Old/New Testament
ஆசாரியர்களுக்கான விதிகள்
21 கர்த்தர் மோசேயிடம், “ஆரோனின் மகன்களான ஆசாரியர்களிடம் பின் வருபவைகளைக் கூறு: ஒரு ஆசாரியன் மரித்த ஒருவனின் உடலைத்தொட்டு தீட்டுள்ளவனாகக் கூடாது. 2 ஆனால் மரித்தவன் அவனது நெருங்கிய உறவினனாக இருந்தால் அவன் அந்தப் பிணத்தைத் தொடலாம். மரித்துபோனவர்கள் அவரது தாய் அல்லது தந்தை, மகன் அல்லது மகள், சகோதரன் அல்லது 3 திருமணமாகாத கன்னித் தன்மையுள்ள சகோதரி எனும் உறவினராக இருந்தால் ஆசாரியன் தீட்டு உள்ளவனாகலாம். திருமணம் ஆகாத சகோதரி என்றால் அவளுக்குக் கணவன் இல்லை. எனவே அவன் அவளுக்கு நெருக்கமானவனாகிறான். அவள் மரித்துப்போனால் அவன் தீட்டுள்ளவனாகலாம். 4 ஆனால் ஆசாரியனின் அடிமைகளுள் ஒருவன் மரித்து போனால் அதற்காக ஆசாரியன் தீட்டுள்ளவனாகக் கூடாது.
5 “ஆசாரியர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்கவோ, தங்கள் தாடியின் ஓரங்களை மழிக்கவோ கூடாது. தங்கள் உடலில் வெட்டி எவ்வித அடையாளக் குறிகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 6 இவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமாக இருக்க வேண்டும். இவர்கள் தேவனின் பெயருக்கு மரியாதை செலுத்த வேண்டும், ஏனென்றால் இவர்கள் கர்த்தரின் தகன பலியையும் அப்பத்தையும் செலுத்துகிறவர்கள். எனவே, பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
7 “விசேஷ வழியில் ஒரு ஆசாரியன் தேவனுக்குச் சேவை செய்கிறான். எனவே அவர்கள் வேசியையோ, கற்ப்பிழந்தவளையோ திருமணம் செய்துக்கொள்ளக் கூடாது. கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. 8 ஒரு ஆசாரியன் தேவனுக்கு விசேஷ வழியில் சேவை செய்கிறான். ஆகையால் நீங்கள் அவனை விசேஷமாக நடத்த வேண்டும். ஏனென்றால் அவன் பரிசுத்தமான பொருட்களை ஏந்திச் செல்பவன். பரிசுத்தமான அப்பத்தை கர்த்தருக்கு எடுத்து வருபவன். நான் பரிசுத்தமானவர்! நானே கர்த்தர். நான் உன்னையும் பரிசுத்தப்படுத்துவேன்.
9 “ஒரு ஆசாரியனின் மகள் வேசியானால் அவள் தனது பரிசுத்தத்தைக் குலைத்துகொள்வதுடன், தன் தந்தைக்கும் அவமானத்தைத் தேடித்தருகிறாள். அவளைச் சுட்டெரிக்க வேண்டும்.
10 “தலைமை ஆசாரியன் தன் சகோதரர்களுக்கிடையில் இருந்து தலைமை சிறப்பு பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவன், சிறப்பான உடைகளை அணிவதற்காக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அவன் தலையில் அபிஷேக எண்ணெய் ஊற்றப்பட்டிருக்கும். அவன் தனது துன்பங்களைப் பொது ஜனங்களிடம் வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது. அவன் தன் தலை முடியை அதிகமாக வளரும்படிவிடவோ, தன் ஆடைகளைக் கிழித்துக்கொள்ளவோ கூடாது. 11 அவன் பிணத்தைத் தொட்டு தன்னைத் தீட்டுப் பண்ணிக்கொள்ளக் கூடாது. மரித்து போனது அவனது தாயாகவோ தந்தையாகவோ இருந்தாலும் பிணத்தின் அருகில் போகக்கூடாது. 12 தலைமை ஆசாரியன் தேவனின் பரிசுத்தமான இடத்தை விட்டு வெளியே போகக் கூடாது. அவன் அதனால் தீட்டாவதுடன், தேவனின் பரிசுத்தமான இடத்தையும் தீட்டாக்கிவிடுகிறான். அபிஷேக எண்ணெயானது தலைமை ஆசாரியனின் தலைமீது ஊற்றப்பட்டிருக்கிறபடியால், இது அவனை மற்றவர்களிடமிருந்து தனியே பிரித்துக் காட்டும். நானே கர்த்தர்!
