Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 31-32

யாக்கோபு பிரிந்து செல்லுதல்

31 ஒரு நாள், லாபானின் மகன்கள் பேசிக்கொள்வதை யாக்கோபு கேட்டான். அவர்கள், “நம் தந்தைக்குரிய அனைத்தையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான். அதனால் பணக்காரனாகிவிட்டான். நம் தந்தையிடம் இருந்தே இச்செல்வத்தை எடுத்துக்கொண்டான்” என்றனர். யாக்கோபு, முன்புபோல் லாபான் அன்போடு இல்லை என்பதையும் கவனித்தான். கர்த்தர் யாக்கோபிடம், “உனது சொந்த நாடான, உன் முற்பிதாக்களின் நாட்டுக்கு திரும்பிப் போ. நான் உன்னோடு இருப்பேன்” என்றார்.

அதனால் யாக்கோபு லேயாளிடமும் ராகேலிடமும் தன்னை மந்தைகள் உள்ள வயலில் சந்திக்குமாறு கூறினான். அங்கு அவர்களிடம், “உங்கள் தந்தை என்மீது கோபமாய் இருப்பதாகத் தெரிகிறது. முன்பு என்னிடம் மிகவும் அன்பாய் இருந்தார். இப்போது அப்படி இல்லை. நான் உங்கள் தந்தைக்காக எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறேன் என்று உங்கள் இருவருக்குமே தெரியும். ஆனால் உங்கள் தந்தை என்னை ஏமாற்றிவிட்டார். அவர் என் சம்பளத்தைப் பத்து முறை மாற்றிவிட்டார். எனினும் லாபானின் எல்லாத் தந்திரங்களிலிருந்தும் தேவன் என்னைக் காப்பாற்றினார்.

“அவர் ஒருமுறை, ‘புள்ளியுள்ள ஆடுகளையெல்லாம் நீயே வைத்துக்கொள்’ அதுவே உனக்கு சம்பளம் என்றார். ஆனால் அப்போது எல்லா ஆடுகளும் புள்ளி உள்ளவையாக இருந்ததால் எல்லாம் எனக்கு உரியதாயிற்று. எனவே இப்போது, ‘புள்ளி உள்ள ஆடுகள் எல்லாம் எனக்கு வேண்டும்.’ கலப்பு நிறம் உள்ள ஆடுகளை நீ வைத்துக்கொள்” என்கிறார். இதன் பிறகு எல்லா ஆடுகளும் கலப்புநிறக் குட்டிகளைப் போட்டன. ஆகையால் தேவன் உங்கள் தந்தையிடமுள்ள ஆடுகளையெல்லாம் எடுத்து எனக்குக் கொடுத்துவிட்டார்.

10 “ஆடுகள் எல்லாம் இணையும்போது நான் கனவு கண்டேன். அதில் இணைகிற ஆண் ஆடுகள் மட்டுமே புள்ளியும் வரியும் உடையவையாக இருக்கக் கண்டேன். 11 அதோடு கனவில் ‘யாக்கோபே’ என்று தேவதூதன் ஒருவர் அழைத்தார்.

“‘நான் இங்கே இருக்கிறேன்’ என்று பதில் சொன்னேன்.

12 “தேவதூதன் என்னிடம் ‘பார், புள்ளிகளும் வரிகளும் உடைய கடாக்களே இணைகின்றன. இவற்றை நானே ஏற்படுத்தினேன், லாபான் உனக்கு எதிராக செய்யும் எல்லாக் காரியங்களையும் நான் பார்த்திருக்கிறேன். எல்லா புதிய ஆட்டுக் குட்டிகளையும் நீ பெறவேண்டும் என்பதற்காக இதைச் செய்துகொண்டிருக்கிறேன். 13 நான் பெத்தேலில் உனக்கு வெளிப்பட்ட அதே தேவன். அங்கு எனக்குப் பலிபீடம் அமைத்தாய். பலிபீடத்தின்மேல் ஒலிவ எண்ணெயை ஊற்றினாய். அங்கு ஒரு பொருத்தனையும் செய்தாய். இப்போதும் நீ உன் பிறந்த நாட்டிற்குப் போகத் தயாராக இருக்க வேண்டும், என்று சொன்னார்’” என்றான்.

