Old/New Testament
மோசே ஆசாரியர்களைத் தயார் செய்தல்
8 கர்த்தர் மோசேயிடம், 2 “உன்னோடு ஆரோனையும் அவனது மகன்களையும் அழைத்துக்கொள். ஆடைகளையும், அபிஷேக எண்ணெயையும் பாவப்பரிகார பலிக்கான ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக் கடாக்களையும், ஒரு கூடை புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்துக்கொள். 3 பிறகு ஜனங்கள் அனைவரையும் ஆசாரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டு” என்றார்.
4 கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்து முடித்தான். ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் ஜனங்கள் கூடி வந்தனர். 5 மோசே ஜனங்களிடம், “இவைதான் நாம் செய்ய வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டவை” என்றான்.
6 பிறகு மோசே ஆரோனையும் அவனது மகன்களையும் அழைத்து வந்து அவர்களை தண்ணீரால் கழுவினான். 7 பின் நெய்யப்பட்ட உள்ளங்கியை ஆரோனுக்கு அணிவித்து, இடுப்பைச் சுற்றிக் கச்சையையும் கட்டினான். பிறகு அவன் மேல் அங்கியை உடுத்தி, ஏபோத்தையும் அணிவித்தான். அதன்மேல் ஏபோத்தின் அழகான கச்சையைக் கட்டினான். 8 பிறகு ஆரோனுக்கு நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தையும், அதின் பையில் ஊரீம் தும்மீம் என்பவற்றையும் வைத்தான். 9 மோசே ஆரோனின் தலையில் தலைப்பாகையைக் கட்டி, அதன் முன் பக்கத்தில் பொற்பட்டத்தைக் கட்டினான். அது பரிசுத்த கிரீடமாக விளங்கியது. மோசே இவற்றையெல்லாம் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்து முடித்தான்.
10 பிறகு மோசே அபிஷேக எண்ணெயை எடுத்து பரிசுத்த கூடாரத்திற்குள்ளும் கூடாரத்திற்குள் இருந்த எல்லாப் பொருட்கள் மேலும் தெளித்தான். இவ்வாறு அனைத்தையும் மோசே பரிசுத்தமாக்கினான். 11 பிறகு மோசே சிறிதளவு அபிஷேக எண்ணெயை ஏழு முறை பலிபீடத்தின் மேல் தெளித்தான். அவன் பலிபீடத்தையும் அபிஷேக எண்ணெயால் பரிசுத்தப்படுத்தினான். பின் கிண்ணத்திலும் அதன் அடிப்பாகத்திலும் அபிஷேக எண்ணெயைத் தெளித்தான். இவ்வாறு மோசே கருவிகளையும் பாத்திரங்கள் அனைத்தையும் பரிசுத்தப்படுத்தினான். 12 பிறகு மோசே அபிஷேக எண்ணெயில் சிறிதளவு எடுத்து ஆரோனின் தலையில் ஊற்றி அவனையும் பரிசுத்தமாக்கினான். 13 பின்னர் மோசே ஆரோனின் மகன்களையும் அழைத்து அவர்களுக்கும் நெய்யப்பட்ட அங்கியை அணிவித்து, இடுப்புக் கச்சையைக் கட்டினான். பின் அவர்களின் தலையில் தலைப்பாகைகளை அணிவித்தான். மோசே இவற்றையெல்லாம் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்து முடித்தான்.
