Revised Common Lectionary (Complementary)
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று.
110 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி,
“என் வலது பக்கத்தில் அமரும், நான் உமது பகைவர்களை உமது ஆளுகையின் கீழ் வைப்பேன்” என்றார்.
2 உமது அரசு பெருக கர்த்தர் உதவுவார்.
உமது அரசு சீயோனில் ஆரம்பிக்கும்.
பிற நாடுகளிலும் நீர் உமது பகைவர்களை ஆளும்வரைக்கும் அது பெருகும்.
3 நீர் உமது படையை ஒன்று திரட்டும்போது,
உமது ஜனங்கள் தாங்களே விருப்பத்துடன் வருவார்கள்.
அவர்கள் சிறப்பு ஆடைகளை அணிவார்கள்.
அவர்கள் அதிகாலையில் சந்திப்பார்கள்.
அந்த இளைஞர்கள்
தரைமேல் உள்ள பனித்துளியைப்போல் உம்மைச் சுற்றி இருப்பார்கள்.
4 கர்த்தர் ஒரு வாக்குறுதி அளித்தார்.
அவர் மனம் மாறமாட்டார்.
“நீர் என்றென்றும் ஆசாரியராயிருப்பீர்.
மெல்கிசேதேக்கைப் போன்ற ஆசாரியராயிருப்பீர்.”
5 என் ஆண்டவர் உமது வலது பக்கம் இருக்கிறார்.
அவர் கோபமடையும்போது மற்ற ராஜாக்களைத் தோற்கடிப்பார்.
6 தேவன் தேசங்களை நியாயந்தீர்ப்பார்.
பூமி பிரேதங்களால் நிரப்பப்படும்.
தேவன் வல்லமையுள்ள நாட்டின் தலைவர்களை தண்டிப்பார்.
7 வழியின் நீரூற்றில் ராஜா தண்ணீரை பருகுகிறார்.
அவர் உண்மையாகவே அவரது தலையை உயர்த்தி, மிகுந்த ஆற்றலோடு காணப்படுவார்!
7 அப்போது கர்த்தர், “எகிப்தில் என் ஜனங்கள் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். எகிப்தியர்கள் அவர்களைத் துன்புறுத்தும்போது, அவர்களிடும் கூக் குரலை நான் கேட்டேன். அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன். 8 நான் இப்போது இறங்கிப்போய், எகிப்தியரிடமிருந்து என் ஜனங்களை மீட்பேன். அந்நாட்டிலிருந்து தொல்லைகளில்லாமல் சுதந்திரமாக வாழத்தக்க ஒரு நல்ல நாட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வேன்.[a] அந்நாடு நல்ல பொருட்களால் நிரம்பியதாகும். கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற ஜனங்கள் அந்நாட்டில் வாழ்கிறார்கள். 9 நான் இஸ்ரவேல் ஜனங்களின் கூக்குரலைக் கேட்டேன். எகிப்தியர்கள் அவர்கள் வாழ்க்கையைக் கடினமாக்கியதையும் கண்டேன். 10 நான், உன்னை இப்போது பார்வோனிடம் அனுப்புகிறேன். நீ போய் எனது ஜனங்களாகிய இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்து!” என்றார்.
11 ஆனால் மோசே தேவனிடம், “நான் பெரிய மனிதன் அல்ல, நான் எவ்வாறு பார்வோனிடம் போய், இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தக் கூடும்?” என்று கேட்டான்.
12 தேவன், “நான் உன்னோடு இருப்பேன். எனவே நீ இதைச் செய்ய முடியும். நான் உன்னை அனுப்புகிறேன் என்பதற்கு இதுவே சான்றாகும்! ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்திய பிறகு, நீ வந்து இம்மலையின் மேல் என்னைத் தொழுவாய்!” என்றார்.
13 அப்போது மோசே தேவனை நோக்கி, “நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவன் என்னை அனுப்பினார்’ என்று கூறினால், அவர்கள், ‘அவரது பெயரென்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்லட்டும்?” என்று கேட்டான்.
14 அப்போது தேவன் மோசேயை நோக்கி, “அவர்களிடம் ‘இருக்கிறவராக இருக்கிறேன்’ என்று கூற வேண்டும். இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ போகும்போது, ‘இருக்கிறேன்’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார், என்று சொன்னார் என்று சொல்” என்றார். 15 மோசேயிடம் தேவன் மீண்டும், “இஸ்ரவேலர்களிடம், நீ சொல்ல வேண்டியது இதுதான்: ‘உங்களுடைய முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவர் யேகோவா என்பவர் ஆவார். என் பெயரும் எப்பொழுதும் யேகோவா ஆகும். அப்பெயரில்தான் தலைமுறை தலைமுறையாக ஜனங்கள் என்னை அறிவார்கள். யேகோவா என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார்.
39 “எங்கள் பிதா ஆபிரகாம்தான்” என்றனர் யூதர்கள். இயேசு அவர்களுக்கு விடையாக “நீங்கள் உண்மையிலேயே ஆபிரகாமின் பிள்ளைகள் என்றால் அவர் செய்தவற்றையே நீங்களும் செய்ய வேண்டும். 40 நான் தேவனிடமிருந்து கேட்ட உண்மையை உங்களுக்குச் சொல்லுகிற மனிதன். ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இதுபோல் எதுவும் செய்யவில்லை. 41 ஆகையால் நீங்கள் உங்கள் சொந்தப் பிதா செய்ததையே செய்கிறீர்கள்” என்றார்.
