Old/New Testament
பலிகளைப் பற்றிய விதிகள்
15 கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசி இதனைக் கூறு. உங்கள் வீடாக இருக்கும்படி நான் உங்களுக்கு ஒரு நாட்டைக் கொடுக்கிறேன். நீங்கள் அதனுள்ளே நுழைந்ததும், 3 நீங்கள் கர்த்தருக்குச் சில சிறப்புக்குரிய தகன பலிகளைச் செலுத்த வேண்டும். அவற்றின் வாசனை கர்த்தருக்கு விருப்பமானது. நீங்கள் உங்கள் மாடுகளையும், ஆடுகளையும், வெள்ளாடுகளையும் தகனபலிக்குப் பயன்படுத்தலாம். அவற்றை சிறப்பு காணிக்கைகள், உற்சாக பலிகள், சமாதானப் பலிகள் அல்லது சிறப்புப் பண்டிகைப் பலிகள், ஆகியவற்றுக்காகவும் பயன்படுத்த வேண்டும்.
4 “ஒருவன் கர்த்தருக்கு காணிக்கையைக் கொண்டு வரும்போது, அவன் தானியக் காணிக்கையையும் கொண்டுவர வேண்டும். தானியக் காணிக்கை என்பது, ஒரு மரக்காலில் பத்தில் ஒரு பங்கு மெல்லிய மாவில் காற்படி எண்ணெய் பிசைந்து கொண்டு வரவேண்டும். 5 ஒரு ஆட்டுக்குட்டியைத் தகனபலியாகக் கொண்டுவரும் ஒவ்வொரு முறையும், நீங்கள் காற்படி திராட்சை ரசத்தையும், பானங்களின் காணிக்கையாகப் படைக்கவேண்டும்.
6 “நீங்கள் ஒரு ஆட்டுக்கடாவைப் படைக்கும்போது, தானியக் காணிக்கையையும் சேர்த்து படைக்கவேண்டும். இந்தத் தானியக் காணிக்கை, ஒரு மரக்காலில் பத்தில் இரண்டு பங்கான, மெல்லிய மாவிலே ஒருபடியில் மூன்றில் ஒரு பங்கு, ஒலிவ எண்ணெயோடு பிசைந்து கொடுக்க வேண்டும். 7 ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சைரசத்தைப் பானங்களின் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அதன் மணம் கர்த்தருக்கு மிகவும் விருப்பமானது.
8 “ஓர் இளங்காளையைத் தகனபலியாகவோ, சிறப்பான பொருத்தனைப் பலியாகவோ, சமாதான பலியாகவோ, கொடுக்கலாம். 9 அப்போது, அதனோடு தானியக் காணிக்கையையும், ஒரு காளையையும் படைக்கவேண்டும். அதாவது, ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்கான மெல்லிய மாவுடன், அரைப்படி ஒலிவ எண்ணெயைப் பிசைந்து கொடுக்க வேண்டும். 10 அதோடு பானங்களின் காணிக்கையாக அரைப்படி திராட்சைரசத்தையும் கொடுக்கவேண்டும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் விருப்பமாக இருக்கும். 11 நீங்கள் கர்த்தருக்கு தகனபலியாக கொடுக்கப் போகும் பலி, காளை அல்லது ஆட்டுக்கடா அல்லது செம்மறி ஆட்டுக் குட்டி அல்லது வெள்ளாட்டுக் குட்டியை இம்முறையில்தான் அளிக்கவேண்டும். 12 நீங்கள் படைக்கும் ஒவ்வொரு மிருகத்திற்கும் இவ்வாறுதான் செய்யவேண்டும்.
13 “இவ்வாறே ஒவ்வொரு இஸ்ரவேலனும் கர்த்தருக்குப் பிரியமான முறையில் தகன பலியைச் செலுத்த வேண்டும். 14 உங்களிடையே பிறநாட்டு ஜனங்களும் வாழ்வார்கள். அவர்களும் தகனபலி கொடுத்து கர்த்தரை வழிபட விரும்பினால் இந்த முறையில்தான் செலுத்தவேண்டும். 15 இதே விதிகள்தான் உங்களுக்கும், உங்களோடு வாழும் பிற நாட்டு ஜனங்களுக்கும் உரியதாகும். இவ்விதிகள் எக்காலத்திற்கும் உரியதாக விளங்கும். கர்த்தருக்கு முன்பு, நீங்களும், உங்களோடு வாழும் மற்றவர்களும், சமமாகக் கருதப்படுவார்கள். 16 எனவே, நீங்கள் இந்த விதிகளையும், சட்டங்களையும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் இதற்குப் பொருள். அந்தச் சட்டங்களும், விதிகளும் இஸ்ரவேல் ஜனங்களாகிய உங்களுக்கும், உங்களோடு வாழும் மற்ற ஜனங்களுக்கும் பொருந்தும்” என்றார்.
