Revised Common Lectionary (Complementary)
இரட்சிப்பின் நாள்
8 கர்த்தர் கூறுகிறார், “எனது தயவைக் காட்டும் சிறப்பான நேரம் இருக்கிறது.
அப்போது, நான் உனது ஜெபங்களுக்குப் பதில் தருவேன்.
நான் உன்னைக் காப்பாற்றும்போது அது சிறப்பான நாளாக இருக்கும்.
அந்த நேரத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன்.
நான் உன்னைப் பாதுகாப்பேன்.
எனக்கு ஜனங்களோடு ஒரு உடன்படிக்கை இருந்தது என்பதற்கு நீங்களே சாட்சியாக இருப்பீர்கள்.
இப்போது நாடு அழிக்கப்படுகிறது.
ஆனால் தேசத்தை அதற்கு உரியவர்களிடம் நீ திருப்பிக் கொடுப்பாய்.
9 நீங்கள் சிறைக் கைதிகளிடம் கூறுவீர்கள்,
‘சிறையை விட்டு வெளியே வாருங்கள்’
இருளில் இருக்கிற ஜனங்களுக்கு நீங்கள் சொல்வீர்கள்,
‘இருளை விட்டு வெளியே வாருங்கள்’
ஜனங்கள் பயணம்செய்யும்போது சாப்பிடுவார்கள்.
காலியான குன்றுகளிலும் அவர்கள் உணவு வைத்திருப்பார்கள்.
10 ஜனங்கள் பசியுடன் இருக்கமாட்டார்கள். அவர்கள் தாகத்தோடு இருக்கமாட்டார்கள்.
வெப்பமான சூரியனும் காற்றும் அவர்களைப் பாதிக்காது.
ஏனென்றால் தேவன் ஆறுதல் செய்கிறார்; தேவன் அவர்களை வழிநடத்துகிறார்.
அவர் அவர்களை நீரூற்றுகளின் அருகில் வழி நடத்திச்செல்வார்.
11 நான் எனது ஜனங்களுக்காகச் சாலை அமைப்பேன்.
மலைகள் தரைமட்டமாக்கப்படும்.
தாழ்வான சாலைகள் உயர்த்தப்படும்.
12 “பாருங்கள்! வெகு தொலைவான இடங்களிலிருந்தும் ஜனங்கள் என்னிடம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
வடக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் ஜனங்கள் என்னிடம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
எகிப்தின் அஸ்வனிலிருந்து ஜனங்கள் என்னிடம் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.”
13 வானங்களும் பூமியும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்.
மலைகள் மகிழ்ச்சியோடு சத்தமிடட்டும்.
ஏனென்றால், கர்த்தர் தமது ஜனங்களை ஆறுதல் படுத்துகிறார்.
கர்த்தர் தமது ஏழை ஜனங்களிடம் நல்லவராக இருக்கிறார்.
14 ஆனால், இப்பொழுது சீயோன் கூறுகிறாள், “கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டார்.
எனது ஆண்டவர் என்னை மறந்துவிட்டார்.”
15 ஆனால் நான் சொல்கிறேன், “ஒரு பெண்ணால் தன் குழந்தையை மறக்கமுடியுமா? முடியாது!
ஒரு பெண்ணால் தன் கர்ப்பத்திலிருந்து வந்த குழந்தையை மறக்கமுடியுமா? இல்லை! ஒரு பெண்ணால் தன் பிள்ளையை மறக்கமுடியாது!
ஆனால் அவள் மறந்தாலும்
நான் (கர்த்தர்) உன்னை மறக்கமுடியாது.
16 பார், நான் உனது பெயரை என் உள்ளங்கையில் செதுக்கி இருக்கிறேன்.
நான் எப்பொழுதும் உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்!
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
131 கர்த்தாவே, நான் பெருமையுடையவன் அல்ல.
நான் முக்கியமானவனாக நடிக்க முயலவில்லை.
நான் பெரியக் காரியங்களைச் செய்ய முயலவில்லை.
எனக்கு மிகவும் கடினமான காரியங்களைக் குறித்து நான் கவலைப்படமாட்டேன்.
2 நான் அமைதியாக இருக்கிறேன்.
என் ஆத்துமா அமைதியாக இருக்கிறது.
தாயின் கரங்களில் இருக்கும் திருப்தியான குழந்தையைப்போன்று
என் ஆத்துமா சமாதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறது.
3 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு.
அவரை இப்போது நம்பு, அவரை என்றென்றைக்கும் நம்பு.
கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள்
4 மக்கள் நம்மைப்பற்றி நினைக்க வேண்டியது இதுவாகும். நாம் கிறிஸ்துவின் பணியாட்களே. தேவன் தமது இரகசியமான உண்மைகளை ஒப்படைத்திருக்கிற மக்கள் நாமே. 2 ஒரு விஷயத்தில் நம்பிக்கைக்கு உரியவனாக இருக்கிற ஒருவன் அந்நம்பிக்கைக்குத் தான் தகுதியானவனே என்று காட்ட வேண்டும். 3 நீங்கள் எனக்கு நீதி வழங்கினால் அதைப் பொருட்படுத்தமாட்டேன். எந்த உலகத்து நீதிமன்றமும் எனக்கு நியாயம் தீர்ப்பதைக் கூடப் பொருட்டாகக்கொள்ளமாட்டேன். நான் எனக்கு நீதி வழங்கமாட்டேன். 4 நான் எந்தத் தவறும் இழைத்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது என்னைக் களங்கம் அற்றவனாக மாற்றாது. என்னை நியாயம் தீர்க்கிறவர் கர்த்தர் ஒருவரே. 5 எனவே தகுந்த நேரம் வரும் முன்பு நீதி வழங்காதீர்கள். கர்த்தர் வரும்வரை காத்திருங்கள் அவர் இருளில் மறைந்திருப்பவற்றின் மீது ஒளியை அனுப்புவார். மக்களின் மனதிலிருக்கும் இரகசியமான விஷயங்களை அவர் வெளிப்படுத்துவார். ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய கீர்த்தியை அவனவனுக்குக் கிடைக்கும்படியாகச் செய்வார்.
24 “எந்த மனிதனாலும் ஒரே நேரத்தில் இரண்டு முதலாளிகளுக்கு வேலை செய்ய முடியாது. அவன் ஒரு முதலாளியை நேசித்து மற்ற முதலாளியை வெறுக்க நேரிடும். அல்லது ஒரு முதலாளியின் பேச்சைக் கேட்டும் மற்ற முதலாளியின் பேச்சை மறுக்கவும் நேரிடும். எனவே, நீங்கள் ஒரே நேரத்தில் தேவனுக்கும், பணத்திற்கும் பணிபுரிய முடியாது.
தேவ இராஜ்யத்திற்கு முதலிடம்
(லூக்கா 12:22-34)
25 “எனவே, நான் சொல்கிறேன், நீங்கள் உயிர்வாழத் தேவையான உணவிற்காகக் கவலை கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான உடைக்காகவும் கவலைகொள்ளாதீர்கள். உணவைவிடவும் முக்கியமானது ஜீவன். உடையைவிடவும் முக்கியமானது சரீரம். 26 பறவைகளைப் பாருங்கள். அவைகள் விதைப்பதோ அறுவடை செய்வதோ களஞ்சியங்களில் சேமித்து வைப்பதோ இல்லை. ஆனால் உங்கள் பரலோகப் பிதா அவைகளுக்கு உணவளிக்கிறார். பறவைகளை காட்டிலும் நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என நீங்கள் அறிவீர்கள். 27 கவலைப்படுவதினால் உங்களால் உங்கள் வாழ்நாளைக் கூட்ட இயலாது.
28 “உடைகளுக்காக ஏன் கவலை கொள்கிறீர்கள்? தோட்டத்தில் உள்ள மலர்களைப் பாருங்கள். அவை எப்படி வளர்கின்றன என்பதைப் பாருங்கள். அவைகள் வேலை செய்வதுமில்லை. தங்களுக்கான உடைகளைத் தயார் செய்வதுமில்லை. 29 ஆனால் நான் சொல்கிறேன் மாபெரும் பணக்கார மன்னனான சாலமோன் கூட இந்தப் பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடை அணியவில்லை. 30 அவ்வாறே தேவன் வயல்களிலுள்ள புற்களுக்கும் உடை அணிவிக்கிறார். இன்றைக்கு உயிருடன் இருக்கும் புல், நாளைக்கு தீயிலிடப்பட்டு எரிக்கப்படும். எனவே, தேவன் உங்களுக்குச் சிறப்பாக உடையணிவிப்பார் என்பதை அறியுங்கள். தேவனிடம் சாதாரணமான நம்பிக்கை வைக்காதீர்கள்.
31 “‘உண்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘குடிப்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘உடுப்பதற்கு என்ன கிடைக்கும்?’ என்று கவலைகொள்ளாதீர்கள். 32 தேவனை அறியாத மக்களே இவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். நீங்களோ கவலைப்படாதீர்கள், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா இவைகள் உங்களுக்குத் தேவை என்பதை அறிவார். 33 தேவனின் இராஜ்யத்தையும் நீங்கள் செய்ய வேண்டுமென தேவன் விரும்பும் நற்செயல்களைச் செய்தலையுமே நீங்கள் நாடவேண்டும். அப்போது தேவன் உங்களது மற்றத் தேவைகளையும் நிறைவேற்றுவார். 34 எனவே, நாளையைக் குறித்துக் கவலைகொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் தொல்லை உண்டு. நாளையக் கவலை நாளைக்கு.
2008 by World Bible Translation Center