Old/New Testament
பார்வோனின் கனவுகள்
41 இரண்டு ஆண்டுகள் கழிந்தது. பார்வோன் ஒரு கனவு கண்டான். நைல் நதியின் அருகில் நின்றுகொண்டிருப்பதாகக் கனவு கண்டான். 2 ஆற்றிலிருந்து ஏழு பசுக்கள் வெளியே வந்து புல் தின்றுகொண்டிருந்தன. அவை செழுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தன. 3 மேலும் ஏழு பசுக்கள் ஆற்றிலிருந்து வெளியே வந்து கரையில் நின்ற மற்ற பசுக்களோடு நின்றன. அவை மெலிந்தும் பார்க்க அருவருப்பாகவும் இருந்தன. 4 மெலிந்த அருவருப்பான பசுக்கள் கொழுத்த ஆரோக்கியமான ஏழு பசுக்களையும் உண்டன. பிறகு பார்வோன் எழும்பினான்.
5 பார்வோன் மீண்டும் தூங்கி கனவு காண ஆரம்பித்தான். அப்போது ஒரே செடியில் ஏழு செழுமையான கதிர்கள் வந்திருந்தன. 6 மேலும் ஒரு செடியில் ஏழு கதிர்கள் வந்தன. ஆனால் அவை செழுமையில்லாமல் இருந்தன. காற்றில் உதிர்ந்துபோயின. 7 மெலிந்த ஏழு கதிர்களும் செழுமையான ஏழு கதிர்களை விழுங்கிவிட்டன. பார்வோன் மீண்டும் எழுந்து தான் கண்டது கனவு என உணர்ந்தான். 8 மறுநாள் காலையில் அவன் இதைப்பற்றி மிகவும் கவலைப்பட்டான். அவன் எகிப்திலுள்ள அனைத்து மந்திரவாதிகளையும், ஞானிகளையும் அழைத்தான். அவர்களிடம் தன் கனவைச் சொன்னான். ஆனால் ஒருவராலும் அதற்கு விளக்கம் சொல்ல முடியவில்லை.
யோசேப்பைப்பற்றி வேலைக்காரன் பார்வோனிடம் கூறுதல்
9 பிறகு திராட்சைரசம் கொடுப்பவனுக்கு யோசேப்பைப்பற்றிய நினைவு வந்தது. அவன் பார்வோனிடம், “எனக்கு ஏற்பட்டது இன்று நினைவுக்கு வருகிறது. 10 உங்களுக்குக் கோபம் வந்து என்னையும், ரொட்டி சுடுபவனையும் சிறையில் அடைத்திருந்தீர்களே, 11 அப்போது ஓரிரவில் நாங்கள் கனவு கண்டோம். இரண்டும் வெவ்வேறு கனவுகள். 12 அங்கு எபிரேய இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் சிறையதிகாரியின் உதவியாள். நாங்கள் அவனிடம் கனவைச் சொன்னோம். அவன் அதைப்பற்றி விளக்கம் சொன்னான். 13 அவன் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று. நான் மூன்று நாளில் விடுதலையாகிப் பழைய வேலையைப் பெறுவேன் என்றான். அது அவ்வாறாயிற்று. ரொட்டி சுடுபவன் தூக்கிலிடப்படுவான் என்றான். அது போலவே நடந்தது” என்றான்.
யோசேப்பு விளக்கம் சொல்ல அழைக்கப்படுதல்
14 எனவே, பார்வோன் சிறையில் இருந்து யோசேப்பை அழைத்தான். அதிகாரி உடனே யோசேப்பை வெளியே கொண்டு வந்தான். அவன் சவரம் செய்து நல்ல ஆடைகள் அணிந்துகொண்டு, பார்வோனைப் பார்க்கப்போனான். 15 பார்வோன் யோசேப்பிடம், “நான் கனவு கண்டேன். எவராலும் அதற்கு பொருள் சொல்லமுடியவில்லை. உன்னிடம் அவற்றைப்பற்றி சொன்னால் நீ அதற்கு விளக்கம் சொல்ல முடியும் என்று அறிந்தேன்” என்றான்.
