Revised Common Lectionary (Complementary)
104 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிக மேன்மையானவர்!
நீர் மகிமையையும், கனத்தையும் அணிந்திருக்கிறீர்.
2 ஒருவன் அங்கியைத் தரித்திருப்பதைப் போல நீர் ஒளியை அணிந்துகொண்டிருக்கிறீர்.
நீர் வானங்களைத் திரைச் சீலையைப்போல விரிக்கிறீர்.
3 தேவனே நீர் அவற்றிற்கு மேலாக உமது வீட்டைக் கட்டியிருக்கிறீர்.
அடர்த்தியான மேகங்களை இரதமாக நீர் பயன்படுத்திக்
காற்றின் சிறகுகளின் மீது அமர்ந்து வானத்தின் குறுக்காகச் செல்கிறீர்.
4 தேவனே, உமது தூதர்களைக் காற்றைப் போல் உண்டாக்கினீர்.[a]
உமது ஊழியக்காரரை அக்கினிப்போல் உருவாக்கினீர்.
5 தேவனே, நீர் பூமியை அதன் அஸ்திபாரங்களின் மீது ஸ்தாபித்தீர்.
எனவே அது ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை.
6 நீர் அதனைத் தண்ணீரால் போர்வையைப் போன்று மூடினீர்.
தண்ணீர் மலைகளை மூடிற்று.
7 நீர் கட்டளையிட்டபோது, தண்ணீர் விலகியோடிற்று.
தேவனே, நீர் தண்ணீரைப் பார்த்துச் சத்தமிட்டீர், அது விலகியோடிற்று.
8 தண்ணீர் பர்வதங்களிலிருந்து கீழே பாய்ந்து பள்ளத்தாக்குகளில் சென்று,
பின்பு நீர் அவற்றிற்கென வைத்த இடங்களுக்கெல்லாம் சென்றது.
9 நீர் கடல்களுக்கு எல்லையை வைத்தீர்.
தண்ணீர் மீண்டும் ஒருபோதும் பூமியை மூடுவதற்கென எழும்பாது.
10 தேவனே, நீரூற்றுகளிலிருந்து நீரோடைகளாக நீர் ஓடும்படி செய்தீர்.
பர்வதங்களின் நீரோடைகளினூடே அது கீழே பாய்கிறது.
11 நீரோடைகள் எல்லா காட்டு மிருகங்களுக்கும் தண்ணீரைத் தருகின்றன.
காட்டுக் கழுதைகளும் அங்கு வந்து தண்ணீரைப் பருகுகின்றன.
12 வனத்தின் பறவைகள் குளங்களின் அருகே வாழவரும்.
அருகேயுள்ள மரங்களின் கிளைகளில் அவை பாடும்.
13 மலைகளின்மேல் தேவன் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
தேவன் செய்த பொருட்கள் பூமிக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கின்றன.
14 மிருகங்கள் உண்ணும்படியாக தேவன் புல்லை முளைத்தெழச் செய்கிறார். அவர் நமக்குத் தாவரங்களைத் தருகிறார்.
நம் உழைப்பில் அவற்றை வளர்க்கிறோம்.
அத்தாவரங்கள் பூமியிலிருந்து நமக்கு உணவைத் தருகின்றன.
15 நம்மை மகிழ்விக்கும் திராட்சைரசத்தையும்
நமது தோலை மிருதுவாக்கும் எண்ணெயையும்,
நம்மை வலுவாக்கும் உணவையும் தேவன் நமக்குத் தருகிறார்.
16 லீபனோனின் பெரிய கேதுரு மரங்கள் கர்த்தருக்குரியவை.
கர்த்தர் அம்மரங்களை நாட்டி, அவற்றிற்குத் தேவையான தண்ணீரைக் கொடுக்கிறார்.
17 அம்மரங்களில் பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்டும்.
பெரிய கொக்குகள் தேவதாரு மரங்களில் வாழும்.