14-15 ராகேலும் லேயாளும் யாக்கோபுக்குப் பதிலளித்தார்கள், “எங்கள் தந்தை மரிக்கும்பொழுது எங்களுக்குக் கொடுக்க அவரிடம் ஏதுமில்லை. அவர் எங்களை அந்நியர்களாகவே நடத்தினார். எங்களை உங்களுக்கு விற்றுவிட்டார். எங்களுடையதாயிருக்க வேண்டிய பணம் முழுவதையும் அவர் செலவழித்துவிட்டார். 16 எனவே தேவன் எங்கள் தந்தையிடமிருந்து எடுத்த இந்தச் செல்வமெல்லாம் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் உரியது. எனவே தேவன் உமக்குச் சொன்னபடி செய்யும்” என்றார்கள்.

17 எனவே, யாக்கோபு பயணத்துக்குத் தயாரானான். தன் மனைவிகளையும் பிள்ளைகளையும் ஒட்டகத்தில் ஏற்றினான். 18 பின் அவர்கள் அவனது தந்தை இருக்கும் கானான் தேசத்துக்குப் பயணம் செய்தனர். அவர்களுக்கு முன்னால் அவர்களது மந்தையும் கொண்டு செல்லப்பட்டது. பதான் அராமிலிருக்கும்போது அவன் வாங்கிய பொருட்களையெல்லாம் அவன் எடுத்துக்கொண்டான்.

19 அந்த நேரத்தில் லாபான் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கப் போயிருந்தான். ராகேல் வீட்டிற்குள் போய் தந்தையினுடைய பொய்த் தெய்வங்களின் உருவங்களைத் திருடிக்கொண்டாள்.

20 யாக்கோபு தந்திரமாக லாபானிடம் தான் போவதைப்பற்றிக் கூறாமல் புறப்பட்டுப் போய்விட்டான். 21 யாக்கோபு தன் குடும்பத்தோடும் தனக்குரியவற்றோடும் வேகமாகச் சென்று ஐபிராத்து ஆற்றைக் கடந்து கீலேயாத் மலையை நோக்கிப் போனார்கள்.

22 மூன்று நாள் ஆனதும் லாபான் யாக்கோபு ஓடிவிட்டதை அறிந்துகொண்டான். 23 உடனே தன் ஆட்களைச் சேகரித்துக்கொண்டு யாக்கோபைத் துரத்திக்கொண்டு போனான். ஏழு நாட்கள் ஆனபிறகு லாபான் யாக்கோபை கீலேயாத் மலை நகரம் ஒன்றில் கண்டு பிடித்தான். 24 அன்று இரவு தேவன் லாபானின் கனவில் தோன்றி, “எச்சரிக்கையாய் இரு. யாக்கோபிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் எச்சரிக்கையோடு பேசு” என்றார்.

திருடப்பட்ட தேவர்களின் உருவங்களைத் தேடுதல்

25 மறுநாள் காலையில் லாபான் யாக்கோபைப் பிடித்தான். யாக்கோபு மலைமீது தன் கூடாரத்தைப் போட்டிருந்தான். எனவே லாபானும் அவனது ஆட்களும் கீலேயாத்தின் மலை நகரத்தில் இருந்தனர்.