16 யோசேப்பு, “என்னால் முடியாது. ஆனால் தேவன் உமக்காக விளக்கம் தருவார்” என்றான்.
17 பிறகு பார்வோன், “கனவில் நான் நைல் ஆற்றின் கரையில் நின்றுகொண்டிருந்தேன். 18 அப்போது ஏழு பசுக்கள் ஆற்றிலிருந்து வெளியே வந்து புல் மேய்ந்துகொண்டிருந்தது. அவை செழுமையாகவும், பார்க்க அழகாகவும் இருந்தன. 19 பிறகு மேலும் ஏழு பசுக்கள் ஆற்றிலிருந்து வெளியே வந்தன. அவை மெலிந்து, நோய் கொண்டவையாக இருந்தன. அவற்றைப் போன்று மோசமான பசுக்களை நான் எகிப்திலே எங்கும் பார்த்ததில்லை. 20 அவை செழுமையான பசுக்களை உண்டுவிட்டன. 21 அவை அதற்குப் பிறகும் ஒல்லியாகவும், நோயுற்றும் தோன்றின. அவை பசுக்களைத் தின்றுவிடும் என்று சொல்ல முடியாத வகையிலேயே இருந்தன. அதற்குள் நான் எழுந்துவிட்டேன்.
22 “அடுத்த கனவில் ஒரு செடியில் ஏழு கதிர்களைக் கண்டேன். அவை செழுமையாக இருந்தன. 23 பிறகு செடியில் மேலும் ஏழு கதிர்கள் வளர்ந்தன. காற்றில் உதிரக் கூடிய நிலையில் மெலிந்து இருந்தன. 24 பிறகு இவை செழுமையான கதிர்களை விழுங்கிவிட்டன.
“நான் இந்தக் கனவை மந்திரவாதிகளிடமும் ஞானிகளிடமும் கூறினேன். ஆனால் யாராலும் இவற்றிற்கு பதில் சொல்ல முடியவில்லை, இவற்றின் பொருள் என்ன?” என்று கேட்டான்.
யோசேப்பு கனவை விளக்குதல்
25 பிறகு யோசேப்பு பார்வோனிடம், “இரண்டு கனவுகளுக்கும் ஒரே பொருள் தான். விரைவில் என்ன நடக்கும் என்பதை தேவன் கூறிவிட்டார். 26 ஏழு செழுமையான பசுக்கள், ஏழு செழுமையான கதிர்கள் என்பது ஏழு வளமான ஆண்டுகளைக் குறிக்கும். 27 ஏழு மெலிந்த பசுக்கள் ஏழு மெலிந்த கதிர்கள் என்பது பஞ்சமான ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். வளமான ஏழு ஆண்டுகளுக்குப் பிறகே பஞ்சமான ஏழு ஆண்டுகள் வரும். 28 விரைவில் என்ன நடக்கும் என்பதை தேவன் உமக்கு காண்பித்திருக்கிறார். இவ்வாறே தேவன் நடத்துவார். 29 இன்னும் ஏழு ஆண்டுகளுக்கு எகிப்தில் ஏராளமான உணவுப் பொருட்கள் விளையும். 30 பிறகு ஏழு ஆண்டுகள் பஞ்சமும் பசியும் இருக்கும். எகிப்து ஜனங்கள் முன்பு கடந்த காலத்தில் தாங்கள் வைத்திருந்த உணவின் மிகுதியை மறந்துவிடுவார்கள். இப்பஞ்சம் நாட்டை அழித்துவிடும். 31 ஏனென்றால் தொடர்ந்து வரும் பஞ்சம் அவ்வளவு கடுமையாக இருக்கும்.
