Old/New Testament
ஆபிராம் கானானுக்குத் திரும்புதல்
13 ஆபிராம் எகிப்தை விட்டு வெளியேறி, தன் மனைவியோடும் தனக்குரிய பொருட்களோடும் பாலைவனத்தின் வழியாகப் பயணம் செய்தான். லோத்துவும் அவனோடு சென்றான். 2 ஆபிராம் மிகவும் செல்வந்தனாக இருந்தான். அவனிடம் ஏராளமான மிருகங்களும் தங்கமும் வெள்ளியும் இருந்தன.
3 ஆபிராம் தொடர்ந்து பயணம் செய்து பாலைவனத்தை விட்டு பெத்தேலுக்குச் சென்று, பெத்தேல் நகரத்திற்கும் ஆயி நகரத்திற்கும் இடையில் உள்ள பகுதியில் தங்கினான். அது ஏற்கெனவே அவனும் அவன் குடும்பத்தாரும் தங்கிய இடமாகும். 4 இங்கு தான் ஆபிராம் பலிபீடம் அமைத்திருந்தான். எனவே, ஆபிராம் கர்த்தரை அந்த இடத்தில் தொழுதுகொண்டான்.
ஆபிராமும் லோத்தும் பிரிகிறார்கள்
5 இந்த நேரத்தில் லோத்தும் ஆபிராமோடு பயணம் செய்துகொண்டிருந்தான். லோத்துக்கும் நிறைய மிருகங்களும் கூடாரங்களும் இருந்தன. 6 ஆபிராமிடமும் லோத்திடமும் இருந்த மிருகங்கள் வாழ்கிற அளவிற்கு அந்த நிலம் அவ்வளவு போதுமானதாக இல்லை. 7 அதோடு கானானியர்களும் பெரிசியரும் அவர்களுடன் அங்கு வாழ்ந்து வந்தனர். ஆபிராமின் மேய்ப்பர்களும் லோத்தின் மேய்ப்பர்களும் தங்களுக்குள் சண்டையிட்டனர்.
8 எனவே, ஆபிராம் லோத்திடம், “நம்மிருவருக்கும் இடையில் எவ்வித வாக்குவாதமும் வேண்டாம். உனது ஆட்களுக்கும் எனது ஆட்களுக்கும் இனி மேல் எந்த விரோதமும் வேண்டாம். நாம் சகோதரர்கள். 9 நாம் பிரிந்து விடுவோம். உனக்கு விருப்பமான எந்த இடத்தையும் நீ தேர்ந்தெடுத்துக்கொள். நீ இடது பக்கமாகப் போனால் நான் வலது பக்கமாகப் போகிறேன். நீ வலது பக்கமாகப் போனால் நான் இடது பக்கமாகப் போகிறேன்” என்றான்.
10 லோத்து யோர்தான் நதிக்கு அருகான சமவெளியைப் பார்வையிட்டான். அங்கு நீர் வளம் இருப்பதைக் கண்டான். (கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிப்பதற்கு முன்பு சோவாருக்குப்போகும் வழிவரை அது கர்த்தரின் தோட்டம் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.) 11 எனவே லோத்து யோர்தான் சமவெளியைத் தேர்ந்தெடுத்தான். இருவரும் பிரிந்தனர். லோத்து கிழக்கு நோக்கிப் பயணம் செய்தான். 12 ஆபிராம் கானான் தேசத்தில் தங்கினான். லோத்து சமவெளிப்பகுதியின் நகரங்களில் தங்கினான். லோத்து மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து சோதோமில் கூடாரம் அடித்தான். 13 சோதோம் ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்துகொண்டிருந்தனர் என்பதை அறிந்திருந்தார்.
14 லோத்து விலகிப்போனதும் கர்த்தர் ஆபிராமிடம், “உன்னைச் சுற்றிலும் வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் பார். 15 இந்தப் பூமியை நான் உனக்கும் உன் சந்ததியினருக்கும் கொடுக்கிறேன். இது என்றென்றும் உங்களுக்குரியதாக இருக்கும். 16 உன் ஜனங்களை உலகத்தில் உள்ள புழுதியின் அளவுக்குப் பெருகச் செய்வேன். எவராவது புழுதியை எண்ண முடியுமானால் அதுவே உங்கள் தொகையாக இருக்கும். 17 எனவே நாட்டின் நீளமும் அகலமும் எவ்வளவோ அவ்வளவு தூரம் நட. நான் அவற்றை உனக்குத் தருவேன்” என்றார்.
