Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சகரியா 13-14

13 ஆனால் அந்நேரத்தில், தாவீதின் குடும்பத்தாருக்கும், எருசலேமின் குடிமக்களுக்கும் ஒரு புதிய நீரூற்று திறக்கப்படும். அந்த ஊற்று அவர்களின் பாவத்தைக் கழுவி அந்த ஜனங்களைச் சுத்தப்படுத்தும்.

இனி கள்ளத் தீர்க்கதரிசிகள் இருக்கமாட்டார்கள்

சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “அந்நேரத்தில் நான் பூமியிலுள்ள அனைத்து விக்கிரகங்களையும் நீக்குவேன். ஜனங்கள் அவற்றின் பெயர்களைக் கூட நினைவில் வைத்திருக்கமாட்டார்கள். நான் பூமியிலிருந்து கள்ளத்தீர்க்கதரிசிகளையும், சுத்தமற்ற ஆவிகளையும் நீக்குவேன். ஒருவன் தொடர்ந்து தீர்க்கதரிசனம் சொன்னால் பின்னர் அவன் தண்டிக்கப்படுவான். அவன் பெற்றோர்கள் அவனது சொந்த தாயும் தந்தையும் அவனிடம், ‘நீ கர்த்தர் நாமத்தால் பொய் சொன்னாய். எனவே நீ மரிக்க வேண்டும்!’ என்று சொல்வார்கள். அவனது சொந்த தாயும் தந்தையும் அவனைத் தீர்க்கதரிசனம் சொன்னதற்காகக் குத்திக்கொல்வார்கள். அந்நேரத்தில் தீர்க்கதரிசிகள் தமது தரிசனங்களுக்காவும், தீர்க்கதரிசனங்களுக்காகவும் வெட்கப்படுவார்கள். அவர்கள் தாம் தீர்க்கதரிசிகள் என்பதைக் காட்டும் முரட்டு ஆடையை அணியமாட்டார்கள். கள்ளத் தீர்க்கதரிசனங்களால் ஜனங்களை ஏமாற்றுவதற்கு அவர்கள் அவ்வாடைகளை அணிவதில்லை. அந்த ஜனங்கள் சொல்வார்கள்: ‘நான் தீர்க்கதரிசி அல்ல. நான் ஒரு விவசாயி. நான் குழந்தைப் பருவத்திலிருந்தே விவசாய வேலையைச் செய்து வருகிறேன்.’ ஆனால் மற்ற ஜனங்களோ, ‘உங்கள் கைகளில் ஏன் இந்த காயங்கள்?’ என்று கேட்பர். அவனோ, ‘நான் என் நண்பனின் வீட்டில் அடிக்கப்பட்டேன்’” என்பான்.

சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “வாளே, மேய்ப்பனைத் தாக்கு. என் நண்பனைத் தாக்கும் மேய்ப்பனைத் தாக்கு. அந்த மந்தை ஓடிச் செல்லும். நான் அந்தச் சிறியவர்களையும் தண்டிப்பேன். இந்த நாட்டிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு ஜனங்கள் காயப்பட்டு மரிப்பார்கள். ஆனால் மூன்றில் ஒரு பங்கினர் பிழைப்பார்கள். பின்னர் நான் மீதியானவர்களைச் சோதிப்பேன். நான் அவர்களுக்கு அநேக துன்பங்களைக் கொடுப்பேன். அத்துன்பங்கள் வெள்ளியைச் சுத்தமான வெள்ளி என்று நிரூபிக்கும் நெருப்பைப் போன்றிருக்கும். ஒருவன் தங்கத்தைச் சோதிப்பது போல நான் அவர்களைச் சோதிப்பேன். பின்னர், அவர்கள் என்னை உதவிக்காக வேண்டுவார்கள். நான் அவர்களுக்குப் பதிலுரைப்பேன். நான், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பேன். அவர்கள், ‘கர்த்தர் எங்கள் தேவன்’” என்பார்கள்.

