Old/New Testament
பலிபீடத்தைத் திரும்பவும் கட்டுதல்
3 எனவே ஏழாவது மாதத்திலே, இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் சொந்த நகரங்களுக்குப் போய் சேர்ந்திருந்தார்கள். அப்போது, எருசலேமில் அனைத்து ஜனங்களும் கூடினர். அவர்கள் அனைவரும் ஒரே இனமாகக் கூடினர். 2 பிறகு யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், அவனுடனிருந்த ஆசாரியர்களும், செயல்தியேலின் குமாரனான செருபாபேலும், அவனது ஆட்களும் இஸ்ரவேலின் தேவனுடைய பலிபீடம் கட்டினார்கள். அதன் மீது அவர்கள் பலிகளை செலுத்தமுடியும் என்பதால், இஸ்ரவேலின் தேவனுடைய பலிபீடத்தைக் கட்டினார்கள். மோசேயின் சட்டத்தில் உள்ளபடி அவர்கள் கட்டினார்கள். மோசே தேவனின் சிறப்புக்குரிய ஊழியன் ஆவான்.
3 அந்த ஜனங்கள் தமக்கு அருகில் வாழும் மற்றவர்களைக் கண்டு பயந்தார்கள். ஆனால் அது அவர்களை நிறுத்தவில்லை. அவர்கள் பழைய பலிபீடத்தின் அஸ்திபாரத்தின் மேலேயே கட்டி, அதில் கர்த்தருக்குத் தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் இப்பலிகளைக் காலையிலும் மாலையிலும் கொடுத்தனர். 4 பிறகு, மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டபடியே அடைக்கலக் கூடாரப் பண்டிகையைக் கொண்டாடினர். பண்டிகையின் ஒவ்வொரு நாளிலும் அவர்கள் குறிப்பிட்ட கணக்கின்படி தகனபலிகளைக் கொடுத்துவந்தனர். 5 அதற்குப் பிறகு, கர்த்தர் கட்டளையிட்டபடியே ஒவ்வொரு நாளும், பிறைச்சந்திர நாளிற்காகவும், அனைத்து பரிசுத்த பண்டிகைகளுக்கும், விடுமுறைகளுக்கும் தகனபலிகளைக் கொடுக்கத் தொடங்கினார்கள். மேலும் இவற்றைத் தவிர கர்த்தருக்காக கொடுக்க விரும்பிய மற்ற பரிசுகளையும் ஜனங்கள் கொடுக்க துவங்கினார்கள். 6 எனவே, ஏழாவது மாதத்தின் முதல் நாளில் இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் கர்த்தருக்குப் பலிகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். ஆலயம் இன்னும் கட்டப்படாவிட்டாலுங்கூட இது நிகழ்ந்தது.
ஆலயத்தைத் திரும்பக் கட்டுதல்
7 பிறகு அடிமைகளாக இருந்து திரும்பி வந்த அந்த ஜனங்கள், கல்தச்சர்களுக்கும், மரத்தச்சர்களுக்கும் பணம் கொடுத்தார்கள். அதோடு அந்த ஜனங்கள் உணவு, திராட்சைரசம், ஒலிவ எண்ணெய் போன்றவற்றையும் கொடுத்தனர். இவற்றை லீபனோனில் இருந்து கேதுரு மரங்களைக் கொண்டு வருவதற்குத் தீரியர் மற்றும் சீதோன் ஜனங்களுக்குப் பணம் கொடுக்கப் பயன்படுத்தினார்கள். அவர்கள் மரத் தடிகளைக் கப்பல் மூலமாக, சாலொமோன் முதலில் ஆலயம் கட்டும்போது கொண்டுவந்தது போல, யோபா துறைமுகப்பட்டணம்வரை கொண்டுவர விரும்பினார்கள். இவற்றையெல்லாம் செய்ய பெர்சிய ராஜா கோரேசு அனுமதிகொடுத்தான்.