13 “கன்னியான ஒரு பெண்ணை தலைமை ஆசாரியன் மணந்துகொள்ள வேண்டும். 14 விபச்சாரியான பெண்ணையோ, வேசியையோ, விதவையையோ, விவாகரத்து செய்யப்பட்டவளையோ மணந்துகொள்ளக் கூடாது. அவன் தன் சொந்த ஜனங்களிடமிருந்து ஒரு கன்னியான பெண்ணை மணந்துகொள்ள வேண்டும். 15 அப்பொழுது அவனது பிள்ளைகளை ஜனங்கள் மதிப்பார்கள். [a] கர்த்தராகிய நான் தலைமை ஆசாரியனை அவனது சிறப்புப் பணிகளுக்காகத் தனியாக வைத்திருக்கிறேன்” என்று கூறினார்.
16 கர்த்தர் மோசேயிடம், 17 “ஆரோனிடம் சொல்! உனது சந்ததியில் எவராவது அங்கக் குறைவுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் தேவனுக்கு சிறப்பு அப்பத்தை எடுத்துச் செல்ல தகுதியற்றவர்களாகிறார்கள். 18 உடல் உறுப்புகளிலே குறைவுள்ள யாரும் ஆசாரியனாகப் பணிச்செய்யக் கூடாது. எனக்குப் பலிசெலுத்தும் பொருள்களையும் கொண்டுவரக்கூடாது. குருடர், சப்பாணி, முகத்திலே வெட்டுக்காயங்கள் உள்ளவர்கள், கைகளும் கால்களும் அதிக நீளமாய் இருக்கிறவர்கள், 19 உடைந்த கைகளும், கால்களும் உடையவர்கள், 20 கூனர்கள், குள்ளர்கள், பூ விழுந்த கண்ணுள்ளவர்கள், சொறியர்கள், அசறு உள்ளவர்கள், விதை நசுங்கினவர்கள் ஆகியோர் ஆசாரியனாகத் தகுதியில்லாதவர்கள்.
21 “ஆரோனின் சந்ததியில் எவராவது இத்தகைய உடல்குறை உடையவர்களாக இருந்தால் அவர்கள் கர்த்தருக்கு எந்த பலிகளையும் கொடுக்க தகுதியற்றுப் போகிறார்கள். அவன் தேவனுக்கு சிறப்பான அப்பத்தை எடுத்துச் செல்ல முடியாது. 22 அவன் ஆசாரியர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதினால் பரிசுத்தமான அப்பத்தையும், மிகப்பரிசுத்தமான அப்பங்களையும் அவன் உண்ணலாம். 23 ஆனால் அவன் மிகவும் பரிசுத்தமான இடத்துக்குத் திரையைக் கடந்து போகமுடியாது. பலிபீடத்தின் அருகிலும் செல்ல முடியாது. ஏனென்றால் அவனிடம் குறையுள்ளது. அவன் எனது பரிசுத்தமான இடத்தை அசுத்தப்படுத்தக் கூடாது. கர்த்தராகிய நான் அந்த இடங்களை பரிசுத்தப்படுத்துகிறேன்!” என்று கூறினார்.
24 ஆகவே இவ்விதிமுறைகள் அனைத்தையும் ஆரோனுக்கும், ஆரோனின் பிள்ளைகளுக்கும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் மோசே சொன்னான்.
