Revised Common Lectionary (Complementary)
நாகமானின் பிரச்சனை
5 நாகமான் என்பவன் ஆராம் ராஜாவின் படைத் தளபதி ஆவான். அவன் ராஜாவுக்கு மிகவும் முக்கியமானவன். ஏனெனில் அவன் மூலமாகத்தான் கர்த்தர் ஆராமுக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அவன் மகா பராக்கிரமசாலியாக இருந்தான். ஆனால் தொழுநோயால் துன்புற்றான்.
2 ஆராமிய படை பல பிரிவுகளை அனுப்பி இஸ்ரவேலரோடு சண்டையிட்டது. அவர்கள் ஜனங்களை அடிமைகளாகப் பிடித்துவந்தனர். ஒரு தடவை ஒரு சிறு பெண்ணைப் பிடித்துவந்தனர். அவள் நாகமானின் மனைவிக்கு வேலைக்காரியாக இருந்தாள். 3 அவள் தனது எஜமானியிடம், “சமாரியாவில் வாழும் தீர்க்கதரிசியை (எலிசாவை) நமது எஜமான் (நாகமான்) பார்க்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்” என்றாள்.
4 நாகமானும் அவனது எஜமானிடம் (ராஜாவிடம்) போய், இஸ்ரவேலியப் பெண் கூறியதைச் சொன்னான்.
5 ஆராமின் ராஜாவும், “இப்போதே செல், நானும் இஸ்ரவேல் ராஜாவுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறேன்” என்றான்.
எனவே நாகமான் இஸ்ரவேலுக்குச் சென்றான். தன்னோடு சில அன்பளிப்புகளாக 750 பவுண்டு வெள்ளி, 6,000 தங்கத்துண்டுகள், 10 மாற்றுத்துணிகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றான். 6 அதோடு ராஜாவின் கடிதத்தையும் எடுத்துச்சென்றான். அக்கடிதத்தில், “இப்போது, என் சேவகனான நாகமானை நான் அனுப்பியிருக்கிறேன் என்பதை இக்கடிதம் காட்டும். அவனது தொழுநோயைக் குணமாக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது.
7 இஸ்ரவேல் ராஜா கடிதத்தை வாசித்ததும் வருத்தப்பட்டு தனது ஆடைகளைக் கிழித்தான். தனது வருத்தத்தை வெளிப்படுத்த அவன், “நான் தேவனா? இல்லை. மரணத்தின் மீதும் வாழ்வின் மீதும் எனக்கு அதிகாரமில்லை. அப்படியிருக்க ஆராம் ராஜா என்னிடம் ஒரு தொழுநோயாளியைக் குணப்படுத்த ஏன் அனுப்பினான்? இதைப் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும். இது ஒரு தந்திரம்தான். ஒரு போரை ஆரம்பிக்கவே ஆராம் ராஜா முயற்சி செய்கிறான்” என்றான்.
8 ராஜா வருத்தப்பட்டுத் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டதைப்பற்றி தேவமனிதனான எலிசா அறிந்தான். உடனே தன் தூதுவனை அனுப்பி, “ஏன் உங்கள் ஆடைகளைக் கிழித்துகொண்டீர்கள், நாகமானை என்னிடம் அனுப்புங்கள். அப்போதுதான் அவர்கள் இஸ்ரவேலில் ஒரு தீர்க்கதரிசி இருக்கிறார் என்பதைத் தெரிந்துக்கொள்வார்கள்!” என்று தெரிவித்தான்.
9 ஆகவே, நாகமான் தனது குதிரைகளோடும் இரதங்களோடும், எலிசாவின் வீட்டிற்கு வந்து கதவிற்கு வெளியே நின்றான். 10 எலிசா நாகமானிடம் ஒரு தூதுவனை அனுப்பினான். அத்தூதுவன் நாகமானிடம், “போய் யோர்தான் ஆற்றில் ஏழுமுறை ஸ்நானம்பண்ணு. பின் உன் தோல் குணமாகும். நீயும் சுத்தமாவாய்” என்று கூறினான்.
11 நாகமான் மிகவும் கோபப்பட்டு வெளியேறினான். அவன், “அவர் (எலிசா) வெளியே வந்து என் முன்னால் நிற்பார். அவரது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் கூறுவார். எனது உடல் மீது தனது கைகளை அசைத்து நோயைக் குணப்படுத்துவார் என்று நினைத்தேன். 12 இஸ்ரவேலில் கிடைக்கும் எல்லா தண்ணீரையும்விடவும் ஆப்னா, பர்பாரும் ஆகிய தமஸ்குவின் ஆறுகள் சிறந்தவை. அப்படியிருக்க நான் ஏன் அவற்றில் ஸ்நானம் பண்ணி சுத்தமடையக் கூடாது?” என்றவாறு கோபத்தோடு திரும்பிப் போனான்.
13 ஆனால் நாகமானின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, “தந்தையே! தீர்க்கதரிசி உம்மிடம் சில பெருஞ்செயல்களைச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தால், நீர் செய்திருப்பீரல்லவா? எனவே அவர் எளிதானவற்றைச் சொன்னாலும் அதற்குக் கீழ்ப்படியவேண்டும். அவர் (தீர்க்கதரிசி), ‘ஸ்நானம் பண்ணு நீ சுத்தமடைவாய்’ என்று கூறியிருக்கிறார்” என்றனர்.