8 எனவே எருசலேமில் உள்ள ஆலயத்திற்கு வந்த இரண்டாவது ஆண்டின், இரண்டாவது மாதத்திற்கு பிறகு செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் ஆலய வேலையைத் தொடங்கினார்கள். அவர்களின் சகோதரர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும் அடிமைத்தனத்திலிருந்து திரும்ப எருசலேமுக்கு வந்த ஒவ்வொருவரும் அவர்களோடு வேலைச் செய்தனர். கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு லேவியர்களில் இருபது வயதுடையவர்களையும், அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களையும் தலைவர்கள் ஆக்கினார்கள். 9 கர்த்தருடைய ஆலய வேலைகளை மேற்பார்வையிட்டவர்கள் பெயர்கள் வருமாறு: யெசுவாவும், அவனது குமாரர்களும், கத்மியேலும் அவனது குமாரர்களும், (இவர்கள் யூதாவின் சந்ததியினர்) லேவியர்களாகிய எனாதாத்தின் குமாரர்களும், சகோதரர்களும். 10 கர்த்தருடைய ஆலயத்திற்கான அஸ்திபாரத்தை கட்டிடக்காரர்கள் கட்டிமுடித்தனர். அஸ்திபார வேலை முடிந்ததும், ஆசாரியர்கள் தங்கள் ஆடைகளை அணிந்து கொண்டார்கள். பிறகு தமது எக்காளங்களைப் பெற்றுக்கொண்டார்கள். ஆசாபின் பிள்ளைகள் தாளங்களைப் பெற்றார்கள். அவர்கள் கர்த்தரைத் துதிப்பதற்காக தங்கள் இடங்களில் நின்றுக்கொண்டார்கள். முன்பு தாவீது செய்தபடியேயும், கட்டளையிட்டபடியேயும் இது நடந்தது. 11 அவர்கள் மாறி, மாறி துதிப்பாடல்களைப் பாடினார்கள்.
“கர்த்தர் நல்லவர் எனவே அவரைத் துதியுங்கள்,
எல்லாக் காலத்துக்கும் அவரது உண்மையான அன்பு தொடர்ந்திருக்கும்.”
என்ற பாடல்களைப் பாடினார்கள். பிறகு அவர்கள் பலமாகச் சத்தமிட்டு ஆர்ப்பரித்து கர்த்தரைத் துதித்தார்கள். இதற்குக் காரணம் கர்த்தருடைய ஆலயத்திற்கான அஸ்திபாரம் போடப்பட்டதுதான்.
12 ஆனால் பல முதிய ஆசாரியர்களும், லேவியர்களும், குடும்பத் தலைவர்களும், அழுதார்கள். ஏனென்றால் முதியவர்கள் பழைய ஆலயத்தை ஏற்கெனவே பார்த்திருந்தார்கள். அதன் அழகை அவர்கள் நினைத்து பார்த்தனர். அவர்கள் புதிய ஆலயத்தை பார்த்ததும் சத்தமிட்டு அழுதனர். மற்றவர்கள் மகிழ்ச்சியோடு சத்தமாக ஆரவாரம் செய்யும்போது இவர்கள் அழுதனர். 13 அவர்களின் ஆரவாரம் வெகுதூரம் கேட்டது. அவர்கள் மிகுந்த ஆரவாரம் செய்ததால் எவராலும் அழுகைக்குரல் எது, ஆனந்தக்குரல் எதுவென பிரித்துக் கூறமுடியவில்லை.
மீண்டும் ஆலயத்தைக் கட்டுவதற்கு எதிராக வந்த விரோதிகள்
4 1-2 அப்பகுதியில் வாழ்ந்த பலரும், யூதா மற்றும் பென்யமீன் ஜனங்களுக்கு எதிராக இருந்தனர். அந்த விரோதிகள் அடிமைத்தனத்திலிருந்து திரும்ப வந்தவர்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டுவதைக் கேள்விப்பட்டார்கள். எனவே அவர்கள் செருபாபேலிடமும், குடும்பத் தலைவர்களிடமும் வந்து, “நாங்கள் உங்களுக்கு ஆலயம் கட்ட உதவட்டுமா? நாங்களும் உங்களைப் போன்றவர்களே, உங்கள் தேவனிடம் உதவி வேண்டுகிறோம். அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் எங்களை இங்கு அழைத்து வந்த நாள் முதலாக நாங்கள் உங்கள் தேவனுக்குப் பலிகொடுத்து வருகிறோம்” என்றனர்.
