Old/New Testament
யோர்தான் நதிக்குக் கீழ்ப்பகுதியிலுள்ள கோத்திரங்கள்
32 ரூபன் மற்றும் காத்தின் கோத்திரத்தினர் ஏராளமான பசுக்களைப் பெற்றிருந்தனர். அந்த ஜனங்கள் யாசேர் மற்றும் கீலேயாத் நாட்டைப் பார்த்ததும் அவை ஆடு மாடுகளுக்கு ஏற்ற இடம் என்று எண்ணினார்கள். 2 எனவே காத் மற்றும் ரூபனின் கோத்திரத்தில் உள்ள ஜனங்கள் மோசேயிடம் வந்தனர். அவர்கள் மோசே, ஆசாரியரான எலெயாசார் மற்றும் தலைவர்களோடு பேசினார்கள். 3-4 அவர்கள், “உங்கள் வேலைக்காரர்களாகிய எங்களிடம் ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருக்கிறோம். கர்த்தரால் கொடுக்கப்பட்ட இந்த பூமியானது கால் நடைகளுக்கு ஏற்ற நல்ல இடமாக உள்ளது. இந்த நாடானது அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலேயாலெ, சேபாம், நேபோ, பெயோன் எனும் நகரங்களைக் கொண்டது. 5 உங்கள் கண்களில் எங்களுக்குத் தயவு கிடைத்தால் அவற்றை நீங்கள் எங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களை யோர்தான் நதியின் அக்கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்” என்றார்கள்.
6 ரூபன் மற்றும் காத்தின் கோத்திரங்களுடன் மோசே பேசி, “உங்கள் சகோதரர்கள் போருக்குப் போகும்போது நீங்கள் மட்டும் இங்கே இருப்பீர்களோ? 7 நீங்கள் எதற்காக இஸ்ரவேல் ஜனங்களை அதைரியப்படுத்துகிறீர்கள்? அவர்கள் நதியைக் கடந்து சென்று கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த நாட்டைப் பெற்றுக்கொள்ள ஏன் தடையாக இருக்கிறீர்கள்? 8 உங்கள் தந்தைமார்களும் இதையே முன்பு என்னிடம் செய்தார்கள். அவர்களை காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது இது நடந்தது. 9 அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கு வரை சென்று அந்நாட்டைப் பார்த்தார்கள். பின் அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களை அதைரியப்படுத்தினார்கள். கர்த்தர் கொடுத்த நாட்டுக்குப் போகாதபடிக்கு அவர்கள் செய்துவிட்டனர். 10 கர்த்தர் அந்த ஜனங்கள் மீது மிகுந்த கோபம் கொண்டார். கர்த்தர் இந்த ஆணையை இட்டார்: 11 ‘எகிப்திலிருந்து வந்தவர்களில் 20 வயதும் அதற்கு மேலும் உள்ளவர்களில் எவரும் அந்த நாட்டை காண்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் இந்த நாட்டைக் கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னை உண்மையாக பின்பற்றவில்லை. எனவே இந்த நாட்டை அவர்கள் பெறுவதில்லை. 12 கேனேசியனான எப்புன்னேயின் மகனான காலேபும் நூனின் மகனான யோசுவாவும் கர்த்தரை உண்மையாகவே பின்பற்றியபடியால் அந்நாட்டைப் பொறுவார்கள்!’
13 “இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக கர்த்தர் பெருங்கோபம் கொண்டிருந்தார். எனவே கர்த்தர் அவர்களை 40 ஆண்டுகள் பாலைவனத்தில் இருக்கும்படி செய்தார். கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தவர்கள் எல்லோரும் மரிக்கும் வரைக்கும் அவர்களை பாலைவனத்திலேயே இருக்கச் செய்தார். 14 இப்போது நீங்களும் உங்கள் தந்தைமார்கள் செய்தது போலவே செய்கிறீர்கள். பாவிகளாகிய நீங்கள், மேலும் கர்த்தர் தமது ஜனங்களுக்கு விரோதமாக இன்னும் கோபங்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? 15 நீங்கள் கர்த்தரைப் பின்பற்றாமல் விலகிப்போனால் அவர் உங்களை மீண்டும் பாலைவனத்தில் இருக்கச் செய்வார். பிறகு நீங்கள் அனைத்து ஜனங்களையும் அழித்து விடுவீர்கள்!” என்று கூறினான்.