32 “நீர் ஏன் ஒரே பொருள்பற்றிய இரு கனவுகளைக் கண்டிருக்கிறீர் தெரியுமா? இது நிச்சயம் நடக்கும் என்பதை தேவன் உமக்குக் காட்ட விரும்புகிறார். அதோடு தேவன் இதனை விரைவில் நிகழவைப்பார். 33 எனவே, நீர் புத்திசாலியான ஒருவனிடம் எகிப்தின் பொறுப்புகளை விடவேண்டும். 34 பிறகு மேலும் சிறந்த ஆட்களை தேர்ந்தெடுத்து உணவுப் பொருட்களை எல்லாம் சேகரிக்க வேண்டும். இனியுள்ள ஏழு வருடங்களும் ஜனங்கள் தங்கள் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை அரசனுக்குரியதென இவர்களிடம் கொடுக்க வேண்டும். 35 இவ்வாறு அந்த ஆட்கள் உணவுப் பொருட்களைச் சேகரித்து, தேவைப்படும் அளவுக்கு நன்றாகச் சேமித்து வைக்கவேண்டும். இந்த உணவு உமது கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும். 36 பிறகு ஏழு பஞ்ச ஆண்டுகளில் தேவையான உணவுப் பொருள் எகிப்து நாட்டில் இருக்கும். அதனால் எகிப்து பஞ்சத்தில் அழியாமல் இருக்கும்” என்றான்.
37 இந்த விளக்கம் பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் பொருத்தமானதாக இருந்தது. அதோடு 38 பார்வோன் அவர்களிடம், “யோசேப்பைவிடப் பொருத்தமானவன் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. தேவ ஆவியானவர் அவன் மேல் இருக்கிறார். அவனை மிக ஞானமுள்ளவனாக ஆக்கியிருக்கிறார்!” என்றான்.
39 எனவே, பார்வோன் யோசேப்பிடம், “தேவன் இவற்றை உனக்குத் தெரியச் செய்தார். உன்னைப்போல் அறிவுக் கூர்மையும், ஞானமும் உள்ளவர்கள் வேறு யாருமில்லை. 40 உன்னை என் நாட்டிற்கு அதிகாரியாய் ஆக்குகிறேன். உன் கட்டளைகளுக்கு என் ஜனங்கள் அடங்கி நடப்பார்கள். நான் மட்டுமே உன்னைவிட மிகுந்த அதிகாரம் பெற்றவனாக இருப்பேன்” என்று கூறினான்.
41 யோசேப்பை ஆளுநர் ஆக்குவதற்குரிய விசேஷச் சடங்கும், ஊர்வலமும் சிறப்பான முறையில் நடந்தன. “உன்னை எகிப்து முழுமைக்கும் ஆளுநர் ஆக்குகிறேன்” என்றான். 42 பார்வோன் யோசேப்புக்கு தனது விசேஷ மோதிரத்தைக் கொடுத்தான். அம்மோதிரத்தில் அரசமுத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. இத்தோடு அழகான ஆடைகளையும், அவன் கழுத்தில் பொன்மாலையும் அணிவித்தான். 43 யோசேப்பைத் தனது இரண்டாவது இரதத்தில் ஏற்றி ஊர்வலமாகப் போகச் செய்தான். காவல் அதிகாரிகள் அவன் முன்னே போய் ஜனங்களிடம், “யோசேப்புக்கு அடிபணியுங்கள்” என்றனர். இவ்வாறு யோசேப்பு எகிப்து முழுவதற்கும் ஆளுநர் ஆனான்.
44 பார்வோன் யோசேப்பிடம், “நான் எகிப்தின் அரசனாகிய பார்வோன். எனக்கு விருப்பமான முறையில் நான் நடந்துகொள்வேன். வேறுயாரும் இந்நாட்டில் உன் அனுமதி இல்லாமல் கையைத் தூக்கவோ காலை நகர்த்தவோ முடியாது” என்றான். 45 பார்வோன் யோசேப்புக்கு சாப்னாத்பன்னேயா என்று வேறு பெயர் சூட்டினான். அவனுக்கு ஆஸ்நாத் என்ற மனைவியையும் கொடுத்தான். அவள் ஓன் நகரத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகள். இவ்வாறாக யோசேப்பு எகிப்து தேசத்து ஆளுநரானான்.
46 யோசேப்புக்கு அப்போது 30 வயது. அவன் நாடு முழுவதையும் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டான். 47 ஏழு ஆண்டுகளாக எகிப்தில் நல்ல விளைச்சல் இருந்தது. 48 யோசேப்பு அவற்றை நன்கு சேமித்து வைத்தான். ஒவ்வொரு நகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள தானியங்களையெல்லாம் சேமித்து வைத்தான். 49 யோசேப்பு ஏராளமாக கடற்கரை மணலைப்போன்று தானியங்களைச் சேமித்து வைத்தான். அவன் சேமித்த தானியமானது அளக்கமுடியாத அளவில் இருந்தது.
