Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 16-18

16 ஜனங்கள் ஏலிமை விட்டு ஏலிமுக்கும், சீனாய்க்கும் நடுவில் உள்ள சீன் பாலைவனத்திற்கு வந்தனர். எகிப்தைவிட்டுப் புறப்பட்டபின் இரண்டாவது மாதத்தில் பதினைந்தாம் நாள் அவர்கள் அந்த இடத்தை வந்தடைந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் முறையிட ஆரம்பித்தனர். பாலைவனத்தில் மோசேயையும், ஆரோனையும் நோக்கி: “எகிப்து தேசத்தில் கர்த்தர் எங்களைக் கொன்றிருந்தால் நலமாக இருந்திருக்கும். அங்கு உண்பதற்காவது மிகுதியான உணவு கிடைத்தது. எங்களுக்குத் தேவையான எல்லா உணவும் கிடைத்தன. ஆனால் இப்போது எங்களை நீர் பாலைவனத்திற்குள் கொண்டு வந்திருக்கிறீர். பசியால் இங்கு நாங்கள் எல்லோரும் செத்துப்போவோம்” என்றனர்.

அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் வானத்திலிருந்து உணவுப்பொருளை விழச் செய்வேன். நீங்கள் உண்பதற்கு அது உணவாகும். ஒவ்வொரு நாளும் ஜனங்கள் வெளியே போய் அவர்களுக்கு அந்தந்த நாளுக்கு மட்டும் தேவையான உணவைச் சேகரித்துவரவேண்டும். இப்படி நான் அவர்களைச் சோதித்து, என் ஆலோசனைகளைப் பின்பற்றுகிறார்களா என்று பார்ப்பேன். ஒவ்வொரு நாளும் ஜனங்கள் அந்த நாளுக்குத் தேவையான உணவை மட்டுமே சேகரிக்கவேண்டும்: ஆனால் வெள்ளிக் கிழமையன்று, ஜனங்கள் உணவைத் தயாரிக்கும் பொழுது, இரண்டு நாட்களுக்குப் போதுமான இருமடங்கு உணவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்” [a] என்றார்.

மோசேயும், ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, “இன்றிரவு நீங்கள் கர்த்தரின் வல்லமையைக் காண்பீர்கள். எகிப்திலிருந்து உங்களை அழைத்து வந்தவர் அவரே என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கர்த்தரிடம் முறையிட்டபோது அவர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே நாளைக் காலையில் கர்த்தரின் மகிமையைக் காண்பீர்கள். நீங்கள் எங்களிடம் முறையிட்டுக்கொண்டேயிருக்கிறீர்கள். இப்போது எங்களுக்குச் சற்று ஓய்வு கிடைக்கும்” என்றார்கள்.

மோசே தொடர்ந்து, “நீங்கள் முறையிட்டீர்கள், கர்த்தர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே இன்றிரவு கர்த்தர் உங்களுக்கு மாமிசம் கிடைக்கச் செய்வார். காலையில் உங்களுக்குத் தேவையான அப்பத்தைப் பெறுவீர்கள். நீங்கள் ஆரோனிடமும் என்னிடமும் முறையிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆரோனுக்கும் எனக்கும் எதிராக அல்ல, நீங்கள் கர்த்தருக்கெதிராகவே முறையிட்டீர்கள்” என்றான்.

மோசே ஆரோனை நோக்கி, “இஸ்ரவேலின் ஜனங்களிடம் பேசு. அவர்களிடம், ‘கர்த்தருக்கு முன்பாக ஒருமித்து வாருங்கள். ஏனெனில் அவர் உங்கள் முறையீட்டைக் கேட்டார் என்று சொல்’” என்றான்.

10 ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசினான். அவர்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூடியிருந்தார்கள். ஆரோன் பேசும்போது, எல்லா ஜனங்களும் திரும்பிப் பாலைவனத்தை நோக்கினார்கள். மேகத்தில் கர்த்தரின் மகிமை வெளிப்படுவதைக் கண்டார்கள்.

11 கர்த்தர் மோசேயை நோக்கி, 12 “இஸ்ரவேல் ஜனங்களின் முறையீட்டைக் கேட்டேன். எனவே அவர்களிடம் ‘இன்றிரவு நீங்கள் இறைச்சி உண்பீர்கள், காலையில் உங்களுக்கு வேண்டிய ரொட்டி கிடைக்கும். பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்பலாம் என்று அறிவீர்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார்.

