Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 36-38

36 “எனவே பெசலேயேல், அகோலியாப், மற்றும் திறமைவாய்ந்த கலைவல்லுநர்கள் அனைவரும் சேர்ந்து கர்த்தர் கட்டளையிட்ட வேலைகளைச் செய்ய வேண்டும். அவர்கள் இந்த பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கான கைதேர்ந்த வேலையை செய்யத் தேவையான ஞானத்தையும், அறிவையும் கர்த்தர் அந்த மனிதருக்குக் கொடுத்திருக்கிறார்” என்றான்.

பின் மோசே பெசலெயேலையும், அகோலியாபையும் கர்த்தரால் திறமை வழங்கப்பட்ட பிற கலைவல்லுநர்களையும் அழைத்தான். வேலையில் உதவ விரும்பியதால் அவர்களும் ஒன்றாகக் கூடினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் காணிக்கையாகக் கொண்டு வந்த எல்லாப் பொருட்களையும் மோசே இந்த ஜனங்களுக்குக் கொடுத்தான். தேவனின் பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கு அவர்கள் அந்தப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள். காலைதோறும் ஜனங்கள் தங்கள் விருப்பதின்படி காணிக்கைகளை கொண்டு வந்தனர். பின்னர் கலை வல்லுநர்கள் பரிசுத்த இடத்தில் தாங்கள் செய்யும் வேலையை விட்டு மோசேயிடம் பேசுவதற்குச் சென்றார்கள். அவர்கள், “ஜனங்கள் மிகுதியாகப் பொருட்களைக் கொண்டு வந்துள்ளனர்! கூடார வேலையை முடிப்பதற்குத் தேவையான பொருளைக் காட்டிலும் அதிகமான பொருள்கள் உள்ளன!” என்றார்கள்.

மோசே இந்தச் செய்தியை பாளையத்தைச் சுற்றிலும் அறிவித்து: “பரிசுத்த இடத்தின் வேலைக்கு இனிமேல் எவரும் எதையும் காணிக்கையாக தரவேண்டாம்” என்றான். இவ்வாறு ஜனங்கள் அளவுக்கதிகமாகக் கொடுப்பதைக் கட்டாயமாக நிறுத்த வேண்டியதாயிற்று. தேவனின் பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கு ஜனங்கள் தேவைக்கு அதிகமான பொருட்களைக் கொண்டு வந்திருந்தார்கள்.

பரிசுத்தக் கூடாரம்

பரிசுத்தக் கூடாரத்தை திறமையுள்ளவர்கள் அமைக்கத் தொடங்கினார்கள். மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூல்களாலும் அவர்கள் பத்துத் திரைகளை உண்டாக்கினார்கள். திரைகளில் சிறகுகளுள்ள கேரூப் தூதர்களின் சித்திரங்களைத் தைத்தனர். ஒவ்வொரு திரையும் 28 முழ நீளமும் 4 முழ அகலமுமாக ஒரே அளவுடையதாய் அமைந்தன. 10 பணி செய்வோர் இரண்டு வெவ்வேறு திரைகளாக அத்திரைகளை இணைத்தனர். ஐந்து திரைகளை ஒரே திரையாகவும், மற்றும் ஐந்து திரைகளை இன்னொரு திரையாகவும் இணைத்தனர். 11 ஒரு திரையின் கடைசிப் பகுதியில் நீலத்துணியால் துளைகளைச் செய்தனர். மற்றொரு திரையின் கடைசிப் பகுதியிலும் அவ்வாறே செய்தனர். 12 ஒரு திரையின் இறுதிப் பகுதியில் 50 கண்ணிகளும் மற்றொரு திரையின் இறுதிப் பகுதியில் 50 கண்ணிகளும் இருந்தன. அவ்வளையங்கள் எதிரெதிராக அமைந்தன. 13 பின் அவர்கள் அத்திரைகளை இணைப்பதற்கு 50 பொன் வளையங்களைச் செய்தனர். எனவே பரிசுத்தக் கூடாரம் ஒரே துண்டாக இணைக்கப்பட்டது.

