Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 34-35

புதிய கற்பலகைகள்

34 கர்த்தர் மோசேயை நோக்கி, “உடைந்து போன முதல் இரண்டு பலகைகளைப் போலவே வேறே இரண்டு கற்பலகைகளைச் செய். முதல் இரண்டு கற்களிலும் எழுதப்பட்ட அதே வார்த்தைகளை நான் இந்தக் கற்களிலும் எழுதுவேன். நாளை காலையில் தக்க ஆயத்தத்துடன் சீனாய் மலைக்கு வா. மலையின்மேல் என் முன்னே வந்து நில். உன்னோடு வேறு யாரும் வரக்கூடாது. யாரும் மலையில் காணப்படக் கூடாது. உங்கள் மிருகங்களோ, ஆட்டு மந்தைகளோ எதுவும் மலையடிவாரத்தில் புல்லை உண்பதற்குக்கூட அனுமதிக்கக் கூடாது” என்றார்.

எனவே, முதல் இரண்டு கற்பலகைகளைப் போலவே வேறே இரண்டு கற்பலகைகளை மோசே உருவாக்கினான். மறுநாள் அதிகாலையில் சீனாய் மலையின் மேல் ஏறிச் சென்றான். கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே எல்லாவற்றையும் செய்தான். மோசே இரண்டு கற்பலகைகளையும் தன்னோடு எடுத்துச் சென்றான். மோசே மலையின்மீது ஏறியவுடன், கர்த்தர் மேகத்தில் அவனிடம் இறங்கி வந்து, தமது பெயரை மோசேயிடம் சொன்னார்.

கர்த்தர் மோசேக்கு முன்னர் கடந்து சென்று, “யேகோவா என்னும் கர்த்தர், இரக்கமும் தயவும் உள்ள தேவன். கர்த்தர் எளிதில் கோபம் கொள்ளமாட்டார். கர்த்தர் அன்பு மிகுந்தவர், கர்த்தர் நம்பிக்கைக்குரியவர். ஆயிரம் தலைமுறைவரைக்கும் கர்த்தர் தமது இரக்கத்தைக் காட்டுவார். ஜனங்கள் செய்கிற தவறுகளை கர்த்தர் மன்னிப்பார். ஆனால் குற்றவாளிகளைத் தண்டிக்க கர்த்தர் மறப்பதில்லை. கர்த்தர் குற்றவாளிகளை மட்டும் தண்டிக்காமல் அவர்களின் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும், அவர்களின் பிள்ளைகளையும், அவர்கள் செய்த தீயகாரியங்களுக்காகத் தண்டிப்பார்” என்றார்.

உடனே மோசே கீழே தரையில் குனிந்து கர்த்தரைத் தொழுதுகொண்டான். மோசே, “கர்த்தாவே நீர் என்னோடு சந்தோஷமாக இருக்கிறீர் என்பது உண்மையானால் தயவு செய்து எங்களோடு வாரும். இவர்கள் பிடிவாதமான ஜனங்கள் என்பதை அறிவேன். ஆனால் நாங்கள் செய்த தீயசெயல்களுக்கு எங்களை மன்னித்தருளும்! உமது ஜனங்களாக எங்களை ஏற்றுக்கொள்ளும்” என்றான்.