14 பிறகு மோசே பாவப்பரிகார பலிக்கான காளையைக் கொண்டு வந்தான். ஆரோனும் அவனது மகன்களும் தங்கள் கைகளை அப்பாவப் பரிகார பலியான காளையின் தலை மீது வைத்தார்கள். 15 பின் மோசே அக்காளையைக் கொன்று அதன் இரத்தத்தை சேகரித்தான். அவன் தன் விரல்களில் இரத்தத்தைத் தொட்டு பலிபீடத்தின் மூலைகளில் பூசினான். இந்த முறையில் மோசே பலிபீடத்தைப் பலியிடுவதற்குரியதாகத் தயார்படுத்தினான். பின் பலிபீடத்தின் அடியில் அந்த இரத்தத்தை ஊற்றினான். அம்முறையில் அவன் ஜனங்களைப் பரிசுத்தப்படுத்த பலிபீடத்தைத் தயார் செய்தான். 16 காளையின் உட்பகுதியிலுள்ள கொழுப்பையெல்லாம் வெளியே எடுத்தான். பின் குடல்களின் மேலிருந்து கொழுப்பையும், கல்லீரல்மேலிருந்து ஜவ்வையும், இரண்டு சிறு நீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும் வெளியே எடுத்து, அவற்றை பலிபீடத்தின்மேல் எரித்தான். 17 ஆனால் மோசே அக்காளையின் தோலையும் இறைச்சியையும் உடல் கழிவுகளையும் கூடாரத்திற்கு வெளியே கொண்டு போய் அவைகளை எரித்தான். மோசே தனக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே இவை அனைத்தையும் செய்து முடித்தான்.
18 பிறகு மோசே தகன பலிக்கான ஆட்டுக் கடாவைக் கொண்டு வந்தான். ஆரோனும் அவனது மகன்களும் செம்மறி ஆட்டுக் கடாவின் தலைமீது தங்கள் கைகளை வைத்தனர். 19 பிறகு அதனை மோசே கொன்று, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றிலும் தெளித்தான். 20-21 பின்னர் அந்த ஆட்டைப் பல துண்டுகளாக வெட்டினான். அதன் உள்பகுதிகளையும் கால்களையும் தண்ணீரால் கழுவினான். பின்னர் அனைத்தையும் பலிபீடத்தின் மீது குவித்து வைத்து எரித்தான். இது கர்த்தருக்கு செய்யப்படும் சர்வாங்க தகனபலியாகும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும். கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே அனைத்தையும் செய்து முடித்தான்.
22 பிறகு மோசே இன்னொரு ஆட்டுக் கடாவையும் கொண்டு வந்தான். இது ஆரோனையும் அவனது மகன்களையும் ஆசாரியர்களாக நியமிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆரோனும் அவனது மகன்களும் தங்கள் கைகளை செம்மறி ஆட்டுக்கடாவின் தலையில் வைத்தனர். 23 பிறகு மோசே அதனைக் கொன்றான். அவன் அதன் இரத்தத்தைத் தொட்டு ஆரோனின் வலது காது முனையிலும், வலது கை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தேய்த்தான். 24 பிறகு மோசே ஆரோனின் மகன்களை பலிபீடத்தின் அருகிலே அழைத்தான். மோசே அவர்களது வலது காதுகளின் முனையிலும், வலது கை பெருவிரல்களிலும், வலது கால் பெருவிரல்களிலும் அதன் இரத்தத்தைத் தேய்த்தான். பின்னர் இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றிலும் தெளித்தான். 25 மோசே கொழுப்பையும், வாலையும், உட்பகுதி கொழுப்பையும், நுரையீரலை மூடியுள்ள கொழுப்பையும், இரண்டு சிறு நீரகங்களையும், அதன் மேல் உள்ள கொழுப்பையும், வலது கால் தொடையையும் எடுத்தான். 26 கர்த்தரின் முன்பாகத் தினமும் வைக்கப்படும் புளிப்பில்லா அப்பக்கூடையிலிருந்து ஒரு புளிப்பான அப்பத்தையும், ஒரு எண்ணெய் கலந்த அப்பத்தையும், ஒரு மெல்லிய புளிப்பில்லா அடையையும் எடுத்தான். இவற்றை ஏற்கெனவே எடுத்த கொழுப்பின் மேலும் ஆட்டுத் தொடையின் மேலும் வைத்தான். 27 பின்பு இவை எல்லாவற்றையும் எடுத்து ஆரோனின் கைகளிலும், அவனது மகன்களின் கைகளிலும் வைத்து அசைவாட்டும் பலியாக கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டினான். 28 பின்பு அவற்றை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, அவற்றைப் பலிபீடத்தின் மேலுள்ள தகன பலிக்குரிய இடத்தில் போட்டு எரித்தான். இது ஆரோனையும் அவனது மகன்களையும் ஆசாரியர்களாக நியமித்ததற்கான பலியாகும். இது நெருப்பால் எரிக்கப்பட்ட காணிக்கையாகும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமானதாகும். 29 மோசே மார்க்கண்டத்தை எடுத்து கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். இது மோசே ஆசாரியர்களை நியமித்ததற்காக அவனது பங்காகும். மோசேக்கு கர்த்தர் இட்ட கட்டளையின்படியே இது இருந்தது.
