Old/New Testament
தேவன் இஸ்ரவேலுக்கு வாக்குறுதி தருதல்
46 எனவே, இஸ்ரவேல் எகிப்துக்குப் பயணம் தொடங்கினான். அவன் முதலில் பெயெர்செபாவுக்குப் போனான். அவன் அங்கே தன் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனைத் தொழுதுகொண்டு, பலிகளும் செலுத்தினான். 2 இரவில் தேவன் கனவில் இஸ்ரவேலிடம் பேசினார். தேவன், “யாக்கோபே, யாக்கோபே” என்று கூப்பிட்டார்.
“நான் இங்கே இருக்கிறேன்” என்றான் இஸ்ரவேல்.
3 அப்பொழுது அவர், “நான் தேவன், உன் தந்தைக்கும் தேவன். எகிப்திற்குப் போகப் பயப்படவேண்டாம். அங்கு உன்னைப் பெரிய இனமாக்குவேன். 4 உன்னோடு நானும் எகிப்துக்கு வருவேன். மீண்டும் உன்னை எகிப்திலிருந்து வெளியே வரவழைப்பேன். நீ எகிப்திலேயே மரணமடைவாய். ஆனால் யோசேப்பு உன்னோடு இருப்பான். நீ மரிக்கும்போது அவன் தன் கையாலேயே உன் கண்களை மூடுவான்” என்றார்.
இஸ்ரவேல் எகிப்துக்குப் போகிறான்
5 பிறகு, யாக்கோபு பெயர்செபாவை விட்டு எகிப்துக்குப் பயணம் செய்தான். அவனது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், அவர்களின் மனைவிமார்களும் எகிப்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் பார்வோன் மன்னன் அனுப்பிய வண்டியில் பயணம் செய்தனர். 6 தங்கள் ஆடு மாடுகளையும் கானான் பகுதியில் சம்பாதித்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு எகிப்துக்குப் போனார்கள். எனவே இஸ்ரவேல் தன் குடும்பத்தோடும் தன் எல்லாப் பிள்ளைகளோடும் எகிப்திற்குச் சென்றான். 7 அவர்களோடு அவனது பிள்ளைகளும் பேரன்களும், பேத்திகளும், இருந்தனர். மொத்த குடும்பமும் அவனோடு எகிப்தை அடைந்தது.
யாக்கோபின் குடும்பம்
8 எகிப்துக்கு இஸ்ரவேலோடு சென்ற அவனது மகன்களின் பெயர்களும் குடும்பத்தின் பெயர்களும் பின்வருமாறு:
ரூபன் முதல் மகன். 9 ரூபனுக்கு ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ ஆகிய மகன்கள் இருந்தனர்.
10 சிமியோனுக்கு எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய பெண்ணின் மகனான சவுல் ஆகிய பிள்ளைகள் இருந்தனர்.
11 கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் பிள்ளைகள்.
12 ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா ஆகியோர் யூதாவின் பிள்ளைகள். (ஏர் மற்றும் ஓனான் கானானில் இருக்கும்போதே மரணமடைந்தனர்) எஸ்ரோன், ஆமூல் இருவரும் பாரேசுடைய குமாரர்.
13 தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள் இசக்காரின் பிள்ளைகள்.
14 செரேத், ஏலோன், யக்லேல் ஆகியோர் செபுலோனுடைய பிள்ளைகள்.
15 யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த பிள்ளைகள் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் ஆகியோர். அவள் இக்குழந்தைகளை பதான் ஆராமில் பெற்றாள். அவளுக்கு தீனாள் என்ற மகளும் உண்டு. மொத்தம் 33 பேர்கள் இருந்தனர்.
16 காத்துக்கு சிபியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி எனும் பிள்ளைகள் இருந்தனர்.
17 ஆசேருக்கு, இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா எனும் பிள்ளைகள் இருந்தனர். இவர்களுக்கு செராக்கு எனும் சகோதரி இருந்தாள். பெரீயாவுக்கு ஏபேர், மல்கியேல் என்ற பிள்ளைகள் இருந்தனர்.
18 இவர்கள் அனைவரும் யாக்கோபின் மனைவியான லேயாளின் வேலைக்காரப் பெண் சில்பாவுக்குப் பிறந்தவர்கள். அவர்கள் மொத்தம் 16 பேர்.