10 அப்போது கர்த்தர், “உன் ஜனங்கள் எல்லாரோடும் இந்த உடன்படிக்கையைச் செய்கிறேன். பூமியிலுள்ள வேறெந்த ஜனத்துக்கும் செய்யாத வியக்கத்தக்க காரியங்களை நான் உங்களிடம் செய்வேன். உன்னோடு இருக்கிற ஜனங்கள் நான் மிக உன்னதமான கர்த்தர் என்பதைக் காண்பார்கள். நான் உனக்காகச் செய்யப்போகும் அற்புதங்களை ஜனங்கள் காண்பார்கள். 11 நான் இன்றைக்கு உங்களுக்கு இடும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். உங்கள் நாட்டிலிருந்து உங்கள் பகைவர்கள் போகும்படி செய்வேன். எமோரியரையும், கானானியரையும், ஏத்தியரையும், பெரிசியரையும், ஏவியரையும், எபூசியரையும் வெளியேற்றுவேன். 12 எச்சரிக்கையாயிருங்கள், நீங்கள் நுழையும் இந்தத் தேசத்தின் ஜனங்களோடு எந்த ஒப்பந்தத்தையும் செய்யாதீர்கள்! அந்த ஜனங்களோடு ஒப்பந்தம் செய்தால் அது உங்களுக்குத் தொல்லையைத் தரும். 13 ஆகையால் அவர்கள் பலிபீடங்களை அழித்துப்போடுங்கள். அவர்கள் தொழுதுகொள்ளும் கற்களை உடையுங்கள். அவர்கள் விக்கிரகங்களை நொறுக்குங்கள். 14 வேறெந்த தேவனையும் தொழுதுகொள்ளாதீர்கள். நான் ‘யேகோவா’ என்னும் வைராக்கியமுள்ள கர்த்தர். இதுவே என் பெயர். நான் எல்கானா-வைராக்கியமுள்ள தேவன்.

15 “இத்தேசத்து ஜனங்களோடு எந்தவொரு ஒப்பந்தமும் செய்யாதீர்கள். அவ்வாறு செய்தால் அவர்கள் தங்கள் தெய்வங்களைத் தொழுதுகொள்ளும்போது நீங்களும் சேர்ந்துகொள்ள அவர்கள் உங்களை அழைப்பார்கள். பிறகு அவர்கள் செலுத்திய பலிகளை நீங்கள் உண்பீர்கள். 16 அவர்களின் மகள்களை உங்கள் மகன்களுக்காக நிச்சயம் செய்யக்கூடும். அப்பெண்கள் பொய்த் தேவர்களை சேவிக்கிறார்கள். உங்கள் மகன்களையும் அவ்வாறே பொய்த் தேவர்களை தொழுதுகொள்ள வழிநடத்தக்கூடும்.

17 “விக்கிரகங்களைச் செய்யாதீர்கள்.

18 “புளிப்பில்லாத ரொட்டியின் பண்டிகையைக் கொண்டாடுங்கள். உங்களுக்கு நான் கட்டளையிட்டபடி ஏழு நாட்கள் புளிப்பில்லாமல் செய்த ரொட்டிகளை உண்ணுங்கள். நான் தெரிந்துகொண்டபடி ஆபிப் மாதத்திலேயே இதைச் செய்யுங்கள். ஏனெனில், அந்த மாதத்திலேயே நீங்கள் எகிப்தைவிட்டு வந்தீர்கள்.

19 “ஒரு பெண்ணிடம் பிறக்கும் முதல் குழந்தை எப்போதும் எனக்குரியது. உங்கள் மிருகங்களின் ஆடுகளின் முதற்பேறானவையும் எனக்குரியவை. 20 கழுதையின் முதல் ஈற்றை நீங்கள் வைத்துக்கொள்ள விரும்பினால் அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுத்து திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு ஆட்டுக்குட்டியைக் கொடுத்து அக்கழுதையை மீட்காவிட்டால் அப்போது அந்தக் கழுதையின் கழுத்தை முறித்துப் போடவேண்டும். உங்கள் முதற்பேறான மகன்கள் அனைவரையும் நீங்கள் என்னிடமிருந்து மீண்டும் வாங்கவேண்டும். காணிக்கையின்றி யாரும் என் முன்னிலையில் வரக்கூடாது.

21 “நீங்கள் ஆறு நாட்கள் உழையுங்கள். ஏழாம் நாள் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். விதைப்பு, அறுவடை காலங்களிலும் நீங்கள் ஓய்வு நாளில் ஓய்வெடுக்க வேண்டும்.

