Revised Common Lectionary (Complementary)
தாவீதின் ஒரு சங்கீதம்.
101 நான் அன்பையும் நியாயத்தையும் பற்றிப் பாடுவேன்.
கர்த்தாவே, நான் உம்மை நோக்கிப் பாடுவேன்.
2 நான் கவனமாகப் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன்.
என் வீட்டில் நான் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன்.
கர்த்தாவே, நீர் எப்போது என்னிடம் வருவீர்.
3 என் முன்னால் நான் விக்கிரகங்களை வைக்கமாட்டேன்.
ஜனங்கள் அப்படி உமக்கு எதிராகத் திரும்புவதை நான் வெறுக்கிறேன்.
நான் அதைச் செய்யமாட்டேன்!
4 நான் நேர்மையாக இருப்பேன்.
நான் தீயக் காரியங்களைச் செய்யமாட்டேன்.
5 யாராவது ஒருவன் தனது அயலானைக் குறித்து இரகசியமாகத் தீயக் காரியங்களைக் கூறினால் நான் அவனைத் தடுத்துவிடுவேன்.
நான் பிறரைப் பெருமைப்படவோ, தாங்கள் பிறரை காட்டிலும் சிறந்தவர்கள் என்று எண்ணவோ விடமாட்டேன்.
6 நம்பத்தக்க ஜனங்களைத் தேசம் முழுவதும் தேடிப்பார்ப்பேன்.
அவர்கள் மட்டுமே எனக்கு சேவைச் செய்ய அனுமதிப்பேன்.
பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மட்டுமே என் பணியாட்களாக முடியும்.
7 பொய்யர்கள் என் வீட்டில் வாழ நான் அனுமதிக்கமாட்டேன்.
என் அருகே பொய்யர்கள் தங்கவும் அனுமதியேன்.
8 இந்நாட்டில் வாழும் தீயோரை நான் எப்போதும் அழிப்பேன்.
கர்த்தருடைய நகரை விட்டுத் தீயோர் நீங்குமாறு நான் வற்புறுத்துவேன்.
அசீரியர்கள் சமாரியாவைக் கைப்பற்றியது
9 அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவிற்கு எதிராகச் சண்டையிட்டான். அவனது படை நகரத்தைச் சுற்றிக் கொண்டது. யூதாவில் எசேக்கியாவின் நான்காம் ஆட்சியாண்டின்போது இது நடந்தது. (இது இஸ்ரவேல் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசேயாவின் ஏழாம் ஆட்சியாண்டு.) 10 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சல்மனாசார் சமாரியாவைக் கைப்பற்றினான். யூத ராஜாவாகிய எசேக்கியாவின் ஆறாம் ஆட்சியாண்டில் சமாரியாவை இவன் பிடித்துக்கொண்டான். (இது இஸ்ரவேல் ராஜாவாகிய ஓசேயாவின் ஒன்பதாம் ஆட்சியாண்டு) 11 அசீரியாவின் ராஜா இஸ்ரவேலர்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக் கொண்டுசென்றான். அவன் அவர்களை கோசான் ஆற்றோரங்களிலுள்ள ஆலாக், ஆபோர், மேதியரின் நகரங்கள் ஆகியவற்றில் குடியேற்றினான். 12 இஸ்ரவேலர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியாததால் இது இவ்வாறு நிகழ்ந்தது. அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கையை உடைத்தனர். அவர்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே கட்டளையிட்டவற்றுக்கு அடிபணியவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய உடன்படிக்கையைக் கேட்காததோடு, அதனை அவர்கள் கைக்கொள்ளவில்லை.
அசீரியா யூதாவைப் பிடிக்கத் தயாராகிறது
13 எசேக்கியாவின் 14வது ஆட்சியாண்டின்போது சனகெரிப் எனும் அசீரியாவின் ராஜா, யூதாவிலுள்ள கோட்டையமைந்த நகரங்கள் அனைத்திலும் தாக்குதல் நடத்தினான். இவன் எல்லா நகரங்களையும் தோற்கடித்தான். 14 பிறகு யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா, லாகீசிலிருந்த அசீரியாவின் ராஜாவுக்கு தூது அனுப்பினான். அவன், “நான் தவறு செய்துவிட்டேன். என்னை தனியாகவிட்டுவிடுங்கள். பிறகு உங்களுக்கு வேண்டியதை நான் தருவேன்” என்றான்.
