Old/New Testament
சாலொமோன் ஞானத்தை கேட்கிறான்
1 சாலொமோன் பலமுள்ள ராஜாவாக விளங்கினான். ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் அவனோடு இருந்தார். கர்த்தர் அவனை மிகப் பெரியவனாக்கினார். 2 இஸ்ரவேல் ஜனங்களோடு சாலொமோன் பேசினான். அத்துடன் எல்லா தலைவர்களோடும், பொது அதிகாரிகளோடும், நீதிபதிகளோடும், இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொரு வழிகாட்டிகளோடும், ஒவ்வொரு குடும்பத் தலைவர்களோடும் பேசினான். 3 பிறகு சாலொமோனும் மற்றும் அனைவரும் கூடி கிபியோனில் இருக்கிற மேடைக்குப் போனார்கள். அங்கு தேவனுடைய ஆசரிப்புக் கூடாரம் இருந்தது. இதனைக் கர்த்தருடைய ஊழியக்காரனான மோசே வனாந்தரத்தில் இருக்கும்போது அமைத்தான். 4 தாவீது தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து எருசலேமிற்குக் கொண்டு வந்தான். அவன் எருசலேமில் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கும்படி ஒரு கூடாரத்தை அமைத்திருந்தான். 5 ஊரியின் குமாரனான பெசலெயேல் வெண்கலப் பலிபீடத்தைச் செய்தான். அது பரிசுத்தக் கூடாரத்தின் முன்பாக கிபியோனில் இருந்தது. எனவே சாலொமோனும் ஜனங்களும் கிபியோனுக்கு கர்த்தருடைய ஆலோசனை பெற சென்றனர். 6 சாலொமோன் மேலே ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருக்கு முன்பிருந்த வெண்கல பலிபீடத்தின் அருகிலே சென்றான். அப்பலிபீடத்தில் சாலொமோன் 1,000 தகனபலிகளைக் கொடுத்தான்.
7 அன்று இரவு தேவன் சாலொமோனிடம், “நான் உனக்கு என்ன தரவேண்டும் என விரும்புகிறாய் என்பதை கேள்” என்றார்.
8 சாலொமோன் தேவனிடம், “என் தந்தையான தாவீதிடம் நீர் மிகவும் கருணையோடு இருந்தீர். என் தந்தையின் இடத்திற்கு என்னைப் புதிய ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர். 9 இப்போது தேவனாகிய கர்த்தாவே! என் தந்தை தாவீதிற்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும். இப்பெரிய நாட்டிற்கு என்னை ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர். பூமியில் உள்ள புழுதியைப் போன்று ஏராளமான அளவில் ஜனங்கள் வசிக்கின்றனர். 10 இப்போது எனக்கு அறிவையும் ஞானத்தையும் நீர் தரவேண்டும். அதனால் இந்த ஜனங்களை சரியான வழியில் நடத்திச் செல்வேன். உம்முடைய உதவி இல்லாமல் எவராலும் இந்த ஜனங்களை ஆள இயலாது!” என்றான்.
11 தேவன் சாலொமோனிடம், “உனக்கு நீதியான மனப்பான்மை உள்ளது. நீ செல்வத்தையோ, பொருட்களையோ, பெருமையையோ கேட்கவில்லை. உன் பகைவர்களை அழிக்க வேண்டும் என்றும் கேட்கவில்லை. நீ நீண்ட வாழ்நாளையும் கேட்கவில்லை. நீ இத்தகையவற்றைக் கேட்கவில்லை. நீ என்னிடம் அறிவையும் ஞானத்தையும் வேண்டுகிறாய். எனவே என்னால் தேர்ந்தெடுக்கப்படும் உன்னால் என் ஜனங்களுக்காக சரியான முடிவுகளை எடுக்க இயலும். 12 ஆகையால் நான் உனக்கு அறிவும் ஞானமும் தருகிறேன். ஆனால் அதோடு உனக்குச் செல்வத்தையும் பொருட்களையும் பெருமையையும் தருவேன். இதற்கு முன்னால் இருந்த எந்த ராஜாவுக்கும் கிடைக்காத அளவிற்கு உனக்குச் செல்வமும் சிறப்பும் தருவேன். எதிர்காலத்திலும் இதுபோல் எந்த ராஜாவும் செல்வமும் சிறப்பும் பெறப்போவதில்லை” என்றார்.