19 யாக்கோபின் மனைவியான ராகேலுக்கு இரண்டு பிள்ளைகள், யோசேப்பும் பென்ய மீனும். பென்யமீன் யாக்கோபோடு இருந்தான். யோசேப்பு ஏற்கெனவே எகிப்தில் இருந்தான்.
20 எகிப்தில் யோசேப்புக்கு இரண்டு மகன்கள். அவர்கள் மனாசேயும் எப்பிராயீமும். அவன் மனைவி ஆஸ்நாத், ஓன் நகரத்து ஆசாரியனாகிய போத்திப்பிராவின் மகள்.
21 பென்யமீனுக்கு பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்னும் பிள்ளைகள்.
22 இவர்கள் அனைவரும் யாக்கோபிற்கு ராகேல் மூலம் வந்தவர்கள். மொத்தம் 14 பேர்.
23 தாணின் மகன் உசீம்.
24 நப்தலியின் மகன்களான யாத்சியேல், கூனி, எத்சேர், சில்லேம் என்பவர்கள்.
25 இவர்கள் யாக்கோபிற்கும் பில்காளுக்கும் பிறந்தவர்கள். (பில்காள் ராகேலின் வேலைக்காரி.) மொத்தம் ஏழு பேர்.
26 ஆக மொத்தம் யாக்கோபு குடும்பத்தின் நேர் சந்ததியார் 66 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் எகிப்துக்குச் சென்றார்கள். இதில் யாக்கோபு மருமகள்கள் பெயர் சேர்க்கப்படவில்லை. 27 யோசேப்புக்கும் இரண்டு பிள்ளைகள். அவர்கள் எகிப்திலேயே பிறந்தவர்கள். எனவே ஒட்டுமொத்தமாக 70 பேர் யாக்கோபு குடும்பத்தில் இருந்தனர்.
இஸ்ரவேல் எகிப்து வந்தடைதல்
28 முதலில் யாக்கோபு யூதாவை யோசேப்போடு பேச அனுப்பினான். யூதா யோசேப்பிடம் போய் அவனை கோசேனில் பார்த்தான். பிறகு யாக்கோபும் மற்றவர்களும் அவனோடு போனார்கள். 29 யோசேப்பு தன் தந்தை வருவதை அறிந்து தன் தேரைத் தயார் செய்து அவரை எதிர்கொண்டழைக்கப் போனான். அவன் தன் தந்தையைப் பார்த்ததும் ஓடிப்போய் மார்போடு கட்டிப்பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் அழுதான்.
30 இஸ்ரவேல் யோசேப்பிடம், “இப்போது நான் சமாதானமாக மரிப்பேன். உன் முகத்தைப் பார்த்துவிட்டேன். இன்னும் நீ உயிரோடு இருக்கிறாயே” என்றான்.
31 யோசேப்பு தன் சகோதரர்களிடமும் அவர்களின் குடும்பத்தினரிடமும், “நான் இப்போது போய் பார்வோன் மன்னரிடம் நீங்கள் இங்கே இருப்பதைப்பற்றிக் கூறுவேன். அவரிடம், ‘என் சகோதரர்களும் அவர்களது குடும்பமும் கானான் நாட்டை விட்டு என்னிடம் வந்திருக்கிறார்கள். 32 அவர்கள் மேய்ப்பர் குடும்பத்தினர். அவர்கள் எப்போதும் ஆடு மாடுகள் வைத்திருப்பார்கள். அவர்கள் ஆடு மாடுகளையும் அவர்களுக்குரிய அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறார்கள்’ என்பேன். 33 அவர் உங்களை அழைத்து ‘நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், 34 அவரிடம் நீங்கள் ‘நாங்கள் மேய்ப்பர்கள், எங்கள் வாழ்க்கை முழுவதும் மேய்ப்பது தான் எங்கள் தொழில். எங்கள் முற்பிதாக்களும் மேய்ப்பர்கள்தான்’ என்று சொல்லுங்கள். பிறகு பார்வோன் மன்னன் உங்களை கோசேன் பகுதியில் வாழ அனுமதிப்பார். எகிப்தியர்கள் மேய்ப்பர்களை விரும்பமாட்டார்கள். எனவே நீங்கள் இங்கே கோசேனில் இருப்பதுதான் நல்லது” என்றான்.
