Old/New Testament
யாக்கோபு தன் மகன்களை ஆசீர்வதித்தல்
49 பின்பு யாக்கோபு தன் அனைத்து பிள்ளைகளையும் அழைத்து, “பிள்ளைகளே! என்னிடம் வாருங்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்கிறேன்.
2 “சேர்ந்து வாருங்கள், கவனியுங்கள். யாக்கோபின் பிள்ளைகளே.
இஸ்ரவேலாகிய உங்கள் தந்தை சொல்வதைக் கேளுங்கள்.
ரூபன்
3 “ரூபனே! என் முதல் மகனே! நீ எனக்கு முதல் பிள்ளை.
எனது மனித சக்தியின் முதல் அடையாளம் நீயே.
நீயே வல்லமையும்
மரியாதையும் உள்ள மகனாக விளங்கியிருக்கலாம்.
4 ஆனால் உனது உணர்ச்சிகளை வெள்ளம்போல உன்னால் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கிறது.
எனவே நீ மரியாதைக்குரியவனாக இருக்கமாட்டாய்.
நீ உன் தந்தையின் படுக்கையில் அவர் மனைவிகளுள் ஒருத்தியோடு படுத்தவன்.
நீ எனது படுக்கைக்கே அவமானம் தேடித் தந்தவன்.
சிமியோனும் லேவியும்
5 “சிமியோனும் லேவியும் சகோதரர்கள்.
அவர்கள் வாள்களால் சண்டையிடுவதை விரும்புவார்கள்.
6 இரகசியமாகப் பாவம் செய்யத் திட்டமிடுவார்கள்.
அவர்களின் திட்டங்களில் என் ஆத்துமா பங்குகொள்ள விரும்பவில்லை.
அவர்களின் இரகசியக் கூட்டங்களை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். கோபமாக இருக்கும்போது மனிதர்களைக் கொல்லுகிறார்கள், மிருகங்களை வேடிக்கைக்காகவே துன்புறுத்துகிறார்கள்.
7 அவர்களின் கோபமே ஒரு சாபம்.
அது வலிமையானது. அவர்கள் பைத்தியமாகும்போது கொடூரமானவர்களாகிறார்கள்.
யாக்கோபின் பூமியிலே அவர்கள் சொந்த பூமியைப் பெறமாட்டார்கள்.
அவர்கள் இஸ்ரவேல் முழுவதும் பரவி வாழ்வார்கள்.
யூதா
8 “உன்னை உன் சகோதரர்கள் போற்றுவார்கள்.
நீ உன் பகைவர்களை வெல்வாய்.
உன் சகோதரர்கள் உனக்கு அடிபணிவார்கள்.
9 யூதா ஒரு சிங்கத்தைப் போன்றவன்.
என் மகனே, தான் கொன்ற மிருகத்தின் மேல் நிற்கும் ஒரு சிங்கத்தை போன்றவன் நீ.
நீ ஓய்வெடுக்கும்போது உன்னை எவரும்
தொந்தரவு செய்யமுடியாது.
10 யூதாவின் குடும்பத்தில் வருபவர்கள் அரசர் ஆவார்கள்.
சமாதான கர்த்தர் வரும்வரை உன்னை விட்டு செங்கோல் நீங்குவதில்லை.
ஏராளமான ஜனங்கள் அவனுக்கு அடிபணிந்து சேவை செய்வார்கள்.
11 அவன் தன் கழுதையைத் திராட்சைக் கொடியில் கட்டி வைப்பான்.
அவன் தன் இளைய கழுதையை சிறந்த திராட்டைக் கொடியில் கட்டி வைப்பான்.
அவன் சிறந்த திராட்சைரசத்தை ஆடைவெளுக்கப் பயன்படுத்துவான்.
12 அவன் கண்கள் திராட்சைரசத்தினால் சிவப்பாகும்.
அவன் பற்கள் பாலால் வெளுக்கும்.
செபுலோன்
13 “இவன் கடற்கரையில் வசிப்பான்.
அவனது துறைமுகம் கப்பல்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
அவனது எல்லை சீதோன்வரை இருக்கும்.
இசக்கார்
14 “இசக்கார் ஒரு கழுதையைப்போல கடினமாக உழைப்பான்.
இரண்டு பொதியின் நடுவே படுத்திருப்பவனைப் போன்றவன்.