16 ஆனால் ரூபன் மற்றும் காத் கோத்திரங்களிலுள்ள ஜனங்கள் மோசேயிடம், “நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்காக நகரங்களையும், எங்கள் மிருகங்களுக்குத் தொழுவங்களையும் உருவாக்குவோம். 17 பிறகு இந்நாட்டிலுள்ள ஜனங்களிடமிருந்து எங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால், மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கு நாங்கள் மகிழ்ச்சியோடு வந்து உதவி செய்வோம். அவர்களின் நாட்டுக்கு அவர்களைக் கொண்டு வருவோம். 18 இஸ்ரவேல் ஜனங்களில் ஒவ்வொருவரும் இந்நாட்டில் தங்களின் பங்கைப் பெறும் வரை, நாங்கள் வீட்டிற்குத் திரும்பிவரமாட்டோம்! 19 யோர்தான் ஆற்றுக்கு மேற்கே உள்ள அந்த நாட்டையும் நாங்கள் எடுத்துக்கொள்ள மாட்டோம்! யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே உள்ள நாடுகள் தான் எங்கள் பங்குக்கு உரியவை” என்றனர்.
20 எனவே மோசே அவர்களிடம், “நீங்கள் இவற்றையெல்லாம் செய்தால், இந்த நாடு உங்களுக்கு உரியதாகும். ஆனால் உங்கள் வீரர்கள் கர்த்தருக்கு முன் போருக்குச் செல்லவேண்டும். 21 உங்கள் வீரர்கள் யோர்தானைக் கடந்து சென்று அங்கேயுள்ள எதிரிகளோடு போரிட வேண்டும். 22 எல்லோரும் தங்கள் நாட்டைப்பெற கர்த்தர் உதவிய பிறகு நீங்கள் வீட்டிற்குத் திரும்பலாம். அப்போது கர்த்தரும் இஸ்ரவேலரும் உங்களைக் குற்றவாளிகளாகக் கருதாமல் நீங்களும் இந்த நாட்டைப் பெற்றுக்கொள்ள உதவுவார். 23 ஆனால், நீங்கள் இவற்றையெல்லாம் செய்யாவிட்டால், கர்த்தருக்கு எதிராகப் பாவிகள் ஆவீர்கள். உங்கள் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவீர்கள் என்பதையும் உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள். 24 உங்கள் பிள்ளைகளுக்கு நகரங்களையும், மிருகங்களுக்குத் தொழுவங்களையும் அமையுங்கள். ஆனால் நீங்கள் வாக்களித்தபடி செய்து முடிக்க வேண்டும்” என்றான்.
25 பிறகு காத் மற்றும் ரூபனின் கோத்திரங்களில் உள்ள ஜனங்கள் மோசேயிடம், “நாங்கள் உம்முடைய வேலைக்காரர்கள், நீர் எங்கள் எஜமானர். எனவே நீர் சொன்னபடியே நாங்கள் செய்வோம். 26 எங்கள் மனைவியரும், குழந்தைகளும் அனைத்து மிருகங்களும் கீலேயாத்தின் நகரங்களில் தங்கி இருப்பார்கள். 27 ஆனால் உம் அடியார்களாகிய நாங்கள் யோர்தான் ஆற்றைக் கடப்போம். எங்கள் எஜமானர் சென்னபடி நாங்கள் ஆயுதபாணிகளாக கர்த்தருக்கு முன்னால் செல்லுவோம்” என்றனர்.
28 எனவே மோசே, ஆசாரியனாகிய எலெயாசார், நூனின் மகனாகிய யோசுவா மற்றும் இஸ்ரேவேலின் அனைத்து கோத்திரங்களிலும் உள்ள தலைவர்கள் அனைவரும் அவர்களின் வாக்குறுதியைக் கேட்டனர். 29 பிறகு மோசே அவர்களிடம், “காத் மற்றும் ரூபனின் கோத்திரங்களில் உள்ள ஜனங்கள் யோர்தான் ஆற்றைக் கடந்து செல்வார்கள். கர்த்தரின் முன்னால் போருக்கு ஆயுதபாணிகளாக அணிவகுத்து நிற்பார்கள். உங்கள் நாட்டை கைப்பற்றுவதற்கு அவர்கள் உதவுவார்கள். பின்பு நீங்கள் கீலேயாத் பகுதியை அவர்களது நாட்டின் சுதந்திரமாகும்படி கொடுப்பீர்கள். 30 கானான் தேசத்தை நீங்கள் எடுத்துக்கொள்வதற்கு அவர்கள் உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கின்றனர்” என்றான்.