22 “வாரங்களின் பண்டிகையை (பெந்தெகோஸ்தே) கொண்டாடுங்கள். கோதுமை அறுவடையின் முதல் தானியத்தை அதற்குப் பயன்படுத்துங்கள். இலையுதிர் காலத்தின்போது அறுப்பின் பண்டிகையைக் கொண்டாடுங்கள்.

23 “ஆண்டில் மூன்று முறை உங்கள் ஜனங்கள் இஸ்ரவேலரின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதானத்திற்குச் செல்ல வேண்டும்.

24 “உங்கள் தேசத்திற்குள் நீங்கள் போகும்போது, அத்தேசத்திலிருந்து உங்கள் பகைவர்களை வெளியேற்றுவேன். உங்கள் எல்லைகளை விரிவுபடுத்தி உங்கள் தேசத்தின் அளவை அதிகரிக்கச் செய்வேன். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன் ஓராண்டில் மூன்று முறை செல்லுங்கள் அப்போது, யாரும் உங்கள் நாட்டை எடுத்துக்கொள்ள முயலமாட்டார்கள்.

25 “பலியின் இரத்தத்தை எனக்குப் படைக்கும்போதெல்லாம் புளிப்பை அதனோடு படைக்காதீர்கள்.

“பஸ்கா உணவிலுள்ள இறைச்சியை மறுநாள் காலைவரைக்கும் வைக்காதீர்கள்.

26 “நீங்கள் அறுவடை செய்யும் முதல் தானியங்களைக் கர்த்தருக்குக் கொடுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வீட்டிற்கு அவற்றைக் கொண்டு வாருங்கள்.

“இளம் ஆட்டை அதன் தாய்ப்பாலில் ஒருபோதும் சமைக்காதீர்கள்” என்றார்.

27 மீண்டும் கர்த்தர் மோசேயிடம், “நான் உங்களுக்குக் கூறிய எல்லாக் காரியங்களையும் எழுதிக்கொள். உன்னோடும், இஸ்ரவேல் ஜனங்களோடும் நான் செய்த உடன்படிக்கை இதுவேயாகும்” என்றார்.

28 மோசே 40 பகலும் 40 இரவும் கர்த்தரோடு தங்கினான். மோசே எந்த உணவையும் உண்ணவோ, தண்ணீரைப் பருகவோ இல்லை. இரண்டு கற்பலகைகளில் உடன்படிக்கையை (பத்துக் கட்டளைகளை) மோசே எழுதினான்.

மோசேயின் பிரகாசமான முகம்

29 பின் மோசே சீனாய் மலையிலிருந்து உடன்படிக்கை எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளையும் எடுத்துக்கொண்டு இறங்கி வந்தான். கர்த்தரோடு பேசியதால் அவன் முகம் பிரகாசித்தது. ஆனால் மோசே அதனை அறியவில்லை. 30 ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களும் மோசேயின் முகம் பிரகாசிப்பதைக் கண்டனர். எனவே அவனிடம் செல்ல பயந்தனர். 31 ஆனால் மோசே அவர்களை அழைத்தான். எனவே, ஆரோனும், ஜனங்களின் தலைவர்களும் மோசேயிடம் சென்றனர். மோசே அவர்களோடு பேசினான். 32 அதன் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் மோசேயிடம் வந்தனர். சீனாய் மலையில் கர்த்தர் அவனிடம் கொடுத்த கட்டளைகளை மோசே அவர்களுக்குக் கொடுத்தான்.

33 ஜனங்களிடம் மோசே பேசி முடித்த பின்பு அவன் தன் முகத்தில் ஒரு முக்காடு போட்டுக்கொண்டான். 34 மோசே கர்த்தருக்கு முன் பேசச் செல்லும்போது அதை அகற்றினான். அப்புறம் கர்த்தர் கூறிய கட்டளைகளை அவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் வந்து கூறினான். 35 மோசேயின், முகம் பிரகாசிப்பதை ஜனங்கள் கண்டனர். மீண்டும் மோசே முகத்தை மூடிக்கொண்டான். மறுமுறை கர்த்தரை சந்தித்துப் பேசுவதற்குச் செல்லும்வரைக்கும் மோசே அவனது முகத்தை மூடி வைத்திருந்தான்.

