Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 39-40

யோசேப்பு போத்திபாரிடம் விற்கப்படுகிறான்

39 யோசேப்பை வாங்கிய வியாபாரிகள் அவனை எகிப்தில் பார்வோனின் படைத் தலைவன் போத்திபாரிடம் விற்றார்கள். ஆனால் கர்த்தர் அவனுக்கு உதவினார். யோசேப்பு ஒரு வெற்றியுள்ள மனிதன் ஆனான். அவன் தன் எஜமானனின் வீட்டில் வசித்தான்.

கர்த்தர் யோசேப்போடு இருப்பதையும், அவன் செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தரின் உதவியால் வெற்றி பெறுவதையும் பார்த்தான். அதனால் யோசேப்பைப்பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். எனவே, தனக்காக யோசேப்பு வேலை செய்வதை அனுமதித்ததுடன், தன் வீட்டைக் கவனித்துக்கொள்ளவும் வைத்தான். போத்திபாருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் யோசேப்பு ஆளுகை செய்தான். யோசேப்பைத் தனது வீடு முழுவதற்கும் அதிகாரியாக்கியதும் கர்த்தர் அந்த வீட்டையும், போத்திபாருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார். இவை அனைத்தையும் கர்த்தர் யோசேப்புக்காகச் செய்தார். போத்திப்பாருக்குரிய வீடு மற்றும் வயல்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். ஆகவே போத்திபார் யோசேப்பிற்கு வீட்டிலுள்ள எல்லா பொறுப்புகளையும் கொடுத்துவிட்டான். அவன் உண்ணும் உணவைத் தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.

யோசேப்பு போத்திபாரின் மனைவியுடன் பாவம் செய்ய மறுத்தல்

யோசேப்பு கம்பீரமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தான். கொஞ்சக் காலம் ஆனதும், யோசேப்பின் எஜமானனின் மனைவி யோசேப்பு மீது ஆசைப்பட ஆரம்பித்தாள். ஒரு நாள் அவனிடம், “என்னோடு பாலின உறவுகொள்ள வா” என்றாள்.

ஆனால் யோசேப்பு மறுத்துவிட்டான். “என் எஜமானன் என்னை நம்பி வீட்டிலுள்ள எல்லாவற்றையும் ஒப்படைத்திருக்கிறார். என் எஜமானன் இந்த வீட்டில் ஏறக்குறைய என்னைத் தனக்குச் சமமாக வைத்திருக்கிறார். நான் அவரது மனைவியோடு பாலின உறவுகொள்ளக் கூடாது. இது தவறு, தேவனுக்கு விரோதமான பாவம்” என்று கூறினான்.

10 அவள் ஒவ்வொரு நாளும் யோசேப்போடு பேசி அவனை அழைத்தாள். அவனோ அவளோடு பாவத்தில் ஈடுபட மறுத்துவிட்டான். 11 ஒரு நாள் அவன் வீட்டிற்குள் வேலை செய்வதற்காகப் போனான். அப்போது வீட்டில் அவன் மட்டும் தான் இருந்தான். 12 அவனது எஜமானனின் மனைவி அவனது அங்கியை பற்றிப் பிடித்து, “என்னோடு பாலின உறவுகொள்ள வா” என்றாள். எனவே அவன் வேகமாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டான். அப்போது அவனது அங்கி அவளது கையில் சிக்கிக்கொண்டது.

13 அவள் அதனைக் கவனித்தாள். நடந்ததைப்பற்றி அவள் பொய்யாகச் சொல்லத் திட்டமிட்டாள். 14 அவள் வீட்டிலுள்ள வேலைக்காரர்களை அழைத்து “பாருங்கள், நம்மை அவமானம் செய்வதற்காக இந்த எபிரெய அடிமை கொண்டு வரப்பட்டுள்ளான். அவன் வந்து என்னோடு படுக்க முயன்றான். 15 நான் சத்தமிட்டதால் அவன் ஓடிப் போய்விட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது” என்று முறையிட்டாள். 16 அவள் அந்த அங்கியை அவள் புருஷன் வரும் வரை வைத்திருந்து, 17 அவனிடமும் அதே கதையைக் கூறினாள். “நீங்கள் கொண்டுவந்த எபிரெய அடிமை என்னைக் கெடுக்கப் பார்த்தான். 18 அவன் என்னருகில் வந்ததும் நான் சத்தமிட்டேன், அவன் ஓடிவிட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது” என்றாள்.