14 பரிசுத்தக் கூடாரத்தை மூடி மறைத்து நிற்குமாறு அந்தத் திறமைச்சாலிகள் மற்றொரு கூடாரத்தை அமைத்தனர். வெள்ளாட்டின் மயிரால் பதினொரு திரைகளைச் செய்தனர். 15 எல்லாத் திரைகளும் 30 முழ நீளமும் 4 முழ அகலமும் கொண்ட ஓரே அளவுடையனவாய் இருந்தன. 16 பணியாட்கள் ஐந்து திரைகளை ஒன்றாகவும், பிற ஆறு திரைகளை ஒன்றாகவும் இணைத்தனர். 17 ஒரு திரையின் இறுதியில் 50 துளைகளை அமைத்தனர். மறறொரு திரையில் இறுதியிலும் அவ்வாறே செய்தனர். 18 பணியாட்கள் 50 வெண்கல வளையங்களை இரு திரைகளையும் சேர்த்து ஒரே கூடாரமாக இணைப்பதற்காகச் செய்தனர். 19 பரிசுத்தக் கூடாரத்திற்கு அவர்கள் மேலும் இரண்டு மூடுதிரைகளை செய்தனர். ஒரு மூடுதிரை சிவப்புத் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடாவின் தோலாலானது. மற்றொரு மூடுதிரை மெல்லிய தோலினாலானது.

20 பிறகு அந்த வல்லுநர்கள் பரிசுத்த கூடாரத்தைத் தாங்குவதற்காக சீத்தீம் மரத்தினால் சட்டங்களை அமைத்தனர். 21 ஒவ்வொரு சட்டமும் 10 முழ நீளமும் 1 1/2 முழ அகலமும் உடையதாய் இருந்தது. 22 இரண்டு பக்கத்திலும் தூண்கள் குறுக்குத் துண்டுகளால் இணைக்கப்பட்டு ஒவ்வொரு சட்டமும் அமைக்கப்பட்டது. பரிசுத்தக் கூடாரத்தின் ஒவ்வொரு சட்டமும் அவ்வாறு அமைந்தது. 23 பரிசுத்தக் கூட்டத்தின் தெற்குப் புறத்திற்கு 20 சட்டங்களைச் செய்தனர். 24 பின் அந்தச் சட்டங்களுக்கு 40 வெள்ளி பீடங்களைச் செய்தனர். ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு பீடங்கள் இருந்தன. 25 அவர்கள் மறுபக்கமாகிய (வடபுறத்திற்கு) 20 சட்டங்களைச் செய்தார்கள். 26 ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு பீடங்களாக 20 சட்டங்களுக்கு 40 வெள்ளி பீடங்களைச் செய்தனர். 27 பரிசுத்த கூடாரத்தின் பின் பகுதியாகிய மேற்கு புறத்திற்கு 6 சட்டங்கள் செய்தனர். 28 மேலும் பரிசுத்த கூடாரத்தின் பின் மூலைகளுக்கென்று 2 சட்டங்கள் செய்தனர். 29 இந்தச் சட்டங்கள் அடிப் புறத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டன. மேலே இந்த மூலை சட்டங்களை ஒரு வளையம் தாங்கிக்கொண்டிருந்தது. இரண்டு மூலைகளுக்கும் அவர்கள் அவ்வாறே செய்தனர். 30 பரிசுத்தக் கூடாரத்தின் மேற்குப் புறத்தில் மொத்தம் எட்டுச் சட்டங்கள் இருந்தன. ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு பீடங்கள் வீதம் 16 வெள்ளியாலாகிய பீடங்கள் அமைந்தன.

31 பரிசுத்தக் கூடாரத்தின் முதல் பக்கத்திற்கு சீத்திம் மரத்தாலான ஐந்து தாழ்ப்பாள்களைப் பணியாட்கள் செய்தனர். 32 மறுபக்கத்திற்கு ஐந்து தாழ்ப்பாள்களும், பரிசுத்தக் கூடாரத்தின் பின்புறத்திற்கு (மேற்கு) ஐந்து தாழ்ப்பாள்களும் அமைத்தனர். 33 சட்டத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்லும்படியாக மத்தியிலுள்ள தாழ்ப்பாளைச் செய்தனர். 34 தாழ்ப்பாள்களைத் தாங்கிக்கொள்வதற்குப் பொன்னால் வளையங்களைச் செய்தனர். தாழ்ப்பாள்களில் பொன் முலாம் பூசினர்.

