Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 27-28

தகனபலிகளுக்குரிய பலிபீடம்

27 கர்த்தர் மோசேயை நோக்கி, “சீத்திம் மரத்தால் ஒரு பலிபீடம் செய். அப்பலிபீடம் சதுர வடிவமாக இருக்கவேண்டும். 5 முழ நீளமும், 5 முழ அகலமும், 3 முழ உயரமும் இருக்கட்டும். பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு கொம்புகளைப் பொருத்து. இப்படி பலிபீடமும், கொம்புகளும் ஒரே துண்டாக இருக்கும். பலிபீடத்தை வெண்கலத்தால் மூட வேண்டும்.

“பலிபீடத்தில் பயன்படுத்தும் பாத்திரங்களும், கருவிகளும் வெண்கலத்தால் செய்யப்பட்டவையாக இருக்கட்டும். பானைகள், அகப்பைகள், கிண்ணங்கள், முள் கரண்டிகள், நெருப்புச் சட்டிகள் ஆகியவற்றைச் செய். பலிபீடத்தின் சாம்பலை அகற்றுவதற்காக இவை பயன்படும். பலபீடத்திற்கு வலை போன்ற ஒரு சல்லடை செய்யவேண்டும். சல்லடையின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு வெண்கல வளையங்களை உண்டாக்கு. பலிபீடத்தின் கீழ்ப்புறத்தில் பாதி உயரத்தில் அந்த சல்லடையை உட்கார வை.

“பலிபீடத்திற்கான தூண்களை சீத்திம் மரத்தால் செய்து அதை வெண்கலத்தால் மூட வேண்டும். பலிபீடத்தின் இருபக்கங்களிலும் வளையங்களின் வழியே தண்டுகளைச் செலுத்து. பலிபீடத்தைச் சுமப்பதற்கு இத்தண்டுகளைப் பயன்படுத்து. பல கைகளால் செய்யப்பட்ட பக்கங்களை உடைய உட்குழியுள்ள பெட்டியைப்போல பலிபீடத்தைச் செய்ய வேண்டும். நான் மலையில் உனக்குக் காண்பித்தபடியே பலி பீடத்தைச் செய்யவேண்டும்.

பரிசுத்தக் கூடாரத்தின் வெளிப்பிரகாரம்

“பரிசுத்த கூடாரத்திற்கு ஒரு வெளிப்பிரகாரம் அமைப்பாயாக. அது 100 முழ நீளமான திரைகளால் தெற்குப்புறம் மறைக்கப்படட்டும். மெல்லிய துகிலால் இத்திரைகள் அமைய வேண்டும். 10 20 வெண்கல பீடங்கள் உள்ள 20 தூண்களைப் பயன்படுத்து. தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும். 11 வடபுறத்திலும் திரைச் சுவர் 100 முழ நீளமாக இருக்க வேண்டும். அதற்கு 20 தூண்களும், 20 வெண்கலப் பீடங்களும் இருக்கவேண்டும். தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும்.

12 “வெளிப்பிரகாரத்தின் மேற்குப்புறத்தில் 50 முழ நீளமுள்ள திரைச்சுவர் இருக்க வேண்டும். 10 தூண்களும், 10 பீடங்களும் இருக்க வேண்டும். 13 வெளிப்பிரகாரத்தின் கிழக்குப் புறமும் 50 முழ அகலம் இருக்க வேண்டும். 14 வெளிப்பிரகாரத்தின் நுழை வாயில் கிழக்குப் புறத்திலேயே அமையட்டும். நுழைவாயிலின் ஒருபுறம் 15 முழ நீளமான திரைகளும், 3 தூண்களும், 3 பீடங்களும் இருக்க வேண்டும். 15 அதன் மறுபுறமும் 15 முழ நீளமான திரைகளும், மூன்று தூண்களும், அவற்றிற்கு மூன்று பீடங்களும் இருக்கட்டும்.