19 யோசேப்பின் எஜமானன் அவனது மனைவி சொன்னதைக் கேட்டு கோபம் கொண்டான். 20 அரசனுடைய பகைவர்களைப் போடுவதற்கென்றிருந்த சிறையிலே போத்திபார் யோசேப்பைப் போட்டுவிட்டான். யோசேப்பு அங்கேயே தங்கினான்.

சிறையில் யோசேப்பு

21 ஆனால் கர்த்தர் யோசேப்போடு இருந்தார். அவர் தொடர்ந்து தனது இரக்கத்தை அவன்மீது காட்டி வந்தார். சிறையதிகாரி யோசேப்பை விரும்ப ஆரம்பித்தான். 22 யோசேப்பை கைதிகளைக் கண்காணிப்பவனாக நியமித்தான். அங்கு நடப்பவற்றுக்கு அவன் பொறுப்பாளியாக்கப்பட்டான். 23 அந்த அதிகாரி அவனை முழுமையாக நம்பினான். கர்த்தர் யோசேப்போடு இருந்ததால் இது இவ்வாறு நடந்தது. அவன் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும் வெற்றிகரமாக்க கர்த்தர் உதவினார்.

யோசேப்பு இரண்டு கனவுகளுக்கு விளக்கம் கூறுதல்

40 பிறகு, பார்வோனுக்கு எதிராக ரொட்டி சுடுபவனும், திராட்சைரசம் கொடுப்பவனுமான இரண்டு வேலைக்காரர்கள் தவறு செய்தனர். அவர்கள் மீது பார்வோனுக்கு மிகுந்த கோபம் இருந்தது. அரசன் அவர்களை யோசேப்பு இருந்த சிறையிலேயே அடைத்துவிட்டான். போத்திபார் இந்தச் சிறையின் பொறுப்பாளன். அதிகாரி, இந்த இருவரையும் யோசேப்பின் கண்காணிப்பில் வைத்தார். இருவரும் சிறையில் கொஞ்சக் காலம் தொடர்ந்து இருந்தனர். ஓரிரவு, இருவருக்கும் கனவு வந்தது. இருவரும் வெவ்வேறு கனவுகளைக் கண்டனர். இருவரும் எகிப்திய அரசனின் வேலைக்காரர்கள். ஒருவன் ரொட்டி சுடுபவன், மற்றொருவன் திராட்சைரசம் கொடுப்பவன். ஒவ்வொன்றுக்கும் தனிதனிப் பொருள் இருந்தது. மறுநாள் காலையில் யோசேப்பு அவர்களிடம் சென்றான். அவர்கள் இருவரும் கவலையாயிருப்பதைக் கண்டான். அவர்களிடம், “ஏன் இவ்வாறு இன்று கவலையோடு இருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

அவர்கள், “நேற்று நாங்கள் இருவரும் கனவு கண்டோம். அதன் பொருள் புரியவில்லை. அதின் பொருளையோ, விளக்கத்தையோ சொல்பவர்கள் யாரும் எங்களுக்கு இல்லை” என்றனர்.

யோசேப்பு அவர்களிடம், “தேவன் ஒருவரே நமது கனவுகளைப் புரிந்துகொண்டு விளக்க வல்லவர். என்னிடம் உங்கள் கனவுகளைக் கூறுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றான்.

திராட்சைரசம் பரிமாறுபவனின் கனவு

திராட்சைரசம் கொடுப்பவன் தன் கனவை யோசேப்பிடம் கூறினான். “என் கனவில் நான் ஒரு திராட்சைக் கொடியைக் கண்டேன். 10 அதில் மூன்று கிளைகள் இருந்தன. அவை வளர்ந்து பூக்கள் விட்டு கனிவதைக் கண்டேன். 11 நான் பார்வோனின் கோப்பையை ஏந்தியிருந்தேன். எனவே அந்தத் திராட்சையைப் பிழிந்து சாறு எடுத்தேன். பிறகு அதனைப் பார்வோனுக்குக் கொடுத்தேன்” என்றான்.