ஓய்வு நாளைப்பற்றிய விதிகள்

35 மோசே இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி அவர்களை நோக்கி, “நீங்கள் செய்ய வேண்டுமென கர்த்தர் கட்டளையிட்ட காரியங்களை நான் உங்களுக்குக் கூறுவேன்:

“ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாவது நாள் நீங்கள் ஓய்வெடுப்பதற்குரிய மிக விசேஷ நாளாகும். அந்த நாளில் ஓய்வெடுப்பதன் மூலம் கர்த்தரை மகிமைப்படுத்துவீர்கள். ஏழாவது நாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்பட வேண்டும். ஓய்வு நாளில் நீங்கள் வாழுமிடங்களில் நெருப்பை மூட்டவும் கூடாது” என்றான்.

பரிசுத்தக் கூடாரத்திற்கான பொருட்கள்

மோசே இஸ்ரவேலின் எல்லா ஜனங்களுக்கும் கூறியதாவது, “இதுவே கர்த்தர் கட்டளையிட்டவை: கர்த்தருக்காக விசேஷ காணிக்கைகளைச் சேர்த்து வையுங்கள். என்ன காணிக்கையைக் கொடுக்க வேண்டும் என்பதை மனதுக்குள்ளேயே ஒவ்வொருவரும் தீர்மானம் செய்துகொள்ளுங்கள். பின் அந்த காணிக்கையை கர்த்தருக்குக் கொண்டுவர வேண்டும். பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றைக் கொண்டு வாருங்கள். இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு ஆகிய நூலையும், வெள்ளாட்டு மயிராலான கம்பள துணியையும் சிவப்புத் தோய்த்த கடாவின் தோலையும், மெல்லிய தோலையும், சீத்திம் மரத்தையும், குத்து விளக்குகளுக்கு எண்ணெயையும், தூபம் காட்டுவதற்கு நறுமணப் பொருள்களையும் கொண்டு வாருங்கள். மேலும் கோமேதகக் கல்லையும், ஏபோத்திலும் நியாயத்தீர்ப்பு மார்ப்பதகத்திலும் வைக்க வேண்டிய கற்களையும் கொண்டு வாருங்கள்.

10 “கர்த்தர் கட்டளையிட்ட பொருள்களையெல்லாம் திறமை மிகுந்த கைவேலைக்காரர் அனைவரும் செய்ய வேண்டும். 11 பரிசுத்தக் கூடாரம், அதன் வெளிப்பிரகாரம், அதன் மேற் பரப்பு: கொக்கிகள், பலகைகள், தாழ்ப்பாள்கள், தூண்கள், அடித்தளங்கள், 12 பரிசுத்தப் பெட்டி, அதன் தண்டுகள், கிருபாசனம், பெட்டி இருக்குமிடத்தை மூடும் திரை, 13 மேசையும் அதன் தண்டுகளும், மேசையின் மீதிருக்கும் பொருள்கள், மேசையின் மீது வைக்க வேண்டிய விசேஷ ரொட்டி, 14 வெளிச்சத்திற்கான குத்து விளக்குத் தண்டு, அதனோடு பயன்படுத்தப்படும் பொருட்கள், விளக்குகள், விளக்குக்கு எண்ணெய், 15 நறுமணப் பொருள்களை எரிக்கும் பீடம், அதன் தண்டுகள், அபிஷேக எண்ணெய், நறுமணப் புகைப் பொருள், பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலை மூடும் திரை, 16 தகன பலிபீடம், வெண்கலத் தளம், அதின் தண்டுகள், பலிபீடத்தில் பயன்படும் பொருட்கள், வெண்கலத் தொட்டிகள், அதன் பீடம், 17 பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள திரைகள், அவற்றிற்கான தூண்களும், பீடங்களும், பிரகாரத்திற்கான நுழை வாயிலை மூடும் திரை, 18 கூடாரத்தைத் தாங்கி நிற்க உதவும் வெண்கல முளைகள், திரைகளின் சுவர்கள், வெளிப்பிரகாரத்தின் முளைகள், முளைகளில் கட்டப்படும் கயிறுகள், 19 பரிசுத்த இடத்தில் ஆசாரியர் அணியும் பொருட்டு விசேஷமாக நெய்த ஆடைகள். இந்த விசேஷ ஆடைகள் ஆசாரியனான ஆரோனும் அவன் மகன்களும் அணிவதற்குரியவை. அவர்கள் ஆசாரியராகப் பணியாற்றும்போது இந்த விசேஷ ஆடைகளை அணிவார்கள்” என்றான்.