18 காட்டு ஆடுகளுக்கு உயர்ந்த பர்வதங்கள் இருப்பிடமாகும்.
குழிமுயல்களுக்குக் கன்மலைகள் மறைவிடமாகும்.
19 தேவனே, விடுமுறை காலம் தொடங்குவதை அறிவிக்கும்படி எங்களுக்கு சந்திரனைத் தந்தீர்.
எப்போது மறைய வேண்டுமென்பதை சூரியன் எப்போதும் அறியும்.
20 எல்லா காட்டு மிருகங்களும் வெளியே வந்து
சுற்றித்திரிகிற காலமாகிய இரவாகும்படி இருளை நீர் உண்டாக்கினீர்.
21 தேவன் கொடுக்கிற உணவிற்காக வேண்டுகிறது போல
தாக்கும் சிங்கங்கள் கெர்ச்சிக்கும்.
22 அப்போது சூரியன் எழும்பும்,
மிருகங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குப் போய் ஓய்வெடுக்கும்.
23 அப்போது ஜனங்கள் தங்கள் வேலைகளுக்காகச் செல்வார்கள்,
அவர்கள் மாலைவரை பணிபுரிவார்கள்.
24 கர்த்தாவே, நீர் பல அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர்.
பூமி, நீர் உண்டாக்கின பல பொருள்களால் நிரம்பியிருக்கிறது.
நீர் செய்யும் ஒவ்வொன்றிலும் உமது ஞானத்தைக் காண்கிறோம்.
25 சமுத்திரத்தைப் பாருங்கள், அது எவ்வளவு பெரியது!
பல உயிர்கள் அங்கு வாழ்கின்றன!
எண்ணமுடியாத சிறியதும் பெரியதுமான உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன.
26 நீர் உண்டாக்கின கடல் விலங்கான லிவியாதான் கடலில் விளையாடும்போது
கப்பல்கள் சமுத்திரத்தின் மேல் பயணம் செய்கின்றன.
27 தேவனே, எல்லாக்காரியங்களும் உம்மைச் சார்ந்திருக்கின்றன.
தக்கநேரத்தில் நீர் அவற்றிற்கு உணவைக் கொடுக்கிறீர்.
28 தேவனே, எல்லா உயிரினங்களுக்கும் அவை உண்ணும் உணவை நீர் கொடுக்கிறீர்.
நல்ல உணவால் நிரம்பிய உமது கைகளை நீர் திறக்கிறீர், அவை வயிறு நிரம்பும்வரை அவற்றை உண்ணும்.
29 நீர் அவற்றை விட்டு விலகும்போது அவை அஞ்சும்.
அவற்றின் சுவாசம் அவற்றைவிட்டு நீங்கும்.
அவை சோர்ந்து மரிக்கும்.
அவற்றின் உடல்கள் மீண்டும் புழுதியாகிவிடும்.
30 ஆனால் கர்த்தாவே, நீர் உமது ஆவியை அனுப்பும்போது அவை ஆரோக்கியம் பெறும்!
நீர் மீண்டும் நிலத்தைப் புதிதாகமாற்றுவீர்.
31 கர்த்தருடைய மகிமை என்றென்றும் தொடரட்டும்!
கர்த்தர் தாம் உண்டாக்கின பொருள்களைக் கண்டு களிப்படையட்டும்.
32 கர்த்தர் பூமியைச்சற்றே பார்த்தால் அது அதிரும்.
அவர் மலைகளைத் தொட நேர்ந்தால் அவற்றிலிருந்து புகையெழத் தொடங்கும்.
33 என் ஆயுள் முழுவதும் நான் கர்த்தரைப் பாடுவேன்.
நான் வாழும்வரை கர்த்தரைத் துதித்துப் பாடுவேன்.
34 நான் கூறுபவை அவரை மகிழ்ச்சியாக்கும் என நம்புகிறேன்.
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
35 பூமியிலிருந்து பாவம் மறைந்து போகட்டும்.
