Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 இராஜாக்கள் 17:17-24

17 கொஞ்ச நாள் ஆனதும் அப்பெண்ணின் குமாரன் அதிகமாக நோய்வாய்ப்பட்டான். இறுதியில் சுவாசிப்பதை நிறுத்தினான். 18 அப்பெண் எலியாவிடம், “நீர் ஒரு தீர்க்கதரிசி. எனக்கு உதவுவீரா. நீங்கள் இங்கு ஏன் வந்தீர்கள்? உங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? என் பாவங்களை நினைவூட்டவும் என் குமாரனைக் கொல்லுவதற்குமா வந்தீர்கள்?” என்று கேட்டாள்.

19 எலியா அவளிடம், “உன் குமாரனை என்னிடம் கொடு” என்றான். பின் அவனைத் தூக்கிக்கொண்டு மேல் மாடிக்குப் படிவழியே ஏறிப்போனான். தனது அறையிலுள்ள படுக்கையில் அவனைக் கிடத்தினான். 20 பிறகு எலியா, “எனது தேவனாகிய கர்த்தாவே, இந்த விதவை எனக்குத் தங்க இடம் தந்தாள். அவளுக்கு இத்தீமையைச் செய்யலாமா? குமாரன் மரிக்க காரணம் ஆகலாமா?” 21 பின் அவன் மீது மூன்று முறை குப்புற விழுந்து, “எனது தேவனாகிய கர்த்தாவே! இவனை மீண்டும் பிழைக்கச் செய்வீராக!” என்றான்.

22 எலியாவின் வேண்டுதலுக்குக் கர்த்தர் பதிலளித்தார். அப்பையன் மீண்டும் உயிர் பிழைத்தான்! 23 எலியா அவனைத் தூக்கிக்கொண்டு கீழே வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், “இதோ பார் உன் குமாரன் உயிரோடு இருக்கிறான்!” என்று கூறினான்.

24 அந்தப் பெண், “நீங்கள் உண்மையில் தேவனுடைய மனிதர் என்று நான் இப்போது அறிகிறேன். கர்த்தர் உங்கள் மூலமாக உண்மையில் பேசுகிறார்” என்றாள்.

சங்கீதம் 30

தாவீது பாடிய பாடல்களுள் ஒன்று. ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காகப் பாடிய பாடல்.

30 கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர்.
    எனது பகைவர்கள் என்னைத் தோற்கடித்து என்னை நோக்கி நகைக்காமல் இருக்கச் செய்தீர்.
    எனவே நான் உம்மை கனப்படுத்துவேன்.
என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
    நீர் என்னைக் குணமாக்கினீர்.
கல்லறையினின்று என்னை விடுவித்தீர்.
    என்னை வாழவிட்டீர்.
    குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை.

தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்!
    அவரது பரிசுத்த நாமத்தைத் துதியுங்கள்!
தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே.”
    ஆனால் அவர் அன்பை வெளிப்படுத்தினார், எனக்கு “உயிரைக்” கொடுத்தார்.
இரவில் அழுதபடி படுத்திருந்தேன்.
    மறுநாள் காலையில் மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தேன்!

இப்போது இவ்வாறு நான் கூறமுடியும்.
    அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன்.
    “நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!”
கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர்.
    எதுவும் என்னை வெல்ல முடியாது என உணர்ந்தேன்.
சிலகாலம், நீர் என்னை விட்டு விலகினீர்,
    நான் மிகவும் பயந்தேன்.

தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன்.
    எனக்கு இரக்கம் காட்டுமாறு வேண்டினேன்.
நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்?
    மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள்.
அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை!
    என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்” என்றேன்.
10 கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும்.
    என்னிடம் தயவாயிரும்!
    கர்த்தாவே, எனக்கு உதவும்.

11 நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்!
    என் அழுகையை நடனக்களிப்பாய் மாற்றினீர்.
அழுகையின் ஆடைகளை நீர் அகற்றிப்போட்டீர்.
    மகிழ்ச்சியால் என்னைப் பொதிந்து வைத்தீர்.
12 எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன்.
    ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன்.
    எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

கலாத்தியர் 1:11-24

பவுலின் அதிகாரம் தேவனிடமிருந்து வந்தது

11 சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தியானது மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல. இதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 12 நான் இந்த நற்செய்தியை மனிதர்களிடம் இருந்து பெறவில்லை. எந்த மனிதனும் நற்செய்தியை எனக்குக் கற்பிக்கவில்லை. இயேசு கிறிஸ்து இதனை எனக்குக் கொடுத்தார். மக்களிடம் நான் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் எனக்கு வெளிப்படுத்தினார்.

