Old/New Testament
யூதா கானானியரோடு போரிடுதல்
1 யோசுவா மரணமடைந்தான். அப்போது இஸ்ரவேலர் கர்த்தரிடம் ஜெபம் செய்தார்கள். அவர்கள், “கானானியரை எதிர்த்து முதலில் சென்று எங்களுக்காக போரிட வேண்டிய கோத்திரத்தினர் யார்?” என்று கேட்டார்கள்.
2 கர்த்தர் இஸ்ரவேலரிடம், “யூதா கோத்திரத்தினர் செல்வார்கள். அவர்கள் இந்த தேசத்தைப் பெற அனுமதிப்பேன்” என்றார்.
3 சிமியோன் கோத்திரத்தைச் சேர்ந்த தங்கள் சகோதரரிடம் யூதா ஜனங்கள் உதவி வேண்டினார்கள். யூதாவின் மனிதர்கள், “சகோதரர்களே, நம் ஒவ்வொருவருக்கும் சில நிலங்களைக் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்தார். எங்கள் நிலத்தைப் பெற நீங்கள் வந்து உதவினால், உங்கள் தேசத்தைப் பெறுவதற்கு நீங்கள் போரிடும்போது நாங்கள் வந்து உதவுவோம்” என்றார்கள். சிமியோனின் குடும்பத்தினர் போரில் யூதா மனிதருக்கு உதவ ஒப்புக்கொண்டனர்.
4 கானானியரையும் பெரிசியரையும் தோற்கடிக்க யூதாவின் ஆட்களுக்கு கர்த்தர் உதவினார். பேசேக் நகரில் யூதா ஜனங்கள் 10,000 ஆட்களைக் கொன்றார்கள். 5 பேசேக்கில் யூதா ஜனங்கள் பேசேக்கின் அரசனைக் கண்டு, அவனோடு போரிட்டார்கள். யூதா ஜனங்கள் கானானியரையும் பெரிசியரையும் வென்றார்கள்.
6 பேசேக்கின் அரசன் தப்பிச்செல்ல முயன்றான். ஆனால் யூதா ஜனங்கள் அவனைத் துரத்திப் பிடித்தனர். அவனைப் பிடித்தபின் அவனது கை, கால் பெருவிரல்களைத் துண்டித்தனர். 7 அப்போது பெசேக்கின் அரசன், “70 அரசர்களின் கை, கால் பெருவிரல்களை நான் துண்டித்தேன். எனது மேசையிலிருந்து விழுந்த உணவுத் துணிக்கைகளை அந்த அரசர்கள் புசித்தார்கள். நான் அந்த அரசர்களுக்குச் செய்தவற்றிற்கான தண்டனையை தேவன் எனக்குத் தந்தார்” என்றான். யூதா மனிதர்கள் பேசேக்கின் அரசனை எருசலேமிற்குக் கொண்டு சென்றார்கள். அவன் அங்கு மரித்தான்.
8 யூதா மனிதர்கள் எருசேலேமுக்கு எதிராகப் போரிட்டு அதனைப் பிடித்தார்கள். எருசலேம் ஜனங்களைக் கொல்ல யூதா மனிதர்கள் தங்கள் வாள்களைப் பயன்படுத்தினார்கள். பின்பு நகரை எரித்தார்கள். 9 பின்னர் யூதா மனிதர்கள் கானானியர் சிலரை எதிர்த்துப் போரிடச் சென்றார்கள். அந்தக் கானானியர்கள் பாலைவனப்பகுதியிலும், மலை நாட்டிலும், மேற்கு மலையடிவாரங்களிலும் வசித்தார்கள்.
10 பின்பு யூதா மனிதர்கள் எபிரோன் நகரில் வாழ்ந்த கானானியரோடு போரிடச் சென்றார்கள் (எபிரோன், ”கீரியாத்அர்பா” என்றும் அழைக்கப்பட்டது.) சேசாய், அகிமான், தல்மாய் ஆகிய மனிதர்களையும் யூதாவின் ஜனங்கள் தோற்கடித்தனர்.
காலேபும் அவனது மகளும்
11 யூதாவின் மனிதர்கள் அவ்விடத்தை விட்டுக் கிளம்பி தெபீர் நகர ஜனங்களோடு போரிடுவதற்குச் சென்றார்கள். (முன்பு, தெபீர், கீரியாத்செப்பேர் என அழைக்கப்பட்டது.) 12 யூதா மனிதர்கள் போரிடத் துவங்கும் முன்னர், காலேப் அவர்களிடம், “நான் கீரியாத்சேப்பேரைத் தாக்க விரும்புகிறேன். அந்நகரைத் தாக்கிக் கைப்பற்றுகிற மனிதனுக்கு என் மகள் அக்சாளைக் கொடுப்பேன். அம்மனிதன் எனது மகளைத் திருமணம் செய்து கொள்ளட்டும்” என்று வாக்குறுதி அளித்தான்.
13 காலேபுக்குக் கேனாஸ் என்னும் பெயருடைய இளைய சகோதரன் ஒருவன் இருந்தான் அவனுக்கு ஒத்னியேல் என்னும் பெயருடைய மகன் இருந்தான். கீரியாத் செப்பேர் என்னும் நகரை ஒத்னியேல் கைப்பற்றினான். எனவே ஒத்னியேலுக்கு மனைவியாகும்படி காலேப் தன் மகள் அக்சாளைக் கொடுத்தான்.
