Old/New Testament
இஸ்ரவேலை ஓசெயா ஆளத்தொடங்கியது
17 யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் 12ஆம் ஆட்சியாண்டில் ஏலாவின் குமாரனாகிய ஓசெயா என்பவன் இஸ்ரவேலின் ராஜாவானான். இவன் ஒன்பது ஆண்டுகள் சமாரியாவில் இருந்து இஸ்ரவேலை அரசாண்டான். 2 கர்த்தரால் தவறு என்று குறிப்பிடப்பட்ட காரியங்களையே ஓசெயா செய்துவந்தான். ஆனால் இவன் இதற்கு முன் இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்களைப் போன்று அவ்வளவு கெட்டவனாக இல்லை.
3 அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் என்பவன் இவனுக்கு எதிராகப் போர்செய்ய வந்தான். ஓசெயா சல்மனாசாரின் சேவகன் ஆகி அவனுக்கு வரி செலுத்தி வந்தான்.
4 ஆனால், பிறகு ஓசெயா தனக்கு எதிராகச் சதி செய்வதை அசீரியா ராஜா அறிந்துகொண்டான். ஓசெயா எகிப்து ராஜாவுக்குத் தூதுவர்களை அனுப்பியிருந்தான். எகிப்து ராஜாவின் பெயர் சோ ஆகும். அந்த ஆண்டில், முன்னைய ஆண்டுகளை போன்று ஓசெயா சல்மனாசாருக்கு வரி செலுத்தவில்லை. அதனால் சல்மனாசார் ஓசெயாவைப் பிடித்து சிறையில்போட்டான்.
5 பிறகு அசீரிய ராஜா இஸ்ரவேல் முழுவதும் பயணம் செய்தான். அவன் சமாரியாவிற்கு வந்தான். அவன் அதனை மூன்று ஆண்டுகள் முற்றுகையிட்டான். 6 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாவது ஆட்சியாண்டில் அசீரிய ராஜா சமாரியாவைப் பிடித்தான். இஸ்ரவேலர்களைச் சிறை பிடித்து அசீரியாவுக்குக் கொண்டு போனான். அவன் அவர்களை கோசான் ஆற்று ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் நகரங்களிலும் குடிவைத்தான்.
7 இஸ்ரவேலர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்ததால் அவர்களுக்கு இவ்வாறு நடந்தது. கர்த்தர் தாமே இஸ்ரவேலர்களை எகிப்தின் பார்வோனிடமிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தார்! ஆனால் அவர்கள் வேறு தெய்வங்களை தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். 8 அவர்களுக்கு முன்பு (அந்நிலப்பகுதியில்) அங்கிருந்து கர்த்தர் துரத்தியிருந்த நாட்டினரின் பழக்கங்களை அவர்கள் பின்பற்றினார்கள். அவர்களும் தங்கள் ராஜாக்கள் செய்து கொண்டிருந்தவற்றையே (தீமை) செய்தனர். 9 இஸ்ரவேலர்கள் இரகசியமாக தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகக் காரியங்களைச் செய்தனர். அந்தக் காரியங்கள் தவறாயின.
இஸ்ரவேலர்கள் தங்களது சிறிய நகரங்கள் முதல் பெரிய கோட்டையமைந்த நகரங்கள் வரை அவர்களின் எல்லா நகரங்களிலும் மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயங்களைக் கட்டினார்கள். 10 இவர்கள் ஞாபகக் கற்களையும் அசெரியா தூண்களையும் ஒவ்வொரு மலையின் உச்சியிலும் ஒவ்வொரு பச்சைமரத்தடிகளிலும் உருவாக்கினார்கள். 11 இஸ்ரவேலர்கள் அங்கு நறுமணப் பொருட்களை எரித்து தொழுதுகொண்டனர். ஏற்கெனவே கர்த்தரால் அந்நாட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்ட நாட்டினரைப்போன்றே இவர்களும் செய்து வந்தனர். இஸ்ரவேலர்கள் தீயச் செயல்களைச் செய்துக்கொண்டிருந்தனர். அது கர்த்தரைக் கோபங்கொள்ள செய்தது. 12 கர்த்தர், “நீங்கள் இதனைச் செய்யக்கூடாது” என்று ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் அவர்கள் விக்கிரகங்களுக்கு சேவைச் செய்தனர்.
