Old/New Testament
தரியுவின் கட்டளை
6 எனவே, தனக்கு முன் அரசாண்ட ராஜாக்களின் ஆவணங்களைத் தேடும்படி ராஜா தரியு கட்டளையிட்டான். பணம் சேமித்து வைக்கபட்டிருந்த இடத்திலேயே அதிகாரப்பூர்வமான பத்திரங்களும் இருந்தன. 2 ஒரு சுருள் அக்மேதா நகர் கோட்டையில் அகப்பட்டது. இது மேதிய மாகாணத்தில் உள்ளது. சுருளில் எழுதப்பட்டிருந்த செய்தி இதுதான்:
அரசாங்கப் பூர்வமான குறிப்பு: 3 கோரேசின் முதலாம் ஆட்சி ஆண்டில், அவன் எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலயத்திற்கு ஓர் கட்டளைக் கொடுத்தான். அந்த கட்டளை சொல்வது:
தேவனுடைய ஆலயம் மீண்டும் கட்டப்படட்டும். இது பலி கொடுப்பதற்குரிய இடமாக இருக்கும். இதற்குரிய அஸ்திபாரம் கட்டப்படட்டும். இந்த ஆலயம் 60 முழ உயரமும், 60 முழ அகலமுமாய் இருக்கட்டும். 4 அதைச் சற்றி மூன்று வரிசை பெரிய கற்களும், ஒரு வரிசைப் பெரிய மரப்பலகைகளும் இருக்கட்டும். ராஜாவின் கருவூலத்திலிருந்து ஆலயம் கட்டப் பணம் கொடுக்கப்படும். 5 தேவனுடைய ஆலயத்தில் உள்ள பொன்னும் வெள்ளியும் மீண்டும் அங்கேயே வைக்கப்பட வேண்டும். நேபுகாத்நேச்சார் அவற்றை எருசலேமில் உள்ள ஆலயத்தில் இருந்து எடுத்து பாபிலோனுக்குக் கொண்டு போனான். அவை தேவனுடைய ஆலயத்தில் திரும்ப வைக்கப்பட வேண்டும்.
6 இப்போது, தரியுவாகிய நான், ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியின் ஆளுநரான தத்னாயும், சேத்தார் பொஸ்னாயுமாகிய நீங்களும், அப்பகுதியில் வசிக்கும் எல்லா அதிகாரிகளும் எருசலேமிற்கு வெளியே தங்கி இருங்கள் என்று கட்டளை கொடுக்கிறேன். 7 வேலை செய்பவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். தேவனுடைய ஆலய வேலையைத் தடுக்க முயற்சி செய்யாதீர்கள். யூத ஆளுநர்களும், யூதத் தலைவர்களும் ஆலயத்தை மீண்டும் கட்டட்டும். அவ்வாலயம் முன்பு இருந்த அதே இடத்திலேயே அவர்கள் கட்டட்டும்.
8 இப்போது இந்த கட்டளையை இடுகிறேன். யூதத் தலைவர்கள் ஆலயத்தைக் கட்ட நீங்கள் கீழ்க்கண்டச் செயல்களைச் செய்ய வேண்டும்: ஆலயம் கட்டுவதற்கான முழு பணத்தையும் நீங்கள் ராஜாவின் கருவூலத்தில் இருந்து தர வேண்டும். இப்பணம் ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியில் உள்ள ஜனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணமாகும். இதனை விரைவாகச் செய்யுங்கள். அதனால் வேலை தடைப்படாமல் இருக்கும். 9 அந்த ஜனங்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுங்கள். அவர்களுக்கு இளங்காளைகள், ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள் ஆகியவை பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடத் தேவைப்படுமானால் அவற்றைக் கொடுங்கள். எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் கோதுமை, திராட்சைரசம், உப்பு, ஒலிவ எண்ணெய் போன்றனவற்றைக் கேட்டால் ஒவ்வொரு நாளும் தவறாமல் கொடுக்கவும். 10 இவற்றை நீங்கள் யூத ஆசாரியர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருக்கு பலிகளைக் கொடுத்து அவரை மகிழ்ச்சியடையச் செய்வார்கள். இவற்றைக் கொடுத்தால் ஆசாரியர்கள் எனக்கும் என் குமாரர்களுக்கும் ஜெபம் செய்வார்கள்.
11 அதோடு, இந்தக் கட்டளையையும் தருகிறேன்: யாராவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவனது வீட்டிலிருந்து ஒரு மரச்சட்டம் பிடுங்கப்படும். பின்பு அம்மரச் சட்டம் அவனுடைய உடலில் சொருகப்படும். அவனது வீடும் மண் மேடாகும்வரை அழிக்கப்படும்.
12 தேவன் தமது நாமத்தை எருசலேமில் வைத்திருக்கிறார். இந்தக் கட்டளையை மாற்ற முயல்கிற எந்த ராஜாக்களையும் அல்லது எந்த ஜனங்களையும் தேவன் தோற்கடிப்பார் என்று நம்புகிறேன். யாராவது இந்த ஆலயத்தை எருசலேமில் அழிக்க முயன்றால் தேவன் அந்த நபரை அழித்துவிடுவார் என்று நம்புகிறேன்.
