Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
லேவியராகமம் 4-5

அசம்பாவிதமாகச் செய்த பாவங்களுக்கான காணிக்கைகள்

கர்த்தர் மோசேயிடம், “நீ, இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது: செய்யக்கூடாது என கர்த்தர் சொன்ன காரியங்களைச் செய்ய நேர்ந்தாலும், அசம்பாவிதமாக பாவம் செய்ய நேர்ந்தாலும், ஒருவன் கீழ்க்கண்டபடி செய்ய வேண்டும்.

“அபிஷேகம் பெற்ற ஆசாரியன், ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவம் செய்தால் அந்த ஆசாரியன் தன் பாவத்துக்காக கர்த்தருக்குச் சில காணிக்கைகளைச் செலுத்த வேண்டும். அந்த ஆசாரியன் குறையற்ற ஒரு இளங்காளையைப் பாவப் பரிகாரப் பலியாகக் கொண்டு வரவேண்டும். ஆசாரியன் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு கர்த்தரின் சந்நிதானத்திற்கு அந்தக் காளையைக் கொண்டு வரவேண்டும். அவன் அதன் தலையின் மேல் தன் கையை வைத்து அதனைக் கொல்ல வேண்டும். பின் அந்த அபிஷேகம் பெற்ற ஆசாரியன் காளையின் இரத்தத்தை எடுத்து ஆசரிப்புக் கூடாரத்திற்குள் கொண்டு வரவேண்டும். அவன் தன் விரலால் அந்த இரத்தத்தைத் தொட்டு மகாபரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தரின் சந்நிதியில் ஏழுமுறை தெளிக்க வேண்டும். பின் ஆசாரியன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து நறுமண பலிபீடத்தின் மூலைகளில் பூச வேண்டும். (இந்த பலிபீடமானது ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருக்கு முன் இருக்கும்.) காளையின் எல்லா இரத்தத்தையும் தகன பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். (இப்பலிபீடமானது ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் இருக்கும்.) அதற்குப் பிறகு, பாவப்பரிகாரப் பலியாகத் தரப்பட்ட காளையின் கொழுப்பு அனைத்தையும் எடுக்க வேண்டும். காளையின் உட்பகுதிகளிலும் அதைச் சுற்றிலும் உள்ள கொழுப்பு முழுவதையும் எடுத்து, அவன் அதன் இரண்டு சிறு நீரகங்களையும் அவற்றையொட்டி கீழ்ப்புறத்திலும், மேல்புறத்திலும் ஒட்டி இருக்கிற கொழுப்பையும் கல்லீரலில் இருக்கும் கொழுப்புப் பகுதிகளையும் சிறுநீரகங்களோடு சேர்த்து, 10 சமாதானப் பலியின் போது காளையிலிருந்து எடுப்பது போன்று இப்பாகங்களை எடுத்து ஆசாரியன் பலிபீடத்தின் மேல் வைத்து எரிக்க வேண்டும். 11-12 ஆனால் ஆசாரியன் காளையின் தோலையும், அதன் குடல்களையும், கழிவுப் பொருட்களையும் தலையிலும் கால்களிலும் உள்ள மாம்சத்தையும் தனியே எடுக்க வேண்டும். அவற்றைக் கூடாரத்திற்கு வெளியே கொண்டுபோய் சாம்பல் கொட்டுகிற சிறப்புக்குரிய இடத்தில் குவிக்க வேண்டும். பின்பு ஆசாரியன் இக்குவியலை விறகுகளின் மேல் அடுக்கி எரிக்க வேண்டும். சாம்பல் குவிக்கப்பட்டிருக்கும் இடத்தில் காளை எரிக்கப்பட வேண்டும்.