30 மோசே கொஞ்சம் அபிஷேக எண்ணெயையும் பலிபீடத்தில் உள்ள இரத்தத்தையும் எடுத்து, அவற்றை ஆரோனின் மேலும் அவனது ஆடைகளின் மேலும் தெளித்தான். பிறகு அவற்றை ஆரோனின் மகன்கள் மீதும் அவர்களின் ஆடைகள் மேலும் தெளித்தான். இவ்வாறு அவன் ஆரோன், அவனது மகன்கள், அவர்களின் ஆடைகள் அனைத்தையும் பரிசுத்தமாக்கினான்.
31 பிறகு மோசே ஆரோனிடமும் அவனது மகன்களிடமும், “எனது கட்டளைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ‘ஆரோனும் அவனது மகன்களும் இவற்றை உண்ண வேண்டும்’ என்று சொன்னேன். எனவே அப்பக் கூடையையும் ஆசாரியர்களாக நியமித்தற்கான காணிக்கை இறைச்சியையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆசரிப்புக் கூடாரத்தின் நுழைவாசலிலேயே இறைச்சியை வேகவையுங்கள். அந்த இடத்திலேயே அப்பத்தையும் இறைச்சியையும் உண்ணுங்கள். நான் சொன்னபடியே செய்யுங்கள். 32 அப்பத்திலும் இறைச்சியிலும் ஏதாவது மிஞ்சினால் அவற்றை எரித்துவிடுங்கள். 33 ஆசாரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சடங்கு ஏழு நாட்கள் நடைபெறும். எனவே ஏழு நாட்களும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலைவிட்டு விலகக் கூடாது. 34 இன்று நடந்தவை அனைத்தும் கர்த்தரின் கட்டளையின்படி நடந்தவை. உங்களை பரிசுத்தப்படுத்துவதற்காகவே அவர் இவ்வாறு கட்டளையிட்டுள்ளார். 35 ஏழு நாட்களாக இரவும் பகலும் நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலேயே இருக்க வேண்டும். நீங்கள் கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படியாவிட்டால் மரித்துப்போவீர்கள். கர்த்தர் எனக்கு இந்தக் கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார்” என்றான்.
36 ஆரோனும் அவனுடைய மகன்களும் மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்து முடித்தனர்.
தேவன் ஆசாரியர்களை ஏற்றுக்கொள்ளுதல்
9 எட்டாவது நாள் மோசே ஆரோனையும் அவனது மகன்களையும், இஸ்ரவேல் ஜனங்களின் மூப்பர்களையும் அழைத்தான். 2 மோசே ஆரோனிடம், “பழுதற்ற ஒரு காளையையும், ஆட்டுக் கடாவையும் எடுத்துக் கொண்டு வா. பாவப் பரிகாரப் பலியாக காளையும், தகன பலியாக ஆட்டுக்கடாவும் இருக்கட்டும். கர்த்தருக்கு இந்த மிருகங்களைப் பலியாக அளிக்க வேண்டும். 3 நீ இஸ்ரவேலரிடம் ஒரு வயதுள்ளதும், ‘பழுது இல்லாததுமான ஆட்டுக்கடாவைப் பாவப்பரிகார பலியாகவும், தகனபலியாகக் கன்றுகுட்டியையும், ஆட்டுக்குட்டியையும் 4 சமாதானப் பலியாக ஒரு காளையையும் வெள்ளாட்டுக் கடாவையும் கொண்டு வரும்படி இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. அந்த மிருகங்களையும், எண்ணெயிலே பிசைந்த தானியக் காணிக்கையையும் கர்த்தருக்குக் கொண்டு வாருங்கள்; ஏனென்றால் இன்று உங்களுக்கு கர்த்தர் தரிசனமாவார்’ என்று சொல்” என்றான்.
