Old/New Testament
யூதர்களை அழிப்பதற்கான ஆமானின் திட்டம்
3 இவை நிகழ்ந்த பிறகு, அகாஸ்வேரு ராஜா ஆமானைக் கௌரவித்தான். ஆமான், அம்மெதாத்தாவின் குமாரன். இவன் ஆகாகியன். ராஜா ஆமானுக்குப் பதவி உயர்வு கொடுத்து மற்ற அதிகாரிகளைவிட உயர் அதிகாரியாகச் செய்தான். 2 ராஜாவின் வாசலில் உள்ள அனைத்து அதிகாரிகளும், ஆமானுக்குப் பணிந்து வணங்கி மரியாதைச் செய்தனர். அவ்வாறுதான் செய்யவேண்டும் என்று ராஜா அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். ஆனால் மொர்தெகாய் அவனுக்குப் பணிந்து மரியாதை அளிக்க மறுத்துவிட்டான். 3 பிறகு, அரச வாசலில் உள்ள ராஜாவின் அதிகாரிகள் அவனிடம், “நீ ஏன் அரச கட்டளைபடி ஆமானுக்குப் பணிந்து கீழ்ப்படிவதில்லை?” என்று கேட்டனர்.
4 நாளுக்கு நாள் அந்த அரச அதிகாரிகள் மொர்தெகாயிடம் பேசினார்கள். ஆனால் மொர்தெகாய் கட்டளையின்படி ஆமானை வணங்க மறுத்துவிட்டான். எனவே, அந்த அதிகாரிகள் இதைப்பற்றி ஆமானிடம் சொன்னார்கள். ஆமான், மொர்தெகாய் விஷயத்தில் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய அவர்கள் விரும்பினார்கள். மொர்தெகாய் அவர்களிடம் நான் ஒரு யூதன் என்று சொல்லியிருந்தான். 5 மொர்தெகாய் தனக்கு பணிந்து வணங்குவதில்லை என்பதையும், மரியாதை கொடுப்பதில்லை என்பதையும், ஆமான் அறிந்தபோது அவன் மிகவும் கோபங்கொண்டான். 6 மொர்தெகாய் ஒரு யூதன் என்பதை ஆமான் அறிந்திருந்தான். ஆனால் அவன் மொர்தெகாயை மட்டும் கொன்றுவிடுவதில் திருப்தியடையவில்லை. ஆமான், மொர்தெகாயின் ஆட்களையும், அகாஸ்வேருவின் இராஜ்ஜியம் முழுவதுமுள்ள யூதர்களையும் அழிக்க ஒரு வழிவேண்டும் என்று விரும்பினான்.
7 அகாஸ்வேருவின் பன்னிரண்டாவது ஆட்சியாண்டின் முதல் மாதமான நிசானில் ஆமான் ஒரு சிறப்பு மாதத்தையும், நாளையும் சீட்டு குலுக்கி எடுத்தான். பன்னிரண்டாவது மாதமான ஆதார் தேர்ந்தெடுக்கப்பட்டது. (அக்காலத்தில் சீட்டுக் குலுக்கல் “பூர்” என்று அழைக்கப்பட்டது). 8 பிறகு, ஆமான் அகாஸ்வேரு ராஜாவிடம் வந்தான். அவன், “அகாஸ்வேரு ராஜாவே, உமது ஆட்சியிலுள்ள நாடுகளில் எல்லாம் ஒருவித ஜனங்கள் சிதறிக்கிடக்கிறார்கள். அவர்கள் மற்ற ஜனங்களிடமிருந்து தங்களைத் தனியே பிரித்து வைத்துள்ளனர். அவர்களது பழக்கவழக்கங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாக உள்ளன. அவர்கள் ராஜாவின் சட்டங்களுக்கு கீழ்ப்படிவதில்லை. அவர்கள் உமது அரசாட்சியில் வாழ அனுமதிப்பது ராஜாவாகிய உமக்கு நல்லதல்ல.