26 லாபான் யாக்கோபிடம், “என்னை ஏன் ஏமாற்றினாய். ஏன் என் மகள்களைப் போரில் கைப்பற்றிய பெண்களைப் போன்று கவர்ந்துகொண்டு போகிறாய். 27 என்னிடம் சொல்லாமல் கூட ஏன் ஓடிப்போகிறாய்? என்னிடம் நீ சொல்லியிருந்தால் உனக்கு ஒரு விருந்து கொடுத்திருப்பேனே. அவ்விருந்தில் ஆடலும் பாடலும் இசையும் இருந்திருக்கும். 28 நான் என் மகள்களையும் பேரப்பிள்ளைகளையும் முத்தமிட்டு வழியனுப்பவும் வாய்ப்பு கொடுக்கவில்லையே. இதனை நீ முட்டாள்தனமாகச் செய்துவிட்டாய். 29 உன்னைத் துன்புறுத்தும் அளவுக்கு எனக்கு வல்லமை இருக்கிறது. ஆனால் நேற்று இரவு கனவில் உன் தந்தையின் தேவன் என்னிடம் வந்தார். உன்னை எந்த விதத்திலும் துன்புறுத்த வேண்டாம் என்று அவர் என்னை எச்சரித்துவிட்டார். 30 நீ உன் தந்தையின் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறாய் என்று அறிகிறேன். அதனால் தான் நீ விலகிப் போகிறாய். ஆனால் ஏன் என் தேவர்களைத் திருடிக்கொண்டு போகிறாய்?” என்று கேட்டான்.

31 அதற்கு யாக்கோபு, “நான் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டேன். ஏனென்றால் எனக்குப் பயமாக இருந்தது. ஒரு வேளை நீங்கள் உங்கள் பெண்களை என்னிடமிருந்து பிரித்துவிடலாம் என்று நினைத்தேன். 32 ஆனால் நான் உங்கள் தேவர்களைத் திருடவில்லை. அதைத் திருடியவர்கள் யாராவது என்னோடு இருந்தால் அவரை நான் கொல்லுவேன். உங்கள் மனிதர்களே இதற்குச் சாட்சி. உங்களுக்குரிய எந்தப் பொருளும் இங்கிருக்கிறதா என்று நீர் பார்த்து, இருந்தால் எடுத்துக்கொள்ளலாம்” என்றான். (ராகேல் தன் தந்தையின் தெய்வங்களின் உருவங்களைத் திருடிக்கொண்டு வந்தது யாக்கோபுக்குத் தெரியாது.)

33 எனவே, லாபான் யாக்கோபின் கூடாரத்துக்குள் போய் தேடிப் பார்த்தான். பிறகு லேயாளின் கூடாரத்தில் தேடினான். இரு அடிமைப் பெண்கள் இருந்த கூடாரங்களிலும் தேடினான். ஆனால் திருட்டுப்போன தேவர்களின் சிலைகள் கிடைக்கவில்லை. பிறகு ராகேலின் கூடாரத்திற்குள் சென்றான். 34 ராகேல் அச்சிலைகளை ஒட்டகத்தின் சேணத்திற்குள் ஒளித்து வைத்து அதன் மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் முழுவதையும் பார்த்தான். ஆனால் அவனால் தேவர்களைக் காண முடியவில்லை.

35 ராகேல் தன் தந்தையிடம், “அப்பா என்னிடம் கோபப்படாதீர்கள். உங்கள் முன்னால் என்னால் நிற்க முடியவில்லை. நான் மாத விலக்காக இருக்கிறேன்” என்று கூறிவிட்டாள். கூடாரம் எங்கும் தேடிப் பார்த்தும் தன் தேவர்களின் சிலைகளை லாபானால் கண்டுபிடிக்க முடியவில்லை.