22 தேவனாகிய கர்த்தர் மோசேயிடம், 2 “ஆரோனிடமும் அவனது மகன்களிடமும் கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் எனக்குக் கொடுக்கும் பொருட்கள் பரிசுத்தமானவையாக இருக்கும். அவை என்னுடையவை. எனவே ஆசாரியர்களாகிய நீங்கள் அவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் பரிசுத்த பொருட்களை உங்கள் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தினால் நீங்கள் என் பெயருக்கு மரியாதை செலுத்தவில்லை என்று பொருள்படும். நானே கர்த்தர். 3 உங்களது சந்ததியார் எவரும் அப்பொருட்களைத் தொட்டால் அவர்கள் தீட்டுள்ளவர்களாகிறார்கள். அவர்கள் என்னிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அப்பொருட்களை எனக்குக் கொடுத்தனர். நானே கர்த்தர்.
4 “ஆரோனின் சந்ததிகளில் எவருக்காவது தொழுநோய் இருந்தால் அல்லது உடற்கழிவுகள் இருந்தால் அவனது தீட்டு நீங்கும்வரை பரிசுத்த உணவை உண்ணக்கூடாது. இது, தீட்டுள்ள ஆசாரியர்கள் அனைவருக்கும் உரிய விதியாகும். ஒரு ஆசாரியன் பிணத்தைத் தொடுவதன் மூலமோ, தன் விந்துக்கழிவின் மூலமோ தீட்டு அடையலாம். 5 தீட்டுள்ள எந்த ஊர்கின்ற மிருகங்களை அவன் தொட்டாலும் தீட்டு அடையலாம். தீட்டுள்ள மனிதனைத் தொட்டாலும் ஆசாரியன் தீட்டு அடையலாம். எது அவனைத் தீட்டுப்படுத்தியது என்பது ஒரு பொருட்டல்ல. 6 ஒருவன் மேற்கூறியவற்றுள் ஏதாவது ஒன்றினைத் தொட்டால் அதன் மூலம் அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருக்கிறான். அவன் பரிசுத்தமான உணவு வகைகளில் எதையும் தின்னக் கூடாது. அவன் தண்ணீரால் தன்னைக் கழுவிக்கொண்டாலும் அவன் பரிசுத்த உணவை உண்ணக் கூடாது. 7 சூரியன் மறைந்த பிறகே அவன் தீட்டு இல்லாதவன் ஆகிறான், பிறகு அவன் பரிசுத்த உணவை உண்ணலாம்.
8 “ஒரு மிருகம் தானாகவோ அல்லது இன்னொரு மிருகத்தாலோ செத்துப் போயிருக்கலாம். எனினும் ஒரு ஆசாரியன் அதனை உண்ணக்கூடாது. அவன் அதனை உண்டால் அதனால் தீட்டுள்ளவன் ஆகிறான். நானே கர்த்தர்.
9 “ஆசாரியன் எனக்குச் சேவை செய்வதற்கென்று சிறப்பான நேரங்கள் உள்ளன. அந்த நேரங்களில் அவர்கள் கவனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். பரிசுத்தமானவற்றைப் பரிசுத்தமற்றதாகச் செய்துவிடக் கூடாது. அவர்கள் கவனமாக இருந்தால் அழிந்து போகமாட்டார்கள். கர்த்தராகிய நான் அவர்களைச் சிறப்பான வேலைக்கென்று தனியாகப் பிரித்துவைத்திருக்கிறேன். 10 ஆசாரியர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே பரிசுத்த உணவை உண்ண வேண்டும். இவர்களின் வீட்டிற்கு வரும் விருந்தினனோ கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரனோ பரிசுத்த உணவை உண்ணக் கூடாது. 11 ஆனால் ஆசாரியன் தனது சொந்தப் பணத்தின் மூலம் ஒரு அடிமையை வாங்கியிருந்தால், அந்த அடிமை பரிசுத்தமான உணவில் கொஞ்சம் உண்ணலாம். ஆசாரியன் வீட்டிலேயே பிறந்து வளர்ந்த அடிமைகளும் ஆசாரியனின் உணவை கொஞ்சம் உண்ணலாம். 12 ஆசாரியனின் மகள் ஆசாரியன் அல்லாத ஒருவனை மணந்துகொண்டால் அவளும் பரிசுத்த பலி உணவுகளை உண்ணக்கூடாது. 13 ஒரு ஆசாரியனின் மகள் விதவையாகலாம், அல்லது அவளுக்கு விவாகரத்து செய்யப்படலாம், அல்லது அவளுக்கு உதவ குழந்தைகள் இல்லாமல் போனதால் அவள் தான் பிறந்து வளர்ந்த தந்தையின் வீட்டிற்குத் திரும்பிவர நேரலாம். அப்போது அவள் தன் தந்தையின் உணவை கொஞ்சம் உண்ணலாம். ஆனால் ஆசாரியன் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த உணவை உண்ண வேண்டும்.
