Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எண்ணாகமம் 20-22

மிரியாமின் மரணம்

20 இஸ்ரவேல் ஜனங்கள் முதல் மாதத்தில் சீன் பாலைவனத்தை அடைந்தனர். ஜனங்கள் காதேசில் தங்கியிருந்தபோது மிரியாம் மரணமடைந்தாள். அவள் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள்.

மோசேயின் தவறு

அந்த இடத்தில் ஜனங்களுக்குப் போதுமான தண்ணீர் இல்லை. எனவே ஜனங்கள் ஒன்று கூடி வந்து இதைப்பற்றி மோசேயிடமும் ஆரோனிடமும் முறையிட்டனர். அவர்கள், மோசேயிடம் விவாதித்து, “எங்கள் சகோதரர்களைப் போலவே நாங்களும் இந்த இடத்தில் கர்த்தர் முன்னால் மரித்துப்போயிருக்கவேண்டும்? எதற்காக கர்த்தருடைய ஜனங்களை இந்தப் பாலைவனத்துக்கு அழைத்து வந்தீர்கள்? நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கேயே மரித்துப் போகவேண்டும் என்று விரும்புகின்றீரா? எங்களை எகிப்திலிருந்து இந்த மோசமான இடத்திற்கு ஏன் அழைத்து வந்தீர்கள்? இங்கே தானியங்கள் இல்லை. அத்திமரமும், திராட்சை செடிகளும், மாதளஞ் செடியும், குடிக்க தண்ணீர் கூட இல்லையே” என்றனர்.

எனவே, மோசேயும் ஆரோனும் கூட்டத்தை விட்டு விலகி ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் சென்று அங்கே அவர்கள் தரையில் விழுந்து வணங்கினார்கள். கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.

கர்த்தர் மோசேயோடு பேசினார். அவர், “சிறப்புக்குரிய உன் கைத் தடியை எடுத்துக்கொள். உனது சகோதரன் ஆரோனையும் ஜனங்கள் கூட்டத்தையும் அழைத்துக்கொண்டு பாறையின்மீது போ. ஜனங்கள் முன்னால் பாறையோடு பேசு. பிறகு பாறையிலிருந்து தண்ணீர் சுரந்து வரும். அந்த தண்ணீரை நீ ஜனங்களுக்கும் மிருகங்களுக்கும் தரலாம்” என்றார்.

பரிசுத்தக் கூடாரத்திற்குள் கர்த்தர் முன்னிலையில் கைத்தடி இருந்தது. கர்த்தர் சொன்னபடியே மோசே கைத்தடியை எடுத்துக்கொண்டான். 10 மோசேயும், ஆரோனும் ஜனங்களிடம் பாறையின் முன்னால் கூடுமாறு சொன்னார்கள். பிறகு மோசே, “நீங்கள் எப்போதும் முறையிடுகிறீர்கள். இப்போது நான் சொல்வதைக் கவனியுங்கள். நான் இந்த பாறையிலிருந்து தண்ணீர் வரும்படி செய்வேன்” என்றான். 11 மோசே தன் கையை உயர்த்தி பாறையின் மீது தனது கோலால் இருமுறை அடித்தான். தண்ணீர் பாறையிலிருந்து பீறிட்டு வெளியே வந்தது. ஜனங்களும் மிருகங்களும் அந்த தண்ணீரைக் குடித்தனர்.

12 ஆனால் கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும், “அனைத்து இஸ்ரவேல் ஜனங்களும் இங்கே கூடியுள்ளனர். ஆனால் நீங்கள் என்னை கனப்படுத்தவில்லை. தண்ணீரை பெறும் வல்லமை என்னிடமிருந்து வந்ததை நீங்கள் ஜனங்களுக்கு காண்பிக்கவில்லை. நீங்கள் என்னில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் ஜனங்களிடம் காட்டவில்லை. ஆகையால் நான் அவர்களுக்கு கொடுக்கப்போகும் தேசத்திற்குள் நீங்கள் ஜனங்களை அழைத்துக்கொண்டு செல்லமாட்டீர்கள்!” என்றார்.

13 இந்த இடம் மேரிபாவின் தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது! இங்குதான் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரோடு தர்க்கம் பண்ணினார்கள். அங்கே கர்த்தர் தம்மை பரிசுத்தர் என்று அவர்களுக்குக் காட்டினார்.

ஏதோம் இஸ்ரவேல் ஜனங்களைத் தடைசெய்தல்

14 மோசே காதேசில் இருக்கும்போது, சிலரை ஏதோமின் அரசனிடம் பின்வரும் செய்தியோடு அனுப்பினான்:

“உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள் உங்களுக்குச் சொல்லியது என்னவென்றால்: நாங்கள் அடைந்த துன்பங்களைப்பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். 15 வெகு காலத்திற்கு முன்னர் நமது முற்பிதாக்கள் எகிப்துக்குள் சென்றனர். அங்கே நாங்கள் நீண்ட காலம் வாழ்ந்தோம். எகிப்து ஜனங்கள் எங்களிடம் கொடூரமாக நடந்துகொண்டனர். 16 ஆனால் நாங்கள் கர்த்தரிடம் உதவி செய்யுமாறு கேட்டோம். கர்த்தர் எங்கள் குறையைக் கேட்டு தேவதூதனை அனுப்பி உதவினார். கர்த்தர் எங்களை எகிப்தைவிட்டு வெளியே அழைத்து வந்தார்.

