Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எண்ணாகமம் 3-4

ஆசாரியர்களான ஆரோனின் குடும்பத்தினர்

சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடு பேசிக்கொண்டிருந்தபோது, ஆசாரியனாகிய ஆரோன், மற்றும் மோசேயின் வம்ச வரலாறு கீழ்க்கண்டவாறு இருந்தது:

ஆரோனுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். நாதாப் முதல் மகன். அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள் இளையவர்கள். இவர்கள் ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கர்த்தருக்கு ஊழியம் செய்யும் பொறுப்பைப் பெற்றிருந்தனர். ஆனால் நாதாபும் அபியூவும் தங்கள் பாவத்தின் காரணமாக, கர்த்தருக்கு ஊழியம் செய்யும்போதே, மரித்துப்போனார்கள். கர்த்தருக்குக் காணிக்கைப் பலி செலுத்தும்போது கர்த்தரால் அங்கீகரிக்கப்படாத நெருப்பை அவர்கள் பயன்படுத்தினர். எனவே, நாதாப்பும், அபியூவும் சீனாய் பாலைவனத்திலேயே மடிந்தார்கள். அவர்களுக்கு மகன்கள் இல்லை. எனவே, அவர்களின் இடத்தில் எலெயாசாரும், இத்தாமாரும் ஆசாரியர்களாக கர்த்தருக்கு ஊழியம் செய்தனர். அவர்களின் தந்தையான ஆரோன் உயிரோடு இருக்கும்போதே இது நிகழ்ந்தது.

ஆசாரியர்களின் உதவியாட்களான லேவியர்கள்

கர்த்தர் மோசேயிடம், “லேவியர்களின் கோத்திரத்திலிருந்து அனைவரையும், ஆசாரியனாகிய ஆரோனிடம் அழைத்துக் கொண்டு வா. அவர்கள் ஆரோனின் உதவியாட்களாக இருப்பார்கள். ஆசரிப்புக் கூடாரத்தில் ஆரோன் ஊழியம் செய்யும்போது, அவனுக்கு லேவியர்கள் உதவுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் பரிசுத்தக் கூடாரத்திற்கு தொழுதுகொள்ள வரும்போதும், லேவியர்கள் அவர்களுக்கு உதவி செய்வார்கள். ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள அனைத்துப் பொருட்களையும் பாதுகாப்பது இஸ்ரவேல் ஜனங்களின் கடமையாகும். ஆனால் லேவியர்கள் இவற்றைச் சுமந்து இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சேவை செய்யவேண்டும். பரிசுத்தக் கூடாரத்தில் தொழுதுகொள்ள வேண்டிய முறை இதுவேயாகும்.

“ஆரோனிடமும் அவனது மகன்களிடமும் லேவியர்களை ஒப்படையுங்கள். அவர்கள் ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் உதவி செய்வதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

10 “ஆரோனையும் அவனது மகன்களையும், ஆசாரியர்களாக ஊழியம் செய்ய நியமனம் செய். அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டும். இப்பரிசுத்தமான பொருட்களின் அருகில் வேறு எவராவது வர முயன்றால் அவர்கள் கொல்லப்பட வேண்டும்” என்றார்.

11 மேலும் கர்த்தர் மோசேயிடம், 12 “இஸ்ரவேல் ஜனங்களின் குடும்பம் ஒவ்வொன்றிலும் முதலில் பிறக்கும் மகனை எனக்குக் கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். ஆனால் இப்போது எனக்கு ஊழியம் செய்வதற்காக லேவியர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவர்கள் எனக்குரியவர்களாக இருப்பார்கள்; எனவே இனி இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் முதல் பிள்ளையை எனக்குக் கொடுக்க வேண்டாம். 13 நீங்கள் எகிப்தில் இருந்தபோது நான் எகிப்திலுள்ள முதலில் பிறந்த அனைத்தையும் கொன்றேன். அந்த நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் ஒவ்வொரு முதல் குழந்தையையும் எனக்குரியதாக நான் எடுத்துக்கொண்டேன். முதலில் பிறந்த அனைத்து குழந்தைகளும், அனைத்து மிருகங்களும் எனக்குரியது. ஆனால் இப்போது உங்களுக்கு முதலில் பிறக்கும் குழந்தைகளை உங்களுக்கே கொடுத்துவிடுகிறேன். லேவியர்களை எனக்குச் சொந்தமாக்கிக்கொண்டேன். நானே கர்த்தர்” என்றார்.