இஸ்ரவேல் கோசேனில் குடியேறுதல்
47 யோசேப்பு பார்வோனிடம் சென்று, “எனது தந்தையும் சகோதரர்களும் அவர்களின் குடும்பமும் வந்துள்ளது. அவர்கள் தங்கள் மிருகங்களையும், பொருட்களையும் கொண்டுவந்துள்ளனர். அவர்கள் இப்போது கோசேன் பகுதியில் உள்ளனர்” என்றான். 2 யோசேப்பு தம் சகோதரர்களில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து அழைத்துச் சென்று பார்வோன் முன் நிறுத்தினான்.
3 பார்வோன் அவர்களிடம், “நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.
அவர்கள், “ஐயா, நாங்கள் மேய்ப்பர்கள். எங்கள் முற்பிதாக்களும் மேய்ப்பர்கள்” என்றனர். 4 மேலும், “கானான் நாட்டில் பஞ்சம் அதிகம். எங்கள் மிருகங்களுக்கு அங்கே புல் மிகுந்த வயல் எதுவுமே இல்லை. எனவே, இங்கே வாழ்வதற்காக வந்துள்ளோம். கோசேனில் வாழ அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.
5 பார்வோன் யோசேப்பிடம், “உனது தந்தையும் சகோதரர்களும் உன்னிடம் வந்திருக்கிறார்கள். 6 எனவே, நீ எந்த இடத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அவர்களுக்கு நல்ல நிலத்தைக் கொடு. அவர்கள் வேண்டுமானால் கோசேனிலேயே வாழட்டும். அவர்கள் திறமையுள்ள மேய்ப்பர்கள் என்றால் எனது ஆடுமாடுகளையும் பார்த்துக்கொள்ளலாம்” என்றான்.
7 யோசேப்பு தன் தந்தையை பார்வோனைப் பார்ப்பதற்காக அழைத்தான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.
8 பார்வோன் அவனிடம், “உங்களுக்கு எத்தனை வயதாகிறது?” என்று கேட்டான்.
9 “ஏராளமான துன்பங்களோடு மிகக் குறுகிய காலமே வாழ்ந்திருக்கிறேன். என் வயது 130 ஆண்டுகளே. எனது தந்தையும் அவருடைய முற்பிதாக்களும் என்னைவிட அதிகக் காலம் வாழ்திருக்கிறார்கள்” என்றான்.
10 யாக்கோபு பார்வோனை வாழ்த்தி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.
11 பார்வோன் சொன்னதுபோலவே யோசேப்பு தந்தைக்கும் சகோதரர்களுக்கும் நல்ல நிலத்தை கோசேனில் கொடுத்தான். இது எகிப்திலேயே சிறந்த இடம். இது ராமசேஸ் நகரத்துக்கு அருகில் உள்ளது. 12 யோசேப்பு தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் குடும்பத்துக்கும் வேண்டிய உணவுப் பொருட்களையும் கொடுத்தான்.
யோசேப்பு பார்வோனுக்காக நிலம் வாங்குதல்
13 பஞ்சம் மிகவும் மோசமாகியது. பூமியில் எங்கும் உணவு இல்லை. எகிப்தும் கானானும் இக்காலத்தில் மிகவும் மோசமாகியது. 14 ஜனங்கள் நிறைய தானியங்களை விலைக்கு வாங்கினார்கள். யோசேப்பு அச்செல்வத்தைச் சேர்த்து வைத்து பார்வோனின் வீட்டிற்குக் கொண்டு வந்தான். 15 கொஞ்ச காலத்தில் எகிப்திலும் கானானிலும் உள்ள ஜனங்களிடம் தானியம் வாங்கப் பணம் இல்லை. தம்மிடம் இருந்த பணத்தை ஏற்கெனவே தானியம் வாங்குவதில் செலவழித்திருந்தார்கள். எனவே அவர்கள் யோசேப்பிடம் சென்று, “தயவு செய்து தானியம் கொடுங்கள். எங்கள் பணம் தீர்ந்துவிட்டது. நாங்கள் உணவு உண்ணாவிட்டால் உங்கள் முன்னாலேயே மரித்துவிடுவோம்” என்று வேண்டினார்கள்.
16 ஆனால் யோசேப்போ, “உங்கள் ஆடு மாடுகளைக் கொடுங்கள் உணவு தருகிறேன்” என்றான். 17 எனவே ஜனங்கள் தங்கள் ஆடு மாடுகளையும் குதிரைகளையும் மற்ற மிருகங்களையும் உணவுக்காக விற்றனர். யோசேப்பு அவற்றை வாங்கிக்கொண்டு உணவைக் கொடுத்தான்.
