Old/New Testament
சாலொமோனுக்கு.
72 தேவனே, ராஜாவும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும்.
உமது நல்லியல்பை ராஜாவின் குமாரனும் அறிந்துகொள்ள உதவும்.
2 ராஜா உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும்.
உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும்.
3 தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும்.
4 ஏழைகளுக்கு ராஜா நல்லவனாக இருக்கட்டும்.
திக்கற்றோருக்கு அவன் உதவட்டும்.
அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும்.
5 சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் ராஜாவுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
6 வயலில் விழும் மழையைப்போன்றிருக்க ராஜாவுக்கு உதவும்.
பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும்.
7 அவன் ராஜாவாக இருக்கும்போது நன்மை மலரட்டும்.
சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும்.
8 ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும்,
கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும்.
9 பாலைவனத்தில் வாழும் எல்லா ஜனங்களும் அவனுக்குத் தலை வணங்குவார்கள்.
புழுதியில் முகத்தைப் புதைத்து அவன் பகைவர்கள் அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கட்டும்.
10 தர்ஷீசின் ராஜாக்களும் தூரத்துத் தேசங்களின் ராஜாக்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும்.
ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள ராஜாக்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும்.
11 எல்லா ராஜாக்களும் நமது ராஜாவை விழுந்து வணங்கட்டும்.
எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும்.
12 நமது ராஜா திக்கற்றோருக்கு உதவுகிறார்.
ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் ராஜா உதவுகிறார்.
13 ஏழையான திக்கற்ற ஜனங்கள் நம் ராஜாவைச் சார்ந்திருப்பார்கள்.
ராஜா அவர்களை உயிரோடு வாழச் செய்கிறார்.
14 அவர்களைத் துன்புறுத்த முயலும் கொடியோரிடமிருந்து ராஜா அவர்களைக் காப்பாற்றுகிறார்.
அந்த ஏழை ஜனங்களின் உயிர்கள் ராஜாவுக்கு மிக முக்கியமானவை.
15 ராஜா நீடூழி வாழ்க!
அவர் சேபாவின் பொன்னைப் பெறட்டும்.
எப்போதும் ராஜாவுக்காக ஜெபம் செய்யுங்கள்.
ஒவ்வொரு நாளும் அவரை ஆசீர்வதியுங்கள்.
16 வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும்.
மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும்.
நிலங்களில் புல் வளர்வது போன்று
நகரங்கள் ஜனங்களால் நிரம்பட்டும்.
17 ராஜா என்றென்றும் புகழ்பெறட்டும்.
சூரியன் ஒளிவிடும்மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும்.
ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும்.
அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும்.
18 இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள்.
தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.
19 அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்!
அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்!
20 ஈசாயின் குமாரனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன.
புத்தகம் 3
ஆசாபின் துதிப்பாடல்.
73 தேவன் உண்மையாகவே இஸ்ரவேலுக்கு நல்லவர்.
பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
2 நான் தவறி வீழ்ந்து,
பாவம் செய்யத் தொடங்கும் நிலையில் இருந்தேன்.
3 கெட்ட ஜனங்கள் வெற்றியடைந்ததைக் கண்டேன்.
பெருமைபாராட்டும் அந்த ஜனங்களைக் கண்டு பொறாமைகொள்ள ஆரம்பித்தேன்.
4 அந்த ஜனங்கள் ஆரோக்கியமுள்ளவர்கள்.
வாழ்வதற்கு அவர்கள் போராட வேண்டாம்.
5 எங்களைப்போல அந்தப் பெருமைக்காரர்கள் தொல்லைப்படுவதில்லை.
பிறரைப்போன்று அவர்களுக்குத் தொல்லைகள் இல்லை.
6 எனவே அவர்கள் பெருமைமிக்கவர்களாய், வெறுக்கத்தக்கவர்களாய் உள்ளனர்.
அவர்கள் அணியும் அணிகலன்களையும் அழகிய ஆடைகளையும் போன்று அது விரைவில் கண்டுகொள்ளத்தக்கது.
7 தாங்கள் பார்க்கும் எதையும் அந்த ஜனங்கள் விருப்பினால் போய் தங்களுக்கென அதை எடுத்துக்கொள்கின்றனர்.
தாங்கள் செய்ய நினைப்பவற்றை அவர்கள் செய்து முடிக்கிறார்கள்.
8 பிறரைப்பற்றிக் கொடிய, தீய காரியங்களை அவர்கள் கூறுகிறார்கள்.
அவர்கள் பெருமையும் பிடிவாதமும் உடையவர்கள்.
அவர்கள் எப்போதும் மற்றவர்களிடமிருந்து அனுகூலம் பெறும் வழிகளைத் திட்டமிடுகிறார்கள்.