35 மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூல்களையும் மகாபரிசுத்த கூடாரத்தின் நுழைவாயிலுக்கான திரையைச் செய்வதற்குப் பயன்படுத்தினர். திரையில் கேருபீன்களின் சித்திரங்களைத் தைத்தனர். 36 சீத்திம் மரத்தால் நான்கு தூண்களைச் செய்து அவற்றிற்குப் பொன் முலாம் பூசினர். அவற்றிற்குப் பொன் கொக்கிகளைச் செய்தனர். அவற்றிற்கு நான்கு வெள்ளி பீடங்களைச் செய்து வைத்தனர். 37 கூடாரத்தின் வாயிலை மூடுவதற்குத் திரைகள் அமைத்தனர். அவர்கள் இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நிற நூலையும், மெல்லிய துகிலையும் இத்திரையைச் செய்வதற்கு உபயோகப்படுத்தினர். அத்திரையில் சித்திரங்களை நெய்தனர். 38 பின் அவர்கள் நுழைவாயிலின் திரைக்காக ஐந்து தூண்களையும் அதன் கொக்கிகளையும் அமைத்தனர். அவர்கள் தூண்களின் மேற் பகுதிகளையும் திரைத்தண்டுகளையும் பொன் தகட்டால் மூடினார்கள். அத்தூண்களுக்கு ஐந்து வெண்கல பீடங்களைச் செய்தனர்.

உடன்படிக்கைப் பெட்டி

37 சீத்திம் மரத்தினால் பெசலெயேல் பரிசுத்தப் பெட்டியைச் செய்தான். அந்தப் பெட்டி 2 1/2 முழ நீளமும் 1 1/2 முழ அகலமும் 1 1/2 முழு உயரமும் கொண்டவையாக இருந்தன. அவன் பெட்டியின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் பசும் பொன் தகட்டால் மூடினான். பெட்டியைச் சுற்றிலும் பொன் சட்டங்களைச் செய்தான். அவன் நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை நான்கு மூலைகளிலும் இணைத்தான். அவ்வளையங்கள் பெட்டியைச் சுமப்பதற்கென்று பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பக்கத்திற்கும் இரண்டு வளையங்கள் இருந்தன. பின் அவன் பெட்டியைச் சுமப்பதற்குத் தேவையான தண்டுகளைச் செய்தான். அவன் சீத்திம் மரத்தால் அத்தண்டுகளைச் செய்து அவற்றைப் பசும் பொன்னால் மூடினான். பெட்டியின் இருபுறங்களிலுமுள்ள வளையங்களினுள்ளே தண்டுகளைச் செலுத்தினான். பின் கிருபாசனத்தை பசும் பொன்னால் செய்தான். அது 2 1/2 முழ நீளமும் 1 1/2 முழ அகலமும் உடையதாக இருந்தது. இரண்டு கேருபீன்களைச் செய்வதற்கு பெசலெயேல் பொன்னைச் சுத்தியால் அடித்து உருவமைத்தான். இந்தக் கேருபீன்களை கிருபாசனத்தின் இரண்டு ஓரத்திலும் வைத்தான். ஒரு கேருபீனை கிருபாசனத்தின் ஒரு ஓரத்திலும், மற்றொரு கேருபீனை எதிர் ஓரத்திலும் வைத்தான். மூடியோடு இரண்டு கேருபீன்களையும் எதிரெதிரே ஒன்றாக இணைத்தான். கேருபீன்களின் சிறகுகள் வானத்தை நோக்கி உயர்த்தப்பட்டிருந்தன. கேருபீன்கள் தங்கள் சிறகுகளால் பெட்டியை மூடியிருந்தன. கிருபாசனத்தின் மேல் குனிந்த நிலையில் தூதர்கள் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