16 “வெளிப்பிரகாரத்தின் நுழைவாயிலை மூடுவதற்கு 20 முழ நீளமான திரை இருக்கவேண்டும். மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலாலும் ஆகிய துணிகளால் திரைகளையும், அதில் சித்திர வேலைப்பாடுகளையும் செய். நான்கு பீடங்கள் உள்ள நான்கு தூண்கள் திரைக்கென இருக்கட்டும். 17 வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள அனைத்துத் தூண்களும் வெள்ளி பூண்களும், வெள்ளிக் கொக்கிகளும், வெண்கலப் பீடங்களும் கொண்டதாக இருக்கவேண்டும். 18 100 முழ நீளமும் 50 முழ அகலமும் கொண்டதாக வெளிப்பிரகாரம் இருக்கவேண்டும். வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள திரைகளின் சுவர் 5 முழ உயரம் இருக்க வேண்டும். திரைகள் மெல்லிய துகிலால் நெய்யப்பட வேண்டும். தூண்களின் பீடங்கள் வெண்கலத்தாலாக வேண்டும். 19 எல்லாக் கருவிகளும், கூடாரத்தின் ஆணிகளும், பரிசுத்தக் கூடாரத்திற்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வெண்கலத்தால் அமைய வேண்டும். வெளிப்பிரகாரத்திற்கான திரைகளுக்குத் தேவையான கூடார ஆணிகளும் வெண்கலத்தால் செய்யப்பட வேண்டும்.

அகல் எண்ணெய்

20 “தரத்தில் உயர்ந்த ஒலிவ எண்ணெயைக் கொண்டுவரும்படியாக இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கட்டளையிடு. தினமும் மாலை நேரத்தில் ஏற்றப்பட வேண்டிய விளக்கிற்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்து. 21 ஆரோனும், அவன் மகன்களும் விளக்கைச் சுத்திகரிக்கும் வேலையைச் செய்ய வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்தின் முன் அறைக்குள் அவர்கள் செல்வார்கள். இது உடன்படிக்கை இருக்கும் அறைக்கு முன்பாக இருக்கும் வெளிப்புற அறை. ஒரு திரை இந்த இரண்டு அறைகளையும் பிரிக்கும். மாலை முதல், காலைவரை கர்த்தருக்கு முன் விளக்கு தொடர்ந்து எரிந்துக்கொண்டே இருக்கும்படி அவர்கள் அதைக் கவனித்து வரவேண்டும். இஸ்ரவேல் ஜனங்களும், அவர்கள் சந்ததியும் இச்சட்டத்தை என்றென்றைக்கும் பின்பற்ற வேண்டும்” என்றார்.

ஆசாரியருக்கான உடை

28 கர்த்தர் மோசேயை நோக்கி, “உன் சகோதரனாகிய ஆரோனையும், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் மகன்களையும் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பிரித்து உன்னிடம் வரவழை. இவர்கள் எனக்கு ஆசாரியர்களாக ஊழியம் செய்வார்களாக.

“உனது சகோதரனாகிய ஆரோனுக்கென்று சிறப்பான ஆடைகளை உண்டாக்கு. அந்த ஆடைகள் அவனுக்குக் கனமும், மேன்மையும் தரும். இந்த ஆடைகளைச் செய்யும் திறமைமிக்கவர்கள் ஜனங்கள் மத்தியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு விசேஷ அறிவை நான் கொடுத்துள்ளேன். அவர்களிடம் ஆரோனுடைய ஆடைகளைத் தயாரிக்கச் சொல். அவன் எனக்குச் சிறப்பான பணிவிடை செய்வதை அந்த உடை காட்டும். அவன் என்னைச் சேவிக்கிற ஆசாரியனாகப் பணியாற்றுவான். அந்த மனிதர்கள் செய்யவேண்டிய ஆடைகள் இவைகளே: நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம், ஏபோத், நீல அங்கி, முழுவதும் நெய்யப்பட்ட வெள்ளை அங்கி, தலைப்பாகை, கச்சை. ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கென்றும் இந்தச் சிறப்பு ஆடைகளை உண்டாக்க வேண்டும். பின்பு ஆரோனும், அவனது மகன்களும் எனக்கு ஆசாரியர்களாக ஊழியம் செய்யமுடியும். பொன்னையும், ஜரிகைகளையும், மெல்லிய துகிலையும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலையும் பயன்படுத்துமாறு அவர்களுக்குச் சொல்.

ஏபோத்தும், இடைக் கச்சையும்

“ஏபோத்தைச் செய்வதற்குப் பொன்னையும், சரிகைகளையும், மெல்லிய துகிலையும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலையும் பயன்படுத்து. இது திறமை மிக்க கலைஞனின் வேலை ஆகும். ஏபோத்தின் தோள் பகுதி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தோள்பட்டை இருக்கவேண்டும். இந்தத் தோள் பட்டைகள் ஏபோத்தின் இரண்டு மூலைகளிலும் கட்டப்படவேண்டும்.

