Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 20-22

ஆபிரகாம் கேராருக்குப் போகிறான்

20 ஆபிரகாம் அந்த நாட்டைவிட்டுப் பாலைவனப் பகுதிக்குச் சென்றான். அவன் காதேசுக்கும், சூருக்கும் நடுவிலுள்ள கேராரில் தங்கினான். அவன் கேராரிலே தங்கி இருந்தபோது தன் மனைவி சாராளைச் சகோதரி என்று சொன்னான். அபிமெலேக்கு கேராரின் அரசன். அவன் சாராளை மிகவும் விரும்பினான். எனவே, வேலைக்காரர்களை அனுப்பி அவளைக் கொண்டு வருமாறு சொன்னான். ஆனால் இரவில் தேவன் அபிமெலேக்கின் கனவிலே பேசி, “நீ மரித்து போவாய். நீ கைப்பற்றிய பெண் திருமணமானவள்” என்றார்.

ஆகையால் அபிமெலேக்கு சாராளைத் தொடவில்லை. அவன் தேவனிடம், “கர்த்தாவே! நான் குற்றமுடையவன் அல்ல. ஒன்றும் தெரியாத அப்பாவியை நீர் கொல்வீரா? ஆபிரகாமே என்னிடம், ‘இவள் என் சகோதரி’ என்று சொன்னானே! சாராளும் ஆபிரகாமை ‘இவர் என் சகோதரன்’ என்று கூறிவிட்டாள். நான் அப்பாவி. நான் வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை” என்றான்.

தேவன் அவனிடம், “நீ என்ன மனநிலையில் இதைச் செய்தாய் என்று எனக்குத் தெரியும். நீ என்ன செய்கிறாய் என்பது உனக்குத் தெரியாது. நீ எனக்கு எதிராகப் பாவம் செய்யாதபடி நான் உன்னைக் காப்பாற்றினேன். நீ அவளைத் தொடாதபடி நானே உன்னைத் தடுத்தேன். ஆகவே ஆபிரகாமிடம் அவன் மனைவியைத் திரும்பக் கொடுத்துவிடு. ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி. அவன் உனக்காக ஜெபிப்பான். நீ வாழ்வாய். ஆனால் நீ சாராளை ஆபிரகாமிடம் திரும்பக் கொடுக்காவிட்டால் நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் மரித்துப்போவீர்கள் என்று அறிந்துகொள்” என்றார்.

எனவே, மறுநாள் அதிகாலையில், அபிமெலேக்கு தன் வேலைக்காரர்களை அழைத்து, நடந்தவைகளைப்பற்றிக் கூறினான், அவர்கள் பயந்தார்கள். பிறகு அபிமெலேக்கு ஆபிரகாமை அழைத்து அவனிடம்: “நீ ஏன் எங்களுக்கு இதுபோல் செய்தாய்? உனக்கு எதிராக நான் என்ன செய்தேன்? அவள் உன் சகோதரி என்று ஏன் பொய் சொன்னாய்? எனது அரசுக்கு நீ நிறைய தொந்தரவுகளைக் கொடுத்துவிட்டாய். நீ இவ்வாறு செய்திருக்கக் கூடாது. 10 நீ எதற்காகப் பயந்தாய்? ஏன் இவ்வாறு செய்தாய்” என்று கேட்டான்.

11 பிறகு ஆபிரகாம், “நான் பயந்துவிட்டேன், இந்த இடத்தில் உள்ள எவரும் தேவனை மதிக்கமாட்டார்கள் என்று நினைத்தேன். சாராளுக்காக என்னை எவராவது கொன்று விடுவார்களோ என்று நினைத்தேன். 12 அவள் எனது மனைவி, ஆனால் அவள் என் சகோதரியும் கூட, அவள் என் தந்தைக்கு மகள். ஆனால் என் தாய்க்கு மகளல்ல. 13 தேவன் என்னை என் தந்தையின் வீட்டிலிருந்து வெளியே கொண்டு வந்து என்னைப் பல்வேறு இடங்களில் அலைந்து திரியும்படி செய்திருக்கிறார். அப்போதெல்லாம் சாராளிடம், ‘நாம் எங்கு சென்றாலும் நான் உன் சகோதரன் என்று சொல்லு’ என்று கேட்டுக்கொண்டேன்” என்றான்.