தரியுவாகிய நான், இந்தக் கட்டளையைத் தருகிறேன். இந்தக் கட்டளை முழுமையாகவும், விரைவாகவும் செய்யப்பட வேண்டும்!
ஆலயப் பணி முடிவும் பிரதிஷ்டையும்
13 எனவே, ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியின் ஆளுநராக இருக்கும் தத்னாய் என்பவரும், சேத்தார்பொஸ்னாயும் அவர்களைச் சார்ந்த மற்ற ஜனங்களும், ராஜா தரியுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் அந்த கட்டளையை முழுமையாகவும் விரைவாகவும் செயல்படுத்தினார்கள். 14 எனவே யூத மூப்பர்கள் கட்டிட வேலையை செய்துக்கொண்டிருந்தார்கள். ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் ஊக்கப்படுத்தியதால் அவர்கள் வெற்றியுடன் ஆலயத்தைக் கட்டி முடித்தனர். இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிவதற்காகவே இது கட்டப்பட்டது. கோரேசு, தரியு மற்றும் பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா ஆகியோர்களின் கட்டளைக்குக் கட்டுப்பட்டும் இவ்வேலை முடிந்தது. 15 ஆலயமானது தரியு அரசாளும் ஆறாம் ஆண்டு ஆதார் மாதம் மூன்றாம் தேதியில் கட்டி முடிக்கப்பட்டது.
16 அப்போது இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும், லேவியரும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வந்தவர்களும் தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
17 இவ்வாறு தான் அவர்கள் தேவனுடைய ஆலயத்தை பிரதிஷ்டை செய்தது: அவர்கள் 100 காளைகள், 200 செம்மறியாட்டுக் கடாக்கள் மற்றும் 400 ஆண் ஆட்டுக் குட்டிகள் ஆகியவற்றைப் பலி கொடுத்தனர். அவர்கள் இஸ்ரவேலர்களின் பாவப்பரிகார பலியாக 12 வெள்ளாட்டுக்கடாக்களைப் பலி கொடுத்தனர். அந்த 12 வெள்ளாடுகள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்திற்கும் ஒன்று வீதம் கொடுக்கப்பட்டவை. 18 பிறகு அவர்கள் தங்கள் குழுவில் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்தனர். லேவியர்களை அவர்களின் குழுவிலும் தேர்ந்தெடுத்து எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலய வேலைக்கு நியமித்தனர். மோசேயின் புத்தகத்தில் சொன்னடியே அவர்கள் செய்து முடித்தார்கள்.
பஸ்கா
19 யூதர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு எருசலேம் வந்த முதலாம் மாதம் 14வது நாள், பஸ்காவைக் கொண்டாடினார்கள். 20 ஆசாரியர்களும் லேவியர்களும் தம்மைச் சுத்தப்படுத்திக்கொண்டு பஸ்கா பண்டிகையை கொண்டாடத் தயார் ஆனார்கள். லேவியர்கள் பஸ்கா ஆட்டை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வந்த அனைத்து யூதர்களுக்காகவும் கொன்றனர். அவர்கள் இதனைத் தம் சகோதரர்களான ஆசாரியர்களுக்காகவும், தங்களுக்காகவும் செய்தனர். 21 எனவே, இஸ்ரவேலின் அடிமைத்தனத்திலிருந்து மீட்புப் பெற்ற அனைத்து ஜனங்களும் பஸ்கா விருந்தை உண்டனர். அந்நாட்டிலுள்ள மற்றவர்கள் தம்மைக் கழுவி அந்நாட்டில் வசித்த ஜனங்களின் அசுத்தங்களிலிருந்து சுத்தம் செய்துக்கொண்டார்கள். இவ்வாறு சுத்தமானவர்களும் பஸ்கா விருந்தைப் பங்கிட்டுக் கொண்டனர். அவர்கள் இவ்வாறு செய்தால் அவர்களால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடம், உதவிக்காகப் போக முடியும். 22 அவர்கள் புளிப்பில்லா அப்பப்பண்டிகையை மிக மகிழ்ச்சியோடு ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். கர்த்தர் ஜனங்களை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கினார். ஏனென்றால் அசீரியா ராஜாவின் போக்கையும் கர்த்தர் மாற்றியிருந்தார். எனவே அசீரியாவின் ராஜாவும் தேவனுடைய ஆலய வேலைக்கு பெரிதும் உதவியாக இருந்தான்.