36 யாக்கோபுக்குக் கோபம் வந்தது. “நான் செய்த தவறு என்ன? எந்தச் சட்டத்தை உடைத்துவிட்டேன்? எதற்கு என்னைப் பின் தொடர்ந்து வந்து தடுத்து நிறுத்த வேண்டும். 37 எனக்குரிய எல்லாவற்றையும் சோதித்துவிட்டீர். உமக்குரிய பொருள் இவற்றில் எதுவுமில்லை. இருந்தால் நம் மனிதர்கள் காணும்படி அதை இங்கே வையுங்கள். நம் இருவரில் யாரிடம் தவறு உள்ளது என்று நம் மனிதர்களே தீர்மானிக்கட்டும். 38 நான் உமக்காக 20 வருடங்கள் உழைத்திருக்கிறேன். அப்போது எந்தக் குட்டியும் பிறக்கும்போது மரிக்கவில்லை. எந்தக் கடாவையும் உமது மந்தையிலிருந்து எடுத்து நான் உண்டதில்லை. 39 காட்டு மிருகங்களால் ஏதாவது ஆடுகள் அடிபட்டு மரித்திருக்குமானால் அதற்குரிய விலையை நானே தந்திருக்கிறேன். மரித்த ஆடுகளைக்கொண்டு வந்து உமக்கு முன் காட்டி இதற்குக் காரணம் நானில்லை என்று சொன்னதில்லை. ஆனால் நானோ பகலிலும் இரவிலும் திருடப்பட்டேன். 40 பகல் பொழுது என் பலத்தை எடுத்துக்கொண்டது. இரவு குளிர் என் கண்களிலிருந்து உறக்கத்தைத் திருடிக்கொண்டது. 41 ஒரு அடிமையைப் போன்று 20 வருடங்களாக உமக்காக உழைத்திருக்கிறேன். முதல் 14 ஆண்டுகளும் உமது மகள்களை மணந்துகொள்வதற்காக உழைத்தேன். இறுதி ஆறு ஆண்டுகளும் உமது மிருகங்களை காப்பாற்றுவதற்கு உழைத்தேன். இந்நாட்களில் எனது சம்பளத்தைப் பத்து முறை மாற்றி இருக்கிறீர். 42 ஆனால் என் முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரிய [a] தேவனுமானவர் என்னோடு இருந்தார். தேவன் என்னோடு இல்லாமற் போயிருந்தால் நீர் என்னை ஒன்றும் இல்லாதவனாக ஆக்கி அனுப்பி இருப்பீர். ஆனால் என் துன்பங்களையும், எனது உழைப்பையும் கண்ட தேவன் நேற்று இரவு நான் நியாயமானவன் என்பதை நிரூபித்துவிட்டார்” என்றான்.

யாக்கோபும் லாபானும் செய்த ஒப்பந்தம்

43 லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என் மகள்கள். இந்தக் குழந்தைகள் என்னைச் சேர்ந்தவர்கள். இந்த மிருகங்கள் எல்லாம் என்னுடையவை. நான் இங்கு காண்கிற அனைத்தும் என்னுடையவை. ஆனால் எனது மகள்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் என்னால் தீமை செய்ய முடியாது. 44 எனவே நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்கிறேன். நாம் இங்கே ஒரு கற்குவியலை அமைத்து அதை நமது ஒப்பந்தத்திற்கு நினைவு சின்னமாகக் கருதுவோம்” என்றான்.

45 அதை யாக்கோபும் ஒப்புக்கொண்டு ஒரு பெரிய கல்லை ஒப்பந்தத்துக்கு அடையாளமாக நட்டு வைத்தான். 46 மேலும் கற்களைத் தேடி எடுத்து வந்து குவியலாக்குங்கள் என தன் ஆட்களிடம் சொன்னான். பிறகு அதன் அருகில் இருந்து இருவரும் உணவு உண்டனர். 47 லாபான் அந்த இடத்திற்கு ஜெகர்சகதூதா என்றும், யாக்கோபு கலயெத் என்றும் பெயரிட்டனர்.

48 லாபான் யாக்கோபிடம், “இக்கற்குவியல் நமது ஒப்பந்தத்தை நினைவுபடுத்தும்” என்றான். இதனால் தான் யாக்கோபு அந்த இடத்துக்கு கலயெத் என்று பெயரிட்டான்.

49 பிறகு லாபான், “நாம் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்திருந்தாலும் கர்த்தர் நம்மைக் கண்காணிக்கட்டும்” என்றான். எனவே இந்த இடம் மிஸ்பா என்றும் அழைக்கப்பட்டது.