31 காத் மற்றும் ரூபனின் ஜனங்கள் பதிலாக, “கர்த்தர் ஆணையிட்டபடியே நாங்கள் செய்வதாக வாக்களித்துள்ளோம். 32 நாங்கள் யோர்தான் நதியைக் கடந்து செல்வோம். நாங்கள் கர்த்தருக்கு முன்பாக ஆயுதம் தரித்தவர்களாகக் கானான் நாட்டிற்குச் செல்வோம். யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே உள்ள நாடுகளே எங்கள் பங்குக்கு உரிய நாடுகளாகும்” என்றனர்.
33 எனவே மோசே, காத்தின் ஜனங்களுக்கும் ரூபனின் ஜனங்களுக்கும் மனாசேயின் ஜனங்களில் பாதிப்பேருக்கும் அந்த பகுதியைக் கொடுத்தான். (மனாசே யோசேப்பின் மகன்.) இந்த பூமியானது எமோரிருடைய அரசனாகிய சீகோனின் பட்டணத்தையும் பாசானுடைய அரசனாகிய ஓகின் பட்டணத்தையும் அவற்றைச் சேர்ந்த பூமியையும் கொண்டது. அந்த பூமியானது அவற்றின் எல்லையைச் சுற்றிலுமுள்ள நகரங்களையும் கொண்டது.
34 பின்பு காத் ஜனங்கள் தீபோன், அதரோத், ஆரோவேர், 35 ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா, 36 பெத்நிம்ரா, பெத்தாரன் எனும் நகரங்களையும் அவற்றின் பலமான சுவர்களையும், களஞ்சியங்களையும், தொழுவங்களையும் கட்டினார்கள்.
37 ரூபன் ஜனங்களோ, எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம், 38 நேபோ, பாகால் மெயோன், சீப்மா என்னும் நகரங்களைக் கட்டினார்கள். அவர்கள் நேபோ, பாகல் மெயோன் எனும் பெயர்களை மாற்றிக்கொண்டனர்.
39 மாகீரின் ஜனங்கள் கீலேயாத்திற்கு போனார்கள். (மாகீர் மனாசேயின் மகன்.) அவர்கள் அந்நகரத்தைத் தோற்கடித்து அங்கு வாழ்ந்த எமோரியர்களை விரட்டியடித்தனர். 40 எனவே மோசே, மனாசேயின் கோத்திரத்தைச் சேர்ந்த மாகீர் ஜனங்களுக்கு கீலேயாத்தைக் கொடுத்தான். எனவே அந்தக் குடும்பம் அங்கே தங்கிற்று. 41 மனசேயின் கோத்திரத்தைச் சேர்ந்த யாவீர் அங்குள்ள சிறு நகரங்களைத் தோற்கடித்தான். பின் அந்நகரங்களை யாவீர் நகரங்கள் என்று அழைத்தான். 42 நோபாக், கேனாத்தையும் அதன் அருகிலுள்ள நகரத்தையும் தோற்கடித்தான். பிறகு அந்த இடத்தைத் தன் பெயரால் அழைத்தான்.
எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களின் பயணம்
33 மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களைக் குழுக் குழுவாக எகிப்தை விட்டு அழைத்துச் சென்றனர். அவர்கள் கீழ்க்கண்ட இடங்களின் வழியாகப் பயணம் செய்தனர். 2 மோசே தாம் பயணம் செய்த இடங்களைப்பற்றி எழுதினான். கர்த்தருடைய விருப்பப்படியே மோசே எழுதினான். அவர்கள் எகிப்தை விட்டு பயணம் செய்த இடங்கள் பின் வருவனவாகும்:
3 முதல் மாதத்தின் 15வது நாளில் அவர்கள் ராமசேசை விட்டனர். அன்று காலை பஸ்காவுக்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு வெற்றி முழக்கங்களோடு வெளியேறினார்கள். அவர்களை எகிப்து ஜனங்கள் அனைவரும் பார்த்தனர். 4 கர்த்தர் கொன்ற தங்கள் பிள்ளைகளையெல்லாம் எகிப்தியர் அடக்கம் செய்தார்கள். அடக்கம் செய்யப்பட்டவர்களெல்லாம் முதலாவது பிறந்த பிள்ளைகள். அவர்களது தேவர்களின் மீதும் கர்த்தர் தீர்ப்பளித்தார்.
5 இஸ்ரவேல் ஜனங்கள் ராமசேசை விட்டு சுக்கோத்திற்குப் பயணம் செய்தனர். 6 சுக்கோத்திலிருந்து அவர்கள் ஏத்தாமிற்குச் சென்றனர். ஜனங்கள் பாலைவனத்தின் ஓரத்தில் தம் முகாம்களை ஏற்பாடு செய்துகொண்டனர். 7 அவர்கள் ஏத்தாமை விட்டு ஈரோத்துக்குச் சென்றனர். அது பாகால் செபோனுக்கு அருகில் இருந்தது. அவர்கள் மிக்தோலுக்கு அருகில் தம் முகாமை அமைத்தனர்.
8 ஜனங்கள் ஈரோத்தைவிட்டு கடல் நடுவே நடந்து பாலைவனத்தை நோக்கிச் சென்றனர். பின் அவர்கள் மூன்று நாள் பயணம் செய்து மாராவிலே தம் முகாமை அமைத்தனர்.
9 ஜனங்கள் மாராவை விட்டு ஏலிமிற்குச் சென்று அங்கே கூடாரமிட்டனர். அங்கே 12 நீருற்றுகளும், 70 பேரீச்சம் மரங்களும் இருந்தன.
10 பின் ஏலிமிலிருந்து விலகி செங்கடலுக்கு அருகே முகாமிட்டனர்.
11 பின் செங்கடலைவிட்டு சீன் பாலைவனத்தில் முகாமிட்டனர்.
12 பின் சீன் பாலைவனத்தை விட்டு தொப்காவில் முகாமிட்டனர்.
13 பின் தொப்காவை விட்டு ஆலூசிலே முகாமிட்டனர்.
14 பின் ஆலூசைவிட்டு ரெவிதீமிலே முகாமிட்டனர். அந்த இடத்தில் ஜனங்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாதிருந்தது.
15 பின் ரெவிதீமை விட்டு சீனாய் பாலைவனத்தில் முகாமிட்டனர்.
16 பின் சீனாயை விட்டு கிப்ரோத் அத்தாவிலே முகாமிட்டனர்.
17 பின் கிப்ரோத் அத்தாவை விட்டு ஆஸ்ரோத்திலே முகாமிட்டனர்.
18 பின் ஆஸ்ரோத்தை விட்டு ரித்மாவிலே முகாமிட்டனர்.
19 பின் ரித்மாவை விட்டு ரிம்மோன் பேரேசிலே முகாமிட்டனர்.
20 பின் ரிம்மோன்பேரேசை விட்டு லிப்னாவிலே முகாமிட்டனர்.
21 பின் லிப்னாவை விட்டு ரீசாவிலே முகாமிட்டனர்.
22 பின் ரீசாவை விட்டு கேலத்தாவிலே முகாமிட்டனர்.
23 பின் கேலத்தாவை விட்டு சாப்பேர் மலையில் முகாமிட்டனர்.
24 பின் சாப்பேர் மலையை விட்டு ஆரதாவிலே முகாமிட்டனர்.
25 பின் ஆரதாவை விட்டு மக்கெலோத்திலே முகாமிட்டனர்.
26 பின் மக்கெலோத்தாவை விட்டு தாகாத்திலே முகாமிட்டனர்.
27 பின் தாகாத்தை விட்டு தாராகிலே முகாமிட்டனர்.
28 பின் தாராகியை விட்டு மித்காவிலே முகாமிட்டனர்.