“ஏபோத்திற்கு ஒரு இடைக்கச்சையைச் செய்ய வேண்டும். ஏபோத்தை நெய்தது போலவே, இடைக் கச்சையையும், பொன் ஜரிகை, மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூல் ஆகியவற்றால் செய்ய வேண்டும்.

“இரண்டு கோமேதகக் கற்களை எடுத்துகொள். இஸ்ரவேலின் (யாக்கோபு) பன்னிரண்டு மகன்களின் பெயர்களையும் அக்கற்களின் மீது எழுது. 10 ஆறு பெயர்களை ஒரு கல்லிலும், மற்ற ஆறு பெயர்களை மறு கல்லிலும் எழுதவேண்டும். முதல் மகனிலிருந்து கடைசி மகன் வரைக்கும் ஒவ்வொருவரின் பெயர்களையும் எழுதவேண்டும். 11 இந்த கற்களின் மீது இஸ்ரவேலின் ஆண் பிள்ளைகளுடைய பெயர்களை செதுக்கவேண்டும். முத்திரை செய்கிற முறைப்படியே இதனையும் செய். பின்பு தங்கச் சட்டங்களில் கற்களைப் பொருத்து. 12 ஏபோத்தின் வார்களில் இந்த கற்களைப் பொருத்து. கர்த்தருக்கு முன்னால் நிற்கும்போது ஆரோன் அந்தச் சிவப்பு அங்கியை அணிந்துகொள்வான். ஏபோத்தின்மேல் இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களும் உள்ள இரண்டு கற்களும் இருக்கும். இஸ்ரவேல் ஜனங்களை தேவன் நினைவு கூருவதற்கு இக்கற்கள் உதவும். 13 ஏபோத்தின் மேல் அக்கற்கள் நன்றாக பதிக்கப்பட்டிருக்கும்படி பசும் பொன்னை பயன்படுத்து. 14 பொன்னால் இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகள் செய்து அவற்றைப் பொன் சட்டத்தில் பூட்டவேண்டும்.

நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம்

15 “தலைமை ஆசாரியனுக்காக நியாயத் தீர்ப்பு மார்ப்பதக்கத்தைச் செய். ஏபோத்தைச் செய்தது போலவே, திறமைமிக்க கை வேலைக்காரர்களைக்கொண்டு இதையும் செய்ய வேண்டும். பொன் ஜரிகையையும், மெல்லிய துகிலையும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நிற நூலையும் பயன்படுத்த வேண்டும். 16 இந்த நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தை இரண்டாக மடித்து ஒரு சதுர பையாக தைக்க வேண்டும். அது 9 அங்குல நீளமும், 9 அங்குல அகலமும் உடைய சதுரமாய் இருக்க வேண்டும். 17 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தில் நான்கு வரிசை விலையுயர்ந்த கற்களைப் பதிக்க வேண்டும். பத்மராகம், புஷ்பராகம், மாணிக்கம் கற்கள் முதல் வரிசையில் இருக்க வேண்டும். 18 இரண்டாவது வரிசையில் மரகதம், இந்திரநீலம், வச்சிரம் ஆகிய கற்கள் இருக்க வேண்டும். 19 மூன்றாவது வரிசையில் கெம்பு, வைடூரியம், சுகந்தி ஆகிய கற்கள் இருக்க வேண்டும். 20 நான்காவது வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி என்ற கற்கள் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் பொன்னில் பதிக்க வேண்டும். 21 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தில் மேற்கூறிய பன்னிரெண்டு கற்கள் இருக்க வேண்டும். இஸ்ரவேலின் மகன்கள் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கல் இருக்க வேண்டும். முத்திரை செய்கிற வண்ணமே ஒவ்வொரு கல்லிலும் இப்பெயர்கள் பொறிக்கப்பட வேண்டும்.