50 மேலும் லாபான், “நீ என் பெண்களைத் துன்புறுத்தினால் தேவன் உன்னைத் தண்டிப்பார். நீ வேறு பெண்களை மணந்துகொண்டாலும் தேவன் உன்னைக் கவனித்துக்கொண்டிருப்பார். 51 நம் இருவருக்கும் இடையில் இங்கே நான் நட்ட கற்கள் உள்ளன. இந்த விசேஷ கல்லானது நம் ஒப்பந்தத்தை நினைவுப்படுத்துகிறது. 52 நம் இருவருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை என்றென்றும் ஞாபகப்படுத்தும் இந்தக் கல்லைத் தாண்டி வந்து நான் உன்னோடு போரிடமாட்டேன். நீயும் இதைக் கடந்து வந்து என்னோடு போரிடக் கூடாது. 53 ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்களது முற்பிதாக்களின் தேவனுமானவர், நாம் இந்த ஒப்பந்தத்தை உடைத்தால், குற்றவாளி யாரென்று நியாயந்தீர்க்கட்டும்” என்றான்.

யாக்கோபின் தந்தையான ஈசாக்கு தேவனை “பயபக்திக்குரியவர்” என்று அழைத்தார். யாக்கோபு அந்தப் பெயரிலேயே வாக்குறுதி செய்தான். 54 பிறகு, யாக்கோபு ஒரு ஆட்டைப் பலியிட்டு மலையில் வழிபாடு செய்தான். தன் மனிதர்களை அழைத்து உணவு உண்ணுமாறு வேண்டினான். உணவு முடிந்தபின் அந்த இரவை மலையின் மேலேயே கழித்தனர். 55 மறு நாள் அதிகாலையில், லாபான் எழுந்து தன் மகள்களையும் பேரப் பிள்ளைகளையும் முத்தமிட்டு ஆசீர்வதித்தான். பின் தன் ஊருக்குத் திரும்பிப் போனான்.

ஏசாவோடு திரும்ப சேருதல்

32 யாக்கோபும் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டான். வழியில் அவன் தேவ தூதர்களைக் கண்டான். அவர்களைப் பார்த்ததும், “இதுவே தேவனின் முகாம்” என்று எண்ணினான். அந்த இடத்திற்கு மக்னாயீம் என்று பேர் வைத்தான்.

யாக்கோபின் சகோதரனான ஏசா, சேயீர் பகுதியில் வாழ்ந்து வந்தான். அது ஏதோம் நாட்டைச் சேர்ந்தது. யாக்கோபு ஏசாவிடம் தூதுவர்களை அனுப்பினான். யாக்கோபு அவர்களிடம், “எனது எஜமானனான ஏசாவிடம் இதைச் சொல்லுங்கள்: ‘உங்கள் வேலைக்காரனான யாக்கோபு இந்த நாள்வரை லாபானோடு வாழ்ந்தேன். என்னிடம் நிறைய பசுக்களும், கழுதைகளும், ஆடுகளும், ஆண் வேலைக்காரர்களும், பெண் வேலைக்காரர்களும் உள்ளனர். ஐயா நீர் எங்களை ஏற்றுக்கொள்வதற்காகவே இந்த தூதுவரை அனுப்பினேன்’” என்றான்.

தூதுவர்கள் யாக்கோபிடம் திரும்பி வந்து, “நாங்கள் உங்கள் சகோதரர் ஏசாவிடம் சொன்னோம். அவர் உங்களைச் சந்திக்க 400 பேரோடே வருகிறார்” என்றனர்.

அதனால் யாக்கோபு பயந்தான். தன்னோடு இருந்தவர்களையும் மிருகங்களையும் இரு பிரிவாகப் பிரித்தான். “ஏசா வந்து ஒரு பிரிவை அழித்தால் இன்னொரு பிரிவு தப்பி ஓடிப் பிழைத்துக்கொள்ளும்” என்று நினைத்தான்.

