Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 19-20

இஸ்ரவேலோடு தேவனின் உடன்படிக்கை

19 எகிப்திலிருந்து புறப்பட்ட மூன்றாவது மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் பாலைவனத்தை அடைந்தனர். அவர்கள் ரெவிதீமிலிருந்து சீனாய் பாலை வனத்திற்குப் பிரயாணம் செய்திருந்தனர். மலைக்கருகே (ஓரேப் மலை) இஸ்ரவேல் ஜனங்கள் கூடாரமிட்டனர். பின் மோசே தேவனைச் சந்திக்கும்பொருட்டு மலைமீது ஏறினான். மலையின் மேல் தேவன் அவனோடு பேசினார். அவனிடம், “யாக்கோபின் பெரிய குடும்பத்தினராகிய இஸ்ரவேலின் ஜனங்களுக்கு இவ்விஷயங்களைக் கூறு: ‘என் எதிரிகளுக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே பார்த்தீர்கள். எகிப்தின் ஜனங்களுக்கு நான் செய்தவற்றை நீங்கள் கண்டீர்கள். கழுகைப்போல நான் உங்களை எகிப்திலிருந்து சுமந்து வந்து, இங்கு என்னிடம் அழைத்து வந்ததை நீங்கள் பார்த்தீர்கள். எனவே என் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டுமென உங்களுக்குக் கூறுகிறேன். எனது உடன்படிக்கையை மீறாதீர்கள். நான் கூறுகிறபடி நீங்கள் நடந்தால், என் விசேஷமான ஜனங்களாயிருப்பீர்கள். உலகம் முழுவதும் எனக்குச் சொந்தமானது. ஆனால் எனது விசேஷ ஜனங்களாக இருக்கும்படி, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். ராஜரீக ஆசாரிய கூட்டமான, ஒரு பரிசுத்த ஜனமாக நீங்கள் இருப்பீர்கள்.’ மோசே, நான் கூறியதை நீ இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்ல வேண்டும்” என்றார்.

மோசே மலையிருந்து கீழே இறங்கினான். ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்கள்) வரவழைத்து அவர்களிடம் கூறும்படியாக கர்த்தர் கட்டளையிட்டவற்றை மோசே கூறினான். எல்லா ஜனங்களும் சேர்ந்து ஒரே குரலில், “கர்த்தர் கூறுகின்றவற்றிற்கு நாங்கள் கீழ்ப்படிவோம்” என்றார்கள்.

மோசே மீண்டும் மலையின் மேலேறி தேவனிடம் சென்றான். மோசே தேவனிடம் ஜனங்கள் அவருக்குக் கீழ்ப்படிவதாகக் கூறியதைச் சொன்னான். கர்த்தர் மோசேயிடம், “கார்மேகத்தினூடே நான் உன்னிடம் வருவேன், உன்னோடு பேசுவேன்! நான் உன்னோடு பேசுவதை எல்லா ஜனங்களும் கேட்பார்கள். நீ அவர்களுக்குக் கூறுவதை ஜனங்கள் எப்போதும் நம்புவதற்காக நான் இதைச் செய்வேன்” என்றார்.

ஜனங்கள் கூறிய அனைத்தையும் மோசே தேவனுக்குச் சொன்னான்.

10 கர்த்தர் மோசேயை நோக்கி, “ஒரு விசேஷ கூட்டத்திற்காக இன்றும், நாளையும் நீ ஜனங்களை ஆயத்தப்படுத்த வேண்டும். ஜனங்கள் அவர்கள் ஆடைகளைத் துவைக்க வேண்டும். 11 மூன்றாம் நாளில் எனக்காகக் காத்திருக்க வேண்டும். மூன்றாவது நாள் கர்த்தர் சீனாய் மலைக்கு இறங்கி வருவார், எல்லா ஜனங்களும் என்னைக் காண்பார்கள். 12-13 எல்லா ஜனங்களும் மலையை நெருங்காதிருக்கும்படி அவர்களுக்கு நீ கூறவேண்டும். ஒரு எல்லையை வரைந்து, ஜனங்கள் அதைத் தாண்டிச் செல்லாதபடி பார்த்துக்கொள். மலையைத் தொடும் மனிதனோ, மிருகமோ கொல்லப்பட வேண்டும். அவனைக் கற்களால் தாக்கியோ, அம்புகளை எய்தோ கொல்ல வேண்டும். கொல்லப்பட்டவனைப் பிறர் தொடக்கூடாது. எக்காளம் தொனிக்கும் வரைக்கும் ஜனங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பின்னரே அவர்கள் மலைக்கு சமீபம் செல்லலாம்” என்றார்.