12 பிறகு யோசேப்பு, “இந்தக் கனவை உனக்கு விளக்குவேன். மூன்று கிளைகள் என்பது மூன்று நாட்கள். 13 இன்னும் மூன்று நாளில் பார்வோன் உன்னை மன்னித்து, உன்னை விடுதலை செய்து, முன்பு அவரது கிண்ணம் ஏந்துபவனாக இருந்தது போல் உன்னை ஏற்றுக்கொள்வார். 14 ஆனால் நீ விடுதலையானதும் என்னை நினைத்துக்கொள். எனக்கும் உதவி செய். பார்வோனிடம் என்னைப்பற்றிக் கூறு. அவர் என்னை விடுதலை செய்வார். 15 நான் என் சொந்த எபிரெய நாட்டைவிட்டு இங்கு பலவந்தமாக கொண்டு வரப்பட்டேன். இங்கேயும் நான் தவறு செய்யவில்லை. நான் சிறையில் இருக்க வேண்டியவன் அல்ல” என்றான்.

ரொட்டிச் சுடுபவனின் கனவு

16 ரொட்டி சுடுபவன் மற்றவனின் கனவுக்கு நல்ல பொருள் இருப்பதை அறிந்தான். தன் கனவையும் யோசேப்பிடம் கூறினான். “நானும் ஒரு கனவு கண்டேன். என் தலையில் மூன்று ரொட்டிக் கூடைகள் இருந்தன. 17 மேல் கூடையில் எல்லா வகையான சமைத்த உணவுகளும் இருந்தது. அது பார்வோனுக்கு உரியது. ஆனால் பறவைகள் அவற்றைத் தின்றுகொண்டிருந்தன” என்றான்.

18 யோசேப்பு, “நான் உனக்கு அக்கனவின் பொருளைச் சொல்கிறேன். மூன்று கூடைகள் மூன்று நாட்களைக் குறிக்கும். 19 மூன்று நாள் முடிவதற்குள் நீ வெளியே செல்வாய். அரசன் உன் தலையை வெட்டிவிடுவான். உனது உடலைக் கம்பத்தில் தொங்கவிடுவான். பறவைகள் உன் உடலைத் தின்னும்” என்று சொன்னான்.

யோசேப்பு மறக்கப்படுதல்

20 மூன்று நாளானதும் பார்வோனுடைய பிறந்த நாள் வந்தது. அவன் தன் வேலைக்காரர்களுக்கெல்லாம் விருந்து கொடுத்தான். அதனால் ரொட்டி சுடுபவனையும் திராட்சைரசம் கொடுப்பவனையும் விடுதலை செய்தான். 21 பார்வோன் திராட்சைரசம் கொடுப்பவனுக்கு மீண்டும் வேலை கொடுத்தான். அவனும் பார்வோனிடம் ஒரு கோப்பை திராட்சை ரசத்தை கொடுத்தான். 22 ஆனால் பார்வோன் ரொட்டி சுடுபவனைக் கொன்றுவிட்டான். யோசேப்பு சொன்னதுபோலவே அனைத்தும் நிகழ்ந்தது. 23 ஆனால் திராட்சைரசம் வழங்குபவன் உதவிசெய்ய மறந்துவிட்டான். அவன் யோசேப்பைப்பற்றி பார்வோனிடம் எதுவும் சொல்லவில்லை.

மத்தேயு 11

இயேசுவும் யோவான் ஸ்நானகனும்(A)

11 இயேசு தமது பன்னிரண்டு சீடர்களுக்கும் இவற்றைக் கூறி முடித்தார். பின்னர் அங்கிருந்து கலிலேயாவின் நகரங்களுக்குப் போதனை செய்வதற்காகச் சென்றார்.

யோவான் ஸ்நானகன் சிறையிலிருந்தான். கிறிஸ்து செய்து கொண்டிருந்த பணிகளை யோவான் கேள்வியுற்றான். எனவே, யோவான் தனது சீஷர்கள் சிலரை இயேசுவிடம் அனுப்பினான். யோவானின் சீஷர்கள் இயேசுவைக்கண்டு,, “யோவான் வருவதாகக் கூறிய மனிதர் நீங்கள்தானா அல்லது நாங்கள் வேறொருவரின் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா?” என்று கேட்டனர்.