14 கர்த்தர் மீண்டும் சீனாய் பாலைவனத்தில் மோசேயோடு பேசி, 15 “லேவியின் எல்லாக் குடும்பங்களையும், கோத்திரங்களையும் ஒருமாத வயதும் அதற்கு மேலும் உள்ள ஆண்கள் மற்றும் ஆண் குழந்தைகளைக் கணக்கிடு” என்றார். 16 மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அவர்களை கணக்கிட்டான்.

17 லேவிக்கு கெர்சோன், கோகாத், மெராரி என்று மூன்று மகன்கள் இருந்தனர்.

18 ஒவ்வொருவரும் பல கோத்திரங்களுக்குத் தலைவர்கள்.

கெர்சோன் கோத்திரத்தில் லிப்னீயும், சீமேயியும் இருந்தனர்.

19 கோகாத் கோத்திரத்தில் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர் இருந்தனர்.

20 மெராரி கோத்திரத்தில் மகேலியும், மூசியும் இருந்தனர்.

இந்த அனைத்துக் குடும்பங்களும் லேவியின் கோத்திரத்தில் இருந்தனர்.

21 லிப்னீ, சீமேயி ஆகியோரின் குடும்பங்கள், கெர்சோனின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். 22 அவர்கள் இரு கோத்திரங்களிலும் ஆண்களும், ஒரு மாத வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகளுமாக 7,500 பேர் இருந்தனர். 23 மேற்குப்பக்கத்தில் முகாமை அமைத்துக்கொள்ளுமாறு கெர்சோனியர் கோத்திரங்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள் பரிசுத்தக் கூடாரத்தின் பின் பகுதியில் தங்கள் முகாமை அமைத்தனர். 24 லாயேலின் மகனாகிய எலியாசாப் என்பவன் கெர்சோனிய கோத்திரத்தினருக்கு தலைவன் ஆனான். 25 ஆசரிப்புக் கூடாரத்தின் காவலோடு பரிசுத்தக் கூடாரத்தையும், வெளிக் கூடாரத்தையும் அதன் மூடியையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு கெர்சோனியருக்கு இருந்தது. ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உள்ள தொங்கு திரையையும் இவர்களே கவனித்துக்கொண்டனர். 26 மேலும் பிரகாரத்தின் தொங்கு திரைகளையும், பிரகாரத்தின் மூடு திரைகளையும் அவர்கள் கவனித்துக்கொண்டனர். பிரகாரமானது பரிசுத்தக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் சுற்றியிருந்தது. திரைகளுக்குத் தேவையான கயிறு மற்றும் மற்ற பொருட்களுக்கும் அவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருந்தனர்.

27 அம்ராம், இத்சேயர் எப்ரோன், ஊசியேல் ஆகிய குடும்பங்கள் கோகாத்தின் கோத்திரத்தில் இருந்தன. 28 இக்கோத்திரத்தில் ஆண்களும், ஒரு மாதத்திற்கு மேலான ஆண் குழந்தைகளுமாக 8,300 [a] பேர் இருந்தனர். கோகாத்தியர்கள் பரிசுத்தமான இடத்திலுள்ள பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வகித்தார்கள். 29 பரிசுத்தக் கூடாரத்தின் தெற்கு பக்கத்தில் கோகாத்தின் கோத்திரங்கள் தங்கள் முகாமை அமைத்திருந்தனர். 30 ஊசியேலின் மகனான எல்சாபான் கோகாத்தியரின் கோத்திரங்களுக்குத் தலைவன் ஆனான். 31 அவர்கள் பரிசுத்தப் பெட்டி, மேஜை, குத்து விளக்கு, பீடங்கள், பரிசுத்த இடத்தின் பொருட்கள், தொங்கு திரை, அங்குள்ள அனைத்து வேலைகளுக்கும் உரிய பொருட்களையும் காத்து வந்தனர்.