14 மோசே மலையை விட்டிறங்கி, ஜனங்களிடம் சென்று, விசேஷ கூட்டத்திற்கு அவர்களை ஆயத்தப்படுத்தினான். அவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து பரிசுத்தமாக்கினார்கள்.

15 மோசே ஜனங்களை நோக்கி, “மூன்று நாட்களில் தேவனைத் தரிசிப்பதற்குத் தயாராகுங்கள். அதுவரைக்கும் ஆண்கள், பெண்களைத் தொடக்கூடாது” என்றான்.

16 மூன்றாம் நாள் காலையில், மலையின் மேல் மேகமொன்று திரண்டு வந்தது. இடியும் மின்னலும் எக்காளத்தின் பேரொலியும் இருந்தன. கூடாரத்திலிருந்த ஜனங்கள் அனைவரும் பயந்தனர். 17 அப்போது மோசே, ஜனங்களைக் கூடாரத்திலிருந்து மலையருகேயுள்ள ஓரிடத்திற்கு தேவனைச் சந்திப்பதற்காக வழிநடத்திச் சென்றான். 18 சீனாய் மலை புகையால் நிரம்பிற்று. சூளையிலிருந்து புகை வருவதுபோல் மலையின் மேல் புகை எழுந்தது. கர்த்தர் மலைக்கு நெருப்பில் இறங்கி வந்ததால் இப்படி ஆயிற்று. மலையும் அதிரத்தொடங்கிற்று. 19 எக்காள சத்தம் உரத்து தொனிக்க ஆரம்பித்தது. மோசே தேவனிடம் பேசியபோதெல்லாம், தேவன் இடிபோன்ற குரலில் பதிலளித்தார்.

20 கர்த்தர் சீனாய் மலையின்மேல் இறங்கினார். பரலோகத்திலிருந்து கர்த்தர் மலையின் உச்சியில் இறங்கினார். பின் கர்த்தர் மோசேயை மலையின் உச்சிக்கு தன்னிடத்தில் வருமாறு கூறினார். அவ்வாறே மோசேயும் மலையின் மீது ஏறினான்.

21 கர்த்தர், மோசேயை நோக்கி, “ஜனங்கள் என்னைப் பார்கும்படி நெருங்கிவராதபடி அவர்களை எச்சரி. இதை மீறினால் அவர்களில் பலர் மரிக்க நேரிடும். 22 என்னிடம் வர வேண்டிய ஆசாரியர்களை இந்த சிறப்புச் சந்திப்புக்கு ஆயத்தமாகி வரும்படி கூறு. அவர்கள் சரியான ஆயத்தம் செய்யவில்லையென்றால், நான் அவர்களைத் தண்டிப்பேன்” என்றார்.

23 மோசே கர்த்தரை நோக்கி, “ஜனங்கள் மலை உச்சிக்கு வரமுடியாது. பரிசுத்த எல்லையை நெருங்காதபடி செய்யுமாறு நீர் தானே எங்களிடம் கூறியுள்ளீர்” என்றான்.

24 கர்த்தர் அவனிடம், “ஜனங்களிடம் இறங்கிச் செல். ஆரோனை உன்னோடு அழைத்து வா, ஆசாரியர்களோ, ஜனங்களோ என்னை அணுகவிடாதே. அவர்கள் என்னை நெருங்கினால் நான் அவர்களை தண்டிப்பேன்” என்றார்.

