Old/New Testament
யாக்கோபு தனது தைரியத்தைக் காட்டுதல்
33 யாக்கோபு, ஏசா வருவதைப் பார்த்தான். அவனோடு 400 ஆட்கள் வந்தனர். யாக்கோபு தனது குடும்பத்தை நான்கு குழுக்களாகப் பிரித்தான். லேயாளும் அவள் குழந்தைகளும் ஒரு குழு. ராகேலும் யோசேப்பும் இன்னொரு குழு. இரண்டு வேலைக்காரிகளும் அவர்களின் பிள்ளைகளும் தனித்தனியாக இரண்டு குழுக்கள். 2 யாக்கோபு முதலில் வேலைக்காரிகளையும் பிள்ளைகளையும் நிற்க வைத்தான். பின் லேயாளும் அவள் பிள்ளைகளும். கடைசியில் ராகேல் மற்றும் யோசேப்பு இருவரையும் நிற்க வைத்தான்.
3 யாக்கோபு ஏசாவிடம் முதலில் போனான். அவன் போகும்போதே ஏழுமுறை தரையில் குனிந்து வணங்கினான்.
4 அப்போது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து அவனைத் தழுவிக்கொண்டான். ஏசா யாக்கோபை கைகளால் கழுத்தில் அணைத்துக்கொண்டு முத்தமிட்டான். பின் இருவரும் அழுதனர். 5 ஏசா ஏறிட்டுப் பார்த்து பெண்களையும் குழந்தைகளையும் கவனித்தான். “இவர்கள் அனைவரும் யார்?” எனக் கேட்டான்.
யாக்கோபு, “இவர்கள் தேவன் கொடுத்த என் பிள்ளைகள். தேவன் எனக்கு நன்மை செய்திருக்கிறார்” என்றான்.
6 பிறகு இரு வேலைக்காரிகளும் குழந்தைகளும் ஏசாவின் அருகில் சென்று அவன் முன் கீழே குனிந்து வணங்கினார்கள். 7 பிறகு லேயாளும் அவளது பிள்ளைகளும் போய் பணிந்து வணங்கினார்கள். பின்னர் ராகேலும், யோசேப்பும் ஏசாவின் அருகில் சென்று பணிந்து வணங்கினார்கள்.
8 ஏசா அவனிடம், “நான் வரும்போது பார்க்க நேர்ந்த இந்த மனிதர்கள் எல்லாம் யார்? இந்த மிருகங்கள் எல்லாம் எதற்காக?” என்று கேட்டான்.
யாக்கோபு, “என்னை நீர் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக இப்பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றான்.
9 ஆனால் ஏசாவோ, “எனக்கு நீ பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டிய தேவையில்லை. என்னிடம் போதுமான அளவு இருக்கிறது” என்றான்.
10 அதற்கு யாக்கோபு, “இல்லை. நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், என்னை நீர் உண்மையில் ஏற்றுக்கொள்வதானால் இப்பொருட்களையும் ஏற்றுக்கொள்ளும். உமது முகத்தை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது தேவனின் முகத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. என்னை நீர் ஏற்றுக்கொண்டதைப் பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். 11 ஆகையால் நான் கொடுக்கும் பரிசுப் பொருட்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். தேவன் எனக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார். தேவைக்குமேல் என்னிடம் உள்ளது” என்றான். இவ்வாறு யாக்கோபு கெஞ்சியதால் ஏசா பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொண்டான்.
12 ஏசா, “இப்போது உனது பயணத்தைத் தொடரலாம். நான் உனக்கு முன் வருவேன்” என்றான்.
13 ஆனால் யாக்கோபோ, “எனது குழந்தைகள் பலவீனமாய் இருக்கிறார்கள் என்பது உமக்குத் தெரியும். எனது மந்தைகளைப்பற்றியும், அவற்றின் இளம் கன்றுகளைப்பற்றியும் நான் கவனமாக இருக்க வேண்டும். நான் அவற்றை ஒரு நாளில் அதிக தூரம் நடக்க வைத்தால் எல்லா விலங்குகளும் மரித்துப்போகும். 14 எனவே நீங்கள் போய்க்கொண்டே இருங்கள், நான் மெதுவாகப் பின் தொடர்ந்து வருகிறேன். ஆடுமாடுகளும் மற்ற மிருகங்களும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நான் மெதுவாக வருகிறேன். என் குழந்தைகள் மிகவும் சோர்ந்து போகாதபடி மெதுவாக வருகிறேன். நான் உங்களை சேயீரில் சந்திப்பேன்” என்றான்.