“இப்போது நாங்கள் உங்கள் நாடு தொடங்குகிற காதேசில் இருக்கிறோம். 17 நாங்கள் உங்கள் நாட்டின் வழியாகக் கடந்து செல்ல எங்களுக்கு அனுமதி தரவேண்டும். நாங்கள் வயல் அல்லது திராட்சை தோட்டத்தின் வழியாக நடந்து செல்லமாட்டோம். உங்கள் கிணறுகளிலிருந்து தண்ணீர் மொண்டு குடிக்கமாட்டோம். நாங்கள் ராஜபாதை வழியாக மட்டுமே செல்வோம். நாங்கள் அந்தச் சாலையிலிருந்து வலது புறமாகவோ இடதுபுறமாகவோ நகரமாட்டோம். நாங்கள் உங்கள் நாட்டைக் கடந்து செல்லும்வரை சாலையிலேயே தங்குவோம்” என்றனர்.

18 ஆனால் ஏதோம் அரசனோ, “நீங்கள் எங்கள் நாட்டின் வழியாக பயணம் செய்ய முயன்றால், பிறகு நாங்கள் வந்து உங்களோடு வாளால் சண்டையிடுவோம்” என்று பதில் அளித்தான்.

19 இஸ்ரவேல் ஜனங்களோ, “நாங்கள் ராஜபாதை வழியாக மட்டுமே பயணம் செய்வோம். உங்களுக்கு சொந்தமான தண்ணீரை நாங்களோ எங்கள் மிருகங்களோ குடித்தால் அதற்குரிய தொகையைத் தந்துவிடுவோம். நாங்கள் உங்கள் நாட்டின் வழியாக நடந்து செல்லவே விரும்புகிறோம். நாங்கள் உங்கள் நாட்டை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை” என்றனர்.

20 ஆனால் மீண்டும் ஏதோம் அரசன், “எங்கள் நாட்டின் வழியாக நீங்கள் நடந்து செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றான்.

பிறகு ஏதோம் அரசன் மிகப் பெரியதும், பலமுள்ளதுமான படையைக் கூட்டினான். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களோடு போரிட வந்தனர். 21 ஏதோம் அரசன் இஸ்ரவேல் ஜனங்களைத் தன் நாட்டின் வழியாகச் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டான். அவர்கள் திரும்பி அந்த நாட்டைச் சுற்றிக்கொண்டு சென்றனர்.

ஆரோனின் மரணம்

22 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் காதேசிலிருந்து பயணம் செய்து ஓர் என்னும் மலைக்குச் சென்றனர். 23 அது ஏதோம் நாட்டின் எல்லைக்கருகில் இருந்தது. கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 24 “இது ஆரோன் மரிப்பதற்குரிய நேரம். அவன் தன் முற்பிதாக்களோடு போய்ச் சேருவான். நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்களித்த நாட்டிற்குள் அவன் நுழையமாட்டான். ஏனென்றால் நீயும் ஆரோனும் எனது ஆணைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியவில்லை. மேரிபாவின் தண்ணீர் பற்றிய நிகழ்ச்சியில் தவறு செய்து விட்டீர்கள்.

25 “இப்போது, ஆரோனையும் அவனது மகன் எலெயாசாரையும் ஓர் என்னும் மலை மீது அழைத்து வா. 26 ஆரோனின் சிறப்புக்குரிய ஆடையை அவனது மகன் எலெயாசாருக்கு அணிவித்து அழைத்து வா. ஆரோன் மலைமீது மரித்துப்போவான். அவன் தன் முற்பிதாக்களோடு போய்ச் சேருவான்” என்றார்.

27 கர்த்தருடைய ஆணைக்கு மோசே கீழ்ப்படிந்தான். ஓர் என்னும் மலையின் மீது மோசே, ஆரோன், எலெயாசார் ஆகியோர் ஏறினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அவர்கள் செல்வதைப் பார்த்தனர். 28 மோசே, ஆரோனின் சிறப்புக்குரிய ஆடையை அகற்றி அதனை ஆரோனின் மகனான எலெயாசாருக்கு அணிவித்தான். பிறகு மலை உச்சியிலேயே ஆரோன் மரித்துப்போனான். மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கி வந்தனர் 29 ஆரோன் மரித்துப்போனதை இஸ்ரவேல் ஜனங்கள் அறிந்துகொண்டனர். எனவே அவர்கள் 30 நாட்களுக்குத் துக்கம் கொண்டாடினார்கள்.