50 யோசேப்பின் மனைவி ஆஸ்நாத்து ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகள். முதலாண்டு பஞ்சம் வருவதற்கு முன்னால் அவளுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். 51 முதல் மகனுக்கு மனாசே என்று பேரிட்டான். ஏனென்றால், “தேவன் என் துன்பங்களையெல்லாம் மறக்கச் செய்தார். என் வீட்டையும் மறக்கச் செய்துவிட்டார்” என்றான். 52 யோசேப்பு இரண்டாவது மகனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான். “நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப் பண்ணினார்” என்று சொல்லி இந்தப் பெயரை வைத்தான்.
பஞ்சம் துவங்குகிறது
53 ஏழு ஆண்டுகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் இருந்தன. அந்த ஆண்டுகள் முடிந்தன. 54 அதன் பிறகு யோசேப்பு சொன்னதைப்போலவே பஞ்ச காலம் துவங்கியது. எந்த நாடுகளிலும் உணவுப் பொருட்கள் விளையவில்லை. ஆனால் எகிப்தில் உணவுப் பொருட்கள் ஏராளமாக சேமிக்கப்பட்டிருந்தன. இதற்குக் காரணம் யோசேப்பின் திட்டம். 55 பஞ்சம் துவங்கியதும் ஜனங்கள் பார்வோனிடம் வந்து உணவுக்கு அழுதனர். பார்வோன் ஜனங்களிடம், “நீங்கள் போய் யோசேப்பிடம் என்ன செய்யலாம் எனக் கேளுங்கள்” என்றான்.
56 எங்கும் பஞ்சம் அதனால் யோசேப்பு ஜனங்களுக்குச் சேமிப்பிலிருந்து தானியத்தை எடுத்துக் கொடுத்தான். சேர்த்து வைத்த தானியங்களை யோசேப்பு எகிப்தியருக்கு விற்றான். பஞ்சம் மேலும் மோசமாகியது. 57 எல்லா இடத்திலும் மோசமான அளவில் பஞ்சம் இருந்தது. எகிப்தைச் சுற்றி பல் வேறு நாடுகளிலிருந்து ஜனங்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக எகிப்திற்கு வந்தார்கள்.
கனவுகள் நிறைவேறுகின்றன
42 கானான் தேசத்திலும் கொடிய பஞ்சம் இருந்தது. யாக்கோபு எகிப்தில் உணவுப் பொருட்கள் இருப்பதாக அறிந்தான். எனவே அவன் தன் மகன்களிடம், “எதுவும் செய்யாமல் இங்கே இருந்து என்ன பயன்? 2 எகிப்தில் உணவுப் பொருட்களை விற்பதாகக் கேள்விப்பட்டேன். எனவே நாம் செத்துப் போவதற்குப் பதிலாக அங்கே போய் உணவுப் பொருட்களை வாங்கி வருவோம்” என்றான்.
3 எனவே, யோசேப்பின் பத்து சகோதரர்களும் உணவுப் பொருட்கள் வாங்க எகிப்து நாட்டிற்குப் போனார்கள். 4 யாக்கோபு பென்யமீனை அவர்களோடு அனுப்பவில்லை. (அவனே யோசேப்பின் முழுமையான சகோதரன்) அவனுக்கும் ஏதாவது கேடு ஏற்படலாம் என்று யாக்கோபு பயந்தான்.
5 கானான் பகுதியில் பஞ்சம் மிகவும் கொடுமையாக இருந்தது. எனவே ஏராளமான ஜனங்கள் எகிப்துக்குப் போனார்கள். அவர்களுள் இஸ்ரவேலின் மகன்களும் இருந்தனர்.