பிறகு அசீரியாவின் ராஜா யூத ராஜாவாகிய எசேக்கியாவிடம் 300 தாலந்து வெள்ளியையும் 30 தாலந்து பொன்னையும் கட்டும்படி கூறினான். 15 கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனை கருவூலத்திலும் உள்ள வெள்ளி முழுவதையும் எசேக்கியா கொடுத்தான் 16 அப்பொழுது, கர்த்தருடைய ஆலய வாசலில் உள்ள கதவுகளிலும் நிலைகளிலும் தான் பதித்திருந்த பொன்னையும் எடுத்து அசீரிய ராஜாவுக்குக் கொடுத்தான்.
அசீரியாவின் ராஜா எருசலேமிற்கு ஆட்களை அனுப்புகிறான்
17 அசீரியாவின் ராஜா தனது மூன்று மிக முக்கியமான படைத்தளபதி உள்ளப் பெரும்படையோடு எருசலேமிற்கு எசேக்கியா ராஜாவிடம் அனுப்பினான். அவர்கள் லாகீசிலிருந்து எருசலேமிற்குச் சென்றனர். அவர்கள் வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்து வாய்க்காலில் நின்றனர். 18 அவர்கள் ராஜாவை வரவழைத்தார்கள். அப்பொழுது இல்க்கியாவின் குமாரனான எலிகாக்கீம் எனும் அரண்மனை விசாரிப்புக்காரனும் செப்னா என்னும் சம்பிரதியும் ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் எனும் கணக்கனும் அவர்களை சந்திக்கப் போனார்கள்.
கிறிஸ்துவின் நல்ல வேலையாளாக இரு
6 அங்குள்ள சகோதர சகோதரிகளிடமும் இவற்றைக் கூறு. இவை நீ இயேசு கிறிஸ்துவின் நல்ல வேலையாள் என்பதைக் காட்டும். விசுவாசமான வார்த்தைகளாலும், பின்பற்றப்படுகிற நல்ல போதனையாலும் நீ பலப்படுத்தப்படுகிறாய் என்றும் காட்டுவாய். 7 மக்கள் சொல்கிற அர்த்தமற்ற கதைகள் தேவனுடைய உண்மையோடு சற்றும் பொருந்தாதவை. அவற்றின் கூற்றுக்களைப் பின்பற்றாதே. தேவனுக்கு உண்மையான சேவையைச் செய்ய கற்றுக்கொள். 8 உடற்பயிற்சியானது சில வழிகளில் உதவிகரமானது. ஆனால் தேவபக்தியானது எல்லா வழிகளிலும் உதவுவதாகும். அது இவ்வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் இனிவரும் வாழ்வுக்கும் ஆசீர்வாதம் தரும். 9 நான் சொல்வதெல்லாம் உண்மை, அவற்றை முழுமையாக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும். 10 இதற்காகத் தான் நாம் உழைக்கிறோம். போராடுகிறோம்; தேவனில் விசுவாசம் கொள்கிறோம்; அவரே அனைத்து மக்களின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்.
11 கட்டளையிட்டு இவ்விஷயங்களைப் போதனை செய். 12 நீ இளமையாக இருக்கிறாய். ஆனால் உன்னை முக்கியம் அற்றவனாக நடத்த யாரையும் அனுமதிக்காதே. விசுவாசம் உடையவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இரு. வார்த்தையிலும், வாழும் வகையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய நடத்தையிலும் விசுவாசிகளுக்கு முன் மாதிரியாக இரு.
13 மக்களுக்குத் தொடர்ந்து வேதவாக்கியங்களை வாசித்துக்காட்டு. அவர்களை பலப்படுத்து, அவர்களுக்குப் போதனைசெய். நான் வரும்வரை இவற்றைச் செய். 14 உனக்குக் கிடைத்துள்ள வரத்தைப் பயன்படுத்த நினைவுகொள். மூப்பராகிய சபையோர் உன் மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தின் மூலம் இந்த வரத்தைப் பெற்றாய். 15 இவற்றைத் தொடர்ந்து செய். இவற்றுக்காக உன் வாழ்வைக் கொடு. பிறகு, உன் பணியின் வளர்ச்சியை அனைவரும் கண்டுகொள்வர். 16 உன் வாழ்விலும் போதனையைக் குறித்து எச்சரிக்கையாக இரு. சரியாய் வாழ்ந்து இவற்றைப் போதனை செய். அதனால் உன் வாழ்வையும், உன் போதனையைக் கேட்பவர்களின் வாழ்வையும் நீ காப்பாற்றிக்கொள்ள முடியும்.
2008 by World Bible Translation Center