Old/New Testament
பஸ்கா பண்டிகை
12 மோசேயும் ஆரோனும் இன்னும் எகிப்தில் இருக்கையில் கர்த்தர் அவர்களிடம் பேசினார்: 2 “இம்மாதம் உங்கள் ஆண்டின் முதல் மாதமாக இருக்கும். 3 இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்திற்கும் இந்தக் கட்டளை உரியது: இம்மாதத்தின் பத்தாவது நாள் ஒவ்வொரு மனிதனும் அவனது வீட்டினருக்காக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வர வேண்டும். 4 ஒரு ஆட்டுக்குட்டியை உண்பதற்கு வேண்டிய ஆட்கள் அவனது வீட்டில் இல்லாதிருந்தால், அவன் அக்கம் பக்கத்தாரில் சிலரை உணவைப் பகிர்ந்துகொள்வதற்கு அழைக்க வேண்டும். ஆட்டுக் குட்டி ஒவ்வொருவரும் உண்ணப் போதுமானதாக இருக்கவேண்டும். 5 அந்த ஆட்டுக் குட்டி ஒரு வயது நிரம்பிய கடாவாகவும், நோயற்றதாகவும் இருக்க வேண்டும். அது ஒரு செம்மறி ஆடு அல்லது வெள்ளாட்டின் குட்டியாக இருக்கலாம். 6 மாதத்தின் பதினான்காவது நாள்வரை அம்மிருகத்தைக் கவனித்துக்கொள்ளவேண்டும். அந்நாளில், இஸ்ரவேல் கோத்திரத்தின் எல்லா ஜனங்களும் மாலைப்பொழுதில் அவற்றைக் கொல்ல வேண்டும். 7 நீங்கள் அதன் இரத்தத்தைச் சேகரிக்க வேண்டும். இந்த இரத்தத்தை, அதன் இறைச்சியை உண்ணுகிறவர்கள் தங்கள் வீட்டு வாசலின் மேற்பகுதியிலும், பக்கவாட்டிலும் நிலைக்கால்களில் பூசவேண்டும்.
8 “இந்த இரவில், ஆட்டுக்குட்டியை நெருப்பில் வாட்டியெடுத்து மாமிசம் எல்லாவற்றையும் உண்ண வேண்டும். நீங்கள் கசப்பான கீரை வகைகளையும், புளிக்காத ரொட்டியையும் கூட சாப்பிட வேண்டும். 9 ஆட்டுக்குட்டியை நீங்கள் தண்ணீரில் வேக வைக்கக்கூடாது. அந்த ஆட்டுக்குட்டி முழுவதையும் நெருப்பினால் சுடவேண்டும். அதன் தலை, கால்கள் மற்றும் உள் உறுப்புக்கள் எல்லாம் இருக்க வேண்டும். 10 அந்த இரவுக்குள் நீங்கள் மாமிசம் முழுவதையும் சாப்பிட்டு முடிக்கவேண்டும். காலையில் மாமிசம் மீதியாயிருந்தால் நெருப்பில் அந்த மாமிசத்தை சுட்டு எரிக்கவேண்டும்.
11 “நீங்கள் உணவைச் சாப்பிடும்போது பயணத்திற்குத் தயாரான உடை அணிந்தவர்களாய் இருக்க வேண்டும். உங்கள் மிதியடிகளை அணிந்து, கைத்தடிகளை ஏந்தியவர்களாய் இருக்க வேண்டும். நீங்கள் அதை அவசரமாகச் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இது கர்த்தருடைய பஸ்கா பண்டிகை. கர்த்தர் தமது ஜனங்களைப் பாதுகாத்து, எகிப்திலிருந்து விரைவாக வெளியில் கொண்டுவரும் நேரம்.
12 “இன்றிரவில் நான் எகிப்தின் வழியாகச் சென்று ஒவ்வொரு முதற்பேறான மனிதனையும், மிருகத்தையும் கொன்றுபோடுவேன். இவ்வாறாக, எகிப்தின் தேவர்கள் அனைத்தின் மேலும் தீர்ப்பு கொண்டு வருவேன். நானே கர்த்தர் என்பதைக் காட்டுவேன். 13 ஆனால் உங்கள் வீடுகளில் பூசப்பட்ட இரத்தம் ஒரு விசேஷ அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைப் பார்த்ததும் உங்கள் வீட்டைக் கடந்து போவேன். எகிப்தின் ஜனங்களுக்குத் தீமையான காரியங்கள் ஏற்படுமாறு செய்வேன். அத்தீய நோய்கள் ஒன்றும் உங்களைப் பாதிக்காது.