15 எனவே ஏசா, “பிறகு நான் எனது சில மனிதர்களை உனக்கு உதவியாக விட்டுவிட்டுப் போகிறேன்” என்றான்.
ஆனால் யாக்கோபு, “உம் அன்புக்காக நன்றி, ஆனால் அது தேவையில்லை” என்றான். 16 எனவே அன்று ஏசா சேயீருக்குப் பயணம் புறப்பட்டான். 17 ஆனால் யாக்கோபோ சுக்கோத்திற்குப் பயணம் செய்தான். அங்கே அவன் தனக்கென்று வீடு கட்டிக்கொண்டதுடன், மிருகங்களுக்கும் தொழுவம் அமைத்துக்கொண்டான். எனவே அந்த இடம் சுக்கோத் என்று பெயர் பெற்றது.
18 யாக்கோபு தனது பயணத்தைச் சுகமாக பதான் அராமிலிருந்து கானான் நாட்டிலிலுள்ள சீகேம் பட்டணத்திற்கு அருகில் முடித்துவிட்டான். நகரத்திற்கு அருகிலுள்ள வயலில் தன் கூடாரத்தைப் போட்டான். 19 யாக்கோபு அந்த வயலைச் சீகேமின் தந்தையான ஏமோரிடமிருந்து விலைக்கு வாங்கினான். அவன் அதற்கு 100 வெள்ளிக் காசுகள் கொடுத்தான். 20 யாக்கோபு தேவனைத் தொழுதுகொள்ள அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். யாக்கோபு அந்த இடத்திற்கு “ஏல் எல்லோகே இஸ்ரவேல்” என்று பெயரிட்டான்.
தீனாள் கற்பழிக்கப்படுதல்
34 யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த மகள் தீனாள். ஒரு நாள் அவள் அப்பகுதியிலுள்ள பெண்களைப் பார்ப்பதற்காகச் சென்றாள். 2 ஏமோர் அந்தப் பகுதியில் அரசன். தனது மகனான சீகேம் தீனாளைப் பார்த்தான். அவன் அவளைக் கடத்திக் கொண்டுபோய் அவளைக் கற்பழித்தான். 3 பிறகு சீகேம் அவளை மணந்துகொள்ள விரும்பினான். 4 அவன் தன் தந்தையிடம் சென்று, “நான் திருமணம் செய்துகொள்ளும்பொருட்டு இந்தப் பெண்ணை ஏற்பாடு செய்யுங்கள்” என்றான்.
5 யாக்கோபு தன் மகளுக்கு ஏற்பட்ட தீய நிலைமையை அறிந்துகொண்டான். அப்போது யாக்கோபின் மகன்கள் ஆடு மேய்ப்பதற்காக வயலுக்கு வெளியே போயிருந்தார்கள். அவர்கள் திரும்பி வரும்வரை எதுவும் செய்ய முடியவில்லை. 6 அப்போது சீகேமின் தந்தையாகிய ஏமோர் யாக்கோபோடு பேசுவதற்குப் போனான்.
7 வயலில் யாக்கோபின் மகன்கள் நடந்ததைப்பற்றிக் கேள்விப்பட்டனர். இதனால் அவர்களுக்குக் கடும் கோபம் வந்தது. நடந்த காரியம் அவர்களுக்கு அவமானமாக இருந்தது. சீகேம் யாக்கோபின் மகளைக் கற்பழித்ததால் இஸ்ரவேலுக்கே அவன் இழிவை கொண்டு வந்தான். அவர்கள் உடனே வயல்களிலிருந்து திரும்பி வந்தார்கள்.