கானானியர்களோடு போர்

21 கானானிய ஜனங்களுக்கு ஆராத் என்ற அரசன் இருந்தான். அவன் பாலைவனத்தின் தென் பகுதியில் குடி இருந்தான். இஸ்ரவேல் ஜனங்கள் அத்தாரீம் சாலைவழியாக வருகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டான். உடனே அவன் படைவீரர்களை அனுப்பி இஸ்ரவேல் ஜனங்களைத் தாக்கினான். ஆராத் சிலரைக் கைது செய்து சிறையில் அடைத்தான். பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரிடம் ஒரு விசேஷ வேண்டுதல் செய்தனர். அவர்கள், “கர்த்தாவே! இந்த ஜனங்களை வெல்ல எங்களுக்கு உதவும். நீர் இவ்வாறு செய்தால் அவர்களின் நகரங்களை உமக்கு அர்ப்பணிப்போம். நாங்கள் அவர்களை முழுமையாக அழித்துவிடுவோம்” என்று கூறினார்கள்.

இஸ்ரவேல் ஜனங்களின் வேண்டுதலை கர்த்தர் கேட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் கானானியர்களை வெல்வதற்கு கர்த்தர் உதவி செய்தார். இஸ்ரவேல் ஜனங்கள் கானானியர்களை முழுமையாக அழித்தனர். அவர்களின் நகரங்களும் அழிக்கப்பட்டன. எனவே அந்த இடத்திற்கு ஓர்மா என்று பெயரிட்டனர்.

வெண்கலப் பாம்பு

ஓர் என்ற மலையை விட்டு இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலுக்குச் செல்லும் சாலை வழியாகப் பயணம் செய்தனர். ஏதோம் நாட்டைச் சுற்றிக்கொண்டு அவர்கள் சென்றனர். இதனால் ஜனங்கள் பொறுமை இழந்தனர். அவர்கள் தேவனுக்கும் மோசேக்கும் எதிராக முறுமுறுக்கத் துவங்கினார்கள். அவர்கள், “ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? நாங்கள் இங்கே பாலைவனத்தில் மரித்துக்கொண்டிருக்கிறோம்! உண்ண அப்பம் இல்லை! தண்ணீர் இல்லை! இந்த அற்பமான உணவை நாங்கள் வெறுக்கிறோம்!” என்றனர்.

எனவே, கர்த்தர் விஷமுள்ள பாம்புகளை அனுப்பினார். அவை அவர்களைக் கடித்தன. அநேக இஸ்ரவேல் ஜனங்கள் மரணமடைந்தனர். ஜனங்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் உமக்கும் கர்த்தருக்கும் எதிராகப் பேசும்போதெல்லாம் பாவம் செய்வதாக அறிகிறோம். கர்த்தரிடம் ஜெபம் செய்யும். இப்பாம்புகள் அகலும்படி கர்த்தரிடம் வேண்டுதல் செய்யும்” என்றனர். மோசே ஜனங்களுக்காக வேண்டினான்.

கர்த்தர் மோசேயிடம், “வெண்கலத்தால் ஒரு பாம்பு செய்து அதனைக் கம்பத்தின் மேல் வை. பாம்பால் கடிக்கப்பட்ட எவனும் கம்பத்தில் உள்ள பாம்பைப் பார்த்தால் மரிக்கமாட்டான்” என்றார். எனவே மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டுபண்ணி அதனைக் கம்பத்தில் வைத்தான். பாம்பால் கடிக்கப்பட்டவர்கள் கம்பத்தில் உள்ள பாம்பைப் பார்த்து உயிர்பிழைத்தனர்.

மோவாபுக்குப் பயணம்

10 இஸ்ரவேல் ஜனங்கள் அவ்விடத்தை விட்டுப் பயணம் செய்து ஓபோத்தில் கூடாரம் போட்டனர். 11 பிறகு அவர்கள் அதனை விட்டுப்போய் மோவாபுக்குக் கிழக்கே பாலைவனத்தில் அய் அபாரீமினில் தங்கினார்கள். 12 பிறகு அங்கிருந்து பயணம் செய்து சாரோத் பள்ளத்தாக்கில் கூடாரம் போட்டனர். 13 பின்னர் அங்கிருந்து சென்று, அர்னோன் ஆற்றைக் கடந்து கூடாரம் போட்டனர், இந்த ஆறு அம்மோனியர்களின் எல்லையிலிருந்து புறப்படுகிறது. அந்தப் பள்ளத்தாக்கானது மோவாபியருக்கும் எமோரியருக்கும் எல்லையாக இருந்தது. 14 இதனால்தான் கர்த்தருடைய யுத்தங்கள் என்ற நூலில்:

“சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றின் பள்ளத்தாக்குகளும் 15 ஓர் எனும் இடத்துக்குப் போகும் பள்ளத்தாக்குகளும், மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது” என்று எழுதப்பட்டிருக்கிறது.

16 இஸ்ரவேல் ஜனங்கள் அந்த இடத்தையும் விட்டு பேயீருக்குப் போனார்கள். அங்கே கிணறு இருந்தது. இந்த இடத்தில்தான் கர்த்தர் மோசேயிடம், “ஜனங்களை இங்கே கூட்டிவா அவர்களுக்கு தண்ணீர் வழங்குவேன்” என்றார்.

17 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் இந்தப் பாடலைப் பாடினார்கள்:

“கிணறு, தண்ணீரால் நிரம்பி வழிகிறது!
    இதைப் பற்றி பாடுங்கள்!
18 பெரிய மனிதர்கள் இந்தக் கிணற்றைத் தோண்டினார்கள்.
    முக்கிய தலைவர்களால் தோண்டப்பட்ட கிணறு இது.
அவர்கள் தங்கள் ஆயுதங்களாலும் தடிகளாலும் அதைத் தோண்டினார்கள்.
பாலைவனத்தில் இது ஒரு அன்பளிப்பாகும்.”