விசேஷ மேசை

10 பின் அவன் சீத்திம் மரப் பலகையிலான மேசையைச் செய்தான். அம்மேசை 2 முழ நீளமும் 1 முழ அகலமும் 1 முழ உயரமும் உள்ளதாக இருந்தது. 11 அவன் மேசையை பசும் பொன்னினால் மூடினான். மேசையைச் சுற்றிலும் பொன் சட்டங்களை இணைத்தான். 12 பின் அவன் 3 அங்குல அகலமுள்ள ஒரு சட்டத்தை மேசையைச் சுற்றிலும் இணைத்தான். அவன் சட்டத்தின் மேல் பொன் தகட்டை வைத்தான். 13 பின் அவன் நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை மேசையின் நான்கு கால்களுமுள்ள நான்கு மூலைகளிலும் வைத்தான். 14 மேசையின் மேற்பகுதியைச் சுற்றிலும் உள்ள சட்டத்தினருகே அவன் அந்த வளையங்களை இணைத்தான். மேசையைச் சுமக்கும் தண்டுகளைத் தாங்குவதற்கு அவ்வளையங்கள் பயன்பட்டன. 15 பின் அவன் சீத்திம் மரப்பலகையால் செய்யப்பட்ட மேசையைச் சுமக்கும் தண்டுகளைச் செய்தான். தண்டுகளைச் சுத்த பொன்னால் மூடினான். 16 பின் அவன் மேசையில் பயன்படுத்தப்படுவதற்குரிய எல்லாப் பொருட்களையும் செய்தான். தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், கிண்ணங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றையும் அவன் பொன்னால் செய்தான். பானங்களின் காணிக்கைகளை ஊற்றுவதற்குக் கிண்ணங்களும் பாத்திரங்களும் பயன்பட்டன.

குத்துவிளக்குத் தண்டு

17 பிறகு அவன் குத்துவிளக்கைச் செய்தான். அவன் பசும் பொன்னை அடித்து அதன் பீடத்தையும், தண்டையும் செய்தான். பின் அவன் பூக்கள், மொட்டுகள், இதழ்கள் ஆகியவற்றைச் செய்து எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்தான். 18 குத்துவிளக்குக்கு ஆறு கிளைகள் இருந்தன. மூன்று கிளைகள் ஒரு புறத்திலும் மூன்று கிளைகள் எதிர் புறத்திலும் இருந்தன. 19 ஒவ்வொரு கிளையிலும் மூன்று பூக்கள் இருந்தன. அப்பூக்கள் மொட்டுகளோடும், இதழ்களோடும் பூத்த வாதுமைப் பூக்களைப் போல செய்யப்பட்டன. 20 குத்துவிளக்கின் தண்டில், மேலும் நான்கு பூக்கள் இருந்தன. அவையும் மொட்டுகளோடும் இதழ்களோடும் பூத்த வாதுமைப் பூக்களைப் போல செய்யப்பட்டன. 21 தண்டின் இருபுறங்களிலுமிருந்து மூன்று கிளைகள் வீதம் ஆறு கிளைகள் இருந்தன. கிளைகள் தண்டோடு இணைந்த மூன்று இடங்களுக்கும் கீழே மொட்டுகளோடும் இதழ்களோடும் கூடிய ஒவ்வொரு பூ இருந்தது. 22 பூக்களும் கிளைகளும் கொண்ட வேலைப்பாடுகள் உடைய அந்தக் குத்துவிளக்கு முழுவதும் பொன்னால் ஆனதாக இருந்தது. இந்தப் பொன் சுத்தியால் அடிக்கப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது. 23 இந்தக் குத்துவிளக்கிற்கு ஏழு அகல்களை அவன் செய்தான். பின் அவன் திரி கத்தரிக்கும் கருவிகளையும், சாம்பல் கிண்ணங்களையும் பொன்னால் செய்தான். 24 குத்து விளக்கையும் அதற்குத் தேவையான பொருட்களையும் செய்வதற்கு அவன் 75 பவுண்டு எடையுள்ள சுத்தமான பொன்னைப் பயன்படுத்தினான்.

