Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
லேவியராகமம் 25

தேசத்திற்கு ஓய்வுக் காலம்

25 சீனாய் மலையில் கர்த்தர் மோசேயிடம், “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது; நான் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் சென்ற பின்னர் ஓய்வுக்கென சிறப்பான காலத்தை அந்நாடு கொண்டிருக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். இது கர்த்தரைப் பெருமைப்படுத்துகிற ஓய்வுக்காலம் ஆகும். ஆறு ஆண்டுகளுக்கு, உங்கள் வயல்களில் விதைகளை விதையுங்கள், உங்கள் திராட்சைத் தோட்டத்தில் கிளை கழியுங்கள். அதன் பழங்களைக் கொண்டு வாருங்கள். ஆனால் ஏழாவது ஆண்டில் அந்நிலத்துக்கு ஓய்வு அளியுங்கள். இது கர்த்தரைப் பெருமைப்படுத்துகிற சிறப்பான ஓய்வுக் காலமாகும். அப்போது வயலில் விதை விதைக்காமலும், திராட்சை தோட்டத்தில் பயிர் செய்யாமலுமிருங்கள். அறுவடைக்குப் பிறகு வயலில் தானாக வளர்ந்து விளைந்தவற்றை அறுவடை செய்யவோ, கிளை கழிக்காத கொடிகளில் உள்ள திராட்சைப் பழங்களைப் பறிக்கவோ கூடாது. பூமி ஒரு வருடம் ஓய்வு கொள்ளட்டும்.

“நிலம் ஒரு வருடம் ஓய்வாக விடப்பட்டாலும் உங்களிடம் போதுமான உணவுப் பொருட்கள் இருக்கும். உங்களுக்கும், உங்கள் ஆண், பெண், வேலையாட்களுக்கும், உங்கள் நாட்டிலுள்ள கூலி வேலைக்காரர்களுக்கும், அயல்நாட்டுக்காரர்களுக்கும்கூட போதுமான உணவுப் பொருட்கள் இருக்கும். உங்கள் பசுக்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும்கூட போதுமான உணவு இருக்கும்.

யூபிலி-விடுதலையின் ஆண்டு

“மேலும் நீங்கள் ஏழு ஓய்வு ஆண்டுகள் கொண்ட ஏழு ஓய்வு ஆண்டுகளை எண்ணுங்கள். அது மொத்தம் 49 ஆண்டுகளாகும். அந்த 49 வருடங்களில் மொத்தத்தில் ஏழு ஆண்டுகளுக்கு பூமிக்கு ஓய்வு கிடைக்கும். பாவப்பரிகார நாளில் செம்மறியாட்டுக் கடாவின் கொம்பினால் செய்யப்பட்ட எக்காளத்தை ஊதவேண்டும். அது ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளாக இருக்கும். நாடு முழுவதும் எக்காளம் ஊதிக் கொண்டாட வேண்டும். 10 நீங்கள் ஐம்பதாவது ஆண்டினைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். உங்கள் நாட்டில் உள்ள அனைவருக்கும் விடுதலை என்று அறிவிக்க வேண்டும். இந்த விழாவை ‘யூபிலி’ என்று அழைப்பீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது சொந்த சொத்திற்கும், சொந்த குடும்பத்திற்கும் திரும்புவீர்கள். 11 உங்களுக்கு ஐம்பதாவது ஆண்டு விழா மிகச் சிறப்பான யூபிலி விழாவாகும். அவ்வருடத்தில் விதைகளை விதைக்காதீர்கள். தானாக வளர்ந்த பயிர்களை அறுவடை செய்யாதீர்கள். கிளை கழிக்காத செடிகளில் உள்ள திராட்சைகளைப் பறிக்காதீர்கள். 12 அது யூபிலி ஆண்டு, அது உங்களுக்குப் பரிசுத்தமான வருடமாகும். உங்கள் வயலில் விளைந்தவற்றை உண்ணுங்கள். 13 யூபிலி ஆண்டில் ஒவ்வொருவனும் தன் சொந்த பூமிக்குச் செல்லவேண்டும்.