25 எனவே மோசே ஜனங்களிடம் போய் இச்செய்தியைக் கூறினான்.

பத்துக் கட்டளைகள்

20 பின்பு தேவன்,

“நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் அடிமைகளாயிருந்த எகிப்து தேசத்திலிருந்து நான் உங்களை வழிநடத்தி வந்தேன். எனவே, நீங்கள் இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

“என்னைத் தவிர வேறு தேவர்களை நீங்கள் தொழக்கூடாது.

“நீங்கள் எந்த விக்கிரகங்களையோ, படங்களையோ, சிலைகளையோ செய்யக்கூடாது. வானிலும், பூமியிலும் தண்ணீரிலுமுள்ள எந்தப் பொருளின் வடிவத்திலும் அவற்றைச் செய்யக்கூடாது. எந்த விதமான விக்கிரகத்தையும் தொழுகை செய்யவோ அதை சேவிக்கவோ கூடாது. ஏனெனில் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். எனது ஜனங்கள் பிற தேவர்களைத் தொழுவதை நான் வெறுக்கிறேன். எனக்கு எதிராகப் பாவம் செய்வோர் எனது பகைவர்களாவார்கள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் அப்பேரர்களின் குழந்தைகளையும் தண்டிப்பேன். என்னிடம் அன்போடிருந்து எனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறவர்களிடம் நான் இரக்கம் காட்டுவேன். ஆயிரம் தலைமுறை வரைக்கும் அவர்கள் குடும்பங்களிடம் கருணையோடு இருப்பேன்.

“நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெயரைத் தகாத வழியில் பயன்படுத்தக்கூடாது. ஒருவன் அவ்வாறு பயன்படுத்தினால், அவன் குற்றவாளியாவான். கர்த்தர் அவனது குற்றத்திற்காக அவனை தண்டிப்பார்.

“ஓய்வுநாளை விசேஷ நாளாகக் கருதும்படி நீங்கள் நினைவுகூருங்கள். உங்கள் வேலையை வாரத்தின் ஆறு நாட்களும் செய்யுங்கள். 10 ஆனால் ஏழாம் நாள் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தும்படி ஓய்வெடுக்க வேண்டிய நாள். எனவே அந்நாளில் நீங்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் வேலைக்காரரும், வேலைக்காரிகளும் வேலை செய்யக்கூடாது. உங்கள் மிருகங்களையோ, உங்கள் நகரங்களில் வாழும் அந்நியர்களையோ வேலை வாங்கக்கூடாது. 11 ஏனெனில் கர்த்தர் ஆறு நாட்கள் வேலை செய்து வானம், பூமி, கடல் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார். ஏழாம் நாளில் கர்த்தர் ஓய்வெடுத்தார். இவ்வாறு கர்த்தர் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளை ஆசீர்வதித்தார். கர்த்தர் அதை ஒரு மிக விசேஷமான நாளாக்கினார்.

12 “உங்கள் தந்தை, தாயாரை மதிக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் தரும் நாட்டில் நீண்டஆயுள் வாய்ப்பதற்கு இதைச் செய்தல் வேண்டும்.

13 “நீங்கள் யாரையும் கொல்லாதிருப்பீர்களாக.

14 “நீங்கள் விபச்சாரம், செய்யாதிருப்பீர்களாக.

15 “நீங்கள் எதையும் திருடாதிருப்பீர்களாக.

16 “பிற ஜனங்களைக் குறித்துப் பொய் சாட்சி பேசவேண்டாம்.

17 “அயலானின் வீட்டை இச்சிக்கக்கூடாது. அவனது மனைவியை விரும்பவேண்டாம். அவனது வேலைக்காரனையோ வேலைக்காரியையோ, ஆடு மாடுகளையோ, கழுதைகளையோ எடுக்க வேண்டாம். இன்னொருவனுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் வஞ்சித்து எடுத்துக்கொள்ளக்கூடாது!” என்றார்.