14 அக்சாள் ஒத்னியேலோடு வாழும்படி புறப்பட்டுச் சென்றபோது அவளது தந்தையிடம் கொஞ்சம் நிலம் கேட்கும்படியாக ஒத்னியேல் அக்சாளிடம் சொன்னான். அக்சாள் தன் தந்தையிடம் சென்றாள். அவன் கழுதையிலிருந்து இறங்கியதும், காலேப் அவளை நோக்கி, “என்ன நிகழ்ந்தது?” என்றான்.
15 அக்சாள் காலேபுக்குப் பதிலாக, “என்னை ஆசீர்வதியுங்கள். பாலைவனப் பகுதியிலுள்ள வறட்சியான நிலத்தை எனக்குக் கொடுத்தீர்கள். தண்ணீருள்ள நிலத்தில் கொஞ்சம் எனக்குக் கொடுங்கள்” என்றாள். அவளுக்கு வேண்டியதை காலேப் கொடுத்தான். அந்நிலத்தின் மேலும் கீழும் தண்ணீர் நிலைகள் இருந்த பகுதியைக் கொடுத்தான்.
16 ஈச்சமரங்களின் நகரத்தை (எரிகோவை) விட்டுக் கேனிய ஜனங்கள் யுதாவின் ஜனங்களோடு புறப்பட்டு, யூதாவின் பாலை நிலத்திற்கு அங்குள்ள ஜனங்களோடு வாழ்வதற்காகப் போனார்கள். ஆராத் நகரத்திற்கு அருகேயுள்ள பாலைவனப் பகுதியில் இது இருந்தது. (மோசேயின் மாமனாரின் குடும்பத்தைச் சார்ந்தோர் கேனிய ஜனங்களாவர்.)
17 சேப்பாத் நகரில் சில கானானியர் வாழ்ந்தனர். யூதாவின் மனிதர்களும் சிமியோனின் மனிதர்களும் அந்தக் கானானியரைத் தாக்கி, அவர்கள் நகரத்தை முழுமையாக அழித்து, அந்நகரத்திற்கு ஓர்மா எனப் பெயரிட்டனர்.
18 காசாவையும் அதனைச் சூழ்ந்த ஊர்களையும் யூதாவின் ஜனங்கள் கைப்பற்றினர். அஸ்கலோன், எக்ரோன், நகரங்களையும், அவற்றைச் சுற்றிலுமுள்ள சிறு ஊர்களையும் யூதா ஜனங்கள் கைப்பற்றினார்கள்.
19 போர் நடந்தபோது கர்த்தர் யூதாவின் மனிதர்களோடிருந்தார். மலைநாட்டிலுள்ள ஊர்களை அவர்கள் பெற்றனர். பள்ளத்தாக்கில் வாழ்ந்த ஜனங்களிடம் இரும்பு இரதங்கள் இருந்ததால், யூதாவின் ஜனங்கள் அவர்கள் சத்துருக்களை வெற்றிகொள்ள முடியவில்லை.
20 எபிரோனுக்கு அருகேயுள்ள நிலத்தை காலேபிற்குக் கொடுப்பதாக மோசே வாக்களித்திருந்தான். எனவே அந்நிலம் காலேபின் குடும்பத்திற்குக் கொடுக்கப்பட்டது. காலேபின் மனிதர்கள் ஏனாக்கின் மூன்று மகன்களையும் அவ்விடத்தை விட்டுத் துரத்தினார்கள். பென்யமீன் மனிதர்கள் எருசலேமில் தங்குதல்
21 எபூசியரை எருசலேமைவிட்டு வெளியேற்ற பென்யமீன் கோத்திரத்தினரால் முடியவில்லை. எனவே இன்றும், எபூசியர் பென்யமீன் ஜனங்களோடு கூட எருசலேமில் வாழ்கிறார்கள்.
யோசேப்பின் மனிதர்கள் பெத்தேலைக் கைப்பற்றுதல்
22-23 யோசேப்பின் கோத்திரத்தினர் பெத்தேல் நகரை எதிர்த்துப் போர் செய்தனர். (கடந்த காலத்தில் பெத்தேல் லூஸ் எனப்பட்டது.) யோசேப்பின் கோத்திரத்தினரோடு கர்த்தர் இருந்தார். யோசேப் பின் குடும்பத்தைச் சேந்தவர்கள் பெத்தேல் நகரத்திற்குச் சில ஒற்றர்களை அனுப்பினார்கள். பெத்தேல் நகரைத் தோற்கடிப்பதற்குரிய வகைகளை இவர்கள் ஆராய்ந்தார்கள். 24 பெத்தேல் நகரத்தை ஒற்றர்கள் கவனித்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் நகரிலிருந்து வந்த ஒரு மனிதனைக் கண்டார்கள். ஒற்றர்கள் அம்மனிதனிடம், “நகரத்திற்குள் செல்லும் ஒரு இரகசிய வழியைக் காட்டு, நாங்கள் நகரைத் தாக்குவோம். நீ எங்களுக்கு உதவினால், உன்னைத் துன்புறுத்தமாட்டோம்” என்றார்கள்.
25 அம்மனிதன் ஒற்றர்களுக்கு நகரத்திற்குள் செல்லும் இரகசிய வழியைக் காட்டினான். யோசேப்பின் ஜனங்கள் தங்கள் வாள்களால் பெத்தேல் ஜனங்களைக் கொன்றார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு உதவிய மனிதனைத் துன்புறுத்தவில்லை. அம்மனிதனும் அவனது குடும்பமும் விடுதலையாகச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 26 ஏத்தியர் வாழ்ந்த தேசத்திற்கு அம்மனிதன் சென்று ஒரு நகரைக் கட்டினான். அந்நகரத்திற்கு லூஸ் என்று பேரிட்டான். இன்றைக்கும்கூட அந்நகரம் லூஸ் என்றே அழைக்கப்படுகிறது.