எஸ்றா எருசலேமிற்கு வருகிறான்
7 பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளும் காலத்தில், இவையெல்லாம் நடந்து முடிந்த பிறகு, செராயாவின் குமாரன் எஸ்றா, பாபிலோனில் இருந்து எருசலேமுக்கு வந்தான். இந்த செராயா அசரியாவின் குமாரன், அசரியா இல்க்கியாவின் குமாரன், 2 இல்க்கியா சல்லூமின் குமாரன், சல்லூம் சாதோக்கின் குமாரன், சாதோக் அகிதூபின் குமாரன், 3 அகிதூப் அமரியாவின் குமாரன், அமரியா அசரியாவின் குமாரன், அசரியா மெராயோதின் குமாரன், 4 மெராயோத் சேராகியாவின் குமாரன், சேராகியா ஊசியின் குமாரன், ஊசி புக்கியின் குமாரன். 5 புக்கி அபிசுவாவின் குமாரன், அபிசுவா பினெகாசின் குமாரன், பினெகாசு எலெயாசாரின் குமாரன், எலெயாசார் தலைமை ஆசாரியனான ஆரோனின் குமாரன். 6 எஸ்றா எருசலேமிற்குப் பாபிலோனில் இருந்து வந்தான். எஸ்றா ஒரு போதகன். அவனுக்கு மோசேயின் சட்டங்கள் நன்றாகத் தெரியும். மோசேயின் சட்டங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரால் கொடுக்கப்பட்டவை. ராஜாவாகிய அர்தசஷ்டா எஸ்றா கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தான். ஏனென்றால், கர்த்தர் எஸ்றாவோடு இருந்தார். 7 ஏராளமானவர்கள் எஸ்றாவோடு வந்தனர். அவர்கள் ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாயில் காவலர்கள், ஆலயப் பணியாளர்கள் ஆவார்கள். இந்த இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேமிற்கு ராஜா அர்தசஷ்டாவின் ஏழாவது ஆட்சியாண்டில் வந்தனர். 8 அர்தசஷ்டாவின் ஏழாவது ஆட்சியாண்டின் ஐந்தாவது மாதத்தில் எஸ்றா எருசலேமிற்கு வந்தான். 9 எஸ்றாவும் அவனது குழுவும் முதல் மாதத்தின் முதல் நாளில் பாபிலோனை விட்டு நீங்கினார்கள். அவன் எருசலேமிற்கு ஐந்தாம் மாதத்தின் முதல் நாளில் வந்துசேர்ந்தான். தேவனாகிய கர்த்தர் எஸ்றாவோடு இருந்தார். 10 எஸ்றா எப்பொழுதும் கர்த்தருடையச் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதிலும் கற்பதிலும் கவனம் செலுத்திவந்தான். எஸ்றா இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தருடைய கட்டளைகளையும் விதிகளையும் கற்றுத்தர விரும்பினான். அச்சட்டங்களைப் பின்பற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவவும் விரும்பினான்.
அர்தசஷ்டா எஸ்றாவிற்கு எழுதிய கடிதம்
11 எஸ்றா ஒரு ஆசாரியனும், போதிக்கிறவனுமாய் இருந்தான். இஸ்ரவேலர்களுக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளைகளைப் பற்றியும், சட்டங்களைப் பற்றியும் அதிகம் தெரிந்து வைத்திருந்தான். அர்தசஷ்டா ராஜா ஆசாரியனான எஸ்றாவிற்குக் கொடுத்த கடிதத்தின் செய்தி இதுதான்:
12 அர்தசஷ்டா ராஜாவிடமிருந்து, ஆசாரியனும், பரலோகத்தின் தேவனுடைய சட்டங்களின் போதகனுமான எஸ்றாவுக்கு, வாழ்த்துக்கள்!
13 நான் பின்வருமாறு கட்டளையிடுகிறேன். எந்த ஒரு மனிதனோ, ஆசாரியனோ, அல்லது அரசாங்கத்திற்குள் வாழும் லேவியர்களில் யாராயினும், எஸ்றாவோடு எருசலேம் போக விரும்பினால், போகலாம்.
14 எஸ்றா, நானும் எனது 7 ஆலோசகர்களும் உன்னை அனுப்புகிறோம். நீ யூதாவிற்கும் எருசலேமிற்கும் போக வேண்டும். உங்கள் தேவனுடைய சட்டங்களுக்கு உங்கள் ஜனங்கள் எவ்வாறு கீழ்ப்படிகிறார்கள் என்பதைப் பார். உன்னோடு அந்தச் சட்டங்கள் உள்ளன.
15 நானும் எனது ஆலோசகர்களும் பொன்னும், வெள்ளியும் இஸ்ரவேலின் தேவனுக்குக் கொடுக்கிறோம். தேவன் எருசலேமில் வசிக்கிறார். இந்தப் பொன்னையும் வெள்ளியையும் நீ எடுத்துச் செல்லவேண்டும். 16 பாபிலோனிய எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களுக்கும் நீ போகவேண்டும். உங்கள் ஜனங்களிடமிருந்து அன்பளிப்புகளைச் சேகரியுங்கள், ஆசாரியர்களிடமிருந்தும், லேவியர்களிடமிருந்தும் அன்பளிப்புகளைச் சேகரியுங்கள். இவை எருசலேமில் உள்ள அவர்களுடைய தேவனுடைய ஆலயத்திற்கு உரியவை.