15 தன் ஓய்விடத்தை நன்றாக இருக்கும்படி பார்த்துக்கொள்வான்.
தன் பூமியை செழிப்பாக வைத்துக்கொள்வான்.
அடிமையைப்போல
வேலை செய்ய சம்மதிப்பான்.
தாண்
16 “தாண் இஸ்ரவேல் குடும்பத்தில் ஒருவனாக
தன் சொந்த ஜனங்களையே நியாயம்தீர்ப்பான்.
17 இவன் சாலையோரத்தில் அலையும் பாம்பைப் போன்றவன்.
இவன் பாதையிலேபடுத்திருக்கும் பாம்பைப் போன்று பயங்கரமானவன்.
இப்பாம்பு ஒரு குதிரையின் காலை கடிக்கிறது,
சவாரி செய்தவன் கீழே விழுகிறான்.
18 “கர்த்தாவே நான் உமது இரட்சிப்புக்காகக் காத்திருக்கிறேன்.
காத்
19 “ஒரு கொள்ளைக் கூட்டம் காத்தைத் தாக்கும்.
ஆனால் அவர்களை அவன் துரத்திவிடுவான்.
ஆசேர்
20 “இவனது நிலம் அதிகமாக விளையும்.
ஒரு அரசனுக்கு வேண்டிய உணவு பொருட்களைத் தருவான்.
நப்தலி
21 “இவன் சுதந்திரமாக ஓடுகிற மானைப் போன்றவன்.
அவன் வார்த்தைகள் குழந்தைகளைப் போன்று அழகானவைகள்.”
யோசேப்பு
22 “இவன் வெற்றி பெற்றவன்.
இவன் பழத்தால் மூடப்பட்ட திராட்சைக்கொடியைப் போன்றவன்.
நீரூற்றுக்கருகிலும் வேலிக்குள்ளும் இருக்கிற கொடியைப் போன்றவன்.
23 பலர் அவனுக்கு எதிராகப் போரிடுவார்கள்.
வில் வீரர்களே அவன் பகைவர்.
24 ஆனால் அவன் பலம் வாய்ந்த வில்லாலும் திறமையான கைகளாலும் சண்டையில் வென்றான்.
அவன் யாக்கோபின் வல்லவரும், மேய்ப்பரும், இஸ்ரவேலின் பாறையும் ஆனவரிடமிருந்தும் உன் பிதாவின் தேவனிடமிருந்தும் வலிமை பெற்றான்.
25 தேவன் உன்னை ஆசீர்வதிக்கிறார்.
சர்வ வல்லமையுள்ள தேவன்
வானத்திலிருந்தும், கீழே ஆழத்திலிருந்தும் உன்னை ஆசீர்வதிக்கட்டும்.
ஸ்தனங்களுக்கும், கர்ப்பங்களுக்குமுரிய ஆசிகளை அவர் உனக்கு வழங்கட்டும்.
26 எனது பெற்றோர்களுக்கு எவ்வளவோ நன்னமைகள் ஏற்பட்டன எனினும் எனது ஆசீர்வாதங்கள் அவற்றைவிட மேலானது.
உனது சகோதரர்கள் உன்னை எதுவுமில்லாமல் விட்டுவிட்டுப் போனார்கள்.
ஆனால், இப்போது எனது ஆசீர்வாதங்களையெல்லாம் மலையின் உயரம்போல் கூட்டித் தருகிறேன்.
பென்யமீன்
27 “பென்யமீன் ஒரு பசித்த நரி போன்றவன்.
காலையில் கொன்று தின்பான்.
மாலையில் மிஞ்சியதைப் பகிர்ந்துகொள்வான்.”
28 இவர்கள் அனைவரும் இஸ்ரவேலின் 12 குடும்பத்தினர். இவ்வாறு யாக்கோபு அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருக்குப் பொருத்தமான ஆசீர்வாதங்களைக் கொடுத்தான். 29 பின் இஸ்ரவேல் ஒரு ஆணையிட்டான். “நான் மரிக்கும்போது என் ஜனங்களோடு இருக்க விரும்புகிறேன். என் முற்பிதாக்களோடு நான் அடக்கம் செய்யப்பட வேண்டும். அந்தக் கல்லறை ஏத்தியரிடம் வாங்கிய எப்பெரோனில் உள்ளது. 30 அந்தக் குகை மம்ரேக்கு அருகில் மக்பேலா எனும் இடத்தில் வயலில் உள்ளது. இது கானான் நாட்டில் உள்ளது. இதனை ஆபிரகாம் எப்ரோனிடமிருந்து விலைக்கு வாங்கி கல்லறையாக மாற்றிவிட்டார். 31 ஆபிரகாமும் அவன் மனைவி சாராளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். நான் என் மனைவி லேயாளையும் அதே குகையில் அடக்கம் பண்ணினேன். 32 அந்தக் குகை இருக்கும் நிலம் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான். 33 யாக்கோபு பேசி முடித்ததும் படுத்தான். கால்களைக் கட்டிலின்மேல் மடக்கியபடியே மரணமடைந்தான்.