17 கர்த்தர் மேலும் மோசேயிடம், 18 “இவற்றை இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. நான் உங்களை வேறு நாட்டிற்கு அழைத்துச் செல்வேன். 19 அங்கு நீங்கள் விளைந்த உணவை உண்பதற்கு முன்னால், அதில் ஒரு பங்கை, கர்த்தருக்கு காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். 20 நீங்கள் தானியத்தைச் சேகரித்து, மாவாக அரைக்கவேண்டும். அது அப்பம் செய்வதற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். முதலில் செய்யப்படும் அப்பத்தை, கர்த்தருக்கு காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். போரடிக்கிற களத்தில் தானியத்தைக் காணிக்கையாகக் கொடுப்பது போன்று இது இருக்கும். 21 இவ்விதிமுறை எக்காலத்திற்கும் தொடர்ந்திருக்கும். நீங்கள் பிசைந்த மாவின் முதற்பகுதியை, கர்த்தருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும்.
22 “இந்தக் கட்டளையை மறதியினால் தவறி நீங்கள் அநுசரியாமற்போனால், நீங்கள் அதற்காக என்ன செய்யவேண்டும்? 23 இந்தக் கட்டளைகளை கர்த்தர் உங்களுக்கு மோசே மூலமாகக் கொடுத்தார். உங்களுக்கு கொடுத்த அந்நாளிலேயே இக்கட்டளைகள் செயல்படத் துவங்கியது. அந்நாள் முதல் எல்லாக் காலத்திற்கும் இக்கட்டளைகள் உங்களுக்குத் தொடர்ந்து வரும். 24 எனவே, இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் திட்டமிடாமல் இந்தக் கட்டளைகளை காக்கத் தவறினால் அதற்கு என்ன செய்வீர்கள்? இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் இந்தத் தவறைச் செய்தால், அவர்கள் அனைவரும் சேர்ந்து, ஓர் இளங்காளையைப் பலி கொடுக்க வேண்டும். அதன் மணம் கர்த்தருக்கு மிகவும் விருப்பமானதாகும். அதோடு தானியக் காணிக்கையையும், பானங்களின் காணிக்கையையும் ஒரு காளையோடு காணிக்கையாக கொடுக்கவேண்டும். பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் பலி கொடுக்கவேண்டும்.
25 “ஜனங்களைத் சுத்தப்படுத்த ஆசாரியன் அனைத்து சடங்குகளையும் செய்ய வேண்டும். அவன் இவற்றை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்காகவும் செய்யவேண்டும். தாங்கள் பாவிகள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், எப்போது அவர்களுக்கு அது தெரிய வருகிறதோ, அப்போதே அவர்கள் கர்த்தருக்கு அன்பளிப்புச் செலுத்த வேண்டும். அவர்கள் தகனபலியையும் பாவ நிவாரண பலியையும் கொடுக்க வேண்டும். அதனால் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும். 26 இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும், அவர்களோடு வாழும் மற்ற ஜனங்களும் மன்னிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நாம் தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாதிருந்தால் அவர்களும் மன்னிக்கப்படுவார்கள்.
27 “ஒரே ஒரு மனிதன் மட்டும் தவறிப் பாவம் செய்தால் அவன் ஓராண்டு வயதுள்ள பெண் வெள்ளாட்டைக் கொண்டு வர வேண்டும். அது பாவப்பரிகார பலியாகும். 28 அவனைத் சுத்தப்படுத்துவதற்குரிய நியமனத்தை ஆசாரியன் நிறைவேற்றவேண்டும். அந்த மனிதன் கர்த்தர் முன்னால் தவறி குற்றம் செய்து பாவியானால் ஆசாரியன் அவனுக்கு நிவாரணம் செய்தபின் அவன் சுத்தமாக்கி மன்னிக்கப்படுகிறான். 29 குற்றம் செய்து பாவியாகிற எவனுக்கும் இந்தச் சட்டம் உரியதாகும். இச்சட்டங்கள் இஸ்ரவேல் குடும்பத்தில் பிறந்த ஜனங்களுக்கும், அவர்களிடையே வாழும் அயல் நாட்டுக்காரர்களுக்கும் உரியதாகும்.
30 “ஆனால் ஒருவன் அறிந்தே பாவம் செய்துகொண்டேயிருக்கிறவனாயிருந்தால் அவன் கர்த்தருக்கு எதிராகிறான். அவன் தம் ஜனங்களிடமிருந்து தனியே பிரிக்கப்படவேண்டும். இந்தச் சட்டம் இஸ்ரவேல் குடும்பத்தில் பிறந்த ஜனங்களுக்கும், உங்களோடு வாழும் பிறநாட்டு ஜனங்களுக்கும் உரியதாகும். 31 கர்த்தரின் வார்த்தைகள் முக்கியமானவை என்று அந்த மனிதன் நினைக்கவில்லை. அவன் கர்த்தரின் கட்டளையை உடைத்துவிட்டான். அப்படிப்பட்டவன் உங்கள் குழுவிலிருந்து நிச்சயம் விலக்கப்பட வேண்டும். அவன் குற்றவாளியாகித் தண்டிக்கப்படுவான்!” என்றார்.