17 இப்பணத்தால் காளைகள், ஆட்டுக் குட்டிகள், ஆட்டுக்கடாக்கள் ஆகியவற்றை வாங்குங்கள். தானியக் காணிக்கைகளையும், பானங்களின் காணிக்கைகளையும் வாங்கி மற்ற பலிகளோடுக் கொடுங்கள். எருசலேமில் உள்ள உங்கள் தேவனுடைய ஆலயப் பலிபீடத்தில் அவற்றைப் பலியிடுங்கள். 18 இதில் மிச்சமுள்ள பொன்னையும் வெள்ளியையும், நீயும் மற்ற யூதர்களும் உங்கள் விருப்பம் போல் செய்யலாம். உங்கள் தேவனுக்கு விருப்பமானபடி அவற்றைச் செலவு செய்யலாம். 19 இவை எல்லாவற்றையும் எருசலேமின் தேவனிடத்தில் எடுத்துச் செல்லுங்கள். இவை அனைத்தும் உங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆராதனைக்கு உரியவை. 20 உங்கள் தேவனுடைய ஆலயத்திற்குத் தேவையான வேறு எதையும் நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். உனக்குத் தேவையான எதையும் வாங்கிக் கொள்ள அரண்மனை கருவூலத்திலுள்ள பணத்தைப் பயன்படுத்தலாம்.
21 இப்போது, ராஜாவாகிய அர்தசஷ்டா, இந்த கட்டளையைத் தருகிறேன்: ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியில், அரசப் பணத்தை வைத்து இருப்பவர்களுக்கு ஒரு கட்டளை இடுகிறேன். எஸ்றா கேட்பவற்றைக் கொடுங்கள். எஸ்றா ஒரு ஆசாரியன், அதோடு பரலோகத்தின் தேவனுடைய சட்டங்களைக் கற்பிக்கும் போதகன். இதனை விரைவாகவும் முழுமையாகவும் செய்க. 22 எஸ்றாவிற்கு இவற்றைக் கொடுங்கள்: 100 தாலந்து வெள்ளி, 100 கலக் கோதுமை, 100 கலம் திராட்சை ரசம், 100 கலம் எண்ணெய் வேறு ஏதாவது கேட்டாலும் கொடுங்கள். தேவையான உப்பையும் கொடுங்கள். 23 எஸ்றா அடையவேண்டுமென்று பரலோகத்தின் தேவன் கட்டளையிட்ட எதையும், நீங்கள் எஸ்றாவிற்கு விரைவாகவும், முழுவதுமாகவும் கொடுக்கவேண்டும். இதனை பரலேகத்தின் தேவனுடைய ஆலயத்திற்காகச் செய்யுங்கள். எனது அரசின் மீதோ, என் குமாரர்களின் மீதோ தேவன் கோபமுறுவதை நான் விரும்பவில்லை.
24 ஆலயத்தில் உள்ள ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாயில் காவலர்கள், ஆலயப் பணியாளர்கள், மற்றும் தேவனுடைய ஆலயத்தில் உள்ள மற்ற வேலைக்காரர்கள் ஆகியவர்களை வரிசெலுத்த வைப்பது சட்ட விரோதமானது (சட்டத்திற்குப் புறம்பானது) என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. ராஜாவைக் கௌரவப்படுத்தும் பொருட்டு பணம் தரத் தேவையில்லை. எந்த விதமான திறையும் செலுத்த வேண்டியதில்லை. 25 எஸ்றா, நீ தேவன் கொடுத்த ஞானத்தைப் பயன்படுத்திப் பொதுத்துறை நீதிபதிகளையும், மத நீதிபதிகளையும் தேர்ந்தெடுக்கிற அதிகாரத்தை உனக்குத் தருகிறேன். இவர்கள் ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் புறத்தில் வாழுகின்ற ஜனங்களுக்கு நீதிபதிகளாக இருப்பார்கள். அவர்கள் உங்கள் தேவனுடைய சட்டங்களைத் தெரிந்த அனைவருக்கும் நியாயம் தீர்க்கவேண்டும். எவருக்காவது அந்தச் சட்டங்கள் தெரியாமல் இருந்தால் அவர்களுக்கு இந்த நீதிபதிகள் அவற்றைக் கற்பிக்கவேண்டும். 26 எவராவது உங்கள் தேவனுடைய சட்டங்களுக்கோ, ராஜாவின் சட்டங்களுக்கோ கீழ்ப்படியாமல் இருந்தால், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களின் குற்றங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு மரணதண்டனை, நாடு கடத்துதல், சொத்து பறிமுதல், சிறையிடுதல் போன்றவைத் தரப்படும்.
எஸ்றா தேவனைத் துதிக்கிறான்
27 கர்த்தர் ஆசீர்வதிக்கப்பட்டவர், நமது முற்பிதாக்களின் தேவன் ஆசீர்வதிக்கப்பட்டவர். எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தைப் பெருமைப்படுத்தும் எண்ணத்தை ராஜாவின் மனத்தில் உருவாக்கியவர் தேவன். 28 என் மீது கர்த்தர் தனது மெய்யான அன்பை ராஜாவின் முன்பும், ஆலோசகர்கள் முன்பும் காட்டினார். தேவனாகிய கர்த்தர் என்னோடு இருந்தார், எனவே நான் தையரியமாக இருந்தேன். எருசலேமிற்கு என்னோடு வர இஸ்ரவேல் தலைவர்களை நான் கூட்டினேன்.