எனவே, அவர்கள் அந்தக் கிணற்றை “மாத்தனா” என்று அழைத்தனர். 19 ஜனங்கள் மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், பிறகு நகாலியேலிலிருந்து பாமோத்துக்குப் பயணம் செய்தனர். 20 ஜனங்கள் பாமோத்திலிருந்து மேவாப் பள்ளத்தாக்குக்குப் பயணம் செய்தனர். அங்கே பிஸ்கா மலை உச்சியானது பாலைவனத்துக்கு மேலே தெரிந்தது.

சீகோனும் ஓகும்

21 இஸ்ரவேல் ஜனங்கள் எமோரியரின் அரசனாகிய, சீகோனிடம் சில மனிதர்களை அனுப்பினர். அவர்கள் அரசனிடம்,

22 “உங்கள் நாட்டின் வழியாகப் பயணம் செய்ய அனுமதி தாருங்கள். நாங்கள் வயல் வழியாகவோ திராட்சைத் தோட்டத்தின் வழியாகவோ செல்லமாட்டோம். உங்கள் கிணறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமாட்டோம். நாங்கள் ராஜபாதையின் வழியாக மட்டுமே செல்வோம். உங்கள் நாட்டைக் கடந்து செல்லும்வரை நாங்கள் சாலையிலேயே தங்குவோம்” என்றனர்.

23 ஆனால் சீகோன் அரசனோ, இஸ்ரவேல் ஜனங்களைத் தன் நாட்டின் வழியாகப் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. அந்த அரசன் தன் படைகளைத் திரட்டி பாலை வனத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் போரிடப் புறப்பட்டான். யாகாஸ் எனும் இடத்தில் அவன் இஸ்ரவேல் ஜனங்களோடு போரிட்டான்.

24 இஸ்ரவேல் ஜனங்கள் அந்த அரசனைக் கொன்றனர். பிறகு அவர்கள் அவனுடைய நாட்டை அர்னோன் நதி முதல் யாப்போக் நதிவரை எடுத்துக்கொண்டனர். அவர்கள் எடுத்துக்கொண்ட நாடானது அன்று வரை அம்மோனியர்களின் எல்லையாக இருந்தது. அம்மோனிய ஜனங்களால் பலமாக பாதுகாக்கப்பட்டதால் அவர்கள் எல்லை வரை நிறுத்திக்கொண்டார்கள். 25 இஸ்ரவேல் ஜனங்கள் எமோரியரின் அனைத்து நகரங்களையும் கைப்பற்றிக்கொண்டு அதில் வாழத் துவங்கினார்கள். அவர்கள் எஸ்போன் நகரத்தையும் இன்னும் பல நகரங்களையும்கூட வென்றனர். 26 எஸ்போன் நகரத்தில்தான் எமோரியரின் அரசனான சீகோன் வசித்து வந்தான். கடந்த காலத்தில் சீகோன், மோவாப் அரசனோடு சண்டை செய்திருக்கிறான். சீகோன் அர்னோன் ஆறுவரையுள்ள நிலத்தைக் கைப்பற்றிக்கொண்டான். 27 இதனால்தான் பாடகர்கள் கீழ்க் கண்டவாறு பாடினார்கள்:

“எஸ்போனே, நீ மீண்டும் கட்டப்பட வேண்டும்!
    சீகோனின் நகரமும் பலமுள்ளதாக வேண்டும்.
28 எஸ்போனில் நெருப்பு தோன்றியது.
    சீகோனின் நகரத்திலும் நெருப்பு தோன்றியது.
மோவாபிலுள்ள ஒரு நகரத்தையும் நெருப்பு அழித்தது.
    அது அர்னோன் ஆற்றுக்கு மேலேயுள்ள குன்றுகளையும் எரித்தது.
29 மோவாபே உனக்கு ஐயோ!
    கேமோஷ் ஜனங்களை இழந்தாய்.
அவனது மகன்கள் ஓடிவிட்டனர்.
    அவனது மகள்கள் எமோரிய அரசனான சீகோனால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
30 ஆனால் நாங்கள் அத்தகைய எமோரியர்களைத் தோற்கடித்தோம்.
    அவர்களின் நகரங்களை அழித்தோம். எஸ்போன் முதல் திபோன்வரையும் மேதேபாவுக்கு அருகிலுள்ள நோப்பாவரை அழித்தோம்”

31 பின்னர், இஸ்ரவேல் ஜனங்கள், எமோரியரின் நாட்டில் தங்கள் முகாம்களை அமைத்தனர்.

32 மோசே யாசேர் பட்டணத்தைப் பார்வையிடும்படி சிலரை அனுப்பி வைத்தான். மோசே இவ்வாறு செய்தபிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அந்த நகரத்தையும் அதைச் சுற்றியுள்ள சிறு பட்டணங்களையும் கைப்பற்றினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் எமோரியர்களை விரட்டியடித்தனர்.