6 யோசேப்புதான் எகிப்தின் ஆளுநராக அச்சமயத்தில் இருந்தான். எகிப்துக்கு வரும் ஜனங்களுக்கு விற்கப்படும் தானியத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு அவனிடமே இருந்தது. எனவே யோசேப்பின் சகோதரர்கள் அவனிடம் வந்து குனிந்து வணங்கி நின்றனர். 7 யோசேப்பு தன் சகோதரர்களைப் பார்த்ததும், உடனே அடையாளம் கண்டுகொண்டான். எனினும் தெரிந்துகொண்டதைப்போல் காட்டிகொள்ளாமல் அவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டான். “எங்கேயிருந்து வருகின்றீர்கள்?” என்று கேட்டான்.
அவர்கள், “நாங்கள் கானான் பகுதியிலிருந்து வருகிறோம். உணவுப் பொருட்களை வாங்குவதற்காக வந்தோம்” என்றனர்.
8 யோசேப்புக்கு அவர்கள் அனைவரும் தன் சகோதரர்கள் என்று புரிந்தது. ஆனால் அவர்களுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. 9 அவன் தன் சகோதரர்களைப்பற்றி தான் கண்ட கனவை நினைத்துப் பார்த்தான்.
யோசேப்பு தன் சகோதரர்களை ஒற்றர்கள் என அழைத்தல்
யோசேப்பு அவர்களிடம், “நீங்கள் உணவுப் பொருட்கள் வாங்க வரவில்லை, நீங்கள் ஒற்றர்கள். எங்கள் நாட்டின் பலவீனத்தைத் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்கள்” என்றான்.
10 அவர்களோ, “இல்லை ஐயா! நாங்கள் உங்கள் வேலைக்காரர்களாக வந்திருக்கிறோம். உணவுப் பொருட்களை வாங்கவே வந்துள்ளோம். 11 நாங்கள் அனைவரும் சகோதரர்கள். எங்கள் அனைவருக்கும் ஒரே தந்தை. நாங்கள் நேர்மையானவர்கள். நாங்கள் தானியம் வாங்கவே வந்தோம்” என்றனர்.
12 பின்னும் யோசேப்பு, “இல்லை! நீங்கள் எங்கள் பலவீனத்தை அறியவே வந்துள்ளீர்கள்” என்றான்.
13 அவர்களோ, “இல்லை நாங்கள் அனைவரும் சகோதரர்கள். மொத்தம் பன்னிரெண்டு பேர். எல்லோருக்கும் ஒரே தந்தை. எங்கள் இளைய தம்பி வீட்டில் தந்தையோடு இருக்கிறான். இன்னொரு சகோதரன் பல ஆண்டுகளுக்கு முன் மரித்து போனான். இப்போது உங்கள் முன் வேலைக்காரர்களைப் போன்று இருக்கிறோம். நாங்கள் கானான் நாட்டிலிருந்து வந்துள்ளோம்” என்றார்கள்.
14 ஆனால் யோசேப்போ, “இல்லை! நீங்கள் ஒற்றர்களே. 15 ஆனால், நீங்கள் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்க அனுமதிக்கிறேன். உங்கள் இளைய சகோதரன் வந்தால் நீங்கள் போகலாம், இது பார்வோன்மேல் நான் இடுகிற ஆணை. 16 உங்களில் ஒருவர் மட்டும் ஊருக்குப் போய் இளைய சகோதரனை அழைத்துவர அனுமதிக்கிறேன். மற்றவர்கள் அனைவரும் சிறையில் இருக்கவேண்டும். நீங்கள் சொல்வது உண்மையா என்று பார்ப்பேன். ஆனால் உங்களை நான் ஒற்றர்கள் என்றே நினைக்கிறேன்” என்றான். 17 பின்பு அவர்களை மூன்று நாட்களுக்குச் சிறையில் அடைத்தான்.
சிமியோன் ஜாமீனாக வைக்கப்படுகிறான்
18 மூன்று நாட்கள் ஆனதும் யோசேப்பு அவர்களிடம், “நான் தேவனுக்குப் பயந்தவன். நான் சொல்கிறபடி செய்தால் உங்களை விடுவேன். 19 நீங்கள் உண்மையில் நேர்மையானவர்கள் என்றால் உங்களில் ஒருவன் சிறையில் இருக்கட்டும். மற்றவர்கள் உணவுப் பொருட்களோடு உங்கள் நாட்டிற்கு செல்லுங்கள். 20 ஆனால் நீங்கள் உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்துவர வேண்டும். அதனால் உங்களது வார்த்தைகள் உண்மை என்று அறிவேன். நீங்களும் மரிக்காமல் இருக்கலாம்” என்றான்.