9 தங்களைத் தெய்வங்களென்று அப்பெருமைக்காரர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.
பூமியின் ராஜாக்களென்று அவர்கள் தங்களைக் கருதிக்கொள்கிறார்கள்.
10 எனவே தேவஜனங்கள் கூட அவர்களிடம் சென்று
அவர்கள் கூறுபவற்றைச் செய்கிறார்கள்.
11 அத்தீயோர், “நாங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தேவன் அறியார்!
உன்னதமான தேவன் அறியார்! என்கிறார்கள்.”
12 அப்பெருமைக்காரர்கள் துர்க்குணம் மிக்கவர்கள்.
ஆனால் அவர்கள் செல்வந்தராகவும், நாளுக்கு நாள் செல்வத்தை பெறுவோராகவும் காணப்படுகிறார்கள்.
13 எனவே நான் ஏன் என் இருதயத்தைத் தூயதாக்க வேண்டும்?
ஏன் நான் எனது கைகளைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்?
14 தேவனே, நான் நாள் முழுவதும் துன்புறுகிறேன்,
ஒவ்வொரு நாள் காலையிலும் நீர் என்னைத் தண்டிக்கிறீர்.
15 தேவனே, நான் இவற்றைக் குறித்துப் பிறரிடம் பேச விரும்பினேன்.
அப்படிச் செய்தால் உமது ஜனங்களுக்கு நான் துரோகம் செய்தவனாவேன்.
16-17 இக்காரியங்களைப் புரிந்துகொள்ள நான் மிகவும் முயன்றேன்.
ஆனால் நான் உமது ஆலயத்திற்குச் செல்லும்வரை இவையனைத்தும் எனக்கு மிகவும்கடினமாயிருந்தன.
நான் தேவனுடைய ஆலயத்திற்குப் போனேன்,
அப்போது அதை நான் உணர்ந்துக்கொண்டேன்.
18 தேவனே, நீர் அந்த ஜனங்களை ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறீர்.
விழுந்து அழிவதென்பது அவர்களுக்கு மிகவும் சுலபமானது.
19 தொல்லைகள் திடீரென நேரும், அப்போது அப்பெருமைக்காரர்கள் அழிந்துவிடுவார்கள்.
கொடியக் காரியங்கள் அவர்களுக்கு நேரிடும், அப்போது அவர்கள் அழிந்துப்போவார்கள்.
20 கர்த்தாவே, நாங்கள் விழித்தெழும்போது மறந்துவிடும் கனவைப்போல அந்த ஜனங்கள் இருப்பார்கள்.
எங்கள் கனவில் வரும் பெரும் விலங்குகளைப்போல் அந்த ஜனங்கள் மறைந்துபோகும்படி நீர் செய்வீர்.
21-22 நான் மூடனாக இருந்தேன்.
நான் செல்வத்தைக் குறித்தும் கெட்ட ஜனங்களைக் குறித்தும் எண்ணிக் கலங்கினேன்.
தேவனே, நான் மனங்கலங்கி, உம்மிடம் கோபங்கொண்டேன்.
மூடத்தனமும் அறியாமையுமுள்ள மிருகத்தைப் போல் நடந்து கொண்டேன்.
23 எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் உள்ளன.
நான் எப்போதும் உம்மோடிருக்கிறேன்.
தேவனே, நீர் என் கையைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்.
24 தேவனே, நீர் என்னை வழிநடத்தி, எனக்கு நல்ல போதனையைத் தருவீர்.
பின்பு என்னை மகிமைக்கு நேராக வழி நடத்துவீர்.
25 தேவனே, பரலோகத்தில் நீர் எனக்காக இருக்கிறீர்.
நான் உம்மோடிருக்கையில் இப்பூமியில் எனக்கு என்ன வேண்டும்?
26 என் மனமும் சரீரமும் அழிந்துப்போகலாம்,
ஆனால் நான் நேசிக்கும் கன்மலையாகிய தேவன் எனக்காக இருக்கிறீர்.
என்றென்றும் எனக்காக தேவன் இருக்கிறீர்.
27 தேவனே, உம்மை விட்டு விலகும் ஜனங்கள் அழிந்துபோவார்கள்.
உமக்கு உண்மையாயில்லாத ஜனங்களை நீர் அழித்துவிடுவீர்.
28 என்னைப் பொருத்தமட்டும், நான் தேவனிடம் வந்திருக்கிறேன், அதுவே எனக்கு நலமானது.
என் ஆண்டவராகிய கர்த்தரை என் பாதுகாப்பிடமாக வைத்திருக்கிறேன்.
தேவனே, நீர் செய்துள்ள எல்லாவற்றையும் குறித்துக் கூற நான் வந்துள்ளேன்.