29 பின் மித்காவை விட்டு அஸ்மோனாவில் முகாமிட்டனர்.
30 பின் அஸ்மோனாவை விட்டு மோசெரோத்திலே முகாமிட்டனர்.
31 பின் மோசெரோத்தை விட்டு பெனேயாக்கானிலே முகாமிட்டனர்.
32 பின் பெனெயாக்கானை விட்டு கித்காத் மலையிலே முகாமிட்டனர்.
33 பின் கித்காத் மலையை விட்டு யோத்பாத்தாவிலே முகாமிட்டனர்.
34 பின் யோத்பாத்தாவை விட்டு எப்ரோனாவிலே முகாமிட்டனர்.
35 பின் எப்ரோனாவை விட்டு எசியோன் கேபேரிலே முகாமிட்டனர்.
36 பின் எசியோன் கேபேரிலை விட்டு காதேசாகிய சீன் என்னும் பாலைவனத்திலேயே முகாமிட்டனர்.
37 பின் காதேசாகிய சீன் பாலைவனத்தை விட்டு ஓர் என்னும் மலையில் முகாமிட்டனர். இது ஏதோம் தேசத்தின் எல்லையில் உள்ளது. 38 ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து, ஓர் என்னும் மலை மீது ஏறினான். பின் அங்கேயே மரணமடைந்தான். அவன் ஐந்தாவது மாதத்தில் முதல் நாளன்று மரித்துப்போனான். அது இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தைவிட்டு வந்த 40வது ஆண்டு. 39 அப்போது ஆரோனுக்கு 123 வயது.
40 கானான் நாட்டில் நெகேவ் என்ற பாலைவனத்தில் ஆராத் என்ற நகரம் ஒன்று இருந்தது. கானானிய அரசன் இஸ்ரவேல் ஜனங்கள் வருவதைப் பற்றி அறிந்தான். 41 இஸ்ரவேல் ஜனங்கள் ஓர் மலையை விட்டு சல்மோனாவில் முகாமிட்டனர்.
42 பின் சல்மோனாவை விட்டு பூனோனில் முகாமிட்டனர்.
43 பின் பூனோனை விட்டு ஓபோத்தில் முகாமிட்டனர்.
44 பின் ஓபோத்தை விட்டு அபாரீமின் மேடுகளில் முகாமிட்டனர். இது மோவாபின் எல்லையில் இருந்தது.
45 பின் அபாரீமினை விட்டு தீபோன் காத்திலே முகாமிட்டனர்.
46 பின் தீபோன்காத்தை விட்டு அல்மோன் திப்லத்தாயிமிலே முகாமிட்டனர்.
47 பின் அல்மோன் திப்லாத்தாயிமை விட்டு நேபோவுக்கு அருகிலுள்ள அபாரீம் மலைகளில் முகாமிட்டனர்.
48 பின் அபாரீம் மலைகளை, விட்டு மோவாபிலே உள்ள யோர்தான் பள்ளத்தாக்கில் முகாமிட்டனர். இது யோர்தான் நதியைக்கடந்து எரிகோவின் அருகிலே உள்ளது. 49 பின் யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமவெளிகளில் முகாமிட்டனர். அவர்களது பாளையம் பெத்யெசிமோத்தைத் தொடங்கி ஆபேல் சித்தீம்வரை இருந்தது.