5 எனவே, அனைத்து ஜனங்களும் மோசே கட்டளையிட்டபடியே அவர்கள் பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஆசரிப்புக் கூடாரத்துக்கு வந்து, கர்த்தரின் சந்நிதானத்தில் நின்றனர். 6 மோசே அவர்களிடம், “கர்த்தர் கட்டளையிட்டபடி நீங்கள் இவற்றைச் செய்ய வேண்டும், பின்னர் கர்த்தரின் மகிமை உங்களுக்குக் காணப்படும்” என்றான்.
7 பிறகு மோசே ஆரோனிடம், “கர்த்தர் கட்டளையிட்டபடி செய்வதற்காக பலிபீடத்தின் அருகில் போய் பாவப்பரிகார பலியையும், தகன பலியையும் செலுத்து. அது உன்னையும் ஜனங்களையும் தூய்மைப்படுத்தும். ஜனங்களின் பலிப் பொருட்களை எடுத்து அவர்களைச் சுத்தப்படுத்தும் செயல்களைச் செய்” என்றான்.
8 எனவே ஆரோன் பலிபீடத்தின் அருகில் சென்று தனது பாவப்பரிகார பலிக்காக காளையைப் பலியிட்டான். 9 பிறகு ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை ஆரோனிடம் கொண்டு வந்தனர். ஆரோன் அந்த இரத்தத்தில் தன் விரலை விட்டு பலிபீடத்தின் மூலைகளில் தடவியதுடன், மீந்திருந்த இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினான். 10 பின் காளையின் கொழுப்பு, சிறுநீரகங்கள், கல்லீரலில் உள்ள ஜவ்வு ஆகியவற்றை எடுத்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவற்றைப் பலிபீடத்தின்மேல் ஆரோன் எரித்தான். 11 பிறகு அவன் அதன் இறைச்சியையும் தோலையும் முகாமுக்கு வெளியே எரித்தான்.
12 அடுத்து, தகன பலிக்கான மிருகத்தைக் கொன்று அதனைத் துண்டுகளாக வெட்டினான். ஆரோனின் மகன்கள் அவனிடம் அதன் இரத்தத்தை எடுத்து வந்தனர். ஆரோன் அந்த இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றி தெளித்தான். 13 ஆரோனின் மகன்கள் தகன பலிக்குரிய துண்டுகளையும், தலையையும் ஆரோனிடம் கொடுத்தனர். ஆரோன் அவற்றை பலிபீடத்தின் மேல் எரித்தான். 14 ஆரோன் தகன பலிக்குரிய மிருகத்தின் உட்பகுதிகளையும் கால்களையும் தண்ணீரால் கழுவி அவற்றையும் பலிபீடத்தின் மேல் எரித்தான்.
15 பிறகு ஆரோன் ஜனங்களின் பலிகளை கொண்டு வந்து, ஜனங்களுக்கான பாவப் பரிகார பலிக்குரிய ஒரு வெள்ளாட்டைக் கொன்றான். 16 ஆரோன் தகன பலிக்குரியதையும் கொண்டு வந்து கர்த்தர் கட்டளையிட்டபடியே பலி செலுத்தினான். 17 ஆரோன் தானியக் காணிக்கையை கொண்டு வந்து பலிபீடத்தின் மேல் வைத்தான். அதில் ஒரு கையளவு எடுத்து காலையில் செலுத்தும் பலியோடு பலிபீடத்தின் மேல் வைத்தான்.