3 ஆனால், செருபாபேல், யெசுவா, மற்றும் மற்ற குடும்பத் தலைவர்கள், “இல்லை, எங்கள் தேவனுக்கு ஆலயம் கட்ட உங்களால் உதவ முடியாது. நாங்கள் மட்டுமே கர்த்தருக்கு ஆலயம் கட்ட முடியும். அவர் இஸ்ரவேலின் தேவன். இதனையே, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசு எங்களுக்கு கட்டளையிட்டது” என்றனர்.
4 இது அவர்களுக்குக் கோபத்தை வரவழைத்தது. எனவே அவர்கள் யூதர்களுக்குத் தொல்லைக் கொடுக்க ஆரம்பித்தனர். அவர்களை உற்சாகமிழக்கச் செய்து, ஆலயத்தைக் கட்டவிடாமல் தடுக்க முயன்றனர். 5 அந்த விரோதிகள் அரசு அதிகாரிகளை விலைக்கு வாங்கி யூதர்களுக்கு எதிராக வேலை செய்யவைத்தனர். யூதர்களின் ஆலயம் கட்டும் திட்டத்தைத் தடுப்பதற்கான செயல்களைத் தொடர்ந்து செய்தார்கள். இது பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலம் முழுவதும் தொடர்ந்தது. பெர்சியாவின் ராஜாவாக தரியு ஆகும்வரைக்கும் இது தொடர்ந்து இருந்தது.
6 அந்த விரோதிகள் ராஜாவுக்குக் கடிதங்கள் எழுதி யூதர்களைத் தடுக்க முயன்றனர். பெர்சியாவின் ராஜாவாக அகாஸ்வேரு இருந்தபோது எழுதினார்கள்.
எருசலேமை மீண்டும் கட்டுவதை எதிர்த்தவர்கள்
7 பிறகு, பெர்சியாவின் புதிய ராஜாவாகிய அர்தசஷ்டாவுக்கு, அந்த எதிரிகள் யூதர்களைக் குறைக்கூறி கடிதம் எழுதினார்கள். பிஸ்லாம், மித்திரேதாத், தாபெயேல், மற்றும் அவர்கள் குழுக்களில் உள்ள மற்ற அனைவரும் சேர்ந்து இக்கடிதத்தை எழுதினார்கள். ராஜா அர்தசஷ்டாவுக்கு எழுதப்பட்ட இக்கடிதம் அரமாய்க் மொழியிலும், அரமாய்க் எழுத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுமிருந்தது. (பாபிலோன் பிரதேசத்தில் ஆட்சி மொழியாக அரமாய்க் இருந்தது).
8 பிறகு ஆணை அதிகாரியான ரெகூமும், செயலாளரான சிம்சாவும் எருசலேம் ஜனங்களுக்கு எதிராகக் கடிதம் எழுதினார்கள். ராஜாவாகிய அர்தசஷ்டாவிற்கு அவர்கள் இக்கடிதத்தை எழுதினார்கள். கடிதத்தில் எழுதப்பட்ட விபரம் பின்வருமாறு:
9 தலைமை அதிகாரி ரெகூம் மற்றும் செயலாளரான சிம்சாவிடமிருந்தும் தீனாவியர், அபற்சாத்தினர், தர்பேலியர், அப்பார்சியர், அற்கேவியர், பாபிலோனியர், சூஷங்கியர், தெகாவியர், ஆகியோர்களின் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்தும், சூசாவிலிருந்து வந்த ஏலாமியர்களிடமிருந்தும், 10 மகத்தானவனும், வலிமை மிக்கவனுமான அஸ்னாப்பார் அவ்விடங்களிலிருந்து சமாரியா நகருக்கும் ஐபிராத்து நதிக்கு மேற்கிலுள்ள நாட்டின் மற்ற பகுதிகளுக்கும், நகர்த்தப்பட்ட மற்ற ஜனங்களிடமிருந்தும்,
11 அர்தசஷ்டா ராஜாவுக்கு,
ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பக்கம் வாழும் உங்கள் சேவகர்களாகிய ஜனங்கள் எழுதிக்கொள்வது:
12 அர்தசஷ்டா ராஜாவே, உங்களால் அனுப்பப்பட்ட யூதர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த நகரத்தை மீண்டும் கட்ட முயல்கிறார்கள். எருசலேம் ஒரு எதிர்ப்பு தெரிவிக்கின்ற நகரம். இந்நகரிலுள்ள ஜனங்கள் எப்பொழுதும் ராஜாக்களுக்கு எதிராகக் கலகம் செய்திருக்கின்றார்கள். இப்போது அந்த யூதர்கள் அஸ்திபாரங்களைப் போட்டு சுவர்களைக் கட்டி கொண்டிருக்கிறார்கள்.