18 ஆனால் அடுத்த ஆண்டு அவர்களிடம் விற்க மிருகங்களும் இல்லை. எனவே, யோசேப்பிடம் ஜனங்கள் போய், “எங்களிடம் உணவு வாங்கப் பணம் இல்லை. எங்களது மிருகங்களோ உங்களிடம் உள்ளது. எங்களிடம் எதுவும் இல்லை. எங்கள் சரீரமும், நிலங்களும் மட்டுமே உள்ளது. 19 நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் மரித்துவிடுவோம். ஆனால் நீங்கள் உணவு கொடுத்தால் பார்வோன் மன்னருக்கு எங்கள் நிலங்களைக் கொடுப்போம். நாங்கள் அவரது அடிமைகளாக இருப்போம். விதை கொடுங்கள் விதைக்கிறோம். பிறகு நாங்கள் மரிக்காமல் உயிர் வாழ்வோம். நிலத்தில் மீண்டும் உணவு விளையும்” என்றனர்.
20 எனவே, யோசேப்பு எகிப்தில் உள்ள எல்லா நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிவிட்டான். அனைவரும் தங்கள் நிலங்களை யோசேப்பிடம் விற்றுவிட்டார்கள், அவர்கள் பசியாய் இருந்ததால் இவ்வாறு செய்தார்கள். 21 எகிப்திலே, எல்லோரும் பார்வோன் மன்னனின் அடிமைகள் ஆனார்கள். 22 ஆசாரியர்களுக்கு உரிய நிலத்தை மட்டுமே யோசேப்பு வாங்கவில்லை. அவர்களின் உணவுக்கு ஆசாரியர்கள் தங்கள் நிலத்தை விற்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. ஏனெனில் மன்னன் தேவையானவற்றைச் சம்பளமாகக் கொடுத்து வந்தான். அதையே உணவு வாங்க வைத்துக்கொண்டனர்.
23 யோசேப்பு ஜனங்களிடம், “இப்போது நான் உங்கள் நிலத்தையும் உங்களையும் பார்வோனுக்காக வாங்கிவிட்டேன். எனவே விதை கொடுக்கிறேன். நீங்கள் அந்நிலங்களில் பயிர் செய்யுங்கள். 24 அறுவடைக் காலத்தில், நீங்கள் ஐந்தில் ஒரு பாகம் எங்களுக்குக் கொடுக்க வேண்டும். ஐந்தில் நான்கு பாகம் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். அதில் விதை வைத்திருந்து அடுத்த ஆண்டுக்குப் பயன்படுத்தலாம். இப்போது உங்கள் குழந்தைகளுக்கும் குடும்பத்துக்கும் உணவு கொடுக்கலாம்” என்றான்.
25 ஜனங்களோ, “எங்கள் உயிரைக் காப்பாற்றினீர்கள். நாங்கள் பார்வோனுக்கு அடிமையாக இருப்பதில் மகிழ்கிறோம்” என்றனர்.
26 எனவே, யோசேப்பு அப்போது ஒரு சட்டத்தை இயற்றினான். அது இன்றும் உள்ளது. அதன்படி நில வருவாயில் ஐந்தில் ஒரு பாகமானது பார்வோனுக்குரியது. பார்வோனுக்கு எல்லா நிலமும் சொந்தமாக இருக்கும். ஆசாரியர்களின் நிலம் மட்டுமே, பார்வோனுக்குச் சொந்தமாகவில்லை.
“தன் மரணம் பற்றி யாக்கோபின் அறிவிப்பு”
27 இஸ்ரவேல் (யாக்கோபு) எகிப்தில் கோசேன் பகுதியில் வாழ்ந்தான். அவனது குடும்பம் வளர்ந்து மிகப் பெரியதாகி அப்பகுதியில் நன்றாக வாழ்ந்தனர்.