32 ஆரோனின் மகனாகிய ஆசாரியன் எலெயாசார் லேவியர்களின் தலைவர்களுக்கெல்லாம் தலைவனாக இருந்தான். இவன் பரிசுத்தப் பொருட்களை காவல் காப்பவர்களுக்கெல்லாம் பொறுப்பாளியாய் இருந்தான்.

33-34 மகேலி, மூசி ஆகியோரின் கோத்திரங்கள் மெராரியின் குடும்பத்தோடு சேர்ந்தது. மகேலியின் கோத்திரத்தில் ஆண்களும், ஒரு மாதத்திற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் குழந்தைகளும் 6,200 பேர் இருந்தனர். 35 அபியாயேலின் மகனாகிய சூரியேல், மெராரி கோத்திரத்தின் தலைவனாய் இருந்தான். பரிசுத்தக் கூடாரத்தின் வடக்கு பக்கத்தில் இவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் அவர்கள் தங்கள் முகாமை அமைத்திருந்தனர். 36 மெராரி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசுத்தக் கூடாரத்தின் சட்டங்கள், பலகைகள், தாழ்ப்பாள், தூண்கள், பாதங்கள் மற்றும் அதற்குரிய பொருள்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. 37 பரிசுத்தக் கூடாரத்தின் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள தூண்கள், பாதங்கள், முளைகள், கயிறுகள் அனைத்தையும் அவர்கள் கவனித்துக்கொண்டனர்.

38 மோசே, ஆரோன், அவனது மகன்கள் எல்லோரும் ஆசாரிப்புக் கூடாரத்திற்கு எதிரில் பரிசுத்தக் கூடாரத்தின் கிழக்கில் முகாமிட்டனர். பரிசுத்த இடத்தை கவனிக்கும் பொறுப்பு அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களுக்காகவும் அவர்கள் இதனைச் செய்தனர். வேறு யாராவது பரிசுத்த இடத்தின் அருகில் வந்தால், அவர்கள் கொல்லப்பட்டனர்.

39 லேவியின் கோத்திரத்தில் உள்ள ஆண்களையும், ஒரு மாதத்திற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளையும் கணக்கிடுமாறு கர்த்தர் மோசேயிடம் கட்டளையிட்டார். அவர்களின் மொத்த எண்ணிக்கை 22,000.

முதல் மகன்களின் இடத்தை லேவியர்கள் எடுத்துக்கொள்ளுதல்

40 கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேலில் முதலில் பிறந்த எல்லா ஆண்களையும், குறைந்தது ஒரு மாதமாவது ஆன ஆண் குழந்தைகளையும் கணக்கிடு. அவர்களின் பெயரையும் எழுதி பட்டியலிடு. 41 கடந்த காலத்தில் நான், இஸ்ரவேலில் முதலில் பிறக்கும் ஆண் மக்களையெல்லாம் எனக்குரியவர்கள் என்று கூறியிருந்தேன். கர்த்தராகிய நான் இப்போது லேவியர்களை மட்டும் எடுத்துக்கொள்வேன். இஸ்ரவேலில் முதலில் பிறக்கும் அனைத்து மிருகங்களையும் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, லேவியர்களுக்குரிய முதலில் பிறந்த மிருகங்களை மட்டும் எடுத்துக்கொள்வேன்” என்றார்.

42 எனவே மோசே, கர்த்தருடைய கட்டளைப்படி செய்தான். அவன் இஸ்ரவேல் ஜனங்களில் முதலில் பிறந்த குழந்தைகளைக் கணக்கெடுத்தான். 43 முதலாவதாக பிறந்த ஆண்களையும், ஒரு மாதமும் அதற்கு மேலுமுள்ள ஆண் குழந்தைகளையும், மோசே பட்டியலிட்டான். அதில் மொத்தம் 22,273 பெயர்கள் இருந்தன.