தேவனும் யூதமக்களும்
9 நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். நான் உண்மையைக் கூறுகிறேன். நான் பொய் சொல்வதில்லை. என் உணர்வுகள் பரிசுத்த ஆவியானவரால் ஆளப்படுகின்றன. அந்த உணர்வுகள் நான் பொய்யானவனில்லை என்று கூறுகின்றன. 2 எனக்குப் பெருந்துக்கம் உண்டு. யூதமக்களுக்காக எப்பொழுதும் நான் மிகவும் கவலைப்படுகிறேன். 3 அவர்கள் எனது சகோதர சகோதரிகளுமாகவும், மண்ணுலகக் குடும்பமுமாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். அவர்களுக்கு உதவியாக இருக்குமானால் நான் பழிக்கப்படவும், கிறிஸ்துவிலிருந்து துண்டித்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். 4 அவர்கள் இஸ்ரவேல் மக்கள். யூதர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகள். தேவனுடைய மகிமை அவர்களுக்கு உண்டு. தேவனுக்கும் அவர்களுக்கும் இடையில் உடன்படிக்கைகள் உண்டு. தேவன் அவர்களுக்கு மோசேயின் நியாயப்பிரமாணத்தையும், வழிபாட்டு முறைகளையும் கொடுத்தார். தனது வாக்குறுதிகளை யூதர்களுக்கு தேவன் கொடுத்திருக்கிறார். 5 அவர்கள் நமது மூதாதையர்களின் வழி வந்தவர்கள். அவர்கள் வழியில் கிறிஸ்துவும் மண்ணுலகில் பிறந்தார். கிறிஸ்துவே எல்லாவற்றுக்கும் மேலான தேவன். அவரை எப்பொழுதும் துதியுங்கள். ஆமென்.
6 நான் யூதர்களுக்காக வருத்தப்படுகிறேன். அவர்களிடம் தேவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தவறிவிட்டார் என்று எண்ணுகிறதில்லை. ஆனால் இஸ்ரவேல் மக்களில் ஒரு சிலரே தேவனுடைய உண்மையான மக்களாய் இருக்கிறார்கள். 7 ஆபிரகாமின் சில மரபுவழியினரே ஆபிரகாமின் உண்மையான மக்களாக இருக்கின்றனர். இதையே ஆபிரகாமிடம் தேவன் “ஈசாக்கு உனது சட்டபூர்வமான குமாரன்”(A) என்று கூறினார். 8 ஆபிரகாமின் அனைத்து சந்ததியினருமே தேவனுடைய பிள்ளைகள் இல்லை என்பது தான் இதன் பொருள். ஆபிரகாமுக்கு அவர் வாக்குறுதி செய்தார். ஆனால் ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகள் எல்லாம் தேவனுக்கும் உண்மையான பிள்ளைகள் ஆகின்றனர். ஏனென்றால் 9 “சரியான நேரத்தில் நான் திரும்ப வருவேன். சாராள் ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள்”(B) என்பது தான் தேவனுடைய வாக்குறுதி.
10 அது மட்டுமல்ல, ரெபேக்காவும் பிள்ளைகளைப் பெற்றாள். ஒரே தந்தையை இப்பிள்ளைகள் கொண்டிருந்தார்கள். அவரே நமது தந்தையான ஈசாக்கு. 11-12 இரு குமாரர்களும் பிறப்பதற்கு முன்பே தேவன் ரெபேக்காவிடம், “மூத்த குமாரன் இளையவனுக்கு சேவை செய்வான்”(C) என்றார். அவர்கள் நல்லதோ தீயதோ எதுவாக இருந்தாலும் செய்வதற்கு முன்னரே தேவன் இவ்வாறு சொன்னார். இத்திட்டம் ஏற்கெனவே தேவனால் உருவாக்கப்பட்டது என்பதுதான் காரணம். தேவன் அவனைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். அதனால் தேர்ந்தெடுத்தார். அதுதான் காரணமே தவிர பிள்ளைகள் ஏதோ செய்ததற்காக அல்ல. 13 “நான் யாக்கோபை நேசித்தேன். ஏசாவை வெறுத்தேன்”(D) என்று எழுதப்பட்டிருக்கிறது.
14 எனவே இதைப்பற்றி நாம் என்ன சொல்ல முடியும்? தேவன் அநீதியாய் இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? முடியாதே. 15 “நான் யாரிடம் இரக்கம் காட்டவேண்டும் என்று விரும்புகிறேனோ அவனிடம் இரக்கம் காட்டுவேன்.”(E) என்று தேவன் மோசேயிடம் சொல்லி இருக்கிறார்.
2008 by World Bible Translation Center