14 என்ன நடந்தது என்பதை அபிமெலேக்கு புரிந்துகொண்டான். எனவே சாராளைத் திரும்ப ஆபிரகாமிடம் அனுப்பிவிட்டான். அவளுக்குச் சில ஆடுகளையும் மாடுகளையும் அடிமைகளையும் கொடுத்தான். 15 பிறகு, “உன்னைச் சுற்றிலும் பார், இது எனது நிலம், நீ விரும்புகிற எந்த இடத்திலும் வாழலாம்” என்றான்.

16 அவன் சாராளிடம், “நான் உன் சகோதரன், ஆபிரகாமிடம் 1,000 வெள்ளிக் காசுகள் கொடுத்தேன். நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவிக்கவே அவ்வாறு செய்தேன். நான் செய்தது சரியென்று எல்லோருக்கும் தெரியவேண்டும்” என்றான்.

17-18 கர்த்தர், சாராளினிமித்தம் அபிமெலேக்கின் குடும்பத்தில் எவருக்கும் குழந்தை இல்லாமல் இருக்கும்படி செய்திருந்தார். இப்போது ஆபிரகாம் தேவனிடம் வேண்டிக்கொள்ளவே, தேவன் அபிமெலேக்கு, அவன் மனைவி, வேலைக்காரப் பெண்கள் அனைவரையும் குணப்படுத்தினார்.

இறுதியாக, சாராளுக்கு ஒரு குழந்தை

21 கர்த்தர், சாராளுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றினார். சாராள் கர்ப்பமுற்றாள். ஆபிரகாமின் வயோதிப காலத்தில் அவனுக்கு ஓர் ஆண் மகனைப் பெற்றுக் கொடுத்தாள். இவையெல்லாம் தேவன் வாக்களித்தபடியே நடந்தது. சாராள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ஆபிரகாம் அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான். ஈசாக்கு பிறந்து எட்டு நாள் கழிந்தபோது ஆபிரகாம் அவனுக்கு விருத்தசேதனம் செய்து வைத்தான். தேவனின் ஆணைப்படி இவ்வாறு நடந்தது.

ஈசாக்கு பிறக்கும்போது அவனது தந்தை ஆபிரகாமுக்கு 100 வயதாயிருந்தது. சாராள், “தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்தார். இதைக் கேள்விப்படும் எவரும் என்னோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவார்கள். ஆபிரகாமின் குழந்தையை நான் பெற்றெடுப்பேன் என்று எவரும் நினைத்திருக்கமாட்டார்கள். ஆனால் நான் இந்த வயோதிப காலத்திலும் அவருக்கு ஆண் பிள்ளையைப் பெற்றுக் கொடுத்தேன்” என்றாள்.

வீட்டில் பிரச்சனை

ஈசாக்கு பால்குடிக்க மறக்கும் நாளில் ஆபிரகாம் பெரிய விருந்து கொடுத்தான். ஆகார் என்னும் எகிப்திய அடிமைப்பெண் ஆபிரகாமின் முதல் மகனைப் பெற்றிருந்தாள். சாராள் அவனைப் பார்த்தாள். அவன் கேலிச் செய்துகொண்டிருப்பதைக் கண்டு அவளுக்கு அவன் மேல் எரிச்சல் வந்தது. 10 சாராள் ஆபிரகாமிடம், “இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் வெளியே தள்ளும். நாம் சாகும்போது நமக்குரிய அனைத்தையும் ஈசாக்கே பெற வேண்டும். அந்த அடிமைப் பெண்ணின் மகன் அதில் பங்கு போடுவதை நான் விரும்பவில்லை” என்றாள்.

11 இது ஆபிரகாமுக்கு துயரத்தைத் தந்தது. அவன் தன் மகன் இஸ்மவேலைப்பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தான். 12 ஆனால் தேவன் ஆபிரகாமிடம், “அடிமைப் பெண்ணையும், அவள் மகனையும்பற்றிக் கவலைப்படாதே, சாராள் விரும்புவது போலவே செய். ஈசாக்கு ஒருவனே உனது வாரிசு. 13 ஆனால் நான் உனது அடிமைப் பெண்ணின் மகனையும் ஆசீர்வதிப்பேன். அவனும் உன் மகன் என்பதால் அவனிடமிருந்தும் ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன்” என்றார்.