நறுமணப் பொருள்களை எரிப்பதற்கான பீடம்

25 நறுமணப் பொருள்களை எரிக்கும்படியான பீடத்தையும் அவன் செய்தான். சீத்திம் மரத்தால் இதைச் செய்தான். பீடம் சதுரவடிவமானது. அது 1 முழ நீளமும் 1 முழ அகலமும் 2 முழ உயரமுமாக இருந்தது. நறுமணப் பீடத்தில் நான்கு கொம்புகள் ஒவ்வொரு மூலையிலும் ஒன்வொன்றாக இருந்தன. இவை நறுமணப் பீடத்தோடு ஒன்றாக அடிக்கப்பட்டன. 26 நறுமணப் பீடத்தின் மேல்புறம், பக்கங்கள், கொம்புகள் ஆகியவற்றை அவன் பசும்பொன்னால் மூடினான். பின்பு அவன் நறுமணப் பீடத்தைச் சுற்றிலும் பொன் சட்டத்தை இணைத்தான். 27 நறுமணப் பீடத்திற்கு இரண்டு பொன் வளையங்கள் செய்தான். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் பொன் தகட்டிற்கு அடியில் சேரும்படி பொன் வளையங்களைப் பொருத்தினான். நறுமணப் பீடத்தைத் தூக்கிச் செல்லும்போது, தண்டைக் கோர்க்கும்படி இந்தத் தங்க வளையங்கள் இருந்தன. 28 அவன் சீத்திம் மரத்தினாலான தண்டுகளைச் செய்து அவற்றையும் பொன்னால் மூடினான்.

29 பிறகு அவன் பரிசுத்த அபிஷேக எண்ணெயைத் தயாரித்தான். அவன் சுத்தமான நறுமணப் பொருளையும் தயாரித்தான். நறுமணத் திரவியங்களைத் தயாரிக்கும் முறையிலேயே இப்பொருட்கள் அனைத்தையும் அவன் செய்தான்.

பலிகளை எரிக்கும் பீடம்

38 பலிபீடத்தை பெசலெயேல் சீத்திம் மரத்தால் செய்தான். இப்பலிபீடம் பலிகளை எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. அது சதுரவடிவமானது. அது 5 முழ நீளமும் 5 முழ அகலமும் 3 முழ உயரமும் உடையது. அவன் பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு கொம்பைச் செய்து வைத்தான். அவற்றைப் பலிபீடத்தோடு இணைத்து ஒன்றாக அடித்தான். பின்பு பலிபீடத்தை வெண்கலத்தால் மூடினான். பலிபீடத்தில் பயன்படுத்தப்படும் எல்லா கருவிகளையும் வெண்கலத்தால் செய்தான். பானைகள், கரண்டிகள், கிண்ணங்கள், முள்கரண்டிகள், பெரிய கொப்பரைகளையும் செய்தான். பின்னர் பலிபீடத்திற்காக வெண்கலத்தாலான வலைப் பின்னல் போன்ற ஒரு சல்லடையை உண்டாக்கினான். பலிபீடத்தின் அடித்தட்டில் அந்தச் சல்லடையைப் பொருத்தினான். அது பலிபீடத்தின் நடுப்பகுதியில் (பாதி உயரத்தில்) பொருந்தியது. பின் அவன் பித்தளை வளையங்களை செய்தான். பலிபீடத்தைச் சுமக்கும் தண்டுகளைத் தாங்குவதற்கு இவ்வளையங்கள் பயன்பட்டன. சல்லடையின் நான்கு மூலைகளிலும் அவன் அந்த வளையங்களை வைத்தான். பின் அவன் சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து அவற்றை வெண்கலத்தால் மூடினான். பலிபீடத்தின் பக்கங்களிலுள்ள வளையங்களில் தண்டுகளைச் செலுத்தினான். தண்டுகள் பலிபீடத்தைச் சுமப்பதற்குப் பயன்பட்டன. பலிபீடத்தின் நான்கு பக்கங்களையும் சீத்திம் பலகைகளினால் செய்தான். அது வெறுமையான பெட்டியைப் போன்று உள்ளே ஒன்றுமில்லாதிருந்தது.

அவன் வெண்கலத்தாலான தொட்டிகளையும், அதன் பீடங்களையும் செய்தான். பெண்கள் கொடுத்த வெண்கல முகக் கண்ணாடிகளை அதற்குப் பயன்படுத்தினான். இந்தப் பெண்களே ஆசரிப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் திருப்பணியாற்றி வந்தனர்.

