Revised Common Lectionary (Complementary)
14 “எனவே, நான் (கர்த்தர்) அவளிடத்தில் இனிமையான வார்த்தைகளால் பேசுவேன். நான் அவளை வனாந்தரத்திற்கு அழைத்துப் போவேன். நான் அவளிடம் நயமாகப் பேசுவேன். 15 அங்கே நான் அவளுக்குத் திராட்சைத் தோட்டங்களைக் கொடுப்பேன். நான் அவளுக்கு நம்பிக்கையின் வாசலைப் போன்ற ஆகோர் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன். பிறகு அவள் எகிப்து தேசத்திலிருந்து வந்த சமயத்திலும் தன் வாலிப நாட்களிலும் என்னோடு பேசினதுபோல் பதிலைத் தருவாள்.” 16 கர்த்தர் இதனைச் சொல்கிறார்.
“அந்த நேரத்தில் நீங்கள் என்னை, ‘என் கணவனே’ என்று அழைப்பீர்கள். நீங்கள் என்னை ‘என் பாகாலே’ என்று அழைக்கமாட்டீர்கள். 17 நான் அவளது வாயிலிருந்து பாகால்களின் பெயர்களை எடுத்துவிடுவேன். பிறகு ஜனங்கள் மீண்டும் பாகால்களின் பெயர்களை பயன்படுத்தமாட்டார்கள்.
18 “அப்போது நான் இஸ்ரவேலர்களுக்காகக் காட்டுமிருகங்களோடும் வானத்துப் பறவைகளோடும், தரையில் ஊரும் உயிர்களோடும், ஒரு உடன்படிக்கைச் செய்துகொள்வேன். நான் போருக்குரியவில், வாள், ஆயுதம் போன்றவற்றை உடைப்பேன். தேசத்தில் எந்த ஆயுதமும் இல்லாதபடிச் செய்வேன். நான் தேசத்தைப் பாதுகாப்பாக இருக்கும்படிச் செய்வேன். எனவே இஸ்ரவேல் ஜனங்களை சமாதானமாகப் படுக்கச் செய்வேன். 19 நான் (கர்த்தர்) உன்னை என்றைக்குமான எனது மணப் பெண்ணாக்குவேன். நான் உன்னை நன்மை, நீதி, அன்பு, இரக்கம், ஆகிய குணங்கள் உள்ள என்னுடைய மணமகளாக்குவேன். 20 நான் உன்னை எனது உண்மைக்குரிய மணமகளாக்குவேன். பிறகு நீ கர்த்தரை உண்மையாகவே அறிந்துகொள்வாய்.
தாவீதின் ஒரு பாடல்.
103 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
என் ஒவ்வொரு அவயவங்களே அவரது பரிசுத்த நாமத்தைத் துதியங்கள்.
2 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
அவர் உண்மையிலேயே தயவுள்ளவர் என்பதை மறக்காதே.
3 நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார்.
அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.
4 தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார்.
அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார்.
5 தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார்.
அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார்.
6 கர்த்தர் நியாயமானவர்.
பிறரால் புண்படுத்தப் பட்டிருக்கிறவர்களுக்கு தேவன் நியாயத்தைக் கொண்டு வருகிறார்.
7 தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார்.
அவர் செய்யத்தக்க வல்லமையுள்ள காரியங்களை இஸ்ரவேல் காணுமாறு தேவன் செய்தார்.
8 கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர்.
தேவன் பொறுமையும் மிகுந்த அன்பும் உடையவர்.
9 கர்த்தர் எப்போதும் குற்றங்காண்பதில்லை.
கர்த்தர் என்றென்றும் நம்மிடம் கோபங்கொண்டிருப்பதில்லை.
10 நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம்,
ஆனால், நமக்குரிய தண்டனையை தேவன் வழங்கவில்லை.
11 வானம் பூமிக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ,
அதைப்போன்று தம்மைப் பின்பற்றுவோரிடம் தேவன் காட்டும் அன்பும் மிக மேலானது.
12 மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ
அந்த அளவு தேவன் நமது பாவங்களை நம்மை விட்டு வெகுதூரத்திற்கு விலக்கிவிட்டார்.
13 தந்தை தனது பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்று
கர்த்தரும், அவரைப் பின் பற்றுவோரிடம் இரக்கமாக இருக்கிறார்.
22 எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் உண்டாக்கினர்.
எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் தேவன் ஆளுகிறார்.
அவை அனைத்தும் கர்த்தரைத் துதிக்கவேண்டும்.
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
புதிய உடன்படிக்கை
3 நாங்கள் மீண்டும் எங்களைப்பற்றியே பெருமையாகப் பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டோமா? மற்றவர்களைப் போன்று எனக்கோ அல்லது என்னிடமிருந்தோ அறிமுக நிருபங்கள் தேவையா? 2 எங்கள் நிருபம் நீங்கள் தான். எங்கள் இதயங்களில் நீங்கள் எழுதப்பட்டிருக்கிறீர்கள். அனைவராலும் அறியப்படுகிறவர்களாகவும், வாசிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கிறீர்கள். 3 கிறிஸ்துவிடமிருந்து எங்கள் மூலம் அனுப்பிய நிருபம் நீங்கள் தான் என்று காட்டிவிட்டீர்கள். இந்நிருபம் மையால் எழுதப்படவில்லை. ஜீவனுள்ள தேவனுடைய ஆவியால் எழுதப்பட்டுள்ளது. இது கற்பலகையின்[a] மீது எழுதப்படவில்லை. மனித இதயங்களின் மீது எழுதப்பட்டுள்ளது.