கானானியரோடு மற்ற கோத்திரங்கள் போரிடுதல்
27 பெத்செயான், தானாக், தோர், இப்லெயாம், மெகிதோ ஆகிய நகரங்களிலும் அவற்றைச் சூழ்ந்திருந்த சிறு நகரங்களிலும் கானானியர் வாழ்ந்து வந்தனர். மனாசே கோத்திரத்தினரால் அந்த ஜனங்களை நகரங்களிலிருந்து வெளியேற்ற முடியவில்லை. எனவே கானானியர் அங்கே தங்கினார்கள். அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுத்தனர். 28 பின்னர் இஸ்ரவேலர் பலமடைந்தனர். தங்களுக்கு அடிமைகளாக உழைக்குமாறு கானானியரை வற்புறுத்தினார்கள். ஆனால் எல்லாக் கானானியரையும் தங்கள் நிலத்தை விட்டுப் போகும்படி செய்ய இஸ்ரவேலரால் முடியவில்லை.
29 எப்பிராயீம் கோத்திரத்தினருக்கும் இவ்விதமாகவே நிகழ்ந்தது. கேசேரில் வாழ்ந்து கொண்டிருந்த கானானியரை அத்தேசத்தைவிட்டு வெளியேற்ற எப்பிராயீம் ஜனங்களால் முடியவில்லை. எப்பிராயீம் ஜனங்களோடு கேசேரில் கானானியரும் சேர்ந்து வாழ்ந்தனர்.
30 அதுவே செபுலோன் கோத்திரத்தினருக்கும் நிகழ்ந்தது. கித்ரோன், நகலோல் நகரங்களிலும் கானானியர் சிலர் வாழ்ந்தனர். செபுலோன் ஜனங்கள் அந்த ஜனங்களைத் தேசத்தை விட்டுச் செல்லுமாறு வற்புறுத்தவில்லை. அக்கானனியர் செபுலோன் ஜனங்களோடு தங்கி வாழ்ந்தனர். ஆனால் செபுலோன் ஜனங்கள் அவர்களைத் தங்களுக்கு அடிமைகளாக உழைக்கும்படி செய்தார்கள்.
31 அவ்வாறே ஆசேர் கோத்திரத்தினருக்கும் நிகழ்ந்தது. அக்கோ, சீதோன், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் ஆகிய நகரங்களிலுள்ள ஜனங்கள் வெளியேறுமாறு ஆசேர் ஜனங்கள் துரத்தவில்லை. 32 ஆசேர் ஜனங்கள் கானானியரை வெளியேற்றவில்லை. எனவே கானானியர் ஆசேர் ஜனங்களோடு சேர்ந்து தொடர்ந்து வாழ்ந்தனர்.
33 நப்தலி கோத்திரத்தினர் மத்தியிலும் அவ்வாறே நிகழ்ந்தது. நப்தலியின் ஜனங்கள் பெத்ஷிமேஸ், பெத்தானாத் நகரங்களைவிட்டு அங்கிருந்த ஜனங்களை வெளியேற்றவில்லை. எனவே அந்த ஜனங்கள் அந்நகரங்களில் நப்தலி ஜனங்களோடு சேர்ந்து வாழ்ந்தனர். அந்தக் கானானியர் நப்தலி ஜனங்களுக்கு அடிமைகளாகப் பணிபுரிந்தனர்.
34 தாண் ஜனங்கள் மலைநாட்டில் வசிக்கும்படியான நிலையை எமோரியர் உண்டு பண்ணினார்கள். பள்ளத்தாக்கில் வாழ்வதற்கு எமோரியர் அனுமதிக்காததால் அவர்கள் மலைகளில் வாழவேண்டியதாயிற்று. 35 ஏரேஸ் மலை, ஆயலோன், சால்பீம் ஆகியவற்றில் எமோரியர் வாழ முடிவெடுத்தனர். பின் யோசேப்பு கோத்திரத்தார் பலத்தில் பெருகினார்கள். அப்போது அவர்கள் எமோரியரை அடிமைகளாகப் பணியாற்றுமாறு செய்தனர். 36 ஸ்கார்பியன் கணவாய் வழியிலிருந்து சேலா வரைக்கும், சேலாவைத் தாண்டியுள்ள மலை நாடுகள் வரைக்கும், எமோரியரின் தேசம் பரவி இருந்தது.
போகீமில் கர்த்தருடைய தூதன்
2 கில்கால் நகரத்திலிருந்து கர்த்தருடைய தூதன் போகீம் நகரத்திற்குச் சென்றான். தூதன் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியை இஸ்ரவேலருக்குக் கூறினான். இதுவே அந்த செய்தி: “நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். உங்கள் முற் பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த தேசத்திற்கு உங்களை வழிநடத்தினேன். உங்களோடு செய்த உடன்படிக்கையை ஒருபோதும் மீறமாட்டேன் என்று உங்களுக்குக் கூறினேன். 2 ஆனால் அதற்குப் பதிலாக, நீங்கள் அந்த நிலத்தில் வாழும் ஜனங்களோடு எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது. அவர்களின் பலிபீடங்களை நீங்கள் அழிக்க வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்லியிருந்தேன். நீங்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை!