44 மேலும் கர்த்தர் மோசேயிடம், “கர்த்தராகிய நான் இந்தக் கட்டளையைக் கொடுக்கிறேன்: ‘இஸ்ரவேலில் உள்ள அனைத்துக் குடும்பங்களிலுமுள்ள முதலில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு பதிலாக லேவியர்வம்சத்திலுள்ள முதலில் பிறக்கும் ஆண்களை மட்டும் எடுத்துக்கொள்வேன். 45 மற்ற இஸ்ரவேலில் முதலில் பிறந்த மிருகங்களுக்குப் பதிலாக லேவியர்களிடமுள்ள முதலில் பிறக்கும் மிருகங்களை மட்டும் எடுத்துக்கொள்வேன். லேவியர்கள் எனக்கு உரியவர்கள். 46 மொத்தம் 22,000 லேவியர்கள் இருந்தனர். ஆனால் மற்ற குடும்பங்களில் 22,273 முதலில் பிறந்த ஆண் பிள்ளைகள் இருந்தனர். லேவியர்களை விட, முதலில் பிறந்த ஆண் பிள்ளைகள் 273 பேர் மற்ற குடும்பங்களில் இருந்தனர். 47 அதிகாரப் பூர்வமான அளவை அடிப்படையாய் வைத்துக்கொண்டு, தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாக 273 பேர்களிடமிருந்தும் வாங்கு. (ஒரு சேக்கல் என்பது இருபது கேரா இருக்கும்.) 48 இஸ்ரவேல் ஜனங்களிடம் இருந்து வெள்ளியையும் வசூல் செய். இவற்றை ஆரோனுக்கும், அவனது மகன்களுக்கும் கொடுப்பாயாக. இது 273 இஸ்ரவேல் ஜனங்களுக்கான சம்பளத் தொகையாகும்’” என்றார்.

49 மற்ற கோத்திரங்களில் இருந்து வந்த 273 பேர்களின் இடத்தை ஈடுசெய்ய போதுமான அளவில் லேவியர்கள் இல்லாமல் இருந்தனர். எனவே மோசே அந்த 273 பேர்களுக்காக பணம் வசூல் செய்தான். 50 மோசே இஸ்ரவேல் ஜனங்களில் முதலில் பிறந்த ஆண் பிள்ளைகளிடமிருந்து வெள்ளியை வசூல் செய்தான். அதிகாரப் பூர்வமான அளவை வைத்துக்கொண்டு, அவன் 1,365 சேக்கல் வெள்ளியை வசூலித்தான். 51 மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான். வெள்ளியை ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் கர்த்தர் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.

கோகாத் குடும்பத்தின் வேலைகள்

கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும், “கோகாத்தின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்களின் மொத்த ஆண்களின் தொகையை எண்ணிக் கணக்கிடு. (கோகாத்தின் கோத்திரமானது லேவியர் கோத்திரத்தின் ஒரு பகுதியாகும்.) 30 வயது முதல் 50 வயது வரையுள்ள, படையில் பணியாற்றக்கூடிய ஆண்களைக் கணக்கிடு. இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்வார்கள். ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள மிகப் பரிசுத்தமானப் பொருட்களைக் கவனித்துக்கொள்வதே இவர்களின் வேலை.

“இஸ்ரவேல் ஜனங்கள் புதிய இடங்களுக்குப் பயணம் செய்யும்போது, ஆரோனும் அவனது மகன்களும் ஆசரிப்புக் கூடாரத்தின் உள்ளேச் செல்லவேண்டும். அவர்கள் திரையை கீழே எடுத்து, அதனால் பரிசுத்த உடன்படிக்கைப் பெட்டியை மூட வேண்டும். அதன்மேல் அழகான தோலினாலான மூடியால் மூடவேண்டும். அதன் மேல் கெட்டியான நீலத்துணியை விரித்து, தண்டுகளை வளையத்தினுள் செலுத்தி, பரிசுத்தப்பெட்டியை மூட வேண்டும்.

“பிறகு ஒரு நீலத்துணியைப் பரிசுத்த மேஜையின்மேல் விரிக்க வேண்டும். அதன் மேல் தட்டுக்களை வைத்து, கரண்டி, கோப்பை, மற்றும் பானங்களின் காணிக்கைக்கான ஜாடியை வைக்க வேண்டும். அதோடு சிறப்பான அப்பத்தையும் அதன் மேல் வைக்க வேண்டும். பின் அதன்மேல் சிவப்புத் துணியை வைத்து, அதனை மெல்லிய தோல் மூடியால் மூடவேண்டும். பிறகு மேஜை தண்டுகளையும் வளையத்தினுள் கட்டிவிட வேண்டும்.