13 எனவே, சாலொமோன் கிபியோனில் தொழுதுகொள்ளும் இடத்திற்குச் சென்றான். பிறகு சாலொமோன் ஆசரிப்புக் கூடாரத்தைவிட்டு எருசலேமிற்கு இஸ்ரவேலின் ராஜாவாக அரசாளத் திரும்பிச் சென்றான்.
சாலொமோன் தனது படையையும் செல்வத்தையும் சேர்க்கிறான்
14 சாலொமோன் தனது படைக்காகக் குதிரைகளையும் இரதங்களையும் சேகரிக்க ஆரம்பித்தான். சாலொமோனிடம் 1,400 இரதங்களும் 12,000 குதிரை வீரர்களும் இருந்தார்கள். அவற்றை அவன் இரதத்துக்குரிய நகரங்களில் இருக்கச்செய்தான். அவர்களில் சிலரை அரண்மனையிருந்த எருசலேமிலும் இருக்கச் செய்தான். 15 எருசலேமில் சாலொமோன் ஏராளமாகத் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்தான். அங்கே பொன்னும் வெள்ளியும் கற்களைப் போன்று ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தன. சாலொமோன் கேதுருமரங்களையும் ஏராளமாகச் சேகரித்தான். அவை மேற்கு மலை பள்ளத்தாக்கில் உள்ள காட்டத்தி மரங்களைப் போன்று ஏராளமாக இருந்தன. 16 சாலொமோன் எகிப்திலிருந்தும் கியூவிலிருந்தும் குதிரைகளை வாங்கி வந்தான். ராஜாவின் வியாபாரிகள் கியூவிலிருந்து குதிரைகளை வாங்கி வந்தனர். 17 சாலொமோனின் வியாபாரிகள் 600 சேக்கல் வெள்ளிக்கு ஒரு இரதத்தையும் 150 சேக்கல் வெள்ளிக்கு ஒரு குதிரையையும் வாங்கி வந்தனர். பிறகு இதே விதத்தில் அந்த வியாபாரிகள் குதிரைகளையும் இரதங்களையும் ஏத்தியரின் ராஜாக்களுக்கும் ஆராம் ராஜாக்களுக்கும் கொண்டுபோய் விற்றார்கள்.
ஆலயத்தையும் அரண்மனையையும் கட்ட சாலொமோன் திட்டமிடுகிறான்
2 கர்த்தருடைய நாமத்துக்கு மகிமை உண்டாக்க சாலொமோன் ஆலயம் கட்ட திட்டமிட்டான். மேலும் தனக்காக ஒரு அரண்மனை கட்டிக்கொள்ளவும் சாலொமோன் திட்டமிட்டான். 2 மேலும் மலையில் கல் உடைக்கும் பொருட்டு சாலொமோனிடம் 70,000 தொழிலாளர்களும் 80,000 கல் தச்சர்களும் இருந்தார்கள். மேற்பார்வை செய்யும்பொருட்டு 3,600 பேரைத் தேர்ந்தெடுத்தான்.
3 பிறகு சாலொமோன் ஈராம் என்பவனுக்கு தூது அனுப்பினான். ஈராம் தீரு என்னும் நாட்டின் ராஜா. சாலொமோன்,
“என் தந்தையான தாவீதிற்கு உதவிச் செய்தது போன்று எனக்கும் உதவிச் செய்யுங்கள். நீங்கள் கேதுருமரக்கட்டைகளை அனுப்பினீர்கள். அதனால் அவர் தனக்கு அரண்மனை கட்டிக்கொண்டார். 4 நான் எனது தேவனாகிய கர்த்தருடைய பெயரை மகிமைப்படுத்துவதற்காக ஒரு ஆலயம் கட்டப்போகிறேன். ஆலயத்தில் கர்த்தருக்கு முன்பாக நாங்கள் நறுமணப் பொருட்களை எரிக்கப்போகிறோம். சிறப்புக்குரிய மேஜையில் பரிசுத்த அப்பத்தை வைக்கப்போகிறோம். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் தகனபலிகளை செலுத்தப் போகிறோம். ஓய்வுநாட்களிலும், பிறைச்சந்திர நாட்களிலும் நமது தேவனாகிய கர்த்தர் கொண்டாடச் சொன்ன பண்டிகை நாட்களிலும் தகனபலிகளை செலுத்தப்போகிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் எக்காலத்திற்கும் கீழ்ப்படியவேண்டிய சட்டம் இது.