8 ஏமோர் அவர்களோடு பேசினான். “என் மகன் சீகேம் தீனாளைப் பெரிதும் விரும்புகிறான். அவளை அவன் மணந்துகொள்ளுமாறு அனுமதியுங்கள். 9 இந்தத் திருமணம் நமக்குள் ஒரு சிறப்பான ஒப்பந்தம் உண்டு எனக் காண்பிக்கும். பிறகு உங்கள் ஆண்கள் எங்கள் பெண்களையும் எங்கள் ஆண்கள் உங்கள் பெண்களையும் மணந்துகொள்ளட்டும். 10 நீங்கள் இங்கேயே எங்களோடு வாழலாம். இந்த நிலத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு இங்கேயே வியாபாரம் செய்யலாம்” என்றான்.
11 சீகேம் யாக்கோபோடும் தீனாளின் சகோதரர்களோடும் கூட பேசினான். “என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் நீங்கள் என்ன செய்யச் சொன்னாலும் நான் உங்களுக்காகச் செய்வேன். 12 உங்களுக்கு எந்த அன்பளிப்பு வேண்டுமானாலும் நான் கொடுப்பேன். ஆனால் தீனாளை மணக்க என்னை அனுமதிக்க வேண்டும்” என்று கெஞ்சினான்.
13 யாக்கோபின் மகன்களோ சீகேமையும் அவனது தந்தையையும் வஞ்சிக்க விரும்பினார்கள். தங்கள் சகோதரிக்கு அவன் செய்த கேடான காரியத்தை அவர்களால் மறக்க முடியவில்லை. 14 அதனால், “எங்கள் சகோதரியை நீ மணந்துகொள்ள அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீ இன்னும் விருத்தசேதனம் செய்துகொள்ளவில்லை. அதனால் இந்த மணம் தவறாகும். 15 ஆனால் நீயும் உன் நகரத்திலுள்ள அனைத்து ஆண்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். அப்போது எங்கள் சகோதரியை மணந்துகொள்ள அனுமதிக்கிறோம். 16 பிறகு உங்கள் ஆண்கள் எங்கள் பெண்களையும், எங்கள் ஆண்கள் உங்கள் பெண்களையும் மணந்துகொள்ளலாம். பிறகு நாம் ஒரே ஜனங்கள் ஆகலாம். 17 இல்லாவிட்டால் நாங்கள் தீனாளை அழைத்துக்கொண்டு போய்விடுவோம்” என்றனர்.
18 இந்த ஒப்பந்தத்தால் ஏமோரும் அவன் மகன் சீகேமும் மகிழ்ச்சி அடைந்தனர். 19 சீகேம் தீனாளை விரும்பியதால் தீனாளின் சகோதரர்கள் சொன்னதைச் செய்வதில் சீகேம் மிக்க மகிழ்ச்சியடைந்தான்.
சீகேம் அவனது குடும்பத்திலேயே மதிப்பிற்குரிய மனிதன். 20 ஏமோரும் சீகேமும் நகரத்திற்குள்ளே ஜனங்கள் கூடும் இடத்திற்குச் சென்று, அவர்களோடு பேசினார்கள். 21 “இஸ்ரவேல் ஜனங்கள் நம்மோடு நட்பாக இருக்க விரும்புகின்றனர். நாம் இந்தப் பூமியில் அவர்களை வாழவிடுவோம். அவர்கள் நம்மோடு சமாதானமாய் இருக்கட்டும். நம் அனைவருக்கும் போதுமான நிலம் இங்கே உள்ளது. அவர்களின் பெண்களை நாம் மணந்துகொள்ளலாம். நமது பெண்களையும் அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கலாம். 22 ஆனால் நாம் ஒரு காரியம் செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும். நமது ஆண்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களும் அவ்வாறே செய்திருக்கிறார்கள். 23 நாம் இவ்வாறு செய்தால் நாம் அவர்களின் ஆடு மாடுகளைப் பெற்று பணக்காரர்களாகிவிடுவோம். எனவே இந்த ஒப்பந்தத்தை நாம் நிறைவேற்றுவோம். அவர்களும் நம்மோடு இங்கே தங்கட்டும்” என்றான். 24 அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் இதற்கு ஒப்புக்கொண்டனர். அப்போது ஒவ்வொரு ஆண் மகனுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது.