33 பிறகு அவர்கள் பாசானுக்குப் போகும் சாலையில் பயணம் செய்தனர். பாசானின் அரசனான ஓக் என்பவன் தனது படைகளோடு இஸ்ரவேல் ஜனங்களை எதிர்த்து வந்து, எத்ரே என்னும் இடத்தில் அவன் இவர்களோடு சண்டையிட்டான்.

34 ஆனால் கர்த்தர் மோசேயிடம், “அந்த அரசனுக்குப் பயப்பட வேண்டாம். அவர்களைத் தோற்கடிக்கும்படி செய்வேன். நீங்கள் அவனது படைகளையும், நாட்டையும் கைப்பற்றிக்கொள்வீர்கள். எஸ்போனில் இருந்த எமோரியரின் அரசனான சீகோனுக்கு நீங்கள் செய்தது போன்று இங்கேயும் செய்வீர்கள்” என்றார்.

35 எனவே இஸ்ரவேல் ஜனங்கள் ஓக் அரசனையும் அவனது படைகளையும் தோற்கடித்து, அவனையும் அவனது பிள்ளைகளையும் படைகளையும் கொன்றதுடன் அவனது நாட்டையும் கைப்பற்றிக்கொண்டனர்.

பிலேயாமும் மோவாபின் அரசனும்

22 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் மோவாபிலுள்ள யோர்தான் பள்ளத்தாக்குக்குப் பயணம் செய்தனர். எரிகோவின் அருகிலுள்ள யோர்தானுக்கு இக்கரையில் தங்கள் முகாம்களை அமைத்தனர்.

2-3 சிப்போரின் மகனான பாலாக் எமோரியர்களுக்கு இஸ்ரவேல் ஜனங்கள் செய்த எல்லாவற்றையும் அறிந்திருந்தான். அதினால் மோவாபின் அரசன் மிகவும் பயந்தான். ஏனென்றால் இஸ்ரவேலரின் எண்ணிக்கை மிகுதியானது. மோவாப் உண்மையில் கலங்கிப்போனான்.

மீதியானின் தலைவர்களிடம் மோவாபின் அரசன், “பசுவானது ஒரு நிலத்தின் புல்லை மேய்ந்துபோடுவது போல, இஸ்ரவேல் ஜனங்களின் கூட்டம் நம்மைச் சுற்றிலும் உள்ளவற்றை அழித்துப்போடும்” என்றான்.

அந்த நேரத்தில் சிப்போரின் மகனான பாலாக் மோவாபின் அரசனாக இருந்தான். அவன் பேயோரின் மகனான பிலேயாமை அழைத்துவர சிலரை அனுப்பினான். பிலேயாம் ஐபிராத்து ஆற்றின் அருகிலுள்ள பெத்தூரில் இருந்தான். அவனது ஜனங்களும் அங்கேயே வாழ்ந்தனர். பாலாக்,

“எகிப்திலிருந்து புதிய ஜனங்கள் கூட்டம் வந்திருக்கிறது. முழு நாட்டையும் ஆக்கிரமித்துக்கொள்வது போன்று அவர்கள் எண்ணிக்கையில் மிகுதியாக இருக்கின்றனர். எங்களை அடுத்து அவர்கள் கூடாரங்களை அமைத்துக்கொண்டு முகாமிட்டிருக்கிறார்கள். நீ வந்து எனக்கு உதவிசெய். எங்களைவிட அவர்கள் பலமிக்கவர்களாக உள்ளனர். உனக்குப் பெரும் வல்லமை உண்டு என்பதை நான் அறிவேன். நீ ஒருவனை ஆசீர்வதித்தால் அவனுக்கு நன்மைகள் ஏற்படும். நீ ஒருவனுக்கு எதிராகப் பேசினால் அவனுக்குத் தீமை ஏற்படும். எனவே நீ வந்து அவர்களுக்கு எதிராகப் பேசு. ஒரு வேளை அதனால் நான் இவர்களைத் தோற்கடித்துவிடலாம். பின் அவர்களை இந்நாட்டைவிட்டுத் துரத்திவிடலாம்” என்று செய்தி அனுப்பினான்.

மோவாப் மற்றும் மீதியானின் மூப்பர்கள் பிலேயாமிடம் பேசச் சென்றார்கள். அவனது சேவைக்குப் பரிசுக் கொடுக்கப் பணமும் கொண்டு சென்றார்கள். அவர்கள் அங்கு பாலாக் சொன்னதைச் சொன்னார்கள்.

பிலேயாம் அவர்களிடம், “இரவு இங்கே தங்கியிருங்கள். நான் கர்த்தரோடு பேசி அவர் எனக்குச் சொல்லும் பதிலைக் கூறுவேன்” என்றான். எனவே அன்று இரவு மோவாபின் தலைவர்கள் பிலேயாமோடு அங்கே தங்கியிருந்தனர்.

தேவன் வந்து பிலேயாமிடம், “உன்னோடு இருக்கும் இவர்கள் யார்?” என்று கேட்டார்.