ஓய்வு நாளில் ஒருவன் வேலை செய்தால்
32 இந்த நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்திலேயே இருந்தனர். ஒருவன் ஓய்வு நாள் ஒன்றில் எரிப்பதற்கான விறகுகளைக் கண்டு அவற்றைச் சேகரித்தான். சிலர் இதனைப் பார்த்தனர். 33 அவன் விறகைச் சேகரித்துக்கொண்டு வரும்போது, அவர்கள் அவனை மோசேயிடமும், ஆரோனிடமும் அழைத்து வந்தனர். மற்றவர்களும் அவர்களோடு சேர்ந்து வந்தனர். 34 அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பது தெரியாததால் அவனை காவலுக்குள் வைத்திருந்தனர்.
35 பிறகு மோசேயிடம் கர்த்தர், “இவன் சாகவேண்டும். முகாமிற்கு வெளியே அவனைக் கொண்டு போய் அனைவரும் அவன் மேல் கல்லெறியுங்கள்” என்றார். 36 எனவே, ஜனங்கள் அவனை முகாமிற்கு வெளியே கொண்டு போய் கல்லால் எறிந்தனர். அவர்கள் இதனை மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்தனர்.
ஜனங்கள் விதிகளை நினைவுப்படுத்திக்கொள்ள தேவன் உதவுதல்
37 கர்த்தர் மோசேயிடம், 38 “இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசி கீழ்க்கண்டவற்றை அவர்களிடம் கூறு. எனது கட்டளைகளை நினைவுப்படுத்திக்கொள்ள நான் உங்களுக்கு உதவுவேன். பல துண்டு நூல் கயிறுகளைச் சேர்த்து, உங்கள் ஆடைகளின் மூலையில் தொங்கல்களைக் கட்டிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு தொங்கலிலும் நீல நிற நூலைக் கட்டிக்கொள்ளுங்கள். இதனை இப்போதும் எக்காலத்திற்கும் அணிந்துகொள்ள வேண்டும். 39 நீங்கள் இம்முடிச்சுகளைப் பார்க்கும்போதெல்லாம் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் அவற்றுக்குக் கீழ்ப்படிவீர்கள். இதனால் மறதி காரணமாக பாவம் செய்யாமல் இருப்பீர்கள். உங்கள் உடம்பும், கண்களும் விரும்புகிற காரியங்களை செய்யமாட்டீர்கள். 40 எனது அனைத்து கட்டளைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் உங்கள் தேவனுக்கென்று பரிசுத்தமாக இருப்பீர்கள். 41 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நானே உங்களை எகிப்திலிருந்து மீட்டு வந்தேன். நான் உங்கள் தேவனாயிருக்க இவற்றைச் செய்தேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்று கூறினார்.
சில தலைவர்கள் மோசேக்கு எதிராகத் திரும்புதல்
16 கோராகு, தாத்தான், அபிராம், ஓன் ஆகியோர் மோசேக்கு எதிராகக் கிளம்பினார்கள். (கோராகு இத்சேயாரின் மகன். இத்சேயார் கோகாத்தின் மகன். கோகாத் லேவியின் மகன். தாத்தானும், அபிராமும் சகோதரர்கள். இவர்கள் எலியாபின் பிள்ளைகள். ஓன் பேலேத்தின் மகன். இவர்கள் அனைவரும் ரூபன் சந்ததியைச் சேர்ந்தவர்கள்.) 2 இவர்கள் நான்கு பேரும் 250 இஸ்ரவேல் ஜனங்களைச் சேர்த்து மோசேக்கு எதிராக நின்றனர். இவர்கள் அனைவரும் ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டத் தலைவர்கள். அவர்களை அனைவருக்கும் தெரியும். 3 அவர்கள் அனைவரும் ஒரு குழுவாகி மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராகப் பேச வந்தனர். அவர்கள் மோசேயிடமும், ஆரோனிடமும் வந்து, “நீங்கள் அளவை மிஞ்சிப் போய் விட்டீர்கள். நீங்கள் தவறானவர்கள்! இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பரிசுத்தமானவர்கள். அவர்கள் மத்தியில் கர்த்தர் வாழ்கிறார்! கர்த்தரின் மற்ற ஜனங்களைவிட, நீங்கள் உங்களை மட்டும் மிக முக்கிமானவர்களாக்கிக் கொண்டீர்கள்” என்றனர்.