13 அன்றிரவு, காடைப் பறவைகள் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிலும் வந்து விழுந்தன. ஜனங்கள் இறைச்சிக்காக அவற்றைப் பிடித்தனர். காலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே பனிபடர்ந்திருந்தது. 14 பனி மறைந்ததும் மெல்லிய அப்பம் போன்ற ஒரு பொருள் நிலத்தின் மேல் காணப்பட்டது. 15 இஸ்ரவேல் ஜனங்கள் ஒருவரையொருவர் நோக்கி, “இது என்ன?” [b] என்றனர். அப்பொருள் என்ன என்று அவர்களுக்குத் தெரியாததினால், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். மோசே அவர்களை நோக்கி, “கர்த்தர் உங்களுக்கு உணவாகக் கொடுப்பது இதுவே. 16 ஒவ்வொருவனும் அவனவனுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவனுக்கும் எட்டு கிண்ண அளவின்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்” என்றான்.

17 எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வாறே செய்தார்கள். ஒவ்வொருவனும் இந்த உணவைச் சேகரித்துக்கொண்டான். சிலர் மற்றவர்களை விட அதிகமாக எடுத்துக்கொண்டனர். 18 ஜனங்கள் இந்த உணவைக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். உணவை அளந்தபோது ஒவ்வொருவருக்கும் போதுமான அளவு இருந்தது. ஆனால் ஒருபோதும் அதிகப்படியான உணவு இருந்ததில்லை. ஒவ்வொருவனும் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் தேவையான உணவை மாத்திரம் சேகரித்துக்கொண்டான்.

19 மோசே அவர்களை நோக்கி, “மறுநாள் உண்பதற்காக உணவை வைக்காதீர்கள்” என்றான். 20 ஆனால் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படியவில்லை. சிலர் அடுத்த நாளுக்காகச் சிறிது உணவை எடுத்து வைத்தார்கள். அந்த உணவைப் புழுக்கள் அரித்தபடியால் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இவ்வாறு செய்தவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்.

21 ஒவ்வொரு நாள் காலையிலும் உணவைச் சேகரித்துக்கொண்டனர். ஒருவன் தான் சாப்பிடக் கூடிய அளவு உணவை எடுத்துக்கொண்டான். வெயில் ஏறினதும் உணவு உருகி மறைந்துபோனது.

22 வெள்ளியன்று, ஜனங்கள் இரண்டு மடங்கு உணவைச் சேர்த்தார்கள். ஒவ்வொருவருக்கும் 16 கிண்ண அளவு உணவைச் சேர்த்தார்கள். எனவே ஜனங்களின் தலைவர்கள் மோசேயிடம் வந்து இதனை அறிவித்தனர்.

23 மோசே அவர்களை நோக்கி, “இவ்வாறு தான் நடக்கும் என்று கர்த்தர் கூறியிருக்கிறார். நாளை கர்த்தரை மகிமைப்படுத்தும் விசேஷ நாளாகிய ஓய்வுநாள் என்பதால் இவ்வாறு நிகழ்ந்தது. இன்றைக்குத் தேவையான எல்லா உணவையும் சமையுங்கள். மீதமாகும் உணவை நாளை காலைக்காக எடுத்து வையுங்கள்” என்றான்.

24 எனவே மீதமான உணவை ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்து அடுத்த நாளுக்காகப் பத்திரப்படுத்தினார்கள். அன்று அந்த உணவு கெட்டுப்போகவில்லை, புழுக்களும் அந்த உணவை அணுகவில்லை.

25 சனிக்கிழமையன்று மோசே ஜனங்களை நோக்கி, “இன்று ஓய்வுநாள், இது கர்த்தருக்கு மரியாதை செலுத்தும் விசேஷ நாள். எனவே உங்களில் ஒருவனும் வெளியே போகக்கூடாது. நேற்று சேர்த்து வைத்த உணவையே உண்ணுங்கள். 26 ஆறு நாட்கள் நீங்கள் உணவைச் சேகரிக்கவேண்டும், ஆனால் வாரத்தின் ஏழாவதுநாள் ஓய்வுக்குரிய நாள். எனவே பூமியில் விசேஷ உணவு எதுவுமிராது” என்றான்.