பரிசுத்த கூடாரத்தைச் சுற்றியுள்ள பிரகாரம்

பின்னர் முற்றத்தைச் சுற்றி திரைச் சீலைகள் எழுப்பினான். 100 முழ நீளமுள்ள தொங்குதிரையை தெற்குப் பக்கத்தில் எழுப்பினான். மெல்லிய துகிலால் அத்திரைகள் அமைந்தன. 10 தெற்குப் பக்கத்துத் திரைகளை 20 தூண்கள் தாங்கின. அவற்றிற்கு 20 வெண்கல பீடங்கள் அமைந்தன. தூண்களுக்கான கொக்கிகளையும் திரைச் சீலைத் தண்டுகளையும் வெள்ளியால் செய்தான். 11 பிரகாரத்தின் வடக்குப்புறத்தில் 100 முழ நீளமான திரைச் சுவர் அமைந்தது. 20 வெண்கலப் பீடங்கள் உள்ள 20 தூண்கள் இருந்தன. தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப்பட்டன.

12 வெளிப்பிரகாரத்தின் மேற்குப் பக்கத்தில் 50 முழ நீளமான தொங்குதிரையை அமைத்தான். அந்த 10 தூண்களுக்கும், 10 பீடங்கள் இருந்தன. தூண்களின் கொக்கிகளையும் திரைப் பூண்களையும் வெள்ளியால் அமைத்தான்.

13 வெளிப் பிரகாரத்தின் கிழக்குப்புறத்திலிருந்து தொங்குதிரை 50 முழ அகலம்Ԕஉடையதாக இருந்தது. பிரகாரத்தின் நுழைவாயில் இப்பக்கத்தில் இருந்தது. 14 நுழைவாயிலின் ஒரு பக்கத்தில் தொங்கு திரை 15 முழ நீள முடையதாகவும் மூன்று பீடங்களின்மேல் நின்ற மூன்று தூண்களைக் கொண்டதாகவும் இருந்தது. 15 நுழை வாயிலின் மறுபுறத்திலுள்ள தொங்கு திரைகள் 15 முழ நீளமுடையதாக இருந்தது. அந்தப் பக்கத்தில் மூன்று தூண்களும் அவற்றிக்கு மூன்று பீடங்களும் அமைத்தனர். 16 பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்த தொங்கு திரைகள் மெல்லிய துகிலால் செய்யப்பட்டன. 17 தூண்களின் பீடங்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. கொக்கிகளும், திரைப்பூண்களும், வெள்ளியால் செய்யப்பட்டன. தூண்களின் மேற்பகுதிகளும் வெள்ளியால் மூடப்பட்டன. பிரகாரத்தின் தூண்களில் வெள்ளியாலான திரைப்பூண்கள் இருந்தன.

18 பிரகார நுழைவாயிலின் தொங்குதிரைகள் மெல்லிய துகிலாலும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூல்களாலும் நெய்யப்பட்டன. அவற்றில் பல சித்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன. திரையானது 20 முழ நீளமும் 5 முழ உயரமும் உடையதாக இருந்தது. அவை பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்த தொங்கு திரைகளின் உயரம் கொண்டிருந்தன. 19 தொங்குதிரையை நான்கு தூண்களும், வெண்கல பீடங்களும் தாங்கின. தூண்களின் கொக்கிகள் வெள்ளியால் ஆனவை ஆகும். தூண்களின் மேற்பகுதிகளும் வெள்ளியால் மூடப்பட்டன. திரைப் பூண்களும் வெள்ளியாலாயின. 20 பரிசுத்தக் கூடாரத்திற்கும், வெளிப்பிரகாரத்தின் திரைகளுக்கும் தேவையான கூடார ஆணிகள் வெண்கலத்தால் செய்யப்பட்டன.

21 உடன்படிக்கையின் கூடாரமாகிய பரிசுத்த கூடாரத்திற்குத் தேவைப்பட்ட பொருட்களை எல்லாம் லேவி குடும்பத்தார் எழுதி வைத்துக்கொள்ளும்படியாக மோசே கட்டளையிட்டான். பட்டியலைத் தயாரிக்கும் பொறுப்பை ஆரோனின் மகனாகிய இத்தாமார் ஏற்றுக்கொண்டான்.