13 இஸ்ரவேலர்களையும் யூத ஜனங்களையும் ஒவ்வொரு தீர்க்கதரிசிகள் மூலமும் ஞானதிருஷ்டிக்காரர்கள் மூலமும் கர்த்தர் எச்சரித்து வந்தார். கர்த்தர், “நீங்கள் செய்யும் கெட்ட செயல்களில் இருந்து திரும்புங்கள். எனது கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்கள் முற்பிதாக்களுக்கு நான் கொடுத்த சட்டங்களைப் பின்பற்றுங்கள். இச்சட்டங்களை நான் உங்களுக்கு எனது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள் மூலம் கொடுத்து வந்தேன்” என்றார்.
14 ஆனால் ஜனங்கள் அதனைக் கவனிக்கவில்லை. அவர்கள் தம் முற்பிதாக்களைப் போலவே பிடிவாதமுள்ளவர்களாய் இருந்தனர். அவர்களின் முற்பிதாக்களும் தமது தேவனாகிய கர்த்தரை நம்பவில்லை. 15 ஜனங்கள் கர்த்தருடைய சட்டங்களை மறுத்தனர். தமது முற்பிதாக்களோடு கர்த்தர் செய்து கொண்ட உடன்படிக்கையும் மறுத்தனர். கர்த்தருடைய எச்சரிக்கைகளையும் அவர்கள் கவனிக்க மறுத்தனர். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களை தொழுதுக் கொண்டு பயனற்றுப்போனார்கள். அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள ஜனங்களைப் போன்று வாழ்ந்தனர். ஆனால் அது கர்த்தரால் விலக்கப்பட்ட வாழ்க்கையாய் இருந்தது.
16 ஜனங்கள் அவர்களது தேவனாகிய கர்த்தருடைய கற்பனைகளைப் பின்பற்றுவதை நிறுத்தினார்கள். அவர்கள் இரண்டு பொற்கன்றுக்குட்டிகளையும் உருவத் தூண்களை நாட்டி வானத்தில் உள்ள நட்சத்திரங்களையெல்லாம் தொழுதுகொண்டனர். பாகாலுக்கு சேவை செய்தனர். 17 நெருப்பில் தங்கள் குமாரர்களையும் குமாரத்திகளையும் அவர்கள் பலியாகக் கொடுத்தனர். எதிர்காலத்தை அறிந்துக் கொள்ள மந்திரங்களையும் சூனியங்களையும் பயன்படுத்தினார்கள். பாவம் என்று கர்த்தர் சொன்னவற்றுக்கு அவர்கள் தம்மைத்தாமே பலியாக்கிக்கொண்டு கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானார்கள். 18 எனவே இஸ்ரவேலில் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு அவர்களைத் தம் பார்வையிலிருந்து அப்புறப்படுத்தினார். யூதாவின் கோத்திரத்தைத் தவிர, வேறு எந்த இஸ்ரவேலர்களையும் கர்த்தர் அங்கு விட்டுவைக்கவில்லை.
யூத ஜனங்களும் குற்றவாளியானது
19 யூத ஜனங்களும் கூட தங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்களும் இஸ்ரவேல் ஜனங்களைப் போலவே வாழ்ந்தனர்.
20 இஸ்ரவேலின் வழிவந்தவர்கள் அனைவரையும் கர்த்தர் விலக்கினார். அவர்களுக்கு நிறைய துன்பங்களைக் கொடுத்தார். அவர்களது எதிரிகளால் அவர்களை அழியவிட்டார். இறுதியில், தமது பார்வையில் இருந்து தூர விலக்கினார். 21 கர்த்தர் இஸ்ரவேலை தாவீதின் (வீட்டைவிட்டுப்) குடும்பத்தை விட்டுப் பிரித்தார், நேபாத்தின் குமாரனான யெரொபெயாமை இஸ்ரவேலருக்கு ராஜாவாக்கினர். அப்போது அவன் இஸ்ரவேலரைக் கர்த்தரை விட்டு விலகவும் பெரும்பாவங்கள் செய்யவும் வைத்துவிட்டான். 22 எனவே இஸ்ரவேலர் யெரொபெயாமின் பாவங்களைப் பின்பற்றினார்கள். அப்பாவங்களைச் செய்துகொண்டிருக்காதபடி 23 தம்மை கர்த்தர் தமது பார்வையிலிருந்து அவர்களை விலக்கும்வரை தடுத்துக்கொள்ளவில்லை. ஏற்கெனவே இவ்வாறு நடக்கும் என்று கர்த்தர் கூறியிருந்தார். இதனைத் தனது தீர்க்கதரிசிகள் மூலம் சொல்லி வந்தார். எனவே, இஸ்ரவேலர்கள் தங்கள் நாட்டிலிருந்து அசீரியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இன்றுவரை அங்கேயே இருக்கின்றனர்.