27 சனிக்கிழமையன்று சில ஜனங்கள் உணவைச் சேகரிக்கச் சென்றார்கள், ஆனால் அவர்களுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. 28 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “எனது கட்டளைகளுக்கும் போதனைகளுக்கும் கீழ்ப்படிய எத்தனை காலம் இந்த ஜனங்கள் மறுப்பார்கள்? 29 பார், உங்களுக்கு ஓய்ந்திருக்கும் நாளாக கர்த்தர் ஓய்வு நாளை உண்டாக்கினார். எனவே வெள்ளியன்று இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவை கர்த்தர் கொடுப்பார், பின் ஓய்வு நாளில் உங்களில் ஒவ்வொருவனும் ஓய்வெடுக்கவேண்டும். நீங்கள் இருக்குமிடத்திலேயே தங்கியிருங்கள்” என்றார். 30 எனவே ஜனங்கள் ஓய்வுநாளில் ஓய்வெடுத்துக்கொண்டார்கள்.

31 அந்த விசேஷ உணவை ஜனங்கள் “மன்னா” என்று அழைத்தார்கள். இந்த மன்னா தோற்றத்தில் சிறிய வெண்மையான கொத்து மல்லி விதைகளைப் போன்றிருந்தன. அவை ருசியில் தேனில் தோய்க்கப்பட்ட மெல்லிய வார்ப்புரொட்டி போன்று இருந்தன. 32 மோசே, “கர்த்தர் உங்கள் சந்ததியினருக்காக ‘இந்த உணவில் எட்டு கிண்ணம் எடுத்து வையுங்கள். அப்போது, உங்களை எகிப்திலிருந்து அழைத்து செல்கையில் வனாந்திரத்தில் நான் உங்களுக்கு கொடுத்த உணவை உங்கள் தலைமுறையினர் பார்க்க முடியும்’ என்றார்” என்று சொன்னான்.

33 எனவே மோசே ஆரோனை நோக்கி, “ஒரு சிறிய ஜாடியை எடுத்து அதை 8 கிண்ணம் மன்னாவால் நிரப்பு. கர்த்தருக்கு முன் வைக்கும்படியாக அதைப் பத்திரப்படுத்து. அதை நமது சந்ததியினருக்காகவும் பாதுகாத்து வை” என்றான். 34 (கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டவாறே ஆரோன் செய்தான். உடன்படிக்கைப் பெட்டியின் முன்னால் அந்த ஜாடியை ஆரோன் வைத்தான்.) 35 ஜனங்கள் 40 ஆண்டுகள் மன்னாவைச் சாப்பிட்டார்கள். ஓய்வுக்குரிய நாடாகிய, கானான் தேசத்தின் எல்லையை வந்தடையும் மட்டும் அவர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்கள். 36 (மன்னாவை அளப்பதற்காக அவர்கள் பயன்படுத்தியது ஒரு ஓமர். எட்டுக் கிண்ணங்கள் அளவு கொண்டது ஒரு ஓமர் ஆகும்.)

17 சீன் பாலைவனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பிரயாணம் செய்தார்கள். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பயணமானார்கள். ரெவிதீமிற்கு ஜனங்கள் பிரயாணம் செய்து அங்கு கூடாரமிட்டுத் தங்கினார்கள். குடிக்கக் கூட ஜனங்களுக்கு அங்கே தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே ஜனங்கள் மோசேக்கு எதிராக திரும்பி, அவனோடு வாதாட ஆரம்பித்தார்கள். “எங்களுக்குக் குடிப்பதற்கு தண்ணீர் தா” என்று ஜனங்கள் கேட்டார்கள்.

மோசே அவர்களை நோக்கி, “ஏன் எனக்கு எதிராகத் திரும்பினீர்கள்? ஏன் கர்த்தரை சோதிக்கிறீர்கள்? கர்த்தர் நம்மோடு வரவில்லை என்று நினைக்கிறீர்களா?” என்றான்.

ஆனால் ஜனங்கள் மிகவும் தாகமாக இருந்தபடியால் மோசேயிடம் தொடர்ந்து முறையிட்டார்கள், “ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? நாங்களும், எங்கள் பிள்ளைகளும், ஆடு மாடுகளும் தாகத்தால் மரித்துபோவதற்காகவா எங்களை அழைத்து வந்தீர்?” என்றார்கள்.