4 கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு முன்னால் உறுதியாக நம்புவதால் எங்களால் இவற்றைச் சொல்ல முடிகிறது. 5 எங்களால் நல்லதாக எதனையும் செய்ய முடியும் என்று நாங்கள் கருதுவதாக அர்த்தம் இல்லை. செய்யவேண்டிய எல்லாக் காரியங்களுக்குமான வல்லமையை எங்களுக்குத் தருபவர் தேவனே ஆவார். 6 புது உடன்படிக்கை ஊழியராக இருக்கும்படி அவரே எங்களைத் தகுதியுள்ளவர் ஆக்கினார். இந்தப் புதிய ஒப்பந்தம் வெறும் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தமாய் இராமல் ஆவிக்குரியதாக இருக்கிறது. எழுத்துப் பூர்வமான சட்டம் மரணத்தைக் கொண்டு வருகிறது. ஆவியோ வாழ்வைத் தருகிறது.
லேவி இயேசுவைத் தொடருதல்
(மத்தேயு 9:9-13; லூக்கா 5:27-32)
13 இயேசு மறுபடியும் கடலருகே சென்றார். ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். இயேசு அவர்களுக்கு உபதேசித்தார். 14 கடற்கரையையொட்டி நடந்து செல்லும்போது அல்பேயுவின் குமாரனான லேவி என்னும் வரி வசூலிப்பவனைக் கண்டார். லேவி வரி வசூலிப்பு அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தான். அவனிடம் இயேசு “என்னைப் பின் தொடர்ந்து வா” என்றார். உடனே லேவி எழுந்து அவரைப் பின் தொடர்ந்தான்.
15 அன்று, அதற்குப் பின் இயேசு லேவியினுடைய வீட்டில் உணவு உண்டார். அங்கே வரி வசூல் செய்பவர்களும், பாவிகளும் இயேசுவோடும் அவரது சீஷர்களோடும் உணவு உண்டனர். இவர்களோடு பலர் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்திருந்தனர். 16 அவர்களோடு வேதபாரகரும் பரிசேயரும் இருந்தனர். அவர்கள் பாவிகளோடும், வரி வசூல் செய்பவர்களோடும் சேர்ந்து இயேசு உணவு உட்கொள்வதைக் கண்டனர். அவர்கள் இயேசுவின் சீஷரை நோக்கி, “ஏன் இவர் வரிவசூல் செய்பவர்களோடும், பாவிகளுடனும் சேர்ந்து உணவு உண்கின்றார்?” என்று கேட்டனர்.
17 இயேசு இதனைக் கேட்டார். அவர் அவர்களை நோக்கி, “சுகமுள்ளவனுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயாளிக்கே மருத்துவர் தேவை. நான் நல்லவர்களை அழைக்க வரவில்லை, பாவிகளை அழைக்கவே வந்தேன்” என்றார்.
பிற தலைவர்களைவிட வித்தியாசமானவர்
(மத்தேயு 9:14-17; லூக்கா 5:33-39)
18 யோவானின் சீஷர்களும், பரிசேயரின் சீஷர்களும் உபவாசம் இருந்தனர். சிலர் இயேசுவிடம் வந்து “யோவானுடைய சீஷர்களும் உபவாசம் இருக்கின்றனர். பரிசேயருடைய சீஷர்களும் உபவாசம் இருக்கின்றனர். உங்களுடைய சீஷர்கள் ஏன் உபவாசம் இருப்பதில்லை?” என்று கேட்டனர்.
19 அதற்கு இயேசு, “ஒரு திருமணத்தில் மணமகன் தம்முடன் இருக்கும்போது மணமகனின் நண்பர்கள் துயரப்படமாட்டார்கள். மணமகன் இன்னும் கூடவே இருக்கிற சந்தர்ப்பத்தில், அவர்களால் உபவாசம் இருக்க முடியாது. 20 ஆனால் மணமகன் பிரிந்து செல்லக்கூடிய ஒரு தருணம் வரும். அப்போது மணமகனைப் பிரிந்த வருத்தத்தில், அவன் நண்பர்கள் துயரமுடன் இருப்பார்கள். அதற்குப் பிறகு அவர்கள் உபவாசம் இருப்பார்கள்.
21 “எவனொருவனும் புதிய துணியோடு பழைய துணியைச் சேர்த்து ஒட்டுப்போட்டு தைக்கமாட்டான். அவன் அவ்வாறு செய்தால் ஒட்டுப்போட்டவை சுருங்கிவிடும். புதியது பழையதை அதிகமாய்க் கிழிக்கும். முன்னதைவிட மோசமாகும். 22 எவனொருவனும் புதிய திராட்சை இரசத்தை பழைய தோல் பையில் ஊற்றி வைக்கமாட்டான். ஊற்றி வைத்தால் புதிய இரசம் பழைய பையைக் கெடுத்துவிடும். அதோடு இரசமும் சிந்திவிடும். புதிய இரசத்தைப் புதிய பைகளிலேதான் மக்கள் ஊற்றி வைப்பார்கள்” என்று சொன்னார்.
2008 by World Bible Translation Center