Revised Common Lectionary (Complementary)
புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
5 கர்த்தாவே, என் வார்த்தைகளைக் கேளும்.
நான் சொல்ல முயற்சிப்பதை புரிந்துகொள்ளும்.
2 எனது தேவனாகிய ராஜாவே,
என் ஜெபத்தைக் கேளும்.
3 கர்த்தாவே, என் அன்பளிப்புகளை காலைதோறும் உமக்கு படைக்கிறேன்.
உம்மை உதவிக்காக நோக்குகிறேன், நீர் என் ஜெபங்களைக் கேளும்.
4 தேவனே, தீய ஜனங்கள் உம்மருகே வருவதை நீர் விரும்புகிறதில்லை.
தீய ஜனங்கள் உம்மை ஆராதிக்க முடியாது.
5 மூடர் உம்மிடம் வர இயலாது,
தீமை செய்யும் ஜனங்களை நீர் வெறுக்கிறீர்.
6 பொய் கூறும் ஜனங்களை நீர் அழிக்கிறீர்.
பிறரைத் தாக்குவதற்காக இரகசியமாகத் திட்டமிடுவோரை கர்த்தர் வெறுக்கிறார்.
7 கர்த்தாவே, உமது மிகுந்த இரக்கத்தினால் நான் உமது ஆலயத்திற்கு வருவேன்.
உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலை தாழ்த்தி அச்சத்தோடும், மரியாதையோடும் உம்மை வணங்குவேன்.
8 கர்த்தாவே, சரியான வாழ்க்கை வாழ உமது வழியைக்காட்டும்.
ஜனங்கள் எனது குறைகளைத் தேடுகிறார்கள்.
எனவே நான் எவ்வாறு வாழ நீர் விரும்புகிறீரோ, அவ்வழியை எனக்குக் காட்டும்.
9 அந்த ஜனங்கள் உண்மை பேசுவதில்லை அவர்கள் உண்மையைப் புரட்டும் பொய்யர்கள்.
அவர்கள் வாய்கள் திறந்த கல்லறைகளைப் போன்றவை.
அவர்கள் பிறரிடம் நயமான மொழிகளைச் சொல்வார்கள்.
ஆனால், அவர்கள் கண்ணியில் சிக்கவைப்பதற்காகவே அவ்வாறு செய்வார்கள்.
10 தேவனே, அவர்களைத் தண்டியும்.
அவர்கள் தங்கள் வலையிலேயே விழட்டும்.
அந்த ஜனங்கள் உமக்கெதிராகத் திரும்புகிறார்கள்.
எனவே அவர்களின் எண்ணிக்கையற்ற குற்றங்களுக்காக அவர்களைத் தண்டியும்.
11 ஆனால் தேவனை நம்பும் ஜனங்கள் களிகூரட்டும்.
என்றென்றும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்.
தேவனே, உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களைப் பாதுகாத்து, பெலனைத் தாரும்.
12 கர்த்தாவே, நல்லோருக்கு நீர் நன்மை செய்தால்
அவர்களைக் காக்கும் பெருங்கேடகமாவீர்.
அனைத்து தேசங்களும் கர்த்தரைப் பின்பற்றும்
56 கர்த்தர் இவற்றைச் சொன்னார், “அனைத்து ஜனங்களிடமும் நியாயமாக இருங்கள், நீதியானவற்றைச் செய்யுங்கள். ஏனென்றால், எனது இரட்சிப்பு விரைவில் உனக்கு வரும். உலகம் முழுவதற்கும் எனது இரட்சிப்பு விரைவில் காட்டப்படும்.” 2 ஓய்வு நாளில் தேவனுடைய சட்டங்களுக்கு அடிபணிந்து வாழ்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான். தீமை செய்யாதவன் மகிழ்ச்சியுடன் இருப்பான்.
3 யூதரல்லாத சிலர் கர்த்தரோடு தாங்களாகவே சேர்ந்துகொள்வார்கள். அவர்கள், “கர்த்தர் தமது ஜனங்களோடு எங்களைச் சேர்த்துக்கொள்ளமாட்டார்” என்று சொல்லமாட்டார்கள். “நான் ஒரு காய்ந்த மரத்துண்டு. நான் குழந்தைகளைப் பெற முடியாதவன்” என்று அலிகள் சொல்லக்கூடாது.
