தான் மழைபொழியும்” என்றான்.

பிறகு கர்த்தர் எலியாவிடம், “இந்த இடத்தை விட்டு கீழ் நாடுகளுக்குப் போ. கேரீத் ஆற்றருகில் ஒளிந்துக்கொள். அது யோர்தான் ஆற்றிற்குக் கிழக்கே உள்ளது. அந்த ஆற்றின் தண்ணீரைக் குடி. அங்கு காகங்கள் உனக்கு உணவு கொண்டுவரும்படி நான் கட்டளையிட்டிருக்கிறேன்.” என்றார். எனவே எலியா அங்கே போனான். கர்த்தருடைய கட்டளைபடியே கேரீத்தில் ஒளிந்திருந்தான். ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் காகங்கள் இறைச்சியும் அப்பமும் கொண்டுவந்தன. ஆற்று தண்ணீரைக் குடித்தான்.

மழை இல்லாமல் போனது. கொஞ்ச நாள் ஆனதும் ஆறும் வறண்டது. கர்த்தர் எலியாவிடம், “சீதோனில் உள்ள சாறிபாத்துக்குப் போ. அங்கே இரு. கணவனை இழந்த ஒருத்தி அங்கே இருக்கிறாள். அவள் உனக்கு உணவு தருமாறு நான் கட்டளையிட்டிருக்கிறேன்” என்றார்.

10 எலியா சாறிபாத்துக்குப் போனான். நகர வாயிலுக்குள் நுழையும்போதே ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் கணவன் மரித்துப்போயிருந்தான். அவள் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். எலியா அவளிடம், “நான் குடிக்க ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரமாட்டாயா?” என்ற கேட்டான். 11 அவள் தண்ணீர் கொண்டுவர போனபோது, அவன், “தயவு செய்து அப்பமும் கொண்டு வா” என்றான்.

12 அவளோ, “நான் தேவனாகிய கர்த்தர் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். என்னிடம் அப்பம் இல்லை. ஜாடியில் கொஞ்சம் மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயும் உள்ளது. நான் விறகு பொறுக்க வந்துள்ளேன். இதனால் எங்கள் கடைசி உணவை சமைத்து உண்டுவிட்டு பிறகு பசியால் நானும் என் குமாரனும் மரிக்கவேண்டும்” என்றாள்.

13 எலியா அந்தப் பெண்ணிடம், “கவலைப்படாதே, வீட்டிற்குப்போய் நான் சொன்னது போல சமையல் செய். உன்னிடம் உள்ள மாவால் ஒரு சிறு அப்பத்தைச் செய், அதனை எனக்குக் கொண்டு வா. பிறகு உங்களுக்கானதைச் செய்யலாம், 14 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், ‘அந்த ஜாடியில் உள்ள மாவு காலியாகாது, கலயத்திலும் எண்ணெய் குறையாது என்று கூறியுள்ளார். இது கர்த்தர் மழையைக் கொண்டு வரும்வரை நிகழும்’ என்கிறார்” என்றான்.

15 எனவே அந்தப் பெண் வீட்டிற்குத் திரும்பிச் சென்று எலியா சொன்னது போல் செய்தாள். எலியாவிற்கும் அந்தப் பெண்ணிற்கும் அவள் குமாரனுக்கும் பல நாட்களுக்குப் போதுமான உணவு இருந்தது. 16 அவளது ஜாடியும் பானையும் காலியாகாமல் இருந்தன. கர்த்தர் சொன்னபடியே எல்லாம் நடந்தது. கர்த்தர் எலியாவின் மூலம் பேசினார்.

1 கொரி 4:6-21

சகோதர சகோதரிகளே! அப்பொல்லோவையும், என்னையும் இவற்றில் உதாரணங்களாக நான் உங்களுக்குக் காட்டினேன். எழுதப்பட்டுள்ள சொற்களின் பொருளை எங்களிடமிருந்து நீங்கள் அறிந்துகொள்ளுமாறு இதைச் செய்தேன். “வேத வாக்கியங்களில் எழுதி இருப்பதைப் பின்பற்றி நடவுங்கள்.” அப்போது நீங்கள் ஒருவனைக் குறித்துப் பெருமை பாராட்டி, இன்னொருவனை வெறுக்கமாட்டீர்கள். நீங்கள் பிற மக்களை விட சிறந்தவர்கள் என்று யார் கூறினார்கள்? உங்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றையே நீங்கள் அனுபவிக்கிறீர்கள். உங்களுக்குத் தரப்பட்டவையே உங்களுக்கு வாய்த்திருக்கையில் அவற்றை உங்கள் வல்லமையால் பெற்றதாக நீங்கள் ஏன் பெருமை அடைய வேண்டும்?

உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் நீங்கள் பெற்றிருப்பதாக நினைக்கிறீர்கள். நீங்கள் செல்வந்தர்களென எண்ணுகிறீர்கள். எங்கள் உதவியின்றி நீங்கள் ஆளுபவர்களாக விளங்குவதாகக் கருதுகிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே மன்னர்களாக விளங்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அப்போது, நாங்களும் உங்களோடுகூட ஆளுபவர்களாக இருந்திருப்போம். ஆனால் தேவன் எனக்கும் பிற அப்போஸ்தலர்களுக்கும் கடைசியான இடத்தையே கொடுத்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எல்லோரும் பார்த்திருக்க மரண தண்டனை அளிக்கப்பட்ட மனிதர்களைப் போன்றவர்கள் நாங்கள். தேவ தூதர்களும் மனிதர்களும் முழு உலகமும் பார்த்திருக்கும் ஒரு காட்சியைப் போன்றவர்கள் நாங்கள். 10 கிறிஸ்துவுக்கு நாங்கள் மூடர்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் ஞானிகளாக நீங்கள் உங்களைக் கருதுகிறீர்கள். நாங்கள் பலவீனர்கள். ஆனால் நீங்கள் பலசாலிகளாக நினைக்கிறீர்கள். மக்கள் உங்களை கௌரவிக்கின்றனர். ஆனால் அவர்கள் எங்களை கௌரவப்படுத்துவதில்லை. 11 இப்போதும் குடிப்பதற்கும், உண்பதற்கும் தேவையான பொருள்கள் எங்களுக்குக் கிடைப்பதில்லை. எங்களுக்கு வேண்டிய ஆடைகள் இருப்பதில்லை. அவ்வப்போது பிறரால் அடிக்கப்படுகிறோம். எங்களுக்கு வீடுகள் இல்லை. 12 எங்களுக்குத் தேவையான உணவின்பொருட்டு எங்கள் கைகளால் கடினமாக உழைக்கிறோம். மக்கள் எங்களை சபிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை ஆசீர்வதிக்கிறோம். நாங்கள் மோசமான முறையில் நடத்தப்படுகிறபோது பொறுமையுடன் சகித்துக்கொள்கிறோம். மக்கள் குறை கூறுகையில் பொறுத்துக்கொள்கிறோம். 13 மக்கள் எங்களைக் குறித்துத் தீமைகளைப் பேசினாலும், நாங்கள் அவர்களைக் குறித்து நல்லவற்றையே பேசுகிறோம். பூமியின் கழிவுப் பொருள்களாகவும், அழுக்காகவுமே மக்கள் எங்களை இதுவரைக்கும் நடத்தி வந்துள்ளனர்.

14 நீங்கள் வெட்கமடையுமாறு செய்ய நான் முயலவில்லை. உங்களை எனது சொந்தக் குழந்தைகளெனக் கருதி இவற்றையெல்லாம் உங்களுக்கு முன் எச்சரிக்கையாய் எழுதுகிறேன். 15 கிறிஸ்துவில் பதினாயிரம் போதகர்களை நீங்கள் பெற்றிருக்கலாம். ஆனால் உங்களுக்குப் பல தந்தையர் இல்லை. நற்செய்தியின் மூலமாகக் கிறிஸ்து இயேசுவில் நான் உங்களுக்குத் தந்தையானேன். 16 நீங்களும் என்னைப் போலவே இருக்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன். 17 அதனாலேயே நான் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புகிறேன். கர்த்தருக்குள் அவன் என் குமாரன் ஆவான். நான் தீமோத்தேயுவை நேசிக்கிறேன். அவன் உண்மையுள்ளவன். கிறிஸ்து இயேசுவில் என் வாழ்வின் நெறியை நீங்கள் நினைவுகூருவதற்கு அவன் உதவி செய்வான். எல்லா சபைகளிலும் அந்த வாழ்க்கை நெறியையே நான் போதிக்கிறேன்.

18 நான் உங்களிடம் மீண்டும் வரமாட்டேன் என எண்ணி உங்களில் சிலர் தற்பெருமையால் நிரம்பி இருக்கிறீர்கள். 19 ஆனால் மிக விரைவில் உங்களிடம் வருவேன். தேவன் நான் வரவேண்டுமென விரும்பினால் நான் வருவேன். அப்போது தற் பெருமை பாராட்டுவோர் சொல்வதை அல்ல, செயலில் காட்டுவதைக் காண்பேன். 20 தேவனுடைய இராஜ்யம் பேச்சல்ல, பெலத்திலே என்பதால் இதைக் காண விரும்புகிறேன். 21 உங்கள் விருப்பம் என்ன? நான் உங்களிடம் தண்டனை தர வருவதா? அல்லது அன்பு, மென்மை ஆகியவற்றோடு வருவதா?

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center