14 மறுநாள் அதிகாலையில் ஆபிரகாம் கொஞ்சம் தண்ணீரும், உணவும் எடுத்து அவற்றை ஆகாரிடம் கொடுத்தான். அவள் அவற்றை எடுத்துக்கொண்டு தன் மகனோடு வெளியேறி, பெயெர்செபா பாலைவனத்தில் அலைந்து திரிந்தாள்.

15 கொஞ்ச நேரம் கழிந்ததும் தண்ணீர் தீர்ந்து போனதால் குடிப்பதற்கு எதுவும் இல்லாமல் போயிற்று. எனவே ஆகார் தன் மகனை ஒரு புதரின் அடியில் விட்டாள். 16 ஆகார் கொஞ்ச தூரம் போய் உட்கார்ந்தாள். அவள் தன் மகன் தண்ணீர் இல்லாமலேயே மரித்துப்போவான் என்று எண்ணினாள். அவன் மரிப்பதை அவள் பார்க்க விரும்பவில்லை. எனவே அவள் அங்கே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.

17 சிறுவனின் அழுகையை தேவன் கேட்டார். தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: “ஆகாரே! உனக்கு என்ன நடந்தது? அஞ்ச வேண்டாம், கர்த்தர் சிறுவனின் அழுகையைக் கேட்டார். 18 போய் சிறுவனுக்கு உதவி செய், அவனது கையைப் பிடித்து வழிநடத்திச்செல். நான் அவனை ஏராளமான ஜனங்களுக்குத் தந்தையாக்குவேன்” என்றார்.

19 பிறகு தேவன், ஆகாரை ஒரு கிணற்றைப் பார்க்கும்படிச் செய்தார். அவள் அந்த கிணற்றின் அருகே சென்று, தன் பை நிறைய தண்ணீரை நிரப்பியதுடன், தன் மகனுக்கும் குடிக்கக் கொடுத்தாள். 20 அவன் வளர்ந்து ஆளாகும்வரை தேவன் அவனோடு இருந்தார். இஸ்மவேல் பாலைவனத்தில் வாழ்ந்து பெரிய வேட்டைக்காரன் ஆனான். வில்லைப் பயன்படுத்தத் தெரிந்துகொண்டான். 21 அவனது தாய் அவனுக்கொரு மனைவியை எகிப்தில் கண்டுபிடித்தாள். அவர்கள் பாரான் பாலைவனத்தில் வாழ்ந்தனர்.

அபிமெலேக்கோடு ஆபிரகாமின் உடன்படிக்கை

22 இவைகளுக்குப் பின்னர் அபிமெலேக்கும் பிகோலும் ஆபிரகாமோடு பேசினர். பிகோல் அபிமெலேக்கின் படைத் தளபதி. அவர்கள் ஆபிரகாமிடம், “நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவன் உன்னோடு இருக்கிறார். 23 எனவே இப்போது எனக்கு தேவனுக்கு முன்பு ஒரு வாக்குறுதி கொடு. நீ என்னோடும், என் பிள்ளைகளோடும் நியாயமாக நடந்துகொள்வேன் என்றும், நீ என்னோடும், நீ வாழ்கிற இந்தத் தேசத்தோடும் கருணையாய் இருப்பேன் என்றும் வாக்குறுதிகொடு. நான் உன்னோடு கருணையாய் இருப்பதுபோன்று நீ என்னோடு கருணையாய் இருப்பதாக உறுதியளி” என்று கேட்டனர்.

24 ஆபிரகாமோ, “நீங்கள் என்னை நடத்துவது போன்று நானும் உங்களை நடத்துவேன்” என்று சொன்னான். 25 பிறகு ஆபிரகாம் அபிமெலேக்கிடம் அரசனின் ஆட்கள் அவனது கிணற்றை அபகரித்துக்கொண்டதாய் முறையிட்டான்.

26 ஆனால் அபிமெலேக்கோ, “யார் இதைச் செய்தது என்று எனக்குத் தெரியாது, இதற்கு முன் நீ எனக்கு இதைப்பற்றி சொல்லவில்லை” என்று கூறினான்.