9 “இது ராஜாவுக்கு விருப்பமானதாக இருந்தால், நான் ஒரு கருத்து சொல்கிறேன். அந்த ஜனங்களை அழிப்பதற்கு எனக்கு ஒரு கட்டளைகொடும். நான் 10,000 வெள்ளிக் காசுகளை ராஜாவின் பொக்கிஷதாரரிடம் செலுத்திவிடுகிறேன். அப்பணத்தை இவ்வேலையைச் செய்பவர்களுக்குக் கொடுக்கலாம்” என்றான்.
10 எனவே, ராஜா தனது விரலில் உள்ள முத்திரை மோதிரத்தைக் கழற்றி ஆமானிடம் கொடுத்தான். ஆமான் ஆகாகியனான அம்மெதாத்தாவின் குமாரன். ஆமான் யூதர்களின் எதிரி. 11 பிறகு ராஜா ஆமானிடம், “பணத்தை வைத்துக்கொள். அந்த ஜனங்களை என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்” என்றான்.
12 பிறகு முதல் மாதத்தின் 13வது நாள் ராஜாவின் செயலாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள மொழிகளில் ஆமானின் கட்டளைகளை எழுதினார்கள். அவர்கள் ராஜாவின் நாட்டு அதிகாரிகளுக்கும், பல்வேறு மாகாண ஆளுநர்களுக்கும், பல்வகை ஜனங்களின் தலைவர்களுக்கும் எழுதினார்கள். ராஜா அகாஸ்வேருவின் அதிகாரத்தின்படியும், அவனது சொந்த மோதிரத்தின் முத்திரையிட்டும் அவர்கள் கடிதம் எழுதினார்கள்.
13 தூதுவர்கள் ராஜாவின் அனைத்து மாகாணங்களுக்கும் கடிதங்களைக் கொண்டுசென்றனர். அக்கடிதத்தில் யூதர்கள் அனைவரையும் முழுமையாக அழிக்கவும், கொல்லவும் ராஜாவின் கட்டளை இருந்தது. அதாவது இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், சிறுபிள்ளைகள் அனைவரையும் அழிக்க வேண்டும். ஒரே நாளில் யூதர்கள் அனைவரையும் கொல்லவேண்டும் என்று கட்டளை இருந்தது. அந்நாளும் ஆதார் எனும் பன்னிரண்டாவது மாதத்தின் 13வது நாளாக இருக்கவேண்டும். யூதர்களுக்குரிய உடமைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளை இருந்தது.
14 கடிதத்தின் ஒரு பிரதி சட்டமாக்கப்படுவதற்குக் கொடுக்கப்பட்டு, அவனது ஆட்சிக்குள்ளிருந்த அனைத்து மாகாணங்களிலும் சட்டமாக்கப்பட்டது. அனைத்து ஜனங்களுக்கும் இது அறிவிக்கப்பட்டது. பிறகு அந்நாளுக்காக ஜனங்கள் அனைவரும் தயாராக இருப்பார்கள். 15 ராஜாவின் கட்டளையோடு தூதுவர்கள் விரைந்துக்கொண்டிருந்தனர். அந்த கட்டளை தலைநகரமான சூசானில் கொடுக்கப்பட்டது. ராஜாவும், ஆமானும் குடித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் சூசான் நகரம் குழம்பிக்கொண்டிருந்தது.
மொர்தெகாய் உதவிக்காக எஸ்தரை தூண்டுகிறான்
4 நடந்த அனைத்தையும் மொர்தெகாய் கேள்விப்பட்டான். யூதர்களுக்கு எதிரான ராஜாவின் கட்டளையைக் கேட்டதும் அவன் தனது ஆடையைக் கிழித்தான். துக்கத்திற்கு அடையாளமான ஆடையை அணிந்து தலையில் சாம்பலை போட்டுக்கொண்டான். பிறகு அவன் நகரத்திற்குள் உரத்தக்குரலில் அழுதவண்ணம் சென்றான். 2 ஆனால் மொர்தெகாய் ராஜாவின் வாசல் வரைதான் போனான். துக்கத்திற்குரிய ஆடையை அணிந்திருந்த எவரையும் வாசலில் நுழைய அனுமதிக்கமாட்டார்கள். 3 எல்லா நாடுகளிலும் ராஜாவின் கட்டளை போய்ச் சேர்ந்தது. அதனால் யூதர்களிடம் அழுகையும், துக்கமும், அதிகரித்தன. அவர்கள் உரத்த அழுகையுடன் உபவாசத்தை கடைப்பிடித்தனர். பல யூதர்கள் துக்கத்திற்கான ஆடையை அணிந்தும் தலைகளில் சாம்பலைப் போட்டுக்கொண்டும் தரையில் விழுந்துகிடந்தனர்.