28 யாக்கோபு எகிப்தில் 17 ஆண்டுகள் வாழ்ந்தான். எனவே அவனுக்கு 147 வயது ஆனது. 29 தான் விரைவில் மரித்துப் போவேன் என்று இஸ்ரவேலுக்குத் (யாக்கோபு) தெரிந்தது. அவன் யோசேப்பை அழைத்து அவனிடம்: “நீ என்னை நேசித்தால், உன் கையை என் தொடையின் கீழ் வைத்து ஒரு வாக்குறுதியைச் செய். நான் சொல்வதை நீ செய்யவேண்டும். எனக்கு உண்மையாக இருக்கவேண்டும். நான் மரித்தால் என்னை எகிப்தில் அடக்கம் செய்யவேண்டாம். 30 எனது முற்பிதாக்களை அடக்கம் செய்த இடத்திலேயே என்னையும் அடக்கம் செய்துவிடு. இங்கிருந்து கொண்டுபோய் நமது குடும்பக் கல்லறையில் என்னை அடக்கம் செய்” என்றான்.
யோசேப்பு, “நீர் சொன்னபடியே நான் செய்வேன் என்று வாக்குறுதி செய்கிறேன்” என்றான்.
31 பிறகு யாக்கோபு, “எனக்கு வாக்கு கொடு” என்று கேட்டான். யோசேப்பும் அவ்வாறே வாக்குறுதி அளித்தான். பின் இஸ்ரவேல் (யாக்கோபு) படுக்கையில் தன் தலையைச் சாய்த்தான்.
மனாசேயையும் எப்பிராயீமையும் ஆசீர்வதித்தல்
48 கொஞ்ச காலத்திற்குப் பிறகு, யோசேப்பு தன் தந்தை உடல் நலம் குன்றி இருப்பதை அறிந்தான். ஆகவே அவன் மனாசே மற்றும் எப்பிராயீம் எனும் தன் இரண்டு மகன்களையும் அவனிடம் அழைத்து சென்றான். 2 யோசேப்பு போய்ச் சேர்ந்தபோது ஒருவர், “உங்கள் மகன் யோசேப்பு உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்” என்று யாக்கோபிடம் சொன்னார். அவன் பலவீனமானவராக இருப்பினும் கஷ்டப்பட்டு எழுந்து உட்கார முயன்றான்.
3 அவன் யோசேப்பிடம், “சர்வ வல்லமையுள்ள தேவன் கானான் நாட்டிலுள்ள லூஸ் என்னுமிடத்தில் என் முன் தோன்றி அங்கே என்னை ஆசீர்வதித்தார். 4 தேவன் என்னிடம், ‘உன்னைப் பெரிய குடும்பமாக செய்வேன். நிறைய குழந்தைகளைத் தருவேன். நீங்கள் பெரிய இனமாக வருவீர்கள். உன் குடும்பம் இந்த நிலத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும்’ என்றார். 5 இப்போது உனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நான் வருவதற்கு முன்னரே அவர்கள் இந்த எகிப்து நாட்டில் பிறந்திருக்கிறார்கள். உன் பிள்ளைகள் எனது சொந்தப் பிள்ளைகளைப் போன்றவர்கள். அவர்கள் எனக்கு சிமியோனையும் ரூபனையும் போன்றவர்கள். 6 எனவே இந்த இருவரும் என் பிள்ளைகள். எனக்குரிய அனைத்தையும் இவர்களுக்குப் பங்கிட்டுத் தருகிறேன். ஆனால் உனக்கு வேறு குழந்தைகள் பிறந்தால் அவர்கள் உன் பிள்ளைகள். ஆனால் அவர்கள் மனாசேக்கும் எப்பிராயீமுக்கும் பிள்ளைகள் போல் இருப்பார்கள். எனவே, வருங்காலத்தில் இவர்களுக்குரியவற்றை அவர்களும் பங்கிட்டுக்கொள்வார்கள். 7 பதான் அராமிலிருந்து வரும்போது ராகேல் மரித்துப்போனாள். அது என்னை மிகவும் வருத்தத்திற்குள்ளாக்கியது. அவள் கானான் நாட்டிலேயே மரித்தாள். நாங்கள் எப்பிராத்தாவை நோக்கி வந்தோம். சாலையோரத்தில் அவளை அடக்கம் செய்தோம்” என்றான். (எப்பிராத்தா என்பது பெத்லகேமைக் குறிக்கும்.)
8 பின் இஸ்ரவேல் யோசேப்பின் பிள்ளைகளைப் பார்த்து, “இவர்கள் யார்?” என்று கேட்டார்.
9 யோசேப்பு தந்தையிடம், “இவர்கள் என் பிள்ளைகள், எனக்குத் தேவன் கொடுத்த மகன்கள்” என்றான்.