3 “இப்போது நான் உங்களுக்கு இதைக் கூறுகிறேன், ‘இவ்விடத்தை விட்டுப் போகும்படியாக அங்குள்ள ஜனங்களை இனிமேலும் நான் வற்புறுத்தமாட்டேன். இந்த ஜனங்கள் எப்போதும் உங்களுக்குப் பிரச்சனையாய் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு கண்ணியைப் போன்றிருப்பார்கள். உங்களைப் பிடிப்பதற்கு விரிக்கப்படும் வலையைப்போன்று அவர்களின் பொய்த் தெய்வங்கள் அமைவார்கள்’”.
4 கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைத் தூதன் இஸ்ரவேலருக்குக் கூறியபின், ஜனங்கள் உரத்தக்குரலில் அழுதனர். 5 அவர்கள் அங்கே அழுதபடியால், அதனைப் போகீம் என்று அழைத்தார்கள். போகீமில் இஸ்ரவேலர் கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்தினார்கள்.
கீழ்ப்படியாமையும் தோல்வியும்
6 பின் யோசுவா ஜனங்களை வீட்டிற்குப் போகச் சொன்னான். எனவே ஒவ்வொரு கோத்திரத்தினரும் தேசத்தில் அவரவருக்குரிய பகுதியை வாழ்வதற்காக எடுத்துக்கொள்ளச் சென்றனர். 7 யோசுவா உயிரோடிருக்கும்வரை இஸ்ரவேலர் கர்த்தரை சேவித்தனர். யோசுவா மரித்தபின்னரும் மூத்த தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் கர்த்தரைத் தொடர்ந்து சேவித்தனர். இஸ்ரவேல் ஜனங்களுக்காக கர்த்தர் செய்த எல்லா மகத்தான செயல்களையும் இந்த மூத்த மனிதர்கள் பார்த்திருந்தார்கள். 8 நூனின் மகனும், கர்த்தருடைய தாசனுமாகிய யோசுவா 110 வயதானபோது மரணமடைந்தான். 9 இஸ்ரவேலர் யேசுவாவை அவனுக்குக் கொடுத்திருந்த நிலத்திலேயே அடக்கம் செய்தனர். அது காயாஸ் மலைக்கு வடக்கே, எப்பிராயீம் மலை நாட்டில், திம்னாத் ஏரேஸ் என்ற இடத்தில் இருந்தது.
10 அந்தத் தலைமுறையினர் மரித்தபின், அடுத்த தலைமுறையினர் வளர்ந்து வந்தனர். புதிய தலைமுறையினர் கர்த்தரைக் குறித்தும் அவர் இஸ்ரவேலருக்குச் செய்தவற்றைக் குறித்தும் அறிந்திருக்கவில்லை. 11 எனவே இஸ்ரவேலர் தீயவற்றைச் செய்து பொய் தேவனான பாகாலை சேவிக்கத் தொடங்கினார்கள். ஜனங்கள் இந்த தீயகாரியத்தைச் செய்வதை கர்த்தர் கண்டார். 12 கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வந்திருந்தார். இந்த ஜனங்களின் முற்பிதாக்கள் கர்த்தரை ஆராதித்தனர். ஆனால் இஸ்ரவேலரோ கர்த்தரைப் பின்பற்றுவதை விட்டு விலகி, தங்களைச் சுற்றிலும் வாழ்ந்த ஜனங்களின் பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். அது கர்த்தரை கோபத்திற்குள்ளாக்கிற்று. 13 இஸ்ரவேலர் கர்த்தரை ஆராதிப்பதை விட்டு விட்டுப் பாகாலையும் அஸ்தரோத்தையும் தொழுது கொள்ளத் தொடங்கினார்கள்.
14 கர்த்தர் இஸ்ரவேலரிடம் கோபங்கொண்டார். பகைவர்கள் இஸ்ரவேலரை எதிர்த்து அவர்களுடைய உடமைகளைக் கைப்பற்றிக்கொள்ள கர்த்தர் அனுமதித்தார். பகைவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இஸ்ரவேலரால் முடியவில்லை. 15 இஸ்ரவேலர் போருக்குச் சென்ற போதெல்லாம், தோல்வியே கண்டனர். கர்த்தர் அவர்களோடு இல்லாதபடியால் அவர்கள் தோற்றனர். தங்களைச் சுற்றிலும் வாழ்கின்ற ஜனங்களின் பொய்த் தெய்வங்களைத் தொழுதால் அவர்கள் தோற்று விடுவார்கள் என்று கர்த்தர் அவர்களை ஏற்கெனவே எச்சரித்திருந்தார். இஸ்ரவேலர் மிகவும் துன்புற்றார்கள்.
16 பிறகு கர்த்தர் நியாயாதிபதிகள் என்று அழைக்கப்பட்ட தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார். இஸ்ரவேலரின் உடமைகளைக் கைப்பற்றிக் கொண்ட பகைவர்களிடமிருந்து அவர்களை இந்தத் தலைவர்கள் மீட்டார்கள். 17 ஆனால் நியாயாதிபதிகளின் வார்த்தைக்கு இஸ்ரவேலர்கள் கட்டுப்படவில்லை. அவர்கள் தேவனுக்கு உண்மையாக இருக்கவில்லை. அவர்கள் பிற தெய்வங்களைப் பின்பற்றினார்கள். கடந்த காலத்தில் இஸ்ரவேலரின் முற்பிதாக்கள் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். இப்போதோ இஸ்ரவேலர் மனம் மாறியவர்களாய், கர்த்தருக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தினார்கள்.