4 எஸ்தரின் பெண் வேலைக்காரிகளும், பிரதானிகளும் வந்து அவளிடம் மொர்தெகாயைப் பற்றிச் சொன்னார்கள். அது எஸ்தர் இராணியைக் கலங்கவும் துக்கப்படவும் வைத்தது. அவள் அவனுக்கு துக்கத்திற்குரிய ஆடையை எடுத்துவிட்டு அணிந்துகொள்ள வேறு ஆடைகளைக் கொடுத்து அனுப்பினாள். ஆனால் அவன் அந்த ஆடைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. 5 பிறகு, எஸ்தர் ஆத்தாகை அழைத்தாள். ஆத்தாகு ராஜாவின் பிரதானிகளுள் ஒருவன். அவன் அவளுக்கு சேவைச் செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். மொர்தெகாயை அழவைத்து துக்கப்படுத்தியது எதுவென அறிந்து வரும்படி அவள் அவனுக்கு கட்டளையிட்டாள். 6 எனவே, அவன் வெளியே போய் வாசலுக்கு முன்னால் திறந்த வெளியில் மொர்தெகாய் இருக்கும் இடத்தை அடைந்தான். 7 பிறகு, மொர்தெகாய் ஆத்தாகிடம் அவனுக்கு ஏற்பட்டதைப்பற்றி சொன்னான். அதோடு அவன் ஆத்தாகிடம் ஆமான் யூதர்களைக் கொல்வதற்கு எவ்வளவு பணம் அரசின் பொக்கிஷ சாலைக்குக் கொடுப்பதாக வாக்களித்துள்ளான் என்பதையும் சொன்னான். 8 மொர்தெகாய் ஆத்தாகிடம் யூதர்களைக் கொல்வதற்குரிய ராஜாவின் கட்டளைப் பிரதிகளையும் கொடுத்தான். அக்கட்டளை சூசான் தலைநகரம் முழுவதும் போயிருந்தது. அவன் ஆத்தாகிடம், அதனை எஸ்தருக்குக் காட்டி எல்லாவற்றையும் சொல்லும்படி கூறினான். எஸ்தர் ராஜாவிடம் சென்று, ராஜாவிடம் மொர்தெகாய்க்கும், அவளது ஜனங்களுக்கும் இரக்கம் காட்டிக் காக்குமாறு வேண்டிக்கொள்ளச் சொன்னான்.
9 ஆத்தாகு எஸ்தரிடம் போய் மொர்தெகாய் சொன்னவற்றையெல்லாம் சொன்னான்.
10 பிறகு எஸ்தர் ஆத்தாகிடம், மொர்தெகாயிடம் சொல்லுமாறு சொல்லியனுப்பினது இதுவே: 11 “மொர்தெகாய் ராஜாவின் தலைவர்கள் அனைவரும் ராஜாவின் நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் இதனை அறிவார்கள். ராஜாவிடம் ஒரு சட்டம் உள்ளது. அதாவது, ஒரு ஆணோ, பெண்ணோ அழைக்கப்படாமல் ராஜாவிடம் போகக்கூடாது. போனால், அவன் மரணத்திற்குள்ளாவான். அந்த ஆள் மீது ராஜாவின் பொற் செங்கோல் நீட்டப்பட்டால் ஒழிய அவன் அச்சட்டத்திலிருந்து தப்பமுடியாது. ராஜா அவ்வாறு செய்தால், பிறகு அவனது உயிர் காப்பாற்றப்படும். 30 நாட்களாக நான் ராஜாவைப் போய் பார்க்க அழைக்கப்படவில்லை” என்று சொல்லச்சொன்னாள்.