14 “இந்த இரவை நீங்கள் எப்போதும் நினைவு கூருவீர்கள். இது உங்களுக்கு ஒரு விசேஷ விடுமுறை நாளாக இருக்கும். எப்போதும் இந்த விடுமுறை நாளில் உங்கள் சந்ததியார் கர்த்தரை மகிமைப்படுத்துவார்கள். 15 இந்த விடுமுறையின் ஏழு நாட்களும் புளிக்காத மாவினால் செய்த ரொட்டியை உண்ணவேண்டும். இந்த விடுமுறையின் முதல் நாளில் புளிப்பான யாவற்றையும் உங்கள் வீடுகளிலிருந்து அகற்ற வேண்டும். இப்பண்டிகையின் ஏழு நாட்களிலும் யாரும் புளிப்பான எதையும் உண்ணக்கூடாது. யாரேனும் புளிப்பானதைச் சாப்பிட்டால், அவன் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து ஒதுக்கப்படவேண்டும். 16 விடுமுறை காலத்தின் முதல் நாளிலும் கடைசி நாளிலும் பரிசுத்த சபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும். இந்நாட்களில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. உங்கள் சாப்பாட்டிற்கான உணவைத் தயாரிப்பது மட்டுமே நீங்கள் செய்யும் வேலையாக இருக்க வேண்டும். 17 நீங்கள் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை நினைவுகூர வேண்டும். ஏனெனில் இந்நாளில் உங்கள் ஜனங்கள் எல்லோரையும் குழுக்களாக எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். எனவே உங்கள் எல்லா சந்ததியாரும் இந்த நாளை நினைவுகூர வேண்டும். எந்நாளும் நிலைபெற்றிருக்கும் சட்டமாக இது அமையும். 18 எனவே (நிசான்) முதல் மாதத்தின் பதினான்காவது நாளில் நீங்கள் புளிப்பில்லாத ரொட்டியை உண்ணத் துவங்க வேண்டும். அதே மாதத்தின் இருபத்தொன்றாம் நாள் மாலைவரைக்கும் இந்த புளிப்பில்லாத ரொட்டியைத் தொடர்ந்து நீங்கள் சாப்பிட வேண்டும். 19 ஏழு நாட்கள் உங்கள் வீடுகளில் எந்தப் புளிப்பான பொருளும் காணப்படக் கூடாது. இஸ்ரவேலின் குடிமகனாகிலும், அந்நியனாகிலும், புளிப்பானதைச் சாப்பிட்டால் அவன் இஸ்ரவேல் ஜனத்தினின்று ஒதுக்கப்பட வேண்டும். 20 இந்த ஓய்வு நாளில் நீங்கள் புளிப்புள்ள உணவை உண்ணவே கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் புளிப்பு இல்லாத மாவால் செய்த ரொட்டியையே உண்ணவேண்டும்” என்றார்.