10 தேவனிடம் பிலேயாம், “இவர்கள் மோவாபின் அரசனும் சிப்போரின் மகனுமான பாலாக் அனுப்பிய தலைவர்கள். அவன் ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறான். 11 எகிப்திலிருந்து ஒரு புது ஜனங்கள் கூட்டம் இங்கே வந்திருக்கிறது. அவர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு முழுவதும் நிறைந்துவிட்டனர். அவர்களுக்கு எதிராக நீ வந்து பேசவேண்டும். பிறகு என்னால் அவர்களோடுச் சண்டையிட்டு அவர்களைத் தோற்கடித்து விரட்ட முடியும் என்று கருதுகிறான்” என்றான்.

12 ஆனால் தேவன் பிலேயாமிடம், “அவர்களோடு போக வேண்டாம். அந்த ஜனங்களுக்கு எதிராகப் பேசவேண்டாம். அவர்கள் எனது ஜனங்கள்” என்று கூறினார்.

13 மறுநாள் காலையில் எழுந்து பிலேயாம், பாலக்கின் தலைவர்களிடம், “உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள். உங்களோடு வர கர்த்தர் என்னை அனுமதிக்கவில்லை” என்றான்.

14 எனவே மோவாபின் தலைவர்கள் பாலாக்கிடம் திரும்பினார்கள், “எங்களோடு வர பிலேயாம் மறுத்துவிட்டான்” என்றனர்.

15 எனவே பாலாக் வேறு சில தலைவர்களை பிலேயாமிடம் அனுப்பினான். இந்த முறை அவன் போன முறையைவிட மிகுதியான ஆட்களை அனுப்பினான். இவர்கள் முன்பு சென்றவர்களைவிட முக்கியமானவர்கள். 16 இவர்கள் பிலேயாமிடம் போய், “சிப்போரின் மகனான பாலாக் சொன்னது இதுதான்: நீர் எங்களிடம் வர தடைப்பட வேண்டாம். 17 நான் கேட்டுக்கொண்டபடி நீ செய்தால் உனக்கு மிகுதியாகப் பணம் கொடுப்பேன். எனக்காக இங்கு வந்து இந்த ஜனங்களுக்கு எதிராகப் பேசு” என்று சொல்லச் சொன்னார் என்றனர்.

18 பிலேயாம் பாலாக்கின் அதிகாரிகளிடம், “என் தேவனாகிய கர்த்தருக்கு நான் அடிபணிய வேண்டும். அவரது ஆணைக்கு எதிராக நான் எதையும் செய்ய முடியாது. சிறியதோ பெரியதோ கர்த்தருடைய ஆணையில்லாமல் நான் எதையும் செய்யமாட்டேன். பாலாக் அரசன் ஒரு அழகான மாளிகையுடன் தங்கமும் வெள்ளியும் நிறைத்துக் கொடுப்பதாக இருந்தாலும் கர்த்தருடைய கட்டளைக்கு எதிராக நான் ஒன்றும் செய்யமாட்டேன். 19 ஆனாலும் நீங்களும் இன்று இரவு இங்கே தங்குங்கள்; இரவு நேரத்தில் கர்த்தர் என்ன சொல்கிறார் என்பதையும் அறிந்துகொள்வேன்” என்றான்.

20 அன்று இரவு தேவன் பிலேயாமை நோக்கி, “மீண்டும் தங்களோடு வரும்படி உன்னை அழைக்க அந்த மனிதர்கள் வந்திருக்கிறார்கள். நீ அவர்களோடு போகலாம். ஆனால் நான் சொல்வதை மட்டுமே நீ செய்ய வேண்டும்” என்றார்.

பிலேயாமும் அவனது கழுதையும்

21 மறுநாள் காலை பிலேயாம் எழுந்து தன் கழுதையைத் தயார் செய்துகொண்டு மோவாபின் தலைவர்களோடு சென்றான். 22 பிலேயாம் தனது கழுதைமேல் சவாரி செய்தான். அவனோடு இரு வேலைக்காரர்களும் இருந்தனர். பிலேயாம் பயணம் செய்யும்போது, தேவன் கோபங்கொண்டார். எனவே கர்த்தருடைய தூதன் சாலையில் பிலேயாமின் முன்னால் நின்றான். தேவதூதன் பிலேயாமைத் தடுத்து நிறுத்தப் போனான்.

23 பிலேயாமின் கழுதை கர்த்தருடைய தூதன் சாலையில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது. அத்தேவதூதன் தன் கையில் வாள் ஒன்றை வைத்திருந்தான். எனவே கழுதை சாலையிலிருந்து திரும்பி வயலில் இறங்கியது. பிலேயாமால் தேவதூதனைக் காணமுடியவில்லை; எனவே அவன் கழுதை மீது மிகுந்த கோபங்கொண்டான். அவன் கழுதையை அடித்து சாலைக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்தினான்.

24 பிறகு கர்த்தருடைய தூதன் சாலை குறுகலாகும் இடத்தில் நின்றான். இது இரண்டு திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவே உள்ள இடம். சாலையின் இரு பக்கங்களிலும் சுவர்கள் இருந்தன. 25 மீண்டும் அந்தக் கழுதை கர்த்தருடைய தூதனைப் பார்த்தது. எனவே ஒரு சுவரை ஒட்டி நெருக்கமாகச் சென்றது. இதனால் பிலேயாமின் கால் சுவரோடு தேய்த்து உரசியது. ஆகையால் பிலேயாம் மீண்டும் கழுதையை அடித்தான்.