22 “சுத்தமான பொன்னினால் ஆன சங்கிலிகளை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திற்காக செய்ய வேண்டும். அவை கயிறு போல் பின்னப்பட்டிருக்க வேண்டும். 23 இரண்டு பொன் வளையங்களைச் செய்து நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் இரண்டு மூலைகளிலும் அவற்றை மாட்ட வேண்டும். 24 இரண்டு பொன் சங்கிலிகளையும் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் இரண்டு வளையங்களில் பொருத்து. 25 இரண்டு சட்டத்திலும் சங்கிலிகளின் வார்களை இணைத்துவிடு. ஏபோத்தின் முன்பகுதியிலுள்ள இரண்டு தோள் பட்டைகளிலும் இவை பொருத்தப்பட்டிருக்கும். 26 மேலும் இரண்டு பொன் வளையங்களைச் செய்து அவற்றை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் மூலைகளில் பொருத்து. ஏபோத்துக்கு பொருத்தின நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் உட்புற மூலைகளில் இது இருக்கும். 27 இன்னும் இரண்டு பொன் வளையங்களைச் செய்து அவற்றை ஏபோத்தின் முன்புறமுள்ள தோள் பட்டைகளின் கீழ்ப்பகுதியில் பொருத்து. பொன் வளையங்களை ஏபோத்தின் இடைக் கச்சைக்கு மேல் வை. 28 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் வளையங்களை ஏபோத்தின் வளையங்களோடு இணைப்பதற்கு நீல நிற நாடாவைப் பயன்படுத்து. இதனால் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம் கச்சைக்கு அருகேயும் ஏபோத்திற்கு எதிரேயும் இருக்கும்.

29 “பரிசுத்த இடத்துக்குள் ஆரோன் நுழையும்போது, அவன் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தை அணிய வேண்டும். அவனது மார்புக்கு நேராக இஸ்ரவேலின் பன்னிரெண்டு மகன்களின் பேரையும் அவன் அணிந்துகொள்வான். இவ்வாறு கர்த்தர் அவர்களை எப்போதும் நினைவு கூருவார். 30 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திற்குள் ஊரீமையும் தும்மீமையும் வை. கர்த்தருக்கு முன் செல்லும்போது இவை ஆரோனின் மார்புக்கு மேலாக இருக்கும். இப்படியாக இஸ்ரவேல் ஜனங்களின் நியாயத்தீர்ப்பை கர்த்தருக்கு முன்பாக ஆரோன் எப்போதும் சுமந்து செல்வான்.

ஆசாரியர்களுக்குரிய பிற ஆடைகள்

31 “ஏபோத்திற்காக ஒரு நீல அங்கியைத் தயார் செய். 32 தலையை நுழைத்துக்கொள்ளும்பொருட்டு நடுவில் ஒரு துவாரத்தை அமைப்பாயாக. அத்து வாரத்தைச் சுற்றிலும் ஒரு நெய்யப்பட்ட துணியைத் தைத்துவிடு. துவாரம் கிழியாதபடிக்கு அது உதவும். 33 துணியாலான மாதுளம் பழங்களை உண்டாக்க நீலம், இரத்தாம்பரம், சிவப்பு ஆகிய நூலைப் பயன்படுத்து. அவற்றை வஸ்திரத்தின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கவிடு. மாதுளம் பழங்களுக்கு இடையில் பொன்மணிகளைத் தொங்கவிடு. 34 இவ்வாறு அங்கியின் கீழே பொன் மணிகளும், மாதுளம் பழங்களும் இருக்க வேண்டும். ஒரு மாதுளம் பழமும், ஒரு பொன் மணியுமாக வரிசையாக அமையட்டும். 35 ஆரோன் ஆசாரியனாகப் பணிவிடை செய்யும்போது இந்த அங்கியை அணிந்துகொள்ள வேண்டும். கர்த்தரின் முன்னே நிற்கும்படியாக பரிசுத்த இடத்திற்கு அவன் போகும்போது அவன் சாகாதபடிக்கு மணிகள் ஒலிக்கும். பரிசுத்த இடத்திலிருந்து வெளியேறும்போதும் அவை ஒலிக்கும்.

36 “முத்திரை செய்வதைப்போல், பொன் தகட்டில் பொன் எழுத்துக்களால் அதில் ‘கர்த்தருக்கு பரிசுத்தம்’ என்னும் வார்த்தைகளை பொறித்து வை. 37 அந்த பொன் தகட்டை ஒரு நீல வண்ண நாடாவில் இணைத்துவிடு. தலைப்பாகையின் முன்புறம் அந்தப் பொன் தகடு இருக்க வேண்டும். 38 ஆரோன் அதை தலையில் அணிந்துகொள்ள வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் படைக்கும் காணிக்கைகளில் உள்ள கறையினால் அவன் கறைபடாதபடி இது உதவும். ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் காணிக்கைகள் இவைகளே. ஜனங்களின் காணிக்கைகளைக் கர்த்தர் ஏற்றுக்கொள்ளும் பொருட்டு ஆரோன் இதனை எப்போதும் தலையில் அணிந்துகொள்ள வேண்டும்.