18 எனவே, ஆபிராம் தனது கூடாரத்தை எடுத்துக்கொண்டு பெரிய மரங்களிருக்கும் எபிரோனிலிலுள்ள மம்ரேயின் சமபூமிக்குச் சென்றான். இங்கு ஆபிராம் கர்த்தரைத் தொழுதுகொள்ள ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
லோத்து பிடிக்கப்படுதல்
14 அம்ராப்பேல் சிநெயாரின் அரசன். அரியோகு ஏலாசாரின் அரசன். கெதர்லாகோமேர் ஏலாமின் அரசன். திதியால் கோயம் தேசத்தின் அரசன். 2 இவர்கள் அனைவரும் மற்ற அரசர்களோடு சண்டையிட்டனர். சோதோமின் அரசனான பேராவோடும், கொமோராவின் அரசனான பிர்சாவோடும், அத்மாவின் அரசனான சிநெயாவோடும், செபோயீமின் அரசனான செமேபரோடும் பேலாவின் அரசனோடும் (பேலா சோவார் என்றும் அழைக்கப்பட்டான்) அவர்கள் போர் செய்தனர்.
3 சித்தீம் பள்ளத்தாக்கில் எல்லா அரசர்களும் தம் படைகளோடு கூடினர். (சித்தீம் பள்ளத்தாக்கு இப்போது உப்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது.) 4 இந்த அரசர்கள் 12 ஆண்டுகள் கெதர்லாகோமேருக்குச் சேவைசெய்து 13ஆம் ஆண்டில் கலகம் செய்தார்கள். 5 14 ஆம் ஆண்டிலே கெதர்லாகோமேரும் அவனோடு இருந்த அரசர்களும் போருக்கு வந்தனர். இவர்கள் அஸ்தரோத் கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும் காமிலிருந்த சூசிமியரையும், சாவேகீரியத் தாயீமிலே இருந்த ஏமியரையும், 6 சேயீர் மலைகளில் இருந்த ஒசரியரையும் வனாந்தரத்திற்கு அருகிலே இருந்த எல்பாரான் மட்டும் தோற்கடித்தனர். 7 அதன்பிறகு அரசன் கெதர்லாகோமேர் வடதிசையில் காதேஸ் என்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து அமலேக்கியரின் நாடுகளையும் அத்சாத்சோன் தாமாரிலே இருந்த எமோரியரையும் அழித்து ஒழித்தான்.
8 அப்போது சோதோம், அத்மா, கொமோரா, செபோயீம், சோவார் என்னும் பேலா ஆகிய நாடுகளின் அரசர்கள் புறப்பட்டுப் போனார்கள். இவர்கள் சித்தீம் பள்ளத்தாக்கிலே, ஏலாமின் அரசனாகிய கெதர்லாகோமேரோடும், கோயம் அரசனாகிய திதியாலோடும் சிநெயாரின் அரசனாகிய அம்ராப்பேலோடும் ஏலாசாரின் அரசனாகிய அரியோகோடும் யுத்தம் செய்தார்கள். 9 எனவே நான்கு அரசர்கள் ஐந்து பேருக்கு எதிராக இருந்தனர்.
10 அந்த சித்தீம் பள்ளத்தாக்கு முழுவதும் தார் நிறைந்த குழிகள் இருந்தன. சோதோம் கொமோராவின் அரசர்கள் தோற்றோடி வந்து அதில் விழுந்தார்கள். இன்னும் பலர் மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.
