Print Page Options
Previous Prev Day Next DayNext

Readings for Lent and Easter

Short readings from throughout the Bible that focus on the meaning and events of Easter.
Duration: 47 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 22:1-14

ஆபிரகாம், தேவனால் சோதிக்கப்படுதல்

22 இதற்குப் பிறகு, தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினார். எனவே தேவன் “ஆபிரகாமே” என்று அழைத்தார்.

ஆபிரகாமும், “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.

தேவன் அவனிடம், “உன்னுடைய அன்பிற்குரிய, ஒரே குமாரனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்திற்குச் செல். அங்கு உன் குமாரனை எனக்கு தகன பலியாகக் கொடு. எந்த இடத்தில் அதைச் செய்ய வேண்டுமென்று நான் உனக்குச் சொல்வேன்” என்றார்.

காலையில் ஆபிரகாம் எழுந்து தனது கழுதையைத் தயார் செய்தான். ஈசாக்கையும் இரண்டு வேலைக்காரர்களையும் அழைத்துக்கொண்டான். பலிக்கு விறகுகளையும் எடுத்துக்கொண்டான். தேவன் போகச் சொன்ன இடத்திற்கு அவர்கள் போனார்கள். அவர்கள் மூன்று நாட்கள் பயணம் செய்தபின் தொலைவில் தேவன் குறிப்பிட்ட இடம் தெரிந்தது. ஆபிரகாம் தனது வேலைக்காரர்களிடம், “கழுதையோடு நீங்கள் இங்கேயே தங்கியிருங்கள், நானும் என் குமாரனும் அவ்விடத்திற்கு தொழுதுகொள்ளப் போகிறோம். பிறகு உங்களிடம் திரும்பி வருவோம்” என்றான்.

பலிக்கான விறகுகளை எடுத்து குமாரனின் தோள் மீது வைத்தான். ஆபிரகாம் கத்தியையும், நெருப்பையும் எடுத்துக்கொண்டு, அவனும் அவனது குமாரனும் சேர்ந்து போனார்கள்.

ஈசாக்கு தன் தந்தையைப் பார்த்து, “அப்பா” என்று அழைத்தான்.

ஆபிரகாமும், “என்ன மகனே” எனக் கேட்டான்.

ஈசாக்கு அவனிடம், “விறகும், நெருப்பும் நம்மிடம் உள்ளது. பலியிடுவதற்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று கேட்டான்.

அதற்கு ஆபிரகாம், “தேவனே தனக்கான பலிக்குரிய ஆட்டுக்குட்டியைக் கொடுப்பார் மகனே” என்று பதில் சொன்னான்.

ஆபிரகாமும் அவனது குமாரனும் தேவன் போகச் சொன்ன இடத்திற்கு போய்ச் சேர்ந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை கட்டி அதின்மேல் விறகுகளை அடுக்கினான். பின் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் கிடத்தினான். 10 பிறகு ஆபிரகாம் கத்தியை எடுத்து குமாரனை வெட்டுவதற்குத் தயாரானான்.

11 அப்போது கர்த்தருடைய தூதன் ஆபிரகாமைத் தடுத்து நிறுத்தி, “ஆபிரகாமே, ஆபிரகாமே” என்று அழைத்தார்.

ஆபிரகாம், “நான் இங்கே இருக்கிறேன்” என்று பதிலளித்தான்.

12 தேவதூதன்: “உனது குமாரனைக் கொல்ல வேண்டாம். அவனை எவ்விதத்திலும் காயப்படுத்த வேண்டாம். நீ தேவனை மதிப்பவன் என்றும், கீழ்ப்படிபவன் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். நீ எனக்காக உன் ஒரே ஒரு குமாரனையும் கொல்லத் தயாராக உள்ளாய் என்பதையும் தெரிந்துகொண்டேன்” என்றார்.

13 ஆபிரகாம் தொலைவில் தன் கண் முன் ஒரு ஆட்டுக் கடாவைக் கண்டான். அதன் கொம்புகள் புதரில் சிக்கிக்கொண்டிருந்தன. ஆபிரகாம் அதனை விடுவித்து தேவனுக்குப் பலியிட்டான். ஆபிரகாமின் குமாரன் காப்பாற்றப்பட்டான். 14 அதனால் ஆபிரகாம் அந்த இடத்திற்கு, “யேகோவா யீரே”[a] என்று பெயரிட்டான். “கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்” என்று இன்றைக்கும் கூட ஜனங்கள் கூறுகின்றனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center