யாக்கோபின் இறுதிச் சடங்கு
50 இஸ்ரவேல் மரித்ததும் யோசேப்பு மிகவும் துக்கப்பட்டான். அவன் தன் தந்தையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது முத்தமிட்டான். 2 பிறகு யோசேப்பு தன் வேலைக்காரர்களுக்கு அவனது தந்தையின் உடலை அடக்கத்திற்கு தயார் செய்யும்படி ஆணையிட்டான். (அவர்கள் அனைவரும் மருத்துவர்கள்.) அடக்கம் செய்வதற்கு ஏற்ற முறையில் அதனைத் தயார்படுத்தினர். எகிப்திய முறையில் அவ்வாறு செய்தனர். 3 சரியான முறையில் தயார் செய்ய 40 நாட்கள் ஆகும். அந்தபடியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக 70 நாட்கள் துக்கம் கொண்டாடினர்.
4 70 நாட்கள் ஆனதும் துக்க நாட்கள் முடிந்தன. எனவே யோசேப்பு பார்வோன் மன்னனின் அதிகாரிகளோடு பேசினான். “இதனை பார்வோன் மன்னனுக்குச் சொல்லுங்கள். 5 ‘என் தந்தை மரணத்தை நெருங்கும்போது அவருக்கு நான் ஒரு வாக்குக் கொடுத்தேன். அவரை கானான் நாட்டில் ஓரிடத்தில் அடக்கம் செய்வதாக ஒப்புக்கொண்டேன். அதுவே அவர் விரும்பிய குகை. எனவே, நான் போய் அவரை அடக்கம் செய்ய எனக்கு அனுமதி வேண்டும். பின்னர் நான் உங்களிடம் திரும்பி வருவேன்’” என்றான்.
6 பார்வோனும், “உன் வாக்கைக் காப்பாற்று. போய் உன் தந்தையை அடக்கம் செய்” என்றான்.
7 எனவே யோசேப்பு அடக்கம் செய்யக் கிளம்பினான். பார்வோனின் மூப்பர்களும் (தலைவர்களும்) எகிப்திலுள்ள முதியவர்களும் யோசேப்போடு சென்றார்கள். 8 யோசேப்பின் குடும்பத்தினரும், அவனது சகோதரர்களின் குடும்பத்ததினரும் தந்தையின் குடும்பத்தினரும் அவனோடு சென்றார்கள். குழந்தைகளும் மிருகங்களும் மட்டுமே கோசேன் பகுதியில் தங்கினார்கள். 9 அவர்கள் பெருங்கூட்டமாகப் போனார்கள். வீரர்களும் இரதங்களிலும் குதிரைகளிலும் ஏறிப் போனார்கள்.
10 அவர்கள் கோரான் ஆத்தாத் நதியின் கீழ்க்கரையில் உள்ள கோசேன் ஆத்தாதிற்கு வந்தனர். அங்கே இஸ்ரவேலுக்கு இறுதிச் சடங்குகளையெல்லாம் செய்தனர். இது ஏழு நாட்கள் நடந்தது. 11 கானான் நாட்டிலுள்ள ஜனங்களெல்லாம் இந்தச் சடங்கில் கலந்துகொண்டனர். அவர்களோ, “அந்த எகிப்தியர்கள் பெரிய துக்கமான சடங்கைக் கொண்டுள்ளனர்” என்றனர். இப்போது அந்த இடத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்று பெயர் வழங்குகிறது.