11 எனவே, சோதோம் மற்றும் கொமோராவினருக்கு உரிய பொருட்களை எல்லாம் அவர்களின் பகைவர்கள் எடுத்துக்கொண்டனர். அவர்களது அனைத்து உணவுப் பொருட்களையும், ஆடைகளையும் எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ஆபிராமின் சகோதரனுடைய மகனான லோத்து சோதோமில் வசித்துக்கொண்டிருந்தான். 12 அவனையும் எதிரிகள் பிடித்துக்கொண்டார்கள். மேலும் அவனுடைய உடமைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு எதிரிகள் ஓடினார்கள். 13 பிடிபடாதவர்களில் ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடம் சென்று நடந்ததைக் கூறினான். ஆபிராம் மம்ரே என்னும் எமோரியனுடைய பூமியில் குடியிருந்தான். மம்ரே, எஸ்கோல், ஆநேர் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் உதவுவதாக ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர்கள் ஆபிராமுக்கு உதவுவதாகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.
ஆபிராம் லோத்தை மீட்கிறான்
14 லோத்து கைதுசெய்யப்பட்டதை ஆபிராம் அறிந்துகொண்டான். அவன் தனது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்தான் அவர்களிடம் 318 பயிற்சி பெற்ற வீரர்கள் இருந்தனர். அவன் அவர்களோடு தாண் நகரம்வரை பகைவர்களைத் துரத்திக்கொண்டு போனான். 15 அன்று இரவு அவனும் அவனது வீரர்களும் பகைவரைத் திடீரென்று தாக்கினர். அவர்களைத் தோற்கடித்து தமஸ்குவின் வடக்கேயுள்ள கோபாவரை துரத்தினர். 16 பிறகு, பகைவர்கள் எடுத்துசென்ற அனைத்து பொருட்களையும் ஆபிராம் மீட்டுக்கொண்டான். பெண்கள், வேலைக்காரர்கள், லோத்து, அவனது பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டன.
17 பிறகு ஆபிராம் கெதர்லாகோமரையும் அவனோடிருந்த அரசர்களையும் தோற்கடித்து விட்டு தன் நாட்டுக்குத் திரும்பினான். சோதோமின் அரசன் புறப்பட்டு சாவே பள்ளத்தாக்குக்கு வந்து ஆபிராமை வரவேற்றான். (இப்போது இப்பள்ளத்தாக்கு அரசனின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.)
மெல்கிசேதேக்
18 சாலேமின் அரசனாகிய மெல்கிசேதேக்கும் ஆபிராமைச் சந்திக்கப் போனான். இவன் உன்னதமான தேவனின் ஆசாரியன். இவன் அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவந்தான். 19 மெல்கிசேதேக் ஆபிராமை ஆசீர்வாதம் செய்து,
“ஆபிராமே, வானத்தையும் பூமியையும் படைத்த
உன்னதமான தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
20 நாம் உன்னதமான தேவனைப் போற்றுவோம்.
உன் பகைவர்களை வெல்ல உனக்கு தேவன் உதவினார்” என்றான்.
போரில் கைப்பற்றியவற்றில் பத்தில் ஒரு பங்கை ஆபிராம் மெல்கிசேதேக்கிற்குக் கொடுத்தான். 21 பிறகு சோதோமின் அரசன் ஆபிராமிடம், “இவை எல்லாவற்றையும் நீ உனக்கே வைத்துக்கொள். எனது ஜனங்களை மட்டும் எனக்குக் கொடு அது போதும்” என்றான்.
22 ஆனால் ஆபிராமோ சோதோம் அரசனிடம், “நான் உன்னதமான தேவனாகிய கர்த்தரிடம் வாக்குப் பண்ணியிருக்கிறேன். வானத்தையும் பூமியையும் படைத்த உன்னதமான தேவனுக்கு முன்பாக என் கைகள் சுத்தமாயிருக்கிறது. 23 உனக்குரிய எதையும் நான் வைத்திருக்க மாட்டேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறேன். நான் உனக்குரிய ஒரு நூல் அல்லது பாதரட்டையின் சிறு வாரையாகிலும் கூட ஏற்கமாட்டேன். ‘நான் ஆபிராமைப் பணக்காரன் ஆக்கினேன்’ என்று நீ சொல்வதை நான் விரும்ப மாட்டேன். 24 என்னுடைய இளைஞர்கள் உண்பதற்கான உணவை மட்டுமே ஏற்றுக்கொள்வேன். ஆனால் மற்றவர்களுக்கு அவர்களின் பங்கினைக் கொடுத்துவிடு. நாம் போரில் வென்ற பொருட்களையெல்லாம் எடுத்துக்கொள். சிலவற்றை ஆநேர், எஸ்கோல், மம்ரே ஆகியவர்களுக்குக் கொடு. இவர்கள் எனக்குப் போரில் உதவினார்கள்” என்றான்.