5 “நமது தேவன் மற்ற எல்லாத் தெய்வங்களை விட பெரியவர். எனவே நான் அவருக்காகப் பெரிய ஆலயத்தைக் கட்டுவேன். 6 உண்மையில் எவராலும் நம் தேவனுக்கு ஆலயம் கட்டமுடியாது. வானமும் வானாதி வானமும் கூட அவரைத் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே என்னாலும் நமது தேவனுக்கு ஆலயம் கட்டமுடியாது. என்னால் முடிந்ததெல்லாம் அவரை மகிமைப்படுத்த அவருக்கு நறுமணப் பொருட்களை எரிக்க ஒரு இடத்தை அமைப்பதுதான்.
7 “இப்போது நான் உங்களிடம் ஒரு மனிதனை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அவனுக்குப் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு போன்ற வேலைகளில் திறமை இருக்கவேண்டும் அவனுக்கு இரத்தாம்பர நூலிலும், சிவப்பு நூலிலும், இளநீல நூலிலும் வேலைச் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அவன் இங்கு யூதாவிலும் எருசலேமிலும் இருக்கின்றவர்களோடும் என் தந்தை தாவீதால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோடும் வேலைச்செய்ய வேண்டும். 8 லீபனோனில் உள்ள கேதுரு, தேவதாரு, வாசனை மரங்கள் போன்றவற்றின் பலகைகளையும் அனுப்பவேண்டும். உனது வேலைக்காரர்கள் லீபனோனில் உள்ள மரங்களை வெட்டத் தெரிந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனது வேலைக்காரர்கள் உனது வேலைக்காரர்களுக்கு உதவுவார்கள். 9 எனக்கு ஏராளமான மரப்பலகைகள் தேவை. ஏனென்றால் நான் கட்டப்போகும் ஆலயமானது பெரியதாகவும் அழகானதாகவும் இருக்கும். 10 பலகைகளுக்காக மரத்தை வெட்டப்போகும் உன்னுடைய வேலைக்காரர்களுக்கு நான் கொடுக்கப்போகும் கூலி இதுதான். நான் அவர்களின் உணவுக்காக 20,000 மரக்கால் கோதுமையையும், 20,000 மரக்கால் வாற் கோதுமையையும், 20,000 குடம் திராட்சைரசத்தையும், 20,000 குடம் எண்ணெயையும் கொடுப்பேன்” என்று சொல்லி அனுப்பினான்.
11 பிறகு ஈராம் சாலொமோனுக்குப் பதில் அனுப்பினான். ஈராம் அனுப்பிய செய்தியில் அவன்,
“சாலொமோன், கர்த்தர் தமது ஜனங்களை நேசிக்கிறார். அதனால்தான் அவர்களுக்கு ராஜாவாக உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டான். 12 ஈராம் மேலும், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்! அவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார். அவர் தாவீதிற்கு ஞானமுடைய குமாரனைக் கொடுத்தார். சாலொமோன், உன்னிடம் ஞானமும் அறிவும் உள்ளது. நீ கர்த்தருக்காக ஆலயம் கட்டிக் கொண்டிருக்கிறாய். நீ உனக்காக ஒரு அரண்மனையும் கட்டுகிறாய். 13 நான் உன்னிடம் ஈராம் அபி என்னும் கைதேர்ந்த நிபுணனை அனுப்புவேன். 14 அவனது தாய் தாண் என்னும் கோத்திரத்தைச் சேர்ந்தவள். அவனது தந்தை தீரு என்னும் நாட்டிலிருந்து வந்தவன். ஈராம்அபி பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கல், மரம் போன்றவற்றில் திறமையாக வேலைச் செய்பவன். மேலும் அவன் கருஞ் சிவப்பு, நீலம், சிவப்புத் துணிகள் மற்றும் மென்பட்டுத்துணி போன்றவற்றில் வேலைச்செய்யும் திறமையும்கொண்டவன். அவனால் வரைபடம் அமைக்கவும் நீ சொல்வதுபோல கட்டவும் முடியும். அவன் உனது கைத்தொழில் வல்லுநர்களோடும் உனது தந்தையான ராஜா தாவீதின் கைத் தொழில் வல்லுநர்களோடும் பணியாற்றுவான்.