“குத்து விளக்குத் தண்டையும் அதிலுள்ள அகல்களையும் நீலத் துணியால் மூட வேண்டும். விளக்கு எரிவதற்கு உதவுகின்ற அனைத்துப் பொருட்களையும், எண்ணெய் பாத்திரங்களையும் மூடி வைக்க வேண்டும். 10 பிறகு இவை அனைத்தையும் மெல்லிய தோலால் மூடிக்கட்டி, ஒரு தண்டோடு இணைக்க வேண்டும். இது இவற்றைத் தூக்கிச் செல்ல உதவியாக இருக்கும்.

11 “அவர்கள் தங்க பலிபீடத்தின் மேல் நீலத் துணியை மூடி, அதன் மேல் மெல்லிய தோலை மூடவேண்டும். அதில் தண்டுகளை வளையத்தோடு இணைத்துக் கட்ட வேண்டும்.

12 “பிறகு பரிசுத்த இடத்தில் தொழுதுகொள்வதற்குப் பயன்படும், அனைத்து சிறப்புப் பொருட்களையும் சேகரிக்க வேண்டும். அவற்றை நீலத்துணியில் சுருட்ட வேண்டும். பிறகு அதனை மெல்லியத் தோலால் மூடிக்கட்டவேண்டும். இவற்றைத் தூக்கிச் செல்வதற்கு வசதியாக ஒரு தண்டோடு கட்டிக்கொள்ள வேண்டும்.

13 “வெண்கலத்தாலான பலீபீடத்தில் உள்ள சாம்பலை சுத்தப்படுத்த வேண்டும். பிறகு அதனை நீலத் துணியால் மூட வேண்டும். 14 பின் தொழுதுகொள்வதற்கான அனைத்துப் பொருட்களையும் சேகரிக்க வேண்டும். நெருப்புத்தட்டு, குறடு, சாம்பல் எடுக்கும் கரண்டி, கலசங்கள் போன்றவைகளை அவர்கள் வெண்கலத்தாலான பலிபீடத்தின் மேல் வைக்க வேண்டும். பின் மெல்லியத் தோலால் பலிபீடத்தை மூடவேண்டும். இவற்றைத் தூக்கிச் செல்ல வசதியாக தண்டுகளை வளையங்களில் மாட்டிக்கொள்ளவேண்டும்.

15 “ஆரோனும் அவனது மகன்களும், பரிசுத்த இடத்திலுள்ள பரிசுத்தமான பொருட்களையெல்லாம் மூடிவைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கோகாத் கோத்திரத்தில் உள்ளவர்கள், இவற்றைத் தூக்கிச் செல்ல வேண்டும். இம்முறையில் இவர்கள் மரிக்காதபடிக்கு பரிசுத்தமான இடத்தைத் தொடாதிருக்கக்கடவர்கள்.

16 “ஆசாரியன் ஆரோனின் மகனான எலெயாசார் பரிசுத்தக் கூடாரத்தின் பொறுப்புக்குரியவன். பரிசுத்த இடத்திற்கும், அதிலுள்ள பொருட்களுக்கும் அவனே பொறுப்பானவன். விளக்குக்குரிய எண்ணெய்க்கும், நறுமணப் பொருட்களுக்கும், தினந்தோறும் செலுத்தப்படும் பலிகளுக்கும், அபிஷேக எண்ணெய்க்கும் அவனே பொறுப்பானவன்” என்றார்.