14 “உனது அயலானிடம் நிலம் விற்கும்போது ஏமாற்றாதே. அதுபோல் நீ நிலம் வாங்கும்போது அவன் உன்னை ஏமாற்றும்படி விடாதே. 15 நீ அயலானின் நிலத்தை வாங்கும்போது அந்த நிலத்தின் யூபிலியைக் கணக்கிட்டு அதற்கேற்ற விலையை நிர்ணயித்துக்கொள். நிலத்தை விற்கும்போதும் அதனுடைய அறுவடைகளைக் கணக்கிட்டு அதன் மூலம் சரியான விலையை நிர்ணயித்துக்கொள். ஏனென்றால் அடுத்த யூபிலிவரை அறுவடை செய்யும் உரிமையை மட்டுமே விற்கிறான். 16 யூபிலிக்கு முன் அதிகமான ஆண்டுகள் விளைந்த நிலம் அதிக விலையை உடையது. குறைந்த ஆண்டுகள் விளைந்த நிலத்தின் விலை குறையும். ஏனென்றால் உனது அயலான் உன்னிடம் அறுவடைகளின் எண்ணிக்கைகளையே விற்பனை செய்கிறான். அடுத்த யூபிலியில் அந்த நிலம் மீண்டும் அவனுக்கு உரியதாகிவிடும். 17 ஒருவரை ஒருவர் ஏமாற்றக் கூடாது. உங்கள் தேவனை நீங்கள் பெருமைபடுத்த வேண்டும். நானே உங்களுடைய தேவனாகிய கர்த்தர்!

18 “எனது சட்டங்களையும், விதிகளையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பின்பற்றுங்கள், அப்போது உங்கள் நாட்டில் நீங்கள் பாதுகாப்போடு வாழலாம். 19 நிலம் உங்களுக்கு நல்ல விளைச்சலைத் தரும். நீங்கள் அதிக விளைபொருட்களைப் பெற்று நாட்டில் வசதியோடு வாழலாம்.

20 “ஆனால் நீங்கள் ‘நான் விளைய வைத்துப் பொருட்களைச் சேர்த்து வைக்காவிட்டால் ஏழாவது ஆண்டில் வசதியாக உண்ண முடியாது’ என்று சொல்லலாம். 21 கவலைப்படாதிருங்கள்! ஆறாவது ஆண்டில் என் ஆசீர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும்படி கட்டளையிடுவேன். தொடர்ந்து நிலம் மூன்று ஆண்டுகளுக்கு நன்கு விளையும். 22 நீ எட்டாவது ஆண்டில் பயிர் செய்யும்போதும் பழைய விளைச்சலையே உண்டுகொண்டிருப்பாய். ஒன்பதாவது ஆண்டில் புதிய விளைச்சல் கிடைக்கும்வரை இவ்வாறு செய்வாய்.

சொத்துக்குரிய சட்டங்கள்

23 “இந்த நிலம் உண்மையில் எனக்குரியது. எனவே இதனை நீங்கள் நிரந்தரமாக விற்கமுடியாது. அந்நியர்களாகவும் பயணிகளாகவுமே என் நிலத்தில் நீங்கள் அனைவரும் என்னோடு வாழ்கிறீர்கள். 24 ஜனங்கள் தங்கள் நிலத்தை விற்றுவிடலாம். எனினும் அது அவர்களின் குடும்பத்திற்கு மீண்டும் வந்து சேரும். 25 உங்களில் ஒருவன் மிகவும் வறியவனாகவோ, தன் சொத்துக்களை விற்கும் அளவுக்கு ஏழையாகவோ மாறலாம். அப்போது அவனுக்கு நெருக்கமான உறவினரில் எவராவது வந்து அதனைத் திரும்ப வாங்கிக்கொள்ள வேண்டும். 26 அவனிடமிருந்து நிலத்தை திரும்ப வாங்குகிற அளவுக்கு நெருக்கமான உறவினர்கள் இல்லாமற் போகும்போது, அந்த நிலத்தைத்தானே திரும்ப வாங்குகிற அளவிற்கு அவன் பணத்தை சேகரித்திருக்கலாம். 27 பிறகு அவன் நிலத்தை விற்ற ஆண்டுகளைக் கணக்கிட்டு, அந்த எண்ணிக்கை மூலம் எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதனைத் திரும்ப விலைக்கு வாங்கலாம். அதனால் அச்சொத்து அவனுக்கு மீண்டும் உரியதாகும். 28 ஆனால் ஒருவேளை அவனுக்குத் தன் நிலத்தை திரும்ப வாங்குகிற அளவிற்குப் பணம் சேர்க்கமுடியாமல் போனால் அப்போது அந்த நிலம் யூபிலி ஆண்டுவரை வாங்கியவனிடமே இருக்கும். பிறகு சிறப்பான யூபிலி விழா நடக்கும்போது அந்நிலம் முதல் உரிமையாளனுக்கு மீண்டும் சேர்ந்துவிடும். எனவே, சரியான குடும்பத்துக்கு அந்த சொத்தானது மீண்டும் சொந்தமாகும்.