சமாரியர்களின் தொடக்கம்
24 அசீரியாவின் ராஜா இஸ்ரவேலரை சமாரியாவிலிருந்து வெளியேற்றினான். பிறகு அவன் பாபிலோன், கூத்தா, ஆபா, ஆமாத், செப்பர்வாயிமிலும் ஆகிய நாடுகளிலிருந்து ஜனங்களை அங்கே குடியேற்றினான். அவர்கள் சமாரியாவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் வாழ்ந்தனர். 25 அவர்கள் சமாரியாவில் வாழத்தொடங்கியபோது, கர்த்தரை உயர்வாக மதிக்கவில்லை. எனவே, கர்த்தர் சிங்கங்களை அனுப்பி அவர்களைத் தாக்கினார். அவர்களில் சிலரை அச்சிங்கங்கள் கொன்றுபோட்டன. 26 சிலர் அசீரியாவின் ராஜாவிடம், “நீங்கள் வெளியிடங்களில் இருந்து கொண்டுவந்து சமாரியாவில் குடியேற்றிய ஜனங்கள் அந்நாட்டு தெய்வத்தின் சட்டங்களைத் தெரிந்துகொள்ளவில்லை. அதனால் அந்த தெய்வம் அவர்களைக் தாக்க சிங்கங்களை அனுப்புகிறார். அவை அந்நாட்டு தெய்வத்தின் சட்டங்களை அறியாதவர்களைக் கொன்றுபோடுகிறது” என்றார்கள்.
27 அதற்கு அசீரியாவின் ராஜா, “நீங்கள் சமாரியாவிலிருந்து சில ஆசாரியர்களை அழைத்து வந்தீர்கள் அல்லவா. சமாரியாவுக்கு நான் கைப்பற்றி வந்த ஆசாரியர்களில் ஒருவனைத் திருப்பியனுப்பி அவனை அங்கே வாழும்படி விடுங்கள், பிறகு அவன் ஜனங்களுக்கு அந்நாட்டின் தெய்வத்தின் சட்டங்களைக் கற்றுத்தருவான்” என்றான்.
28 எனவே அவ்வாறே சமாரியாவிலிருந்து அழைத்துப்போயிருந்த ஆசாரியர்களில் ஒருவனை பெத்தேல் என்னும் இடத்தில் வாழவைத்தனர். அவன் கர்த்தரை எவ்வாறு கனப்படுத்துவது என்று ஜனங்களுக்குக் கற்றுத்தந்தான்.
29 ஆனால் அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் தெய்வங்களை உருவாக்கினார்கள். அவற்றை அவர்கள் குடியேறிய நகரங்களில் சமாரியர் உருவாக்கிய மேடைகளின் கோவில்களில் வைத்தனர். 30 பாபிலோனிய ஜனங்கள் சுக்கோத் பெனோத் என்னும் பொய்த் தெய்வத்தையும், கூத்தின் ஜனங்கள் நேர்கால் என்னும் பொய்த் தெய்வத்தையும், ஆமாத்தின் ஜனங்கள் அசிமா என்னும் பொய்த் தெய்வத்தையும், 31 ஆவியர்கள் நிபேகாஸ், தர்தாக் என்னும் பொய்த் தெய்வங்களையும் உண்டாக்கினார்கள். செப்பர்வியர் செப்பர்வாயிமின் தெய்வங்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை நெருப்பில் தகன பலி கொடுத்துவந்தனர்.
32 அவர்கள் கர்த்தருக்கும் ஆராதனைச் செய்தார்கள். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு அவர்களுக்குள் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இந்த ஆசாரியர்கள் ஜனங்களுக்காக அவ்வாலயங்களில் பலிகொடுத்து வந்தனர். 33 அவர்கள் கர்த்தரை மதித்தார்கள். அதே சமயத்தில தமக்குச் சொந்தமான பொய்த் தெய்வங்களையும் சேவித்தார்கள். தம் சொந்த நாடுகளில் வழிபட்டு வந்த விதத்திலே தம் சொந்தத் தெய்வங்களை அங்கும் சேவித்து வந்தனர்.