எஸ்றாவோடு திரும்பிய தலைவர்கள்
8 பாபிலோனில் இருந்து எருசலேமிற்கு என்னோடு வந்த குடும்பத் தலைவர்கள் மற்றும் மற்ற ஜனங்களின் பெயர்கள்: அர்தசஷ்டாவின் ஆட்சியின் போது நாங்கள் எருசலேமிற்கு வந்தோம். அப்போது வந்தவர்களின் பெயர்ப்பட்டியல்:
2 பினெகாசின் சந்ததியில் கெர்சோம், இத்தமாரின் சந்ததியில் தானியேல், தாவீதின் சந்ததியில் அத்தூஸ்;
3 செக்கனியா என்பவனின் சந்ததியில் பாரோஷ், சகரியா மேலும் 150 பேர்கள்;
4 பாகாத் மோவாபின் சந்ததியில் செரகியாவின் குமாரனாகிய எலியோனாயும், அவனோடு 200 ஆண்களும்;
5 செக்கனியாவின் சந்ததியில் யகசியேலின் குமாரனும் அவனோடு 300 ஆண்களும்;
6 ஆதின் என்பவனின் சந்ததியில் யோனத்தானின் குமாரனாகிய ஏபேதும் அவனோடு 50 ஆண்களும்;
7 ஏலாம் என்பவனின் சந்ததியில் அதலியாவின் குமாரனாகிய எஷாயாவும், அவனோடு 70 ஆண்களும்;
8 செப்பதியா என்பவனின் சந்ததியில் மிகவேலின் குமாரனாகிய செப்பதியாவும், அவனோடு 80 ஆண்களும்;
9 யோவாப் என்பவனின் சந்ததியில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும், அவனோடு 218 ஆண்களும்;
10 பானி என்பவனின் சந்ததியில் யொசிபியாவின் குமாரனான செலோமித் என்பவனும், அவனோடு 160 ஆண்களும்;
11 பெயாய் என்பவனின் சந்ததியில் அவனது குமாரனான சகரியாவும், அவனோடு 28 ஆண்களும்;
12 அஸ்காதின் சந்ததியில் காத்தானின் குமாரனாகிய யோகனானும், அவனோடு 110 ஆண்களும்;
13 அதோனிகாம் என்பவனின் கடைசி சந்ததியில் எலிபேலேத், ஏயேல், செமாயா என்னும் பெயர்கள் உள்ளவர்களும், அவர்களோடு 60 ஆண்களும்;
14 பிக்வாய் என்பவனின் சந்ததியில் ஊத்தாயும், சபூதும் அவர்களோடு 70 ஆண்களும் ஆவார்கள்.
எருசலேமிற்குத் திரும்பியது
15 நான், (எஸ்றா) அகாவாவை நோக்கி ஓடும் ஆற்றங்கரையில் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டினேன். நாங்கள் அங்கே மூன்று நாட்கள் தங்கினோம். அவர்களில் ஆசாரியர்கள் இருப்பதைப் பார்த்தேன். ஆனால் அங்கு லேவியர்கள் இல்லை. 16 எனவே நான் கீழ்க்கண்ட தலைவர்களை அழைத்தேன்: எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மிசுல்லாம். அதோடு யோயாரிப், எல்நாத்தான் என்னும் போதகர்களையும் அழைத்தேன். 17 நான் அவர்களை இத்தோவுக்கு அனுப்பினேன். கஸ்பியா எனும் நகரத்துக்கு இத்தோ தலைவனாக இருந்தான். நான் அவர்களிடம், இத்தோ மற்றும் அவனது உறவினர்களிடம் பேச வேண்டியதைப்பற்றிக் கூறினேன். அவனது உறவினர்கள் ஆலயக் கட்டிட வேலைகளைச் செய்பவர்கள். நான் அவர்களை இத்தோவிடம் அனுப்பியதால் அவன் தேவாலயக் கட்டிடக்காரர்களை அனுப்பி வைப்பான். 18 ஏனென்றால் தேவன் நம்மோடு இருந்ததால், இத்தோவின் உறவினர்கள் கீழக்கண்டவர்களை அனுப்பி வைத்தனர்: மகேலி என்பவனின் சந்ததியில் ஒருவனும், அறிவாளியுமான செரெபியா: மகேலி லேவியின் குமாரர்களில் ஒருவன். லேவி இஸ்ரவேலின் குமாரர்களில் ஒருவன். அவர்கள் செரெபியாவின் குமாரர்களையும், சகோதரர்களையும் அனுப்பினார்கள். அக்குடும்பத்தில் மொத்தம் 18 பேர் வந்தனர். 19 அவர்கள் மெராரி என்பவனின் சந்ததியில் அஷபியாவையும், எஷாயாவையும் அனுப்பினார்கள், அதனோடு அவர்களின் குமாரர்களையும் சகோதரர்களையும் அனுப்பினார்கள். ஆகமொத்தம் அந்தக் குடும்பத்தில் 20 பேர் இருந்தனர். 20 அவர்கள் 220 ஆலய வேலைக்காரர்களையும் அனுப்பினார்கள். தாவீதின் ஜனங்களான அவர்களது முற்பிதாக்களும், அவரது முக்கிய அதிகாரிகளும் லேவியர்களுக்கு உதவும்படி தேர்ந்தெடுத்தனர். அவர்களின் பெயர்கள் பட்டியலில் எழுதப்பட்டுள்ளன.