12-13 எஸ்தரின் செய்தி மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டது. மொர்தெகாய் அவளது செய்தியைப் படித்து விட்டு, அவன் அவளுக்குப் பதில் அனுப்பினான். அதில், “எஸ்தர், நீ ராஜாவின் அரண்மனையில் வாழ்வதால் யூத பெண்ணாகிய நீ மட்டும் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்காதே. 14 நீ இப்போது அமைதியாக இருந்தால், யூதர்களுக்கான உதவியும் விடுதலையும் வேறு இடத்திலிருந்து வரும், ஆனால் நீயும் உனது தந்தையின் குடும்பமும் அழியும். யாருக்குத் தெரியும்? ஒருவேளை நீ இப்படிப்பட்ட காலத்தில் உதவுவதற்காகவே இராணியாகத் தோந்தெடுக்கப்பட்டிருக்கலாம்” என்று எழுதியிருந்தான்.
15-16 பிறகு, எஸ்தர் மொர்தெகாய்க்கு இந்த பதிலை அனுப்பினாள்: “மொர்தெகாய் சூசானிலுள்ள எல்லா யூதர்களையும் ஒன்றுசேர்த்து எனக்காக உபவாசம் இருங்கள். மூன்று நாட்கள் இரவும் பகலும் உண்ணாமலும் குடிக்காமலும் இருங்கள். நானும் உங்களைப் போன்றே உபவாசம் இருப்பேன். என் வேலைக்காரப் பெண்களும் உபவாசம் இருப்பார்கள். நான் உபவாசம் இருந்த பிறகு ராஜாவிடம் செல்வேன். ராஜா அழைக்காமல் போவது என்பது சட்டத்திற்கு எதிரானது என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் எவ்வாறாகிலும் செய்வேன். நான் மரித்தால் மரிக்கிறேன்.”
17 எனவே மொர்தெகாய் வெளியே போனான். அவன் எஸ்தர் சொன்னபடி எல்லாவற்றையும் செய்தான்.
எஸ்தர் ராஜாவிடம் பேசுகிறாள்
5 மூன்றாவது நாள், எஸ்தர் அவளுக்குரிய அரச உடைகளை அணிந்துக்கொண்டாள். பிறகு, அவள் ராஜாவின் அரண்மனை உட்பகுதிக்குள் போய் நின்றாள். அப்பகுதி ராஜாவின் சபைக்கு முன்னால் இருந்தது. ராஜா தனது சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் அரண்மனை வாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் இருந்தான். 2 பிறகு, ராஜா எஸ்தர் இராணி முற்றத்தில் நிற்பதைப் பார்த்தான். அவன் அவளைப் பார்த்தபோது மகிழ்ச்சிடைந்தான். அதனால் அவன் அவளை நோக்கி தனது கையிலுள்ள செங்கோலை நீட்டினான். எனவே, எஸ்தர் அந்த அறைக்குள் சென்று ராஜா அருகில் போனாள். பிறகு அவள் ராஜாவின் பொற் செங்கோலின் முனையைத் தொட்டாள்.
3 பிறகு ராஜா, “எஸ்தர் இராணியே, நீ விரும்புகிறது என்ன? நீ என்னிடம் என்ன வேண்டுமென கேட்கிறாய்? நீ என்ன கேட்டாலும் நான் உனக்குத் தருவேன். எனது பாதி இராஜ்யம் கேட்டாலும் தருவேன்” என்றான்.
4 அதற்கு எஸ்தர், “நான் உங்களுக்கும் ஆமானுக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்று அந்த விருந்துக்கு நீங்களும் ஆமானும் வரமுடியுமா?” என்று கேட்டாள்.
5 பிறகு ராஜா, “ஆமானை விரைவாக அழைத்து வா. எனவே எஸ்தர் என்ன கேட்கிறாளோ, அதன்படிச் செய்வோம்” என்றான்.