34 இன்றும் அவர்கள் முன்பு போலவே வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கர்த்தரை கனப்படுத்துவதில்லை. அவர்கள் இஸ்ரவேலர்களின் விதிகளுக்கும் கற்பனைகளுக்கும் அடிபணிவதில்லை. இஸ்ரவேல் என்று பெயரிட்ட யாக்கோபுவின் ஜனங்களுக்குக் கற்பித்த சட்டத்திற்கும் கற்பனைகளுக்கும் அடிபணிவதில்லை. 35 இஸ்ரவேல் ஜனங்களோடு கர்த்தர் ஒரு உடன்படிக்கைச் செய்து கொண்டார். அவர் அவர்களிடம், “நீங்கள் அந்நிய தெய்வங்களை மதிக்கக் கூடாது. அதோடு அவற்றைத் தொழுதுகொள்ளவோ, அவற்றுக்கு சேவைசெய்யவோ பலிகள் செலுத்தவோ கூடாது, 36 ஆனால் நீங்கள் கர்த்தரைப் பின்பற்ற வேண்டும். தேவனாகிய கர்த்தரே உங்களை எகிப்திலிருந்து மீட்டார். உங்களைக் காப்பாற்ற கர்த்தர் தனது பெரிய வல்லமையைப் பயன்படுத்தினார். நீங்கள் கர்த்தரைத் தொழுதுகொண்டு அவருக்குப் பலிகள் தரவேண்டும். 37 நீங்கள் அவர் உங்களுக்காக எழுதிய விதிகளுக்கும், சட்டங்களுக்கும், போதனைகளுக்கும், கட்டளைகளுக்கும் அடிபணிய வேண்டும். எப்பொழுதும் இவற்றுக்கு அடிபணியவேண்டும். வேறு தெய்வங்களை மதிக்கக் கூடாது. 38 நான் உங்களோடு செய்த உடன்படிக்கையை மறக்கக்கூடாது. நீங்கள் பிற தெய்வங்களை மதிக்கக்கூடாது. 39 உங்கள் தேவனாகிய கர்த்தரை மட்டுமே நீங்கள் மதிக்க வேண்டும்! பிறகு அவர் உங்கள் பகைவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவார்” என்றார்.
40 ஆனால் இஸ்ரவேலர்கள் இதற்கு செவிசாய்க்கவில்லை. அவர்கள் அதற்கு முன்னால் செய்தவற்றையே மீண்டும் தொடர்ந்து செய்து வந்தனர். 41 எனவே, இப்போது வேறு நாட்டினர் கர்த்தரை மதிப்பதோடு தங்கள் தெய்வங்களையும் சேவித்து வருகின்றனர். அவர்களின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் இதனை தங்கள் முற்பிதாக்கள் செய்ததுபோலவே தொடர்ந்து இன்றுவரையிலும் கூட செய்து வருகின்றனர்.
யூதாவில் எசேக்கியா அரசாள தொடங்கியது
18 எசேக்கியா என்பவன் யூத ராஜா ஆகாஸின் குமாரன் ஆவான். இவன் ஆளத்தொடங்கும்போது இஸ்ரவேலில் ஏலாவின் குமாரன் ஓசெயா என்பவனின் மூன்றாம் ஆட்சியாண்டு நிகழ்ந்தது. 2 எசேக்கியா அரசாள வந்தபோது அவனுக்கு 25 வயது. இவன் எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் ஆபி ஆகும். இவள் சகரியாவின் மகளாவாள்.
3 எசேக்கியா தனது முற்பிதாவான தாவீதைப்போன்றே கர்த்தர் சொன்ன சரியான செயல்களைச் செய்துவந்தான்.
4 எசேக்கியா மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயத்தை அழித்தான். அவர்களின் ஞாபகக் கற்களையும்கூட உடைத்தான். அசெரியாவின் உருவத் தூண்களை வெட்டிப்போட்டான். மோசே செய்த வெண்கல பாம்பை உடைத்துப் போட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் அதற்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். இவ்வெண்கலப் பாம்பானது “நிகுஸ்தான்” என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அன்றுவரை இஸ்ரவேலர்கள் இந்த வெண்கலப் பாம்பை தொழுதுவந்தனர்.
5 அவன் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தான். யூதாவின் ராஜாக்கள் அனைவரிலும் எசேக்கியாவைப் போன்று அவனுக்கு முன்னும் அவனுக்குப் பின்னும் ஆட்கள் இல்லை. 6 எசேக்கியா கர்த்தருக்கு மிகவும் நம்பிக்கை உள்ளவனாக இருந்தான். இவன் கர்த்தரைப் பின்பற்றுவதை விடவில்லை. மோசேக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளைகளுக்கும் அவன் கீழ்ப்படிந்து வந்தான். 7 கர்த்தரும் எசேக்கியாவோடு இருந்தார். எசேக்கியா தான் செய்கிற அனைத்திலும் வெற்றிகரமாக இருந்தான்.