சகோதரர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர். 21 அவர்கள் ஒருவருக்கொருவர், “நாம் நமது இளைய சகோதரனுக்குச் செய்த தீமைக்கே இந்தத் தண்டனை. அவன் துன்பப்படுவதைப் பார்த்தோம். தன்னைக் காப்பாற்றும்படி அவன் எவ்வளவோ கெஞ்சினான். ஆனால் நாம் அவன் சொன்னதைக் கவனிக்க மறுத்துவிட்டோம். இப்போது அதற்கு அனுபவிக்கிறோம்” என்று பேசிக்கொண்டனர்.
22 பிறகு ரூபன் அவர்களிடம், “அவனுக்கு எந்தத் தீமையும் செய்யவேண்டாம் என்று நான் உங்களிடம் சொன்னேன். ஆனால் நான் சொன்னதை நீங்கள் கேட்கவில்லை. அவனது மரணத்துக்கு நாம் இப்போது தண்டனை அனுபவிக்கிறோம்” என்றான்.
23-24 யோசேப்பு மொழி பெயர்ப்பாளனைக் கொண்டு அவர்களோடு பேசியதால் தாங்கள் சொன்னதை அவன் புரிந்துகொள்ளமாட்டான் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் யோசேப்பு அவர்கள் சொன்னவற்றையெல்லாம் புரிந்துகொண்டான். அவர்களின் வார்த்தைகள் அவனைப் பெரிதும் வருந்தச்செய்தது. எனவே, அவன் அவர்களை விட்டுப் போய் கதறி அழுதான். பிறகு அவர்களிடம் வந்து, சகோதரர்களுள் ஒருவனான சிமியோனைக் கைது செய்தான். மற்ற சகோதரர்கள் இதைப் பார்த்தார்கள். 25 யோசேப்பு வேலைக்காரர்களிடம் அவர்களின் பைகளை உணவுப் பொருட்களால் நிரப்பிய பின்னர் அவர்கள் கொடுத்த பணத்தை அவர்கள் பையிலேயே போட்டு, அவர்களின் பயணத்துக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுத்து அனுப்பச் சொன்னான்.
26 சகோதரர்கள் உணவுப் பொருட்களைக் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு போனார்கள். 27 அன்று இரவு வழியில் ஓரிடத்தில் தங்கினார்கள். அப்போது ஒருவன் கழுதைக்காக உணவு எடுக்கப் பையைத் திறந்து பார்த்தபோது உள்ளே பணம் இருந்தது. 28 அவன் மற்ற சகோதரர்களிடம், “பாருங்கள். இங்கே பணம் இருக்கிறது. நான் தானியத்துக்குப் பணம் கொடுத்தேன். ஆனால் பணம் என் பையில் திரும்பப் போடப்பட்டிருக்கிறது” என்றான். அவர்கள் பயந்தார்கள், “தேவன் நமக்கு என்ன செய்கிறார்?” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டனர்.
சகோதரர்கள் யாக்கோபிடம் தெரிவிக்கிறார்கள்
29 அவர்கள் கானான் பகுதிக்குப் போய் தம் தந்தையான யாக்கோபைச் சந்தித்து, நடந்தவை அனைத்தையும் சொன்னார்கள். 30 “அந்நாட்டின் ஆளுநர் எங்களிடம் மிகக் கடுமையாகப் பேசினான். எங்களை ஒற்றர்கள் என்று குற்றம் சாட்டினான்” 31 நாங்கள் அவ்வாறு இல்லை என்று மறுத்தோம். நாங்கள் நேர்மையானவர்கள் என்றோம். 32 நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள் என்றும் தந்தையைப்பற்றியும் இளைய தம்பியைப்பற்றியும் சொன்னோம்.