50 அந்த இடத்தில் மோசேயோடு கர்த்தர் பேசினார். அவர், 51 “இஸ்ரவேல் ஜனங்களிடம் இவற்றை கூறு: நீங்கள் யோர்தான் நதியை கடந்து கானான் நாட்டிற்குள் நுழைவீர்கள். 52 நீங்கள் அங்கே காணும் ஜனங்களிடமிருந்து அந்நாட்டை எடுத்துக்கொள்வீர்கள். அவர்களின் செதுக்கப்பட்ட சிலைகளையும், விக்ரகங்களையும் அழித்துவிடுவீர்கள். அவர்களின் மேடைகளையும் நீங்கள் அழிக்க வேண்டும். 53 நீங்கள் அந்நாட்டைக் கைப்பற்றி அங்கேயே குடியிருப்பீர்கள். ஏனென்றால் நான் இந்த நாட்டை உங்களுக்கு கொடுத்திருக்கிறேன். இது உங்கள் குடும்பத்தாருக்கு உரியது. 54 உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் இந்நாட்டின் பங்கைப் பெறுவார்கள். எந்தக் குடும்பத்தினர் எந்தப் பகுதியைப் பெறுவது என்பதைச் சீட்டுக் குலுக்கல் மூலம் அறிந்துகொள்வீர்கள். பெரிய குடும்பத்தினர் பெரும் பகுதியைப் பெறுவார்கள். சிறிய குடும்பத்தினர் சிறியப் பகுதியைப் பெறுவார்கள். எந்தக் குடும்பம் நாட்டின் எந்தப் பகுதியைப் பெறும் என்பதை சீட்டுக் குலுக்கல் மூலம் தீர்மானிக்க வேண்டும். ஒவ்வொரு கோத்திரமும் இந்த தேசத்தின் பங்கைச் சுதந்தரிக்கும்.
55 “நீங்கள் அந்த அந்நிய ஜனங்களை இந்நாட்டை விட்டுத் துரத்த வேண்டும். அவர்களை இந்நாட்டிலே தங்கவிட்டால் பிறகு அவர்கள் உங்களுக்கு மிகுந்த தொந்தரவுகளை கொண்டுவருவார்கள். அவர்கள் உங்கள் கண்களில் முள்ளாகவும், விலாக்களில் கூராகவும் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்குப் பல பிரச்சனைகளைக் கொண்டுவருவார்கள். 56 நான் அப்போது அவர்களுக்குச் செய்ய திட்டமிட்டதை உங்களுக்குச் செய்வேன் என்று சொல்” என்றார்.
கானான் நாட்டின் எல்லைகள்
34 மோசேயிடம் கர்த்தர் பேசினார். அவர், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் இந்த கட்டளைகளைக் கூறு: நீங்கள் கானான் நாட்டிற்கு போய்க்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் கானான் நாடு முழுவதையும் பெற்றுக்கொள்வீர்கள். 3 தெற்குப் பக்கம் ஏதோம் அருகிலுள்ள சீன் பாலைவனத்தின் ஒரு பகுதியைப் பெறுவீர்கள். உங்களது தெற்கு எல்லையானது கிழக்கே இருக்கிற சவகடலின் கடைசியில் தொடங்கும். 4 இது ஸ்கார்ப்பியன் கணவாயின் தெற்காகக் கடந்து செல்லும். சீன் பாலைவனத்தின் வழியாக, காதேஸ்பர்னேவுக்கும் பிறகு ஆத்சார் ஆதாருக்கும், பின் அங்கிருந்து அஸ்மோனாவுக்கும் செல்லும். 5 அஸ்மோனிலிருந்து எல்லையானது எகிப்து நதியில் போய், பிறகு அது மத்தியத்தரைக் கடலில் போய் முடியும். 6 மத்தியத்தரைக் கடல் உங்களது மேற்கு எல்லையாக இருக்கும். 7 உங்கள் வடக்கு எல்லையானது மத்தியத்தரைக் கடலில் தொடங்கி, லெபனானில் உள்ள ஓர் மலைக்குச் செல்லும். 8 ஓர் என்னும் மலையிலிருந்து, இது லெபோ ஆமாத்திற்குப் போகும். பிறகு சேதாத்திற்குப் போகும். 9 பின்னர் அவ்வெல்லையானது, சிப்ரோனுக்குப் போய் ஆத்சார் ஏனானிலே முடியும். அதுதான் உங்கள் வடக்கு எல்லையாகும். 10 உங்கள் கிழக்கு எல்லையானது ஏனானிலே தொடங்கி, அது சேப்பாமுக்குப் போகும், 11 சேப்பாமிலிருந்து ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாவிற்குப் போகும். எல்லையானது தொடர்ந்து கலிலேயா ஏரிக்குத் தொடரும். 12 பிறகு அந்த எல்லையானது யோர்தான் நதிவரைத் தொடரும். அது மரணக் கடலில் போய் முடியும். இவை தான் உங்கள் நாட்டைச் சுற்றியுள்ள எல்லைகள் ஆகும்” என்றார்.