எனவே, ராஜாவும், ஆமானும் எஸ்தர் தயார் செய்த விருந்துக்குப் போனார்கள். 6 அவர்கள் திராட்சைரசம் குடித்துக்கொண்டிருக்கும்போது ராஜா மீண்டும் எஸ்தரிடம், “இப்போது எஸ்தரே, என்னிடம் நீ என்ன கேட்க விருப்புகிறாய்? நான் அதனை உனக்கு கொடுப்பேன். நீ என்ன விரும்புகிறாய்? நீ என்ன விரும்பினாலும் அதனை நான் உனக்குக் கொடுப்பேன். நான் எனது பாதி இராஜ்யம்வரை கொடுப்பேன்.” என்றான். 7 எஸ்தர், “இதுதான் நான் உம்மிடம் கேட்க விரும்பியது. 8 ராஜா, எனக்கு ஆதரவு கொடுத்தால், ராஜா என்னிடம் தயவாக இருந்தால், ராஜாவும் ஆமானும் நாளையும் வரவேண்டும். நாளை ராஜாவுக்கும், ஆமானுக்கும் இன்னொரு விருந்து ஏற்பாடு செய்வேன். அப்பொழுது, நான் உண்மையில் என்ன விரும்புகிறேன் என்று சொல்வேன்” எனப் பதிலுரைத்தாள்.
மொர்தெகாய் மீது ஆமானின் கோபம்
9 அவனது வீட்டைவிட்டு ஆமான் மிகவும் மகிழ்ச்சியோடு சென்றான். அவன் நல்ல மனநிலையில் இருந்தான். ஆனால் அவன் மொர்தெகாயை ராஜாவின் வாசலில் பார்த்ததும் அவனுக்கு மொர்தெகாய் மீது கோபம் வந்தது. ஆமான் மொர்தெகாய் மீது மிகுந்த கோபமடைந்தான். ஏனென்றால், அவன் ஆமான் நடந்து வரும்போது எவ்வித மரியாதையையும் தரவில்லை. மொர்தெகாய் ஆமானைக் கண்டு பயப்படவில்லை. அது அவனை மேலும் கோபத்திற்குள்ளாக்கிற்று. 10 ஆனால் ஆமான் தனது கோபத்தைக் அடக்கிக்கொண்டு வீட்டிற்குப் போனான். பிறகு ஆமான் தனது நண்பர்களையும், மனைவி சிரேஷையும் அழைத்தான். 11 தான் எவ்வளவு செல்வமுடையவன் என்ற பெருமையோடு பேச ஆரம்பித்தான். அவன் தனது பல குமாரர்களைப் பற்றியும் ராஜா எவ்வழியில் எல்லாம் தன்னை பெருமைபடுத்துக்கிறான் என்பதைப் பற்றியும் பெருமையோடு பேசினான். மற்ற அதிகாரிகளைவிட தன்னை எவ்வளவு உயர்ந்த பதவியில் வைத்திருக்கிறான் என்பதையும் பெருமையோடு பேசினான். 12 ஆமான், “அதுமட்டுமல்ல, இராணி எஸ்தர் ராஜாவுக்குக் கொடுத்த விருந்தில் என்னை மட்டுமே அழைத்திருந்தாள். அவள் நாளை மீண்டும் விருந்துக்கு வருமாறு அழைத்தாள். 13 ஆனால் இவை யாவும் என்னை மகிழ்ச்சியடைய செய்யவில்லை. அந்த யூதனான மொர்தெகாய் ராஜாவின் வாசலில் உட்கார்ந்திருப்பதைக் காணும்போது உண்மையில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என்று சொன்னான்.
14 பிறகு ஆமானின் மனைவி சிரேஷ் மற்றும் நண்பர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அவர்கள், “யாராவது ஒருவரை, அவனைத் தூக்கிலிட கம்பம் கட்டச் சொல். அதனை 75 அடி உயரமுள்ளதாகச் செய். பிறகு, காலையில் மொர்தெகாயை அதில் தூக்கில் போடுமாறு ராஜாவை கேள். பிறகு, ராஜாவோடு விருந்துக்குப் போ. அப்போது உன்னால் மகிழ்ச்சியோடு இருக்கமுடியும்” என்றனர்.