13 “இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அறியாமையால் பாவம் செய்து, கர்த்தர் எவற்றைச் செய்யக் கூடாது என்று சொன்னாரோ அவற்றை அவர்கள் தெரியாமல் செய்து பாவத்திற்குரியவர்களாகலாம். 14 அவர்கள் தங்கள் பாவங்களை அறிந்துகொள்ளும்போது, அதற்காக ஒரு இளங்காளையைப் பாவப்பரிகார பலியாக தங்கள் முழு நாட்டிற்காகவும் அளிக்க வேண்டும். அதனை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் முன்பு கொண்டு வரவேண்டும். 15 இஸ்ரவேலின் மூப்பர்கள் கர்த்தருக்கு முன்பாக தங்கள் கைகளை அதன் தலையில் வைக்க வேண்டும். பின்னர் அதனை கர்த்தருடைய சந்நிதானத்தில் கொல்ல வேண்டும். 16 பின்னர் அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அக்காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து ஆசரிப்புக் கூடாரத்திற்குள் கொண்டு வர வேண்டும். 17 ஆசாரியன் தனது விரலை இரத்தத்தில் தொட்டு கர்த்தருக்கு முன்னால் உள்ள திரையில் ஏழுமுறை தெளிக்க வேண்டும். 18 பிறகு ஆசாரியன் கொஞ்சம் இரத்தத்தை எடுத்து பலிபீடத்தின் மூலைப்பகுதிகளில் பூச வேண்டும். (இப்பலிபீடம் ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் கர்த்தருக்கு முன்னால் இருக்கும்.) பின்பு ஆசாரியன் அக்காளையின் எல்லா இரத்தத்தையும் தகனபலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். (இது ஆசாரிப்புக் கூடாரத்தின் வாசலில் இருக்கும்.) 19 பின் அக்காளையிடம் உள்ள கொழுப்பு முழுவதையும் எடுத்து பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். 20 பாவப்பரிகாரப் பலியைப் போலவே ஆசாரியன் இதன் பாகங்களையும் செய்து முடிக்க வேண்டும். இதன் மூலம், ஜனங்கள் அனைவரையும் சுத்திகரிக்க முடியும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தேவன் மன்னிப்பார். 21 ஆசாரியன் மற்ற காளையைக் கூடாரத்திற்கு வெளியே கொண்டு சென்று முன்பு செய்தது போலவே இதையும் எரித்துவிடவேண்டும். இது முழு சமுதாயத்திற்கான பாவப்பரிகாரப் பலியாகும்.

22 “ஒரு ஆட்சியாளன் அசம்பாவிதமாக தன் தேவனாகிய கர்த்தர் செய்யவேண்டாம் என்று கூறியவற்றை மீறி செய்யத்தகாததைச் செய்து பாவத்திற்குரியவனாயிருக்கலாம். 23 அந்த ஆட்சியாளன் தனது பாவத்தைத் தெரிந்துகொண்டதும் அவன் எவ்விதக் குறைபாடும் இல்லாத ஆண் வெள்ளாட்டைக் கொண்டு வரவேண்டும். அதுவே அவனது காணிக்கை. 24 ஆட்சியாளன் தன் கையை ஆட்டின் தலைமேல் வைத்து, அதனை கர்த்தருக்கு முன்பு தகன பலியிடக் கூடிய இடத்தில் கொல்ல வேண்டும். அந்த வெள்ளாடுதான் பாவப்பரிகார பலியாகும். 25 ஆசாரியன் கொஞ்சம் இரத்தத்தைத் தன் விரலால் எடுத்து தகனபலிபீடத்தின் மூலைப் பகுதிகளில் பூச வேண்டும். மிச்சமுள்ள இரத்தத்தைத் தகன பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். 26 ஆசாரியன் அந்த ஆட்டின் கொழுப்பு முழுவதையும் பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். சமாதானப் பலியில் செய்தது போன்றே இதிலும் கொழுப்பை எரித்துவிடவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆசாரியன் ஆட்சியாளனைப் பரிசுத்தப்படுத்திவிடலாம். தேவனும் அவனை மன்னித்துவிடுவார்.