13 மேலும் ராஜா அர்தசஷ்டாவே, எருசலேமும் அதன் சுவர்களும் எழுப்பப்பட்டால், எருசலேம் ஜனங்கள் வரிக் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள் என்பதை நீர் அறிய வேண்டும். உங்களுக்குக் கொடுக்கிற காணிக்கைகளையும் நிறுத்திவிடுவார்கள். அவர்கள் கடமை வரிகளையும் கட்டமாட்டார்கள். ராஜா அந்தப் பணம் முழுவதையும் இழந்துவிடுவீர்கள்.
14 நாங்கள் ராஜாவுக்குப் பொறுப்பு உள்ளவர்கள். இவ்வாறு நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. இதை ராஜாவுக்குத் தெரிவிக்கும் பொருட்டே இந்தக் கடிதத்தை அனுப்புகிறோம்.
15 ராஜா அர்தசஷ்டாவே, உங்களுக்கு முன்னால் அரசாண்ட ராஜாக்கள் எழுதி வைத்தவற்றை நீங்கள் தேடி எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அவற்றில் எருசலேம் எப்பொழுதும் ராஜாக்களுக்கு எதிராகக் கலகம் செய்திருப்பதை நீங்கள் காண முடியும். இதனால் பல நாடுகளுக்கும் ராஜாக்களுக்கும் தொல்லைகள் ஏற்பட்டன. ஆரம்ப காலம் முதலே பல கலகங்கள் இங்கே நடந்திருக்கின்றன. அதனால்தான் எருசலேம் அழிக்கப்பட்டது.
16 ராஜா அர்தசஷ்டாவே, இந்த நகரமும் இதன் சுவர்களும் மீண்டும் எழுப்பப்பட்டால், ஐபிராத்து ஆற்றுக்கு மேற்கு பகுதியில் உள்ள உங்கள் கட்டுப்பாட்டை நீங்கள் இழப்பீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் விரும்புகிறோம், என்று எழுதியிருந்தார்கள்.
17 பிறகு ராஜா அர்தசஷ்டா இந்தப் பதிலை எழுதினான்:
தலைமை அதிகாரியான ரெகூமுக்கும், செயலாளரான சிம்சாயிக்கும், சமாரியாவில் வாழ்கின்ற மற்ற ஜனங்களுக்கும் ஐபிராத்து ஆற்றின் மேற்கு பகுதியில் வாழ்கின்ற ஜனங்களுக்கும்,
வாழ்த்துக்கள்.
18 நீங்கள் எனக்கு அனுப்பியக் கடிதம் மொழி பெயர்க்கப்பட்டு எனக்கு வாசிக்கப்பட்டது. 19 எனக்கு முன்னால் இருந்த ராஜாக்கள் எழுதி வைத்ததை எல்லாம் தேடிட கட்டளையிட்டேன். எழுதப்பட்டவற்றை வாசித்தேன். எருசலேமில் ராஜாக்களுக்கு எதிரான ஒரு நீண்ட கலக வரலாறு இருப்பதை அறிந்தேன். அடிக்கடி அங்கு கலகக்காரர்கள் கலகம் செய்வதற்கான இடமாக உள்ளது. 20 ஐபிராத்து ஆற்றுக்கு மேற்கிலுள்ள பகுதி முழுவதையும் ஆட்சி செய்த வலிமைமிக்க ராஜாக்களை எருசலேம் பெற்றிருந்திருக்கிறது. ராஜாக்களைக் கௌரவிக்க வரிகளும், பணமும் செலுத்தப்பட்டன மேலும் அவ்வரசர்களுக்குக் கப்பங்களும் கட்டப்பட்டன.