21 மோசே எல்லா மூப்பர்களையும் (தலைவர்கள்) ஒன்றாகக் கூடிவரச் செய்தான். மோசே அவர்களிடம், “உங்கள் குடும்பங்களுக்குரிய ஆட்டுக்குட்டிகளைக் கொண்டு வந்து, பஸ்கா பண்டிகைக்காக அவற்றைக் கொல்லுங்கள். 22 ஈசோப் தழைகளை எடுத்து, அவற்றை இரத்தம் நிரம்பியிருக்கும் கிண்ணங்களில் தோய்த்து எடுத்து வாசல் நிலைக்கால்களின் பக்கங்களிலும், மேலேயும் இரத்தத்தைப் பூசுங்கள். காலை வரைக்கும் ஒருவனும் அவனது வீட்டை விட்டு எங்கும் போகக்கூடாது. 23 எகிப்தின் முதற்பேறானவற்றை அழிப்பதற்காக கர்த்தர் கடந்து செல்லும்போது அவர் வாசல் நிலைக்கால்களிலிருக்கும் இரத்தத்தைக் காண்பார். அப்போது கர்த்தர் அந்த வீட்டைப் பாதுகாப்பார். அழிக்கிறவன் உங்கள் வீட்டுக்குள் வந்து, உங்களைச் சேதப்படுத்த கர்த்தர் அவனை விடமாட்டார். 24 நீங்கள் இக்கட்டளையை நினைவுகூர வேண்டும். உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் எந்நாளும் இது சட்டமாக இருக்கும். 25 கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்திற்குப் போன பிறகும் இதை நினைவுகூர்ந்து செய்ய வேண்டும். 26 உங்கள் பிள்ளைகள், ‘நீங்கள் ஏன் இந்த பண்டிகையைக் கொண்டாடுகிறீர்கள்?’ என்று உங்களைக் கேட்டால், 27 நீங்கள், ‘இந்தப் பஸ்காப் பண்டிகை கர்த்தரை மகிமைப்படுத்துவதற்குரியதாகும். ஏனெனில், நாங்கள் எகிப்தில் வாழ்ந்தபோது கர்த்தர் இஸ்ரவேலரின் வீடுகளைக் கடந்து சென்று எகிப்தியர்களைக் கொன்றார், ஆனால் அவர் நமது வீடுகளின் ஜனங்களைக் காப்பாற்றினார்.’ என்று கூறுங்கள்” என்றார்.
ஜனங்கள் கர்த்தரைப் பணிந்து தொழுதுகொள்கிறார்கள் 28 கர்த்தர் இந்தக் கட்டளையை மோசேக்கும், ஆரோனுக்கும் கொடுத்தார். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் கட்டளையிட்டவற்றைச் செய்தார்கள்.
29 நள்ளிரவில் கர்த்தர் எகிப்தின் முதற்பேறானவர்களை, எகிப்தை ஆண்ட பார்வோனின் முதல் மகனிலிருந்து, சிறையிலுள்ள கைதியின் முதல் மகன் வரைக்கும் எல்லோரையும் அழித்தார். எல்லா முதற் பேறான மிருகங்களும் மரித்தன. 30 அந்த இரவில் எகிப்தின் ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் மரித்தனர். பார்வோனும், அவனது அதிகாரிகளும், எகிப்தின் எல்லா ஜனங்களும் சத்தமிட்டு அழுதனர்.
இஸ்ரவேல் எகிப்தைவிட்டுப் புறப்படுதல்
31 அந்த இரவில் பார்வோன் மோசேயையும், ஆரோனையும் வரவழைத்தான். பார்வோன் அவர்களிடம், “எழுந்து என் ஜனங்களை விட்டு விலகிப்போங்கள். நீங்கள் கூறுகிறபடியே நீங்களும் உங்கள் ஜனங்களும் செய்யலாம். போய் கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்! 32 உங்கள் ஆடுகளையும், மாடுகளையும் நீங்கள் கூறியபடியே உங்களோடு எடுத்துச் செல்லலாம், போங்கள்! என்னையும் ஆசீர்வதியுங்கள்!” என்றான். 33 எகிப்தின் ஜனங்களும் அவர்களை விரைந்து போகும்படிக் கேட்டுக்கொண்டனர். அவர்கள், “நீங்கள் போகாவிட்டால், நாங்கள் அனைவரும் மரித்துப் போவோம்!” என்று கூறினார்கள்.
34 இஸ்ரவேல் ஜனங்கள் ரொட்டியைப் புளிக்கச் செய்வதற்கும் நேரமிருக்கவில்லை. மாவிருந்த கிண்ணங்களைத் துணியால் பொதிந்து அவர்கள் தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர். 35 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் மோசே கூறியபடியே செயல்பட்டனர். அவர்கள் அக்கம் பக்கத்தாராகிய எகிப்தியரிடம் சென்று ஆடைகளையும், பொன் மற்றும் வெள்ளி பொருட்களையும் கேட்டார்கள். 36 இஸ்ரவேல் ஜனங்கள் மீது எகிப்தியர்களுக்கு இரக்கம் உண்டாகுமாறு கர்த்தர் செய்தார். எனவே எகிப்தியர்கள் தங்கள் விலையுயர்ந்த பொருட்களை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தனர்.