18 பலமுறை இஸ்ரவேலருக்குத் தம் பகைவர்களால் தீங்கு நேர்ந்தது. எனவே இஸ்ரவேலர் உதவி வேண்டினார்கள். ஒவ்வொரு முறையும், கர்த்தர் அவர்களுக்காக மனமிரங்கினார். ஒவ்வொரு முறையும், பகைவரிடமிருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்ற ஒரு நியாயதிபதியை அனுப்பினார். கர்த்தர் எப்பொழுதும் அந்த நியாயதிபதிகளோடு இருந்தார். எனவே ஒவ்வொரு முறையும் இஸ்ரவேலர் பகைவர்களிடமிருந்த காப்பாற்றப்பட்டனர். 19 ஆனால் ஒவ்வொரு நியாயாதிபதியும் மரித்தபோது இஸ்ரவேலர் மீண்டும் பாவம் செய்து, பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். இஸ்ரவேலர் பிடிவாதம் மிக்கவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் தீய வழிகளை மாற்றிக் கொள்ளமறுத்தனர்.
20 எனவே கர்த்தர் இஸ்ரவேலர் ஜனங்களிடம் மிகவும் கோபமடைந்தார். அவர், “இத்தேசத்தின் முற்பிதாக்களுடன் நான் செய்து கொண்ட உடன்படிக்கையை இவர்கள் மீறினார்கள். இவர்கள் நான் கூறியவற்றைக் கேட்டு நடக்கவில்லை. 21 எனவே இனிமேல் நான் பிறரைத் தோற்கடித்து இஸ்ரவேலருக்கு வழியைச் சரிப்படுத்திக் கொடுக்கமாட்டேன். யோசுவா மரித்த போது அந்நிய ஜனங்கள் இந்த தேசத்திலேயே இருந்தனர். மேலும் அவர்களை இந்த தேசத்திலேயே இருக்கவிடுவேன். 22 இஸ்ரவேலரைப் பரிசோதிப்பதற்கு அந்த ஜனங்களைப் பயன்படுத்துவேன். தங்கள் முற்பிதாக்கள் செய்ததைப்போல இஸ்ரவேலர் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்களா என்பதை நான் பார்ப்பேன்” என்றார். 23 கர்த்தர் அந்த ஜனங்கள் அந்தத் தேசத்தில் தங்கி வாழ அனுமதித்தார். தேசத்தை விட்டு அவர்கள் சீக்கிரமாய் வெளியேற கர்த்தர் அவர்களை வற்புறுத்தவில்லை. யோசுவாவின் இராணுவம் அவர்களைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் உதவவில்லை.
3 இஸ்ரவேலரின் தேசத்தை விட்டுப் போகும்படி கர்த்தர் பிற நாட்டினரை வற்புறுத்தவில்லை. கர்த்தர் இஸ்ரவேலரைச் சோதிக்க விரும்பினார். கானான் தேசத்தை எடுத்துக்கொள்ள இக்காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர் எவரும் போர் செய்யவில்லை. எனவே கர்த்தர் பிறஜனத்தார் அத்தேசத்தில் வாழ அனுமதித்தார். (ஏற்கெனவே போர் அனுபவமற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்குப் போர் முறையைக் கற்பிக்க கர்த்தர் இதைச் செய்தார்.) கர்த்தர் அந்த தேசத்தில் விட்டு வைத்த ஜனங்களின் பெயர்கள்: 3 பெலிஸ்தியரின் ஐந்து அரசர்கள், கானானியர், சீதோனின் ஜனங்கள், பாகால் எர்மோன் மலையிலிருந்து லெபோ ஆமாத் வரைக்குமுள்ள லீபனோனின் மலைகளில் வாழ்ந்த ஏவியர்கள் ஆகியோர். 4 இஸ்ரவேலரைச் சோதிப்பதற்கென்று கர்த்தர் இந்த ஜனங்களை அந்த தேசத்தில் விட்டு வைத்தார். மோசேயின் மூலமாக அவர்களின் முற்பிதாக்களுக்கு கொடுத்த கட்டளைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிகிறார்களா என்று பார்க்க கர்த்தர் விரும்பினார்.
5 கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஜனங்களோடு இஸ்ரவேலர் வாழ்ந்தனர். 6 அந்த ஜனங்களின் பெண்களை இஸ்ரவேலர் மணந்துகொள்ள ஆரம்பித்தனர். தங்களது மகள்களை மணந்துகொள்ள அவர்களது ஆண்களையும் அனுமதித்தனர். இஸ்ரவேலர் அந்த ஜனங்களின் தெய்வங்களைத் தொழுதுகொள்ளவும் ஆரம்பித்தனர்.