ஜனங்கள் தேவனுக்கு பயப்படுதல்

18 இதுவரை, பள்ளத்தாக்கிலிருந்த ஜனங்கள் இடி முழக்கத்தைக் கேட்டார்கள், மலையின் மீது மின்னலைப் பார்த்தார்கள். மலையினின்று புகையெழும்பக் கண்டனர். ஜனங்கள் அச்சத்தால் நடுங்கினார்கள். மலையை விட்டு தூரத்தில் நின்று கவனித்தனர். 19 பின்பு ஜனங்கள் மோசேயிடம், “நீர் எங்களோடு பேசினால் நாங்கள் கேட்போம். ஆனால் தேவன் எங்களோடு நேரில் பேசவிடாதிரும். அவ்வாறு நடந்தால், நாங்கள் மரித்துப்போவோம்” என்றனர்.

20 மோசே ஜனங்களிடம், “பயப்படாதீர்கள்! கர்த்தர் உங்களை நேசிக்கிறார் என்பதைக் காண்பிக்கும்படியாக வந்திருக்கிறார். நீங்கள் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதினிமித்தமாக நீங்கள் பாவம் செய்யாதிருப்பீர்கள்” என்றான்.

21 தேவன் இருந்த கார்மேகத்திற்குள் மோசே போனபோது ஜனங்கள் மலையை விட்டு விலகி நின்றார்கள். 22 இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறுமாறு கர்த்தர் மோசேக்கு பின்வருமாறு கூறினார்: “பரலோகத்திலிருந்து உங்களோடு பேசினதை நீங்கள் கண்டீர்கள். 23 எனவே, பொன் அல்லது வெள்ளியால் எனக்கு இணையாக நீங்கள் விக்கிரகங்களை உண்டாக்க வேண்டாம். இந்த போலியான தெய்வங்களை நீங்கள் செய்யக்கூடாது.

24 “எனக்கென்று விசேஷ பலிபீடம் செய்யுங்கள். அதைக் கட்டும்போது மண்ணைப் பயன்படுத்துங்கள். அதன்மேல், தகன பலிகளையும், சமாதான பலிகளையும் பலியாகச் செலுத்துங்கள். உங்கள் ஆடு மாடுகளை இதற்கென்று பயன்படுத்துங்கள். என்னை நினைவு கூரும்படியாக நான் சொல்கிற இடங்களிலெல்லாம் இதைச் செய்யுங்கள். அப்போது நான் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன். 25 பலிபீடத்தை அமைப்பதற்கு நீங்கள் கற்களைப் பயன்படுத்தினால், இரும்புக் கருவியால் பிளக்கப்பட்ட கற்களைப் பயன்படுத்தவேண்டாம். அப்பலிபீடம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 26 பலிபீடத்திற்குப் படிகளைச் செய்யாதீர்கள். படிகள் இருந்தால் ஜனங்கள் பலிபீடத்தை ஏறிட்டு நோக்கும்போது உங்கள் நிர்வாணத்தை ஆடைகளின் கீழே அவர்கள் பார்க்கநேரிடும்” என்றார்.

மத்தேயு 18:21-35

மன்னிப்பைப்பற்றிய உவமை

21 அப்பொழுது, பேதுரு இயேசுவிடம் வந்து,, “ஆண்டவரே, என் சகோதரன் எனக்குத் தொடர்ந்து தீமை செய்தால் நான் அவனை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை மன்னித்தால் போதுமா?” என்று கேட்டான்.

22 அதற்கு இயேசு அவனுக்கு,, “நீ அவனை ஏழு முறைக்கும் அதிகமாக மன்னிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். அவன் எழுபத்தேழு முறை [a] தீமை செய்தாலும் நீ தொடர்ந்து மன்னிக்க வேண்டும்” என்று பதில் அளித்தார்.