14 “ஒருவன் தவறுதலாக பரிசுத்த உணவை உண்டால், அவன் அதற்குரிய விலையில் ஐந்தில் ஒரு பங்கை ஆசாரியனிடம் கூட்டிக் கொடுக்க வேண்டும்.
15 “இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அந்த காணிக்கைகள் பரிசுத்தமானவை. எனவே ஆசாரியர்கள் பரிசுத்தமான அவற்றை அசுத்தமாக்கக் கூடாது. 16 ஒருவேளை ஆசாரியர்கள் அவற்றை அசுத்தமாக்கிவிட்டால் அவர்கள் பரிசுத்த உணவை உண்ணும்போது தங்கள் பாவத்தை மிகுதிப்படுத்துகிறார்கள். கர்த்தராகிய நான் அவர்களை பரிசுத்தமாக்குவேன்” என்று கூறினார்.
17 தேவனாகிய கர்த்தர் மோசேயிடம், 18 “ஆரோனிடமும் அவனது மகன்களிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் கூறு. இஸ்ரவேல் குடிமக்களில் ஒருவனோ அல்லது அந்நியரில் ஒருவனோ எனக்குப் பலி கொண்டுவர விரும்பலாம். அது அவன் செய்த சிறப்பான பொருத்தனையாக இருக்கலாம், அல்லது அது அவன் கொடுக்க விரும்பும் சிறப்பான பலியாக இருக்கலாம். 19-20 அவர்கள் அந்த அன்பளிப்புகளைக் கொண்டுவரலாம். ஏனென்றால் உண்மையில் அவர்கள் தேவனுக்கு அன்பளிப்பு செலுத்த விரும்புகின்றனர். அந்த அன்பளிப்புகளில் ஏதாவது குறை இருக்குமானால் அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அந்த அன்பளிப்பால் நான் மகிழ்ச்சியடையமாட்டேன். அந்த அன்பளிப்பானது ஒரு காளையாகவோ, ஆடாகவோ, வெள்ளாடாகவோ இருக்கலாம். ஆனால் அது ஆணாக இருக்க வேண்டும். அதில் எவ்வித குறையும் இருக்கக்கூடாது.
21 “ஒருவன் சமாதானப் பலியை கர்த்தருக்குக் கொண்டு வரலாம். அந்த சமாதானப் பலியானது அவன் ஏற்கெனவே செய்த சிறப்பான பொருத்தனைக்கு உரியதாக இருக்கலாம். அல்லது சிறப்பாக அவன் கர்த்தருக்குக் கொடுக்கக் கூடிய அன்பளிப்பாக இருக்கலாம். அது மாடாகவோ ஆடாகவோ இருக்கலாம். ஆனால் அது ஆரோக்கியமானதாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும். 22 குருடான, அல்லது எலும்பு முறிந்த, அல்லது நொண்டியான, அல்லது உடற்கழிவுடைய, அல்லது சொறியும் புண்ணும் உடைய மிருகங்களை கர்த்தருக்குப் பலியாகக் கொடுக்கக்கூடாது. நோயுற்ற மிருகங்களையும் கர்த்தரின் பலிபீடத்தில் செலுத்தக் கூடாது.
23 “சில நேரங்களில் மாடு அல்லது ஆட்டிற்கு கால்கள் மிக நீளமாகவோ அல்லது குறுகியோ இருக்கலாம். எனினும் ஒருவன் இதனை கர்த்தருக்கு சிறப்பான அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பினால் அது ஏற்றுக்கொள்ளப்படலாம்; ஆனால் இது சிறப்பான பொருத்தனையின் அன்பளிப்பாக ஒருவனால் கொடுக்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
24 “ஒரு மிருகம் காயப்பட்டதாகவோ, நசுங்கியதாகவோ, விதை நொறுங்கியதாகவோ இருந்தால் அதை கர்த்தருக்கு பலியாகக் கொடுக்கக்கூடாது.