தீயோர் என்றென்றும் அழிந்து போவார்களாக.
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
கர்த்தரை துதியுங்கள்!
32 “வானங்களே, கவனியுங்கள், நான் பேசுவேன்.
பூமியே, என் வாயின் வார்த்தையைக் கேள்.
2 எனது போதனைகள் மழையைப் போன்று வரும்,
பூமியின்மேல் விழும் பனியைப் போன்றும்,
மெல்லிய புல்லின்மேல் தூறும் மழைத்துளிகள் போன்றும்,
பசும் புதர்களின்மேல் விழும் மழையைப் போன்றும் வரும்.
3 நான் கர்த்தருடைய நாமத்தைப் பேசுவேன். தேவனைப் போற்றுங்கள்!
4 “அவர் பாறை (கர்த்தர்), அவரது செயல்கள் பரிபூரணமானவை!
ஏனென்றால் அவரது வழிகள் எல்லாம் சரியானவை!
தேவன் உண்மையும் சத்தியமும் உள்ளவர்.
அவர் நீதியும் செம்மையுமானவர்.
5 நீங்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல.
உங்களது பாவங்கள் அவரை அசுத்தமாக்கியது.
நீங்கள் கோணலான பொய்யர்கள்.
6 உங்களுக்காக இவ்வளவு செய்த கர்த்தருக்கு இந்த வழியிலா நீங்கள் திரும்ப கொடுப்பீர்கள்? இல்லை!
நீங்கள் அறிவில்லாத அஞ்ஞான ஜனங்கள்.
கர்த்தர் உங்களது தந்தையாக இருக்கிறார்.
அவர் உங்களை உண்டாக்கினார். அவர் உங்களைத் தாங்குகிறார்.
7 “நீண்ட காலத்திற்கு முன்பு நடந்ததை நினைத்துப்பாருங்கள்.
பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவற்றை எண்ணிப் பாருங்கள்.
உனது தந்தையைக் கேள். அவன் உனக்குச் சொல்வான்.
உங்கள் தலைவர்களைக் கேள். அவர்கள் உனக்குச் சொல்வார்கள்.
8 உன்னதமான தேவன் பூமியில் ஜனங்களைப் பிரித்து
ஒவ்வொரு ஜனத்தாருக்கும் சொந்தமான ஒரு நாட்டைக் கொடுத்தார்.
அந்த ஜனங்களுக்கு தேவன் எல்லைகளை ஏற்படுத்தினார்.
இஸ்ரவேலில் எவ்வளவு ஜனங்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ஜாதிகளையும் அவர் உண்டாக்கினார்.
9 கர்த்தருடைய ஜனங்களே அவரது பங்கு,
யாக்கோபு (இஸ்ரவேல்) கர்த்தருக்குச் சொந்தம்.
10 “கர்த்தர் யாக்கோபை (இஸ்ரவேல்) ஒரு வனாந்திரத்தில் கண்டுபிடித்தார்.
அது ஒரு காலியான காற்று மிகுந்த நிலம்.
கர்த்தர் அவனைக் காப்பாற்றுவதற்கு யாக்கோபுவைச் சுற்றி வளைத்துக்கொண்டார்.
அவர் அவனை தன் சொந்த கண்மணியைப் போல் காத்தார்.
11 கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு கழுகைப்போன்று இருந்தார்.
ஒரு கழுகு தன் குஞ்சுகளைப் பறக்கக் கற்பிக்கும்போது, அவற்றைக் கூட்டிலிருந்து கீழேதள்ளும்.
பின் அது தன் குஞ்சுகளைக் காப்பதற்கு அவற்றோடு பறக்கும்.
அவை விழும்போது தன் இறக்கைகளை விரித்து அவற்றைப் பிடித்துக்கொள்ளும்,
அது பாதுகாப்பான இடத்திற்குக் குஞ்சுகளைச் சிறகுகளில் தாங்கி எடுத்துச் செல்லும்.