எனவே மோசே கர்த்தரிடம் சத்தமாக அழுது, “நான் இந்த ஜனங்களோடு என்ன செய்ய முடியும்? இவர்கள் என்னைக் கொல்லத் தயாராயிருக்கிறார்கள்” என்றான்.

கர்த்தர் மோசேயை நோக்கி, “இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாகப் போ, ஜனங்களின் மூப்பர்களில் (தலைவர்களில்) சிலரையும் உன்னோடு அழைத்துச் செல். உனது கைத்தடியையும் எடுத்துக்கொள். நைல் நதியை அடித்தபோது நீ பயன்படுத்திய தடி இதுவே. உனக்கு முன்பாக ஓரேபிலுள்ள (சீனாய் மலையிலுள்ள) பாறையில் நான் இருப்பேன். உனது கைத்தடியால் பாறையை அடி, உடனே பாறையிலிருந்து தண்ணீர் சுரந்து வரும், அப்போது ஜனங்கள் அதைப் பருகலாம்” என்றார்.

மோசே அவ்வார்த்தைகளின்படியே செய்தான். இஸ்ரவேலின் மூப்பர்கள் (தலைவர்கள்) அதைப் பார்த்தார்கள். இவ்விடத்தில் ஜனங்கள் மோசேக்கு எதிராகத் திரும்பி கர்த்தரை சோதித்ததால் மோசே அதற்கு மேரிபா என்றும், மாசா என்றும் பெயரிட்டான். கர்த்தர் அவர்களோடு இருக்கிறாரா, இல்லையா என்று சோதிக்க ஜனங்கள் விரும்பினார்கள்.

அமலேக்கியரோடு போர்

ரெவிதீமில் அமலேக்கிய ஜனங்கள் வந்து இஸ்ரவேல் ஜனங்களோடு போர் செய்தார்கள். எனவே மோசே யோசுவாவை நோக்கி, “சில மனிதர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு போய் அமலேக்கியரோடு நாளை போர் செய். நான் மலையின்மீது நின்று உங்களை கண்காணிப்பேன். தேவன் எனக்குக் கொடுத்த கைத்தடியைப் பிடித்துக்கொண்டிருப்பேன்” என்றான்.

10 யோசுவா மோசேக்குக் கீழ்ப்படிந்து, அமலேக்கிய ஜனங்களோடு போர் செய்வதற்கு மறுநாள் போனான். அதே நேரத்தில் மோசேயும், ஆரோனும், ஊரும் மலையுச்சிக்குச் சென்றார்கள். 11 மோசே கைகளை மேலே உயர்த்தியிருந்தபோது, இஸ்ரவேல் ஜனங்கள் வென்றனர். ஆனால் மோசேயின் கரங்கள் கீழே தாழ்ந்தபோது, இஸ்ரவேல் ஜனங்கள் தோல்வியடையத் தொடங்கினார்கள்.

12 சிறிது நேரத்திற்குப் பிறகு மோசேயின் கைகள் சோர்வடைந்தன. மோசேயோடு சென்ற மனிதர்கள் மோசேயின் கைகளைத் தூக்கியவாறே வைத்திருப்பதற்கு ஒரு வழி காண முயன்றார்கள். ஒரு பெரிய பாறையை மோசேக்குக் கீழே நகர்த்தி, அவனை அதில் உட்காரச் செய்தார்கள். பின் ஆரோனும், ஊரும் மோசேயின் கைகளைத் தூக்கிப் பிடித்தார்கள். ஆரோன் மோசேக்கு ஒரு புறமாகவும், ஊர் அவனுக்கு மறுபுறமாகவும் நின்றிருந்தனர். சூரியன் மறையும் வரைக்கும் அவர்கள் இவ்வாறே அவனுடைய கைகளைப் பிடித்திருந்தார்கள். 13 ஆகவே யோசுவாவும் அவனுடைய ஆட்களும் இப்போரில் அமலேக்கியர்களை வென்றார்கள்.