37 ராமசேசிலிருந்து சுக்கோத்துக்கு இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணம் செய்தனர். சமார் 6,00,000 புருஷர்கள் இருந்தனர். குழந்தைகள் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. 38 ஆடுகளும், மாடுகளும், பிற பொருட்களும் மிக அதிகமாக இருந்தன. அவர்களோடு இஸ்ரவேலர் அல்லாத வெவ்வேறு இனத்து ஜனங்களும் பயணம் செய்தனர். 39 ரொட்டி மாவை புளிக்கவைக்க ஜனங்களுக்கு நேரம் இருக்கவில்லை. பயணத்திற்காக எந்த விசேஷ உணவையும் அவர்கள் தயாரிக்கவில்லை. எனவே புளிப்பற்ற ரொட்டியையே சுட்டார்கள்.
40 இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 430 ஆண்டுகள் வாழ்ந்திருந்தனர். 41 சரியாக 430 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நாளில் கர்த்தரின் சேனைகள் [a] எகிப்தை விட்டுச் சென்றனர். 42 கர்த்தர் செய்ததை ஜனங்கள் நினைவுகூரும் அந்த இரவு விசேஷமா னது. இஸ்ரவேலின் ஜனங்கள் எல்லாரும் எந்நாளும் அந்த இரவை நினைவுகூருவார்கள்.
43 கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் நோக்கி, “பஸ்கா பண்டிகையின் விதிகள் இவை: அந்நியன் யாரும் பஸ்காவை உண்ணக் கூடாது. 44 ஆனால் ஒருவன் ஒரு அடிமையை வாங்கி அவனுக்கு விருத்தசேதனம் செய்வித்தால், அந்த அடிமை பஸ்காவை உண்ணலாம். 45 ஆனால் ஒருவன் உங்கள் நாட்டில் வாழ்ந்தாலும், கூலி வேலைக்கு உங்களால் அமர்த்தப்பட்டவனாக இருந்தாலும், அம்மனிதன் பஸ்கா உணவை உண்ணக்கூடாது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டுமே பஸ்கா உரியது.
46 “ஒவ்வொரு குடும்பமும் அவர்கள் வீட்டில் அவ்வுணவை உண்ண வேண்டும். வீட்டிலிருந்து வெளியே அவ்வுணவை எடுத்துச் செல்லக் கூடாது. ஆட்டுக்குட்டியின் எலும்புகளை முறிக்க வேண்டாம். 47 இஸ்ரவேலின் எல்லா ஜனங்களும் இப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும். 48 உங்களோடு வசிக்கும் இஸ்ரவேலன் அல்லாத ஒருவன் கர்த்தரின் பஸ்காவில் பங்குகொள்ள விரும்பினால், அவனுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும். அப்போது அவன் இஸ்ரவேலின் குடிமகனாகக் கருதப்படுவான். அவன் பஸ்கா உணவில் பங்குகொள்ள முடியும். ஆனால் ஒரு மனிதன் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால், அவன் பஸ்கா உணவை உண்ண முடியாது. 49 இந்த விதிகள் எல்லோருக்கும் பொதுவானவை. இஸ்ரவேலின் குடி மகன் அல்லது உங்கள் நாட்டில் வசிக்கும் இஸ்ரவேல் அல்லாத எல்லோருக்கும் விதிகள் பொதுவானதாகவே இருக்கும்” என்றார்.
50 கர்த்தர் மோசேக்கும், ஆரோனுக்கும் கொடுத்த கட்டளைகளின்படி இஸ்ரவேலின் ஜனங்கள் குழுக்களாக எல்லோரும் எகிப்தை விட்டுபோனார்கள். 51 அதே நாளில் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தினார். ஜனங்கள் குழுக்களாக புறப்பட்டனர்.
13 பிறகு கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேலில் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் முதல் ஆண் குழந்தை ஒவ்வொன்றும் எனக்குரியதாகும். முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண் குழந்தையும், முதலில் பிறந்த ஒவ்வொரு விலங்கும் எனக்குரியதாகும்” என்றார்.