29 “ஒருவன், மதில் சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வீட்டை விற்றால் ஒரு ஆண்டு வரை மட்டுமே அவனுக்குத் திரும்ப வாங்கிக்கொள்கிற உரிமை உண்டு. 30 ஆனால் வீட்டுக்குச் சொந்தக்காரன் அதனைத் திரும்ப வாங்கிக்கொள்ள முடியாவிட்டால் அது வாங்கியவனுக்கும் அவனது சந்ததிகளுக்கும் உரிமையாகிவிடும். வீடு யூபிலி ஆண்டில் நிலத்தைப் போன்று அதன் சொந்தக்காரனுக்குப் போய்ச் சேர்வதில்லை. 31 மதில் இல்லாத பட்டணங்களாக இருந்தால் அது வயல் வெளியாக எண்ணப்படும். அதில் உள்ள வீடுகள் மட்டுமே யூபிலி ஆண்டின்போது உண்மையான சொந்தக்காரனுக்கு சேரும்.

32 “ஆனால் லேவியரின் நகரம்பற்றி வேறு விதிகள் உள்ளன. லேவியர்கள் நகரங்களில் தங்கள் வீடுகளை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வாங்கிக்கொள்ளலாம். 33 லேவியர்களிடமிருந்து யாரவது ஒரு வீடு வாங்கினால் லேவியரின் நகரங்களிலுள்ள வீடுகளெல்லாம் யூபிலி ஆண்டில் மீண்டும் அவர்களுக்கே உரியதாகிவிடும். ஏனென்றால் லேவியரின் நகரங்கள் எல்லாம் லேவியின் கோத்திரங்களுக்கு சொந்தம். இஸ்ரவேல் ஜனங்கள் இதனை லேவியர்களுக்குக் கொடுத்துவிட்டனர். 34 அதோடு லேவியரின் நகரங்களைச் சுற்றியிருக்கிற வெளி நிலங்களை விற்கமுடியாது. அது எப்போதும் லேவியர்களுக்கே உரியதாகும்.

அடிமைகளின் எஜமானர்களுக்கு உரிய விதிகள்

35 “உன் சகோதரரில் ஒருவன் மிகவும் வறுமையனாகிவிட்டால் அவன் அயல் நாட்டுக்காரனைப் போன்று உன்னோடு பிழைக்கும்படி அனுமதிக்க வேண்டும். 36 நீ அவனுக்குக் கடன் கொடுத்து அவனிடம் வட்டி வாங்காமல் இருப்பாயாக. தேவனுக்குரிய மதிப்பைக் கொடுத்து, உன் சகோதரனை வாழவிடுவாயாக. 37 அவனிடம் நீ கொடுத்த கடனுக்காக வட்டி வாங்காதே. நீ விற்கிற உணவிற்கு மிகுதியாக லாபம் வரும்படி செய்யாதே. 38 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். உன்னை எகிப்தில் இருந்து அழைத்து வந்து கானான் நாட்டைக் கொடுத்து, உனது தேவனாக ஆனேன்.

39 “உனது சகோதரன் ஒருவன் ஏழ்மை காரணமாக உன்னிடம் அடிமையாக இருக்கலாம். நீ அடிமைபோன்று அவனை வேலை வாங்கக்கூடாது. 40 யூபிலி ஆண்டு வரை அவன் ஒரு கூலிக்காரனைப் போன்றும் ஒரு பயணியைப் போலவும் இருப்பான். 41 பிறகு அவன் உன்னைவிட்டுச் செல்லலாம். அவன் தன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு மீண்டும் தன் குடும்பத்துக்குத் திரும்பமுடியும். அவன் தனது முற்பிதாக்களின் சொத்துக்களைப் பெற்றுக்கொள்வான். 42 ஏனென்றால் அவர்கள் எனது ஊழியர்கள். அவர்களை நான் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எகிப்திலிருந்து அழைத்து வந்தேன். அவர்கள் மீண்டும் அடிமையாகக் கூடாது. 43 இவர்களுக்குக் கொடூரமான எஜமானனாக நீங்கள் இருக்கக் கூடாது. நீங்கள் தேவனுக்கு பயப்பட வேண்டும்.