எசேக்கியா அசீரியாவின் ஆட்சித் தலையை விட்டு பிரிந்து, அசீரியாவின் ராஜாவுக்கு சேவை செய்வதை நிறுத்திவிட்டான். 8 எசேக்கியா பெலிஸ்தியர்களைத் தோற்கடித்தான். காசாவரையும் அதன் சுற்று வட்டாரங்களையும் வென்றான். பெலிஸ்தியரின் சிறியதும் பெரியதுமான (கோட்டையமைந்த) நகரங்களையெல்லாம் தோற்கடித்துவிட்டான்.
அசீரியர்கள் சமாரியாவைக் கைப்பற்றியது
9 அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவிற்கு எதிராகச் சண்டையிட்டான். அவனது படை நகரத்தைச் சுற்றிக் கொண்டது. யூதாவில் எசேக்கியாவின் நான்காம் ஆட்சியாண்டின்போது இது நடந்தது. (இது இஸ்ரவேல் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசேயாவின் ஏழாம் ஆட்சியாண்டு.) 10 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சல்மனாசார் சமாரியாவைக் கைப்பற்றினான். யூத ராஜாவாகிய எசேக்கியாவின் ஆறாம் ஆட்சியாண்டில் சமாரியாவை இவன் பிடித்துக்கொண்டான். (இது இஸ்ரவேல் ராஜாவாகிய ஓசேயாவின் ஒன்பதாம் ஆட்சியாண்டு) 11 அசீரியாவின் ராஜா இஸ்ரவேலர்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக் கொண்டுசென்றான். அவன் அவர்களை கோசான் ஆற்றோரங்களிலுள்ள ஆலாக், ஆபோர், மேதியரின் நகரங்கள் ஆகியவற்றில் குடியேற்றினான். 12 இஸ்ரவேலர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியாததால் இது இவ்வாறு நிகழ்ந்தது. அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கையை உடைத்தனர். அவர்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே கட்டளையிட்டவற்றுக்கு அடிபணியவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய உடன்படிக்கையைக் கேட்காததோடு, அதனை அவர்கள் கைக்கொள்ளவில்லை.
அசீரியா யூதாவைப் பிடிக்கத் தயாராகிறது
13 எசேக்கியாவின் 14வது ஆட்சியாண்டின்போது சனகெரிப் எனும் அசீரியாவின் ராஜா, யூதாவிலுள்ள கோட்டையமைந்த நகரங்கள் அனைத்திலும் தாக்குதல் நடத்தினான். இவன் எல்லா நகரங்களையும் தோற்கடித்தான். 14 பிறகு யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா, லாகீசிலிருந்த அசீரியாவின் ராஜாவுக்கு தூது அனுப்பினான். அவன், “நான் தவறு செய்துவிட்டேன். என்னை தனியாகவிட்டுவிடுங்கள். பிறகு உங்களுக்கு வேண்டியதை நான் தருவேன்” என்றான்.
பிறகு அசீரியாவின் ராஜா யூத ராஜாவாகிய எசேக்கியாவிடம் 300 தாலந்து வெள்ளியையும் 30 தாலந்து பொன்னையும் கட்டும்படி கூறினான். 15 கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனை கருவூலத்திலும் உள்ள வெள்ளி முழுவதையும் எசேக்கியா கொடுத்தான் 16 அப்பொழுது, கர்த்தருடைய ஆலய வாசலில் உள்ள கதவுகளிலும் நிலைகளிலும் தான் பதித்திருந்த பொன்னையும் எடுத்து அசீரிய ராஜாவுக்குக் கொடுத்தான்.
அசீரியாவின் ராஜா எருசலேமிற்கு ஆட்களை அனுப்புகிறான்
17 அசீரியாவின் ராஜா தனது மூன்று மிக முக்கியமான படைத்தளபதி உள்ளப் பெரும்படையோடு எருசலேமிற்கு எசேக்கியா ராஜாவிடம் அனுப்பினான். அவர்கள் லாகீசிலிருந்து எருசலேமிற்குச் சென்றனர். அவர்கள் வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்து வாய்க்காலில் நின்றனர். 18 அவர்கள் ராஜாவை வரவழைத்தார்கள். அப்பொழுது இல்க்கியாவின் குமாரனான எலிகாக்கீம் எனும் அரண்மனை விசாரிப்புக்காரனும் செப்னா என்னும் சம்பிரதியும் ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் எனும் கணக்கனும் அவர்களை சந்திக்கப் போனார்கள்.