27 “பொது ஜனங்களில் ஒருவன் அசம்பாவிதமாக பாவம் செய்துவிடலாம். இப்படி அவன் கர்த்தர் சொன்னதை மீறி செய்யத் தகாததைச் செய்துவிடுகிறான். 28 அவன் தான் செய்தது பாவம் என்பதைத் தெரிந்துகொண்டவுடனே அவன் பழுதற்ற பெண் ஆட்டைக் கொண்டு வர வேண்டும். அதுவே அவனுடைய பாவப்பரிகாரப் பலி ஆகும். அவன் செய்த பாவத்திற்காக அவன் அதைக் கொண்டுவர வேண்டும். 29 அவன் தன் கையை அதன் தலைமீது வைத்து, தகன பலிக்குரிய இடத்தில் அதனைக் கொல்ல வேண்டும். 30 பிறகு ஆசாரியன் தன் விரல்களில் அதன் இரத்தத்தை எடுத்து தகன பலிபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும். பின் அவன் மிச்சமுள்ள இரத்தத்தை பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். 31 சமாதானப் பலியில் செய்தது போன்று ஆட்டின் கொழுப்பு முழுவதையும் பலிபீடத்தில் எரித்துவிட வேண்டும். கர்த்தருக்கு இனிய நறுமணம் தரும்படி ஆசாரியன் அதனைப் பலிபீடத்தில் எரிக்கவேண்டும். இம்முறையில் ஆசாரியன் அம்மனிதனைச் சுத்தப்படுத்தலாம். தேவன் அவனை மன்னித்துவிடுவார்.

32 “அவன் பாவப்பரிகாரப் பலியாக ஒரு ஆட்டுக் குட்டியைக் கொண்டு வருவானாகில், அது பழுதற்ற பெண் குட்டியாக இருக்க வேண்டும். 33 அதன் தலைமீது தன் கையை வைத்து, தகனபலிகளை வழங்கும் இடத்தில் அதனை பாவப்பரிகாரப் பலியாகக் கொல்ல வேண்டும். 34 ஆசாரியன் அதன் இரத்தத்தைத் தன் விரலில் எடுத்து தகன பலிபீடத்தின் மூலைகளில் தடவ வேண்டும். பின் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். 35 சமாதானப் பலிகளில் செய்தது போலவே ஆட்டின் கொழுப்பை தகனபலிபீடத்தின் மேல் வைத்து எரிக்க வேண்டும். மற்ற பலி முறைகளில் செய்தது போலவே பலிபீடத்தில் வைத்ததை எரிக்க வேண்டும். இவ்வாறு ஆசாரியன் அவன் செய்த பாவத்திலிருந்து சுத்தப்படுத்தலாம். தேவனும் அவனை மன்னித்துவிடுவார்.

அசம்பாவிதமான பல்வேறு பாவங்கள்

“ஒருவன் ஒரு எச்சரிக்கையைக் கேட்டாலோ அல்லது பிறரை எச்சரிக்க வேண்டியவைகளைப் பார்த்தாலோ கேட்டாலோ அதை மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும். தான் கண்டதையும் கேட்டதையும் மற்றவர்களுக்குச் சொல்லாவிட்டால், பிறகு அவன் தவறு செய்வதற்கான குற்ற உணர்வைப் பெறுவான்.

“ஒருவன் தூய்மையற்ற ஒன்றைத் தொட்டிருக்கலாம். அது காட்டுமிருகத்தின் இறந்து போன உடலாகக் கூட இருக்கலாம். அல்லது அது தரையில் ஊர்ந்து போகும் அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலாக இருக்கலாம். அவற்றைத் தொட்டதற்கான உணர்வு அவனிடம் இல்லாமல் இருக்கலாம். எனினும் அதனால் அவன் தீட்டுக்குரியவனாய் இருக்கிறான்.

“ஒருவன் பல காரணங்களால் அசுத்தமானவற்றைத் தொட்டதற்கான தீட்டைப் பெற்றிருக்கலாம். ஒரு மனிதன் மனிதத் தீட்டுக்களில் ஏதாகிலும் ஒன்றை அவனை அறியாமல் மற்ற மனிதனிடமிருந்து தொட்டிருக்கலாம். அவன் அதனை அறிய வரும்போது, அவன் குற்றமுடையவனாகிறான்.