33 “பிறகு அந்த ஆளுநர் ‘நீங்கள் கௌரவமானவர்கள் என்பதை இதன் மூலம் நிரூபியுங்கள். ஒரு சகோதரனை விட்டு விட்டுப் போங்கள். உங்கள் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். 34 பிறகு உங்கள் இளைய சகோதரனை அழைத்துக்கொண்டு வாருங்கள். அதன் பிறகு நீங்கள் கௌரமானவர்களா, இல்லை ஒற்றர்களா என்பதை அறிந்துகொள்வேன். நீங்கள் சொன்னது உண்மை என்றால் உங்கள் சகோதரனை விட்டு விடுவோம். நீங்களும் இந்த தேசத்திலே வியாபாரம் பண்ணலாம், என்று சொன்னான்’” என்றார்கள்.
35 பிறகு சகோதர்கள் அனைவரும் தங்கள் பைகளை அவிழ்த்து தானியத்தை வெளியே எடுத்தனர். எல்லாப் பைகளிலும் பணம் இருந்தது. சகோதரர்களும் தந்தையும் அவற்றைப் பார்த்து அஞ்சினார்கள்.
36 யாக்கோபு அவர்களிடம், “நான் எனது எல்லா மகன்களையும் இழக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? யோசேப்பு போய்விட்டான். சிமியோனும் போய்விட்டான். நீங்கள் இப்போது பென்யமீனையும் கொண்டுபோகிறீர்களா?” என்று கேட்டான்.
37 அதற்கு ரூபன், “தந்தையே, நான் பென்யமீனை மீண்டும் உங்களிடம் அழைத்து வராவிட்டால் எனது இரண்டு மகன்களையும் கொன்றுவிடுங்கள். என்னை நம்புங்கள். நான் பென்யமீனைத் திரும்ப அழைத்துக்கொண்டு வருவேன்” என்றான்.
38 ஆனால் யாக்கோபு, “பென்யமீனை உங்களோடு அனுப்பமாட்டேன். அவனது ஒரே சகோதரன் மரித்துபோனான். ராகேலின் மகன்களில் இவன் ஒருவன் மட்டுமே உள்ளான். எகிப்துக்கு போகிற வழியில் ஏதாவது நடந்தால் அதுவே என்னைக் கொன்றுவிடும். வயதான என்னை துக்கத்துடனே கல்லறைக்கு அனுப்புவீர்கள்” என்றான்.
இயேசுவைக்குறித்த விமர்சனம்(A)
12 அப்போது இயேசு, யூதர்களுக்கு முக்கியமான வாரத்தின் ஓய்வு நாளன்று வயல் வெளியில் நடந்து கொண்டிருந்தார். இயேசுவின் சீடர்கள் அவருடன் இருந்தனர். அவர்கள் பசியுடனிருந்தனர். எனவே, சீடர்கள் கதிர்களைப் பிடுங்கி உண்டனர். 2 இதைப் பரிசேயர்கள் பார்த்தார்கள். அவர்கள் இயேசுவிடம்,, “பாருங்கள். யூதச்சட்டத்துக்கு எதிராக ஓய்வு நாளில் செய்யக் கூடாததை உங்கள் சீடர்கள் செய்கிறார்கள்” என்றனர்.
3 இயேசு அவர்களிடம்,, “தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? 4 தேவனுடைய வீட்டிற்குச் சென்றான். தேவனுக்குக் காணிக்கையாக்கப்பட்ட அப்பத்தைத் தாவீதும் மற்றவர்களும் உண்டார்கள். அந்த அப்பத்தை உண்டது குற்றமா? ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தை உண்ணலாம். 5 நீங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் படித்திருக்கிறீர்கள். அதாவது ஓய்வு நாளில் ஆலயங்களில் ஆசாரியர்கள் ஓய்வு கொள்ளாமல் சட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்று. ஆனால், அவ்வாறு செய்யும் ஆசாரியர்கள் குற்றம் செய்தவர்கள் அல்ல. 6 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆலயத்தைக் காட்டிலும் மேலானவர் இங்கே இருக்கிறார். 7 வேதாகமம் கூறுகிறது, ‘எனக்கு விலங்குகளைப் பலியிடுவது விருப்பமானதல்ல. மக்களிடம் இரக்கத்தையே நான் விரும்புகிறேன்,’ [a] அவ்வார்த்தைகளின் உண்மையான பொருள் உங்களுக்குத் தெரியாது. அதன் பொருளை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாக்கமாட்டீர்கள்.