முதல் நியாயாதிபதியாகிய ஒத்னியேல்
7 இஸ்ரவேலர் தீயக்காரியங்களில் ஈடுபடுவதை கர்த்தர் கண்டார். இஸ்ரவேலர் தமது தேவனாகிய கர்த்தரை மறந்து பொய்த் தெய்வங்களாகிய பாகாலையும், அசேராவையும் தொழத்தொடங்கினர். 8 இஸ்ரவேலர்கள் மீது கர்த்தர் கோபங்கொண்டார். மெசொ பொத்தாமியாவின் அரசனாகிய கூசான்ரிஷதாயீம் என்பவன் இஸ்ரவேலரைத் தோற்கடித்து அவர்களை ஆள்வதற்கு கர்த்தர் அனுமதித்தார். அம்மன்னனின் ஆட்சியின் கீழ் இஸ்ரவேலர் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தனர். 9 ஆனால் இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக அழுது வேண்டினார்கள். அவர்களை மீட்பதற்காக கர்த்தர் ஒரு மனிதனை அனுப்பினார். அம்மனிதனின் பெயர் ஒத்னியேல். அவன் கேனாஸ் என்னும் மனிதனின் மகன். கேனாஸ் காலேபின் இளைய சகோதரன். ஒத்னியேல் இஸ்ரவேலரைக் காப்பாற்றினான். 10 கர்த்தருடைய ஆவி ஒத்னியேல் மீது வந்தது. அவன் இஸ்ரவேலருக்கு நியாயாதிபதி ஆனான். ஒத்னியேல் இஸ்ரவேலரைப் போருக்கு வழிநடத்தினான். மெசொப்பொத்தாமியாவின், அரசனாகிய கூஷான்ரிஷதாயீமை வெல்வதற்கு கர்த்தர் ஒத்னியேலுக்கு உதவினார். 11 எனவே கேனாசின் மகனாகிய ஒத்னியேல் மரிக்கும்வரைக்கும் 40 ஆண்டுகள் தேசம் அமைதியாக இருந்தது.
நியாயாதிபதியாகிய ஏகூத்
12 மீண்டும் இஸ்ரவேலர் தீயகாரியங்களைச் செய்வதை கர்த்தர் கவனித்தார். எனவே மோவாபின் அரசனாகிய எக்லோனுக்கு இஸ்ரவேலரைத் தோற்கடிக்கும் ஆற்றலை அளித்தார். 13 அம்மோனியரும், அமலேக்கியரும் எக்லோனுக்கு உதவினார்கள். அவர்கள் அவனோடு சேர்ந்து இஸ்ரவேலரைத் தாக்கி ஈச்சமரங்களின் நகரமாகிய எரிகோவை விட்டு அவர்கள் போகுமாறு செய்தனர். 14 மோவாபின் அரசனாகிய எக்லோனுக்கு இஸ்ரவேலர்கள் 18 ஆண்டுகள் அடிபணிந்து இருந்தார்கள்.
15 பின் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரிடம் வந்து அழுதார்கள். இஸ்ரவேலரை மீட்பதற்கு கர்த்தர் ஒரு மனிதனை அனுப்பினார். அம்மனிதனின் பெயர் ஏகூத். அவன் இடது கைப் பழக்கமுடையவனாயிருந்தான். ஏகூத் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கேரா என்பவனின் மகன். மோவாபின் அரசனாகிய எக்லோனுக்கு கப்பம் செலுத்தி வருமாறு இஸ்ரவேலர் ஏகூதை அனுப்பினார்கள். 16 ஏகூத் தனக்காக ஒரு வாளைச் செய்து கொண்டான். அது இருபுறமும் கருக்குள்ளதாகவும் 12 அங்குல நீளமுடையதாகவும் இருந்தது. ஏகூத் தன் வலது தொடையில் வாளைக் கட்டிக்கொண்டு தனது ஆடைகளினுள் அதை மறைத்துக்கொண்டான்.
17 இவ்வாறு ஏகூத் மோவாபின் அரசன் எக்லோனுக்குக் கப்பம் கொண்டு வந்தான். எக்லோன் பருத்த உடல் உடையவன். 18 ஏகூத் எக்லோனுக்கு கப்பம் கொடுத்தபின், கப்பம் கொண்டுவந்த மனிதர்களை ஊருக்குத் திரும்பிச் செல்லுமாறு கூறினான். 19 கில்காலில் தெய்வங்களின் சிலைகளிலிருந்த இடத்திலிருந்து எக்லோன் திரும்பியபொழுது, ஏகூத் எக்லோனிடம், “அரசே, நான் உமக்காக ஒரு இரகசியச் செய்தி வைத்திருக்கிறேன்” என்றான்.
அரசன், “அமைதியாக இருங்கள்!” என்று சொல்லி அறையிலிருந்த பணியாட்களை வெளியே அனுப்பினான். 20 அரசனான எக்லோனுடன் ஏகூத் சென்றான். கோடைக் கால அரண்மனையிலுள்ள மேல் அறையில் எக்லோன் இப்போது தனித்தவனாய் உட்கார்ந்திருந்தான்.
ஏகூத், “தேவனிடமிருந்து ஒரு செய்தியை உமக்குக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றான். அரசன் சிங்காசனத்திலிருந்து எழுந்து நின்றான். அவன் ஏகூத்திற்கு மிக அருகில் இருந்தான்.
21 அரசன் சிங்காசனத்திலிருந்து எழுந்த போது, ஏகூத் தனது இடது கையை நீட்டி வலது தொடையில் கட்டப்பட்டிருந்த வாளை எடுத்து அவ்வாளை அரசனின் வயிற்றில் செருகினான்.
22 வாளின் பிடிகூட வெளியே தெரியாதபடி வாள் எக்லோனின் வயிற்றினுள் நுழைந்தது. அரசனின் பருத்த உடல் வாளை மறைத்தது. எனவே ஏகூத் வாளை எக்லோனின் உடம்பிலேயே விட்டுவிட்டான்.
23 ஏகூத் அறையிலிருந்து வெளியே வந்து கதவுகளை மூடிப் பூட்டிவிட்டான். 24 ஏகூத் புறப்பட்ட சற்று நேரத்தில் வேலையாட்கள் திரும்பிவந்து, அறையின் கதவுகள் மூடப்பட்டிருப்பதைக் கண்டனர். அவர்கள், “அரசன் கழிவறைக்குப் போயிருக்க வேண்டும்” என்று எண்ணினார்கள். 25 எனவே அவர்கள் அதிக நேரம் காத்திருந்தனர். இறுதியில் அவர்கள் கவலை அடைந்து கதவுகளைத் திறந்தனர். பணியாட்கள் உள்ளே நுழைந்தபோது அரசன் மரணமடைந்து, தரையில் கிடப்பதைப் பார்த்தனர்.