17 மேலும் கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 18 “கவனமாக இருங்கள். கோகாத் கோத்திரம் அழிந்துபோகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 19 அவர்கள் மகா பரிசுத்த இடத்தின் அருகில் செல்லும்போது மரிக்காமல் இருப்பதற்காக, நீங்கள் அவர்களுக்காக இவற்றைச் செய்யவேண்டும். ஆரோனும் அவனது மகன்களும் உள்ளே போய்க் கோகாத்தியர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஒவ்வொரு ஆணுக்கும் அவனது வேலையும், அவன் சுமக்க வேண்டியவற்றையும் நியமிக்க வேண்டும். 20 நீங்கள் இவற்றைச் செய்யாவிட்டால் கோகாத்தியர்கள் உள்ளே போய் பரிசுத்த பொருட்களை ஒரு வேளை பார்த்துவிடலாம். அவ்வாறு ஒரு வினாடி பார்த்தாலும், அவர்கள் மரிக்க நேரிடும்” என்று கூறினார்.

கெர்சோன் குடும்பத்தாருக்குரிய வேலைகள்

21 கர்த்தர் மோசேயிடம், 22 “கெர்சோன் குடும்பத்தில் உள்ள அனைத்துԔ ஜனங்களையும் எண்ணிக் கணக்கிடு. அவர்களைக் குடும்ப வாரியாகவும், கோத்திரங்களாகவும் பட்டியலிடு. 23 படையில் பணியாற்றக் கூடிய 30 வயது முதல் 50 வயது வரையுள்ள ஆண்களையும் கணக்கிடுக. இவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தைக் கவனிக்கும் வேலையுண்டு.

24 “இவைதான் கெர்சோன் வம்சத்தாரின் வேலைகள். அவர்கள் கீழ்க்கண்டவற்றைச் சுமக்க வேண்டும்: 25 பரிசுத்த கூடாரத்தின் திரைகளையும், அதோடு ஆசாரிப்புக் கூடாரத்தையும், அதன் மூடியையும், அவற்றைப் போர்த்தியுள்ள மெல்லியத் தோல் மூடியையும், ஆசாரிப்புக் கூடார வாசல் திரையையும் சுமந்து செல்ல வேண்டும். 26 அவர்கள் பரிசுத்தக் கூடாரத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தின் தொங்கு திரைகளையும், பலிபீடத்தின் திரையையும், பிரகாரத்ததின் வாசல் திரையையும், அதோடு கயிறுகளையும், திரைக்குப் பயன்படும் மற்ற பொருட்களையும் சுமக்க வேண்டும். இவற்றுக்காகச் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் கெர்சோனியர்கள் செய்யவேண்டும். 27 கெர்சோனியர்கள் சுமத்தல் மற்றும் மற்ற வேலைகளையும் செய்யும்போது ஆரோனும் அவனது மகன்களும் இவ்வேலைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சுமக்க வேண்டிய பொருட்களைப்பற்றி அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். 28 ஆசரிப்புக் கூடாரத்துக்காக கெர்சோனிய கோத்திரம் செய்ய வேண்டிய பணிகள் இவைதான். ஆசாரியனான ஆரோனின் மகனான இத்தாமார் இந்த வேலைகளுக்குப் பொறுப்பானவன்.

மெராரி குடும்பத்தின் வேலைகள்

29 “மெராரி கோத்திரத்தில் உள்ள எல்லாக் கோத்திரங்களையும், எண்ணிக் கணக்கெடுக்க வேண்டும். 30 படையில் பணியாற்றக் கூடிய 30 முதல் 50 வயது வரையுள்ள ஆண்களைக் கணக்கிடு. இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்காக, ஒரு சிறப்பான பணியைச் செய்ய வேண்டும். 31 நீங்கள் பயணம் செய்யும்போது, ஆசரிப்புக் கூடாரத்திற்கான மரச் சட்டங்களை, இவர்களே சுமந்து செல்ல வேண்டும். அதோடு பாதங்களையும், தாழ்ப்பாள்களையும், தூண்களையும். 32 பிரகாரத் தூண்களையும் சுமக்க வேண்டும். பிரகாரத்திலுள்ள மற்ற பாதங்கள், முளைகள், கயிறுகள், அவற்றுக்கான சகல கருவிகள் ஆகியவற்றையும் சுமக்க வேண்டும். அதோடு, அதைச் சார்ந்த அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். அவர்களின் பெயரைப் பட்டியலிட்டு, ஒவ்வொருவரிடமும் அவர்கள் எதைச் சுமந்து செல்ல வேண்டும் என்பதையும் சொல்லுங்கள். 33 இவைதான் மெராரி வம்சத்தினர் ஆசரிப்புக் கூடாரத்திற்காகச் செய்ய வேண்டிய பணிகளாகும். ஆசாரியனான ஆரோனின் மகனாகிய இத்தாமார் இதற்கான பொறுப்புடையவன்” என்றார்.