21 அகாவா ஆற்றின் அருகில் நான், (எஸ்றா) நாம் அனைவரும் உபவாசம் இருக்கவேண்டும். தேவனுக்கு முன்னால் நம்மைப் பணிவாக்கிக்கொள்ள நாம் உபவாசம் இருக்க வேண்டும். நமக்கும், நமது பிள்ளைகளுக்கும், நமக்கு உடமையுமான எல்லாப் பொருட்களுக்கும் ஒரு பாதுகாப்பான பயணத்திற்காக நாங்கள் தேவனிடம் வேண்டிக்கொள்ள விரும்பினோம். 22 நாங்கள் பயணம் செய்யும்போது எங்கள் பாதுகாப்புக்காக சேவகர்களையும், குதிரை வீரர்களையும் அனுப்பும்படி ராஜாவாகிய அர்தசஷ்டாவிடம் கேட்க வெட்கப்பட்டேன். வழியில் பகைவர்கள் இருந்தனர். நான் வெட்கப்பட்டதற்கும் காரணம் இருந்தது. நாங்கள் ராஜாவிடம், “எங்கள் தேவன் அவரை நம்புகிற ஒவ்வொருவரிடமும் இருக்கிறார். ஆனால் தேவனைவிட்டு விலகுகிறவர்களிடம் அவர் மிக கோபமாக இருப்பார்” என்று சொன்னோம். 23 அதனால் நாங்கள் உபவாசம் இருந்து எங்கள் பயணத்துக்கு உதவும்படி எங்கள் தேவனிடம் ஜெபித்தோம். எங்கள் ஜெபத்திற்கு அவர் பதிலளித்தார்.
24 பிறகு நான் 12 ஆசாரியர்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தேன். நான் செரெபியாவையும், அஷபியாவையும், அவர்களது சகோதரர்களில் 10 பேரையும் தேர்ந்தெடுத்தேன். 25 நான் தேவாலயத்திற்குக் கொடுக்கப்பட்ட பொன், வெள்ளி, மற்றுமுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் எடைபோட்டு பார்த்தேன். நான் அவற்றை தேர்ந்தெடுத்த அந்த 12 ஆசாரியர்களிடமும் கொடுத்தேன். அர்தசஷ்டா ராஜாவும், அவனது ஆலோசகர்களும், முக்கியமான அதிகாரிகளும், பாபிலோனில் உள்ள இஸ்ரவேலர்களும் தேவனுடைய ஆலயத்திற்காக அவற்றைக் கொடுத்திருந்தார்கள். 26 நான் எல்லாவற்றையும் எடைபோட்டுப் பார்த்தேன். அவற்றில் 25 டன்கள் எடையுள்ள வெள்ளியும், 3 3/4 டன் எடையுள்ள வெள்ளிப் பாத்திரங்களும், 3 3/4 டன் எடையுள்ள தங்கமும் இருந்தன. 27 நான் அவர்களுக்கு 20 பொற் கிண்ணங்களைக் கொடுத்தேன். அக்கிண்ணங்கள் 1,000 தங்கக் காசு பெறுமானம் உள்ளதாய் இருந்தது. மேலும் நான் தங்கத்தைப் போன்று மதிப்பும், பளபளப்புமாக மெருகேற்றப்பட்ட வெண்கலத்தாலான இரண்டு கிண்ணங்களைக் கொடுத்தேன். 28 பிறகு நான் அந்த 12 ஆசாரியர்களிடமும், “நீங்களும் இந்தப் பொருட்களும் கர்த்தருக்கு பரிசுத்தமானவை. உங்கள் முற்பிதாக்களின் தேவனான கர்த்தருக்கு, ஜனங்கள் இப்பொன்னையும், வெள்ளியையும் கொடுத்தனர். 29 எனவே இவற்றை எச்சரிக்கையாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். நீங்களே இதற்கு, இவற்றை எருசலேமில் உள்ள ஆலயத் தலைவர்களுக்குக் கொடுக்கும்வரை பொறுப்பானவர்கள். நீங்கள் இவற்றை லேவியர்களின் தலைவர்களுக்கும், இஸ்ரவேல் குடும்பத் தலைவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அவர்கள் அவற்றை எடைபோட்டு அவற்றை எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலய அறைகளில் பத்திரமாக வைக்கவேண்டும்” என்றேன்.
30 எனவே ஆசாரியர்களும் லேவியர்களும் பொன், வெள்ளி மற்றும் எஸ்றாவால் எடைப்போட்டுக் கொடுக்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் அவற்றை எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு எடுத்துச் செல்லும்படி சொல்லப்பட்டனர்.