“ஒருவன் அவசரமாக ஏதோ ஒரு காரணத்திற்காக வாக்குறுதி கொடுக்கிறான். அது நன்மைக்குரியதாகவோ தீமைக்குரியதாகவோ இருக்கலாம். ஜனங்கள் பலவிதமான அவசர வாக்குறுதிகள் வழங்குகின்றனர். ஒருவன் இவ்வாறு செய்து மறந்தும் போகலாம், அதைக் காப்பாற்றாமலும் போகலாம். பிற்காலத்தில் தான் கொடுத்த வாக்குறுதிகளை நினைத்துப்பார்க்கும்போது குற்றவாளியாகிறான். ஏனெனில் அவ்வாக்குறுதிகளின்படி அவன் செய்யவில்லை. ஒருவன் இப்படிப்பட்ட ஏதாவது ஒன்றில் குற்றம் உள்ளவனாகும்போது அவன் தான் செய்தது பாவம் என்று ஒத்துக்கொள்ள வேண்டும். அவன் தான் செய்த பாவத்துக்குக் குற்ற நிவாரண பலியிடவேண்டும். அதற்காக அவன் பெண் ஆட்டினை அல்லது பெண் வெள்ளாட்டுக் குட்டியை கர்த்தருக்காகப் பாவநிவாரண பலியாகக் கொண்டு வரவேண்டும். பிறகு ஆசாரியன் அவனை பரிசுத்தமாக்குவதற்கான சடங்குகளைச் செய்து அவனது பாவத்தைப் போக்கி சுத்தமாக்குவான்.

“ஒருவேளை அவனால் ஆட்டுக் குட்டியைக் கொண்டுவர வசதியில்லாமல் போனால், அவன் கர்த்தருக்கு இரண்டு காட்டுப் புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவரவேண்டும். இவை அவன் பாவத்திற்கான குற்றநிவாரண பலியாகும். அவற்றில் ஒன்றை பாவப்பரிகார பலியாகவும் மற்றொன்றை தகன பலியாகவும் படைக்க வேண்டும். அவன் அவற்றை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். ஆசாரியன் பாவப்பரிகார பலிக்கானதை முதலில் செலுத்துவான். அதன் தலையைக் கழுத்திலிருந்து கிள்ளுவான். அவன் அப்புறாவை இரண்டு துண்டாக்கக் கூடாது. பாவப் பரிகாரப் பலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து பலிபீடத்தின் பக்கத்திலே தெளித்து, மீதி இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிடுவான். இதுவே பாவப்பரிகார பலி ஆகும். 10 பின்பு இரண்டாவது புறாவை தகன பலிக்குரிய விதிகளின்படி காணிக்கையாகச் செலுத்த வேண்டும். இதன் மூலம் ஆசாரியன் அந்த மனிதன் செய்த பாவத்திலிருந்து அவனை விடுவித்து சுத்தப்படுத்துகிறான். தேவனும் அவனை மன்னித்துவிடுவார்.

11 “இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரண்டு புறாக்குஞ்சுகளையோ அவனால் கொண்டுவர வசதியில்லாமல் போனால் அவன் 8 கிண்ணங்கள் அளவு மிருதுவான மாவை எடுத்து வரவேண்டும். இதுவே பாவப்பரிகாரப் பலியாக இருப்பதால் அந்த மாவின் மேல் எண்ணெய் எதையும் ஊற்றவோ, அதன்மேல் எவ்விதமான சாம்பிராணியையும் போடவோ கூடாது. 12 அவன் அந்த மாவை ஆசாரியனிடத்தில் கொண்டு வரவேண்டும். அதில் ஆசாரியன் ஒரு கைப் பிடியளவு எடுக்கவேண்டும். அது ஞாபகப் பலியாக இருக்கும். மாவை ஆசாரியன் பலிபீடத்தின் மேல் எரித்துவிடுவான். இது நெருப்பினால் கர்த்தருக்கென்று கொடுக்கும் காணிக்கையாகும். இது பாவப்பரிகாரப் பலியாகும். 13 இவ்வாறு ஆசாரியன் அம்மனிதனை சுத்தபடுத்துவான். அப்போது தேவன் அவனுக்கு மன்னிப்பார். மீதி மாவானது தானியக் காணிக்கையைப் போல ஆசாரியனுக்குச் சேரும்” என்றார்.