27 ஆகவே, அபிமெலேக்கும் ஆபிரகாமும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன்படி ஆபிரகாம் அரசனுக்குச் சில ஆடுகளையும் மாடுகளையும் ஒப்பந்தத்தின் அத்தாட்சியாகக் கொடுத்தான். 28 ஆபிரகாம் ஏழு பெண் ஆட்டுக்குட்டிகளையும் தனியாக அபிமெலேக்கு முன்பு நிறுத்தினான்.

29 அபிமெலேக்கு ஆபிரகாமிடம், “ஏன் இவற்றைத் தனியாக இதுபோல் நிறுத்தியிருக்கிறாய்” என்று கேட்டான்.

30 அதற்கு ஆபிரகாம், “என்னிடத்திலிருந்து நீ இவற்றை ஏற்றுக்கொண்டால், அது நான் இந்தக் கிணற்றைத் தோண்டியதற்கு அடையாளமாகும்” என்றான்.

31 அதற்குப் பிறகு அந்தக் கிணறு பெயெர்செபா என்று அழைக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்துகொண்ட இடம் என்று இதற்குப் பொருள்.

32 இவ்வாறு அபிமெலேக்கும் ஆபிரகாமும் அந்த இடத்தில் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர் அபிமெலேக்கும் அவனது படையும் அந்த இடத்தை விட்டு பெலிஸ்தருடைய நாட்டுக்குத் திரும்பிப் போனார்கள்.

33 ஆபிரகாம் பெயெர்செபாவில் ஒரு புதிய மரத்தை நட்டு என்றென்றும் ஜீவிக்கும் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தான். 34 ஆபிரகாம் பெலிஸ்தருடைய நாட்டில் நீண்ட காலம் தங்கியிருந்தான்.

ஆபிரகாம், தேவனால் சோதிக்கப்படுதல்

22 இதற்குப் பிறகு, தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினார். எனவே தேவன் “ஆபிரகாமே” என்று அழைத்தார்.

ஆபிரகாமும், “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.

தேவன் அவனிடம், “உன்னுடைய அன்பிற்குரிய, ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்திற்குச் செல். அங்கு உன் மகனை எனக்கு தகன பலியாகக் கொடு. எந்த இடத்தில் அதைச் செய்ய வேண்டுமென்று நான் உனக்குச் சொல்வேன்” என்றார்.

காலையில் ஆபிரகாம் எழுந்து தனது கழுதையைத் தயார் செய்தான். ஈசாக்கையும் இரண்டு வேலைக்காரர்களையும் அழைத்துக்கொண்டான். பலிக்கு விறகுகளையும் எடுத்துக்கொண்டான். தேவன் போகச் சொன்ன இடத்திற்கு அவர்கள் போனார்கள். அவர்கள் மூன்று நாட்கள் பயணம் செய்தபின் தொலைவில் தேவன் குறிப்பிட்ட இடம் தெரிந்தது. ஆபிரகாம் தனது வேலைக்காரர்களிடம், “கழுதையோடு நீங்கள் இங்கேயே தங்கியிருங்கள், நானும் என் மகனும் அவ்விடத்திற்கு தொழுதுகொள்ளப் போகிறோம். பிறகு உங்களிடம் திரும்பி வருவோம்” என்றான்.

பலிக்கான விறகுகளை எடுத்து மகனின் தோள் மீது வைத்தான். ஆபிரகாம் கத்தியையும், நெருப்பையும் எடுத்துக்கொண்டு, அவனும் அவனது மகனும் சேர்ந்து போனார்கள்.

ஈசாக்கு தன் தந்தையைப் பார்த்து, “அப்பா” என்று அழைத்தான்.

ஆபிரகாமும், “என்ன மகனே” எனக் கேட்டான்.

ஈசாக்கு அவனிடம், “விறகும், நெருப்பும் நம்மிடம் உள்ளது. பலியிடுவதற்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று கேட்டான்.

அதற்கு ஆபிரகாம், “தேவனே தனக்கான பலிக்குரிய ஆட்டுக்குட்டியைக் கொடுப்பார் மகனே” என்று பதில் சொன்னான்.

ஆபிரகாமும் அவனது மகனும் தேவன் போகச் சொன்ன இடத்திற்கு போய்ச் சேர்ந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை கட்டி அதின்மேல் விறகுகளை அடுக்கினான். பின் தன் மகன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் கிடத்தினான். 10 பிறகு ஆபிரகாம் கத்தியை எடுத்து மகனை வெட்டுவதற்குத் தயாரானான்.