25 மூன்று நாட்கள் ஆனதும் விருத்தசேதனம் செய்துகொண்ட ஆண்களுக்குப் புண் ஆறாமல் இருந்தது. யாக்கோபின் மகன்களில் இருவரான சிமியோனும் லேவியும், பட்டணத்திலுள்ள ஆண்களின் நிலையை அறிந்துகொண்டு, அங்கு போய் ஆண்களை எல்லாம் வெட்டிக் கொன்றார்கள். 26 தீனாளின் சகோதரர்களாகிய சிமியோனும் லேவியும் ஏமோரையும் சீகேமையும் கொன்றனர். பிறகு தீனாளை அழைத்துக்கொண்டு சீகேமின் வீட்டை விட்டு வெளியேறினர். 27 யாக்கோபின் மகன்கள் நகரத்திற்குள் போய் அங்குள்ள செல்வங்களையெல்லாம் கொள்ளையிட்டனர். அவர்கள் தங்கள் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக இன்னும் கோபம் தணியாமல் இருந்தனர். 28 அவர்கள் எல்லா மிருகங்களையும் கொண்டு சென்றதுடன், கழுதைகளையும் பிறவற்றையும் வயலில் உள்ளவற்றையும் எடுத்துக்கொண்டனர். 29 தீனாளின் சகோதரர்கள் சீகேம் ஜனங்களின் அனைத்துப் பொருட்களையும் எடுத்துக்கொண்டதோடு அவர்களின் மனைவி மார்களையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டனர்.
30 ஆனால் யாக்கோபு, “நீங்கள் எனக்கு மிகுதியாகத் தொல்லை கொடுக்கிறீர்கள். இந்தப் பகுதியிலுள்ள அனைவரும் என்னை வெறுப்பார்கள். அனைத்து கானானியர்களும் பெரிசியர்களும் எனக்கு எதிராகத் திரும்புவார்கள். நாம் கொஞ்சம் பேர்தான் இருக்கிறோம். இங்குள்ள ஜனங்கள் எல்லாம் கூடி நம்மோடு சண்டைக்கு வந்தால் நாம் அழிக்கப்பட்டுவிடுவோம். நமது ஜனங்கள் அனைவரும் அழிந்து போவார்கள்” என்று சிமியோனிடமும் லேவியிடமும் சொன்னான்.
31 ஆனால் அச்சகோதர்களோ, “எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப் போன்று நடத்தினார்களே. அதை நாங்கள் அனுமதிக்க முடியுமா? முடியாது. அவர்கள் எங்கள் சகோதரிக்குத் தீங்கு செய்துவிட்டனர்” என்றார்கள்.
பெத்தேலில் யாக்கோபு
35 தேவன் யாக்கோபிடம், “பெத்தேல் நகரத்திற்குப் போய், அங்கே வாசம் செய். தொழுதுகொள்ள எனக்கொரு பலிபீடம் கட்டு. நீ உன் சகோதரனாகிய ஏசாவிற்குப் பயந்து ஓடிப்போனபோது உனக்குக் காட்சி தந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை அமைத்து அங்கு தேவனைத் தொழுதுகொள்” என்றார்.
2 எனவே, யாக்கோபு தன் குடும்பத்தார் வேலைக்காரர்கள் அனைவரிடமும், “உங்களிடம் உள்ள மரத்தாலும் உலோகங்களாலும் செய்யப்பட்ட அந்நிய தெய்வங்களையெல்லாம் அழித்துப்போடுங்கள். உங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, சுத்தமான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். 3 நாம் இந்த இடத்தைவிட்டு பெத்தேலுக்குப் போகிறோம். அங்கே எனக்குத் துன்பத்தில் உதவிய தேவனுக்கு நான் பலிபீடம் கட்டப்போகிறேன். அந்த தேவன் நான் எங்கு போனாலும் என்னோடு இருக்கிறார்” என்றான்.