8 ,“மனித குமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார்” என்று பதிலுரைத்தார்.
சூம்பிய கையைக் குணமாக்குதல்(B)
9 இயேசு அவ்விடத்தைவிட்டு, ஜெப ஆலயத்துக்குள் நுழைந்தார். 10 ஜெப ஆலயத்துக்குள் சூம்பிய கையுடன் ஒருவன் இருந்தான். இயேசுவின்மேல் குற்றம் சுமத்துவதற்கான ஒரு காரணத்தைத் தேடி சில யூதர்கள் அங்கிருந்தனர். எனவே அவர்கள் இயேசுவிடம்,, “ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா?” [b] என்று கேட்டார்கள்.
11 இயேசு,, “உங்களில் யாருக்கேனும், ஓர் ஆடு இருந்து அது ஓய்வு நாளில் ஒரு குழியில் விழுந்தால், நீங்கள் அதைக் குழியில் இருந்து தூக்கி எடுப்பீர்கள் அல்லவா? 12 ஓர் ஆட்டைக் காட்டிலும் மனிதன் நிச்சயமாக மேலானவன். எனவே, ஓய்வு நாளில் நற்செயல்களைச் செய்ய மோசேயின் நியாயப்பிரமாணம் அனுமதிக்கின்றது” என்று பதிலளித்தார்.
13 பிறகு, இயேசு சூம்பிய கையுடைய மனிதனிடம்,, “எங்கே உன் கைகளைக் காட்டு!” என்றார். அவன் இயேசு காணுமாறு தன் சூம்பியகையை நீட்டினான். அது மற்ற கையைப்போல குணமாயிற்று. 14 ஆனால் பரிசேயர்கள் இயேசுவைக் கொல்லத் திட்டம் தீட்டியவாறு அங்கிருந்து விலகிச் சென்றனர்.
இயேசு தேவனின் ஊழியர்
15 பரிசேயர்களின் எண்ணத்தை அறிந்த இயேசு, அவ்விடத்தை விட்டு நீங்கினார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். இயேசு நோயாளிகள் அனைவரையும் குணமாக்கினார். 16 ஆனால், தான் யாரென்பதை மற்றவர்களிடம் கூறக் கூடாது என அவர்களை எச்சரித்தார். 17 ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது நடக்கும்படிக்கு இயேசு இவ்வாறு செய்தார். ஏசாயா சொன்னது இதுவே,
18 ,“இதோ என் ஊழியன்.
நான் இவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
நான் இவரை நேசிக்கிறேன்;
இவரைக்குறித்து நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
என் ஆவியை இவர்மேல் அமரச்செய்வேன்.
இவர் தேசங்களுக்கு (என்) நேர்மையான நியாயத்தைக் கூறுவார்.
19 இவர் வாக்குவாதம் செய்யார்; கூக்குரல் செய்யார்.
வீதிகளில் உள்ள மக்கள் இவர் குரலைக் கேளார்.
20 ஏற்கெனவே வளைந்த நாணலைக்கூட இவர் உடைக்கமாட்டார்.
அணையப்போகிற விளக்கைக்கூட இவர் அணைக்கமாட்டார்.
நியாயத்தீர்ப்பு செய்து முடிக்கும்வரை இவர் தம் முயற்சியில் தளரமாட்டார்.
21 எல்லா மக்களும் இவரிடம் நம்பிக்கைக்கொள்வார்கள்.” (C)
இயேசுவின் வல்லமை(D)
22 பின்னர், சிலர் இயேசுவிடம் ஒரு மனிதனை அழைத்து வந்தனர். குருடனான அவனால் பேசவும் முடியவில்லை. ஏனென்றால் அவனுக்குள் ஒரு பிசாசு இருந்தது. இயேசு அவனைக் குணப்படுத்தினார். அவனால் பார்க்கவும் பேசவும் முடிந்தது. 23 வியப்புற்ற மக்கள்,, “தேவன் தாம் அனுப்பிவைப்பதாக வாக்களித்த தாவீதின் குமாரன் இவர்தான் போலும்!” என்றனர்.
2008 by World Bible Translation Center