11 அப்போது கர்த்தருடைய தூதன் ஆபிரகாமைத் தடுத்து நிறுத்தி, “ஆபிரகாமே ஆபிரகாமே” என்று அழைத்தார்.

ஆபிரகாம், “நான் இங்கே இருக்கிறேன்” என்று பதிலளித்தான்.

12 தேவதூதன்: “உனது மகனைக் கொல்ல வேண்டாம். அவனை எவ்விதத்திலும் காயப்படுத்த வேண்டாம். நீ தேவனை மதிப்பவன் என்றும், கீழ்ப்படிபவன் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். நீ எனக்காக உன் ஒரே ஒரு மகனையும் கொல்லத் தயாராக உள்ளாய் என்பதையும் தெரிந்துகொண்டேன்” என்றார்.

13 ஆபிரகாம் தொலைவில் தன் கண் முன் ஒரு ஆட்டுக் கடாவைக் கண்டான். அதன் கொம்புகள் புதரில் சிக்கிக்கொண்டிருந்தன. ஆபிரகாம் அதனை விடுவித்து தேவனுக்குப் பலியிட்டான். ஆபிரகாமின் மகன் காப்பாற்றப்பட்டான். 14 அதனால் ஆபிரகாம் அந்த இடத்திற்கு, “யேகோவா யீரே” [a] என்று பெயரிட்டான். “கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்” என்று இன்றைக்கும் கூட ஜனங்கள் கூறுகின்றனர்.

15 கர்த்தருடைய தூதன் இரண்டாவது முறையும் வானத்திலிருந்து ஆபிரகாமை அழைத்து, 16 “எனக்காக உன் மகனைக் கொல்லத் தயாராக இருந்தாய், இவன் உனது ஒரே மகன். இதை எனக்காகச் செய்தாய். 17 கர்த்தராகிய நான் உண்மையாகவே உன்னை ஆசீர்வதிப்பேன். வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப்போன்று நான் உன் சந்ததியைப் பெருகச் செய்வேன். கடற்கரையிலுள்ள மணலைப் போன்று எண்ணற்ற வாரிசுகளையும் தருவேன். உனது ஜனங்கள் தங்கள் பகைவர்களை வெல்லுவார்கள். 18 பூமியிலுள்ள ஒவ்வொரு நாடும் உனது சந்ததி மூலம் ஆசீர்வாதத்தைப்பெறும். நீ எனக்குக் கீழ்ப்படிந்தாய். அதனால் இதை நான் உனக்குச் செய்வேன்” என்றார்.

19 பிறகு, ஆபிரகாம் தன் வேலைக்காரர்கள் இருக்குமிடத்திற்குச் சென்றான், அவர்கள் அனைவரும் பெயெர்செபாவுக்குத் திரும்பினார்கள். ஆபிரகாம் அங்கேயே தங்கியிருந்தான்.

20 இவை எல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆபிரகாமுக்கு ஒரு செய்தி வந்தது. அதில், “உனது சகோதரன் நாகோருக்கும் அவனது மனைவி மில்காளுக்கும் குழந்தைகள் பிறந்துள்ளனர். 21 முதல் மகனின் பெயர் ஊத்ஸ். இரண்டாவது மகனின் பெயர் பூஸ். மூன்றாவது மகனின் பெயர் கேமுவேல். இவன் ஆராமின் தந்தை. 22 மேலும் கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்களும் உள்ளனர். பெத்துவேல் ரெபெக்காளைப் பெற்றான்” என்று கூறப்பட்டிருந்தது. 23 அந்த எட்டு பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள். நாகோர் ஆபிரகாமின் சகோதரன். 24 ரேயுமாள் என்ற அவனது வேலைக்காரி தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றாள்.