21 இப்போது, நீங்கள் அவர்களின் வேலையை நிறுத்தும்படி கட்டளையிட வேண்டும். நான் மீண்டும் கூறும்வரை வேலைகள் நிறுத்தப்பட வேண்டும். 22 இந்த காரியத்தில் அசட்டையாய் இருக்காதீர்கள். எருசலேம் வேலைகள் தொடரக் கூடாது. அது தொடர்ந்தால், நான் எருசலேமில் இருந்து எவ்விதப் பணமும் பெற முடியாது.
23 எனவே இக்கடிதத்தின் பிரதி ஒன்று ரெகூமுக்கும், காரியக்காரனான சிம்சாயிக்கும், அவனோடு உள்ள மற்ற ஜனங்களுக்கும் வாசித்து காட்டப்பட்டது. பின் அவர்கள் விரைவாக யூதர்களிடம் சென்று அவர்களது கட்டிடவேலையை நிறுத்தினார்கள்.
ஆலயத்தின் வேலை நிறுத்தப்படுகிறது
24 எனவே எருசலேமில் தேவனுடைய ஆலய வேலை நிறுத்தப்பட்டது. பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ஆட்சிச் செய்த இரண்டாவது ஆண்டுவரை வேலை தொடரப்படவில்லை.
5 அப்போது, ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தேவனுடைய பெயரால் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தனர். அவர்கள் யூதாவிலும் எருசலேமிலும் யூதர்களை உற்சாகப்படுத்தினார்கள். 2 எனவே செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் மீண்டும் எழுந்து எருசலேமில் ஆலய வேலையை ஆரம்பித்தனர். தேவனுடைய தீர்க்கதரிசிகள் அனைவரும் அவர்களோடு இருந்து, அவர்கள் வேலைக்கு பக்கப்பலமாக இருந்தார்கள். 3 அப்போது தத்னாய் ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதிக்கு ஆளுநராக இருந்தான். தத்னாயும், சேத்தார் பொஸ்னாயும், அவர்களுடன் இருந்தவர்களும் செருபாபேலிடமும், யெசுவா மற்றும் அவர்களோடு இருந்தவர்களிடம் சென்றார்கள். தத்னாயும், அவனோடு வந்தவர்களும் செருபாபேல் மற்றும் அவனுடனிருந்தவர்களிடம், “இந்த ஆலயத்தை மீண்டும் புதிதாகக் கட்ட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று கேட்டார்கள். 4 மேலும் அவர்கள் செருபாபேலிடம், “இக்கட்டிடத்திற்காக வேலைச் செய்பவர்களின் பெயர்கள் எல்லாம் என்ன?” என்றும் கேட்டனர்.
5 ஆனால் தேவன் யூதத் தலைவர்களைக் கவனித்துக் கொண்டு இருந்தார். கட்டிடம் கட்டுபவர்கள், இந்தச் செய்தி தரியுவினிடத்தில் போய் சேருகிறவரைக்கும் தம் வேலையை நிறுத்தவில்லை. கோரேசு ராஜா பதில் செல்லுகிறவரைக்கும் அவர்கள் தொடர்ந்து வேலைச் செய்தனர்.
6 ஐபிராத்து ஆற்றின் மேற்குப்பகுதிக்கு ஆளுநரான தத்னாயும், சேத்தார் பொஸ்னாயும், மேலும் சில முக்கியமான ஜனங்களும் ராஜாவாகிய தரியுவுக்குக் கடிதம் அனுப்பினார்கள். 7 இதுதான் அக்கடிதத்தின் நகல்:
தரியு ராஜாவுக்கு, வாழ்த்துக்கள்.
8 தரியு ராஜாவே! நாங்கள் யூதா பகுதிக்குப் போனது உமக்குத் தெரியும். நாங்கள் மகா தேவனுடைய ஆலயத்திற்குப் போனோம். யூதாவிலுள்ள ஜனங்கள் அவ்வாலயத்தைப் பெரிய கற்களால் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவர்களில் பெரிய மரத்தடிகளை வைத்துக்கொண்டிருந்தனர். மிகக் கவனமாக வேலை நடந்துக்கொண்டிருந்தது. யூதா ஜனங்கள் கடுமையாக வேலைச் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் வேலையை விரைவாகச் செய்கின்றனர், அது விரைவில் முடியும்.