18 காளையையும், ஆட்டுக் கடாவையும் ஆரோன் கொன்றான். இது ஜனங்களுக்குரிய சமாதானப் பலிகள் ஆகும். ஆரோனின் மகன்கள் அவற்றின் இரத்தத்தை ஆரோனிடம் கொண்டு வந்தனர். ஆரோன் அதனைப் பலிபீடத்தைச் சுற்றிலும் தெளித்தான். 19 ஆரோனின் மகன்கள் அம்மிருகங்களின் கொழுப்பு, வால், குடல்களை மூடிய ஜவ்வு, சிறுநீரகங்கள், கல்லீரலின் மேலிருந்த ஜவ்வு ஆகியவற்றைக் கொண்டு வந்தனர். 20 ஆரோனின் மகன்கள் இக்கொழுப்புப் பாகங்களை மார்புக்கண்டங்களின் மீது வைத்தனர். ஆரோன் அந்த கொழுப்புப் பகுதிகளை பலிபீடத்தின் மீது வைத்து எரித்தான். 21 மோசே கட்டளையிட்டபடியே ஆரோன் மார்புக்கண்டங்களையும் வலதுகால் தொடையையும் அசைவாட்டும் பலியாக கர்த்தரின் சந்நிதானத்தில் அசைவாட்டினான்.
22 பிறகு ஆரோன் தனது கைகளை ஜனங்களை நோக்கி உயர்த்தி ஆசீர்வாதம் செய்தான். பாவப் பரிகார பலி, தகனபலி, சமாதானப் பலி அனைத்தையும் ஆரோன் செலுத்தி முடித்த பிறகு பலிபீடத்திலிருந்து கீழே இறங்கி வந்தான்.
23 மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்திற்குள்ளே சென்றனர். பின் அவர்கள் வெளியே வந்து ஜனங்களை ஆசீர்வதித்தனர். பிறகு கர்த்தரின் மகிமையானது அனைத்து ஜனங்களுக்கும் காணப்பட்டது. 24 கர்த்தருடைய சந்நிதியிருந்து நெருப்பு எழும்பி வந்து பலிபீடத்தின் மேல் இருந்த தகனபலிப் பொருட்களையும் கொழுப்பையும் எரித்தது. ஜனங்கள் இதனைப் பார்த்து ஆரவாரம் செய்தனர். தங்கள் முகங்களைத் தரையை நோக்கி தாழ்த்தினர்.
தேவன் நாதாபையும் அபியூவையும் அழித்தல்
10 பின் ஆரோனின் மகன்களாகிய நாதாபும் அபியூவும் பாவம் செய்தனர். ஒவ்வொருவனும் ஒரு நறுமண கலசத்தை எடுத்து, அதில் தேவன் அங்கீகரியாத நெருப்பைப் பயன்படுத்தி அதில் நறுமணப் பொருளைப் போட்டனர். மோசே கட்டளையிட்டுச் சொல்லியிருந்த நெருப்பை அவர்கள் பயன்படுத்தவில்லை. 2 எனவே கர்த்தரின் சந்நிதியிலிருந்து நெருப்பு கிளம்பி நாதாபையும் அபியூவையும் அழித்தது. அவர்கள் கர்த்தரின் சந்நிதானத்திலேயே மரித்துப் போனார்கள்.
3 பிறகு மோசே ஆரோனிடம், “‘என் அருகிலே வருகிற ஆசாரியர்கள் என்னை மதிக்க வேண்டும். நான் அவர்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் பரிசுத்தமாக விளங்க வேண்டும்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான். ஆகையால் ஆரோன் தன் மகன்கள் மரணமடைந்ததை குறித்து எதுவும் சொல்லவில்லை.
4 ஆரோனின் சிறிய தந்தையான ஊசியேலுக்கு மிஷாயேல், எல்சாபான் என்று இரண்டு மகன்கள் இருந்தார்கள். மோசே அவர்களிடம், “பரிசுத்த இடத்தின் முற்பகுதிக்குப் போய் உங்கள் சகோதரர்களின் உடல்களை அங்கிருந்து எடுத்து முகாமுக்கு வெளியே கொண்டு போங்கள்” என்றான்.
5 மிஷாயேலும் எல்சாபானும் மோசே சொன்னபடியே அவர்களின் உடல்களை முகாமுக்கு வெளியே கொண்டு போனார்கள். நாதாப், அபியூவின் உடல்களில் ஆசாரியர்களுக்குரிய சிறப்பான உடைகள் இன்னும் இருந்தன.