3 அப்போது மோசே ஜனங்களிடம், “இந்த நாளை நினைவுகூருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். ஆனால் இந்த நாளில் கர்த்தர் அவரது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி உங்களை விடுதலை செய்தார். நீங்கள் புளிப்புள்ள ரொட்டியை உண்ணக்கூடாது. 4 ஆபீப் மாதத்தின் இந்த நாளில் நீங்கள் எகிப்தை விட்டுச் செல்கிறீர்கள். 5 கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்கு ஒரு விசேஷமான வாக்குறுதியை அளித்தார். கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் ஜனங்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்தார். நல்ல பொருட்களால் நிரப்பப்பட்ட நாட்டிற்கு கர்த்தர் உங்களை வழிநடத்திய பிறகும் நீங்கள் இந்த நாளை நினைவுகூர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முதல் மாதத்தின் இந்த நாளை வழிபாட்டிற்குரிய விசேஷ தினமாகக் கொள்ளவேண்டும்.
6 “புளிப்பு இல்லாத ரொட்டியையே ஏழு நாட்களுக்கு நீங்கள் உண்ண வேண்டும். ஏழாவது நாளில் ஒரு பெரிய விருந்து கர்த்தரை மகிமைப்படுத்துவதற்காக நடைபெறும். 7 எனவே ஏழு நாட்கள் புளிப்புள்ள ரொட்டியை நீங்கள் உண்ணவே கூடாது. உங்கள் தேசத்தில் எப்பக்கத்திலும் புளிப்புள்ள ரொட்டி இருக்கவே கூடாது. 8 இந்த நாளில் உங்கள் பிள்ளைகளுக்கு, ‘கர்த்தர் நம்மை எகிப்திலிருந்து வழிநடத்தியதால் இந்த விருந்து நடைப்பெறுகிறது’ என்று சொல்ல வேண்டும்.
9 “உங்கள் கண்களின் முன்னால் இது அடையாளமாக இருக்கும். இந்த பண்டிகை நாள் கர்த்தரின் போதனைகளை நினைவுபடுத்தவும், உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர கர்த்தர் தமது பெரும் வல்லமையைப் பயன்படுத்தினார் என்பதை நினைவுபடுத்தவும் இது உதவும். 10 எனவே ஒவ்வொரு ஆண்டும் அதன் காலத்தில் இந்த விடுமுறை நாளை நினைவு கூருங்கள்.
11 “உங்களுக்குக் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்த தேசத்திற்கு அவர் உங்களை வழிநடத்துவார். கானானிய ஜனங்கள் இப்போது அங்கு வாழ்கிறார்கள். இத்தேசத்தை உங்களுக்குக் கொடுப்பதாக தேவன் உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்தார்.” தேவன் இந்நாட்டை உங்களுக்குக் கொடுத்தபிறகு, 12 நீங்கள் உங்கள் முதல் மகனை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை நினைவு கூருங்கள். முதலில் பிறந்த எந்த ஆண் மிருகத்தையும் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும். 13 முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண் கழுதையையும் கர்த்தரிடமிருந்து திரும்பப்பெற்று, அதற்குப் பதிலாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுக்கவேண்டும். கர்த்தரிடமிருந்து கழுதையை வாங்க உங்களுக்கு விருப்பமில்லையென்றால், அதனைக் கொன்றுவிடுங்கள். அது ஒரு பலியாகும். நீங்கள் அதன் கழுத்தை முறிக்க வேண்டும். முதலில் பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் கர்த்தரிடமிருந்து திரும்பப் பெற வேண்டும்.