9 அவர்களின் தலைவர்களிடம் அவர்கள் செய்துகொண்டிருந்த வேலைகளைக் குறித்து சில கேள்விகளைக் கேட்டோம். அவர்களிடம், “இவ்வாலயத்தைப் புதிது போல கட்ட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று நாங்கள் கேட்டோம். 10 அவர்களின் பெயர்களையும் நாங்கள் கேட்டோம். அவர்களின் தலைவர்கள் பெயரை நீங்கள் தெரிந்துக்கொள்ளும்படி எழுதிவைக்க நாங்கள் விரும்பினோம்.
11 அவர்கள் சொன்ன பதில் இதுதான்:
நாங்கள் பூமிக்கும், பரலோகத்திற்கும் தேவனுடைய ஊழியர்கள். இஸ்ரவேலின் மிகப் பெரிய ராஜா பல ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிமுடித்த ஆலயத்தை நாங்கள் திரும்பக் கட்டிக்கொண்டிருக்கிறோம். 12 ஆனால் எங்கள் முற்பிதாக்கள் பரலோகத்தின் தேவனுக்கு கோபம் வரும்படி நடந்துக்கொண்டார்கள். எனவே தேவன் எங்கள் முற்பிதாக்களை நேபுகாத்நேச்சாரிடம் கொடுத்தார். அவன் இந்த ஆலயத்தை அழித்தான். ஜனங்களை பலவந்தமாக பாபிலோனுக்கு கைதிகளாக அழைத்துச் சென்றான். 13 ஆனால், கோரேசு பாபிலோனின் ராஜாவாகிய முதல் ஆண்டில், தேவனுடைய ஆலயத்தை மீண்டும் கட்டும்படி கட்டளையிட்டான். 14 கடந்த காலத்தில் தேவனுடைய ஆலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொன் மற்றும் வெள்ளிப் பொருட்களை, பாபிலோனில் உள்ள நேபுகாத்நேச்சாரின் ஆலயத்திலிருந்து கோரேசு கொண்டு வந்தான். எருசலேமில் உள்ள ஆலயத்தில் இருந்து நேபுகாத்நேச்சார் அவற்றைப் பாபிலோனில் உள்ள ஆலயத்திற்கு எடுத்துச் சென்றான். ராஜா கோரேசு, அப்பொன் மற்றும் வெள்ளிப் பொருட்களை செஸ்பாத்சாரிடம் (செருபாபேலிடம்) கொடுத்தான். கோரேசு செஸ்பாத்சாரை ஆளுநராகத் தேர்ந்தெடுத்தான்.
15 பிறகு கோரேசு செஸ்பாத்சாரிடம், “இந்தப் பொன்னையும் வெள்ளியையும் எடுத்து போய் எருசலேமில் உள்ள ஆலயத்தில் திரும்ப வை. முன்பு ஆலயம் இருந்த அதே இடத்தில் மீண்டும் ஆலயத்தைக் கட்டு” என்றான்.
16 எனவே செஸ்பாத்சார் வந்து தேவனுடைய ஆலயத்திற்கு எருசலேமில் அஸ்திவாரம் அமைத்தான். அன்றிலிருந்து இன்று வரை வேலைத் தொடர்கிறது. ஆனால் அது இன்னும் முடியவில்லை.
17 இப்போது, ராஜா விரும்பினால் ராஜாவினுடைய பழைய அதிகாரப்பூர்வமானப் பத்திரங்களைத் தேடிப்பாருங்கள். கோரேசு ராஜா எருசலேமில் தேவனுக்காக ஆலயம் கட்ட கட்டளையிட்டது உண்மை என்றால், பிறகு ஒரு கடிதத்தை எங்களுக்கு அனுப்புங்கள். அதில் இனி நாங்கள் என்ன செய்வது என்பது பற்றி குறிப்பிடுங்கள் என்று எழுதியிருந்தனர்.