14 மேலும் கர்த்தர் மோசேயிடம், 15 “கர்த்தருக்குரிய பரிசுத்தமானவற்றில் ஒருவன் அசம்பாவிதமாக தவறு செய்துவிட்டால் அவன் ஒரு குறையற்ற ஆட்டுக்குட்டியைக் கொண்டு வரவேண்டும். அது கர்த்தருக்கு அவன் கொடுக்கும் குற்ற நிவாரண பலியாகும். அதிகாரப் பூர்வமான அளவைப் பயன்படுத்தி ஆட்டின் விலையை நிர்ணயிக்க வேண்டும். 16 அந்த மனிதன் தான் செய்த பாவத்திற்குரிய விலையைச் செலுத்த வேண்டும். வாக்குறுதியளித்த தொகையோடு, அதன் மதிப்பில் ஐந்தில் ஒரு பகுதியையும் கூட்டி, மொத்தப் பணத்தை ஆசாரியன் கையில் கொடுக்க வேண்டும். இம்முறையில் குற்ற நிவாரண பலியின் மூலம் அம்மனிதனை ஆசாரியன் சுத்தமாக்குகிறான். தேவனும் அம்மனிதனை மன்னிப்பார்.

17 “செய்யக்கூடாது என்று கர்த்தர் சொன்னவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்தால் ஒருவன் பாவியாகிறான். அவன் அறியாமல் செய்தாலும் அது பாவமே. அவன் குற்றவாளியாகிறான். அவன் தன் பாவத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். 18 அவன் ஆசாரியனிடம் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வரவேண்டும். எவ்வித குறைகளும் இல்லாததாக அந்த ஆடு இருக்கவேண்டும். அந்த ஆட்டுக்குட்டி குற்ற நிவாரண பலி ஆகும். இந்த முறையில் ஆசாரியன் அவன் அறியாமல் செய்த பாவத்திலிருந்து அவனை சுத்தமாக்குவான், தேவனும் அவனை மன்னித்துவிடுவார். 19 ஒருவன் பாவம் செய்யும்போது அறியாமல் செய்தாலும் அவன் குற்றவாளிதான். எனவே அவன் கர்த்தருக்கு குற்ற நிவாரணப் பலியைச் செலுத்தியே ஆக வேண்டும்” என்று கூறினார்.

மத்தேயு 24:29-51

29 ,“அந்த நாட்களின் துன்பம் தீர்ந்தவுடன் கீழ்க்கண்டது நடக்கும்:

, “‘சூரியன் இருளாக மாறும்,
    சந்திரன் ஒளியைக் கொடுக்காது.
வானிலிருந்து நட்சத்திரங்கள் உதிரும்,
    வானில் அனைத்தும் மாறும்.’ (A)

30 ,“அப்பொழுது மனித குமாரனின் வருகையை அறிவிக்கும் அடையாளம் வானில் தெரியும். உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் கதறுவார்கள், வானத்து மேகங்களின் மீது மனித குமாரன் வருவதைக் காண்பார்கள். மகத்தான வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடனும் மனிதகுமாரன் வருவார். 31 அவர், ஒரு எக்காளத்தைச் சத்தமாய் ஊதி அதன் மூலம் தம் தூதர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்புவார். உலகின் எல்லா பகுதியிலிருந்தும் தேவதூதர்கள் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பார்கள்.

32 ,“அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைப் போதிக்கிறது. அத்தி மரத்தின் கிளைகள் பசுமையடைந்து இலைகள் துளிர்விட்டு வளரும்பொழுது கோடை காலம் அருகில் உள்ளது என அறிகிறீர்கள்.

33 ,“அதே போலத்தான் நான் நடக்கப் போவதாகக் கூறிய செயல்களைப் பொறுத்தவரையிலும், அவை நடக்கும்பொழுது காலம் நெருங்கிவிட்டதை அறியலாம். 34 நான் உண்மையைச் சொல்கிறேன், இன்றைய மனிதர்கள் வாழும் காலத்திலேயே அவை அனைத்தும் நடக்கும். 35 உலகம் முழுவதும் வானமும் பூமியும் உள்ளாக அழியும். ஆனால் எனது வார்த்தைகள் அழியாது.