19 தளபதிகளில் ஒருவன் (அவனுக்கு ரப்சாக்கே என்ற பட்டம் இருந்தது) அவர்களிடம், “மாபெரும் அசீரிய ராஜா சொன்னதை எசேக்கியாவிடம் கூறவும்” என்று சொன்னான். அவை வருமாறு:
“எதன் மேல் உன் நம்பிக்கையை வைத்திருக்கிறாய்? 20 நீ, வீணான வார்த்தைகளையே பேசுகிறாய். நீ, ‘போருக்கான ஆலோசனையும் பலமும் உண்டு’ என்று சொல்கிறாயா! நீ எனக்கு எதிராகக் கலகம்செய்ய, யார் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாய்? 21 உடைந்த நாணல் புல்லால் ஆன கைத்தடியை நம்புகிறாய். எகிப்து இத்தகைய கைத் தடியைப் போன்றது! ஒருவன் இக்கைத்தடியின் மீதே முழுக்கச் சாய்ந்தால், அதுவும் உடையும் கையைக் கிழித்து காயத்தை உருவாக்கும். எகிப்தும் தன்னை நம்புகிறவர்களுக்கு இவ்வாறே செய்து வருகிறது. 22 ஒருவேளை நீ, ‘எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம்’ என்று சொல்லலாம். ஆனால் எசேக்கியா கர்த்தருடைய மேடைகளையும் பலிபீடங்களையும் அகற்றினான். அவன் யூதாவையும் எருசலேமையும் நோக்கி, ‘எருசலேமில் உள்ள பலிபீடத்தின் முன் மட்டுமே ஆராதிக்க வேண்டும்’ என்று கூறினானே.
23 “இப்பொழுது எங்கள் எஜமானனான அசீரிய ராஜாவோடு இந்த ஒப்பந்தம் செய்துகொள். நான் 2,000 குதிரைகளை உன்னிடம் போதுமான சவாரி செய்பவர்கள் இருந்தால் கொடுப்பதாக உறுதி கூறுகிறேன். 24 உன்னால் எங்கள் எஜமானனின் அதிகாரிகளைக் கூட வெல்லமுடியாது! இரதங்களுக்கும் குதிரை வீரர்களுக்கும் நீங்கள் எகிப்தைச் சார்ந்து இருக்கவேண்டும்!
25 “நான் கர்த்தருடைய துணை இல்லாமல் எருசலேமை அழிக்க வரவில்லை. கர்த்தர் என்னிடம், ‘அந்த நாட்டிற்கு எதிராகப் போய் அதனை அழித்துவிடு!’ என்றார்” என்று சொன்னான்.
26 அப்போது இல்க்கியாவின் குமாரனான எலியாக், செப்னா, யோவாக் மூவரும் தளபதியான ரப்சாக்கேயைப் பார்த்து, “எங்களோடு தயவு செய்து ஆராமிக் மொழியில் பேசும். அந்த மொழிதான் எங்களுக்குப் புரியும். யூதமொழியில் எங்களோடு பேசவேண்டாம். ஏனெனில் சுவரிலுள்ள ஜனங்களின் காதுகளும் அவற்றைக் கேட்கும்!” என்றார்கள்.
27 ஆனால் ரப்சாக்கே அவர்களிடம், “எனது ஆண்டவன் உங்களிடமும் உங்கள் அரசரிடமும் மட்டும் பேச அனுப்பவில்லை. சுவருக்கு மேலேயுள்ள ஜனங்களுடனும் நான் பேசுகிறேன்! அவர்கள் உங்களோடு தங்கள் மலத்தைத் தின்று சிறுநீரைக் குடித்துக்கொள்வார்கள்!” என்றான்.
28 பிறகு தளபதி யூத மொழயில் மிகச் சத்தமாக,
“இச்செய்தியை கேளுங்கள்! அசீரியாவின் மிகப் பெரிய ராஜா உங்களுக்குச் செய்தி அனுப்பியுள்ளான். 29 ராஜா, ‘எசேக்கியா உங்களை முட்டாளாக்கும்படி விடாதீர்கள்! எனது பலத்திலிருந்து உங்களை அவனால் காப்பாற்ற முடியாது!’ என்கிறான். 30 அதுபோல் கர்த்தர் மீது நம்பிக்கையை அவன் ஏற்படுத்தும்படியும் விடாதீர்கள். ஏனென்றால் எசேக்கியா, ‘கர்த்தர் நம்மைக் காப்பாற்றுவார்! இந்நகரத்தை அசீரிய ராஜாவால் தோற்கடிக்க முடியாது!’ என்று கூறுகிறான்.