இஸ்ரவேல் அவனிடம், “என்னிடம் அவர்களை அழைத்து வா, நான் அவர்களை ஆசீர்வதிக்கிறேன்” என்றான்.
10 இஸ்ரவேலுக்கு வயதானதால் கண்களும் சரியாகத் தெரியவில்லை. எனவே, யோசேப்பு தன் மகன்களை மிக அருகில் அழைத்து வந்தான். இஸ்ரவேல் அவர்களை முத்தமிட்டு அணைத்துகொண்டான். 11 பிறகு அவன் யோசேப்பிடம், “நான் உனது முகத்தை மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் தேவன் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்க்கும்படி செய்துவிட்டார்” என்றான்.
12 பிறகு யோசேப்பு தன் மகன்களை இஸ்ரவேலின் மடியில் இருந்து இறக்கிவிட்டான். அவர்கள் அவரைக் குனிந்து வணங்கினார்கள். 13 யோசேப்பு எப்பிராயீமை தனது வலது பக்கத்திலும் மனாசேயை தனது இடது பக்கத்திலும் அமர வைத்தான். 14 ஆனால் இஸ்ரவேல் தனது கைகளைக் குறுக்காக வைத்து வலது கையை இளையவன் மீதும் இடது கையை மூத்தவன் மீதும் வைத்து ஆசீர்வாதம் செய்தான். மனாசே மூத்தவனாக இருப்பினும் அவன் மீது இடது கையை வைத்து ஆசீர்வதித்தான். 15 இஸ்ரவேல் யோசேப்பையும் ஆசீர்வதித்தான். அவன்,
“என் முற்பிதாக்களான ஆபிரகாமும் ஈசாக்கும் நம் தேவனை வழிபட்டனர்.
அதே தேவன் என் வாழ்க்கை முழுவதும் என்னை வழி நடத்தினார்.
16 எனது அனைத்து துன்பங்களிலும் என்னைக் காப்பாற்றும் தேவதூதனாக இருந்தார்.
இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும்படி அந்த தேவனை வேண்டுகிறேன்.
இப்போது இவர்கள் எனது பெயரையும், எனது முற்பிதாக்களான ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் பெயரையும் பெறுவார்கள்.
இவர்கள் வளர்ந்து மகத்தான குடும்பமாகவும், தேசமாகவும் இப்பூமியில் விளங்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்றான்.
17 யோசேப்பு தன் தந்தை வலது கையை எப்பிராயீம் மீது வைத்திருப்பதைப் பார்த்தான். இது யோசேப்புக்கு மகிழ்ச்சி தரவில்லை. யோசேப்பு தன் தந்தையின் வலது கையை எப்பிராயீம் தலையிலிருந்து எடுத்து மனாசேயின் தலையில் வைக்க விரும்பினான். 18 அவன் தன் தந்தையிடம், “உமது வலது கையைத் தவறாக வைத்திருக்கிறீர், மனாசேதான் முதல் மகன்” என்றான்.
19 ஆனால் யாக்கோபோ, “எனக்குத் தெரியும் மகனே! மனாசேதான் மூத்தவன், அவன் பெரியவன் ஆவான். அவனும் ஏராளமான ஜனங்களின் தந்தையாவான். ஆனால் இளையவனே மூத்தவனைவிட பெரியவனாவான். அவனது குடும்பமும் மிகப் பெரியதாக இருக்கும்” என்றான்.
20 இவ்விதமாக இஸ்ரவேல் அன்று அவர்களை ஆசீர்வதித்தான்.
“இஸ்ரவேலின் ஜனங்கள் உங்கள் பெயரைப் பயன்படுத்தி
மற்றவரை வாழ்த்துவார்கள்.
அவர்கள், ‘எப்பிராயீமும் மனாசேயும்போல
தேவன் உங்களை வாழ வைக்கட்டும் என்பார்கள்’” என்றான்.
இவ்வாறு இஸ்ரவேல் எப்பீராயிமை மனாசேயைவிடப் பெரியவனாக்கினான்.