23 ,“எனவே, பரலோகமானது தன் வேலைக்காரர்களுடன் கணக்கை சரி செய்ய முடிவெடுத்த மன்னனைப் போன்றது. 24 மன்னன் வேலைக்காரர்களின் கணக்கை சரி செய்யத் துவங்கினான். ஒரு வேலைக்காரன் அம்மன்னனுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. 25 ஆனால், அவ்வேலைக்காரனால், தன் எஜமானனான மன்னனுக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை. எனவே, அவ்வேலைக்காரனுக்குச் சொந்தமான அனைத்தையும் மனைவி குழந்தைகள் உட்பட ஏலம் போட மன்னன் ஆணையிட்டான். அதிலிருந்து தனக்குத் தரவேண்டிய பணத்தைத் தரவேண்டும் என்றான்.

26 ,“ஆனால், அந்த வேலைக்காரன் மன்னனின் கால்களில் விழுந்து, ‘என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தர வேண்டிய அனைத்தையும் நான் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சினான். 27 மன்னன் அவ்வேலைக்காரனுக்காக வருந்தினான். எனவே, மன்னன் அவ்வேலைக்காரன் பணம் ஏதும் தரத் தேவையில்லை என கூறி அவ்வேலைக்காரனை விடுவித்தான்.

28 ,“பின்னர், அதே வேலைக்காரன் தனக்குச் சிறிதளவே பணம் தரவேண்டிய வேறொரு வேலைக்காரனைக் கண்டான். அவன் உடனே, தனக்குப் பாக்கிப்பணம் தரவேண்டியவனின் கழுத்தைப் பிடித்து, ‘எனக்குத் தரவேண்டிய பணத்தைக் கொடு’ என்று கேட்டான்.

29 ,“மற்றவன் அவன் கால்களில் வீழ்ந்து, ‘என்னைப் பொறுத்துக் கொள். உனக்குத் தரவேண்டிய அனைத்தையும் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சிக் கேட்டான்.

30 ,“ஆனால், முதலாமவன் தான் பொறுத்துக்கொள்ள இயலாதென்றான். அவன் நீதிபதியிடம் மற்றவன் தனக்குப் பணம் தர வேண்டும் என்று கூற இரண்டாமவன் சிறையில் அடைக்கப்பட்டான். அவ்வேலைக்காரன் அவன் தரவேண்டிய பணம் முழுவதையும் கொடுக்கும் வரையிலும் சிறையிலிருக்க நீதிபதி பணித்தார். 31 மற்ற வேலைக்காரர்கள் அனைவரும் நடந்ததைக் கண்டு மிகவும் வருந்தினார்கள். எனவே, அவர்கள் தங்கள் எஜமானனாகிய மன்னனிடம் சென்று நடந்தவை அனைத்தையும் கூறினார்கள்.

32 ,“பின்பு அம்மன்னன் தன் வேலைக்காரனை அழைத்துவரச் செய்து, அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, எனக்கு நிறையப்பணம் தர வேண்டிய நீ, என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சினாய். எனவே, நீ எனக்குப் பணம் ஏதும் தரவேண்டியதில்லை என்று கூறினேன். 33 ஆகவே, நீயும் உன் சக வேலைக்காரனுக்கு அதேபோலக் கருணை காட்டியிருக்க வேண்டும்’ என்று சொன்னான். 34 மிகக் கோபமடைந்த மன்னன், அவ்வேலைக்காரனைச் சிறையிலிட்டான். தரவேண்டிய பணம் அனைத்தையும் திருப்பித் தரும்வரைக்கும் அவன் சிறையிலிருக்க வேண்டியிருந்தது.

35 ,“என் பரலோகப் பிதா உங்களுக்கு என்ன செய்வாரோ அதையே அம்மன்னனும் செய்தான். நீங்கள் மெய்யாகவே உங்கள் சகோதரனையோ சகோதரியையோ மன்னிக்க வேண்டும். இல்லையெனில் பரலோகப் பிதாவும் உங்களை மன்னிக்கமாட்டார்” என்று இயேசு சொன்னார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center