15 “இப்போது ஐயா, எங்களுக்கு கோதுமையையும், வாற்கோதுமையையும், திராட்சைரசமும், எண்ணெயும் தருவதாக நீங்கள் கூறினீர்கள். அவை அனைத்தையும் என் வேலைக்காரர்களிடம் கொடுங்கள். 16 நாங்கள் லீபனோன் நாட்டிலிருந்து மரங்களை வெட்டுவோம். நாங்கள் தேவையான அளவிற்கு மரங்களை வெட்டுவோம். நாங்கள் மரப் பலகைகளைக் கட்டி தெப்பங்களைப் போன்று கடல் வழியாக யோப்பாவரை கொண்டுவருவோம். பிறகு நீங்கள் எருசலேமிற்கு அவற்றை எடுத்துச் செல்லலாம்” என்றான்.
17 பிறகு, சாலொமோன் இஸ்ரவேல் நாட்டில் வாழும் அந்நியர்களின் தொகையைக் கணக்கெடுத்தான். இதுபோல ஏற்கெனவே தாவீது ராஜாவும் கணக்கெடுத்திருக்கிறான். தாவீது சாலொமோனின் தந்தையாகும். அவர்கள் 1,53,600 அந்நியர்கள் இருப்பதை அறிந்தனர். 18 அவர்களில் 70,000 பேரைப் பொருட்களைத் தூக்கிச்செல்ல தேர்ந்தெடுத்தான். 80,000 பேரை, மலையில் கல்லை வெட்டத் தேர்ந்தெடுத்தான். 3,600 பேரை, மேற்பார்வை செய்யத் தேர்ந்தெடுத்தான்.
சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறான்
3 எருசலேமில் உள்ள மோரியா என்னும் மலை மீது கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும் வேலையை சாலொமோன் ஆரம்பித்தான். மோரியா மலையில்தான் கர்த்தர் சாலொமோனின் தந்தையான தாவீதிற்கு காட்சியளித்தார். தாவீது தயார்செய்து வைத்திருந்த இடத்திலேயே சாலொமோன் ஆலயம் கட்டினான். இந்த இடம் எபூசியனாகிய ஒர்னானின் களத்தில் இருந்தது. 2 சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவாகிய நான்காவது ஆண்டின் இரண்டாவது மாதத்தில் ஆலய வேலையைத் தொடங்கினான்.
3 தேவாலயத்தின் அடித்தளத்திற்கு சாலொமோன் பயன்படுத்திய அளவு முறைகள் வருமாறு: அடித்தளமானது 90 அடி நீளமும், 30 அடி அகலமும் உடையது. சாலொமோன் ஆலயத்தை அளந்தபொழுது பழைய அளவு முறையையே பயன்படுத்தினான். 4 முகப்பு மண்டபமானது ஆலயத்திற்கு முன்பாய் இருபது முழ நீளமும் 180 அடி உயரமுமாய் இருந்தது. சாலொமோன் முகப்பு மண்டபத்தின் உட்பாகத்தை சுத்தமான தங்கத் தகட்டால் மூடினான். 5 ஆலயத்தின் பெரிய மாளிகை சுவர்களைத் தேவதாரு மரப்பலகைகளால் செய்தான். அவற்றைப் பசும்பொன்னால் இழைத்தான். அதன் மேல் பேரீச்சு வேலைகளையும், சங்கிலி வேலைகளையும் சித்தரித்தான். 6 அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான். இவன் பயன்படுத்திய தங்கமானது பர்வாயீமினுடையது. 7 அந்த ஆலயத்தின் உத்திரங்கள், நிலைகள், சுவர்கள், கதவுகள் போன்றவற்றைப் பொன் தகட்டால் மூடினான். சுவர்களிலே கேருபீன்களைச் செய்து வைத்தான்.