21 பிறகு இஸ்ரவேல் யோசேப்பிடம், “பார், நான் மரிப்பதற்குரிய காலம் நெருங்கிவிட்டது. ஆனாலும் தேவன் உன்னோடு இருக்கிறார். அவர் உன்னை உன் முற்பிதாக்களின் பூமிக்கு வழி நடத்திச் செல்வார். 22 நான் உன் சகோதரர்களுக்குக் கொடுக்காத சிலவற்றை உனக்குக் கொடுத்திருக்கிறேன். எமோரிய ஜனங்களிடம் இருந்து நான் வென்ற மலையை உனக்குக் கொடுத்திருக்கிறேன். நான் என் பட்டயத்தையும், வில்லையும் பயன்படுத்தி அதை நான் வென்றேன்” என்றான்.
விதையைப் பற்றிய உவமை(A)
13 அன்றையத் தினமே இயேசு வீட்டை விட்டு வெளியில் சென்று ஏரிக்கரையில் அமர்ந்தார். 2 ஏராளமான மக்கள் அவரைச் சூழ்ந்தனர். எனவே இயேசு ஒரு படகில் ஏறி அமர்ந்தார். மக்கள் ஏரிக்கரையோரம் அமர்ந்தார்கள். 3 பிறகு உவமைகளின் மூலமாக இயேசு மக்களுக்குப் பலவற்றையும் போதித்தார்.
இயேசு,, “ஒரு விவசாயி விதைகளை விதைக்கப் போனான். 4 அவன் விதைகளைத் தூவியபோது, சில விதைகள் பாதையோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவை யாவற்றையும் தின்றுவிட்டன. 5 சில விதைகள் பாறைகளின் மேல் விழுந்தன. அங்கு போதுமான அளவிற்கு மண் இல்லை. எனவே, விதைகள் வேகமாக முளைத்தன. 6 ஆனால் சூரியன் உதித்ததும், அவை கருகிப்போயின. ஆழமான வேர்கள் இல்லாமையால் அச்செடிகள் காய்ந்தன. 7 இன்னும் சில விதைகள் முட்புதர்களுக்கிடையில் விழுந்தன. களைகள் முளைத்து அந்த விதைகளின் செடிகள் வளராதவாறு தடுத்தன. 8 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அந்நிலத்தில், விதைகள் முளைத்து நன்கு வளர்ந்தன. சில செடிகள் நூறு மடங்கு தானியங்களைக் கொடுத்தன. சில அறுபது மடங்கும் சில முப்பது மடங்கும் தானியங்களைக் கொடுத்தன. 9 நான் சொல்வதைக் கேட்கிறவர்களே, கவனியுங்கள்” என்று இயேசு கூறினார்.
உவமைகள் ஏன்?(B)
10 இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து,, “மக்களுக்குப் போதனை செய்ய நீங்கள் ஏன் இந்த உவமைகளைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டனர்.
11 இயேசு மறுமொழியாக,, “பரலோக இராஜ்யத்தின் இரகசியங்களை நீங்கள் மட்டுமே அறிய முடியும். அவற்றை மற்றவர்கள் அறிய முடியாது. 12 சிறிது புரிந்தவன் மேலும் விளக்கம் பெறுவான். தேவையானதை விடவும் அவனுக்கு அதிகம் கிடைக்கும். அதிகம் புரியாதவன், தான் அறிந்ததையும் இழப்பான். 13 அதனால் தான் நான் மக்களுக்கு உவமைகளின் மூலம் போதனை செய்கிறேன். மக்கள் பார்க்கிறார்கள்; கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் பார்ப்பதுமில்லை, புரிந்துகொள்வதுமில்லை. 14 எனவே ஏசாயா தீர்க்கதரிசி இவர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு சொன்னது உண்மை என்பதை இம்மக்கள் காட்டுகிறார்கள்:
, “‘மக்களே! நீங்கள் கவனித்து கேட்பீர்கள்.
ஆனாலும் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.
மக்களே! நீங்கள் நோக்கி பார்ப்பீர்கள்.
ஆனாலும், நீங்கள் பார்ப்பதைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.
15 ஆம், இறுகியிருக்கிறது இம்மக்களின் மனம்.
காதுகளிருந்தும் கேட்பதில்லை.
உண்மையைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்.
தங்கள் காதால் கேளாதிருக்கவும்
தங்கள் கண்ணால் பார்க்காதிருக்கவும்
தங்கள் மனதால் அறியாதிருக்கவும்
இவ்வாறு நடந்துள்ளது.