12 யாக்கோபின் மகன்கள் தந்தை சொன்னபடியே செய்தனர். 13 அவர்கள் அவனது உடலை கானானுக்குள் எடுத்துச் சென்று மக்பேலாவில் அடக்கம் செய்தனர். இந்தக் குகை ஆபிரகாம் ஏத்தின் ஜனங்களிடமிருந்து வாங்கிய நிலத்தில் மம்ரேக்கு அருகில் இருந்தது. ஆபிரகாம் இதனைக் கல்லறைக்காகவே வாங்கியிருந்தான். 14 யோசேப்பு தன் தந்தையை அடக்கம் செய்த பிறகு, அவனோடு அனைவரும் எகிப்துக்குத் திரும்பிப் போனார்கள்.
சகோதரர்கள் யோசேப்புக்குப் பயப்படுதல்
15 யாக்கோபு மரித்தபிறகு யோசேப்பின் சகோதரர்கள் மிகவும் கவலைப்பட்டனர். அவர்கள் பயந்தார்கள். அவர்கள் யோசேப்புக்கு தாங்கள் செய்த தீமையை எண்ணிப் பயந்தனர். “நாம் யோசேப்பிற்குச் செய்த தீமைக்காக அவன் இப்போது நம்மை வெறுக்கலாம். நம் தீமைகளுக்கெல்லாம் அவன் பழி தீர்க்கலாம்” என்று அவர்கள் பேசிக்கொண்டனர். 16 எனவே அவனது சகோதரர்கள் அவனுக்குக் கீழ்க்கண்ட செய்தியை அனுப்பினர்: “தந்தை மரிப்பதற்கு முன்னால் உனக்கு ஒரு செய்தி சொல்லும்படி சொன்னார். 17 அவர், ‘யோசேப்புக்கு நீங்கள் முன்பு செய்த தீமையை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள்’ என்றார். எனவே நாங்கள் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் உனக்குச் செய்த தீமைக்கு எங்களை மன்னித்துவிடு. நாங்கள் தேவனின் அடிமைகள். அவர் உனது தந்தைக்கும் தேவன்” என்றனர்.
இந்தச் செய்தி யோசேப்பை மிகவும் துக்கப்படுத்தியது. அவன் அழுதான். 18 அவனது சகோதரர்கள் அவனிடம் சென்று பணிந்து வணங்கினார்கள். “நாங்கள் உன் வேலைக்காரர்கள்” என்றனர்.
19 பிறகு யோசேப்பு, “பயப்படவேண்டாம், நான் தேவன் அல்ல. உங்களைத் தண்டிக்க எனக்கு உரிமையில்லை. 20 எனக்குக் கேடு செய்ய நீங்கள் திட்டம்போட்டீர்கள் என்பது உண்மை. ஆனால் உண்மையில் தேவன் நன்மைக்குத் திட்டமிட்டிருக்கிறார். நான் பலரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது தேவனின் திட்டம். இன்னும் அவரது திட்டம் அதுதான். 21 எனவே அஞ்ச வேண்டாம். நான் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பொறுப்பேற்றுக்கொள்வேன்” என்றான். இவ்வாறு யோசேப்பு தன் சகோதரர்களுக்கு இனிமையாகப் பதில் சொன்னான். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
22 யோசேப்பு தொடர்ந்து எகிப்தில் தன் தந்தையின் குடும்பத்தோடு வாழ்ந்தான். அவனுக்கு 110 வயதானபோது மரணமடைந்தான். 23 யோசேப்பு உயிரோடு இருக்கும்போதே எப்பிராயீமுக்குப் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தனர். மனாசேக்கு மாகீர் என்ற மகன் இருந்தான். மாகீரின் பிள்ளைகளையும் யோசேப்பு பார்த்தான்.
யோசேப்பின் மரணம்
24 மரணம் நெருங்கியதும் யோசேப்பு தன் சகோதரர்களிடம், “எனது மரண நேரம் நெருங்கிவிட்டது. தேவன் உங்களை கவனித்துக்கொள்வார் என்பதை நான் அறிவேன். உங்களை இந்த நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்வார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு தேவன் கொடுப்பதாகச் சொன்ன நாடுகளை உங்களுக்குக் கொடுப்பார்” என்றான்.
25 பின் யோசேப்பு இஸ்ரவேல் ஜனங்களிடம் ஒரு வாக்குறுதிச் செய்தான். அவன், “நான் மரித்த பிறகு என் எலும்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தேவனால் வழி நடத்தப்பட்டு புதிய பூமிக்குப் போகும்போது அதையும் கொண்டு செல்லுங்கள்” இதைப்பற்றி வாக்குறுதி செய்யுங்கள் என்றான்.