31 “ஆனால் அவன் கூறுவதைக் கேட்கவேண்டாம்! அசீரிய ராஜா: என்னோடு சமாதானமாக இருங்கள். என்னோடு வெளியே வாருங்கள். பிறகு ஒவ்வொருவரும் தம் சொந்த திராட்சைபழங்களைத் தின்னலாம், அத்திப்பழங்களைத் தின்னலாம், சொந்தக் கிணற்றிலுள்ளத் தண்ணீரைக் குடிக்கலாம். 32 நீங்கள் இதனை நான் உங்களை அழைத்துப்போய் இதுபோன்ற இன்னொரு நாட்டில் குடியேற்றும்வரை செய்யலாம். அந்த நிலம் தானியங்களும் திராட்சைரசமும் நிறைந்தது, அப்பமும் திராட்சைக் கொடிகளும் நிறைய ஒலிவமரமும் தேனும் நிறைந்தது. பிறகு நீங்கள் மரிக்க வேண்டாம், வாழலாம்.
“எசேக்கியா கூறுவதை கேளாதீர்கள். அவன் உங்கள் மனதை மாற்ற முயல்கிறான். அவனோ, ‘கர்த்தர் நம்மைக் காப்பார்’ என்கிறான். 33 இது போல் வேறு எந்த நாட்டிலாவது அங்குள்ள தேவர்கள் அந்த நாட்டை அசீரிய ராஜாவிடமிருந்து காப்பாற்றி இருக்கிறதா? இல்லையே! 34 ஆமாத் மற்றும் அர்பாத் எனும் தெய்வங்கள் என்ன ஆனார்கள்? செப்பர்வாயிம், ஏனா, ஈவாப் நகரங்களின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என்றைக்காவது காப்பாற்றியதுண்டா? இல்லை! 35 வேறு எந்த நாட்டிலேனும் வேறு எந்த தெய்வங்களும் என்னிடமிருந்து அந்நாட்டைக் காப்பற்றியதுண்டா? இல்லை! கர்த்தர் என்னிடமிருந்து எருசலேமைக் காப்பாற்றுவாரா? காப்பாற்ற முடியாது” என்றான்.
36 ஆனால் ஜனங்கள் அமைதியாக இருந்தனர். அவர்கள் தளபதிக்கு ஒரு வார்த்தை கூட கூறவில்லை. ஏனென்றால் ராஜாவாகிய எசேக்கியா அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். அவன், “நீங்கள் அவனுக்கு எதையும் சொல்லவேண்டாம்” என்று கூறி இருந்தான்.
37 இல்க்கியா என்பவனின் குமாரனான எலியாக்கீம், (ராஜாவின் அரண்மனைக்குப் பொறுப்பானவன் எலியாக்கீம்.) செப்னா (செயலாளர்) ஆகாப் என்பவனின் குமாரன் யோவாக் (பதிவேடுகள் பாதுகாப்பாளர்) எல்லாரும் எசேக்கியாவிடம் வந்தார்கள். அவர்களின் ஆடைகள் கிழிந்தவை. (அவர்களின் துக்கத்தையும் கவலையையும் காட்டியது) ஆசாரியன் தளபதி சொன்னதையெல்லாம் எசேக்கியாவிடம் அவர்கள் சொன்னார்கள்.
19 இந்த உலகத்துக்கு ஒளி (நன்மை) வந்திருக்கிறது. ஆனால் அந்த ஒளியை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் இருளை (பாவத்தை) விரும்பினார்கள். ஏனென்றால் அவர்கள் தீய செயல்களைச் செய்துகொண்டிருந்தார்கள். இந்த உண்மையை வைத்தே அவர்கள் நியாயம் விசாரிக்கப்படுகிறார்கள். 20 தீமைகளைச் செய்கிற ஒவ்வொரு மனிதனும் ஒளியை வெறுக்கிறான். அவன் வெளிச்சத்துக்குள் வரமாட்டான். ஏனென்றால் ஒளி அவன் செய்த தீமைகளை வெளிப்படுத்திக்காட்டும். 21 ஆனால் உண்மை வழியைப் பின்தொடர்ந்து செல்கிறவர்கள் ஒளியிடம் வந்தடைகிறார்கள். பிறகு, அந்த ஒளி அவர்கள் செய்த செயல்கள் தேவன் மூலமாகச் செய்த நற்செயல்கள் எனக் காட்டும்[a] என்று இயேசு கூறினார்.”