6 பிறகு மோசே ஆரோனின் வேறு இரு மகன்களான எலெயாசரிடமும், இத்தாமாரிடமும்:, “உங்கள் சோகத்தை வெளியே காண்பிக்கவோ, உங்கள் ஆடைகளை கிழிக்கவோ, உங்கள் தலை முடியை கலைக்கவோ வேண்டாம். அப்பொழுது நீங்கள் கொல்லப்படமாட்டீர்கள். கர்த்தர் நம் எல்லா ஜனங்கள் மீதும் கோபம் கொள்ளமாட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் உங்கள் உறவினர். எனவே அவர்கள் நாதாபும் அபியூவும் மரித்ததற்காக அழட்டும். 7 ஆனால் நீங்கள் இந்த ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலை விட்டு கூட வெளியே போகக்கூடாது. நீங்கள் இதைவிட்டுப் போனால் மரித்துப்போவீர்கள். ஏனென்றால் கர்த்தரின் அபிஷேக எண்ணெய் உங்கள் மேல் உள்ளது” என்றான். ஆகவே ஆரோனும், எலெயாசரும், இத்தாமாரும், மோசேக்குக் கீழ்ப்படிந்தனர்.
8 பிறகு கர்த்தர் ஆரோனிடம், 9 “நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழையும்போது திராட்சை ரசத்தையோ அல்லது மதுவையோ அருந்திவிட்டு வரக்கூடாது. நீங்கள் அவற்றைக் குடித்தால் மரித்துப்போவீர்கள். இந்தச் சட்டமானது என்றென்றைக்கும் உங்கள் தலைமுறைகளுக்கெல்லாம் தொடரும். 10 நீங்கள் பரிசுத்தமான பொருட்களுக்கும் பரிசுத்தமற்ற பொருட்களுக்கும், தீட்டுள்ள பொருட்களுக்கும், தீட்டில்லாத பொருட்களுக்கும் இடையில் தெளிவான வேறுபாட்டினை உருவாக்க வேண்டும். 11 கர்த்தர் தம் சட்டங்களை மோசேயிடம் கொடுத்தார். மோசே அந்த சட்டங்களை ஜனங்களிடம் கொடுத்தான். ஆரோனாகிய நீ ஜனங்களுக்கு அந்த சட்டங்களைக் கற்பிக்க வேண்டும்” என்றார்.
12 ஆரோனின் மற்ற இரண்டு மகன்களான எலெயாசரும், இத்தாமாரும் உயிரோடு இருந்தனர். மோசே ஆரோனிடமும் அவனது இரு மகன்களிடமும், “பலிக்காகக் கொண்டு வந்த பலியில் இன்னும் கொஞ்சம் தானியக் காணிக்கை மிஞ்சியுள்ளது. அதில் புளிப்பு எதுவும் சேர்க்காமல் பலிபீடத்தின் அருகில் இருந்து அதை உண்ண வேண்டும், ஏனென்றால், அக்காணிக்கையானது மிக பரிசுத்தமானதாகும். 13 இது கர்த்தருக்காகச் செலுத்தப்பட்ட தகன பலியாகும். நான் உங்களுக்குக் கொடுத்த சட்டத்தின்படி இதன் ஒரு பகுதி உனக்கும் உன் மகன்களுக்கும் சொந்தமாகும். ஆனால் அவற்றைப் பரிசுத்தமான ஒரு இடத்தில் வைத்து உண்ண வேண்டும்.
14 “நீங்களும் உங்கள் மகன்களும் மகள்களும் அசைவாட்டும் பலியில் உள்ள மார்புக்கண்டத்தை உண்ண வேண்டும். நீங்கள் இதனைப் பரிசுத்தமான இடத்தில் வைத்து உண்ண வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் அவற்றைத் தீட்டில்லாத இடத்தில் வைத்து உண்ண வேண்டும். ஏனென்றால் இவை சமாதானப் பலியில் இருந்து பெறப்பட்டவை. இஸ்ரவேலின் ஜனங்கள் இதனை தேவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளனர். அந்த ஜனங்கள் அம்மிருகத்தின் ஒரு பாகத்தை உண்பார்கள். ஆனால் அதன் மார்புக்கண்டம் உங்களுக்கு உரியது. 15 ஜனங்கள் தங்கள் மிருகங்களின் கொழுப்பைப் பலியின் ஒரு பாகமாகக் கொண்டு வந்து பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். அவர்கள் சமாதானப் பலிக்குரிய தொடையையும் அசைவாட்டும் பலிக்குரிய மார்புக்கண்டத்தையும் கொண்டு வர வேண்டும். அவை கர்த்தரின் சந்நிதானத்தில் அசைவாட்டப்படும். பின் அவை உங்களுக்கு உரிய பாகமாகக் கருதப்படும். கர்த்தர் சொன்னபடி பலியின் இப்பங்கானது என்றென்றைக்கும் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உரியதாகும்” என்றான்.