26 யோசேப்பு எகிப்திலேயே மரணமடைந்தான். அப்போது அவனுக்கு 110 வயது. மருத்துவர்கள் அவனது உடலை அடக்கம் செய்வதற்காகத் தயார் செய்தனர். அதனை ஒரு பெட்டியில் வைத்தார்கள்.
மேலும் பல உவமைகள்(A)
31 பிறகு இயேசு மக்களுக்கு வேறொரு உவமையைக் கூறினார்., “பரலோக இராஜ்யமானது கடுகைப் போன்றது. ஒருவன் தன் வயலில் கடுகு விதையை விதைக்கிறான். 32 விதைகளிலெல்லாம் மிகச் சிறியது கடுகு. ஆனால், அது முளைக்கும்பொழுது மிகப் பெரிய செடிகளில் ஒன்றாக வளர்கிறது. அது மரமாக வளர்ந்து பறவைகள் அதன் கிளைகளில் கூடு கட்டுகின்றன” என்றார்.
33 இயேசு மக்களுக்கு மேலும் ஒரு உவமையைக் கூறினார்., “பரலோக இராஜ்யமானது ஒரு பெண் மாவுடன் கலக்கும் புளித்த பழைய மாவைப் போன்றது. புளித்த மாவானது அனைத்து மாவையும் புளிக்க வைக்கிறது” என்றார்.
34 இவை அனைத்தையும் மக்களுக்குப் போதிப்பதற்காக இயேசு உவமைகளைக் கையாண்டார். எப்பொழுதும் மக்களுக்குப் போதனை செய்ய இயேசு உவமைகளையேக் கையாண்டார். 35 இது தீர்க்கதரிசி கீழ்க்கண்டவாறு சொன்னபடியே நடந்தது,
, “நான் உவமைகளின் வழியாகப் பேசுவேன்,
உலகம் வந்தது முதல் இரகசியமாயுள்ளவற்றை நான் சொல்வேன்” (B)
கடினமான உவமையை விளக்குதல்
36 இயேசு மக்களை விட்டு வீட்டிற்குள் சென்றார். அவரது சீஷர்கள் அவரிடம் வந்து,, “வயலில் முளைத்த களையின் உவமை கூறும் உண்மைப் பொருளை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டனர்.
37 இயேசு மறுமொழியாக,, “நல்ல விதைகளை வயலில் விதைத்தவன் மனித குமாரன் தான். 38 இவ்வுலகமே வயல். நல்ல விதைகள் பரலோகத்திற்குரிய நல்ல பிள்ளைகள். களைகள் பிசாசின் பிள்ளைகள். 39 பிசாசே களைகளை விதைத்தப் பகைவன். உலகின் [a] முடிவுக் காலமே அறுவடைக் காலம். தேவதூதர்களே அறுவடை செய்பவர்கள்.
40 ,“களைகள் பிடுங்கப்பட்டு தீயிலிடப்படுகின்றன. உலகின் முடிவுக் காலத்திலும் அப்படியே இருக்கும். 41 மனித குமாரன் தனது தேவதூதர்களை அனுப்புவார். அவரது தூதர்கள் பாவம் செய்கிறவர்களைக் கண்டு பிடிப்பார்கள். அத்தூதர்கள் அவர்களை மனிதகுமாரனின் இராஜ்யத்திலிருந்து வெளியேற்றுவார்கள். 42 அவர்களை அத்தேவ தூதர்கள் சூளையின் நெருப்பில் தள்ளுவார்கள். அங்கு அவர்கள் வேதனையால் கூக்குரலிடுவார்கள்; தங்கள் பற்களைக் கடிப்பார்கள். 43 நல்ல மனிதர்கள் சூரியனைப்போல ஒளி வீசுவார்கள். அவர்கள் பிதாவின் அரசாட்சியில் இருப்பார்கள். என் வார்த்தைகளைக் கேட்பவர்களே, இதை கவனித்துக்கொள்ளுங்கள்.
புதையல், முத்து பற்றி உவமைகள்
44 ,“பரலோக இராஜ்யம் புதைத்து வைக்கப்பட்ட செல்வத்தைப் போன்றது. புதைத்து வைக்கப்பட்ட செல்வத்தை ஒருவன் ஒருநாள் கண்டு பிடித்தான். புதையல் கிடைத்ததால் அவன் மிக மகிழ்ந்தான். மீண்டும் அவன் அச்செல்வத்தைப் புதைத்து வைத்து அந்த நிலத்தை வாங்குவதற்காகத் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்றான்.