4 இதைக் கேள்விப்பட்டதும் மோசே தரையில் முகம்குப்புற விழுந்து வணங்கி, தான் பெருமை இல்லாதவன் என்பதை வெளிப்படுத்தினான். 5 பிறகு மோசே, கோராகிடமும் அவனைப் பின்பற்றி வந்தவர்களிடமும்: “நாளை காலையில் கர்த்தர், தனது உண்மையான ஊழியன் யாரென்றும் உண்மையில் யார் பரிசுத்தமானவன் என்பதையும் காட்டுவார். அந்த மனிதனை அவர் தன்னருகில் அழைப்பார். அந்த மனிதனைத் தேர்ந்தெடுத்து, கர்த்தர் தன்னருகே சேர்த்துக்கொள்வார். 6 எனவே, கோராகே! நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்களும் 7 நாளை தூபகலசங்களில் நெருப்பை உண்டாக்கி, அதில் நறுமணப் பொருட்களையிட்டு, அவற்றை கர்த்தருக்கு முன்னால் கொண்டு வாருங்கள். உண்மையில் பரிசுத்தமானவன் யார் என்பதை கர்த்தர் தேர்ந்தெடுப்பார். லேவியர்களாகிய நீங்கள்தான் மிதமிஞ்சி போகிறீர்கள். நீங்கள் தவறானவர்கள்” என்றான்.
8 மேலும் மோசே கோராகிடம், “லேவியர்களாகிய நீங்கள் நான் சொல்வதைக் கேளுங்கள். 9 இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் உங்களைச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்திருப்பதால், நீங்கள் மேலும் மகிழ்ச்சி அடையவேண்டும், இல்லையா? மற்ற இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து நீங்கள் வேறுபட்டவர்கள். பரிசுத்தக் கூடாரத்தில் பணிவிடை செய்வதற்காக கர்த்தர் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் தம்மருகே உங்களை வரச்செய்திருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களின் ஆராதனைக்கு நீங்கள் உதவ வேண்டும். இது போதாதா? 10 ஆசாரியர்களுக்கு உதவும்படி லேவியர்களாகிய உங்களை கர்த்தர் தன்னருகே அனுமதித்திருக்கிறார். ஆனால் நீங்கள் இப்போது ஆசாரியர்களாக மாறப் பார்க்கிறீர்கள். 11 நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்களும் சேர்ந்து கர்த்தருக்கு எதிராக நிற்கிறீர்கள். ஆரோன் ஏதாவது தவறு செய்தானா? இல்லையே! அவ்வாறு இருக்க அவனுக்கு எதிராக ஏன் முறையிடுகிறீர்கள்?” என்றான்.
12 பிறகு மோசே எலியாப்பின் மகன்களான தாத்தானையும், அபிராமையும் அழைத்தான். ஆனால் அவர்களோ, “நாங்கள் வரமாட்டோம்! 13 நீர் ஏராளமான நன்மைகள் நிறைந்த நாட்டிலிருந்து வெளியேற்றி எங்களை கொல்வதற்காக இப்பாலைவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறீர். இப்போது எங்களை விட உம்மை திறமை மிக்கவராக காட்ட விரும்புகிறீர். 14 நாங்கள் ஏன் உம்மை பின்பற்ற வேண்டும்? தேவன் வாக்களித்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குள் நீர் எங்களைக் கொண்டு வரவில்லை. நீர் எங்களுக்கு வயல்களோ, திராட்சை தோட்டங்களோ கொடுக்கவில்லை. இந்த ஜனங்களையெல்லாம் உங்கள் அடிமைகளாக்குவதுதான் உங்கள் எண்ணமா? முடியாது. நாங்கள் அங்கே வரமாட்டோம்” என்றனர்.
15 எனவே, மோசே மிகவும் கோபம் கொண்டான். அவன் மீண்டும் கர்த்தரிடம், “நான் இந்த ஜனங்களுக்கு எதிராக எந்தத் தவறும் செய்யவில்லை. நான் அவர்களிடமிருந்து எதையும், ஏன் ஒரு கழுதையையும் கூட எடுத்துக்கொள்ளவில்லை! கர்த்தாவே, இவர்களது அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளாதிரும்” என்றான்.
16 பிறகு மோசே கோராகிடம், “நாளை கர்த்தருக்கு முன்னால் நீயும், உன்னைப் பின்பற்றுகிறவர்களும் நிற்கவேண்டும். அங்கே உங்களோடு ஆரோனும் நிற்பான். 17 நீங்கள் ஒவ்வொருவரும் நறுமணப் பொருட்களை இடுகின்ற தூபகலசத்தைக் கொண்டு வந்து அவற்றை கர்த்தருக்கு முன்பு வைக்க வேண்டும். மூப்பர்களுக்குரிய 250 தூபகலசத்தோடு உனக்கும், ஆரோனுக்குமாக இரண்டு தூப கலசங்கள் இருக்கும்” என்றான்.