14 “வருங்காலத்தில் நீங்கள் இதைச் செய்வதன் காரணத்தை அறியும்படி உங்கள் பிள்ளைகள், ‘இதன் பொருள் என்ன?’ என்று கேட்பார்கள். நீங்கள் அவர்களிடம்: ‘கர்த்தர் தமது மகா வல்லமையைப் பயன்படுத்தி நம்மை எகிப்திலிருந்து மீட்டார். நாம் அந் நாட்டில் அடிமைகளாக இருந்தோம். ஆனால் கர்த்தர் நம்மை இங்கு வழிநடத்தினார். 15 எகிப்தில், பார்வோன் பிடிவாதமாக இருந்தான். நாம் புறப்படுவதற்கு அவன் அனுமதி கொடுக்வில்லை. எனவே கர்த்தர் அந்நாட்டின் முதலாவதாகப் பிறந்த எல்லா உயிரினங்களையும் கொன்றார். (கர்த்தர் முதலில் பிறந்த மகன்களையும், முதலில் பிறந்த மிருகங்களையும் கொன்றார்.) எனவே நான் முதலில் பிறந்த ஆண் மிருகத்தை கர்த்தருக்குக் கொடுக்கிறேன், எல்லா முதலில் பிறந்த ஆண் பிள்ளைகளையும் கர்த்தரிடமிருந்து திரும்பப் பெறுகிறேன்!’ என்று நீங்கள் பதில் கூறுவீர்கள். 16 இது உங்கள் கையில் கட்டப்பட்ட ஒரு குறியீடு போலவும், உங்கள் கண்களுக்கு நடுவில் தொங்கும் ஒரு அடையாளமாகவும் காணப்படும். கர்த்தர் தமது அளவில்லா வல்லமையினால் நம்மை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார் என்பதை நீங்கள் நினைவுகூர இது உதவும்” என்றான்.
எகிப்திலிருந்து வெளியேறும் பயணம்
17 பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியேற்றினான். பெலிஸ்தரின் நாட்டின் வழியாக ஜனங்கள் பயணம் செய்வதை கர்த்தர் அனுமதிக்கவில்லை. கடலின் ஓரமாக உள்ள அந்த சாலை குறுக்கு சாலையாக இருந்தது. ஆனால் கர்த்தர், “அவ்வழியே ஜனங்கள் பயணத்தை மேற்கொண்டால் அவர்கள் போரிட வேண்டியிருக்கும். அதனால் தங்கள் எண்ணத்தை மாற்றி, எகிப்திற்குத் திரும்பிப் போகக்கூடும்” என்றார். 18 ஆகவே கர்த்தர் அவர்களை வேறு வழியாக நடத்திச் சென்றார். செங்கடல் அருகே பாலைவனத்தின் நடுவே அவர்களை வழிநடத்தினார். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது சண்டைக்கு ஆயத்தமான ஆடைகளை அணிந்திருந்தனர்.
யோசேப்பு தாயகத்திற்குத் திரும்புதல்
19 யோசேப்பின் எலும்புகளை மோசே தன்னோடு எடுத்துச் சென்றான். (யோசேப்பு மரிக்கும் முன்னர் இஸ்ரவேலின் ஜனங்களிடம் இதைச் செய்ய வேண்டுமென வாக்குறுதி பெற்றிருந்தான். யோசேப்பு, “தேவன் உங்களை மீட்கும்போது, எனது எலும்புகளை எகிப்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல வேண்டுமென்பதை நினைவில் வையுங்கள்” என்று கூறியிருந்தான்.)
கர்த்தர் தமது ஜனங்களை வழிநடத்துகிறார்
20 இஸ்ரவேல் ஜனங்கள் சுக்கோத்தை விட்டு நீங்கி ஏத்தாமில் தங்கினார்கள். ஏத்தாம் பாலைவனத்தினருகே இருந்தது. 21 கர்த்தர் பாதை காட்டினார். பகலில், கர்த்தர் ஜனங்களை வழிநடத்த உயரமான ஒரு மேகத்தையும், இரவு வேளையில் வழிநடத்த உயரமான ஒரு நெருப்புதூணையும் பயன்படுத்தினார். அவர்கள் இரவிலும் பயணம் செய்வதற்கேதுவாக இந்த நெருப்பு வெளிச்சம் தந்தது. 22 உயர்ந்த மேகம் பகல் முழுவதும், உயர்ந்த நெருப்பு தூண் இரவு முழுவதும் அவர்களோடிருந்தது.
யூதத் தலைவர்களால் சோதனை(A)
16 இயேசுவைச் சோதிப்பதற்காகப் பரிசேயர்களும் சதுசேயர்களும் அவரிடம் வந்தார்கள். அவர்கள் இயேசு தேவனிடமிருந்து வந்தவர் என்பதை நிரூபிக்க ஒரு அற்புதம் நிகழ்த்துமாறு கேட்டனர்.