14 அப்போது கர்த்தர் மோசேயிடம், “இந்த யுத்தத்தைப்பற்றி எழுது. இங்கு நடந்தவற்றை ஜனங்கள் நினைவுகூரும்படியாக இக்காரியங்களை ஒரு புத்தகத்தில் எழுது. பூமியிலிருந்து அமலேக்கிய ஜனங்களை முற்றிலுமாக அழிப்பேன் என்பதை யோசுவாவுக்கு உறுதியாகக் கூறு” என்றார்.

15 பின் மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். “கர்த்தர் எனது கொடி” என்று அந்தப் பலிபீடத்திற்குப் பெயரிட்டான். 16 மோசே, “கர்த்தருடைய சிங்காசனத்திற்கு நேராக என் கைகளை உயர்த்தினேன். ஆகையால் கர்த்தர் எப்பொழுதும் செய்தது போல தலைமுறை தலைமுறையாக அமலேக்கியரை எதிர்த்துப் போர் செய்தார்” என்றான்.

மோசேயின் மாமனாரிடமிருந்து அறிவுரை

18 மோசேயின் மாமனாராகிய எத்திரோ மீதியானில் ஒரு ஆசாரியனாக இருந்தான். மோசேக்கும், இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பல வகைகளில் தேவன் உதவியதையும், எகிப்திலிருந்து கர்த்தர் இஸ்ரவேலரை வழிநடத்தினதையும் எத்திரோ கேள்விப்பட்டான். எனவே தேவனின் மலைக்கருகில் (ஓரேப்) மோசே கூடாரமிட்டுத் தங்கியிருந்தபோது, எத்திரோ அவனிடம் சென்றான். அவன் மோசேயின் மனைவியாகிய சிப்போராளையும் அழைத்து வந்திருந்தான். (மோசே அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டிருந்தபடியால் சிப்போராள், மோசேயோடு இருக்கவில்லை.) எத்திரோ மோசேயின் இரண்டு மகன்களையும் அழைத்து வந்திருந்தான். முதல் மகனின் பெயர் கெர்சோம், ஏனெனில் அவன் பிறந்தபோது, “நான் அந்நிய தேசத்தில் பரதேசியாக உள்ளேன்” என்று மோசே கூறினான். இன்னொரு மகனின் பெயர் எலியேசர். ஏனெனில் அவன் பிறந்தபோது, மோசே, “எனது முற்பிதாக்களின் தேவன் எனக்கு உதவி, எகிப்தின் மன்னனிடமிருந்து அவர் என்னைக் காத்தார்” என்றான். மோசே தேவனின் மலைக்குப் (சீனாய்) பக்கத்திலுள்ள பாலைவனத்தில் கூடாரமிட்டுத் தங்கியிருந்தபோது, எத்திரோ அவனிடம் சென்றான். மோசேயின் மனைவியும் அவனது இரண்டு மகன்களும் எத்திரோவோடிருந்தனர்.

எத்திரோ மோசேக்குச் செய்தி சொல்லியனுப்பினான். எத்திரோ, “உனது மாமனாராகிய எத்திரோ வந்துள்ளேன். நான் உனது மனைவியையும், உனது இரண்டு மகன்களையும் உன்னிடம் அழைத்து வந்திருக்கிறேன்” என்று சொன்னான்.

எனவே மோசே மாமனாரைப் பார்ப்பதற்கு வெளியே போனான். மோசே அவனைக் குனிந்து வணங்கி, முத்தமிட்டான். இருவரும் ஒருவருக்கொருவர் சுகசெய்திகளை விசாரித்துக்கொண்டனர். பின் மோசேயின் கூடாரத்திற்குள் மேலும் அதிகமாக உரையாடும்படிக்கு நுழைந்தனர். இஸ்ரவேல் ஜனங்களினிமித்தம் கர்த்தர் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் எதிராகச் செய்த எல்லாவற்றையும், பார்வோனுக்கும் எகிப்தின் ஜனங்களுக்கும் கர்த்தர் செய்தவற்றையும், வழியில் அவர்களுக்கு உண்டான பிரச்சனைகளைப்பற்றியும், துன்பம் வந்தபோதெல்லாம் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எப்படிக் காப்பாற்றினார் என்பதையெல்லாம் மோசே தன் மாமனாரான எத்திரோவிடம் சொன்னான்.

கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த எல்லா நல்ல காரியங்களையும் கேள்விப்பட்டபோது எத்திரோ மிக்க மகிழ்ச்சியடைந்தான். எகிப்தியரிடமிருந்து இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் விடுதலை செய்தார் என்பதையறிந்து அவன் மகிழ்ந்தான். 10 எத்திரோ,

“கர்த்தரை துதியுங்கள்!
    எகிப்தின் வல்லமையிலிருந்து அவர் உங்களை விடுவித்தார்.
    பார்வோனிடமிருந்து கர்த்தர் உங்களைக் காப்பாற்றினார்.
11 இப்போது மற்ற எல்லா தேவர்களையும்விட கர்த்தர் பெரியவர் என்பதை நான் அறிவேன்.
அவர்கள் அடிமைகளாக உள்ளார்கள் என எண்ணியிருந்தனர், ஆனால் தேவன் செய்ததைப் பாருங்கள்!” என்றான்.

12 எத்திரோ சில பலிகளையும், காணிக்கைகளையும் தேவனை மகிமைப்படுத்துவதற்காகக் கொண்டு வந்தான். மோசேயின் மாமனாராகிய எத்திரோவோடு சேர்ந்து உண்பதற்காக ஆரோனும் இஸ்ரவேலரின் மூப்பர்களும் (தலைவர்களும்) வந்தார்கள். அவர்கள் எல்லோரும் தேவனுடைய சந்நிதியில் சேர்ந்து உணவு உண்டார்கள்.

13 மறுநாள், ஜனங்களை நியாயந்தீர்க்கும் விசேஷ வேலை மோசேக்கு இருந்தது. நாள் முழுவதும் மோசேக்கு முன்னால் காலை முதல் மாலைவரை ஜனங்கள் கூடி நின்றனர்.

14 மோசே ஜனங்களை நியாயந்தீர்ப்பதை எத்திரோ பார்த்தான். அவன், “ஏன் இவ்வாறு செய்கிறாய்? ஏன் நீ மட்டும் நியாயந்தீர்க்க வேண்டும்? ஏன் நாள் முழுவதும் ஜனங்கள் உன்னிடம் வந்துகொண்டிருக்கின்றனர்?” என்று கேட்டான்.

15 மோசே அவனது மாமனாரை நோக்கி: “ஜனங்கள் என்னிடம் வந்து, அவர்களின் பிரச்சனைகளைப்பற்றிய தேவனின் முடிவைக் கேட்டறிந்து சொல்லுமாறு என்னைக் கேட்கிறார்கள். 16 ஜனங்கள் மத்தியில் விவாதம் எழுந்தால் அவர்கள் என்னிடம் வருகிறார்கள். எந்த மனிதன் சரியாகச் செயல்படுகிறான் என்பதை நான் முடிவு செய்வேன். இவ்வகையில் நான் ஜனங்களுக்கு தேவனின் சட்டங்களையும், போதனைகளையும் கற்பிக்கிறேன்” என்றான்.

17 ஆனால் மோசேயின் மாமனார் அவனை நோக்கி, “இதைச் செய்யும் வழி இதுவல்ல, 18 நீ ஒருவனே செய்வதற்கு இது பழுவான வேலையாகும். இவ்வேலையை நீ ஒருவனே செய்ய முடியாது. அது உன்னைக் களைப்படையச் செய்யும். ஜனங்களும் சோர்ந்து போகிறார்கள்! 19 இப்போது நான் சொல்வதைக் கேள். நான் உனக்குச் சில அறிவுரைகளைக் கூறுவேன். தேவன் உன்னோடிருக்கும் பொருட்டு நான் ஜெபம் செய்கிறேன். ஜனங்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து நீ கேட்கவேண்டும், இவற்றைக் குறித்துத் தொடர்ந்து நீ தேவனிடம் பேச வேண்டும். 20 நீ தேவனின் சட்டங்களையும் போதனைகளையும் ஜனங்களுக்குக் கற்பித்துக்கொண்டிருக்க வேண்டும். சட்டங்களை மீறக்கூடாது என்று அவர்களை எச்சரித்துவிடு. தக்க நெறியில் நடக்குமாறு அவர்களுக்குக் கூறு. என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர்களுக்குக் கூறு. 21 ஆனால் தலைவர்களாகவும், நீதிபதிகளாகவும் இருப்பதற்காகச் சிலரை நீ தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் வேண்டும்.