16 மோசே பாவப்பரிகார பலிக்காகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டைத் தேடினான். ஆனால் அது ஏற்கெனவே எரிக்கப்பட்டிருந்தது. அதனால் மோசேக்கு ஆரோனின் மகன்கள் எலெயாசரிடமும், இத்தாமாரிடமும் மிகுந்த கோபம் ஏற்பட்டது. 17 மோசே, “நீங்கள் அந்த வெள்ளாட்டை பரிசுத்தமான இடத்தில் வைத்து உண்டிருக்க வேண்டும். அது மிகவும் பரிசுத்தமானது. ஏன் அதனை கர்த்தரின் சந்நிதானத்தில் வைத்து உண்ணாமற் போனீர்கள்? கர்த்தர் அதனை உங்களிடம், ஜனங்களின் குற்றங்களைப் போக்கி அவர்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காகவே கொடுத்துள்ளார். 18 அந்த வெள்ளாட்டின் இரத்தமானது பரிசுத்தமான இடத்திற்குள் கொண்டுவரப்படவில்லையே. நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதனைப் பரிசுத்த இடத்தில் வைத்து உண்டிருக்க வேண்டும்!” என்றான்.
19 ஆனால் ஆரோன் மோசேயிடம், “இன்றைக்கு அவர்கள் பாவப்பரிகார பலியையும், தகன பலியையும் கர்த்தருக்கு முன்னால் கொண்டு வந்தார்கள். ஆனால் எனக்கு இன்று என்ன ஏற்பட்டதென்று உங்களுக்குத் தெரியும்! பாவப்பரிகார பலிக்குரிய பாகத்தை நான் இன்று உண்டிருந்தால் கர்த்தர் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று எண்ணுகிறீரா?” என்றான்.
20 மோசே இவற்றைக் கேட்டதும் அமைதியாகிவிட்டான்.
மனிதகுமாரனின் நியாயத்தீர்ப்பு
31 ,“மனித குமாரன் மீண்டும் வருவார். அவர் மாட்சிமையுடன் தேவதூதர்கள் சூழ வருவார். அரசராகிய அவர் தன் மாட்சிமை மிக்க அரியணையில் வீற்றிருப்பார். 32 உலகின் எல்லா மக்களும் மனித குமாரன் முன்னிலையில் ஒன்று திரள்வார்கள். மனித குமாரன் அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார். ஓர் ஆட்டிடையன் தன் ஆடுகளை வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் என பிரிப்பதைப் போல அவர் பிரிப்பார். 33 மனித குமாரன் செம்மறியாடுகளை (நல்லவர்களை) வலது பக்கமும், வெள்ளாடுகளை (தீயவர்களை) இடது பக்கமும் நிறுத்துவார்.
34 ,“பின் அரசனானவர் தன் வலது பக்கமுள்ள நல்லவர்களிடம், ‘வாருங்கள். என் பிதா உங்களுக்குப் பெரும் ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளார். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேவனுடைய இராஜ்யத்தை அடையுங்கள். உலகம் தோன்றியது முதலே அந்த இராஜ்யம் உங்களுக்காகத் தயாராக உள்ளது. 35 நீங்கள் அந்த இராஜ்யத்தை அடையலாம். ஏனென்றால் நான் பசித்திருந்தபொழுது நீங்கள் எனக்கு உணவளித்தீர்கள். எனக்குத் தாகமேற்பட்டபோது தண்ணீர் கொடுத்தீர்கள். நான் வீட்டிலிருந்து தூரமாய்த் தனித்திருந்த பொழுது, என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்தீர்கள். 36 நான் ஆடையின்றி இருந்தபோது, நீங்கள் உடுக்க ஆடை அளித்தீர்கள். நான் நோயுற்றபோது, என்னைக் கவனித்துக் கொண்டீர்கள். நான் சிறைப்பட்டபோது நீங்கள் என்னைக் காண வந்தீர்கள்’ என்று சொன்னார்.