18 எனவே, ஒவ்வொரு தலைவரும் தனக்கென்று தூபகலசமும், அதில் இடுவதற்கு நறுமணப் பொருட்களும் கொண்டு வந்தனர். ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் அவர்கள் வந்து நின்றனர். மோசேயும் ஆரோனும் அங்கே நின்றனர். 19 கோராகும் அனைத்து ஜனங்களையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூடுமாறு செய்தான். பிறகு அங்குள்ள ழுழு சபையினருக்கும் கர்த்தரின் மகிமை காணப்பட்டது.
20 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 21 “இந்த ஜனங்களிடமிருந்து விலகி நில்லுங்கள். அவர்களை இப்போதே அழிக்கப் போகிறேன்!” என்றார்.
22 ஆனால் மோசேயும், ஆரோனும் தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கிக் கதறினார்கள், “தேவனே! நீர் மாம்சமான எல்லாருடைய ஆவிகளுக்கும் தேவன். ஒரே ஒருவன் மட்டும் பாவம் செய்தால் நீர் முழு சபையினர் மீதும் கோபங்கொள்ளலாமா?” என்றனர்.
23 பிறகு கர்த்தர் மோசேயிடம், 24 “கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு விலகிப்போகும்படி ஜனங்களிடம் கூறு” என்று கேட்டுக்கொண்டார்.
25 மோசே எழுந்து, தாத்தானிடமும், அபிராமிடமும் சென்றான். எல்லா மூப்பர்களும் அவனைப் பின்பற்றினர். 26 மோசே, ஜனங்களை எச்சரித்து. “அந்தத் தீய மனிதர்களின் கூடாரங்களை விட்டு விலகிப் போங்கள், அவர்களுக்குரிய எதையும் தொடாதீர்கள், நீங்கள் இவ்வாறு செய்தால் அவர்களது பாவத்தின் காரணமாக அழிக்கப்படுவீர்கள்” என்றான்.
27 எனவே கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு விலகிப் போனார்கள். தாத்தானும் அபிராமும் தங்கள் கூடாரத்திற்கு வெளியே வந்து, தங்கள் கூடார வாசல்களில், தங்கள் மனைவி, குழந்தைகளோடு நின்று கொண்டிருந்தனர்.
28 பிறகு மோசே, “இவை எல்லாவற்றையும் செய்யுமாறு கர்த்தர் என்னை அனுப்பினார் என்று ஏற்கெனவே நான் கூறியுள்ளேன். இதுதான் அதற்கான சாட்சி. இவை எனது சொந்த எண்ணங்கள் அல்ல என்பதை இவை உங்களுக்குக் காட்டும். 29 இங்குள்ள மனிதர்கள் மரித்துப்போவார்கள். அவர்கள் சாதாரண ஜனங்களைப் போன்று மரிப்பார்களேயானால் பிறகு கர்த்தர் உண்மையில் என்னை அனுப்பவில்லை என்று தெரிந்துக்கொள்ளுங்கள். 30 ஆனால் கர்த்தர் இவர்களை அசாதாரணமான முறையில் மரிக்க செய்வாரானால், இவர்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தார்கள் என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். பூமி பிளந்து இந்த மனிதர்களை அப்படியே விழுங்கிவிடும். இதுதான் அதற்கு சான்று, இவர்கள் உயிரோடு தங்கள் கல்லறைக்குள் புதைக்கப்படுவார்கள். இவர்களுக்குரிய அனைத்தும், இவர்களோடேயே போய்ச்சேரும்” என்றான்.
31 மோசே இவற்றைச் சொல்லி முடித்ததும், அவர்கள் நின்ற இடத்தில் பூமி பிளந்தது. 32 பூமி தன் வாயைத் திறந்து, அவர்களை விழுங்கியது போல் இருந்தது. கோரகின் ஜனங்களும் அவர்களின் குடும்பங்களும் அவர்களுக்குரிய அனைத்தும் பூமிக்குள் சென்றுவிட்டன. 33 அவர்கள் தங்கள் கல்லறைக்குள் உயிரோடு சென்றனர். அவர்களுக்குரிய பொருட்களும், அவர்களோடு சென்றன. பிறகு பூமி மூடிக்கொண்டது. அவர்கள் முகாமிலிருந்து மூடப்பட்டு மடிந்தனர்!
34 இஸ்ரவேல் ஜனங்கள் அழிந்து போனவர்களின் அழுகுரல்களைக் கேட்டனர், அவர்கள் பல திசைகளிலும் ஓடிப்போய், “இந்தப் பூமி எங்களையும் விழுங்கிக் கொன்றுவிடும்” என்று கதறினர்.
35 பிறகு கர்த்தரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து தூபதீபம் காட்டிய 250 தலைவர்களையும் அழித்துப் போட்டது.