லேவியர் குடும்பங்கள்

34 கோகாத்தியர்களையும், மற்ற இஸ்ரவேல் தலைவர்களையும் மோசேயும் ஆரோனும் எண்ணிக் கணக்கிட்டனர். அவர்களைக் குடும்ப வாரியாகவும், கோத்திரங்கள் வாரியாகவும் கணக்கிட்டனர். 35 படையில் பணியாற்றக்கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் கணக்கிட்டனர். இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு வேலைகளைச் செய்யும்படி நியமிக்கப்பட்டனர்.

36 கோகாத்திய கோத்திரத்தில் 2,750 ஆண்கள் இவ்வேலையைச் செய்ய தகுதியுடையவர்களாக இருந்தனர். 37 எனவே, ஆசரிப்புக் கூடாரத்திற்க்கான சிறப்பு வேலைகளைச் செய்ய கோகாத்திய கோத்திரத்தினர் நியமிக்கப்பட்டனர். கர்த்தர் மோசேயிடம் சொன்னபடியே, மோசேயும், ஆரோனும் இதனைச் செய்தனர்.

38 கெர்சோனிய கோத்திரத்தினரும் எண்ணி கணக்கிடப்பட்டனர். 39 படையில் பணியாற்றும் தகுதியுடைய 30 முதல் 50 வயது வரையுள்ள ஆண்கள் எண்ணப்பட்டனர். அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டனர். 40 கெர்சோன் கோத்திரத்தில் தகுதி கொண்டவர்களாக 2,630 ஆண்கள் இருந்தனர். 41 எனவே, கெர்சோன் கோத்திரத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, ஆசரிப்புக் கூடாரத்தின் சிறப்பு வேலைகள் கொடுக்கப்பட்டன. கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி மோசேயும், ஆரோனும் செய்து முடித்தனர்.

42 மெராரி குடும்பத்திலும், கோத்திரங்களிலும் உள்ள ஆண்கள் கணக்கிடப்பட்டனர். 43 அவர்களில் படையில் பணியாற்றக்கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்கள் அனைவரும் எண்ணப்பட்டனர். அந்த ஆண்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு வேலைகளைச் செய்ய நியமிக்கப்பட்டனர். 44 மெராரி கோத்திரத்தில் தகுதி கொண்டவர்களாக 3,200 ஆண்கள் இருந்தனர். 45 எனவே, மெராரி கோத்திரத்தில் உள்ள இந்த ஆண்கள், இச்சிறப்பு வேலைகளுக்கு நியமிக்கப்பட்டனர். கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி மோசேயும் ஆரோனும் செய்து முடித்தனர்.

46 எனவே மோசே, ஆரோன், இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் ஆகியோர் லேவியரின் கோத்திரத்தில் உள்ளவர்களையும் எண்ணிக் கணக்கிட்டனர். அவர்கள் ஒவ்வொரு குடும்பவாரியாகவும், கோத்திர வாரியாகவும் கணக்கிடப்பட்டனர். 47 படையில் பணியாற்றக் கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்களும் எண்ணிக் கணக்கிடப்பட்டனர். இவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தின், சிறப்பு வேலைகள் தரப்பட்டன. அவர்கள் தங்கள் பயணத்தின்போது, ஆசரிப்புக் கூடாரத்தைச் சுமக்கும் வேலையைச் செய்தனர். 48 அவர்களின் மொத்த எண்ணிக்கை 8,580. 49 எனவே, கர்த்தர் மோசேயிடம் சொன்னப்படி, ஒவ்வொரு ஆண்மகனும், கணக்கிடப்பட்டான். ஒவ்வொருவனுக்கும் அவன் செய்யவேண்டிய வேலை ஒதுக்கப்பட்டது. அவன் எதனைச் சுமந்து செல்லவேண்டும் என்பதும் சொல்லப்பட்டது. இவை யாவும் கர்த்தர் கட்டளையிட்டபடியே நடைபெற்றது.