39 “வெள்ளை அங்கியை மெல்லிய துகில் நூலிலிருந்து நெய்ய வேண்டும். தலைப்பாகைக்கும் மெல்லிய துகிலைப் பயன்படுத்து. கச்சையில் சித்திர வேலைப்பாடுகள் தைக்கப்பட்டிருக்க வேண்டும். 40 மேலங்கி, கச்சை, தலைப்பாகை ஆகியவற்றை ஆரோனின் மகன்களுக்காகவும் செய்ய வேண்டும். இது அவர்களுக்கு கனத்தையும் மதிப்பையும் அளிக்கும். 41 உன் சகோதரனாகிய ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் இந்த ஆடைகளை அணிவி. அவர்களை ஆசாரியர்களாக்கும்படி விசேஷ எண்ணெயை அவர்கள் மீது ஊற்று. இது அவர்களைப் பரிசுத்தமாக்கும். அவர்கள் எனக்கு சேவை செய்யும் ஆசாரியர்களாக இருப்பார்கள்.

42 “மெல்லிய துகிலால் ஆசாரியர்களுக்கு உள்ளாடைகள் தைக்க வேண்டும். அவை இடுப்பிலிருந்து முழங்கால்வரைக்கும் இருக்கும். 43 ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் நுழையும்போதெல்லாம் ஆரோனும், அவனது மகன்களும் இந்த ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். பரிசுத்த இடத்தில் பலிபீடத்தருகே ஆசாரியராக பணிவிடை செய்ய வரும்போது இதை அணியவேண்டும். அவற்றை அணியாவிட்டால் அவர்கள் குற்றவாளிகளாவார்கள். அதனால் அவர்கள் சாகநேரிடும். ஆரோனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் என்றென்றைக்கும் இது கட்டளையாக இருக்கும்” என்றார்.

மத்தேயு 21:1-22

அரசனைப் போல எருசலேமுக்குள் நுழைதல்(A)

21 இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். ஒலிவ மலைக்கு அருகில் பெத்பகேயுவில் அவர்கள் முதலில் தங்கினார்கள். அங்கு இயேசு தமது சீஷர்களில் இருவரை அழைத்து நகருக்குள் செல்லப் பணித்தார். அவர்களிடம் இயேசு,, “அங்கே தெரியும் நகருக்குள் செல்லுங்கள். நீங்கள் நகருக்குள் நுழையும்பொழுது கழுதை ஒன்றை கட்டிப் போடப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதனுடன் அதன் குட்டியையும் காண்பீர்கள். அவை இரண்டையும் அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாரேனும் உங்களை ஏன் கழுதைகளை கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டால், அவர்களிடம், ‘இக்கழுதைகள் ஆண்டவருக்குத் தேவையாயிருக்கின்றன. விரைவில் இவைகளைத் திருப்பி அனுப்புவார்’ எனச் சொல்லுங்கள்” என்றார்.

தீர்க்கதரிசி கீழ்க்கண்டவாறு சொன்னதின் முழுப்பொருளும் விளங்கும்படி இது நடந்தேறியது.

,“சொல்லுங்கள், சீயோன் நகர மக்களிடம்,
    ‘இப்பொழுது உங்கள் மன்னவன் உங்களிடம் வருகிறார்.
பணிவானவர் அவர் கழுதையின் மேல் வருகிறார்.
    ஆம் அவர் கழுதைக் குட்டியின் மேல் வருகிறார்’” (B)

இயேசு சொன்னபடியே அவரது சீஷர்கள் செய்தார்கள். அவர்கள் கழுதையையும் அதன் குட்டியையும் இயேசுவிடம் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலாடைகளைப் போட்டார்கள். இயேசு அவற்றின் மேல் அமர்ந்து எருசலேம் நகர் செல்லும் பாதையில் பயணமானார். ஏராளமான மக்கள் வழியெங்கும் தங்கள் மேலாடைகளை வழியில் பரப்பினார்கள். மற்றவர்கள் மரக்கிளைகளை வெட்டி வழியில் பரப்பினார்கள். சிலர் இயேசுவுக்கு முன்னால் நடந்தார்கள். மற்றவர்கள் அவருக்குப் பின்னே நடந்தார்கள். அவர்கள்,

, “தாவீதின் குமாரனே வாழ்க! [a]
    ‘கர்த்தரின் பெயரினால் வருகிறவரே வாழ்க! கர்த்தரால் ஆசீர்வதிக்கபட்டவரே, வாழ்க!’ (C)

, “பரலோகத்திலுள்ள தேவனே வாழ்க!”

என்றனர்.