2 இயேசு அவர்களிடம்,, “சூரியன் மறைவதை நீங்கள் காணும்பொழுது, காலநிலை எப்படியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். செவ்வானமாயிருந்தால், நல்ல கால நிலை என்கிறீர்கள். 3 சூரிய உதயத்தைக் காலையில் காண்கிறீர்கள். அப்பொழுது வானம் இருண்டும் சிவந்துமிருந்தால், மழை பெய்யும் என்கிறீர்கள். இவை காலநிலையின் அறிகுறிகள். இவைகளை வானத்தில் கண்டு, அவற்றின் பொருளை அறிகிறீர்கள். அது போலவே, தற்பொழுது நடப்பவைகளை நீங்கள் காண்கிறீர்கள். இவைகளும் அறிகுறிகளே. ஆனால், இவற்றின் பொருளை நீங்கள் அறியவில்லை. 4 தீயவர்களும் பாவிகளும் அற்புதங்களை அறிகுறிகளாகத் தேடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு, யோனாவின் அடையாளத்தையன்றி [a] வேறெந்த அடையாளமும் கிடைக்காது” என்று கூறினார். பின் இயேசு அவர்களை விட்டு அகன்றார்.
யூதத்தலைவர்களைக் குறித்து எச்சரிக்கை(B)
5 இயேசுவும் அவரது சீஷர்களும் கலிலேயா ஏரியைக் கடந்து சென்றார்கள். ஆனால், சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்தனர். 6 இயேசு தம் சீஷர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! பரிசேயர் சதுசேயரின் புளித்தமாவைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்,” என்று கூறினார்.
7 அவரது சீஷர்கள் அதன் பொருளைக் குறித்து விவாதித்தனர்., “நாம் அப்பங்களைக் கொண்டு வர மறந்ததினாலா இயேசு இவ்வாறு கூறினார்?” என்று அவர்கள் விவாதித்தனர்.
8 தமது சீஷர்கள் இதைக் குறித்து விவாதித்ததை இயேசு அறிந்தார். எனவே, இயேசு அவர்களிடம்,, “அப்பங்கள் இல்லாததைக் குறித்து ஏன் பேசுகிறீர்கள்? உங்கள் விசுவாசம் குறைவுள்ளது. 9 இன்னமும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? ஐந்து அப்பங்களால் ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது ஞாபகமில்லையா? மக்கள் உண்டதில் மீதியைப் பல கூடைகளில் இட்டு நிரப்பியதும் ஞாபகமில்லையா? 10 ஏழு அப்பங்களைக் கொண்டு நான்காயிரம் பேருக்கு உணவளித்தது ஞாபகமில்லையா? பின் மக்கள் உண்டு மீந்ததைப் பல கூடைகளில் நிரப்பியதும் ஞாபகமில்லையா? 11 எனவே, நான் அப்பத்தை குறித்து உங்களுடன் பேசவில்லை. அது ஏன் உங்களுக்குப் புரியவில்லை? பரிசேயர்களுடையதும் சதுசேயர்களுடையதுமான தீய போதனைகளை விட்டு விலகிப் பாதுகாப்பாயிருக்க நான் உங்களுக்குக் கூறுகிறேன்,” என்றார்.
12 பின்னரே, இயேசு கூறியதன் பொருளைச் சீஷர்கள் புரிந்துகொண்டார்கள். அப்பம் செய்யப் பயன்படுத்தப்படும் புளித்த மாவைக் குறித்து இயேசு பேசவில்லை. மாறாக, இயேசு அவர்களைப் பரிசேயர்களுடையதும் சதுசேயர்களுடையதுமான போதனைகளைக் குறித்தே எச்சரித்தார்.
இயேசுவே கிறிஸ்து என பேதுருவின் அறிக்கை(C)
13 செசரியா பிலிப்பு என்ற இடத்திற்கு இயேசு சென்றார். இயேசு தம் சீஷர்களிடம்,, “மனித குமாரனாகிய என்னை யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
14 அதற்கு சீஷர்கள்,, “சிலர் உம்மை யோவான்ஸ்நானகன் என்கிறார்கள். சிலர் உம்மை எலியா என்கிறார்கள். மேலும் சிலர் உம்மை எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கிறார்கள்” எனப் பதில் அளித்தார்கள்.
15 பின் இயேசு தம் சீஷர்களிடம்,, “நான் யாரென்று நீங்கள் கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்.