“உன் நம்பிக்கைக்குரிய நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள். அம்மனிதர்கள் தேவனை மதிக்கிறவர்களாக இருக்க வேண்டும். பணத்திற்காக தங்கள் முடிவுகளை மாற்றாத மனிதர்களைத் தெரிந்துகொள். ஜனங்களுக்குத் தலைவர்களாக அவர்களை நியமித்துவிடு. 1,000 ஜனங்களுக்கும், 100 ஜனங்களுக்கும், 50 ஜனங்களுக்கும், 10 பேருக்கும் கூட தலைவர்கள் இருக்கட்டும். 22 இந்த அதிகாரிகள் ஜனங்களை நியாயந்தீர்க்கட்டும். மிக முக்கியமான வழக்கிருந்தால் அவர்கள் உன்னிடம் வரட்டும், நீ என்ன செய்வதென முடிவெடுக்கலாம். ஆனால் மற்ற வழக்குகளில் இம்மனிதர்கள் உனது வேலையைப் பகிர்ந்துகொள்ளட்டும். இப்படி ஜனங்களை வழி நடத்துவது உனக்கு எளிதாகும். 23 தேவ தயவால் நீ இவற்றைச் செய்தால், நீ உனது பணியை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். அதே நேரத்தில் ஜனங்களும் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டவர்களாய் வீடு திரும்ப முடியும்” என்றான்.

24 எனவே எத்திரோ கூறியபடியே மோசே செய்தான். 25 இஸ்ரவேல் ஜனங்களில் சில நல்ல மனிதர்களை மோசே தெரிந்தெடுத்து ஜனங்களுக்குத் தலைவர்களாக அவர்களை நியமித்தான். 1,000 பேருக்கும், 100 பேருக்கும், 50 பேருக்கும், 10 பேருக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். 26 இந்த அதிகாரிகள் ஜனங்களுக்கு நீதிபதிகளாக இருந்தனர். இந்த அதிகாரிகளிடம் ஜனங்கள் தங்கள் விவாதங்களை எந்த நேரத்திலும் முன் வைக்க முடிந்தது. மிக முக்கியமான வழக்குகளை மட்டும் மோசே தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று.

27 கொஞ்ச நாட்களுக்குப்பின், மோசே தன் மாமனாராகிய எத்திரோவை வழியனுப்பினான். எத்திரோ தன் வீட்டிற்குத் திரும்பினான்.

மத்தேயு 18:1-20

இயேசு யார் பெரியவர் என்பது பற்றிச் சொல்லுதல்(A)

18 அச்சமயத்தில் இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து,, “பரலோக இராஜ்யத்தில் யார் மிகப் பெரியவர்?” என்று கேட்டனர்.

இயேசு ஒரு சிறு பிள்ளையைத் தம்மருகில் அழைத்து, தம் சீஷர்கள் முன் நிறுத்தினார். பின் அவர்களிடம் கூறினார்,, “நான் உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். நீங்கள் மனந்திரும்பி உள்ளத்தில் சிறு பிள்ளைகளைப் போல ஆக வேண்டும். அவ்வாறு மாறாவிட்டால், நீங்கள் ஒருபொழுதும் பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியாது. இந்த சிறு பிள்ளையைப்போல பணிவுள்ளவனாகிறவனே பரலோக இராஜ்யத்தில் பெரியவன்.

,“இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்கிறவன், என்னையும் ஏற்றுக்கொள்கிறான்.

பாவத்திற்குக் காரணமானவர்களை இயேசு எச்சரித்தல்(B)

,“என்னிடம், நம்பிக்கை வைத்துள்ள ஒரு சிறு பிள்ளையைப் பாவம் செய்ய ஒருவன் தூண்டினால், அவனுக்கு மிகத் தீமை விளையும். அவ்வாறு செய்கிறவன், ஒரு ஆட்டுக்கல்லைத் தன் கழுத்தில் கட்டிக் கொண்டு கடலில் மூழ்குவதே நல்லது. பாவம் செய்ய மக்கள் சோதிக்கப்படுவதால், அவர்களுக்காக வருந்துகிறேன். அவ்வாறான செயல்கள் நடக்கவேண்டும்தான். ஆனால், அவற்றுக்குக் காரணமானவர்களுக்கு மிகுந்த தீங்கு வரும்.