13 நீங்கள் எனது கடந்த கால வாழ்வைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். நான் யூதர்களின் மதத்தில் இருந்தேன். தேவனுடைய சபையை நான் மிகவும் துன்புறுத்தினேன். அதனை அழித்துவிட முயன்றேன். 14 நான் யூதர்களின் மதத்தில் தலைவனாக இருந்தேன். என் வயதுள்ள மற்ற யூதர்களைவிட நான் அதிகச் செயல்கள் செய்தேன். மற்றவர்களைவிட நான் பழைய மரபு விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க முயன்றேன். அவ்விதிகள் நமது முன்னோர்களிடமிருந்து நாம் பெற்றவை ஆகும்.

15 ஆனால் நான் பிறப்பதற்கு முன்னரே தேவன் எனக்காக வேறு ஒரு தனித் திட்டம் வைத்திருந்தார். அதனால் அவர் கிருபையாக என்னை அழைத்தார். அவரிடம் எனக்காக வேறு திட்டங்கள் இருந்தன. 16 நான் யூதர் அல்லாதவர்களிடம் போய் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் போதிக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். எனவே அவர் தமது குமாரனை எனக்கு வெளிப்படுத்தினார். தேவன் என்னை அழைத்த போது, வேறு எந்த மனிதரிடமிருந்தும் நான் ஆலோசனையோ, அறிவுரையோ கேட்கவில்லை. 17 எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்களையும் நான் போய்ப் பார்க்கவில்லை. அவர்கள் எல்லாம் எனக்கு முன்னரே அப்போஸ்தலர்களாய் இருக்கிறவர்கள். ஆனால் நான் யாருக்காகவும் காத்திருக்காமல் அரேபியாவுக்குப் போனேன். பிறகு அங்கிருந்து தமஸ்கு என்ற நகருக்குத் திரும்பிவந்தேன்.

18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நான் எருசலேமுக்குப் போனேன். நான் பேதுருவைச்[a] சந்திக்க விரும்பினேன். அவரோடு பதினைந்து நாட்கள் நான் தங்கி இருந்தேன். 19 வேறு எந்த அப்போஸ்தலர்களையும் அங்கு நான் சந்திக்கவில்லை. இயேசுவின் சகோதரனான யாக்கோபை மட்டும் சந்தித்தேன். 20 நான் எழுதுபவை எல்லாம் பொய் அல்ல என்று தேவனுக்குத் தெரியும். 21 பிறகு சீரியா, சிலிசியா போன்ற பகுதிகளுக்கு நான் சென்றேன்.

22 யூதேயாவில் இருக்கிற சபைகளில் உள்ளவர்கள் என்னை இதற்கு முன்னால் பார்த்ததில்லை. 23 அவர்கள் என்னைப்பற்றி சிலவற்றைக் கேள்விப்பட்டிருந்தார்கள். அதாவது, “முன்பு நம்மைத் துன்பப்படுத்தியவனே தான் அழிக்க நினைத்த விசுவாசத்தைக் குறித்து இப்பொழுது பிரசங்கம் செய்கிறான்.” 24 எனவே விசுவாசிகள் என்னைக் குறித்து தேவனைப் புகழ்ந்தனர்.

லூக்கா 7:11-17

மரித்தவன் எழுப்பப்படுதல்

11 மறுநாள் இயேசு நாயீன் என்னும் நகரத்திற்குச் சென்றார். இயேசுவின் சீஷர்களும், மிகப் பெரிய கூட்டமான மக்கள் பலரும் அவரோடு பிராயாணம் செய்தனர். 12 நகர வாசலை இயேசு நெருங்கியபோது ஒரு மரண ஊர்வலத்தைக் கண்டார். விதவையான ஒரு தாய் தனது ஒரே குமாரனை இழந்திருந்தாள். அவனது உடலைச் சுமந்து சென்றபோது தாயுடன் அந்நகர மக்கள் பலரும் கூட இருந்தனர். 13 கர்த்தர் (இயேசு) அவளைப் பார்த்தபோது, அவளுக்காக மனதுருகினார். இயேசு அவளிடம் சென்று, “அழாதே” என்றார். 14 பாடையின் அருகே வந்து இயேசு அதைத் தொட்டார். அந்தப் பாடையைச் சுமந்து வந்த மனிதர்கள் நின்றனர். இயேசு இறந்த மனிதனை நோக்கி, “இளைஞனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்கிறேன்” என்றார். 15 இறந்துபோன குமாரன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தான். அவனை அவன் தாயிடம், இயேசு ஒப்படைத்தார்.

16 எல்லா மக்களும் ஆச்சரியமுற்றனர். அவர்கள், “ஒரு மகா தீர்க்கதரிசி நம்மிடையே வந்துள்ளார்” என்றனர். மேலும் அவர்கள், “தேவன் தம் மக்களைக் கவனித்துக்கொள்கிறார்” என்றார்கள்.

17 இயேசுவைப் பற்றிய இச்செய்தி யூதேயா முழுவதும் அதைச் சூழ்ந்த எல்லா இடங்களிலும் பரவிற்று.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center