36 கர்த்தர் மோசேயிடம் 37-38 “ஆசாரியனான ஆரோனின் மகனான எலெயாசாரிடம் நெருப்புக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவற்றிலுள்ள கரியையும், சாம்பலையும் கொட்டிவிடச் சொல். அவர்கள் எனக்கெதிராகப் பாவம் செய்தார்கள். அவர்களது பாவம் அவர்களின் உயிரைப் போக்கிவிட்டது. ஆனால், அக்கலசங்கள் இப்போதும் பரிசுத்தமானவை. அவற்றை கர்த்தருக்குக் கொண்டுவந்ததால் பரிசுத்தமடைந்தன. அவற்றைத் தகடுகளாக அடித்து, பலிபீடத்தைச் சுற்றிலும் மூடிவைக்கவும். இது எல்லா இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்” என்று கூறினார்.
39 எனவே, ஆசாரியனாகிய எலெயாசார் அனைத்து வெண்கலத் தூபகலசங்களையும் சேகரித்தான். அவற்றைக் கொண்டு வந்த மனிதர்கள் மரித்துப்போனார்கள். ஆனால், கலசங்கள் இருந்தன. அவன் அவற்றை அடித்து, தகடாக்கும்படி செய்து, பின் அத்தகடுகளைப் பலிபீடத்தைச் சுற்றி மாட்டி வைத்தான். 40 மோசே மூலமாக கர்த்தர் எலெயாசாருக்குக் கட்டளையிட்டபடிச் செய்து முடித்தான். இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு அடையாளம் ஆயிற்று. ஆரோன் ஜனங்களைத் தவிர வேறு யாரேனும் நறுமணப் பொருள் கொண்டு வரக் கூடாது என்பதற்கு இது நினைவூட்டல் ஆயிற்று. யாராவது கர்த்தருக்கு நறுமணப் பொருள் கொண்டுவந்தால், கோராகும் அவனைப் பின்பற்றியவர்களும் மரித்துப் போனதுபோல் மரித்துப்போவார்கள்.
ஆரோன் ஜனங்களைக் காப்பாற்றுதல்
41 மறுநாள் இஸ்ரவேல் ஜனங்கள், மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக முறையிட்டு, “நீங்கள் கர்த்தருடைய ஜனங்களைக் கொன்று விட்டீர்கள்” எனக் கூறினர்.
42 மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் நின்று கொண்டு இருந்தனர். ஜனங்கள் அங்கே கூடி அவர்களுக்கு எதிராக முறையிட்டனர். ஆனால் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தை நோக்கியபோது அதை மேகம் சூழ்ந்தது. அங்கே கர்த்தரின் மகிமை காணப்பட்டது. 43 பிறகு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்தின் முன்பாக வந்தனர்.
44 மோசேயிடம் கர்த்தர், 45 “இந்த ஜனங்களிடமிருந்து விலகி நில்லுங்கள். நான் இவர்களை உடனே அழிக்கப்போகிறேன்” என்றார். எனவே மோசேயும் ஆரோனும் தரையில் முகம்குப்புற விழுந்து வணங்கினார்கள்.
46 பிறகு மோசே ஆரோனிடம், “உனது வெண்கலத் தூபகலசத்தை எடுத்துக்கொள், பலிபீடத்திலுள்ள நெருப்பை அதில் இடு, பின் நறுமணப் பொருளைப்போடு, அவற்றை ஜனங்களிடம் கொண்டு போய் காட்டு, அது அவர்களைத் சுத்தமாக்கும். அவர்கள் மேல் கர்த்தர் கோபமாக உள்ளார். அவர்களுக்கு துன்பம் ஏற்கெனவே தொடங்கி விட்டது” என்றான்.
47-48 ஆரோன் மோசே சொன்னபடி தூபகலசமும், நெருப்பும், நறுமணப் பொருட்களும் எடுத்துக்கொண்டு ஜனங்கள் மத்தியில் ஓடினான். ஆனால், ஏற்கெனவே நோய் அவர்களிடையே துவங்கிவிட்டது. எனவே ஆரோன் மரித்துப் போனவர்களுக்கும், இன்னும் உயிரோடு இருந்தவர்களுக்கும் இடையே நின்று அவர்களைத் சுத்தப்படுத்தவதற்குரியவற்றைச் செய்தான். நோயும் நிறுத்தப்பட்டது. 49 ஆனால் 14,700 பேர் நோயால் மரித்துப்போனார்கள். கோரகினால் மரித்தவர்கள் இதில் கணக்கிடப்படவில்லை. 50 எனவே நோய் நிறுத்தப்பட்டது. பின் ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் நின்ற மோசேயிடம் திரும்பி வந்தான்.