ஜனங்களின் சிறப்புக் காணிக்கை

20 இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயிடமிருந்து புறப்பட்டு சென்றனர். 21 கர்த்தருக்கு காணிக்கைகளைக் கொடுக்க விரும்பியவர்கள் அனைவரும் கொண்டு வந்தனர். ஆசாரிப்புக் கூடாரம், அதிலுள்ள பொருட்கள், விசேஷ ஆடைகள் ஆகியவற்றைச் செய்வதற்கு இப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. 22 பல வகை பொன் அணிகலன்களைக் கொடுக்க விரும்பிய தாராள மனமுள்ள ஆண்களும், பெண்களும் அவற்றைக் கொண்டு வந்தனர். அவர்கள் ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், மற்றும் பிற அணிகலன்களைக் கொண்டு வந்தார்கள். கர்த்தருக்காக தம் ஆபரணங்களை அவர்கள் கொடுத்தனர். இது கர்த்தருக்கு விசேஷ காணிக்கையாகும்.

23 மெல்லிய துகில், மற்றும் இளநீல இரத்தாம்பர, சிவப்பு நூல் வைத்திருந்தவர்கள் அனைவரும் அவற்றை கர்த்தருக்காகக் கொண்டு வந்தார்கள். மேலும் ஆட்டுத் தோலோ, சிவப்புச் சாயமிட்ட செம்மறியாட்டுத் தோலோ அல்லது பதனிடப்பட்ட மெல்லிய தோலோ வைத்திருந்தவர்கள் அதை கர்த்தருக்காகக் கொண்டு வந்தனர். 24 வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றைக் கொடுக்க விரும்பியவர்கள், கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தனர். சீத்திம் மரத்தை வைத்திருந்தவர்கள் அதைக் கர்த்தருக்குக் கொண்டுவந்து கொடுத்தார்கள். 25 கலைத்திறன் வாய்ந்த ஒவ்வொரு பெண்ணும் மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நிற நூல்களையும் தயாரித்தனர். 26 திறமை மிகுந்தவர்களும், உதவிசெய்ய விரும்பிய எல்லா பெண்களும் வெள்ளாட்டு மயிரால் ஆடைகளைச் செய்தனர்.

27 தலைவர்கள் கோமேதகக் கற்களையும் பிற விலையுயர்ந்த கற்களையும் கொண்டுவந்தனர். ஆசாரியரின் ஏபோத்திலும் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திலும் இவை வைக்கப்பட்டன. 28 ஜனங்கள் தூபவர்க்க பொருட்களையும், ஒலிவ எண்ணெயையும் கொண்டு வந்தனர். நறுமணப் பொருள்களுக்கும், அபிஷேக எண்ணெய்க்கும், குத்துவிளக்கின் எண்ணெய்க்கும் இவை பயன்படுத்தப்பட்டன.