,“உங்களது கையோ அல்லது காலோ உங்களைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறியுங்கள். சரீரத்தின் ஒரு பகுதியை இழந்து நித்திய ஜீவனை அடைவது உங்களுக்கு நல்லது. இரு கை கால்களுடன் எரிகின்ற நரகத்தின் தீயில் என்றென்றைக்குமாக எறியப்படுவதைக் காட்டிலும் அது நல்லது. உங்களது கண் உங்களைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைப் பிடுங்கி எறியுங்கள். ஒரு கண்ணை இழந்து நித்திய ஜீவனை அடைவது உங்களுக்கு நல்லது. இரண்டு கண்களுடன் நரகத்தின் தீயில் எறியப்படுவதைக் காட்டிலும் அது நல்லது.

காணாமல் போன ஆட்டைப்பற்றிய உவமை(C)

10 ,“எச்சரிக்கையாயிருங்கள். இச்சிறு பிள்ளைகள் மதிப்பற்றவர்கள் என்று எண்ணாதீர்கள். இவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப் பெற்றுள்ளார்கள் என்று நான் சொல்லுகிறேன். மேலும் அத்தூதர்கள் எப்பொழுதும் பரலோகத்தில் என் பிதாவானவருடன் இருக்கிறார்கள். 11 [a]

12 ,“நூறு ஆடுகளை வைத்திருப்பவன் ஒரு ஆட்டை இழந்தால் மீதி தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் குன்றில் விட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிப்போவான் அல்லவா? 13 காணாமல் போன ஆட்டை அவன் கண்டுபிடித்தால், காணமல் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் காட்டிலும் அதனால் மிக மகிழ்ச்சியடைவான். 14 அதைப்போலவே, பரலோகத்தில் இருக்கும் என் பிதா இப்பிள்ளைகள் யாரையும் இழக்க விரும்பவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன்.

ஒரு மனிதன் தவறு செய்தால்(D)

15 ,“உங்கள் சகோதரனோ அல்லது சகோதரியோ உங்களுக்கு ஏதாவது தீமை செய்தால், அவர் செய்த தீமையை அவரிடம் எடுத்துக் கூறுங்கள். அதைத் தனிமையில் அவனிடம் சொல்லுங்கள். அதை அவர் கவனமாகக் கேட்பாரானால், அவர் மீண்டும் உங்கள் சகோதரனாகவோ அல்லது சகோதரியாகவோ இருக்க நீங்கள் உதவி செய்தவர்களாவீர்கள். 16 ஆனால் நீங்கள் கூறுவதைக் கேட்க அவர் மறுத்தால், மீண்டும் இரண்டு மூன்று பேருடன் சென்று நடந்தவற்றை எடுத்துச் சொல்லுங்கள். அப்பொழுது, நடந்ததை உறுதிசெய்ய இரண்டு மூன்று பேர் இருப்பார்கள். 17 அப்பொழுதும் அவன் கேட்க மறுத்தால், சபையாரிடம் சொல்லுங்கள். சபையார் சொல்வதையும் கேட்காமற் போனால், தேவ நம்பிக்கையற்றவனைப்போல் அவனை நடத்துங்கள். வரி வசூல் செய்பவனைப்போல் நடத்துங்கள்.

18 ,“நான் உன்மையைச் சொல்லுகிறேன். நீங்கள் இவ்வுலகில் நியாயத்தைப் பேசும்பொழுது, அது தேவனின் நியாயமாக இருக்கும். இவ்வுலகில் நீங்கள் மன்னிப்பளித்தால் அது தேவனின் மன்னிப்பாக இருக்கும். 19 மேலும், நான் சொல்லுகிறேன். உங்களில் இருவர் இவ்வுலகில் எதைக் குறித்தேனும் ஒரே மனமுடையவர்களாயிருந்தால் அதற்காக நீங்கள் பிரார்த்திக்கலாம். நீங்கள் கேட்பது பரலோகத்தில் உள்ள எனது பிதாவால் நிறைவேற்றப்படும். 20 இது உண்மை. ஏனென்றால், இரண்டு மூன்று பேர் என்னில் விசுவாசம் வைத்துக் கூடினால் அவ்விடத்தில் நான் இருப்பேன்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center