ஆபிராமோடு தேவனின் உடன்படிக்கை
15 இவையெல்லாம் நடந்த பிறகு கர்த்தரின் வார்த்தையானது ஆபிராமுக்குத் தரிசனத்தில் வந்தது. தேவன், “ஆபிராமே, நீ பயப்படவேண்டாம். நான் உன்னைப் பாதுகாப்பேன். உனக்குப் பெரிய பரிசு தருவேன்” என்றார்.
2 ஆனால் ஆபிராமோ, “தேவனாகிய கர்த்தாவே! நீர் கொடுக்கிற எதுவும் எனக்கு மகிழ்ச்சியைத் தராது, ஏனென்றால் எனக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே நான் மரித்த பிறகு எனக்குரிய பொருட்கள் எல்லாம் எனது அடிமையான தமஸ்குவைச் சேர்ந்த எலியேசருக்கு உரியதாகும்” என்றான். 3 மேலும் ஆபிராம், “நீர் எனக்கு மகனைக் கொடுக்கவில்லை. எனவே என் வீட்டில் பிறக்கும் அடிமைக்கு இந்த சொத்து முழுவதும் உரிமையாகுமே” என்றான்.
4 கர்த்தர் ஆபிராமிடம், “அந்த அடிமை உனக்குரியவற்றைப் பெறமாட்டான். உனக்கொரு மகன் பிறப்பான். அவனே உனக்குரியவற்றைப் பெற்றுக்கொள்வான்” என்றார்.
5 பிறகு தேவன் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தில் நிறைந்திருக்கும் ஏராளமான நட்சத்திரங்களைப் பார், அவற்றை உன்னால் எண்ணமுடியாது, வருங்காலத்தில் உன் சந்ததியும் இவ்வாறே இருக்கும்” என்றார்.
6 ஆபிராம் தேவனை நம்பினான். மேலும் தேவன் ஆபிராமின் நம்பிக்கையை அவனுடைய நீதியான காரியமாக எண்ணினார். 7 தேவன் ஆபிராமிடம், “நானே கர்த்தர். உன்னை பாபிலோனியாவிலுள்ள ஊர் என்னும் பட்டணத்திலிருந்து அழைத்து வந்தேன். நானே இதைச்செய்தேன். இந்தத் தேசத்தை உனக்குக் கொடுக்கிறேன். இது உனக்கே உரியதாகும்” என்றார்.
8 ஆனால் ஆபிராமோ, “கர்த்தராகிய என் ஆண்டவரே! இந்தத் தேசம் எனக்கு உரியதாகும் என்று எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது?” என்று கேட்டான்.
9 தேவன் ஆபிராமிடம், “நாம் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்வோம், மூன்று ஆண்டுகள் ஆன ஒரு பசுவை கொண்டு வா. அதோடு மூன்று ஆண்டுகள் ஆன ஆட்டையும், ஆட்டுக்கடாவையும், கொண்டு வா, அதோடு ஒரு காட்டுப் புறாவையும், புறாக் குஞ்சையும் என்னிடம் கொண்டு வா” என்றார்.
10 ஆபிராம் இவை எல்லாவற்றையும் தேவனிடம் கொண்டு வந்தான். ஒவ்வொன்றையும் கொன்று இரண்டு துண்டுகளாக வெட்டி, பிறகு ஒரு பாதியை இன்னொரு பாதியோடு சேர்த்தான். பறவைகளை அவன் அவ்வாறு வெட்டவில்லை. 11 பின்னர், பெரிய பறவைகள் விலங்குகளின் உடலை உண்ண கீழே பறந்து வந்தன. ஆபிராம் அவற்றைத் துரத்தினான்.