இயேசு அவர்களிடம்,, “யோவானிடம் திரும்பிச் சென்று நீங்கள் கேள்வியுறுவனவற்றையும் காண்பவற்றையும் கூறுங்கள். குருடர்கள் பார்வை பெறுகிறார்கள். முடவர்கள் நடக்கிறார்கள். தொழு நோயாளிகள் குணமாகிறார்கள். செவிடர்கள் கேட்கும் சக்தி பெறுகிறார்கள். இறந்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழுகிறார்கள். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னை ஏற்றுக்கொள்கிறவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்” என்று பதில் சொன்னார்.

யோவானின் சீஷர்கள் புறப்பட்டுப் போன பின்பு, இயேசு அங்கிருந்த மக்களிடம் யோவானைப் பற்றிப் பேசலானார். இயேசு அவர்களிடம்,, “வானாந்திரத்திற்கு எதைக் காண்பதற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலைக் காண்பதற்காகவா? இல்லை. உண்மையில் எதைக் காணச் சென்றீர்கள்? சிறந்த ஆடைகளை உடுத்திய மனிதனைக் காண்பதற்கா? இல்லை சிறந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிறவர்கள் அரண்மனைகளில்தான் வசிக்கிறார்கள். அப்படியானால் எதைக் காண வனாந்திரத்திற்குப் போனீர்கள்? தீர்க்கதரிசியையா? ஆம், நான் சொல்லுகிறேன், தீர்க்கதரிசியைக் காட்டிலும் யோவான், மேலானவன். 10 ஏற்கெனவே வேதவாக்கியங்களில் யோவானைப்பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

, “‘கவனியுங்கள்! நான் என் உதவியாளை உங்களுக்கு முன்பாக அனுப்புவேன்.
உங்களுக்கான பாதையை அவன் தயார் செய்வான்.’” என்று கூறினார். (B)

11 ,“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், ஞானஸ்நானம் வழங்கும் யோவான் இவ்வுலகில் வாழ்ந்த எந்த மனிதனைக் காட்டிலும் மேலானவன். ஆனால், பரலோக இராஜ்யத்தில் மிகவும் அற்பமான மனிதன் கூட யோவானைக் காட்டிலும் முக்கியமானவன். 12 யோவான் வந்த காலந்தொட்டு இன்றுவரை பரலோக இராஜ்யம் வலுவடைந்து வருகிறது. மக்கள் வலிமையைப் பயன்படுத்திப் பரலோக இராஜ்யத்தை அடைய முயன்று வந்திருக்கிறார்கள். 13 எல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப்பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. நடக்கவிருந்த செயல்களை அவை கூறின. 14 நியாயப்பிரமாணம் கூறியவற்றையும் தீர்க்கதரிசிகள் கூறியவற்றையும் நீங்கள் நம்பினால், யோவானே எலியா [a] என்பதையும் நீங்கள் நம்புவீர்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் அவன் வருவான் எனச் சொல்கின்றன. 15 என் பேச்சைக் கேட்பவர்களே, கவனியுங்கள்.

16 ,“இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்ல முடியும்? எப்படிப்பட்டவர்கள் அவர்கள்? கடை வீதியில் அமர்ந்திருக்கும் பிள்ளைகளைப் போன்றவர்கள் இன்றைய மக்கள். ஒரு கூட்ட பிள்ளைகள் மற்றொன்றைப் பார்த்து,

17 ,“‘உங்களுக்காக இசைத்தோம்,
    ஆனாலும், நீங்கள் நடனமாடவில்லை.
சோகப் பாடல் ஒன்றைப் பாடினோம்,
    ஆனாலும், நீங்கள் சோகம் கொள்ளவில்லை’

என்று அழைக்கிறது.

