Revised Common Lectionary (Complementary)
96 கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
உலகம் முழுவதும் கர்த்தரை நோக்கிப் பாடட்டும்.
2 கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்!
அவரது நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்!
ஒவ்வொரு நாளும் அவர் நம்மை பாதுகாப்பதைப் பற்றிச் சொல்லுங்கள்!
3 தேவன் உண்மையிலேயே அற்புதமானவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுங்கள்.
தேவன் செய்கிற வியப்பிற்குரிய காரியங்களை எங்குமுள்ள ஜனங்களுக்குச் சொல்லுங்கள்.
4 கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர்.
வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர்.
5 பிற தேசங்களின் “தெய்வங்கள்” எல்லாரும் வெறும் சிலைகளே.
ஆனால் கர்த்தரோ வானங்களை உண்டாகினவர்.
6 அவருக்கு முன்னே அழகிய மகிமை ஒளி வீசும்.
தேவனுடைய பரிசுத்த ஆலயத்தில் பெலனும் அழகும் விளங்கும்.
7 குடும்பங்களும் தேசங்களும்
கர்த்தருக்கு மகிமையும், துதியும் நிரம்பிய பாடல்களைப் பாடுவார்கள்.
8 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
உங்கள் காணிக்கைகளோடு ஆலயத்திற்குச் செல்லுங்கள்.
9 கர்த்தருடைய அழகான ஆலயத்தில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
கர்த்தரைப் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தொழுதுகொள்ளுங்கள்.
14 இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் அங்கே நின்றுக்கொண்டு இருந்தனர். எனவே சாலொமோன் அவர்களை நோக்கி திரும்பி ஆசீர்வதிக்கும்படி தேவனை வேண்டினான். 15 பிறகு சாலொமோன் ராஜா கர்த்தருக்கு முன் மிக நீண்ட நேரம் ஜெபித்தான். அவன்:
“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மிகப் பெரியவர். கர்த்தர் தாமாகவே என் தந்தையான தாவீதிற்குச் செய்த வாக்குறுதியைச் செய்து முடித்தார், அவர் என் தந்தையிடம், 16 ‘நான் என் இஸ்ரவேல் ஜனங்களை, எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தேன். ஆனால் நான் இன்னும் என்னை மகிமைப்படுத்தும் ஆலயத்தைக் கட்டுவதற்குரிய இடத்தை இஸ்ரவேல் கோத்திரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கவில்லை. அதோடு இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்திச் செல்லும் தலைவனையும் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால், இப்போது நான் மகிமைப்படுவதற்குரிய இடமாக எருசலேமை தேர்ந்தெடுத்துள்ளேன். அதோடு, இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்ல தாவீதைத் தேர்ந்தெடுத்துவிட்டேன்.’
17 “என் தந்தையான தாவீது, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்திட, ஒரு ஆலயத்தை கட்ட விரும்பினார். 18 ஆனால் அவரிடம் கர்த்தரோ, ‘என்னை மகிமைப்படுத்திட நீ ஆலயம் கட்ட வேண்டுமென்று விரும்புகிறாய். நீ என் ஆலயத்தைக் கட்ட விரும்புவது நல்லதுதான். 19 ஆனால் நான் என் ஆலயத்துக்காக உன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. உன் குமாரன் என் ஆலயத்தைக்கட்டுவான்!’ என்று கூறினார்.
20 “எனவே கர்த்தர் தனது வாக்குறுதியை நிறைவேற்றிக்கொண்டார். நான் என் தந்தையான தாவீதின் இடத்தில் ராஜாவாக இருக்கிறேன். கர்த்தருடைய வாக்குறுதியின்படி இப்போது நான் இஸ்ரவேலை ஆண்டு வருகிறேன். நான் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டிவிட்டேன். 21 ஆலயத்திற்குள் பரிசுத்தப் பெட்டியை வைக்கவும் இடம் அமைத்துவிட்டேன். அப்பரிசுத்தப் பெட்டிக்குள் கர்த்தர் நமது முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கை இருக்கிறது. இந்த உடன்படிக்கையை அவர் நமது முற்பிதாக்களோடு எகிப்தை விட்டு வெளியே வந்ததும் செய்தார்” என்றான்.
பவுலும்-போலி அப்போஸ்தலர்களும்
11 நான் கொஞ்சம் முட்டாளாக இருந்தாலும் என்னை நீங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். ஏற்கெனவே என்னை நீங்கள் பொறுத்துக்கொண்டிருக்கிறீர்கள். 2 நான் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இது தேவனிடமிருந்து வந்த பெருமை ஆகும். நான் உங்களைக் கிறிஸ்துவுக்குத் தருவதாய் வாக்குறுதி கொடுத்தேன். கிறிஸ்துவே உங்களது ஒரே மணவாளன். அவரது தூய மணப் பெண்ணாக உங்களை அவருக்குக் கொடுக்க விரும்புகிறேன். 3 எனினும் கிறிஸ்துவிடமுள்ள உங்கள் முழு அர்ப்பணிப்பில் இருந்து விலகும்படி உங்கள் மனம் கெடுக்கப்படுமோ என்று அஞ்சுகிறேன். பாம்பின் (சாத்தான்) தந்திர வழிகளின் மூலம் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதைப்போல உங்களுக்கும் நேரும். 4 நாங்கள் சொன்னதற்கு மாறாக இயேசுவைப் பற்றி போதிக்க வரும் எவரையும் நம்பி சகித்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்களிடமிருந்து பெற்ற ஆவிக்கும் நற்செய்திக்கும் மாறுபட்ட ஆவியையும் நற்செய்தியையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆகவே என்னையும் சகித்துக்கொள்ளுங்கள்.
5 மகாபிரதான அப்போஸ்தலரைவிட நான் ஒன்றிலும் குறைவு உள்ளவன் அல்லன் என எண்ணுகிறேன். 6 நான் பயிற்சி பெற்ற பேச்சாளன் இல்லை என்பது உண்மைதான். ஆனால் எனக்குப் போதிய ஞானம் உண்டு. நாங்கள் அவற்றை உங்களுக்கு எல்லா வழிகளிலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.
2008 by World Bible Translation Center