12 சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்கியபோது ஆபிராமுக்குத் தூக்கம் வந்தது. அத்துடன் அச்சுறுத்தும் இருள் அவனைச் சூழ்ந்துகொண்டது. 13 பிறகு கர்த்தர் ஆபிராமிடம், “நீ இவ்விஷயங்களைப்பற்றி அறிய வேண்டும். உனது சந்ததி தங்களுக்குச் சொந்தமில்லாத நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள். அங்குள்ளவர்கள் அவர்களை 400 ஆண்டு காலத்துக்கு அடிமைகளாக வைத்திருந்து, மோசமாக நடத்துவார்கள். 14 ஆனால் நான் அந்த நாட்டைத் தண்டிப்பேன். உனது ஜனங்கள் அந்நாட்டை விட்டு பல்வேறு பொருட்களுடன் வெளியேறுவார்கள்.
15 “நீ நல்ல முதிர் வயதாகும்வரை வாழ்ந்து, சமாதானமாக மரணமடைவாய். 16 நான்கு தலைமுறைகளுக்குப்பின் உன் சந்ததியினர் மீண்டும் இங்கே வருவார்கள். அப்போது உனது ஜனங்கள் எமோரியரைத் தோற்கடிப்பார்கள். இது எதிர்காலத்தில்தான் நடைபெறும், ஏனென்றால் இன்னும் எமோரியர்கள் தண்டிக்கப்படுகிற அளவிற்கு மிக மோசமாகக் கெட்டுப்போகவில்லை” என்றார்.
17 சூரியன் அஸ்தமித்தபின் மேலும் இருளாயிற்று. மரித்துப்போன மிருகங்கள் தரையின் மேலேயே கிடந்தன. இரண்டு துண்டுகளாகக் கிடந்த அவற்றின் உடலிலிருந்து சூளையின் புகையும் நெருப்பும் வெளிவந்தன.
18 ஆகையால், அன்று கர்த்தர் ஆபிராமோடு ஒரு வாக்குறுதியும், உடன்படிக்கையையும் செய்துகொண்டார். கர்த்தர், “நான் இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவேன். எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன். 19 இந்த பூமி கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், 21 எமோரியர், கானானியர், கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்” என்றார்.
இயேசுவின் மலைப் பிரசங்கம்(A)
5 அங்குக் கூட்டமாயிருந்த மக்களைப் பார்த்த இயேசு ஒரு குன்றின்மீது சென்று அமர்ந்தார். அவரது சீஷர்கள் அவரிடம் வந்தார்கள். 2 இயேசு மக்களுக்குக் கீழ்க்கண்டவாறு போதனை செய்தார்:
3 ,“ஆவியில் எளிமை கொண்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
பரலோக இராஜ்யம் அவர்களுக்குரியது.
4 இம்மையில் துக்கம் அடைந்த மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தேவன் அவர்களைத் தேற்றுவார்.
5 பணிவுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தேவன் வாக்களித்த இடத்தை [a] அவர்கள் பெறுவார்கள்.
6 மற்ற எதைக் காட்டிலும் நீதியான செயல்களைச் செய்ய விரும்புகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்களுக்கு முழுத்திருப்தியைத் தேவன் அளிப்பார்.
7 மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்களுக்குக் கருணை காட்டப்படும்.
8 தூய்மையான எண்ணமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் தேவனின் அருகாமையிலிருப்பார்கள்.
9 அமைதிக்காகச் செயலாற்றுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தேவன் அவர்களைத் தன் குமாரர்கள் என அழைப்பார்.
10 நன்மை செய்வதற்காகத் தண்டிக்கப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
பரலோக இராஜ்யம் அவர்களுக்குரியது.
11 ,“உங்களுக்கெதிராகத் தீய சொற்களைப் பேசி மக்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதினிமித்தம் எல்லாவிதமான தீய சொற்களையும் உங்களுக்கெதிராகச் சொல்வார்கள். ஆனால் மக்கள் உங்களுக்கு அவற்றைச் செய்யும்பொழுது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 12 அதற்காக மகிழ்ச்சியடையுங்கள். தேவனுடைய மகத்தான வெகுமதி உங்களுக்குக் காத்திருக்கிறது. உங்களுக்கு முன்பு வாழ்ந்த தீர்க்கதரிசிகளுக்கும் மக்கள் அதே விதமான தீமைகளைச் செய்தார்கள்.