26 பிறகு கர்த்தருடைய தூதன் இன்னொரு இடத்தில் நின்றான். இது சாலை குறுகலாகும் இன்னொரு இடம். தேவதூதனைச் சுற்றிக்கொண்டு செல்ல சாலையில் போதுமான இடம் இல்லை. அந்தக் கழுதையால் இடது பக்கமோ வலது பக்கமோ திரும்ப முடியவில்லை. 27 கழுதை கர்த்தருடைய தூதனைப் பார்த்தது. எனவே, கழுதை பிலேயாம் தன்மேல் இருக்கும்போதே தரையில் படுத்துவிட்டது. இதனால் பிலேயாமுக்கு கழுதை மேல் மிகுந்த கோபம் வந்தது. எனவே அதனைத் தனது கைத்தடியால் அடித்தான்.

28 பிறகு கர்த்தர் கழுதையைப் பேசுமாறு செய்தார். அது பிலேயாமிடம், “என் மீது ஏன் கோபம் கொள்கிறீர்! நான் உமக்கு என்ன செய்துவிட்டேன்? என்னை மூன்று முறை அடித்துவிட்டீரே!” என்றது.

29 பிலேயாம் கழுதையிடம், “என்னை நீ முட்டாளாக்குகின்றாய். இப்போது என் கையில் ஒரு வாள் இருந்தால் இந்த வேளையிலேயே உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று பதில் சொன்னான்.

30 ஆனால் கழுதையோ பிலேயாமிடம், “பாரும்! நான் உமக்குச் சொந்தமான கழுதை! பல ஆண்டுகளாக என்மீது சவாரிசெய்து வருகிறீர். நான் இதற்கு முன்னால் இதுபோல் நடந்துகொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியும்!” என்றது.

இதற்குப் பிலேயாம், “இது உண்மைதான்” என்றான்.

31 பிறகு தேவன் பிலேயாமின் கண்களைத் திறந்து தூதனைப் பார்க்கும்படிச் செய்தார். கர்த்தருடைய தூதன் சாலையின் மேல் நின்றுகொண்டிருந்தான். அவன் தனது கையில் வாளை ஏந்தியிருந்தான். பிலேயாம் தரையில் பணிந்து வணங்கினான்.

32 பிறகு கர்த்தருடைய தூதன் பிலேயாமிடம், “ஏன் மூன்று முறை கழுதையை அடித்தாய்? நான்தான் உன்னைத் தடுத்து நிறுத்துவதற்காக வந்தேன். ஏனெனில் எனக்கு முன்பாக உனது போக்கு சீர்கெட்டதாய் இருக்கிறது. 33 ஆனால் சரியான நேரத்தில் கழுதை என்னைப் பார்த்து என்னிடமிருந்து திரும்பிவிட்டது. இது மூன்றுமுறை நடைபெற்றது. கழுதை அவ்வாறு திரும்பாமல் இருந்திருந்தால் நான் அப்பொழுதே உன்னைக் கொன்றிருப்பேன். நான் உன் கழுதையை உயிர் பிழைக்க வைத்திருப்பேன்” என்றார்.

34 பிறகு பிலேயாம் கர்த்தருடைய தூதனிடம், “நான் பாவம் செய்திருக்கிறேன். நீர் சாலையில் நின்றுக்கொண்டிருந்ததை நான் அறிந்துகொள்ளவில்லை. நான் குற்றம் செய்திருந்தால் நான் திரும்பி வீட்டிற்குப் போகிறேன்” என்றான்.

35 பிறகு கர்த்தருடைய தூதன் பிலேயாமிடம், “இல்லை! நீ இந்த மனிதர்களோடு செல்லலாம். ஆனால் கவனமாக இரு. நான் எதைச் சொல்லச் சொல்லுகிறேனோ அதையே சொல்லவேண்டும்” என்றார். எனவே பிலேயாம் பாலாக் அனுப்பிய மனிதர்களோடு சென்றான்.

36 பிலேயாம் வருவதைப் பற்றி பாலாக் கேள்விப்பட்டான். எனவே பாலாக் அவனைச் சந்திப்பதற்குப் புறப்பட்டு ஆர்னோன் ஆற்றின் அருகிலுள்ள மோவாப்பின் நகரத்திற்குப் போனான். இது நாட்டின் வட எல்லையில் இருந்தது. 37 பாலாக் பிலேயாமை பார்த்தான். அவன் இவனிடம், “நான் வரச்சொல்லி முன்பே கேட்டேனே. அப்போது ஏன் வரவில்லை? இது மிக மிக முக்கியமானது என்று சொல்லி இருந்தேன். நீர் ஏன் என்னிடம் வரவில்லை? நான் உமக்கு மரியாதைத் தராமல் போய்விடுவேனா?” என்றான்.

38 பிலேயாம் அவனிடம் “நான் இப்போது இங்கே இருக்கிறேன். ஆனால் நீர் கேட்டபடி என்னால் உதவ முடியாமல் போகலாம். தேவனாகிய கர்த்தர் என்னிடம் எதைச் சொல்லச் சொல்கிறாரோ அதனையே நான் சொல்வேன்” என்றான்.