4 எனவே, ஜனங்கள் தம்மிடம் இருந்த அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதுகளில் அணிந்திருந்த வளையங்களையும் யாக்கோபிடம் கொடுத்தார்கள். அவற்றை சீகேம் நகருக்கருகில் இருந்த ஒரு கர்வாலி மரத்தின் அடியிலே புதைத்துவிட்டான்.
5 யாக்கோபும் அவனது மகன்களும் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போனபோது, அப்பகுதியில் உள்ள ஜனங்கள் அவர்களைப் பின் தொடர்ந்து போய் அவர்களைக் கொலைசெய்ய விரும்பினார்கள். ஆனால் தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பயம் அவர்களுக்கு ஏற்பட்டபடியால் அவர்கள் யாக்கோபைப் பின்தொடரவில்லை. 6 எனவே, யாக்கோபும் அவனைச் சேர்ந்தவர்களும் கானானிலுள்ள லூசை அடைந்தனர். லூஸ் இப்போது பெத்தேல் என்று அழைக்கப்பட்டது. 7 யாக்கோபு அவ்விடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அதற்கு “ஏல் பெத்தேல்” என்று பெயரிட்டான். காரணம் அவன் சகோதரனுக்குப் பயந்து ஓடியபோது தேவன் அந்த இடத்தில் தான் அவனுக்கு முதலில் காட்சியளித்தார்.
8 தெபோராள் எனும் ரெபெக்காளின் தாதி அங்கு மரித்துபோனாள். பெத்தேலில் கர்வாலி மரத்தின் அடியில் அவளை அடக்கம் செய்தனர். அந்த இடத்திற்கு அல்லோன் பாகூத் என்று பெயர் வைத்தனர்.
யாக்கோபின் புதிய பெயர்
9 பதான் அராமிலிருந்து யாக்கோபு திரும்பி வந்தபோது தேவன் மீண்டும் அவனுக்குக் காட்சியளித்தார், தேவன் யாக்கோபை ஆசீர்வதித்தார். 10 தேவன், யாக்கோபிடம், “உன் பெயர் யாக்கோபு, உன் பெயர் இனி யாக்கோபு என அழைக்கப்படாது. உன் பெயர் இஸ்ரவேல் எனப்படும்” என்று கூறி அவனுக்கு “இஸ்ரவேல்” என்று பெயரிட்டார்.
11 தேவன் அவனிடம், “நான் சர்வ வல்லமையுள்ள தேவன். உனக்கு இந்த ஆசீர்வாதத்தைத் தருவேன். நீ நிறைய குழந்தைகளைப் பெற்று ஒரு நாட்டை உருவாக்குவாய். வேறு ஜாதிகளின் கூட்டமும், அரசர்களும் உன்னிடமிருந்து தோன்றுவார்கள். 12 நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் சிறந்த இடங்களைக் கொடுத்திருந்தேன். இப்போது அதனை உனக்குக் கொடுக்கிறேன். உனக்குப் பின்னால் வரும் உன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன்” என்றார். 13 பிறகு தேவன் அந்த இடத்தை விட்டு எழுந்தருளிப் போனார். 14-15 யாக்கோபு தேவன் தன்னோடு பேசின அந்த இடத்தில் ஒரு ஞாபகக் கல் நிறுத்தி அதில் திராட்சைரசத்தையும் எண்ணெயையும் ஊற்றினான். இது ஒரு சிறப்பான இடம். ஏனென்றால் அதுதான் தேவன் அவனிடம் பேசிய இடம். எனவே யாக்கோபு அதற்கு “பெத்தேல்” என்று பெயரிட்டான்.
ராகேல் மரணமடைதல்
16 யாக்கோபும் அவனது கூட்டமும் பெத்தேலை விட்டுப் புறப்பட்டது. எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்ச தூரம் இருந்தது. அப்போது ராகேல் பிள்ளை பெற்றாள். 17 ஆனால் பிரசவ வேதனை அதிகமாக இருந்தது. தாதியோ, “பயப்படாதே நீ இன்னொரு குழந்தையையும் பெறுவாய்” என்றாள்.