29 உதவிசெய்ய விரும்பிய இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். இவ்வன்பளிப்புகளை அவர்கள் விரும்பிக் கொடுத்ததால் தாராளமாகக் கொடுத்தார்கள். கர்த்தர் மோசேக்கும், அவனது ஜனங்களுக்கும் செய்யுமாறு கட்டளையிட்ட எல்லாப் பொருட்களையும் செய்வதற்கு இப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டன.

பெசலெயேலும் அகோலியாபும்

30 பின் மோசே இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, “பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தைச் சேர்ந்த ஊர் என்பவனின் குமாரனாகிய, ஊரியின் மகனான பெசலெயேலை தெரிந்தெடுத்துள்ளார். 31 தேவ ஆவியால் பெசலெயேலை நிரப்பியுள்ளார். பலவகை காரியங்களையும் செய்யவல்ல திறனையும், அறிவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார். 32 அவன் பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றால் பொருள்களைச் செய்து அவற்றை வடிவமைக்க வல்லவன். 33 கற்களைச் செதுக்கி அவற்றில் ஆபரணங்களைச் செய்யமுடியும். பெசலெயேலுக்கு மரவேலைகள் அனைத்தும் தெரியும். 34 பிறருக்குக் கற்பிக்கும்படியான விசேஷ திறமைகளை கர்த்தர் பெசலேயேலுக்கும், அகோலியாபிற்கும் (தாண் கோத்திரத்து அகிசமாகின் மகன்.) கொடுத்திருக்கிறார். 35 எல்லா வகை வேலைகளையும் செய்யும் ஆற்றலை கர்த்தர் இவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். தச்சு, உலோக வேலைகளையும் அவர்கள் செய்வார்கள். இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலாலும், மெல்லிய துகிலாலும் ஆடைகளைச் சித்திர வேலைப்பாடுகளோடு நெய்வதில் வல்லவர்கள். கம்பளியும் அவர்களால் நெய்ய முடிந்தது.

மத்தேயு 22:23-46

சதுசேயரின் தந்திரம்(A)

23 அதே நாளில் சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். (யாரும் மரணத்திலிந்து உயிர்த்தெழ முடியாது என்று நம்புகிறவர்கள் சதுசேயர்கள்) சதுசேயர்கள் இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்டனர். 24 அவர்கள்,, “போதகரே, திருமணமான ஒருவன் குழந்தைகள் இல்லாமல் இறந்துவிட்டால் அவனது சகோதரன் அவனது மனைவியை மணக்கவேண்டுமென மோசே நமக்குக் கூறியுள்ளார். அப்படியெனில், அவர்கள் இறந்த சகோதரனுக்குக் குழந்தை பெறுவார்கள். 25 எங்களில் ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். முதலாமவன் மணம் செய்து கொண்டான். ஆனால் அவன் குழந்தைகள் இல்லாமலேயே இறந்துவிட்டான். 26 அவனது சகோதரன் அப்பெண்ணை மணந்து கொண்டான். பின், இரண்டாவது சகோதரனும் இறந்துவிட்டான். அதே போல மூன்றாவது சகோதரனுக்கும் மற்ற சகோதரர்கள் அனைவருக்கும் நடந்தது. 27 இறுதியாக அப்பெண்ணும் இறந்தாள். 28 ஏழு பேர் அவளை மணந்தார்கள். எனவே, மரணத்திலிருந்து அவர்கள் உயிர்த்தெழும்பொழுது அவள் யாருடைய மனைவியாக இருப்பாள்?” என்று கேட்டார்கள்.