நியாயத்தீர்ப்பு நாள்

14 பார், கர்த்தருக்கு நியாயந்தீர்க்க சிறப்பான நாள் இருக்கிறது. நீங்கள் அள்ளி வந்த செல்வங்கள் உங்கள் நகரில் பங்கிடப்படும். நான் எல்லா தேசங்களையும் எருசலேமிற்கு எதிராகப் போரிட கூட்டுவேன். அவர்கள் நகரைக் கைப்பற்றி வீடுகளை அழிப்பார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள். ஜனங்களின் பாதிபேர் கைதிகளாக கொண்டுப் போகப்படுவார்கள். ஆனால் மீதியுள்ளவர்கள், நகருக்கு வெளியே கொண்டு செல்லப்படமாட்டார்கள். பின்னர் கர்த்தர் அந்நாடுகளோடு போரிடச் செய்வார். இது உண்மையான போராக இருக்கும். அந்நேரத்தில், அவர் எருசேலேமிற்கு கிழக்கே உள்ள ஒலிவ மலைமேல் நிற்பார். ஒலிவமலை பிளக்கும். அதன் ஒரு பகுதி வடக்குக்கும் மற்றொரு பகுதி தெற்கிற்கும் நகரும். ஒரு ஆழமான பள்ளத்தாக்கு கிழக்கிலிருந்து மேற்காக திறந்துக்கொள்ளும். அம்மலைப் பள்ளத்தாக்கு உங்களை நெருங்க நெருங்க நீங்கள் தப்பி ஓட முயல்வீர்கள். நீங்கள் யூதாவின் அரசனான உசியாவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பயந்து ஓடியதுபோன்று ஓடுவீர்கள். ஆனால் எனது தேவனாகிய கர்த்தர் வருவார். அவரோடு அவரது பரிசுத்தமானவர்களும் வருவார்கள்.

6-7 அது மிகவும் விசேஷமான நாளாக இருக்கும். அங்கு வெளிச்சமும், குளிரும், மப்பும் இருக்கிறது. கர்த்தர் மட்டுமே அந்த நாளை அறிவார். ஆனால் அங்கே இரவோ, பகலோ இருக்காது. பின்னர், வழக்கமாக இருள் வரும் நேரத்தில் இன்னும் வெளிச்சம் இருக்கும். அந்நேரத்தில், எருசலேமிலிருந்து தொடர்ந்து தண்ணீர் பாயும். அந்த தண்ணீரோடை இரண்டாகப் பிரிந்து ஒன்று கிழக்காகவும், இன்னொன்று மேற்கே மத்தியதரைக் கடலுக்கும் பாயும். இது ஆண்டு முழுவதும் கோடைக் காலத்திலும், மழைகாலத்திலும் பாய்ந்துகொண்டிருக்கும் அந்நேரத்தில் உலகம் முழுவதற்கும் கர்த்தரே அரசராக இருப்பார். கர்த்தர் ஒருவரே, அவரது நாமம் ஒன்றே. 10 அந்நேரத்தில், எருசலேமைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் அரபா பாலைவனமாக காலியாக இருக்கும். நாடானது கேபா தொடங்கி எருசலேமிற்கு தெற்கேயுள்ள ரிம்மோன் வரைக்கும் பாலைவனமாகும். ஆனால் எருசலேம் நகரம் முழுவதும் மீண்டும் கட்டப்படும். பென்யமீன் வாசல் தொடங்கி முதல்வாசல் (மூலை வாசல்) வரைக்கும் அனானெயேல் கோபுரம் தொடங்கி ராஜாவின் திராட்சை ஆலைகள் வரை குடியேற்றப்பட்டிருக்கும். 11 ஜனங்கள் அங்கே வாழப்போவார்கள். இனி மேல் அவர்களை எந்தப் பகைவரும் அழிக்க வரமாட்டார்கள். எருசலேம் பாதுகாப்பாக இருக்கும்.

12 ஆனால் எருசலேமிற்கு எதிராக போரிட்ட நாடுகளை கர்த்தர் தண்டிப்பார். அவர்களுக்குப் பயங்கரமான நோய் ஏற்பட காரணமாக இருப்பார். அங்கு ஜனங்கள் இன்னும் நின்றுகொண்டிருக்கும்போதே அவர்களின் தோல் அழுகும். அவர்களின் கண்கள் இமைக்குள்ளும் நாக்குகள் வாய்க்குள்ளும் அழுகிப் போகும். 13-15 அந்தப் பயங்கரமான நோய் எதிரியின் கூடாரத்தில் இருக்கும். அவர்களின் குதிரைகள் கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் எல்லாம் அந்நோயால் பீடிக்கப்படும்.

அந்நேரத்தில், அந்த ஜனங்கள் கர்த்தருக்கு உண்மையில் பயப்படுவார்கள். அவர்கள் ஒருவரையொருவர் பிடித்து பற்றிக்கொண்டு சண்டையிடுவார்கள். யூதாவின் ஜனங்கள் எருசலேமில் போரிடுவார்கள். ஆனால், அவர்கள் நகரத்தைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து செல்வத்தைப் பெறுவார்கள். அவர்கள் மிகுதியாக பொன், வெள்ளி, ஆடை ஆகியவற்றைப் பெறுவார்கள். 16 எருசலேமில் போரிட வந்த ஜனங்களில் சிலர் பிழைப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் அரசனான சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதிட வருவார்கள். அவர்கள் அடைக்கல கூடாரப் பண்டிகையை கொண்டாட வருவார்கள். 17 பூமியிலுள்ள எந்த ஒரு குடும்பத்திலுள்ள ஜனங்களும் அரசனை, சர்வ வல்மையுள்ள கர்த்தரை தொழுதிட எருசலேம் செல்லாமல் இருந்தால், பிறகு கர்த்தர் அவர்கள் மழை பெறாமல் போகும்படிச் செய்வார். 18 எகிப்திலுள்ள குடும்பத்தார்கள் எவரும் அடைக்கல கூடார பண்டிகை கொண்டாட வராமல் போனால், பின்னர் கர்த்தர் பகைவரது நாடுகளுக்குக் கொடுத்த நோயை அவர்கள் பெறும்படிச் செய்வார். 19 அது தான் எகிப்துக்கான தண்டனையாக இருக்கும். அடைக்கல கூடார பண்டிகையைக் கொண்டாட வராத மற்ற நாடுகளுக்கும் இதுதான் தண்டனை.