“என் தந்தையாகிய ஆபிரகாமின் தேவனே! என் தந்தையாகிய ஈசாக்கின் தேவனே, கர்த்தாவே, என்னை என் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போகுமாறு சொன்னீர். எனக்கு நன்மை செய்வதாகவும் சொன்னீர். 10 என் மீது நீர் வைத்த மிகுதியான கருணைக்கும் நன்மைகளுக்கும் நான் தகுதியுடையவனில்லை. நான் யோர்தான் ஆற்றை முதல் முறையாகக் கடந்து சென்றபோது, என்னிடம் எதுவுமில்லை. ஒரு கைத்தடி மட்டுமே இருந்தது. இப்போது என்னிடம் இரு குழுக்களாகப் பிரிக்கும் அளவிற்கு எல்லாம் உள்ளது. 11 இப்போது என்னை என் சகோதரனாகிய ஏசாவிடமிருந்து காப்பாற்றும். அவனைக் குறித்து நான் அஞ்சுகிறேன். அவன் வந்து அனைவரையும் கொன்றுவிடுவான். 12 கர்த்தாவே, ‘நான் உனக்கு நன்மை செய்வேன் என்று சொன்னீர். உனது குடும்பத்தையும் ஜனங்களையும் கடற்கரையிலுள்ள மணலைப் போன்று பெருகச் செய்வேன்’ என்று சொன்னீர்” என்று பிரார்த்தித்தான்.

13 யாக்கோபு இரவு முழுவதும் அங்கே தங்கி இருந்தான். ஏசாவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க சில பொருட்களைத் தயார் செய்து வைத்தான். 14 200 வெள்ளாடுகளையும், 20 கடாக்களையும் 200 செம்மறி ஆடுகளையும், 15 பால் கொடுக்கும் 30 ஒட்டகங்களையும் அதன் குட்டிகளையும், 40 கடாரிகளையும், 10 காளைகளையும் 20 பெண் கழுதைகளையும், 10 ஆண் கழுதைகளையும் பிரித்தெடுத்தான். 16 வேலைக்காரனிடம் ஒவ்வொரு மந்தையையும் தனித்தனியாக ஒப்புவித்து, “எனக்கு முன்னால் போங்கள். ஒவ்வொரு மந்தைக்கும் இடைவெளி இருக்கட்டும்” என்றான். 17 யாக்கோபு அவர்களுக்குச் சில ஆணைகளையும் இட்டான். முதல் குழுவிடம், “என் சகோதரன் வந்து, ‘யாருடைய மிருகங்கள் இவை? எங்கே போகின்றன? யாருடைய வேலைக்காரர்கள் நீங்கள்’ என்று கேட்டால் நீங்கள், 18 ‘இவை உங்கள் அடிமையான யாக்கோபின் மிருகங்கள். எஜமானே இவை உங்களுக்கான பரிசுகள், யாக்கோபும் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்’ என்று சொல்லுங்கள்” என்றான்.

19 யாக்கோபு இரண்டாம் வேலைக்காரனுக்கும், மூன்றாம் வேலைக்காரனுக்கும், மற்ற வேலைக்காரர்களுக்கும் இவ்வாறே கட்டளையிட்டான். “நீங்கள் ஏசாவைச் சந்திக்கும்போது. 20 இவ்வாறே சொல்ல வேண்டும். ‘இவை உங்களுக்கான பரிசுகள். உங்கள் அடிமையான யாக்கோபு பின்னால் வந்துகொண்டிருக்கிறார்’, என்று சொல்லவேண்டும்” என்றான்.

யாக்கோபு, “இவர்களையும் பரிசுகளையும் முதலில் அனுப்பி வைத்ததால் என் சகோதரன் ஏசா இவற்றை ஏற்றுக்கொண்டு என்னை மன்னித்துவிடலாம்” என்று எண்ணினான். 21 எனவே, யாக்கோபு பரிசுகளை அனுப்பிவிட்டு அன்று இரவு கூடாரத்திலேயே தங்கிவிட்டான்.

22 பின்னிரவில் எழுந்து அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான். அவன் தனது இரண்டு மனைவிகளையும், இரண்டு வேலைக்காரிகளையும், பதினொரு குழந்தைகளையும் தன்னோடு அழைத்துக்கொண்டு ஆற்றைக் கடந்தான். 23 முதலில் தன் குடும்பத்தை ஆற்றைக் கடக்க அனுப்பினான். பிறகு தனக்குரிய அனைத்தும் கடக்க உதவினான்.