13 எனவே, மோசே இந்த கட்டளைகளை இஸ்ரவேல் ஜனங்களிடம் கொடுத்தான். “அதுதான் நீங்கள் பெறப்போகிற நாடு. இதனைச் சீட்டுக்குலுக்கல் மூலமாக 9 கோத்திரங்களுக்கும் மனாசேயின் பாதி குடும்பத்திற்கும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். 14 ரூபன் மற்றும் காத்தின் கோத்திரத்தினரும் மனாசேயின் பாதிக் குடும்பத்தினரும் ஏற்கெனவே தங்கள் நாட்டைப் பெற்றுள்ளனர். 15 அந்த இரண்டரைக் கோத்திரத்தினரும் எரிகோவின் அருகில் யோர்தானுக்குக் கிழக்கே உள்ள நாடுகளைப் பெற்றுள்ளனர்” என்றான்.
16 பிறகு கர்த்தர் மோசேயோடு பேசினார். 17 அவர், “நாட்டைப் பங்கு வைக்க ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனான யோசுவாவும், 18 கோத்திரங்களின் தலைவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு தலைவர் இருப்பார். அவர்கள் நாட்டைப் பங்கு போட்டுக் கொடுப்பார்கள். 19 பின் வருபவை அந்த தலைவர்களின் பெயர்களாகும்:
யூதாவின் கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகனான காலேபு;
20 சிமியோனின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகனான சாமுவேல்;
21 பென்யமீனின் கோத்திரத்திலிருந்து கிஸ்லோனின் மகனான எலிதாது;
22 தாணின் கோத்திரத்திலிருந்து யொக்லியின் மகனான புக்கி;
23 யோசேப்பின் மகனான மனாசேயின் கோத்திரத்திலிருந்து எபோதின் மகனாகிய அன்னியேல்:
24 எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து சிப்தானின் மகனாகிய கேமுவேல்;
25 செபுலோனின் கோத்திரத்திலிருந்து பர்னாகின் மகனாகிய எலிசாப்பான்;
26 இசக்காரின் கோத்திரத்திலிருந்து ஆசானின் மகனாகிய பல்த்தியேல்;
27 ஆசேரின் கோத்திரத்திலிருந்து செலோமியின் மகனான அகியூத்;
28 நப்தலியின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகனான பெதாக்கேல்” என்றார்.
29 இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் கானான் தேசத்தைப் பங்கிடும்படி கர்த்தர் இவர்களைத் தெரிந்தெடுத்தார்.
தன் மரணத்தைப் பற்றிப் பேசுதல்(A)
30 பிறகு இயேசுவும், அவரது சீஷர்களும் அந்த இடத்தைவிட்டுச் சென்றார்கள். அவர்கள் கலிலேயா வழியே சென்றனர். தாம் இருக்கும் இடத்தை மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று இயேசு விரும்பினார். 31 இயேசு தன் சீஷர்களுக்குத் தனியே உபதேசிக்க விரும்பினார். அவர்களிடம் இயேசு, “மனித குமாரன் மக்களிடம் ஒப்படைக்கப்படுவார். அவரை அவர்கள் கொலை செய்வார்கள். மூன்று நாட்களுக்குப்பின் அவர் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுவார்” என்றார். 32 இயேசு என்ன பொருளில் கூறுகிறார் என்பதை சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர் என்ன பொருள் கொள்கிறார் என்பதை விசாரிக்கவும் அவர்கள் அஞ்சினர்.
யார் உயர்ந்தவர்?(B)
33 இயேசுவும், அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் ஒரு வீட்டுக்குள் நூழைந்தனர். பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “இன்று சாலையில் நீங்கள் எதை விவாதித்தீர்கள்?” என்று கேட்டார். 34 ஆனால் சீஷர்கள் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் அன்று அவர்களில் யார் மிகவும் உயர்ந்தவர் என்பது பற்றியே விவாதம் செய்தனர்.
35 ஓரிடத்தில் இயேசு உட்கார்ந்துகொண்டு பன்னிரண்டு சீஷர்களையும் அருகில் அழைத்தார். அவர்களிடம் இயேசு, “எவனாவது மிக முக்கியமானவனாக விரும்பினால் அவன் தன்னைவிட மற்ற அனைவரையும் மிக முக்கியமானவர்களாகக் கருதி அவன் அனைவருக்கும் வேலைக்காரனாக இருக்க வேண்டும்” என்றார்.