மாற்கு 3:20-35

பிசாசு பிடித்தவர் என பழித்துரைத்தல்(A)

20 பிறகு, இயேசு வீட்டிற்குச் சென்றார். ஆனால் மறுபடியும் அங்கு மக்கள் கூடினர். இயேசுவும் அவரது சீஷர்களும் உணவு உட்கொள்ள முடியாதபடி மக்கள் கூடினர். 21 இயேசுவின் குடும்பத்தார் இவற்றைப்பற்றி எல்லாம் கேள்விப்பட்டனர். அவர் மதிமயங்கியுள்ளார் என்று மக்கள் சொன்னதால் அவரது குடும்பத்தார் அவரைப் பிடித்து வைத்துக்கொள்ள விரும்பினர்.

22 எருசலேமில் இருந்து வந்த வேதபாரகர், “இயேசுவிடம் பெயல்செபூல் (பிசாசு) உள்ளது. பிசாசுகளின் தலைவனது அதிகாரத்தை அவர் பயன்படுத்தி பேய்களை விரட்டுகிறார்” என்றனர்.

23 ஆகையால் இயேசு மக்களை அழைத்தார். அவர்களிடம் அவர் உவமைகள் மூலம் விளக்கிச் சொன்னார். “சாத்தானை சாத்தான் துரத்துவது எப்படி? என்று கேட்டார். 24 ஒரு இராஜ்யம் தனக்குத்தானே பகைத்துக் கொண்டால் அது எவ்வாறு தொடர்ந்திருக்க முடியும்? 25 ஒரு குடும்பம் தனக்குத்தானே பகைத்துக் கொண்டால் அது எவ்வாறு அழியாமல் இருக்கும்? 26 இது போல் சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டு இருந்தால் அவன் நிலைத்திருக்க முடியாது. அதுவே அவன் முடிவு.

27 “ஒருவன் பலவானுடைய வீட்டிற்குள் புகுந்து பொருட்களைத் திருட விரும்பினால் முதலில் அவன் அப்பலவானைக் கட்டிப்போட வேண்டும். பிறகு, அவனால் பலவானுடைய வீட்டிலிருந்து அவனது பொருட்களைத் திருடமுடியும்.

28 “உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், மக்களால் செய்யப்படுகிற அத்தனைப் பாவங்களும் மன்னிக்கப்படும். அத்துடன் மக்களால் தேவனுக்கு எதிராகச் சொல்லப்படும் பழிகளும் மன்னிக்கப்படும். 29 ஆனால், பரிசுத்தாவியை எவனாவது பழித்து உரைப்பானேயானால் அவனுக்கு என்றென்றைக்கும் மன்னிப்பே இல்லை. அவன் குற்றவாளியாகி என்றென்றைக்கும் குற்ற உணர்வுடையவனாக இருப்பான்” என்றார்.

30 வேதபாரகர் இயேசுவை “அசுத்த ஆவி பிடித்தவர்” என்று சொன்னதால், அவர் இவ்வாறு விளக்கமாகக் கூறினார்.

இயேசுவின் உண்மை உறவினர்கள்(B)

31 பிறகு இயேசுவின் தாயாரும், சகோதரர்களும் வந்தனர். அவர்கள் வெளியே நின்று கொண்டு ஓர் ஆளை அனுப்பி இயேசுவை அழைத்தனர். 32 இயேசுவைச் சுற்றிப் பலர் அமர்ந்திருந்தனர். அப்போது அவன், “உங்கள் தாயும் சகோதரர்களும் வெளியே உங்களுக்காகக் காத்திருக்கின்றனர்” என்றான்.

33 இயேசு அவர்களிடம், “யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?” என்று கேட்டார். 34 பிறகு தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி, “இந்த மக்களே என் தாயாரும், சகோதரருமாய் இருக்கிறார்கள். 35 தேவனின் விருப்பத்துக்கேற்ப நடந்துகொள்கிறவர்கள் எவர்களோ அவர்களே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center