25 “நீங்கள் அந்நியரிடமிருந்து மிருகங்களை கர்த்தருக்குரிய பலியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் அம்மிருகம் ஏதாவது ஒரு இடத்தில் புண் உள்ளதாகவோ, குறையுடையதாகவோ இருக்கலாம். எனவே, அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது!” என்று கூறினார்.
26 கர்த்தர் மேலும் மோசேயிடம், 27 “ஒரு கன்றுக் குட்டியோ, ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியோ, ஒரு வெள்ளாட்டுக் குட்டியோ பிறந்ததும் அது ஏழு நாட்கள் தன் தாயோடு இருக்க வேண்டும். எட்டாவது நாளே அது தகன பலியாக கர்த்தருக்கு முன்பு பலியிடத் தகுதியுள்ளதாகும். 28 ஆனால் தாயையும், குட்டியையும் ஒரே நாளில் பலியிடக்கூடாது. இந்த விதி பசுவுக்கும் கன்றுக் குட்டிக்கும் பொருந்தும்.
29 “நீ நன்றி தெரிவிப்பதற்காக கர்த்தருக்குச் சிறப்பான பலியைச் செலுத்த விரும்பினால் அது உன் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் அது தேவனுக்கும் விருப்பமானதாக அமைய வேண்டும். 30 ஆனால் பலியிடப்படும் முழு மிருகத்தையும் அன்றே சாப்பிட்டுவிட வேண்டும். மறுநாள் காலையில் அதன் இறைச்சியில் எதுவும் மீதியிருக்கக் கூடாது. நானே கர்த்தர்.
31 “எனது கட்டளைகளை நினைவில் வைத்துக்கொள். அவற்றுக்குக் கீழ்ப்படிந்து நட. நானே கர்த்தர். 32 எனது பரிசுத்தமான பெயருக்கு மதிப்புகொடு. நான் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சிறப்பானவராயிருப்பேன். கர்த்தராகிய நான் உங்களை என் சிறப்பான ஜனங்களாக்கியிருக்கிறேன். 33 நான் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வந்தேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.
இயேசுவின் உயிர்த்தெழுதல்(A)
28 ஓய்வு நாளுக்குப் பிறகு மறுநாள் வாரத்தின் முதல் நாள் அன்று அதிகாலை மகதலேனா மரியாளும், மரியாள் எனப் பெயர் கொண்ட மற்றப் பெண்ணும் இயேசுவின் கல்லறையைக் காணச் சென்றார்கள்.
2 அப்பொழுது மிகத் தீவிரமான பூமி அதிர்ச்சி உண்டானது. வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு தூதன் கல்லறையை மூடியிருந்த பாறாங்கல்லை உருட்டிக் கீழே தள்ளினான். பின் அத்தூதன் அப்பாறாங்கல்லின் மீது அமர்ந்தான். 3 மின்னலைப் போலப் பிரகாசித்த அந்தத் தூதனின் ஆடைகள் பனி போல வெண்மையாயிருந்தன. 4 கல்லறைக்குக் காவலிருந்த போர்வீரர்கள் தூதனைக் கண்டு மிகவும் பயந்துபோனார்கள். பயத்தினால் நடுங்கிய போர்வீரர்கள் பிணத்தைப்போல பேச்சு மூச்சற்றவர்களானார்கள்.
5 தூதன் பெண்களைப் பார்த்து,, “பயப்படாதீர்கள். சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசுவை நீங்கள் தேடுகின்றீர்கள் என்பதை நானறிவேன். 6 ஆனால் இயேசு இங்கே இல்லை. அவர் சொன்னது போலவே மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார். அவரது சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்தைப் பாருங்கள். 7 உடனே அவரது சீஷர்களிடம் விரைந்து சென்று சொல்லுங்கள். ‘இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார். அவர் கலிலேயாவிற்குச் சென்றுகொண்டிருக்கிறார். அவர் உங்களுக்கு முன்னரே அங்கிருப்பார்.’ அங்கே நீங்கள் இயேசுவைக் காணலாம். இதோ நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்” என்று கூறினான்.