கர்த்தர் இதனைப் போன்றவர்.
12 கர்த்தர் ஒருவரே யாக்கோபை வழி நடத்தினார்.
அயல்நாட்டு தெய்வங்கள் எவரும் அவனுக்கு உதவவில்லை.
13 கர்த்தர் மலைநாட்டை அடக்கி ஆளும்படி யாக்கோபை வழிநடத்தினார்.
யாக்கோபு வயல்களிலுள்ள அறுவடைகளை எடுத்துக் கொண்டான்.
கர்த்தர் யாக்கோபிற்குப் பாறையிலிருந்து தேனைக் கொடுத்தார்.
கடினமான பாறைகளிலிருந்து ஒலிவ எண்ணெய் பாயும்படிச் செய்தார்.
14 கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பசுவிலிருந்து வெண்ணெயையும், ஆடுகளிலிருந்து பாலையும் கொடுத்தார்.
அவர் இஸ்ரவேலுக்குப் பாசானிலுள்ள ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக் கடாக்கள், வெள்ளாட்டுக் கடாக்கள் ஆகியவற்றின் கொழுப்பையும்,
சிறந்த கோதுமையையும் கொடுத்தார்.
இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள், சிவந்த வண்ணமுடைய திராட்சைரசத்தையும் குடித்தீர்கள்.
உனது தைரியத்தையும் மகிழ்ச்சியையும் விட்டுவிடாதே
32 நீங்கள் முதன் முதலாக உண்மையை அறிந்துகொண்ட நாட்களை நினைத்துப் பாருங்கள். பல சோதனைகளை நீங்கள் சகித்துக்கொண்டீர்கள். எனினும் நீங்கள் உறுதியாக இருந்தீர்கள். 33 சிலவேளைகளில் வெறுக்கத்தக்க காரியங்களைப் பற்றி உங்களிடம் சொன்னார்கள். பலர் முன்னிலையில் உங்களைக் குற்றம் சுமத்தித் தண்டித்தார்கள். சில வேளைகளில் அப்படி நடத்தப்பட்டவர்களுக்கும் நீங்கள் உதவியாய் இருந்தீர்கள். 34 ஆமாம், நீங்கள் சிறையில் இருந்த அவர்களுக்கு உதவி, அவர்கள் துன்பத்தில் பங்குகொண்டீர்கள். உங்கள் சொத்து உங்களிடமிருந்து அபகரிக்கப்பட்டபோதும் நீங்களும் அதை மகிழ்வோடு ஒத்துக்கொண்டீர்கள். ஏனெனில், இதைவிடவும் மதிப்புமிக்க நிலையான சொத்து உங்களுக்கு உண்டு என்று நீங்கள் அறிவீர்கள்.
35 எனவே முன்பு நீங்கள் வைத்திருந்த தைரியத்தை விட்டுவிடாதீர்கள். உங்கள் தைரியம் உங்களுக்கு பலனைத் தரும். 36 நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும். தேவனுக்கு விருப்பமானவற்றை நீங்கள் செய்த பிறகு, நிச்சயம் தேவன் வாக்களித்ததை நீங்கள் பெறுவீர்கள். 37 கொஞ்ச காலத்தில்,
“வரவேண்டியவர் வருவார்,
அவர் தாமதிக்கமாட்டார்.
38 விசுவாசத்தினாலே நீதிமானாக
இருக்கிறவன் பிழைப்பான்.
அவன் அச்சத்தால் இதிலிருந்து பின்வாங்குவானேயானால்
நான் அவன்மீது பிரியமாக இருக்கமாட்டேன்.”(A)
39 ஆனால், நாம் கெட்டுப்போகும்படி பின் வாங்குகிறவர்களாய் இருக்கக்கூடாது. நாம் விசுவாசம் உடையவர்களாகவும் இரட்சிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கவேண்டும்.
2008 by World Bible Translation Center