20 அந்நேரத்தில், அனைத்தும் தேவனுக்கு உரியதாகும். குதிரைகளின் மணிகளில் கூட கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று பொறிக்கப்பட்டிருக்கும். கர்த்தருடைய ஆலயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து பானைகளும் பலிபீடத்திற்கு முன்பாக இருக்கும் பாத்திரங்களைப் போன்று முக்கியமானதாக இருக்கும். 21 உண்மையில், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள ஒவ்வொரு பானைக்கும் சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு “பரிசுத்தம்” என்ற முத்திரையிருக்கும். கர்த்தருக்கு தகன பலிகளை செலுத்தும் ஒவ்வொருவரும் வந்து அவற்றில் சமைத்து உண்ண முடியும்.

அந்நேரத்தில், அங்கு வியாபாரிகள் எவரும் சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஆலயத்தில் பொருட்களை விற்கவும் வாங்கவும்மாட்டார்கள்.

வெளி 21

புதிய எருசலேம்

21 பிறகு நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன். முதலாவது வானமும், பூமியும் மறைந்து போயிற்று. இப்போது கடல் இல்லை. தேவனிடமிருந்து பரலோகத்தை விட்டுக் கீழே இறங்கிவரும் பரிசுத்த நகரைக் கண்டேன். தேவன் அனுப்பிய அந்நகரமே புதிய எருசலேம். [a] அது, தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல தயார்படுத்தப்பட்டது.

சிம்மாசனத்திலிருந்து ஓர் உரத்தகுரல் கேட்டது: “இப்போது தேவனுடைய வீடு அவரது மக்களோடு உள்ளது. அவர் அவர்களோடு வாழ்வார். அவர்களே அவரது மக்களாக இருப்பார்கள். தேவன் தாமே அவர்களோடிருந்து அவர்களுடைய தேவனாய் இருப்பார். அவர்களின் கண்களில் வடியும் கண்ணீரை தேவன் துடைப்பார். இனிமேல் அங்கே மரணம் இருக்காது. துக்கமும், அழுகையும், வேதனையும் இல்லாமல் போகும். பழைய முறைகள் எல்லாம் போய்விட்டன” என்றது.

சிம்மாசனத்தில் இருந்தவர், “பார்! நான் எல்லாவற்றையும் புதிதாகப் படைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார். “பிறகு இதனையும் எழுதிக்கொள். ஏனென்றால் இந்த வார்த்தைகள் உண்மையானவை. நம்பிக்கைக்குரியவை” என்றார்.

சிம்மாசனத்தில் இருந்தவர் என்னிடம், “இது முடிந்து விட்டது. நானே அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன். அதாவது நானே துவக்கமும் முடிவுமாக இருக்கிறேன். நான் தாகமாய் இருக்கிறவனுக்கு ஜீவ நீரூற்றிலிருந்து நீரைக் கொடுப்பேன். எவன் ஒருவன் வெற்றி பெறுகிறானோ அவனுக்கு இவை எல்லாம் கொடுக்கப்படும். அவனுக்கு நான் தேவனாகவும் அவன் எனக்கு மகனாகவும் இருப்பான். ஆனால் கோழைகளாக இருப்பவர்களும், நம்ப மறுப்பவர்களும், பயங்கரமான காரியங்களைச் செய்பவர்களும், கொலைகாரர்களும், பாலியல் குற்றங்கள் செய்பவர்களும், மந்திர சூன்ய வேலை செய்பவர்களும், உருவ வழிபாடு செய்பவர்களும், பொய்யர்களும் கந்தகம் எரியும் நெருப்புக் கடலுள் தள்ளப்படுவார்கள். இதுவே இரண்டாம் மரணம்” என்றார்.