8 ஆகவே, அப்பெண்கள் விரைந்து கல்லறையை விட்டுப் புறப்பட்டார்கள். அவர்கள் பயந்துபோனார்கள். அதே சமயம் மகிழ்ச்சியடைந்தார்கள். நடந்ததை சீஷர்களிடம் சொல்ல அவர்கள் ஓடினார்கள். 9 அப்பொழுது இயேசு அவர்களின் முன்பு வந்து நின்றார். இயேசு அவர்களைப் பார்த்து, “வாழ்க” என்றார். இயேசுவின் அருகில் சென்ற பெண்கள் அவரது கால்களைத் தொட்டு வணங்கினார்கள். 10 பின்னர் இயேசு அப்பெண்களிடம்,, “பயப்படாதீர்கள். என் சகோதரர்களிடம் (சீஷர்களிடம்) சென்று கலிலேயாவிற்கு வரச்சொல்லுங்கள். அவர்கள் என்னை அங்கே காண்பார்கள்” என்றார்.
யூதத் தலைவர்களிடம் புகார்
11 பெண்கள் சீஷர்களைத் தேடிப் போனார்கள். அதே சமயம், கல்லறைக்குக் காவலிருந்த போர் வீரர்களில் சிலர் நகருக்குள் சென்றார்கள். நடந்தவை அனைத்தையும் தலைமை ஆசாரியர்களிடம் சொல்வதற்காக அவர்கள் சென்றார்கள். 12 தலைமை ஆசாரியர்கள் மூத்த யூதத் தலைவர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு, அதன்படி ஒரு பொய் கூறுவதற்காக போர்வீரர்களுக்குப் பெரும் பணம் தந்தார்கள். 13 அவர்கள் போர்வீரர்களிடம்,, “நீங்கள் இரவு தூங்கிக்கொண்டிருந்தபொழுது இயேசுவின் சீஷர்கள் அவரது சரீரத்தைத் திருடிச் சென்றுவிட்டார்கள் என மக்களிடம் சொல்லுங்கள். 14 ஆளுநர் இதை அறிந்தால் அவரைச் சமாளித்து உங்களுக்குத் தீங்கு வராதபடி நாங்கள் காப்பாற்றுகிறோம்” என்றார்கள். 15 ஆகவே, போர் வீரர்களும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சொல்லியபடி செய்தார்கள். இன்றைக்கும் யூதர்களுக்கிடையில் இந்தப் பொய்யான கதை சொல்லப்பட்டு வருகிறது.
தமது சீஷர்களுடன் இயேசு பேசுதல்(B)
16 பதினொரு சீஷர்களும் கலிலேயாவில் இயேசு கூறிய மலைக்குச் சென்றார்கள். 17 மலை மீது இயேசுவை சீஷர்கள் கண்டு, வணங்கினார்கள். ஆனால் சில சீஷர்கள் அவர் உண்மையாகவே இயேசு என்று நம்பவில்லை. 18 ஆகவே இயேசு அவர்களிடம்,, “வானத்திலும் பூமியிலும் முழு அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 19 ஆகவே உலகில் உள்ள மக்கள் அனைவரையும் சீஷர்களாக்குங்கள். பிதாவின் பெயராலும் குமாரனின் பெயராலும் பரிசுத்த ஆவியானவரின் பெயராலும் அவர்களுக்கு ஞானஸ்நானம் வழங்குங்கள். 20 நான் உங்களுக்குக் கூறிய அனைத்தையும் அவர்களும் பின்பற்றும்படி போதனை செய்யுங்கள். நான் எப்பொழுதும் உங்களுடனேயே இருப்பேன் என்பதில் உறுதியாயிருங்கள். உலகின் முடிவுவரையிலும் நான் உங்களுடன் தொடர்ந்து இருப்பேன்” என்றார்.
2008 by World Bible Translation Center