37 ,“அதற்கு நல்லவர்கள் பதில் சொல்வார்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசித்திருந்ததைக் கண்டு நாங்கள் உமக்கு உணவளித்தோம்? எப்பொழுது உங்களுக்குத் தாகமேற்பட்டு நாங்கள் தண்ணீர் தந்தோம்? 38 எப்பொழுது நீர் வீட்டைவிட்டு வெளியேறி தனித்திருந்ததைக் கண்டு நாங்கள் உம்மை எங்கள் வீட்டிற்கழைத்தோம்? எப்போது நீர் ஆடையின்றி இருக்கக் கண்டு நாங்கள் உம்மை உடுத்துக்கொள்ள ஏதேனும் கொடுத்தோம்? 39 எப்பொழுது நாங்கள் உம்மை நோயுற்றோ சிறையிலோ இருக்க கண்டோம்?’ என்பார்கள்.
40 ,“பின்னர் மன்னவர், ‘உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இங்குள்ள என் மக்களில் மிகவும் சாதாரணமான யாருக்கேனும் நீங்கள் ஒன்றைச் செய்திருந்தால் நீங்கள் அதை எனக்கே செய்ததாகும்’ என்று கூறினார்.
41 ,“பின் அரசர் தன் இடது பக்கமுள்ள தீயவர்களைப் பார்த்து, ‘என்னைவிட்டு விலகுங்கள். நீங்கள் தண்டிக்கப்பட வேண்டுமென தேவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டார். என்றென்றும் எரிகிற அக்கினியில் விழுங்கள். பிசாசுக்காகவும் அவனது தூதர்களுக்காகவும் ஆயத்தமாக்கப்பட்டது, அந்த அக்கினி. 42 நீங்கள் அதிலே சேரவேண்டும். ஏனென்றால், நான் பசித்திருந்தபொழுது நீங்கள் புசிக்க எதுவும் தரவில்லை. நான் தாகமாயிருந்தபொழுது, நீங்கள் குடிக்க எதுவும் கொடுக்கவில்லை. 43 நான் வீட்டிலிருந்து தூரமாய் தனித்திருந்தபொழுது, நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்கழைக்கவில்லை. நான் ஆடையின்றி இருந்தபொழுது, நீங்கள் உடுக்கத் துணியேதும் தரவில்லை. நான் நோயுற்றபொழுதும் சிறையிலிருந்தபொழுதும் நீங்கள் என்னைக் கவனித்து கொள்ளவில்லை’ என்று கூறுவார்.
44 ,“அதற்கு அத்தீயவர்கள், ‘ஆண்டவரே எப்பொழுது நீர் பசித்தும் தாகத்துடனுமிருந்ததை நாங்கள் கண்டோம்? எப்பொழுது நீர் வீட்டிலிருந்து தூரமாய்த் தனித்திருந்ததைக் கண்டோம்? அல்லது எப்பொழுது உம்மை ஆடையின்றியோ நோயுற்றோ அல்லது சிறைப்பட்டோ கண்டோம்? எப்பொழுது இவைகளையெல்லாம் கண்டு உமக்கு உதவாமல் போனோம்?’ என்பார்கள்.
45 ,“அப்போது அரசர், ‘நான் உண்மையைச் சொல்லுகிறேன், இங்குள்ளவர்களில் சாதாரணமான யாருக்கேனும் எதையேனும் செய்ய நீங்கள் மறுத்தால், நீங்கள் எனக்கு மறுத்ததற்கு சமமாகும்!’ என்பார்.
46 ,“பிறகு அத்தீயவர்கள் விலகிச் செல்வார்கள். அவர்களுக்கு நித்தியமான தண்டனை கிடைக்கும். ஆனால் நல்லவர்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும்.”
2008 by World Bible Translation Center