ஆமான் இக்கருத்தை விரும்பினான். எனவே, அவன் சிலரிடம் தூக்கு மரக் கம்பம் செய்யுமாறு கட்டளையிட்டான்.
22 அவர்கள் சிறைக்குப் போனபோது, அங்கு அப்போஸ்தலர்களைக் காணவில்லை. எனவே அவர்கள் திரும்பிச் சென்று, யூத அதிகாரிகளுக்கு அதனை அறிவித்தனர். 23 அம்மனிதர்கள், “சிறை பூட்டித் தாளிடப்பட்டிருந்தது. சிறைவாயில்களருகே காவலர்கள் நின்றனர். ஆனால் நாங்கள் கதவுகளைத் திறந்தபோது சிறையில் யாருமில்லை!” என்றனர். 24 தேவாலயத்துக் காவலரின் தலைவனும் முக்கிய போதகர்களும் இதனைக் கேட்டனர். அவர்கள் குழப்பமுற்றனர். அவர்கள் ஆச்சரியமுற்று, “இதனால் என்ன நடக்கப்போகிறதோ?” என்றனர்.
25 பின் மற்றொரு மனிதன் வந்து, “கேளுங்கள்! நீங்கள் சிறையில் அடைத்த மனிதர்கள் தேவாலயத்துக்குள் நிற்கின்றனர். அவர்கள் மக்களுக்கு உபதேசித்துக்கொண்டிருக்கின்றனர்” என்று அவர்களுக்குக் கூறினான். 26 காவலர் தலைவனும், காவலரும் வெளியே வந்து அப்போஸ்தலரை அழைத்துச் சென்றனர். மக்களுக்குப் பயந்ததால் வீரர்கள் தங்கள் வலிமையைப் பயன்படுத்தவில்லை. மக்கள் சினம் கொண்டு கற்களாலெறிந்து அவர்களைக் கொல்லக்கூடுமென்று வீரர்கள் பயந்தனர்.
27 வீரர்கள், கூட்டத்திற்கு அப்போஸ்தலரை அழைத்து வந்து, யூதத் தலைவர்களுக்கு முன்பு அவர்களை நிற்கும்படியாகச் செய்தனர். தலைமை ஆசாரியன் அப்போஸ்தலர்களை விசாரித்தான். 28 அவன், “இந்த மனிதனைக் குறித்து உபதேசிக்கக் கூடாது என உங்களுக்கு ஏற்கெனவே நாங்கள் உறுதியாகக் கட்டளை இட்டிருக்கவில்லையா? ஆனால் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? எருசலேமை உங்கள் உபதேசங்களால் நிரப்பியுள்ளீர்கள். இந்த மனிதனின் மரணத்திற்கு எங்களைக் காரணர்களாக ஆக்குவதற்கு நீங்கள் முயல்கிறீர்கள்” என்றான்.
29 பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் பதிலாக “நாங்கள் தேவனுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும். உங்களுக்கு அல்ல! 30 நீங்கள் இயேசுவைக் கொன்றீர்கள். அவரைச் சிலுவையில் தொங்கும்படியாகச் செய்தீர்கள். ஆனால் நமது முன்னோரின் கர்த்தராகிய நம் தேவன் இயேசுவை மரணத்தினின்று எழுப்பினார்! 31 தேவன் இயேசுவை உயர்த்தித் தனது வலது பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். இயேசுவை எங்கள் தலைவராகவும் இரட்சகராகவும் ஆக்கினார். எல்லா யூதர்களும் தங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றும்படியாக தேவன் இதைச் செய்தார். இப்போது தேவன் அவர்கள் பாவங்களை மன்னிக்க முடியும். 32 இக்காரியங்கள் அனைத்தும் நடந்ததைக் கண்டோம். இவை அனைத்தும் உண்மையென்று நாங்கள் கூறமுடியும். பரிசுத்த ஆவியானவரும் இவையனைத்தும் உண்மையென்று நிலை நாட்டுகிறார். தேவன் அவருக்குக் கீழ்ப்படிகிற அனைவருக்கும் பரிசுத்த ஆவியை அளித்திருக்கிறார்” என்று கூறினர்.