தேவனோடு போராடுதல்

24 யாக்கோபு ஆற்றைக் கடந்தவர்களில் கடைசி நபர். அவன் ஆற்றைக் கடக்குமுன், தனியாக நிற்கும்போது தேவதூதனைப் போன்ற ஒருவர் வந்து அவனோடு போராடினார். சூரியன் உதயமாகும் வரைக்கும் அவர் போராடியும், 25 அந்த மனிதரை யாக்கோபு விடுவதாயில்லை. எனவே, அவர் யாக்கோபின் தொடையைத் தொட்டார். அப்போது யாக்கோபின் கால் சுளுக்கிக்கொண்டது.

26 அந்த மனிதர் யாக்கோபிடம், “என்னைப் போக விடுகிறாயா? சூரியன் உதித்துவிட்டது” என்று கேட்டார்.

அதற்கு யாக்கோபு, “நான் உம்மைப் போகவிடமாட்டேன். நீர் என்னை ஆசீர்வதித்தே ஆக வேண்டும்” என்றான்.

27 அந்த மனிதர், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.

அவன், “என் பெயர் யாக்கோபு” என்றான்.

28 பிறகு அந்த மனிதர், “உன் பெயர் இனி யாக்கோபு அல்ல. உன் பெயர் இஸ்ரவேல். நீ தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டபடியால் நான் உனக்கு இந்தப் பெயரை வைக்கிறேன். உன்னைத் தோற்கடிக்க மனிதர்களால் முடியாது” என்றார்.

29 யாக்கோபு அவரிடம், “உமது பெயரைத் தயவு செய்து சொல்லும்” என்றான்.

ஆனால் அவர், “என் பெயரை ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டார். அதே சமயத்தில் அவர் யாக்கோபை ஆசீர்வதித்தார்.

30 எனவே, யாக்கோபு அந்த இடத்திற்கு பெனியேல் என்று பெயர் வைத்தான். “இந்த இடத்தில் நான் தேவனை முகமுகமாய்ப் பார்த்தேன். உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்றான். 31 அவன் பெனியேலைக் கடந்து போகையில் சூரியன் உதயமாகிவிட்டது. அவனது தொடை சுளுக்கிக்கொண்டதால் நொண்டி நொண்டி நடந்தான். 32 எனவே, இன்னும் இஸ்ரவேல் ஜனங்கள் தொடைச் சந்து தசையை உண்பதில்லை. ஏனென்றால் அது தேவன் யாக்கோபின் தொடைச் சந்து தசையைத் தொட்ட இடம் ஆகும்.

மத்தேயு 9:18-38

மரித்த பெண் உயிரடைதல், நோயாளிப் பெண் சுகமடைதல்(A)

18 இயேசு இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபொழுது, யூத ஆலயத் தலைவன் ஒருவன் அவரிடம் வந்தான். அவன் இயேசுவை வணங்கி,, “என் மகள் சற்றுமுன் இறந்துவிட்டாள். ஆனாலும், நீர் வந்து உமது கையால் அவளைத் தொடும். அவள் மீண்டும் உயிர் பிழைப்பாள்” என்றான்.

19 உடனே, இயேசு எழுந்து அவனுடன் சென்றார். இயேசுவின் சீஷர்களும் அவரைத் தொடர்ந்தார்கள்.

20 அப்பொழுது பன்னிரெண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதியுற்றுக்கொண்டிருந்த ஒரு பெண் இயேசுவின் பின் வந்து அவரது மேலங்கியின் நுனியைத் தொட்டாள். 21 அந்தப் பெண்,, “நான் இந்த மேலங்கியைத் தொட்டால் குணமடைவேன்” என எண்ணிக்கொண்டிருந்தாள்.

22 இயேசு திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்து அவளிடம்,, “பெண்ணே, மகிழ்ச்சியாயிரு. நீ சுகமாக்கப்பட்டாய். ஏனென்றால், நீ விசுவாசித்ததினால் குணமாக்கப்பட்டாய்” என்றார். உடனே அந்தப் பெண் குணமாக்கப்பட்டாள்.