8 பிறகு, சாலொமோன் மகாபரிசுத்தமான இடத்தையும் கட்டினான். இது 20 முழ நீளமும், 20 முழ அகலமும் உடையதாய் இருந்தது. இதன் அகலம் ஆலயத்தைப் போன்றதே. இதன் சுவர்களைப் பசும் பொன்னால் இழைத்தான். இப்பொன்னின் எடை 600 தாலமாகும். 9 தங்க ஆணிகள் 50 சேக்கல் எடையுள்ளது. மேல் அறைகளையும் பொன்னால் இழைத்தான். 10 சாலொமோன் இரண்டு கேருபீன்களைச் செய்து மகாபரிசுத்தமான இடத்தில் வைத்தான். அவற்றையும் பொன் தகட்டால் மூடினான். 11 கேருபீன்களின் ஒவ்வொரு சிறகும் 5 முழ நீளமுடையது. ஆக மொத்தம் சிறகுகளின் நீளம் 20 முழ நீளமாயிருந்தது. முதல் கேருபீனின் ஒரு சிறகு அந்த அறையின் ஒரு சுவரைத் தொட்டது. அதன் இன்னொரு சிறகு இன்னொரு கேருபீனின் சிறகைத் தொட்டது. 12 இரண்டாவது கேருபீனின் இன்னொரு சிறகானது அவ்வறையின் இன்னொரு சுவரைத் தொட்டது. 13 கேருபீன்களின் சிறகுகள் மொத்தமாக 30 அடி நீளத்தில் பரவியிருந்தன. கேருபீன்கள் பரிசுத்த இடத்தை நோக்கிய வண்ணம் நின்றன.
14 சாலொமோன் திரையை இளநீலம், சிவப்பு, இரத்தாம்பரம், மெல்லிய லினன் போன்ற நூல்களால் செய்தான். அதன்மேல் கேருபீன் வடிவங்களையும் அமைத்தான்.
15 சாலொமோன் ஆலயத்திற்கு முன்னால் இரண்டு தூண்களை அமைத்தான். அவற்றின் உயரம் 35 முழமாகும். அவற்றின் மேல் முனையில் 5 முழ உயர கும்பங்களையும் வைத்தான். 16 சாலொமோன் சங்கிலிகளையும் செய்தான். அவற்றைத் தூண்களின் மேல் முனையில் பொருத்தினான். அச்சங்கிலிகளில் 100 மாதளம் பழங்களைச் செய்து தொங்கவிட்டான். 17 பிறகு சாலொமோன் அத்தூண்களை ஆலயத்திற்கு முன்னர் தூக்கி நிறுத்தினான். ஒரு தூண் வலது பக்கத்திலும் இன்னொரு தூண் இடது பக்கத்திலும் நிறுத்தினான். வலது பக்கமுள்ள தூணுக்கு சாலொமோன் “யாகீன்” என்றும் இடது பக்கமுள்ள தூணுக்கு “போவாஸ்” என்றும் பெயரிட்டான்.
நல்ல மேய்ப்பனும் ஆடுகளும்
10 “உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், ஒருவன் ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல் வழியாகவே நுழையவேண்டும். வேறு வழியாக நுழைந்தால், அவன் ஒரு திருடன். அவன் ஆடுகளைத் திருடவே முயற்சி செய்வான். 2 ஆனால் மேய்ப்பன் வாசல் வழியாக நுழைகிறவன். அவனே மேய்ப்பன். 3 வாசலைக் காக்கிற காவல்காரன் மேய்ப்பனுக்காகக் கதவைத் திறந்துவிடுவான். ஆடுகள் மேய்ப்பனின் குரலுக்கு செவி கொடுக்கும். மேய்ப்பன் தன் சொந்த ஆடுகளை அவற்றின் பெயரைச் சொல்லி அழைப்பான். அவன் அவற்றை வெளியே நடத்திக்கொண்டு போவான். 4 மேய்ப்பன் தனது ஆடுகளையெல்லாம் வெளியே கொண்டுவந்த பின் அவற்றுக்கு முன்னால் நடந்து அவற்றை நடத்திக்கொண்டு போகிறான். ஆடுகள் அவனது குரல் குறிப்புகளை அடையாளம் கண்டபடியால், அவை அவன் பின்னே செல்கின்றன. 5 ஆனால் ஆடுகள் தாம் அறியாதவன் பின்னால் செல்வதில்லை. அவனைவிட்டு அவை விலகி ஓடும். ஏனென்றால் அவற்றிற்கு அவனது குரல் புரியாது” என்று
6 இயேசு மக்களிடம் இந்த உவமையைச் சொன்னார். இந்த உவமையின் உட்பொருளை அந்த மக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.