18 ஆனால் அவள் ஆண் குழந்தை பெறும்போதே மரித்துபோனாள். மரிக்கும் முன்னால் தன் மகனுக்குப் பெனோனி என்று பெயர் சூட்டினாள். ஆனால் யாக்கோபு அவனைப் பென்யமீன் என்று அழைத்தான்.
19 ராகேல் எப்பிராத்தாவுக்குப் போகும் சாலை ஓரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டாள். (எப்பிராத்தா என்பது பெத்லேகம் ஆகும்) 20 யாக்கோபு அதில் ஒரு சிறப்பான கல்தூணை நட்டு ராகேலின் கல்லறையைப் பெருமைப்படுத்தினான். இன்றும் அக்கல் (தூண்) உள்ளது. 21 இஸ்ரவேல் (யாக்கோபு) தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஏதேர் கோபுரத்திற்குத் தென் பகுதியில் கூடாரமிட்டான்.
22 இஸ்ரவேல் அங்கு கொஞ்சக்காலமே தங்கினான். அப்போது ரூபன், தன் தந்தையின் வேலைக்காரியான பில்காளோடு பாலின உறவு கொண்டதை அறிந்து இஸ்ரவேல் கடுங்கோபம் கொண்டான்.
இஸ்ரவேலின் குடும்பம்
யாக்கோபிற்கு (இஸ்ரவேலுக்கு) 12 மகன்கள் இருந்தார்கள்.
23 ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் ஆகியோர் யாக்கோபுக்கும் லேயாளுக்கும் முதலில் பிறந்தவர்கள்.
24 யோசேப்பும் பென்யமீனும் யாக்கோபுக்கும் ராகேலுக்கும் பிறந்தவர்கள்.
25 தாண், நப்தலி ஆகிய இருவரும் யாக்கோபுக்கும் பில்காளுக்கும் பிறந்தவர்கள்.
26 காத், ஆசேர் இருவரும் யாக்கோபுக்கும் சில்பாளுக்கும் பிறந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் பதான் அராமில் யாக்கோபிற்குப் (இஸ்ரவேலுக்கு) பிறந்தவர்கள்.
27 யாக்கோபு தனது தந்தை ஈசாக்கு இருந்த கீரியாத் அர்பாவிலிருந்த மம்ரேக்கு சென்றான். அங்கேதான் ஆபிரகாமும் வாழ்ந்தான். 28 ஈசாக்கு 180 ஆண்டுகள் வாழ்ந்தான். 29 பிறகு ஈசாக்கு பலவீனமாகி மரித்துப் போனான். அவன் நீண்ட முழுமையான வாழ்க்கை வாழ்ந்தான். ஏசாவும் யாக்கோபும் ஆபிரகாமை அடக்கம் செய்த இடத்திலேயே ஈசாக்கையும் அடக்கம் செய்தனர்.
அப்போஸ்தலர்களை அனுப்புதல்(A)
10 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார். தீய ஆவிகளை மேற்கொள்ளும் வல்லமையை இயேசு அவர்களுக்கு வழங்கினார். எல்லா விதமான நோய்களையும் பிணிகளையும் குணப்படுத்தும் வல்லமையையும் இயேசு அவர்களுக்கு வழங்கினார். 2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள் வருமாறு:
சீமோன் (மற்றொரு பெயர் பேதுரு.)
மற்றும் அவரது சகோதரன் அந்திரேயா,
செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும்
அவரது சகோதரன் யோவான்,
3 பிலிப்பு
மற்றும் பார்த்தலோமியு,
தோமா
மற்றும் வரி வசூலிக்கும் அதிகாரியான மத்தேயு,
அல்பேயுவின் மகன் யாக்கோபு,
ததேயு,
4 சீலோத்தியனாகிய சீமோன் மற்றும் யூதா ஸ்காரியோத்து.
இயேசுவை அவரது எதிரிகளிடம் காட்டிக்கொடுத்தவன் இந்த யூதாஸ் ஆவான்.