39 பிலேயாம் பாலாக்குடன் கீரியாத் ஊசோத்திற்குச் சென்றான். 40 பாலாக் சில ஆடுகளையும் மாடுகளையும் பலியாகக் கொடுத்தான். அவன் கொஞ்சம் இறைச்சியைப் பிலேயாமுக்கும் தன்னோடு இருந்த சில தலைவர்களுக்கும் கொடுத்தான்.

41 மறுநாள் காலையில் பாலாக் பிலேயாமை பமோத்பால் நகரத்தின் மேடுகளுக்கு அழைத்துச் சென்றான். அங்கிருந்து இஸ்ரவேல் பாளையங்களின் ஒரு பகுதியை அவர்களால் காண முடிந்தது.

மாற்கு 7:1-13

பிரமாணங்களும் மனிதரின் விதிமுறைகளும்(A)

எருசலேமிலிருந்து சில பரிசேயர்களும், சில வேதபாரகர்களும் வந்தனர். அவர்கள் இயேசுவைச் சுற்றிக் கூடினர். இயேசுவின் சீஷர்களில் சிலர் சுத்தமற்ற கைகளால் உணவு உண்பதை அவர்கள் கவனித்தார்கள். (சுத்தமற்ற கை என்றால் பரிசேயர்கள் முறைப்படி அவர்கள் தம் கைகளைக் கழுவாமல் இருந்தனர்) பரிசேயர்களும், யூதர்களனைவரும் இத்தகு சிறப்பான முறையில் தம் கைகளைக் கழுவுவதற்கு முன்னால் உணவு உண்பதில்லை. அவர்கள் இதனை அவர்களின் முன்னோர் சொன்னபடி தொடர்ந்து செய்து வருகின்றனர். யூதர்கள் சந்தையில் ஏதாவது வாங்கும்போது, அதனைத் தனியான முறையில் கழுவிச் சுத்தப்படுத்தும் முன் அவர்கள் அதை உண்பதில்லை. இதைப்போன்று அவர்கள் பல விதிகளைத் தங்கள் முன்னோரிடமிருந்து பெற்றுக் கடைப்பிடித்தனர். கிண்ணங்கள், குடங்கள், வெண்கலப் பாத்திரங்கள் போன்றவற்றைக் கழுவுவது ஆகியவற்றைக் கடைப்பிடித்தனர்.

பரிசேயர்களும், வேதபாரகர்களும் இயேசுவிடம், “உம்முடைய சீஷர்கள் நமக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்களின் விதிமுறைகளைக் கைக்கொள்ளவில்லையே? உம்முடைய சீஷர்கள் சுத்தமற்ற கைகளால் தம் உணவை உண்டு வருகிறார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?” என்று கேட்டனர்.

இயேசு அவர்களிடம் “நீங்கள் எல்லாரும் போலித்தனமானவர்கள். உங்களைப் பற்றி ஏசாயா சரியாகவே எழுதியிருக்கிறான். அவன் எழுதியிருப்பது:

“‘இந்த மக்கள் என்னை மதிப்பதாய்ச் சொல்கிறார்கள்,
    ஆனால் உண்மையில் அவர்கள் தம் வாழ்வில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
அவர்களின் வழிபாடு ஒரு பயனுமற்றது.
    அவர்கள் உபதேசிக்கும் விதிமுறைகள் எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.’ (B)

நீங்கள் தேவனின் கட்டளைகளைப் பின்பற்றுவதை நிறுத்தி இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் மனிதனின் போதனைகளைக் கடைப்பிடித்து வருகிறீர்கள்” என்றார்.

மேலும் இயேசு அவர்களிடம், “நீங்கள் சமர்த்தராக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த போதனையை பின்பற்றுவதற்காக தேவனின் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டீர்கள். 10 ‘உங்கள் தாய்க்கும் தந்தைக்கும் மதிப்பு கொடுங்கள்’ [a] என்று மோசே சொல்லி இருக்கிறான். மேலும் அவன் ‘எவன் ஒருவன் தன் தந்தையிடமோ அல்லது தாயிடமோ கெட்டவற்றைப் பேசுகிறானோ அவன் கொலை செய்யப்படத்தக்கவன்’ [b] என்று கூறி இருக்கிறான். 11 ஒருவன் தன் தந்தையையோ தாயையோ நோக்கி ‘நான் உங்களுக்கு உதவக்கூடியவற்றைச் செய்ய முடியும். ஆனால் நான் உங்களுக்குச் செய்யமாட்டேன். நான் அதனைத் தேவனுக்குத் தருவேன்’ என்று சொல்ல நீங்கள் கற்றுத் தருகிறீர்கள். 12 அவன் தன் தந்தைக்கோ தாய்க்கோ எதுவும் செய்யத் தேவையில்லை என்று கற்பிக்கிறீர்கள். 13 ஆகையால் தேவன் சொன்னவற்றைச் செய்வது அவ்வளவு முக்கியமில்லை என்று சொல்லித்தருகிறீர்கள். நீங்கள் சொல்பவற்றை மக்கள் செய்தால் போதும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் இது போன்று பல செயல்களைச் செய்து வருகின்றீர்கள்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center