10 பின்னர், இயேசு எருசலேம் நகருக்குள் சென்றார். நகரிலிருந்த அனைவரும் குழப்பமடைந்து,, “யார் இந்த மனிதன்?” என்று வினவினார்கள்.

11 இயேசுவைத் தொடர்ந்து வந்த ஏராளமான மக்கள்,, “இவர்தான் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்துள்ள தீர்க்கதரிசி” எனப் பதிலளித்தனர்.

இயேசு ஆலயத்திற்குள் செல்லுதல்(D)

12 இயேசு ஆலயத்திற்குள் நுழைந்தார். அங்கு பொருட்களை விற்றுக்கொண்டும் வாங்கிக்கொண்டுமிருந்த அனைவரையும் வெளியேற்றினார். பலவகையான நாணயங்களை மாற்றிக் கொண்டிருந்தவர்களின் மேஜைகளைக் கவிழ்த்தார். புறாக்களை வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களின் மேஜைகளையும் கவிழ்த்தார். 13 அங்கிருந்த மக்கள் அனைவரிடமும் இயேசு,, “ஏற்கெனவே வேத வாக்கியங்களில் ‘பிரார்த்தனை செய்வதற்கான இடம் என்னுடைய வீடு!’ [b] என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் நீங்களோ தேவனுடைய வீட்டைக் கொள்ளைக்காரர்கள் பதுங்கும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்” [c] என்று கூறினார்.

14 சில குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலிருந்த இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் அனைவரையும் இயேசு குணப்படுத்தினார். 15 தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவின் செயலைக் கண்டார்கள். இயேசு பெரும் செயல்களைச் செய்வதையும் பிள்ளைகள் அவரைப் புகழ்வதையும் கண்டார்கள். சிறுபிள்ளைகள் எல்லாரும், “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவை அனைத்தும் ஆசாரியர்களையும் வேதபாரகர்களையும் கோபம்கொள்ளச் செய்தன.

16 தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவிடம்,, “இப்பிள்ளைகள் சொல்வதைக் கேட்டீரா?” என்று வினவினார்கள்.

இயேசு அவர்களிடம்,, “ஆம், வேதவாக்கியம் கூறுகிறது, ‘நீரே(தேவன்) குழந்தைகளுக்கும், சிறு குழந்தைகளுக்கும் புகழ்பாடக் கற்பித்தீர்.’ நீங்கள் அந்த வேதவாக்கியங்களைப் படிக்கவில்லையா?” என்று பதிலுரைத்தார்.

17 பின்னர் இயேசு அவ்விடத்தை விட்டு விலகி பெத்தானியா நகருக்குச் சென்றார். அன்றைய இரவு இயேசு அங்கேயே தங்கினார்.

விசுவாசத்தின் வல்லமை(E)

18 மறுநாள் அதிகாலை இயேசு மீண்டும் நகருக்குத் திரும்பிச்சென்று கொண்டிருந்தார். இயேசு மிகவும் பசியுடனிருந்தார். 19 இயேசு சாலையோரம் அத்திமரம் ஒன்றைக் கண்டார். அத்திப்பழங்களை உண்பதற்காக அம்மரத்தின் அருகில் சென்றார். ஆனால், மரத்தில் பழம் எதுவும் இல்லை. வெறும் இலைகள் மட்டுமே இருந்தன. எனவே இயேசு மரத்தை நோக்கி,, “இனி ஒருபொழுதும் உன்னிடம் பழம் உண்டாகாது” என்று கூறினார். உடனே அம்மரம் உலர்ந்து பட்டுப்போனது.

20 இதைக் கண்ட சீஷர்கள் மிகவும் வியப்புற்றனர். அவர்கள் இயேசுவிடம்,, “எப்படி அத்திமரம் இவ்வளவு விரைவில் உலர்ந்து பட்டுப்போனது?” என்று கேட்டார்கள்.

21 இயேசு அவர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், நீங்களும் விசுவாசத்துட னும் சந்தேகிக்காமலும் இருந்தால், நான் இம்மரத்திற்குச் செய்ததைப் போலவே உங்களாலும் செய்ய இயலும். மேலும் உங்களால் இன்னும் அதிகமாகச் சாதிக்க இயலும். இம்மலையைப் பார்த்து ‘மலையே போய் கடலில் விழு’ என்று நீங்கள் விசுவாசத்துடன் சொன்னால் அது நடக்கும். 22 நீங்கள் நம்பிக்கையோடு பிரார்த்தனையில் வேண்டுகிற எதுவும் கிடைக்கும்” என்று பதிலுரைத்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center