இயேசு வரும் வேளை(B)

36 ,“அந்த நேரம் அல்லது நாள் எப்பொழுது வரும் என்பது யாருக்கும் தெரியாது. பரலோகத்திலிருக்கும் தேவ குமாரனும் தேவதூதர்களும் கூட அதை அறியமாட்டார்கள். பிதாவானவர் மட்டுமே அறிவார்.

37 ,“நோவாவின் காலத்தில் நடந்ததைப் போலவே, மனித குமாரன் வரும்போதும் நடக்கும். 38 நோவாவின் காலத்தில் வெள்ளம் வருமுன்னர், மக்கள் குடித்துக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டுமிருந்தார்கள். மக்கள் தம் பிள்ளைகளின் திருமணங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள். நோவா கப்பலில் ஏறுகிறவரைக்கும் மக்கள் அவற்றைச் செய்து கொண்டிருந்தார்கள். 39 நடந்துகொண்டிருந்ததை அம்மக்களில் யாரும் அறிந்திருக்கவில்லை. பின்னர், வெள்ளம் வந்து அவர்கள் அனைவரையும் அழித்துப்போட்டது.

, “அதைப் போலவே மனிதகுமாரன் வரும்பொழுதும் நடக்கும். 40 இரண்டு ஆண்கள் வயலில் வேலை செய்துகொண்டிருக்க ஒருவன் விடப்பட்டு மற்றவன் எடுத்துச்செல்லப்படுவான். 41 எந்திரத்தில் மாவு அரைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் இருவரில், ஒருத்தி விடப்பட்டு மற்றவள் கொண்டுசெல்லப்படுவாள்.

42 ,“ஆகவே, எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள். உங்கள் கர்த்தர் வருகிற நேரம் உங்களுக்குத் தெரியாது. 43 இதை, ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், திருடன் வரும் நேரத்தை வீட்டுக்காரன் அறிந்திருந்தால், திருடனுக்காக வீட்டுக்காரன் காத்திருப்பான். மேலும் திருடன் வீட்டில் நுழையாதபடி எச்சரிக்கையுடன் இருப்பான். இதை நினைவில் கொள்ளுங்கள். 44 எனவே, நீங்களும் ஆயத்தமாக இருக்கவேண்டும். நீங்கள் எதிர்பார்க்காதபொழுது மனித குமாரன் வருவார்.

நல்ல வேலைக்காரரும் தீய வேலைக்காரரும்(C)

45 ,“புத்தியுள்ள நம்பிக்கைக்குரிய வேலையாள் யார்? தன் மற்ற வேலைக்காரர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும் வேலைக்காரனை எஜமானன் நம்புகிறான். எஜமானனின் நம்பிக்கைக்குரிய அவ்வேலைக்காரன் யார்? 46 அவ்வேலைக்காரன் எஜமானன் வரும் நேரத்தில் தன் வேலையை சரியாகச் செய்கிறதைக் கண்டால் அவ்வேலைக்காரன் மகிழ்ச்சியடைகிறான். 47 நான் உண்மையைச் சொல்கிறேன். தனக்குரிய எல்லாவற்றையும் மேற்பார்வை செய்யும் பொறுப்பையும் அந்த வேலைக்காரன் வசம் ஒப்படைப்பான்.

48 ,“ஆனால், அவ்வேலைக்காரன் தீய எண்ணம் கொண்டு, தன் எஜமானன் விரைவில் வரமாட்டான் என எண்ணினால் என்ன ஆகும்? 49 உடன் வேலைக்காரர்களையெல்லாம் அடித்து உதைத்து எல்லா உணவையும் உண்டுவிட்டு தன்னைப் போன்றவர்களுடன் உண்டு குடிக்க முனைவான். 50 அவன் எதிர்ப்பாராத நேரத்தில் எஜமானன் வருவான். 51 பின்னர் அவ்வேலைக்காரனைத் தண்டிப்பான். மாயமானவர்களின் இடத்திற்கு அவனை அனுப்பி வைப்பான். அங்கே உள்ளவர்கள் கூக்குரலிட்டுக் கொண்டு வேதனையினால் பற்களைக் கடித்துக் கொண்டிருப்பார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center