ஆனால் யூதர்கள், “எங்கள் பிதா யாரென்று தெரிந்துகொள்ள இயலாத குழந்தைகள் அல்ல நாங்கள். தேவனே எங்கள் பிதா. எங்களுக்குரிய ஒரே பிதாவும் அவரே” என்றனர்.
42 இயேசு அவர்களிடம், “தேவன்தான் உங்களது உண்மையான பிதா என்றால் நீங்கள் என்மீது அன்பு செலுத்தியிருப்பீர்கள். நான் தேவனிடமிருந்து வந்தேன். இப்பொழுது இங்கே இருக்கிறேன். நான் என் சொந்த அதிகாரத்தின் பேரில் வரவில்லை. தேவன் என்னை அனுப்பினார். 43 நான் சொல்லுகிறவற்றையெல்லாம் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் என் உபதேசத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 44 பிசாசே உங்கள் பிதாவாயிருக்கிறான். நீங்கள் அவனுக்கு உரியவர்கள். அவனுக்கு விருப்பமானவற்றையே நீங்கள் செய்யவிரும்புகிறீர்கள். தொடக்கம் முதலே பிசாசானவன் கொலைகாரனாக இருக்கிறான். அவன் உண்மைக்கு எதிரானவன். அவனிடம் உண்மை இல்லை. அவன் அவனால் சொல்லப்படுகிற பொய்யைப் போன்றவன். அவன் ஒரு பொய்யன். அவன் பொய்களின் பிதா.
45 “நான் உண்மையைப் பேசுகிறேன். அதனால்தான் நீங்கள் என்னை நம்புவதில்லை. 46 உங்களில் எவராவது ஒருவர் நான் பாவம் செய்தவன் என்று நிரூபிக்க இயலுமா? நான் சொல்வது உண்மையாக இருக்கும்போது என்னை ஏன் நம்பாமல் இருக்கிறீர்கள்? 47 தேவனைச் சேர்ந்த எவனும் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறான். ஆனால் நீங்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் நீங்கள் தேவனைச் சார்ந்தவர்கள் இல்லை” என்றார்.
இயேசுவும்-ஆபிரகாமும்
48 யூதர்கள் இயேசுவிடம், “நாங்கள் உன்னை சமாரியன் என்று சொல்கிறோம். பிசாசு உன்னிடம் புகுந்ததால் நீ உளறுகிறாய் என்றும் சொல்கிறோம். நாங்கள் சொல்வது சரிதானே?” என்று கேட்டனர்.
49 “என்னிடம் எந்தப் பிசாசும் இல்லை. நான் என் பிதாவுக்கு மகிமை உண்டாக்குகிறேன். ஆனால் நீங்கள் எனக்கு மகிமையை அளிப்பதில்லை. 50 நான் எனக்கு மகிமையைச் சேர்த்துக்கொள்ள முயன்று கொண்டிருக்கவில்லை. இந்த மகிமைக்குரியவர் ஒருவர் இருக்கிறார். அவரே நீதிபதி. 51 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். எவனொருவன் என் உபதேசத்துக்கு கீழ்ப்படிகிறானோ அவன் ஒருபோதும் இறந்துபோவதில்லை” என்றார் இயேசு.
52 யூதர்களோ இயேசுவிடம், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்பது இப்பொழுது உறுதியாயிற்று. ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும்கூட இறந்துபோய்விட்டார்கள். ஆனால் நீயோ, ‘என் உபதேசத்துக்குக் கீழ்ப்படிகிறவன் ஒருபோதும் இறந்துபோவதில்லை’ என்று கூறுகிறாய். 53 எங்கள் பிதா ஆபிரகாமைவிடப் பெரியவன் என்று நீ உன்னை நினைத்துக்கொள்கிறாயா? ஆபிரகாம் இறந்துபோனார். தீர்க்கதரிசிகளும் இறந்துபோயினர். உன்னை நீ யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டனர்.
54 இயேசு அவர்களிடம், “எனக்கு நானே மகிமை அளித்துக்கொண்டால் அது வீணாகிவிடும். என் பிதா எனக்கு மகிமை அளித்துக்கொண்டிருக்கிறார். அவர் உங்கள் தேவன் என்று நீங்கள் சொல்லிக்கொள்கிறீர்கள். 55 ஆனால் அவரை நீங்கள் உண்மையில் அறிந்து கொள்ளவில்லை. நான் அவரை அறிகிறேன். நான் அவரை அறியேன் என்று சொன்னால், நான் உங்களைப் போன்றே ஒரு பொய்யனாக இருப்பேன். ஆனால் அவரை நான் அறிவேன். அவர் சொன்னவற்றுக்குக் கீழ்ப்படிகிறேன். 56 உங்கள் தந்தையாகிய ஆபிரகாம் நான் வந்த நாளைக் காண்பேன் என்று மகிழ்ச்சியடைந்தார். அவர் அந்த நாளைக் கண்டு மகிழ்ச்சியும் அடைந்தார்” என்றார்.
57 யூதர்கள் இயேசுவிடம், “என்ன சொன்னாய்? நீ ஒருபோதும் ஆபிரகாமைப் பார்த்திருக்க முடியாது. உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லையே!” என்று கேட்டனர்.
58 “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்” என்றார் இயேசு. 59 இயேசு இதைச் சொன்னதும் மக்கள் அவர் மீதுக் கல் எறிவதற்குக் கற்களைப் பொறுக்கினார்கள். ஆனால் இயேசு மறைந்து அந்த தேவாலயத்தை விட்டு விலகிப்போனார்.
2008 by World Bible Translation Center