18 ,“மக்கள் அப்படிப்பட்டவர்கள் என்று நான் ஏன் கூறுகிறேன்? யோவான் மற்றவர்களைப்போல உண்ணவில்லை. திராட்சை இரசம் குடிக்கவில்லை. ஆனால் மக்கள் ‘யோவானுக்குள் ஒரு பிசாசு இருக்கிறது’, என்று சொல்கிறார்கள். 19 மனிதகுமாரன் வந்திருந்து மற்றவர்களைப் போலவே உண்ணுகிறார்: திராட்சை இரசமும் குடிக்கிறார். மக்களோ, ‘அவரைப் பாருங்கள்!’ அதிகமாக உண்ணுகிறார். அதிகமாக திராட்சை இரசமும் குடிக்கிறார். வரி வசூலிப்பவர்களுக்கும் தீயவர்களுக்கும் அவர் நண்பர் என்று சொல்கிறார்கள். ஆனால் ஞானம் அதன் செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது.”

நம்பிக்கையற்றோருக்கு எச்சரிப்பு(C)

20 பிறகு, தாம் பெரும்பாலான அற்புதங்களை நிகழ்த்திய நகரங்களை இயேசு விமர்சித்தார். ஏனென்றால் அந்நகரங்களிலுள்ள மக்கள் அதற்குப்பின் தமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு பாவம் செய்வதை நிறுத்தவில்லை. 21 இயேசு,, “கோராசின் நகரமே, பெத்சாயிதா நகரமே, இது உங்களுக்கு மிகவும் கொடுமையானது. உங்களுக்கு நான் பல அற்புதங்களை நிகழ்த்தினேன். அதே அற்புதங்களைத் தீரு மற்றும் சீதோன் நகரங்களில் நடத்தியிருந்தால், அம்மக்கள் வெகு நாள் முன்பே மனந்திருந்தியிருப்பார்கள். தங்கள் பாவங்களுக்காகத் தம் வருத்தத்தைத் தெரிவிக்க சாக்குத்துணி ஆடையை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டிருப்பார்கள். 22 நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளன்று தீரு மற்றும் சீதோன் மக்களைவிடவும் உங்களுக்கு மிகத் துன்பம் ஏற்படும் என்று நான் சொல்கிறேன்.

23 ,“கப்பர்நகூம் மக்களாகிய நீங்கள் வானம் வரை உயர்த்தப்படுவீர்களோ? இல்லை! நீங்கள் மரணக் குழியில் தள்ளப்படுவீர்கள். உங்களிடம் பல அற்புதங்களைச் செய்தேன் நான். அந்த அற்புதங்களைச் சோதோம் நகரில் நிகழ்த்தியிருந்தால், அந்நகர மக்கள் பாவம் செய்வதை நிறுத்தியிருப்பார்கள். இன்னும் ஒரு நகரமாகவே அது இருந்திருக்கும். 24 ஆனால் நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகிற நாளன்று சோதோம் நகர மக்களைக் காட்டிலும் மிகத் துன்பம் உங்களுக்கு ஏற்படும் என்று சொல்கிறேன்” என்று கூறினார்.

இயேசு தரும் இளைப்பாறுதல்(D)

25 பிறகு இயேசு,, “பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஆண்டவராகிய பிதாவே! உமக்கு நான் நன்றி கூறுகிறேன். ஏனென்றால், இவற்றை நீர் ஞானவான்களிடமிருந்து மறைத்துள்ளீர். ஆனால் இவற்றைக் குழந்தையைப் போன்ற மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர். 26 ஆம். பிதாவே, நீர் மெய்யாகவே இவை நடைபெற வேண்டும் என விரும்பியதால் இப்படிச் செய்தீர்” என்றார்.

27 ,“என் பிதா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். குமாரனை வேறு யாரும் அறியார்; பிதாவே குமாரனை அறிவார். அதைப் போலவே, பிதாவைக் குமாரன் மட்டுமே அறிவார்; வேறு யாரும் அறியார். மேலும், பிதாவானவரைப்பற்றி அறிந்தவர்களையே குமாரனும் போதனை செய்யத் தேர்ந்தெடுக்கிறார்.

28 ,“களைப்படைந்து மிகுந்த பாரம் சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு ஓய்வு அளிப்பேன். 29 என் பணிகளை ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நான் சாந்தமும் பணிவும் கொண்டவன். உங்கள் ஆத்துமாவிற்கு ஓய்வைக் கண்டடைவீர்கள். 30 நான் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் வேலை எளிதானது. நான் உங்களைச் சுமக்கச் சொல்லும் பளு இலேசானது” என்று இயேசு கூறினார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center