45 ,“மேலும், பரலோக இராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடும் வியாபாரியைப் போன்றது. 46 ஒரு நாள் அவ்வியாபாரி மிகச் சிறந்த முத்து ஒன்றைக் கண்டான். அம்முத்தை வாங்குவதற்காகத் தன்னிடமிருந்த அனைத்தையும் அந்த வியாபாரி விற்றான்.
வலையைப் பற்றிய உவமை
47 ,“பரலோக இராஜ்யம் ஏரியில் விரிக்கப்பட்ட வலையைப் போன்றது, ஏரியில் விரிக்கப்பட்ட ஒரு வலை, பலவகையான மீன்களைப் பிடித்தது. 48 நிரம்பிய வலையை, மீனவர்கள் கரைக்கு இழுத்தனர். நல்ல மீன்களை மீனவர்கள் ஒரு கூடையிலிட்டனர். பின், தகுதியற்ற மீன்களைத் தூர எறிந்தனர். 49 இவ்வுலகின் முடிவுக் காலத்திலும் அவ்வாறே நடக்கும். தேவதூதர்கள் வந்து நல்ல மனிதர்களைத் தீயவர்களிடமிருந்து பிரிப்பார்கள். 50 அந்தத் தேவதூதர்கள் தீயவர்களைச் சூளையின் நெருப்பில் எறிவார்கள் அங்கு அவர்கள் வலியினால் கூக்குரலிட்டுப் பற்களைக் கடிப்பார்கள்.”
51 பிறகு, இயேசு தம் சீஷர்களிடம்,, “உங்களுக்கு இவைகள் புரிகின்றனவா?” என்று கேட்டார். சீஷர்கள்,, “ஆம், எங்களுக்குப் புரிகின்றன” என்று பதிலுரைத்தனர்.
52 பின்பு இயேசு தம் சீஷர்களிடம்,, “பரலோக இராஜ்யத்தைப்பற்றி அறிந்த வேதபாரகர்கள் ஒவ்வொருவரும் ஒரு வீட்டின் சொந்தக்காரனைப் போன்றவர்கள். வீட்டின் சொந்தக்காரன் தன் வீட்டில் புதியதும் பழையதுமான பொருட்களைச் சேமித்து வைத்திருக்கிறான். அவன் புதியதும் பழையதுமான பொருட்களைக் கொண்டு வருகிறான்” என்றார்.
தன் சொந்த ஊரில் இயேசு(C)
53 இந்த உவமைகளைக் கூறி முடித்த இயேசு, அவ்விடத்தை விட்டு அகன்று, 54 தாம் வளர்ந்த நகருக்குச் சென்றார். ஜெப ஆலயங்களில் இயேசு மக்களுக்குப் போதித்தார். மக்கள் வியப்புற்று, “இம்மனிதன் இந்த ஞானத்தையும் அற்புதங்கள் செய்யும் வல்லமையையும் எங்கிருந்து பெற்றான்? 55 தச்சுத் தொழிலாளியின் மகன்தானே இவன். இவன் தாய் மரியாள். யாக்கோபு, யோசே, சீமோன் மற்றும் யூதா ஆகியோர் இவன் சகோதரர்கள். 56 இவனது எல்லா சகோதரிகளும் நம்முடன் உள்ளார்கள். அப்படியிருந்தும், இந்த ஞானத்தையும் அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமையையும் இம்மனிதன் எங்கிருந்து பெற்றானோ?” என்று பேசிக்கொண்டார்கள். 57 அது மட்டுமின்றி, இயேசுவை ஏற்றுக்கொள்ள மக்கள் மறுத்தனர்.
, “மற்றவர்கள் ஒரு தீர்க்கதரிசிக்கு மதிப்பு கொடுக்கிறார்கள். ஆனால், அத்தீர்க்கதரிசியின் சொந்த நகரத்து மக்களே அவனுக்கு மதிப்பு கொடுக்க மறுக்கிறார்கள்” என்று இயேசு அம்மக்களுக்குச் சொன்னார். 58 அம்மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைக்கவில்லை. எனவே, இயேசு மேலும் பல அற்புதங்களை அங்கு நடத்தவில்லை.
2008 by World Bible Translation Center