ஏழு தேவதூதர்களுள் ஒருவன் என்னிடம் வந்தான். இவன் ஏழு இறுதி வாதைகள் நிறைந்த ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த தூதர்களில் ஒருவன். அத்தூதன் என்னிடம், “என்னுடன் வா. நான் ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகப்போகும் மணமகளைக் காட்டுவேன்” என்றான். 10 அவன் ஆவியானவரால் என்னை மிகப் பெரிய உயர்ந்த மலை ஒன்றுக்கு தூக்கிச் சென்றான். அவன் எனக்கு எருசலேம் என்ற பரிசுத்தமான நகரத்தைக் காட்டினான். அது தேவனிடமிருந்து வானினின்று வெளிப்பட்டு கீழே இறங்கிக்கொண்டிருந்தது.

11 அது தேவனுடைய மகிமையால் ஒளி வீசிக்கொண்டிருந்தது. அது விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப் போன்றும், பளிங்குபோல சுத்தமான வைரக் கல்லைப் போன்றும் மின்னியது. 12 அது தன்னைச் சுற்றிலும் மிகவும் உயர்ந்த பன்னிரண்டு வாசல்களையுடைய மாபெரும் மதிலைக் கொண்டிருந்தது. அந்தப் பன்னிரண்டு வாசல்களிலும், பன்னிரண்டு தேவ தூதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வாசலிலும் இஸ்ரவேலில் உள்ள பன்னிரண்டு குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. 13 கிழக்கே மூன்று வாசல்களும், வடக்கே மூன்று வாசல்களும், தெற்கே மூன்று வாசல்களும், மேற்கே மூன்று வாசல்களும் இருந்தன. 14 நகரத்தின் சுவர்கள் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அக்கற்களில் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

15 என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதனின் கைகளில் நகரையும் அதன் வாசல்களையும் அதன் மதிலையும் அளப்பதற்காகப் பொன்னாலான ஒரு அளவு கோல் இருந்தது. 16 அந்நகரம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதனுடைய நீளம் அகலத்துக்குச் சமமாக இருந்தது. அத்தூதன் நகரத்தைத் தன் கோலால் அளந்தான். அது 12,000 ஸ்தாதி [b] நீளமும் 12,000 ஸ்தாதி அகலமும் கொண்ட அளவுடையதாய் இருந்தது. அதன் உயரமும் அவ்வாறே 12,000 ஸ்தாதி அளவுடையதாயிருந்தது. 17 அத்தூதன் மதிலையும் அளந்தான். அது மனித அளவின்படி அதாவது தூதனுடைய முன்னங்கையால் 144 முழ உயரம் இருந்தது. 18 அச்சுவர் வைரக்கல்லால் ஆனது. நகரம் தூய பளிங்கு போன்ற தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது.

19 நகரத்தின் சுவர்களுக்கான அஸ்திபாரக் கற்கள் விலை உயர்ந்த நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதன் முதல் அஸ்திபாரக்கல் வைரக்கல். இரண்டாவது கல் இந்திரநீலம். மூன்றாவது சந்திர காந்தம். நான்காவது மரகதம். 20 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம். ஏழாவது சுவர்ணரத்தினம். எட்டாவது படிகப்பச்சை. ஒன்பதாவது புஷ்பராகம். பத்தாவது வைடூரியம். பதினோராவது கல் சுநீரம். பன்னிரண்டாவது சுகந்தி. 21 பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாய் இருந்தன. ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாய் இருந்தது. அந்த நகரத் தெரு தூய பொன்னால் ஆக்கப்பட்டது. கண்ணாடியைப்போல அந்தப் பொன் சுத்தமாயிருந்தது.

22 அந்நகரத்தில் ஆலயம் எதையும் நான் காணவில்லை. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதன் ஆலயமாக இருக்கின்றனர். 23 அந்நகரத்துக்கு ஒளி தர சூரியனோ சந்திரனோ தேவையில்லை. தேவனுடைய மகிமை அங்கு ஒளி வீசுகிறது. ஆட்டுக்குட்டியானவரே அங்கு ஒளியாக இருக்கிறார்.

24 இரட்சிக்கப்படுகிற மக்கள் அனைவரும் அதின் ஒளியில் நடப்பார்கள். உலகில் உள்ள அரசர்கள் தம் மகிமையை அந்நகருக்குள் கொண்டு வருவார்கள். 25 எந்நாளிலும் நகரத்தின் வாசல் கதவுகள் அடைக்கப்படாமல் இருக்கும். ஏனென்றால் அந்நகரில் இரவு என்பதே இல்லை. 26 அவர்கள் தேசங்களின் மகிமையும் கௌரவமும் அதற்குள் கொண்டு வரப்படும். 27 சுத்தமற்ற எதுவும் அந்நகருக்குள் நுழைவதில்லை. வெட்கப்படத்தக்க செயல்களைச் செய்பவர்களும் பொய் சொல்பவர்களும் அந்நகருக்குள் பிரவேசிப்பதில்லை. ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப்புத்தகத்தில் எவருடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளனவோ அவர்கள் மட்டுமே அங்கு போகமுடியும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center