23 இயேசு அந்தத் தலைவனுடன் தொடர்ந்து சென்று, அவனது வீட்டிற்குள் சென்றார். சரீர அடக்கத்திற்கான இசை இசைப்போரை இயேசு அங்கு கண்டார். அந்தச் சிறுமி இறந்துவிட்டதனால், அழுதுகொண்டிருந்த பலரையும் இயேசு கண்டார். 24 இயேசு,, “விலகிச் செல்லுங்கள். இச்சிறுமி இறக்கவில்லை. இவள் தூக்கத்திலிருக்கிறாள்” என்று சொன்னார். அதைக் கேட்ட அங்கிருந்த மக்கள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். 25 அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதும், இயேசு சிறுமியின் அறைக்குள் நுழைந்தார். இயேசு சிறுமியின் கரத்தைப் பிடித்தார். சிறுமி எழுந்து நின்றாள். 26 இச்செய்தி அத்தேசம் முழுவதும் பரவியது.

இயேசு பலரைக் குணமாக்குதல்

27 இயேசு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டதும் இரு குருடர்கள் அவரைத் தொடர்ந்தார்கள். அக்குருடர்கள் உரத்த குரலில்,, “தாவீதின் குமாரனே, எங்களுக்குக் கருணை காட்டும்” என்று சொன்னார்கள்.

28 இயேசு வீட்டிற்குள் சென்றார். குருடர்கள் இருவரும் அவருடன் வீட்டிற்குள் நுழைந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து,, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்குக் குருடர்கள், “ஆம், போதகரே, நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று பதிலளித்தனர்.

29 பிறகு இயேசு அவர்களது கண்களைத் தொட்டு,, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று நம்புகிறீர்கள். எனவே அது நடக்கும்” என்று சொன்னார். 30 உடனே அவர்களால் பார்க்க முடிந்தது. பின் அவர்,, “இதைக் குறித்து யாரிடமும் கூறாதீர்கள்” என்று கண்டிப்புடன் சொல்லி அனுப்பினார். 31 ஆனால் அவர்கள் அங்கிருந்து சென்று இயேசுவைக் குறித்த செய்திகளை அப்பிரதேசமெங்கும் பரப்பினார்கள்.

32 அவர்கள் இருவரும் புறப்பட்டுச்சென்ற பின், சிலர் வேறொரு மனிதனை இயேசுவிடம் அழைத்து வந்தார்கள். இம்மனிதனைப் பிசாசு பிடித்திருந்ததினால் அவனால் பேச இயலவில்லை. 33 இயேசு அம்மனிதனிடமிருந்த பிசாசை விரட்டினார். பிறகு ஊமையான அம்மனிதனால் பேச முடிந்தது. அதனால் வியப்படைந்த மக்கள்,, “இஸ்ரவேலில் நாங்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதில்லை” என்று கூறினார்கள்.

34 ஆனால் பரிசேயர்கள்,, “பிசாசுகளை விரட்டுகிற வல்லமையை இயேசுவிற்குக் கொடுத்தது பிசாசுகளின் தலைவனே” என்று சொன்னார்கள்.

இயேசுவின் கரிசனை

35 இயேசு எல்லா நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தார். பரலோக அரசைப் பற்றிய நற்செய்தியை இயேசு யூதர்களின் ஜெப ஆலயங்களில் மக்களுக்குக் கூறினார். இயேசு எல்லாவகையான நோய்களையும் குணமாக்கினார். 36 திரளான மனிதர்களைக் கண்ட இயேசு அவர்களுக்காக வருத்தமடைந்தார். ஏனென்றால், மக்கள் கவலை கொண்டும் ஆதரவற்றும் இருந்தனர். மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையைப்போல மக்கள் தங்களை வழிநடத்த மேய்ப்பனின்றி இருந்தனர். 37 இயேசு தம் சீஷர்களிடம்,, “ஏராளமான மக்கள் அறுவடைக்காக (காப்பாற்றப்பட) உள்ளனர். ஆனால் அவர்களை அறுவடை செய்வதற்கோ மிகச் சில பணியாளர்களே உள்ளனர். தேவனுக்கு உரியது அறுவடை (மக்கள்). 38 பிரார்த்தனை செய்யுங்கள். தேவன் மேலும் பலரைத் தம் அறுவடையைச் சேகரிக்க அனுப்புவார்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center