22 மோசேக்கு கர்த்தர் விதித்த எல்லாக் கட்டளைகளையும் யூதாவின் கோத்திரத்தின் வழியே வந்த ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் நிறைவேற்றினான். 23 தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாகின் மகனான அகோலியாப் அவனோடு ஒத்துழைத்தான். அகோலியாப் மிகச் சிறந்த சித்திரை கைவேலையாளும், நெசவில் நிபுணனும் ஆவான். மெல்லிய துகிலை நெய்வதிலும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலை நெய்வதிலும் அவன் தலைசிறந்தவனாக இருந்தான். 24 கர்த்தரின் பரிசுத்த இடத்திற்கு 2 டன்கள் எடைக்கு மேற்பட்ட பொன் காணிக்கையாக அளிக்கப்பட்டது. (அதிகாரப் பூர்வமான அளவு எடையின்படி அது எடையிடப்பட்டது.)

25 எண்ணிக்கை எடுக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் 3 3/4 டன்கள் வெள்ளி கொடுத்தனர். (இதுவும் அதிகாரப்பூர்வமான அளவின் தராசில் நிறுக்கப்பட்டது) 26 இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய ஆண்கள் எண்ணப்பட்டனர். 6,03,550 ஆண்கள் இருந்தனர். ஒவ்வொருவனும் 1 பெக்கா வெள்ளியை வரியாக அளித்தான். (அதிகாரப்பூர்வமான அளவின்படி 1 பெக்கா என்பது 1/2 சேக்கல் எடை அளவாகும்.) 27 கர்த்தரின் பரிசுத்த இடத்தின் தொங்கு திரைகளுக்கும் 100 பீடங்களை உண்டாக்குவதற்கு அந்த 3 3/4 டன்கள் வெள்ளியைப் பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு பீடத்திற்கும் சுமார் 75 பவுண்டு வெள்ளி வீதம் உபயோகப்படுத்தப்பட்டது. 28 மீதமுள்ள 50 பவுண்டு வெள்ளியால் கொக்கிகளையும், திரைப்பூண்களையும், தூண்களின் வெள்ளிப் பூச்சையும் செய்தனர்.

29 கர்த்தருக்கு 26 1/2 டன்களுக்கும் அதிகமான வெண்கலம் தரப்பட்டது. 30 ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின் பீடங்களைச் செய்வதற்கு அது பயன்பட்டது. பீடத்தையும், சல்லடையையும் செய்வதற்கும் வெண்கலத்தைப் பயன்படுத்தினர். பலிபீடத்தின் எல்லாக் கருவிகளையும், பாத்திரங்களையும் செய்வதற்கு வெண்கலம் பயன்படுத்தப்பட்டது. 31 பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள தொங்கு திரைகளின் பீடங்களையும், நுழைவாயிலில் உள்ள தொங்கு திரைகளின் பீடங்களையும் அமைப்பதற்கு வெண்கலம் பயன்படுத்தப்பட்டது. வெண்கலத்தால் பரிசுத்தக்கூடாரத்திற்கும், வெளிப்பிரகாரத்தின் தொங்கு திரைகளுக்கும் தேவையான கூடார ஆணிகளைச் செய்தனர்.

மத்தேயு 23:1-22

இயேசு யூத ஆசாரியர்களை விமர்சித்தல்(A)

23 பின் இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார். ,“வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவர்கள் செய்யச் சொல்கிறவற்றை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால், அவர்களின் வாழ்க்கை நீங்கள் பின்பற்றத் தக்கதல்ல. அவர்கள் உங்களுக்கு உபதேசிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதன்படி நடப்பதில்லை. மக்கள் பின்பற்றி நடப்பதற்குக் கடினமான சட்டங்களை ஏற்படுத்துகிறார்கள். மற்றவர்கள் அவற்றைப் பின்பற்றுமாறு மிகவும் வற்புறுத்துகின்றனர். ஆனால் அச்சட்டங்களில் யாதொன்றையும் தாங்கள் பின்பற்ற முயலுவதில்லை.

,“அவர்கள் நற்செயல்களைச் செய்வதற்கான ஒரே காரணம் மற்றவர்கள் அவற்றைக் காண வேண்டும் என்பதே. அவர்கள் வேத வாக்கியங்களில் வாசகங்களைக் கொண்ட தோல் பைகளை அணிந்து செல்கிறார்கள். அவற்றை மேலும் மேலும் பெரிதாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். மேலும் மக்கள் காணும்படியாகப் பிரார்த்தனைக்கான சிறப்பு உடையை மிக நீண்டதாக அணிகிறார்கள். அத்தகைய பரிசேயர்களும் வேதபாரகர்களும் விருந்துகளின்போது முக்கியமான இருக்கைகளில் அமர விரும்புகிறார்கள். மேலும் ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கைகளில் அமர விரும்புகிறார்கள். கடைவீதிகளில் மக்கள் தங்களுக்கு மரியாதை செய்யவும் மக்கள் தங்களை ‘போதகரே’ என அழைக்கவும் விரும்புகிறார்கள்.