4-5 அலிகள் இவ்வாறு சொல்லமாட்டார்கள். ஏனென்றால், கர்த்தர் கூறுகிறார், “ஓய்வு நாளில் அலிகளில் சிலர், என் உடன்படிக்கைகளுக்கு அடிபணிகிறார்கள். அவர்கள் நான் விரும்புகின்றவற்றைச் செய்வதற்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் உண்மையில் என் உடன்படிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள். எனவே, நான் ஆலயத்தில் ஒரு ஞாபகக் கல்லை அவர்களுக்காக வைப்பேன். அவர்களின் பெயர் என் நகரத்தில் நினைவுகூரப்படும். ஆம், நான் அந்த அலிகளுக்கு குமாரர்கள் குமாரத்திகள் ஆகியோரைவிடச் சிறந்ததான சிலவற்றைக் கொடுப்பேன். நித்தியமான ஒரு பெயரை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் எனது ஜனங்களிடமிருந்து வெட்டப்படமாட்டார்கள்.”
6 கர்த்தரோடு யூதரால்லாத சில ஜனங்களும் சேருவார்கள். அவர்கள் இதைச் செய்வார்கள். எனவே, அவருக்குத் தொண்டு செய்யமுடியும். கர்த்தருடைய நாமத்தை நேசிக்கின்றனர். அவர்கள் தாங்களாகவே கர்த்தரோடு அவரது ஊழியக்காரர்களாகச் சேருவார்கள். அவர்கள் ஓய்வுநாளை வழிபாட்டுக்குரிய சிறந்த நாளாக எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் தொடர்ந்து எனது உடன்படிக்கையை (சட்டம்) நெருக்கமாகப் பின்பற்றுவார்கள். 7 கர்த்தர் கூறுகிறார், “எனது பரிசுத்தமான மலைக்கு நான் அந்த ஜனங்களை அழைத்து வருவேன். ஜெபக்கூடத்தில் அவர்களை மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வேன். அவர்கள் தரும் காணிக்கைகளும் பலிகளும் என்னைத் திருப்திப்படுத்தும் எனென்றால், எனது ஆலயம் எல்லா நாடுகளுக்குமான ஜெபவீடாக அழைக்கப்படும்.” 8 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
இஸ்ரவேல் ஜனங்கள் தம் நாட்டை விட்டுப்போக வற்புறுத்தப்பட்டனர். ஆனால் மீண்டும் கர்த்தர் அவர்களை ஒன்று சேர்த்துவிடுவார். கர்த்தர், “நான் மீண்டும் இந்த ஜனங்களை ஒன்று சேர்ப்பேன்” என்று கூறுகிறார்.
யூதரல்லாத பெண்ணுக்கு உதவி
(மத்தேயு 15:21-28)
24 இயேசு அந்த இடத்தைவிட்டு தீரு பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த ஒரு வீட்டுக்குச் சென்றார். அங்குதான் அவர் இருக்கிறார் என்பதை அங்குள்ள மக்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஆனால் அவர் மக்களின் கவனத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. 25 அவர் அங்கு இருப்பதை ஒரு பெண் கேள்வியுற்றாள். அவளது சிறு குமாரத்தி, அசுத்த ஆவியை உடையவள். எனவே, அவள் இயேசுவிடம் வந்து அவரது பாதத்தில் விழுந்து வணங்கினாள். 26 அவள் யூதர்குலத்துப் பெண் அல்ல. அவள் கிரேக்கப் பெண். சீரோபேனிக்கேயாவில் பிறந்தவள். அவள் தன் மகளைப் பிடித்த பிசாசை விரட்டுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.
27 அந்தப் பெண்ணிடம் இயேசு, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களிடம் கொடுப்பது சரியன்று. முதலில் பிள்ளைகள் தேவையான அளவு உண்ணட்டும்” என்றார்.
28 “அது உண்மை தான் ஆண்டவரே. பிள்ளைகள் உண்ணாத உணவுத் துணுக்குகளை மேசைக்கடியில் உள்ள நாய்கள் உண்ணலாமே” என்று அவள் பதில் சொன்னாள்.
29 பிறகு அந்தப் பெண்ணிடம் இயேசு, “இது நல்ல பதில். நீ போகலாம். பிசாசு உன் மகளை விட்டுப் போய்விட்டது” என்றார்.
30 அந்தப் பெண் வீட்டுக்குப் போனாள். தன் குழந்தை படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். பிசாசு அவளை விட்டு நீங்கி இருந்தது.
2008 by World Bible Translation Center