இயேசுவின் உயிர்ப்பு
(மத்தேயு 28:1-10; மாற்கு 16:1-8; லூக்கா 24:1-12)
20 வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் மகதலேனா மரியாள், இயேசுவின் சரீரம் இருந்த கல்லறைக்குச் சென்றாள். அது அப்பொழுதும் இருளாக இருந்தது. கல்லறை வாசலை மூடியிருந்த பெரிய கல் விலக்கி வைக்கப்பட்டிருப்பதை அவள் கண்டாள். 2 எனவே மரியாள் சீமோன் பேதுருவிடமும் இன்னொரு சீஷனிடமும் (இயேசு நேசித்தவன்) ஓடிச் சென்று “அவர்கள் கர்த்தரது சரீரத்தைக் கல்லறையைவிட்டு அப்புறப்படுத்திவிட்டனர். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றாள்.
3 உடனே பேதுருவும் இன்னொரு சீஷனும் கல்லறையை நோக்கிப் போனார்கள். 4 இருவரும் ஓடினாலும், பேதுருவைவிட அடுத்தவன் வேகமாக ஓடிப் போனான். எனவே அந்த சீஷன் முதலில் கல்லறையை அடைந்தான். 5 அவன் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்தான். துண்டுத்துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். ஆனால் உள்ளே அவன் போகவில்லை.
6 பிறகு சீமோன் பேதுரு அவனுக்குப் பின்னால் வந்தான். பேதுரு கல்லறைக்குள்ளே போனான். 7 அங்கே துணிகள் கிடப்பதைப் பார்த்தான். தலையில் சுற்றப்பட்ட துணி தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. 8 பிறகு அடுத்த சீஷனும் உள்ளே போனான். இந்த சீஷன்தான் கல்லறையை முதலாவது ஓடிவந்து சேர்ந்தவன். அவன் நிகழ்ந்ததை எல்லாம் பார்த்து நம்பிக்கைகொண்டான். 9 (இந்த சீஷர்கள், வேதவாக்கியங்களின்படி இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழவேண்டும் என்று இன்னும் புரிந்துகொள்ளாமல் இருந்தனர்)
மகதலேனா மரியாளுக்குக் காட்சி
(மாற்கு 16:9-11)
10 பிறகு அவரது சீஷர்கள் வீட்டிற்குத் திரும்பிப்போனார்கள். 11 ஆனால் மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள். அவ்வாறு அழும்போதே, அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்தாள். 12 வெள்ளை உடைகள் அணிந்த இரு தேவ தூதர்களைப் பார்த்தாள். இயேசுவின் சரீரம் இருந்த இடத்தில் அவர்கள் இருந்தனர். இயேசுவின் தலை இருந்த இடத்தில் ஒரு தேவதூதனும் அவரது பாதங்கள் இருந்த இடத்தில் இன்னொரு தேவதூதனும் இருப்பதைக் கண்டாள்.
13 அந்த தேவதூதர்கள் மரியாளிடம், “பெண்ணே! ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டனர்.
“சிலர் என் ஆண்டவரின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்றாள் மரியாள். 14 அவள் இவ்வாறு சொல்லிவிட்டு திரும்பியபோது இயேசு நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். ஆனால் அவர்தான் இயேசு என்பதை அவள் அறிந்துகொள்ளவில்லை.
15 இயேசு அவளிடம், “பெண்ணே! ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார்.
மரியாள் அவரை, அந்தத் தோட்டத்தின் காவல்காரனாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். எனவே அவள் அவரிடம், “ஐயா, நீங்களா இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனீர்கள்? அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நான் போய் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றாள்.
16 இயேசு “மரியாளே” என்று அழைத்தார்.
மரியாள் திரும்பி இயேசுவைப் பார்த்து, “ரபூனீ” என்று யூத மொழியில் கூப்பிட்டாள். (இதற்கு போதகரே என்று பொருள்)
17 இயேசு அவளிடம், “என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவிடம் திரும்பிச் செல்லவில்லை. ஆனால் போய் என் சகோதரர்களிடம், ‘நான் என் பிதாவிடமும் உங்களின் பிதாவிடமும் செல்கிறேன். நான் என் தேவனிடமும் உங்களின் தேவனிடமும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார்.