இயேசுவும், யோவான் ஸ்நானகனும்
22 அதற்குப் பிறகு, இயேசுவும் அவரது சீஷர்களும் யூதேயா பகுதிக்குப் போனார்கள். அங்கு இயேசு தன் சீஷர்களோடு தங்கி ஞானஸ்நானம் கொடுத்தார். 23 யோவானும் அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான். அயினோன், சாலிம் அருகில் உள்ளது. அங்கே தண்ணீர் மிகுதியாக இருந்ததால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான். மக்கள் அவனிடம் போய் ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 (இது யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு நிகழ்ந்தது).
25 யோவானின் சீஷர்களுள் சிலர், யூதரோடு விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மத சம்பந்தமான முறையைப்பற்றியே விவாதித்தனர். 26 ஆகையால் யோவானிடம் அவர்கள் வந்தனர். “போதகரே! யோர்தான் நதிக்கு அக்கரையில் ஒருவர் உம்மோடு இருந்தாரே, நினைவிருக்கிறதா? நீங்கள் அந்த மனிதரைப்பற்றியும் மக்களிடம் சொல்லியிருக்கிறீர்கள். அவர் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் ஏராளமான மக்கள் சென்றுகொண்டிருக்கின்றனர்” என்று கூறினர்.
27 “தேவன் எதை ஒருவனுக்குக் கொடுக்கிறாரோ, அதையே ஒரு மனிதன் பெற்றுக்கொள்ள முடியும். 28 ‘நான் கிறிஸ்து அல்ல’ என்று நானே கூறியதையும் நீங்கள் சோதித்து அறிந்திருக்கிறீர்கள். ‘அவருக்கான பாதையைச் செம்மை செய்வதற்காகவே தேவன் என்னை அனுப்பியிருக்கிறார்.’ 29 மணமகனுக்கே மணமகள் உரியவளாகிறாள். மணமகனுக்கு உதவி செய்கிற மாப்பிள்ளையின் தோழன், மணமகனின் வரவைக் கவனித்து எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறான். மணமகனின் சத்தத்தைக் கேட்டு அவன் மிகவும் மகிழ்கிறான். நானும் அதே மகிழ்ச்சியை அடைகிறேன். இதுவே எனது மகிழ்ச்சிகரமான நேரம். 30 இயேசு மேலும் பெருமை பெறவேண்டும். எனது முக்கியத்துவம் குறைந்துவிடவேண்டும்.
பரலோகத்திலிருந்து வந்தவர்
31 “பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசு மற்ற எல்லாரையும்விடப் பெரியவர். பூமியில் இருந்து வந்தவன் பூமியைச் சார்ந்தவன். அவன் பூமியில் உள்ளவற்றைப்பற்றி மட்டுமே பேசுவான். ஆனால் பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசுவோ மற்ற எல்லாரையும்விட உயர்ந்தவர். 32 அவர் எதைக் கண்டாரோ, கேட்டாரோ அதையே கூறுகிறார். ஆனால் எவரும் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. 33 அவர் சொல்வதை எவனொருவன் ஒப்புக்கொள்கிறானோ அவன், தேவன் உண்மையாய் இருக்கிறார் என்று நிரூபிக்கிறான். 34 தேவன் இயேசுவை அனுப்பினார். அவர் தேவன் சொன்னதைச் சொல்கிறார். தேவன் அவருக்கு ஆவியை நிரம்பக் கொடுத்திருக்கிறார். 35 பிதாவானவர் தன் குமாரனை நேசிக்கிறார். அவர் தன் குமாரனுக்கு அனைத்தின் மேலும் அதிகாரம் கொடுத்திருக்கிறார். 36 இந்தக் குமாரனை நம்புகிற எவரும் நித்திய ஜீவனைப் பெறுவர். ஆனால் அவருக்குக் கீழ்ப்படிய மறுக்கிற எவரும் அந்த வாழ்வை ஒருபோதும் பெற முடியாது. தேவனுடைய கோபம் அவர்கள் மேல் இருக்கும்” என்று யோவான் அவர்களுக்குக் கூறினான்.
2008 by World Bible Translation Center