5 இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். 7 நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். 8 நோயுற்றவர்களைக் குணமாக்குங்கள். இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுங்கள். தொழு நோயாளிகளைக் குணப்படுத்துங்கள். பிசாசு பிடித்தவர்களிடமிருந்து பிசாசுகளை விரட்டுங்கள். இவ்வல்லமைகளை உங்களுக்குத் தாராளமாய் வழங்குகிறேன். எனவே, மற்றவர்களுக்குத் தாராளமாய் உதவுங்கள். 9 உங்களுடன் தங்கம், வெள்ளி அல்லது செம்பு நாணயங்களை எடுத்துச் செல்லாதீர்கள். 10 பைகளைக் கொண்டு போகாதீர்கள். உங்கள் பயணத்திற்கு நீங்கள் அணிந்திருக்கும் உடையையும் காலணிகளையும் மட்டுமே எடுத்துச் செல்லுங்கள். ஊன்றுகோலை எடுத்துச் செல்லாதீர்கள். பணியாளனுக்குத் தேவையானவை கொடுக்கப்படவேண்டும்.
11 ,“நீங்கள் ஒரு நகரத்திலோ ஊரிலோ நுழையும்பொழுது, தகுதிவாய்ந்த மனிதரைக் கண்டு நீங்கள் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லும்வரை அவருடன் தங்கி இருங்கள். 12 நீஙகள் அவர் வீட்டினுள் நுழையும்பொழுது ‘உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்’ என்று சொல்லுங்கள். 13 அவ்வீட்டில் உள்ளவர்கள் உங்களை வரவேற்றால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள். நீங்கள் அவர்களுக்கு விரும்பிய சமாதானம் அவர்களுக்குக் கிடைக்கட்டும். வீட்டிலுள்ளவர்கள் உங்களை வரவேற்காவிட்டால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்களல்ல. அவர்களுக்கு நீங்கள் விரும்பிய சமாதானத்தைத் திரும்பப் பெறுங்கள். 14 ஒரு வீட்டிலுள்ளவர்களோ அல்லது நகரத்திலுள்ளவர்களோ உங்களை வரவேற்கவோ அல்லது உங்கள் பேச்சைக் கேட்கவோ மறுத்தால், அவ்விடத்தை விட்டு விலகுங்கள். உங்கள் கால்களில் படிந்த தூசியைத் தட்டிவிடுங்கள். 15 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நியாயத்தீர்ப்பு நாளிலே சோதாம் மற்றும் கொமோரா ஆகிய ஊர்களுக்கு நேர்ந்ததைக் காட்டிலும் மோசமானது அவ்வூருக்கு நடக்கும்.
பிரச்சனைகளைப் பற்றிய எச்சரிக்கை(B)
16 ,“கவனியுங்கள்! நான் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் ஓநாய்களுக்கிடையில் அகப்பட்ட வெள்ளாட்டினைப் போல இருப்பீர்கள். எனவே, பாம்புகளைப்போல சாதுரியமாய் இருங்கள். ஆனால் புறாவைப்போல கபடற்றவர்களாயிருங்கள். 17 மக்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் உங்களைக் கைது செய்து கொண்டு போய் நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுவார்கள். உங்களை (அவர்களது) ஜெப ஆலயங்களில் வைத்து சாட்டையால் அடிப்பார்கள். 18 ஆளுநர்களுக்கும் மன்னர்களுக்கும் யூதர் அல்லாதவர்களுக்கும் முன்னால் நிறுத்தப்படுவீர்கள். என்னிமித்தம் உங்களுக்கு மக்கள் இதைச் செய்வார்கள். அப்போது நீங்கள் என்னைப் பற்றி அம்மன்னர்களுக்கும் ஆளுநர்களுக்கும் யூதரல்லாத மக்களுக்கும் எடுத்துச் சொல்வீர்கள். 19 நீங்கள் கைது செய்யப்படும்பொழுது, எதைச் சொல்வது எப்படிச் சொல்வது என்று கவலைகொள்ளாதீர்கள். அந்தச் சமயத்தில் நீங்கள் பேச வேண்டியவை அருளப்படும். 20 அப்பொழுது உண்மையில் பேசுவது நீங்களாயிருக்கமாட்டீர்கள். உங்கள் பிதாவின் ஆவியானவர் உங்கள் மூலமாகப் பேசுவார்.
2008 by World Bible Translation Center