இயேசுவே நல்ல மேய்ப்பர்
7 எனவே இயேசு மேலும் சொன்னார், “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆடுகளுக்கு நானே வாசலாக இருக்கிறேன். 8 எனக்கு முன்னால் வந்தவர்கள் அனைவரும் கள்ளரும், கொள்ளைக்காரர்களுமாக இருந்தார்கள். ஆடுகள் அவர்களைக் கவனிக்கவில்லை. 9 நானே வாசல். என் மூலமாக நுழைகிறவனே மீட்கப்படுவான். அவன் உள்ளேயும் வெளியேயும் போய் மேய்ச்சலைக் கண்டடைவான். 10 திருடன் திருடுவதற்காகவே வருகிறான். அவன் ஆடுகளைக் கொல்லவும் அழிக்கவுமே செய்வான். ஆனால் நானோ ஜீவனைக் கொடுக்க வந்துள்ளேன். அந்த ஜீவன் பூரணமும், நன்மையுமானது.
11 “நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுப்பான். 12 கூலிக்காக ஆடுகளைக் கவனிக்கிறவன் மேய்ப்பனைவிட வித்தியாசமானவன். கூலிக்காரனுக்கு ஆடுகள் சொந்தமானவை அல்ல. ஆகையால் ஓநாய் வருவதைக் கண்டால் கூலிக்காரன் ஆடுகளை விட்டு, விட்டு ஓடிப் போவான். பிறகு ஓநாய்கள் ஆடுகளை கிழித்து கொன்று சிதறடிக்கும். 13 அந்த மனிதன் ஓடிவிடுகிறான். ஏனென்றால் அவன் கூலிக்காரன். அவனுக்கு ஆடுகளைப்பற்றிய அக்கறை இல்லை.
14-15 “ஆடுகளைப்பற்றி (மக்களைப்பற்றி) அக்கறை கொண்ட நல்ல மேய்ப்பன் நான். என் பிதா என்னை அறிந்திருப்பது போலவே நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவை அறிந்திருப்பது போலவே என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. நான் என் ஆடுகளுக்காக என் ஜீவனைக் கொடுக்கிறேன். 16 எனக்கு வேறு ஆடுகளும் உள்ளன. அவை இந்த மந்தையில் இல்லை. நான் அவற்றையும் அழைத்து வர வேண்டும். அவை என் குரலைக் கவனிக்கும். வருங்காலத்தில் எல்லாம் ஒரே மந்தையாகவும் ஒரே மேய்ப்பனாகவும் இருக்கும். 17 என் பிதா என்னை நேசிக்கிறார். ஏனென்றால் நான் என் ஜீவனைக் கொடுக்கிறேன். நான் என் ஜீவனைக் கொடுப்பதால் அதனை மீண்டும் பெறுவேன். 18 என்னிடமிருந்து என் ஜீவனை எவரும் பறிக்க முடியாது. நானே என் ஜீவனைத் தாராளமாகக் கொடுக்கிறேன். அதற்கான உரிமை எனக்குண்டு. அதுபோல் அதனைத் திரும்பப் பெறுகிற உரிமையும் எனக்குண்டு. இதைத்தான் பிதா எனக்குக் கட்டளையிட்டார்” என்றார்.
19 இயேசு சொன்ன இக்காரியங்களினால் மீண்டும் யூதர்கள் பிரிந்துபோயினர். 20 பல யூதர்கள் “பிசாசு அவனுக்குள் புகுந்துகொண்டது. அவன் பைத்தியமாக உளறுகிறான். அவன் கூறுவதை ஏன் கேட்கிறீர்கள்?” என்றனர்.
21 அதற்குப் பதிலாக வேறு சில யூதர்கள், “பிசாசு பிடித்து உளறுகிறவனால் இதுபோன்ற உண்மைகளைப் பேசமுடியுமா? குருடனின் கண்களைப் பிசாசு குணமடையச் செய்யுமா? செய்யாது” என்றனர்.
யூதர்கள் இயேசுவுக்கு எதிராகுதல்
22 அது மழைக் காலமாயிருந்தது. எருசலேமில் தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது. 23 இயேசு தேவாலயத்தில் சாலமோனின் மண்டபத்திலே இருந்தார்.
2008 by World Bible Translation Center