36 பிறகு இயேசு ஒரு குழந்தையைத் தூக்கினார். சீஷர்கள் முன்பு அக்குழந்தையை நிறுத்தினார். தன் கைகளால் குழந்தையைத் தாங்கியபடி, 37 “இத்தகைய குழந்தைகளை என் பெயரில் ஏற்றுக்கொள்கிற எந்த மனிதனும், என்னையும் ஏற்றுக்கொண்டவனாகிறான். என்னை ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை அனுப்பினவரையும் ஏற்றுக்கொள்கிறான்” என்றார்.
இயேசுவைச் சேர்ந்தவன் யார்?(C)
38 பிறகு யோவான் இயேசுவைப் பார்த்து, “போதகரே, உங்கள் பெயரைப் பயன்படுத்தி ஒருவன் பிசாசைத் துரத்திக்கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். அவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல. நம்மவர்களில் ஒருவனும் அல்ல. எனவே அவ்வாறு செய்வதை நிறுத்தச் சொன்னோம்” என்றான்.
39 இயேசுவோ, “அவனை நிறுத்தாதீர்கள், எவனொருவன் என் பெயரைப் பயன்படுத்தி வல்லமையான செயல்களைச் செய்கிறானோ அவன் எனக்கு எதிராகத் தீயவற்றைச் செய்யமாட்டான். 40 எனக்கு எதிராகத் தீமை செய்யாதவன் எனக்கு வேண்டியவன். 41 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் என்பதால் எவனாவது ஒருவன் என்பேரின் நிமித்தம் உங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் தருவானேயானால் அவன் அதற்குரிய பலனை அடையாமல் போகமாட்டான்.
பாவத்திற்குக் காரணமானவர்களை இயேசு எச்சரித்தல்(D)
42 “இச்சிறுவர்களில் யாராவது ஒருவன் என் மீது நம்பிக்கை வைத்ததினால், இவர்களைப் பாவத்திற்கு வழிநடத்தும் எவனுக்கும் பெருங்கேடு வரும். அத்தகையவனின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி நடுக்கடலில் மூழ்கடிப்பது நல்லதாக இருக்கும். 43 உங்கள் கைகளில் ஒன்று நீங்கள் பாவம் செய்யக் காரணமாக இருக்குமானால் அதனை வெட்டி எறியுங்கள். உன் உயிரை எப்போதைக்கும் இழப்பதைவிட உன் சரீரத்தின் ஒரு பகுதியை இழப்பது பரவாயில்லை. இரண்டு கையோடு நரகத்துக்குப் போவதை விட இது நல்லது. அங்கு நெருப்பு அடங்காமல் எரியும். 44 [a] 45 உன் கால் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனை வெட்டிப் போடு. நீ உன் வாழ்க்கையை இழந்துபோவதைவிட காலைமட்டும் இழப்பது பரவாயில்லை. இரண்டு கால்களோடு நரகத்துக்குப் போவதைவிட இது பரவாயில்லை. 46 [b] 47 உனது கண் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனைப் பிடுங்கிப் போடு. உனது வாழ்வு முழுவதையும் இழப்பதைவிட ஒரு கண்ணை உடையவனாய் இருப்பது பரவாயில்லை. இரண்டு கண்ணுடையவனாய் நரகத்தில் தள்ளப்படுவதை விட ஒரு கண்ணை உடையவனாய் தேவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைவது பரவாயில்லை. 48 நரகத்தில் மனிதரை சாப்பிடும் புழுக்கள் ஒருபோதும் சாவதில்லை. அங்கே நெருப்பானது எப்போதும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும்.
49 “ஒவ்வொருவரும் நெருப்பால் தண்டிக்கப்படுவார்கள்.
50 “உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு தனது சுவையை இழந்துபோனால் நீ மீண்டும் அச்சுவையை அதில் ஊட்டமுடியாது. அதனால் நல்ல குணமுடையவர்களாய் இருங்கள். ஒருவருக்கொருவர் சமாதானமாய் இருங்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center