,“ஆனால் நீங்கள் ‘போதகர்’ என அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால் நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள். உங்களுக்கு ஒரு போதகரே உண்டு. மேலும், பூமியில் உள்ள எவரையும் ‘தந்தையே’ என அழைக்காதீர்கள். உங்களுக்கு ஒருவரே தந்தை. அவர் பரலோகத்தில் உள்ளார். 10 நீங்கள் ‘எஜமானே’ என்றும் அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால், உங்கள் எஜமான் ஒருவர் மட்டுமே. அவர் தான் கிறிஸ்து. 11 உங்களுக்கு வேலைக்காரனைப்போல ஊழியம் செய்கிறவனே உங்களில் பெரியவன். 12 தன்னை மற்றவரிலும் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

13 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடுகாலம். நீங்கள் மாயமானவர்கள். பரலோக இராஜ்யத்தின் நுழைவாயிலை நீங்கள் அடைக்கிறீர்கள். நீங்களும் நுழைவதில்லை, நுழைய முயற்சிக்கும் மற்றவர்களையும் தடுக்கிறீர்கள். 14 [a]

15 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். கடல் கடந்தும் பல நாடுகளில் பயணம் செய்தும் உங்களுக்கு ஒரு சீஷனைத் தேடுகிறீர்கள். நீங்கள் அவனைக் கண்டடைந்து அவனை உங்களை விட மோசமானவனாக மாற்றுகிறீர்கள். மேலும் நரகத்திற்கு உரிய நீங்கள் மிகவும் பொல்லாதவர்களே.

16 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். மற்றவர்களை வழி நடத்தும் நீங்கள் குருடர்கள். நீங்கள் கூறுகிறீர்கள், ‘ஒருவன் தேவாலயத்தின் பெயரால் சத்தியம் செய்தால் அதனால் ஒன்றுமில்லை ஆனால், தேவாலயத்தில் உள்ள தங்கத்தின் பெயராலே சத்தியம் செய்தால், அவன் அதைக் காப்பாற்ற வேண்டும்!’ 17 நீங்கள் அறிவற்ற குருடர்கள். தங்கம் பெரிதா தேவாலயம் பெரிதா? தங்கத்தைப் பரிசுத்தமாக்குவது தேவாலயமே! எனவே, தேவாலயமே பெரியது.

18 ,“மேலும், நீங்கள் கூறுகிறீர்கள், ‘ஒருவன் தேவாலயத்திலுள்ள பலிபீடத்தின் பெயரால் சத்தியம் செய்தால் அதனால் ஒன்றுமில்லை. ஆனால், ஒருவன் பலிபீடத்திலுள்ள பலிப்பொருளின் பெயரால் சத்தியம் செய்தால், அவன் அதைக் காப்பாற்ற வேண்டும்!’ 19 நீங்கள் குருடர்கள், உங்களுக்கு எதுவும் புரிவதில்லை. படைத்த பொருள் பெரிதா? பலிபீடம் பெரிதா? படைத்த பொருளை பரிசுத்தப்படுத்துவது பலிபீடமே. ஆகவே பலிபீடமே பெரியது. 20 பலிபீடத்தின் பெயராலே சத்தியம் செய்கிறவன் உண்மையில் பலிபீடத்தையும் அதில் உள்ள அனைத்துப் பொருளையும் பயன்படுத்துகிறான். 21 மேலும் தேவாலயத்தின் பெயரால் சத்தியம் செய்கிறவன், உண்மையில் தேவாலயத்தையும் அதில் வாசம் செய்பவரையும் பயன்படுத்துகிறான். 22 பரலோகத்தின் பெயரால் சத்தியம் செய்கிறவன் தேவனின் அரியாசனத்தின் பெயராலும் அதில் அமர்கிறவரின் பெயராலும் சத்தியம் செய்கிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center