18 மகதலேனா மரியாள் சீஷர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைப் பார்த்தேன்” என்று சொன்னாள். அதோடு அவர் சொன்னவற்றையும் சொன்னாள்.
சீஷர்களுக்கு இயேசுவின் காட்சி
(மத்தேயு 28:16-20; மாற்கு 16:14-18; லூக்கா 24:36-49)
19 அன்று வாரத்தின் முதல்நாள். அன்று மாலையில் சீஷர்கள் கூடினர். கதவுகள் அடைக்கப்பட்டன. ஏனென்றால் அவர்கள் யூதர்களுக்குப் பயந்தனர். அப்பொழுது இயேசு வந்து அவர்களின் நடுவில் நின்றார். “சமாதானம் உங்களோடு இருக்கட்டும்” என்றார். 20 அவர் இதனைச் சொன்ன பிறகு, தனது சீஷர்களிடம் தனது கைகளையும் விலாவையும் காட்டினார். அவர்கள் கர்த்தரைப் பார்த்ததும் பெரிதும் மகிழ்ந்தனர்.
21 பிறகு மீண்டும் அவர்களிடம் இயேசு, “சமாதானம் உங்களோடு இருக்கட்டும். பிதா என்னை அனுப்பினார். அதே விதமாக நான் இப்பொழுது உங்களை அனுப்புகிறேன்” என்றார். 22 இயேசு அதைச் சொன்ன பிறகு, அவர் சீஷர்கள்மேல் ஊதினார். “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 நீங்கள் மக்களது பாவங்களை மன்னித்தால் அவை மன்னிக்கப்படும். நீங்கள் மக்களது பாவங்களை மன்னிக்காவிட்டால் அவை மன்னிக்கப்படாது” என்று கூறினார்.
தோமாவுக்கு காட்சி
24 இயேசு அங்கு தோன்றியபோது தோமா சீஷர்களுடன் இல்லை. அவரது பன்னிரண்டு சீஷர்களுள் தோமாவும் ஒருவன். 25 ஏனைய சீஷர்கள் “நாங்கள் ஆண்டவரைப் பார்த்தோம்” என்று தோமாவிடம் சொன்னார்கள். அதற்கு தோமா “நான் அவரது கைகளில் ஆணிகளின் துவாரங்களைக் காணும்வரை நீங்கள் சொல்வதை நம்பமாட்டேன். அப்படிப் பார்த்தாலும் அந்த ஆணித் துவாரங்களில் எனது விரல்களையும், விலாகாயத்தில் எனது கைகளையும் வைத்துப் பார்ப்பேன். இல்லாவிட்டால் நான் நம்பமாட்டேன்” என்றான்.
26 ஒரு வாரத்திற்குப் பின் சீஷர்கள் முன்புபோல் அந்த வீட்டில் மீண்டும் கூடினர். தோமா அவர்களோடு இருந்தான். கதவுகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் இயேசு வந்து அவர்களின் நடுவில் நின்றார். “சமாதானம் உங்களோடு இருக்கட்டும்” என்றார். 27 பிறகு இயேசு தோமாவிடம் “உனது விரல்களை இங்கே வை. எனது கைகளைப் பார். எனது விலாவிலே உன் கையை வைத்துப் பார். சந்தேகத்தை விட்டுவிடு. விசுவாசி” என்றார்.
28 அதற்குத் தோமா இயேசுவிடம், “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று பதில் சொன்னான்.
29 இயேசு அவனிடம், “நீ என்னைப் பார்த்ததால் விசுவாசிக்கிறாய். என்னைப் பாராமலேயே எவர் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பாக்கியவான்கள்” என்றார்.
இப்புத்தகத்தை எழுதினதின் நோக்கம்
30 இயேசு அவரது சீஷர்களுக்கு முன்பு அநேக வேறு அற்புதங்களைச் செய்து காட்டினார். அவை இந்நூலில் எழுதப்படவில்லை. 31 ஆனால் இயேசுவே கிறிஸ்து என்றும் தேவனின் குமாரன் என்றும் நீங்கள் நம்பும்படிக்கும், அதோடு நம்பிக்கையின் மூலம் அவரது பெயரால் நித்திய வாழ்வைப் பெறவும் இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
2008 by World Bible Translation Center