26 பணியாட்கள், அரசனுக்காகக் காத்திருந்தபோது, ஏகூத்திற்குத் தப்பிச்செல்ல போதுமான நேரம் இருந்தது. ஏகூத் விக்கிரகங்கள் இருந்த வழியே கடந்துசென்று சேயிரா என்னும் இடத்திற்குச் சென்றான். 27 சேயிராவை அடைந்ததும், அந்த எப்பிராயீம் மலைநாடுகளில் எக்காளம் ஊதினான். இஸ்ரவேலர் அதனைக் கேட்டு, ஏகூத்தின் பின்செல்ல மலைகளிலிருந்து இறங்கி வந்தனர். 28 ஏகூத் இஸ்ரவேலரிடம், “என்னைப் பின்பற்றுங்கள்! நமது பகைவராகிய மோவாபியரை வெல்வதற்கு கர்த்தர் எனக்கு உதவினார்” என்றான்.
எனவே இஸ்ரவேலர் ஏகூதைப் பின்பற்றினார்கள். யோர்தான் நதியை எளிதாகக் கடக்கக்கூடிய இடங்களுக்கெல்லாம் ஏகூதைப் பின்பற்றி அவற்றைக் கைப்பற்றுவதற்காகக் சென்றனர். ஒருவரும் யோர்தான் நதியைக் கடந்து செல்வதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அனுமதிக்கவில்லை. 29 மோவாபில் வலிமையும் துணிவும் உள்ள மனிதர்களில் சுமார் 10,000 பேரை இஸ்ரவேலர் கொன்றனர். மோவாபியரில் ஒருவனும் தப்பிச் செல்லவில்லை. 30 அன்றையதினம் இஸ்ரவேலர் மோவாபியரை ஆளத் தொடங்கினார்கள். அத்தேசத்தில் 80 ஆண்டுகள் அமைதி நிலவிற்று.
நியாயாதிபதியாகிய சம்கார்
31 ஏகூத் இஸ்ரவேலரை மீட்டுக் காத்த பின்பு, மற்றொரு மனிதன் இஸ்ரவேலரைக் காத்தான். அவன் ஆனாத்தின் மகனாகிய சம்கார். 600 பெலிஸ்தியர்களைச் சம்கார் தாற்றுக்கோலால் கொன்றான்.
இயேசு சோதிக்கப்படுதல்(A)
4 யோர்தான் நதியில் இருந்து இயேசு திரும்பினார். அவர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார். ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்திற்குச் செல்ல ஏவினார். 2 அங்கு பிசாசு இயேசுவை நாற்பது நாட்கள் சோதனைக்கு உட்படுத்தினான். அந்நாட்களில் இயேசு எதையும் உண்ணவில்லை. சோதனைக் காலமான அந்த நாட்கள் கழிந்த பின்னர், இயேசுவுக்கு மிகுந்த பசி உண்டாயிற்று.
3 பிசாசு இயேசுவை நோக்கி, “நீர் தேவனுடைய குமாரனானால், இந்தக் கல்லுகளை அப்பங்களாகும்படி சொல்லும்” என்றான்.
4 அதற்கு இயேசு, “வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
“‘மக்களை உயிரோடு பாதுகாப்பது அப்பம் மட்டுமல்ல,’” என்றார். (B)
5 அப்போது பிசாசு அவரை உயரமான ஓர் இடத்துக்கு அழைத்துக்கொண்டு போய் ஒரு நொடிக்குள் உலகின் எல்லா இராஜ்யங்களையும் காண்பித்தான். 6 பிசாசு இயேசுவை நோக்கி, “உனக்கு இந்த எல்லா இராஜ்யங்களையும், அதிகாரங்களையும், அவற்றின் மகிமையையும் கொடுப்பேன். அவை எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நான் கொடுக்க விரும்புகிறவனுக்கு அவற்றைக் கொடுக்கமுடியும். 7 நீர் என்னை வணங்கினால் இவை அனைத்தையும் உமக்குக் கொடுப்பேன்” என்று கூறினான்.
8 பதிலாக இயேசு, “வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது,
“‘உங்கள் தேவனாகிய கர்த்தரை மட்டும் வழிபடுங்கள்;
அவருக்கு மட்டுமே சேவை செய்யுங்கள்.’”(C)
என்றார்.
9 பின் பிசாசு இயேசுவை எருசலேமுக்கு அழைத்துச் சென்றான். தேவாலயத்தின் உயர்ந்த இடத்தில் இயேசுவை நிற்க வைத்தான். அவன் இயேசுவிடம், “நீர் தேவனுடைய குமாரனானால் கீழே குதியும்,
10 “‘தேவன் தம் தூதர்களுக்கு உம்மைக் காக்கும்படியாகக் கட்டளையிடுவார்.’ (D)
11 “‘உமது பாதங்கள் பாறையில் இடித்துவிடாதபடிக்கு அவர்கள்
தம் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ (E)
என்று வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது” என்றான்.
12 அவனுக்கு இயேசு,
“‘உன் தேவனாகிய கர்த்தரைச் சோதிக்காதே’(F)
என்றும் கூட வேதவாக்கியங்கள் சொல்கிறதே” என்று பதில் சொன்னார்.