தன் சொந்த ஊரில் இயேசு(A)
6 அவ்விடத்தைவிட்டு இயேசு தன் சொந்த ஊருக்குக் கிளம்பினார். அவரது சீஷர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். 2 ஓய்வு நாளானபோது ஜெப ஆலயத்தில் இயேசு உபதேசம் செய்ய ஆரம்பித்தார். நிறைய மக்கள் அதனைக் கேட்டு வியப்புற்றனர். அவர்கள் “இந்த மனிதர் இந்த உபதேசங்களை எங்கே இருந்து பெற்றார்? இந்த அறிவை எப்படிப் பெற்றார்? இவருக்கு இதனை யார் கொடுத்தது? அற்புதங்களைச் செய்யும் அதிகாரத்தை எங்கிருந்து பெற்றார்? 3 இவர் ஒரு தச்சன் மட்டும்தானே. இவருடைய தாய் மரியாள் அல்லவா! இவர் யாக்கோபு, யோசே, சீமோன் ஆகியோரின் சகோதரர் அல்லவா. இவரது சகோதரிகள் நம்முடன் தானே இருக்கிறார்கள்” என்று பேசிக்கொண்டார்கள். அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தனர்.
4 இயேசு மக்களைப் பார்த்து, “ஒரு தீர்க்கதரிசியை மற்ற மக்களே மரியாதை செய்வர். ஆனால் அவர் சொந்த ஊரில் சொந்த மக்களிடம் சொந்த வீட்டில் மரியாதை பெறுவதில்லை” என்றார். 5 இயேசு அந்த ஊரில் அதிக அளவில் அற்புதங்களைச் செய்ய இயலவில்லை. அவர் நோயுற்ற சிலரின் மேல் தன் கையை வைத்து குணமாக்கும் சில செயல்களை மட்டுமே செய்தார். 6 அங்குள்ள மக்களுக்கு விசுவாசம் இல்லாதது பற்றி இயேசு மிகவும் ஆச்சரியப்பட்டார். பிறகு இயேசு அந்தப் பகுதியில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் போய் உபதேசம் செய்தார்.
சீஷர்கள் அனுப்பப்படுதல்(B)
7 அவர் தனது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாக அழைத்தார். அவர்களை இரண்டிரண்டு பேராக வெளியே அனுப்பினார். அசுத்த ஆவிகளின் மேல் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார். 8 அவர் தன் சீஷர்களிடம், “உங்கள் பயணத்துக்கு எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம். நடந்து செல்ல வசதியாக ஒரு கைத்தடியை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். உணவையோ, பையையோ, கச்சைகளில் பணத்தையோ எடுத்துச் செல்ல வேண்டாம். 9 செருப்பை அணிந்து கொள்ளுங்கள். ஆடை மட்டும் அணிந்து கொள்ளுங்கள். 10 நீங்கள் ஒரு வீட்டுக்குள் நுழைந்ததும், அந்த ஊரை விட்டு நீங்கும்வரை அங்கேயே தங்கி இருங்கள். 11 எந்த ஊராவது உங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தாலோ அல்லது உங்கள் உபதேசங்களைக் கேட்க மறுத்தாலோ அந்த ஊரைவிட்டு விலகுங்கள். உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியையும் அங்கேயே உதறிவிட்டுச் செல்லுங்கள். அவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்” என்றார்.
12 சீஷர்கள் அந்த இடத்தை விட்டு விலகிப் பல இடங்களுக்கும் சென்றனர். அவர்கள் மக்களிடம் உபதேசம் செய்தனர். தங்கள் மனதையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுமாறு போதித்தனர். 13 அவர்கள் பல பிசாசுகளை மக்களிடமிருந்து விரட்டினர். அவர்கள் நோயுற்ற மனிதர்களுக்கு ஒலிவ எண்ணெயைத் தடவிக் குணப்படுத்தினர்.
ஏரோதுவின் தவறான கணிப்பு(C)
14 இயேசு பிரபலமானபடியால் ஏரோது மன்னன் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். சில மக்கள், “இயேசுதான் யோவான் ஸ்நானகன். அவன் மரணத்தில் இருந்து எழுந்திருக்கிறான். அதனால்தான் அவரால் இது போன்ற அற்புதங்களைச் செய்ய முடிகிறது” என்றனர்.
15 இன்னும் சிலர், “இவர்தான் எலியா” என்றனர். மேலும் சிலரோ, “இயேசு ஒரு தீர்க்கதரிசி. இதற்கு முன்னால் வாழ்ந்த பல தீர்க்கதரிசிகளைப்போன்று இவரும் ஒருவர்” என்று சொல்லிக்கொண்டனர்.
16 இயேசுவைப் பற்றிய இது போன்ற பல செய்திகளை ஏரோது அறிந்து கொண்டான். அவன், “நான் யோவானின் தலையை வெட்டிக் கொன்றுவிட்டேன். இப்போது யோவான் மரணத்தில் இருந்து எழுந்துவிட்டான்” என்று சொன்னான்.