குணம் பெற என்னிடம் வராதிருக்குமாறும் இவ்வாறு நடந்துள்ளது.’ (C)
16 ஆனால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கண்களால் பார்ப்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். காதால் கேட்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். 17 நான் உண்மையைச் சொல்லுகிறேன், பல தீர்க்கதரிசிகளும் நல்லவர்களும் நீங்கள் இப்பொழுது காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் இவற்றைக் காணவில்லை. நீங்கள் இப்பொழுது கேட்பவற்றைக் கேட்பதற்குப் பல தீர்க்கதரிசிகளும் நல்லவர்களும் விரும்பினார்கள். ஆனால், அவர்கள் இவற்றைக் கேட்கவில்லை.
விதைகளின் உவமையின் விளக்கம்(D)
18 ,“எனவே, விவசாயியைப் பற்றிய உவமையின் பொருளைக் கவனியுங்கள்:
19 ,“சாலையின் ஓரம் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது பரலோக இராஜ்யத்தைப் பற்றிக் கேள்வியுற்றும் அதைப் புரிந்துகொள்ளாத மனிதனைக் குறிக்கிறது. அவனது மனதில் விதைக்கப்பட்டவற்றைச் சாத்தான் கவர்ந்துகொள்கிறான்.
20 ,“பாறைகளின் மேல் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது போதனைகளைக் கேட்டு உடனடியாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. 21 அவன் போதனைகளைத் தன் மனதில் ஆழமாகப் பதிய வைத்துத் கொள்வதில்லை. அவன் போதனைகளைத் தன் மனதில் குறைந்த காலத்திற்கே வைத்திருக்கிறான். போதனைகளை ஏற்றுக்கொண்டதினால் உபத்திரவமோ, துன்பமோ ஏற்படும்பொழுது, அவன் விரைவாக அதை விட்டு விடுகிறான்.
22 ,“முட்புதருக்கிடையில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது போதனைகளைக் கேட்டும் இவ்வுலக வாழ்வின் மீதும் பணத்தின் மீதும் கொண்ட ஆசையினால் போதனைகள் தன்னுள் நிலையாதிருக்கச் செய்பவனைக் குறிக்கிறது. எனவே, போதனைகள் அவன் வாழ்வில் பயன் [a] விளைவிப்பதில்லை.
23 ,“ஆனால், நல்ல நிலத்தில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அவ்விதை போதனைகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அத்தகைய மனிதன் வளர்ந்து, சில சமயம் நூறு மடங்கும் சில சமயம் அறுபது மடங்கும் சில சமயம் முப்பது மடங்கும் பலன் தருகிறான்” என்றார்.
கோதுமை, களையின் உவமை
24 பிறகு, இயேசு மற்றொரு உவமையின் மூலம் போதனை செய்தார்., “பரலோக இராஜ்யம் தனது வயலில் நல்ல விதையை விதைத்த மனிதனைப் போன்றது. 25 அன்றைக்கு இரவில், அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். அவனது பகைவன் வந்து கோதுமை விதைகளுக்கிடையில் களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். 26 பிறகு, கோதுமை விதைகள் முளைவிட்டன. செடிகள் முளைத்தன. ஆனால், அதே சமயம் களைகளும் முளைத்தன. 27 அவனது வேலைக்காரர்கள் அவனிடம் சென்று, ‘நல்ல விதைகளையே நீங்கள் உங்கள் வயலில் விதைத்தீர்கள். ஆனால், களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள்.
28 ,“அதற்கு அவன், ‘ஒரு பகைவன் களைகளை விதைத்துவிட்டான்’ என்றான்.
, “வேலைக்காரர்கள், ‘நாங்கள் களைகளை நீக்க வேண்டுமா?’ என்று கேட்டார்கள்.
29 ,“அதற்கு அந்த விவசாயி, ‘தேவையில்லை. ஏனென்றால், நீங்கள் களையெடுக்கும்பொழுது கோதுமை செடிகளையும் பிடுங்குவீர்கள். 30 களைகளும் கோதுமையும் அறுவடைக் காலம்வரையிலும் ஒன்றாக வளரட்டும். அறுவடையின்பொழுது அறுவடை செய்பவர்களிடம் நான், முதலில் களைகளைத் தீயிலிடுவதற்காகச் சேர்த்துக் கட்டுங்கள், பின்னர் கோதுமையைச் சேகரித்து என் களஞ்சியத்திற்குக் கொண்டு வாருங்கள் என்று சொல்வேன்’ எனப் பதில் சொன்னான்” என்று இயேசு கூறினார்.
2008 by World Bible Translation Center