மத்தேயு 6:19-34

பணமும் தேவனும்(A)

19 ,“உங்களுக்காக இப்பூமியில் செல்வம் சேர்த்து வைக்காதீர்கள். பூச்சிகளாலும் துருவாலும் பூமியிலுள்ள செல்வம் அழியும். மேலும் திருடர்கள் உங்கள் வீட்டை உடைத்து உங்கள் செல்வங்களைக் கொள்ளையடித்துப் போவார்கள். 20 எனவே உங்கள் செல்வங்களைப் பரலோகத்தில் சேமியுங்கள். பூச்சிகளும் துருவும் அவற்றை அழிக்க இயலாது. பரலோகத்திலிருக்கும் செல்வத்தைத் திருடர்களும் திருட முடியாது. 21 உங்கள் செல்வம் எங்கேயோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

22 ,“உடலுக்கு ஒளி தருவது கண். உங்கள் கண்கள் நன்றாக இருந்தால், உங்கள் சரீரம் முழுவதும் ஒளியுடன் திகழும். 23 ஆனால், உங்கள் கண்கள் கெட்டுப் போனால், உங்கள் சரீரம் முழுவதும் ஒளியிழந்து போகும். உங்களிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால் அவ்விருள் எவ்வளவு கொடியதாயிருக்கும்.

24 ,“எந்த மனிதனாலும் ஒரே நேரத்தில் இரண்டு முதலாளிகளுக்கு வேலை செய்ய முடியாது. அவன் ஒரு முதலாளியை நேசித்து மற்ற முதலாளியை வெறுக்க நேரிடும். அல்லது ஒரு முதலாளியின் பேச்சைக் கேட்டும் மற்ற முதலாளியின் பேச்சை மறுக்கவும் நேரிடும். எனவே, நீங்கள் ஒரே நேரத்தில் தேவனுக்கும், பணத்திற்கும் பணிபுரிய முடியாது.

தேவ இராஜ்யத்திற்கு முதலிடம்(B)

25 ,“எனவே, நான் சொல்கிறேன், நீங்கள் உயிர்வாழத் தேவையான உணவிற்காகக் கவலை கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான உடைக்காகவும் கவலைகொள்ளாதீர்கள். உணவைவிடவும் முக்கியமானது ஜீவன். உடையைவிடவும் முக்கியமானது சரீரம். 26 பறவைகளைப் பாருங்கள். அவைகள் விதைப்பதோ அறுவடை செய்வதோ களஞ்சியங்களில் சேமித்து வைப்பதோ இல்லை. ஆனால் உங்கள் பரலோகப் பிதா அவைகளுக்கு உணவளிக்கிறார். பறவைகளை காட்டிலும் நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என நீங்கள் அறிவீர்கள். 27 கவலைப்படுவதினால் உங்களால் உங்கள் வாழ்நாளைக் கூட்ட இயலாது.

28 ,“உடைகளுக்காக ஏன் கவலை கொள்கிறீர்கள்? தோட்டத்தில் உள்ள மலர்களைப் பாருங்கள். அவை எப்படி வளர்கின்றன என்பதைப் பாருங்கள். அவைகள் வேலை செய்வதுமில்லை. தங்களுக்கான உடைகளைத் தயார் செய்வதுமில்லை. 29 ஆனால் நான் சொல்கிறேன் மாபெரும் பணக்கார மன்னனான சாலமோன் கூட இந்தப் பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடை அணியவில்லை. 30 அவ்வாறே தேவன் வயல்களிலுள்ள புற்களுக்கும் உடை அணிவிக்கிறார். இன்றைக்கு உயிருடன் இருக்கும் புல், நாளைக்கு தீயிலிடப்பட்டு எரிக்கப்படும். எனவே, தேவன் உங்களுக்குச் சிறப்பாக உடையணிவிப்பார் என்பதை அறியுங்கள். தேவனிடம் சாதாரணமான நம்பிக்கை வைக்காதீர்கள்.

31 ,“‘உண்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘குடிப்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘உடுப்பதற்கு என்ன கிடைக்கும்?’ என்று கவலைகொள்ளாதீர்கள். 32 தேவனை அறியாத மக்களே இவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். நீங்களோ கவலைப்படாதீர்கள், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா இவைகள் உங்களுக்குத் தேவை என்பதை அறிவார். 33 தேவனின் இராஜ்யத்தையும் நீங்கள் செய்ய வேண்டுமென தேவன் விரும்பும் நற்செயல்களைச் செய்தலையுமே நீங்கள் நாடவேண்டும். அப்போது தேவன் உங்களது மற்றத் தேவைகளையும் நிறைவேற்றுவார். 34 எனவே, நாளையைக் குறித்துக் கவலைகொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் தொல்லை உண்டு. நாளையக் கவலை நாளைக்கு.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center