29 அதற்கு இயேசு,, “வேத வாக்கியங்கள் என்ன கூறுகிறது என்பது உங்களுக்குத் தெரியாததால் உங்களுக்குப் புரியவில்லை. மேலும் தேவனின் வல்லமையைக்குறித்து உங்களுக்குத் தெரியவில்லை. 30 மனிதர்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழும்பொழுது, அவர்களுக்குத் திருமணங்கள் நடக்கமாட்டா. உயிர்த்தெழும் அனைவரும் பரலோகத்திலிருக்கும் தேவதூதர்களுக்கு ஒப்பாவார்கள். 31 மரணத்திலிருந்து உயிர்த்தெழுவதைக் குறித்து தேவன் என்ன சொல்லியுள்ளார் என்பதைப் படித்திருக்கிறீர்களல்லவா? 32 தேவன், ‘ஆபிரகாமின் தேவன் நானே, ஈசாக்கின் தேவன் நானே, யாக்கோபின் தேவன் நானே’ [a] அவர்களின் தேவன் என்று தேவன் தம்மைப்பற்றி கூறினார். அவர் இறந்தவர்களின் தேவன் அல்ல. அவர் வாழ்கிறவர்களின் தேவன்” என்றார்.

33 அதைக் கேட்ட அனைவரும் இயேசுவின் போதனையைக் கண்டு வியந்தனர்.

எந்தக் கட்டளை மிக முக்கியமானது(B)

34 சதுசேயர்களால் வாதிட இயலாதபடி இயேசு பதில் அளித்தார் என்று பரிசேயர்கள் அறிந்தனர். எனவே, பரிசேயர்கள் ஒன்று கூடினார்கள். 35 ஒரு பரிசேயன் மோசேயின் சட்டத்தை நன்கு கற்றவன். அவன் இயேசுவைச் சோதிக்க ஒரு கேள்வி கேட்டான், 36 ,“மோசேயின் சட்டங்களில் எது மிக முக்கியமானது?” என்று அந்தப் பரிசேயன் கேட்டான்.

37 இயேசு அதற்கு,, “‘உன் தேவனாகிய கர்த்தரை நேசிக்க வேண்டும். முழு இதயத்தோடும் ஆத்துமாவோடும் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்.’ [b] 38 இது தான் முதலாவது மிக முக்கியமானதுமான கட்டளை. 39 இரண்டாவது கட்டளையும் முதலாவது கட்டளைப் போன்றதே ‘நீ உன்னை நேசிப்பதைப்போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.’ [c] 40 எல்லா கட்டளைகளும், தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களும் இந்த இரண்டு கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டவைதான்” என்றார்.

பரிசேயர்களிடம் கேள்வி(C)

41 பரிசேயர்கள் ஒன்றாய் கூடியிருந்த பொழுது, இயேசு அவர்களை ஒரு கேள்வி கேட்டார். 42 ,“கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய குமாரன்?” என்றார்.

அதற்குப் பரிசேயர்கள்,, “கிறிஸ்து தாவீதின் குமாரன்.” என்றனர்.

43 பின் இயேசு பரிசேயர்களிடம் கூறினார்,, “பின் எதற்காக தாவீது அவரை ‘ஆண்டவரே’ என்றழைத்தார்? தாவீது பரிசுத்த ஆவியின் வல்லமையாலே பேசினார். தாவீது சொன்னது இதுவே:

44 ,“‘கர்த்தர் (தேவன்) எனது ஆண்டவரிடம் (கிறிஸ்து) கூறினார்:
எனது வலது பக்கத்தின் அருகில் உட்காரும்;
    உம் எதிரிகளை உம் கட்டுக்குள் வைப்பேன்!’ (D)

45 தாவீது ‘ஆண்டவர்’ என கிறிஸ்துவை அழைக்கிறார். எனவே கிறிஸ்து எப்படி தாவீதின் குமாரனாக முடியும்?” என்று கேட்டார் இயேசு.

46 பரிசேயர்கள் ஒருவராலும் இயேசுவின் கேள்விகளுக்குப் பதில் கூற முடியவில்லை. அந்த நாளிலிருந்து இயேசுவை ஏமாற்றி கேள்வி கேட்க முயற்சி செய்யும் துணிவு யாருக்கும் வரவில்லை.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center