33 யூதத் தலைவர்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டனர். அவர்கள் மிகுந்த சினம் கொண்டனர். அப்போஸ்தலரைக் கொல்வதற்கு ஒரு வழிகாண அவர்கள் திட்டமிட ஆரம்பித்தனர். 34 கூட்டத்திலிருந்த பரிசேயரில் ஒருவர் எழுந்தார். அவர் பெயர் கமாலியேல். அவர் வேதபாரகராக இருந்தார். எல்லா மக்களும் அவரை மதித்தனர். சில நிமிடங்கள் அப்போஸ்தலரை வெளியே அனுப்புமாறு அவர் கூறினார். 35 பின் அவர் அங்கிருந்தோரை நோக்கி, “இஸ்ரவேலின் மனிதர்களே, இம்மனிதருக்கெதிராகச் செயல்படுமாறு நீங்கள் வகுக்கும் திட்டங்களில் எச்சரிக்கையாக இருங்கள்! 36 எப்போது தெயுதாஸ் தோன்றினான் என்பதை நினைவு கூருகிறீர்களா? அவன் தன்னை ஒரு முக்கியமான மனிதன் என்று கூறினான். சுமார் 400 மனிதர்கள் அவனோடு சேர்ந்துகொண்டனர். ஆனால் அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றியவர்கள் சிதறுண்டு ஓடினார்கள். அவர்களால் எதையும் செய்யக் கூடவில்லை. 37 அவனுக்குப்பின் கலிலேயாவிலிருந்து யூதா என்னும் பெயருள்ள மனிதன் வந்தான். மக்கள்தொகை பதிவு செய்த காலத்தில் அவன் வந்தான். அவன் தன்னைப் பின் பற்றியவர்களுக்குத் தலைமையும் தாங்கினான். அவனும் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறியோடினர். 38 எனவே இப்போது உங்களுக்குச் சொல்கிறேன். இம்மனிதரிடமிருந்து விலகியிருங்கள். அவர்களைத் தனித்து விட்டுவிடுங்கள். அவர்கள் திட்டம் மனிதர்களிடமிருந்து உருவாகியிருந்தால் அது தகர்ந்து விழும். 39 ஆனால் அது தேவனிடமிருந்து வந்ததெனில், நீங்கள் அவர்களைத் தடுக்கவியலாது. நீங்கள் தேவனுடனேயே சண்டையிடுபவர்களாக ஆவீர்கள்” என்றார்.
கமாலியேல் கூறியவற்றிற்கு யூதத் தலைவர்கள் உடன்பட்டனர். 40 அவர்கள் அப்போஸ்தர்களை மீண்டும் உள்ளே அழைத்தனர். அவர்கள் அப்போஸ்தலரை அடித்து இயேசுவைக் குறித்து மேலும் மக்களிடம் பேசாதிருக்குமாறு கூறினர். பின்னர் அப்போஸ்தலர்களைப் போகுமாறு விடுவித்தனர். 41 அப்போஸ்தலர்கள் கூட்டத்தைவிட்டுச் சென்றனர். இயேசுவின் பெயரில் வெட்கமுறும்படியாகக் கிடைக்கப்பெற்ற பெருமைக்காக அப்போஸ்தலர்கள் மகிழ்ந்தனர். 42 மக்களுக்குப் போதிப்பதை அப்போஸ்தலர்கள் நிறுத்தவில்லை. இயேசுவே கிறிஸ்து என்னும் நற்செய்தியை அப்போஸ்தலர்கள் மக்களுக்குத் தொடர்ந்து கூறி வந்தனர். தேவாலயத்திலும், மக்களின் வீடுகளிலும் ஒவ்வொரு நாளும் அவர்கள் இதைச் செய்தனர்.
2008 by World Bible Translation Center