44 “உங்கள் ஆணும் பெண்ணுமான அடிமைகளைப்பற்றிய காரியங்களாவன: உங்களைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து அடிமைகளை அழைத்து வரலாம். 45 உங்கள் தேசத்தில் வசிக்கும் அயல் நாட்டவர்கள் குடும்பங்களில் இருந்து நீங்கள் அடிமைகளாக சிறுவர்களையும் அழைத்து வந்திருக்கலாம். அந்த அடிமைச் சிறுவர்கள் உனக்கு உரியவர்கள். 46 உங்கள் இறப்பிற்குப் பின் உங்களது பிள்ளைகளின் வசத்தில் அவர்கள் இருப்பார்கள். என்றென்றும் அவர்கள் உங்களது அடிமைகளாக இருக்கலாம். இந்த அயல் நாட்டுக்காரர்களை உங்கள் அடிமைகளாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் சொந்தச் சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு கொடுமையான எஜமானனாக நீ இருக்கக்கூடாது.

47 “அயல் நாட்டுக்காரரோ பயணிகளோ செல்வந்தர் ஆகலாம். உன் சொந்த நாட்டுக்காரன் ஏழையாக இருப்பதினால் அவர்கள் அயல் நாட்டுக்காரர் ஒருவருக்கு அடிமையாகலாம். 48 அவன் திரும்பவும் சுதந்திரமானவனாக முடியும். அவனது சகோதரரில் ஒருவன் அவனை விலை கொடுத்து மீட்டுவிடலாம். 49 அவனது சித்தப்பாவோ, பங்காளிகளோ, அவனைத் திரும்ப வாங்கலாம். ஆனால் அவனுக்குப் போதுமான பணம் இருந்தால் தானே அதனைக் கொடுத்துவிட்டு சுதந்திரம் பெற்றுவிடலாம்.

50 “அவன் தன்னை விற்றுக்கொண்ட ஆண்டு முதல் அடுத்த யூபிலி வரை எண்ணிக்கொள்ள வேண்டும். ஆண்டுகளின் எண்ணிக்கையை வைத்து விலையை முடிவு செய்யலாம். ஏனென்றால் அவன் சில ஆண்டுகளே தன்னை ‘வாடகையாகத்’ தந்திருக்கிறான். 51 யூபிலி ஆண்டு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருந்தால் அவன் கொடுக்க வேண்டிய விலை மிகுதியாக இருக்கும். அவன் அதனைக் கொடுக்க வேண்டும். 52 யூபிலி ஆண்டு வர இன்னும் கொஞ்சம் ஆண்டுகளே இருந்தால் அவன் கொடுக்க வேண்டிய விலை குறைவாக இருக்கும். 53 ஆனால் அவன் ஒரு வாடகை ஆளைப் போன்று அயல் நாட்டுக்காரனோடு ஒவ்வொரு ஆண்டும் இருக்க வேண்டும். அந்த அயல் நாட்டுக்காரன் கொடூரமான எஜமானனாக இல்லாமல் இருக்கட்டும்.

54 “அவனை யாரும் திரும்பி வாங்காவிட்டாலும் யூபிலி ஆண்டில் அவனும் அவனது பிள்ளைகளும் விடுதலை பெறுவார்கள். 55 ஏனென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் எனது ஊழியர்கள். நான் அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!

மாற்கு 1:23-45

23 ஜெப ஆலயத்திற்குள் இயேசு இருந்தபோது அசுத்த ஆவியால் பிடிக்கப்பட்ட ஒரு மனிதனும் அங்கே இருந்தான். 24 அவன், “நசரேயனாகிய இயேசுவே! எங்களிடம் நீர் என்ன விரும்புகிறீர்? எங்களை அழிக்கவா வந்தீர்? நீர் தேவனின் பரிசுத்தர் என்பது எனக்குத் தெரியும்” என்று சத்தமிட்டான்.

25 இயேசு பலமான குரலில், “அமைதியாக இரு. இவனை விட்டு வெளியே வா” என்று கட்டளையிட்டார். 26 அந்த அசுத்த ஆவி அம்மனிதனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு அவனை விட்டுப் பெரும் சத்தத்தோடு வெளியேறியது.

27 மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள், “இங்கு என்ன நடக்கிறது? இந்த மனிதர் புதிதாக ஏதோ உபதேசிக்கிறார். இவர் அதிகாரத்துடன் உபதேசம் செய்கிறார். இவர் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளை இடுகிறார். ஆவிகளும் அவருக்கு அடிபணிகின்றன” என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர். 28 எனவே, கலிலேயாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயேசுவைப்பற்றிய செய்தி வேகமாகப் பரவியது.