31 முதல் மாதத்தில் 12வது நாள் நாங்கள் அகாவா ஆற்றைவிட்டு எருசலேமை நோக்கிப் புறப்பட்டோம். தேவன் எங்களோடு இருந்தார். வழியில் பகைவர்களிடமிருந்தும் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் எங்களைக் காப்பாற்றினார். 32 பிறகு நாங்கள் எருசலேம் வந்து சேர்ந்தோம். அங்கு 3 நாட்கள் ஓய்வெடுத்தோம். 33 நான்காவது நாள், ஆலயத்திற்குப் போனோம். பொன், வெள்ளி, மற்றுமுள்ள சிறப்பானப் பொருட்களை எடை போட்டோம். நாங்கள் உரியா ஆசாரியனின் குமாரனான மெரேமோத்திடம் கொடுத்தோம். மெரேமோத்தோடு, பினெகாசின் குமாரனான எலெயாசார் கூட இருந்தான். அவர்களோடு லேவியர்களும், யெசுவாவின் குமாரனான யோசபாத்தும், பின்னுயின் குமாரனான நொவதியாவும் இருந்தார்கள். 34 எல்லாவற்றையும் நாங்கள் எண்ணிக்கையிட்டும் எடையிட்டும் பார்த்தோம். அப்போது இருந்த மொத்த எடையையும் எண்ணிக்கையையும் எழுதி வைத்தோம்.
35 பிறகு சிறையிலிருந்து மீண்ட யூத ஜனங்கள் வந்து இஸ்ரவேலின் தேவனுக்குத் தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் அனைத்து இஸ்ரவேலர்களுக்கும் சேர்த்து 12 காளைகள், 96 செம்மறி ஆட்டுக்கடாக்கள், 77 ஆட்டுக்குட்டிகள், 12 ஆட்டுக்கடாக்கள் ஆகியவற்றைப் பாவப் பரிகாரப் பலியாகச் செலுத்தினர். இவை அனைத்தும் கர்த்தருக்கானத் தகனபலியாகும்.
36 பிறகு அவர்கள் அர்தசஷ்டாவின் கடிதத்தை ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதிகளுக்குரிய ஆளுநரிடமும், தலைவர்களிடமும் கொடுத்தனர். பிறகு அந்தத் தலைவர்கள் தங்கள் ஆதரவை இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஆலயத்திற்கும் கொடுத்தனர்.
ஏழு சீஷர்களுக்கு இயேசு காட்சி அளித்தல்
21 இதற்குப் பின்பு இயேசு மறுபடியும் தன்னை சீஷர்களுக்குக் காண்பித்தார். அது திபேரியா (கலிலேயா) கடற்கரையில் நிகழ்ந்தது. அதைப்பற்றிய விபரமாவது: 2 அங்கே சில சீஷர்கள் கூடியிருந்தனர். அவர்களில் சீமோன் பேதுரு, தோமா, செபெதேயுவின் இரு குமாரர்கள், கலிலேயா நாட்டின் கானா ஊரானாகிய நாத்தான்வேல், மேலும் இரண்டு சீஷர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். 3 சீமோன் பேதுரு மற்றவர்களிடம், “நான் மீன் பிடிக்கப் போகிறேன்” என்று சொன்னார்.
அதற்கு மற்ற சீஷர்களும், “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்றனர். எனவே அனைவரும் படகில் ஏறிச்சென்றனர். அன்று இரவு அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
4 மறுநாள் அதிகாலையில் இயேசு கரையில் நின்றிருந்தார். ஆனால் சீஷர்கள் அவரை இயேசு என்று அறிந்துகொள்ளவில்லை. 5 பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “நண்பர்களே! நீங்கள் ஏதாவது மீன் பிடித்தீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு “இல்லை” என்று சீஷர்கள் சொன்னார்கள்.
6 இயேசு அவர்களிடம், “நீங்கள் உங்கள் வலைகளைப் படகுக்கு வலது புறமாகப் போடுங்கள். அப்பொழுது நீங்கள் மீன்களைப் பிடிப்பீர்கள்” என்றார். அதன்படி சீஷர்களும் செய்தனர். அவர்கள் வலையைப் படகுக்குள் இழுக்க முடியாத அளவுக்கு ஏராளமான மீன்களைப் பிடித்தனர்.
7 எனவே இயேசுவிடம் அன்பாயிருந்த சீஷன் பேதுருவிடம் “இவர் ஆண்டவர்” என்றார். “அவர் இயேசு” என்று சொல்லக் கேட்டவுடன் பேதுரு, இதுவரை மூடப்படாத தன் சரீரத்தை ஆடையால் மூடினான். பிறகு அவன் கடலுக்குள் குதித்துவிட்டான். 8 மற்ற சீஷர்கள் படகின் மூலம் கரைக்குச் சென்றனர். அவர்கள் மீன் நிறைந்த வலையை இழுத்தனர். அவர்கள் கரையிலிருந்து வெகு தூரத்தில் கடலுக்குள் இருக்கவில்லை. ஏறக்குறைய 200 முழம் தூரத்துக்குள்ளேயே இருந்தனர். 9 அவர்கள் படகிலிருந்து இறங்கிக் கரைக்கு வந்தனர். அங்கே கரி அடுப்பு பற்றவைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். அதில் மீன்களும் அப்பமும் சுடப்பட்டிருந்தன. 10 இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்” என்றார்.