16 அதற்கு சீமோன் பேதுரு,, “நீரே கிறிஸ்து, (ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்)” என்று பதிலளித்தான்.
17 இயேசு அவனிடம்,, “யோனாவின் குமாரனாகிய சீமோனே! நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். உனக்கு யாரும் அதைக் கற்பிக்கவில்லை. நான் யார் என்பதைப் பரலோகத்தில் இருக்கும் என் பிதா உனக்குக் காட்டினார். 18 எனவே, நான் சொல்கிறேன். நீயே பேதுரு [b] (பாறை போன்றவன்.) என் சபையை இப்பாறையின் மீது கட்டுவேன். மரணத்தின் வலிமை என் சபையை வீழ்த்த முடியாது. 19 பரலோக இராஜ்யத்தின் திறவு கோல்களை உனக்குத் தருவேன். நீ இப்பூலோகத்தில் வழங்கும் நியாயத்தீர்ப்பு, (மெய்யாகவே) தேவனின் நியாயத்தீர்ப்பாகும். இப்பூலோகத்தில் நீ வாக்களிக்கும் மன்னிப்பு, தேவனின் மன்னிப்பாகும்” என்று சொன்னார்.
20 தான் கிறிஸ்து என்பதை ஒருவருக்கும் சொல்லக் கூடாது எனத் தமது சீஷர்களை இயேசு எச்சரித்தார்.
இயேசு தம் மரணத்தைக் குறித்துக் கூறுதல்(D)
21 அப்பொழுதிலிருந்து இயேசு தம் சீஷர்களிடம் தாம் எருசலேம் செல்லவேண்டுமென சொல்லத் தொடங்கினார். மூத்த யூதத் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும் நியாயப் பிரமாண போதகர்களாலும் தமக்குப் பல இன்னல்கள் வரப்போவதை இயேசு விளக்கினார். மேலும், தம் சீஷர்களிடம் தாம் கொல்லப்படவிருப்பதையும் இயேசு கூறினார். பின்னர், மூன்றாம் நாள் தாம் உயிர்த்தெழவிருப்பதையும் கூறினார்.
22 இயேசுவுடன் தனிமையில் பேசிய பேதுரு அவரை விமர்சிக்கத் தொடங்கினான். பேதுரு,, “தேவன் உம்மை அவற்றிலிருந்து காப்பாற்றட்டும். ஆண்டவரே! அவை உமக்கு ஒருபோதும் நிகழக்கூடாது!” என்று கூறினான்.
23 இயேசு அதற்குப் பேதுருவிடம்,, “என்னை விட்டு விலகிச் செல், சாத்தானே! நீ எனக்கு உதவி செய்யவில்லை! தேவனின் செயல்களைக் குறித்து உனக்குக் கவலையில்லை. மக்கள் முக்கியமெனக் கருதுகின்றவைகளையே நீ பொருட்படுத்துகிறாய்” என்று கூறினார்.
24 பின்பு இயேசு தமது சீஷர்களிடம்,, “என்னைப் பின்தொடர விரும்பும் யாரும் தன் சுயவிருப்பங்களைத் துறக்க வேண்டும். தனக்கு ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொண்டு என்னைப் பின்தொடர வேண்டும். 25 தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் எவனும் அதை இழப்பான். எனக்காகத் தன் உயிரைக் கொடுக்கிறவன், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான். 26 தன் ஆத்துமாவை இழந்தவனுக்கு, இவ்வுலகம் முழுவதும் கிடைத்தாலும் ஒரு பயனும் இல்லை. என்ன விலை கொடுத்தாலும் இழந்த ஆத்துமாவை மீட்க இயலாது. 27 தமது தந்தையின் மகிமையுடனும் தேவதூதர்களுடனும் மீண்டும் தேவகுமாரன் வருவார். அப்பொழுது, ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்த செயல்களுக்குத் தக்கபடி தேவ குமாரன் வெகுமதியளிப்பார். 28 நான் உண்மையைச் சொல்கிறேன். இங்குள்ள சிலர் தாங்கள் இறப்பதற்கு முன்பு மனித குமாரன் தன் இராஜ்யத்தின் ஆட்சியுடன் வருவதைக் காண்பார்கள்.” என்றார்.
2008 by World Bible Translation Center