உப்பு, ஒளி உவமைகள்(B)
13 ,“பூமிக்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள். தன் சுவையை உப்பு இழந்தால் மீண்டும் அதை உப்பாக மாற்றவோ, வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியாது. அது தெருவில் எறியப்பட்டு மக்களால் மிதிக்கப்படும்.
14 ,“உலகுக்கு ஒளித்தரும் விளக்கு நீங்களே. ஒரு குன்றின் மேல் அமைந்த பட்டணம் மறைந்திருக்க முடியாது. 15 மக்கள் எரிகின்ற விளக்கைக் குடத்தின் கீழ் வைத்து மறைப்பதில்லை. மாறாக, அதை மக்கள் விளக்குத் தண்டின் மீது வைக்கிறார்கள். அப்பொழுது தான் விளக்கு வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தருகிறது. 16 அது போலவே, நீங்களும் மற்ற மனிதர்களுக்கு விளக்காக விளங்கவேண்டும். உங்களது நற்செயல்களை மற்றவர்கள் காணும்படி வாழுங்கள். பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவை மக்கள் புகழ்ந்து பேசுமாறு நீங்கள் வாழுங்கள்.
இயேசுவும் பழைய ஏற்பாடும்
17 ,“மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன். 18 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். வானமும் பூமியும் உள்ளவரைக்கும் கட்டளைகளில் எதுவும் மறையாது. அனைத்தும் நிறைவேறுகிற வரைக்கும் கட்டளைகளின் ஒரு சிறு எழுத்தோ அல்லது ஒரு சிறு எழுத்தின் பகுதியோ கூட மறையாது.
19 ,“ஒருவன் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமென்றும் கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்லுகிறவன் பரலோக இராஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பெறுவான். 20 சட்டங்களைப் போதிக்கிறவர்களைவிடவும் பரிசேயர்களைவிடவும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களைவிடவும் சிறப்பாகச் செயல்படாவிட்டால், நீங்கள் பரலோக இராஜ்யத்தில் நுழையமாட்டீர்கள்.
கோபத்தைப் பற்றிய போதனை
21 ,“‘எவரையும் கொல்லாதே. [b] கொலை செய்கிறவன் தண்டிக்கப்படுவான்’ என்று வெகு காலத்திற்கு முன்னரே நமது மக்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதை அறிவீர்கள். 22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், யாரிடமும் கோபம் கொள்ளாதீர்கள். அனைவரும் உங்கள் சகோதரர்களே. நீங்கள் மற்றவர்களிடம் கோபம் கொண்டால், நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். மற்றவருக்கு எதிராகத் தீயவைகளைச் சொன்னால் யூத ஆலோசனைக் குழுவினால் தண்டிக்கப்படுவீர்கள். வேறொரு மனிதனை முட்டாள் என்று நீங்கள் அழைத்தால், நரகத் தீயின் ஆபத்துக்குள்ளாவீர்கள்.
23 ,“எனவே, நீங்கள் தேவனுக்கு உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்தும்பொழுது மற்றவர்களையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் காணிக்கையைச் செலுத்தும்பொழுது, உங்கள் சகோதரன் உங்கள் மீது வருத்தத்துடன் இருப்பது உங்கள் நினைவிற்கு வந்தால், 24 உங்கள் காணிக்கையைப் பலிபீடத்திற்கு முன் வைத்துவிட்டு, சென்று அவனுடன் சமாதானமாகுங்கள். பின்னர் வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
25 ,“உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்திற்கு அழைத்தால், அவனுடன் விரைவாக நட்பாகுங்கள். நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பே அதைச் செய்ய வேண்டும். அவனுடன் நட்பாகாவிட்டால், அவன் உங்களை நீதிபதியிடம் ஒப்படைப்பான். மேலும், நீதிபதி உங்களைச் சிறையிலடைக்க காவலரிடம் ஒப்படைப்பார். 26 நான் சொல்லுகிறேன், நீங்கள் கொடுக்கவேண்டியது அனைத்தையும் கொடுத்துத் தீர்க்கிறவரையிலும் உங்களால் அந்தச் சிறையை விட்டு மீளமுடியாது.
2008 by World Bible Translation Center