14 எனவே நாகமான் தேவமனிதன் (தீர்க்கதரிசி எலிசா) சொன்னவாறு செய்தான். அவன் போய் யோர்தான் ஆற்றில் ஏழு தடவை மூழ்கி சுத்தமானான்! அவனது தோல் குழந்தையின் தோலைப் போன்று மென்மையாயிற்று.
தாவீது பாடிய பாடல்களுள் ஒன்று. ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காகப் பாடிய பாடல்.
30 கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர்.
எனது பகைவர்கள் என்னைத் தோற்கடித்து என்னை நோக்கி நகைக்காமல் இருக்கச் செய்தீர்.
எனவே நான் உம்மை கனப்படுத்துவேன்.
2 என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
நீர் என்னைக் குணமாக்கினீர்.
3 கல்லறையினின்று என்னை விடுவித்தீர்.
என்னை வாழவிட்டீர்.
குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை.
4 தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்!
அவரது பரிசுத்த நாமத்தைத் துதியுங்கள்!
5 தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே.”
ஆனால் அவர் அன்பை வெளிப்படுத்தினார், எனக்கு “உயிரைக்” கொடுத்தார்.
இரவில் அழுதபடி படுத்திருந்தேன்.
மறுநாள் காலையில் மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தேன்!
6 இப்போது இவ்வாறு நான் கூறமுடியும்.
அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன்.
“நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!”
7 கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர்.
எதுவும் என்னை வெல்ல முடியாது என உணர்ந்தேன்.
சிலகாலம், நீர் என்னை விட்டு விலகினீர்,
நான் மிகவும் பயந்தேன்.
8 தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன்.
எனக்கு இரக்கம் காட்டுமாறு வேண்டினேன்.
9 நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்?
மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள்.
அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை!
என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்” என்றேன்.
10 கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும்.
என்னிடம் தயவாயிரும்!
கர்த்தாவே, எனக்கு உதவும்.
11 நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்!
என் அழுகையை நடனக்களிப்பாய் மாற்றினீர்.
அழுகையின் ஆடைகளை நீர் அகற்றிப்போட்டீர்.
மகிழ்ச்சியால் என்னைப் பொதிந்து வைத்தீர்.
12 எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன்.
ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன்.
எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.
24 ஒரு பந்தயத்தில் எல்லா ஓட்டக்காரர்களும் ஓடுவது உங்களுக்குத் தெரியும். ஆனால் ஒருவனே பரிசைப் பெறுவான். எனவே அதைப் போன்று ஓடுங்கள். வெற்றி பெறுவதற்காக ஓடுங்கள். 25 பந்தயங்களில் பங்கு பெறுகிறவர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொள்வர். ஒரு கிரீடத்தை வெல்வதற்காக இதைச் செய்வார்கள். கொஞ்ச காலத்தில் அழியக் கூடிய உலக ரீதியான கிரீடம் அது. ஆனால் நாம் பெறும் கிரீடமோ அழியாது நிலைநிற்கும். 26 குறிக்கோளோடு ஓடுகிற மனிதனைப் போன்று நானும் ஓடுகிறேன். காற்றோடு மோதாமல் இலக்கில் தாக்குகிற குத்துச் சண்டை வீரனைப்போல போரிடுகிறேன். 27 எனது சொந்த சரீரத்தையே நான் அடக்குகிறேன். அதை எனக்கு அடிமையாக்குகிறேன். நான் பிறருக்குப் போதித்த பின்பு நானே புறந்தள்ளி விழாதபடிக்கு (தேவனால் அப்புறப்படுத்தப்படாதபடிக்கு) இதைச் செய்கிறேன்.
நோயாளியை குணமாக்குதல்
(மத்தேயு 8:1-4; லூக்கா 5:12-16)
40 தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவின் முன்னால் மண்டியிட்டு, “நீர் விரும்பினால் என்னைக் குணப்படுத்தலாம். அதற்குரிய வல்லமை உமக்குண்டு” என்று கெஞ்சினான்.
41 அவனுக்காக இயேசு மனமுருகினார். ஆகையால் அவனைத் தொட்டு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார். 42 உடனே நோய் அவனை விட்டுவிலகி அவன் குணமானான்.
43 அவனைப் புறப்பட்டுச் செல்லுமாறு இயேசு கூறினார். ஆனால், அவனை அவர் பலமாக எச்சரிக்கையும் செய்தார்: 44 “நான் உனக்காகச் செய்ததை யாரிடமும் சொல்லாதே. ஆனால் நீயாகப் போய் ஆலய ஆசாரியனிடம் காட்டு. தேவனுக்குக் காணிக்கை செலுத்து. ஏனென்றால் நீ குணமடைந்திருக்கிறாய். மோசே ஆணையிட்டபடி காணிக்கை செலுத்து. இதனால் நீ குணமானதை மக்கள் அறிந்து கொள்வார்கள்,” என்று இயேசு கூறினார். 45 அந்த மனிதன் அங்கிருந்து சென்று தான் கண்ட எல்லா மக்களிடமும் இயேசு தன்னைக் குணப்படுத்தியதைப் பற்றிச் சொன்னான். எனவே இயேசுவைப் பற்றிய செய்தி எங்கும் பரவியது. அதனால் இயேசுவால் ஒரு நகரத்துக்குள்ளும் வெளிப்படையாக நுழைய முடியவில்லை. மக்கள் இல்லாத இடங்களில் இயேசு தங்கி இருந்தார். இயேசு எங்கிருந்தாலும் அனைத்து நகரங்களில் இருந்தும் மக்கள் அவரைத் தேடி வந்தனர்.
2008 by World Bible Translation Center