அநேகரைக் குணமாக்குதல்(A)

29 இயேசுவும் அவரது சீஷர்களும் ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் யாக்கோபு, யோவான் ஆகியோருடன் சீமோன், அந்திரேயா சகோதரர்களின் வீட்டுக்குச் சென்றார்கள். 30 சீமோனின் மாமியார் மிகவும் உடல்நலம் இல்லாமல் இருந்தாள். அவள் படுக்கையில் காய்ச்சலோடு கிடந்தாள். மக்கள் அவரிடம் அவளைப்பற்றிக் கூறினர். 31 எனவே இயேசு அவளது படுக்கையருகே சென்றார். அவளது கையைப் பற்றிக்கொண்டு அவள் எழுந்திருக்க உதவி செய்தார். காய்ச்சல் அவளை விட்டு நீங்கி அவள் சுகமடைந்தாள். பிறகு அவள் அவர்களை உபசரிக்கத் தொடங்கினாள்.

32 அந்த இரவில், சூரியன் மறைந்த பிறகு, மக்கள் அனைத்து நோயாளிகளையும் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர்கள் பிசாசு பிடித்தவர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர். 33 அந்நகரில் உள்ள அனைத்து மக்களும் அந்த வீட்டின் வாசலுக்கு வந்து கூடினர். 34 அநேகருடைய பலவிதமான நோய்களையும் இயேசு குணப்படுத்தினார். பல பிசாசுகளையும் இயேசு துரத்தினார். ஆனால் இயேசு பிசாசுகளைப் பேச அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அவர் யாரென்று அவைகள் அறிந்திருந்தன.

நற்செய்தியைப் போதிப்பதற்கு ஆயத்தம்(B)

35 மறுநாள் காலையில் இயேசு மிக முன்னதாகவே எழுந்தார். இன்னும் இருட்டாக இருந்தபோதே அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் தனியாக ஓரிடத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். 36 பிறகு சீமோனும் அவனது நண்பர்களும் இயேசுவைத் தேடிச் சென்றனர். 37 அவரைக் கண்டுபிடித்து, “மக்கள் யாவரும் உமக்காகவே எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்றனர்.

38 இயேசு, “நாம் வேறு இடத்துக்குப் போக வேண்டும். நாம் சுற்றிலும் உள்ள நகரங்களுக்கும் செல்ல வேண்டும். அந்த இடங்களில் எல்லாம் நான் போதனை செய்யவேண்டும். அதற்காகத்தான் நான் வந்தேன்” என்று பதிலளித்தார். 39 ஆகையால் இயேசு கலிலேயா எங்கும் பிரயாணம் பண்ணினார். அவர் ஜெப ஆலயங்களில் போதனை செய்தார். அவர் பலவந்தமாகப் பிசாசுகளை, மனிதர்களிடமிருந்து விரட்டினார்.

நோயாளியை குணமாக்குதல்(C)

40 தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவின் முன்னால் மண்டியிட்டு, “நீர் விரும்பினால் என்னைக் குணப்படுத்தலாம். அதற்குரிய வல்லமை உமக்குண்டு” என்று கெஞ்சினான்.

41 அவனுக்காக இயேசு மனமுருகினார். ஆகையால் அவனைத் தொட்டு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார். 42 உடனே நோய் அவனை விட்டுவிலகி அவன் குணமானான்.

43 அவனைப் புறப்பட்டுச் செல்லுமாறு இயேசு கூறினார். ஆனால், அவனை அவர் பலமாக எச்சரிக்கையும் செய்தார்: 44 “நான் உனக்காகச் செய்ததை யாரிடமும் சொல்லாதே. ஆனால் நீயாகப் போய் ஆலய ஆசாரியனிடம் காட்டு. தேவனுக்குக் காணிக்கை செலுத்து. ஏனென்றால் நீ குணமடைந்திருக்கிறாய். மோசே ஆணையிட்டபடி காணிக்கை செலுத்து. இதனால் நீ குணமானதை மக்கள் அறிந்து கொள்வார்கள்,” என்று இயேசு கூறினார். 45 அந்த மனிதன் அங்கிருந்து சென்று தான் கண்ட எல்லா மக்களிடமும் இயேசு தன்னைக் குணப்படுத்தியதைப் பற்றிச் சொன்னான். எனவே இயேசுவைப் பற்றிய செய்தி எங்கும் பரவியது. அதனால் இயேசுவால் ஒரு நகரத்துக்குள்ளும் வெளிப்படையாக நுழைய முடியவில்லை. மக்கள் இல்லாத இடங்களில் இயேசு தங்கி இருந்தார். இயேசு எங்கிருந்தாலும் அனைத்து நகரங்களில் இருந்தும் மக்கள் அவரைத் தேடி வந்தனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center