யோவான் ஸ்நானகனின் மரணம்
17 ஏரோது தன் வீரர்களுக்கு யோவானைக் கைது செய்யுமாறு ஆணையிட்டான். அவனைச் சிறையில் அடைத்தான். தன் மனைவியைச் சந்தோஷப்படுத்துவதற்காகவே அவன் இவ்வாறு செய்தான். அவள் பெயரே ஏரோதியாள். இவள் முதலில் ஏரோதுவின் சகோதரனான பிலிப்புவின் மனைவியாக இருந்தாள். ஆனால் அவளைப் பின்னர் ஏரோது மணந்துகொண்டான். 18 ஏரோதிடம் இவ்வாறு சகோதரனின் மனைவியை மணந்துகொள்வது சரியன்று என யோவான் எடுத்துக் கூறினான். 19 எனவே ஏரோதியாள் யோவானை வெறுத்தாள். அவள் அவனைக் கொல்ல விரும்பினாள். ஆனால் அவளால் யோவானைக் கொன்றுவிடுமாறு ஏரோதுவைத் தூண்டிவிட முடியவில்லை 20 யோவானை கொல்ல ஏரோது பயந்தான். யோவான் ஒரு நல்ல பரிசுத்தமான மனிதன் என்று மக்கள் நம்புவதை அவன் அறிந்திருந்தான். ஆகையால் ஏரோது யோவானைக் காப்பாற்றி வந்தான். யோவானின் போதகத்தைக் கேட்பதில் ஏரோது பெருமகிழ்ச்சி அடைந்தான். ஆனால் அவனது போதகம் ஏரோதை உறுத்தியது.
21 பிறகு யோவானைக் கொல்வதற்குப் பொருத்தமான வாய்ப்பு ஒன்று ஏரோதியாளுக்குக் கிடைத்தது. இது ஏரோதின் பிறந்த நாளன்று நிகழ்ந்தது. தன் பிறந்த நாளன்று ஏரோது மிக முக்கியமான அரசு அதிகாரிகளுக்கும், மிக முக்கியமான இராணுவ அதிகாரிகளுக்கும், கலிலேயாவின் பெரிய மனிதருக்கும் விருந்து கொடுத்தான். 22 ஏரோதியாளின் மகள் அந்த விருந்திற்கு வந்து நடனமாடினாள். அவள் ஆடும்போது, ஏரோதும் அவனைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு உண்டனர்.
ஆகையால் ஏரோது மன்னன் அவளிடம், “நீ விரும்பும் எதையும் உனக்குத் தருவேன்” என்று உறுதி கூறினான். 23 “நீ எதைக் கேட்டாலும் தருவேன், எனது இராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவேன்” என்று சத்தியம் செய்தான்.
24 அந்தப் பெண் தன் தாயிடம் சென்று, “நான் ஏரோது மன்னனிடம் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்பது?” எனக் கேட்டாள். அவளது தாயோ, “யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்” என பதிலளித்தாள்.
25 உடனே விரைவாக அவள் மன்னனிடம் திரும்பி வந்தாள். அவள் மன்னனிடம், “யோவான் ஸ்நானகனின் தலையை எனக்குத் தாருங்கள். உடனே எனக்கு அதனைத் தட்டில் வைத்துத் தர வேண்டும்” என்று கேட்டாள்.
26 ஏரோது மன்னன் இதைக்கேட்டு வருத்தப்பட்டான். ஆனால் அவள் விரும்பும் எதையும் தந்துவிடுவதாக ஏற்கெனவே அவளிடம் ஆணையிட்டு சத்தியம் செய்துவிட்டான். மன்னனோடு உணவருந்திக் கொண்டிருந்த பெரிய மனிதர்களும் அவனது ஆணையை அறிந்திருந்தனர். ஆகையால் அவனால் அப்பெண்ணின் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. 27 உடனே யோவானின் தலையை வெட்டிக் கொண்டு வருமாறு ஒரு வீரனிடம் மன்னன் கட்டளையிட்டான். ஆகையால் அந்த வீரன் போய் சிறைக்குள் இருந்த யோவானின் தலையை வெட்டினான். 28 பிறகு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டுவந்தான். அவன் அந்தத் தலையை அப்பெண்ணிடம் கொடுத்தான். அப்பெண் அதனைத் தன் தாயிடம் கொடுத்தாள். 29 அங்கு நடந்ததைப்பற்றி யோவானின் சீஷர்கள் அறிந்துகொண்டு, வந்து யோவானின் சரீரத்தைப் பெற்றுச் சென்றனர். அவர்கள் அதனை ஒரு கல்லறையில் அடக்கம் செய்தனர்.
2008 by World Bible Translation Center