11 சீமோன் பேதுரு படகில் ஏறி வலையைக் கரைக்கு இழுத்தான். அது பெரிய மீன்களால் நிறைந்திருந்தது. அதில் 153 மீன்கள் இருந்தன. மீன்கள் மிகவும் கனமுடையனவாய் இருந்தன. எனினும் வலை கிழியாமல் இருந்தது. 12 இயேசு அவர்களிடம் “வாருங்கள், சாப்பிடுங்கள்” என்றார். அவர்களில் எவரும் “நீங்கள் யார்?” என்று தைரியமாகக் கேட்கவில்லை. அவர்தான் இயேசு கிறிஸ்து என்று அவர்கள் தெரிந்திருந்தனர். 13 இயேசு உணவின் அருகில் சென்றார். அவர் அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அத்துடன் மீனையும் எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார்.
14 அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, இவ்வாறு மூன்றாவது முறையாகத் தம் சீஷர்களுக்குக் காட்சி தந்தார்.
பேதுருவிடம் இயேசு பேசுதல்
15 உண்டு முடித்ததும் இயேசு பேதுருவிடம், “யோவானின் குமாரனான சீமோனே! மற்றவர்கள் நேசிப்பதைவிட என்னை நீ மிகுதியாக நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.
அதற்குப் பேதுரு, “ஆம் ஆண்டவரே, நான் நேசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றான்.
பிறகு இயேசு அவனிடம், “எனது ஆட்டுக் குட்டிகளைக்[a] கவனித்துக்கொள்” என்றார்.
16 மீண்டும் பேதுருவிடம் இயேசு “யோவானின் குமாரனான சீமோனே, என்னை நீ நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.
“ஆம் ஆண்டவரே. நான் உம்மை நேசிப்பது உமக்குத் தெரியும்” என்று பேதுரு சொன்னான்.
பிறகு பேதுருவிடம் இயேசு, “எனது மந்தையைக் கவனித்துக்கொள்” என்று சொன்னார்.
17 மூன்றாவது முறையாக இயேசு “யோவானின் குமாரனான சீமோனே என்னை நீ நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.
இயேசு மூன்றுமுறை இவ்வாறு கேட்டதால் பேதுருவுக்கு வருத்தமாக இருந்தது. பேதுரு அவரிடம், “ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும். நான் உம்மை நேசிப்பதும் உமக்குத் தெரியும்” என்றான். பேதுருவிடம் இயேசு “எனது மந்தையைக் கவனித்துக்கொள். 18 நான் உனக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நீ இளைஞனாக இருந்தபோது, உனது இடுப்புவாரை நீயே கட்டிக்கொண்டு விரும்பும் இடங்களுக்கு சென்றாய். ஆனால் நீ முதியவன் ஆகும்போது உன் கைகளை நீட்டுவாய். வேறு ஒருவன் உன் இடுப்புவாரைக் கட்டிவிடுவான். அதோடு உனக்கு விருப்பம் இல்லாத இடத்துக்கும் உன்னை இழுத்துக்கொண்டு போவான்” என்றார். 19 (எவ்வாறு பேதுரு மரணம் அடைந்து தேவனுக்கு மகிமைசேர்க்கப் போகிறான் என்பதைக் குறிப்பிட்டே இயேசு இவ்வாறு கூறினார்.) பிறகு இயேசு பேதுருவிடம் “என்னைப் பின்தொடர்ந்து வா” என்று கூறினார்.
20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது தன்னோடு, இயேசுவிடம் அன்பாயிருந்த சீஷன் வருவதைப் பார்த்தான். (இந்த சீஷன்தான் முன்பு இரவு விருந்தின்போது இயேசுவிடம் “உம்மைக் காட்டிக் கொடுக்கிறவன் யார்?” என்று அவர்மீது சாய்ந்து இருந்து கேட்டவன்) 21 பேதுரு, அவன் பின்தொடர்ந்து வருவதைப் பார்த்து, “ஆண்டவரே, இவனைப் பற்றி என்ன கூறுகிறீர்?” என்று கேட்டான்.
22 அதற்கு இயேசு, “நான் வருமளவும் இவன் இருக்க எனக்கு விருப்பம் உண்டு. அது உனக்கு அவ்வளவு முக்கியமில்லை. நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்றார்.
23 ஆகையால் சீஷர்களிடம் ஒரு கதை பரவிற்று. அதாவது இயேசு அன்பாயிருக்கும் அந்த சீஷன் மரணம் அடைவது இல்லை என்று சீஷர்கள் பேசிக்கொண்டனர். ஆனால் அவன் மரணம் அடைவதில்லை என்று இயேசு கூறவில்லை. அவர் “நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பம். அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம்” என்றே கூறினார்.
24 அந்த சீஷனே இவற்றையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறான். அவன்தான் இவற்றையெல்லாம் இப்பொழுது எழுதியுள்ளான். அவன் சொன்னது எல்லாம் உண்மை என்று நமக்குத் தெரியும்.
25 இயேசு செய்த வேறு பல செயல்களும் உள்ளன. இவை அனைத்தும் எழுதி வைக்கப்பட்டிருந்தால் அந்தப் புத்தகங்களையெல்லாம் வைக்கிற அளவிற்கு இந்த உலகம் அவ்வளவு பெரியதாக இல்லை என்று எண்ணுகிறேன்.
2008 by World Bible Translation Center