13 பிசாசு இயேசுவை எல்லா வகையிலும் சோதித்து முடித்தான். இன்னும் தகுந்த காலம் வரும் வரைக்கும் காத்திருக்க முடிவு செய்து அவரிடமிருந்து விலகிச் சென்றுவிட்டான்.
இயேசுவின் போதனை(G)
14 பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு இயேசு கலிலேயாவுக்குத் திரும்பினார். இயேசுவைப் பற்றிய செய்திகள் கலிலேயா தேசத்தைச் சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் பரவின. 15 இயேசு யூதர்களின் ஜெப ஆலயங்களில் போதிக்க ஆரம்பித்தார். எல்லா மக்களும் அவரைப் புகழ்ந்தனர்.
தன் சொந்த ஊரில் இயேசு(H)
16 தான் வளர்ந்த இடமாகிய நாசரேத்திற்கு இயேசு பயணம் செய்தார். யூதர்களின் ஓய்வு நாளில் அவர் வழக்கம் போல் ஜெப ஆலயத்திற்குச் சென்று வாசிப்பதற்காக எழுந்து நின்றார். 17 ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. இயேசு புத்தகத்தைத் திறந்து கீழ்வரும் பகுதி எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்:
18 “தேவனுடைய ஆவி என்னிலுள்ளது.
ஏதுமற்ற மக்களுக்கு நற்செய்தியைப் போதிப்பதற்கு தேவன் என்னைத் தேர்ந்தார்.
கைதிகள் விடுதலை பெறவும்
குருடர்கள் மீண்டும் பார்வை பெறவும் அம்மக்களுக்குப் போதிக்கும்படியாக தேவன் என்னை அனுப்பினார்.
தங்கள் துன்பத்தினின்று பலவீனர்கள் விடுதலை பெறும்பொருட்டு தேவன் என்னை அனுப்பினார்.
19 மக்களுக்கு தேவன் இரக்கம் காட்டும் காலத்தை அறிவிக்கும்படியாக தேவன் என்னை அனுப்பினார்” (I)
என்பதை இயேசு வாசித்துவிட்டு புத்தகத்தை மூடினார்.
20 அவர் புத்தகத்தை திருப்பித் தந்துவிட்டு உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலிருந்த ஒவ்வொருவரும் இயேசுவைக் கூர்ந்து நோக்கினர். 21 அவர்களிடம் இயேசு பேச ஆரம்பித்தார். அவர், “நான் வாசித்த இச்சொற்களை இப்போது நீங்கள் கேட்கையில், அச்சொற்கள் உண்மையாயின!” என்றார்.
22 எல்லா மக்களும் இயேசுவைக் குறித்து நல்லபடியாகக் கூறினர். இயேசு பேசிய அழகான வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் வியந்தனர். மக்கள், “அவர் எவ்வாறு இப்படிப் பேச முடியும்? அவர் யோசேப்பின் மகன் அல்லவா?” என்றனர்.
23 அவர்களை நோக்கி, இயேசு, “‘மருத்துவரே, முதலில் உன்னை நீயே குணப்படுத்திக்கொள்’ என்னும் பழமொழியை நீங்கள் எனக்குக் கூறப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ‘நீங்கள் கப்பர்நகூமில் நிகழ்த்திய காரியங்களைக் குறித்துக் கேள்விப்பட்டு இருக்கிறோம். உங்கள் சொந்த நகரமாகிய இவ்விடத்திலும் அதையே செய்யுங்கள்’ என்று சொல்ல விரும்புகிறீர்கள்” என்றார். 24 மேலும் இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு தீர்க்கதரிசியை அவனது சொந்த நகரத்தார் ஏற்றுக்கொள்வதில்லை.
25 “நான் சொல்வது உண்மை. எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக இஸ்ரவேலில் மழை பொழியவில்லை. நாடு முழுவதிலும் உணவு எங்கும் கிடைக்கவில்லை. அக்காலத்தில் இஸ்ரவேலில் விதவைகள் பலர் வாழ்ந்தனர். 26 ஆனால் இஸ்ரவேலில் உள்ள எந்த விதவையிடத்திலும் எலியா அனுப்பப்படவில்லை. சீதோனில் உள்ள நகரமாகிய சாரிபாத்தில் உள்ள விதவையிடத்துக்கே அவன் அனுப்பப்பட்டான்.
27 “எலிசா என்னும் தீர்க்கதரிசியின் காலத்தில் குஷ்டரோகிகள் பலர் இருந்தனர். அவர்களில் ஒருவரும் குணமாக்கப்படவில்லை. நாகமான் மட்டுமே குணமடைந்தான். அவன் சீரியா தேசத்தைச் சேர்ந்தவன். இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவன் அல்லன்” என்றார்.
28 ஜெப ஆலயத்தில் உள்ள அனைவரும் இவ்வார்த்தைகளைக் கேட்டனர். அவர்கள் மிகமிகக் கோபம் அடைந்தனர். 29 அம்மக்கள் எழுந்து இயேசுவை நகரத்தில் இருந்து வெளியேறும்படியாகக் கட்டாயப்படுத்தினர். அவர்கள் நகரம் ஒரு மலையின்மேல் நிர்மாணிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் இயேசுவை மலையின் விளிம்புக்குக் கொண்டு வந்தனர். விளிம்பிலிருந்து அவரைத் தள்ளிவிட அவர்கள் முனைந்தார்கள். 30 ஆனால் இயேசு அவர்களுக்கு நடுவே நடந்து, அங்கிருந்து சென்றுவிட்டார்.
2008 by World Bible Translation Center