Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சகரியா 9-12

பிற நாடுகளுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு

தேவனிடம் இருந்து ஒரு செய்தி, ஆதிராக் நாட்டைப் பற்றியும், அவனது தமஸ்கு தலைநகரத்தைப் பற்றியும் எதிராக உள்ள கர்த்தருடைய செய்தி. “இஸ்ரவேலின் சகல கோத்திரங்களில் உள்ள ஜனங்கள் மட்டுமே தேவனைப் பற்றித் தெரிந்தவர்களல்ல. அவரிடம் ஒவ்வொருவரும் உதவி கேட்கிறார்கள். ஆமாத், ஆதிராக் நாட்டின் எல்லை. தீரு, சீதோன் நகரத்தார் திறமையும், மதிநுட்பமும் உடையவர்களாக இருந்தபோதிலும், இச்செய்தி அவர்களுக்கு எதிரானது. தீரு ஒரு கோட்டையைப் போன்று கட்டப்பட்டது. அங்குள்ள ஜனங்கள் வெள்ளியை வசூல் செய்தார்கள். அது புழுதியைப் போல் மிகுதியாக இருந்தது. பொன்னானது களி மண்ணைப்போன்று சாதாரணமாக இருந்தது. ஆனால் நமது அதிகாரியாகிய கர்த்தர் அவற்றை எடுத்துக்கொள்வார். அவர் ஆற்றல் மிக்க கப்பல் படையை அழிப்பார். நகரமானது நெருப்பால் அழிக்கப்படும்.

“அஸ்கலோனில் உள்ள ஜனங்கள் அவற்றைப் பார்ப்பார்கள். அவர்கள் அஞ்சுவார்கள். காத்சா ஜனங்கள் அச்சத்தால் நடுங்குவார்கள். எக்ரோன் ஜனங்கள் நிகழ்வதைப் பார்த்து நம்பிக்கையை இழப்பார்கள். காத்சாவில் எந்த அரசனும் விடுபடமாட்டான். அஸ்கலோனில் எவரும் வாழமாட்டார்கள். அஸ்தோத்தில் உள்ள ஜனங்கள் தங்களது உண்மையான தந்தை யாரென்று அறியமாட்டார்கள். நான் தற்பெருமைமிக்க பெலிஸ்திய ஜனங்களை முழுவதுமாக அழிப்பேன். அவர்கள் இரத்தமுள்ள இறைச்சியை உண்ணமாட்டார்கள். வேறு உண்ணக்கூடாத உணவையும் உண்ணமாட்டார்கள். மீதியுள்ள பெலிஸ்திய ஜனங்கள் என் ஜனங்களின் ஒரு பகுதியாக இருப்பார்கள். அவர்கள் யூதாவின் மற்றுமொறு கோத்திரமாக இருப்பார்கள். எக்ரோன் ஜனங்கள் என் ஜனங்களின் ஒரு பகுதியாக எபூசியர்களைப்போல இருப்பார்கள். நான் எனது நாட்டைக் காப்பாற்றுவேன். நான் பகைவர்கள் படைகளை என் நாட்டின் வழியாகப் போக அனுமதிக்கமாட்டேன். நான் அவர்கள் என் ஜனங்களைத் துன்புறுத்தும்படி விடமாட்டேன். என் சொந்தக் கண்களால் எனது ஜனங்கள் கடந்த காலத்தில் எவ்வளவு துன்புற்றார்கள் எனப் பார்த்தேன்.”

வருங்கால அரசன்

சீயோன் நகரமே, மகிழ்ச்சியாயிரு.
    எருசலேம் ஜனங்களே, மகிழ்ச்சியோடு கூவுங்கள்.
பார், உனது அரசன் உன்னிடம் வருகிறார்.
    அவர் நல்லவர், வெற்றிபெற்ற அரசன்.
    ஆனால் அவர் பணிவுள்ளவர்.
    அவர் கழுதை மேல் வந்துக்கொண்டிருக்கிறார்.
    இது வேலை செய்யக்கூடிய கழுதைக்கு பிறந்த இளங்கழுதை.
10 அரசன் கூறுகிறார்: “நான் எப்பிராயீமின் இரதங்களை அழித்தேன்.
    எருசலேமின் குதிரைவீரர்களை அழித்தேன்.
    நான் போரில் பயன்படும் வில்களை அழித்தேன்.”

அவ்வரசன் சமாதனத்தின் செய்தியை நாடுகளுக்கு அறிவிப்பான்.
    அவன் கடல் விட்டு கடலையும் ஐபிராத்து நதி தொடங்கி
    பூமியிலுள்ள தொலைதூர இடங்களையும் ஆள்வான்.

கர்த்தர் தனது ஜனங்களைப் காப்பாற்றுவார்

11 எருசலேமே, உனது உடன்படிக்கையை நாம் இரத்தத்தால் முத்தரித்தோம்.
    எனவே நான் தரையில் துவாரங்களில் அடைப்பட்ட ஜனங்களை விடுதலை பண்ணுவேன்.
12 கைதிகளே, வீட்டிற்குப் போங்கள்.
    இப்பொழுது நீங்கள் நம்பிக்கைக்கொள்ள இடமுண்டு.
நான் திரும்பி உங்களிடம் வருவேன்
    என்று இப்பொழுது சொல்கிறேன்.
13 யூதாவே, நான் உன்னை வில்லைப் போல் பயன்படுத்துவேன்.
    எப்பிராயீமே, நான் உன்னை அம்பாகப் பயன்படுத்துவேன்.
நான் உங்களை கிரேக்க நாட்டாருக்கு எதிராக
    வலிமையுள்ள வாளாகப் பயன்படுத்துவேன்.
14 கர்த்தர் அவர்களிடம் தோன்றுவார்.
    அவர் தமது அம்புகளை மின்னலைப் போன்று எய்வார்.
எனது அதிகாரியாகிய கர்த்தர் எக்காளம் ஊதுவார்.
    படையானது பாலைவனப் புயல்போல் விரையும்.
15 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் அவர்களைக் காப்பார்.
    வீரர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பதற்காகக் கற்களையும், கவண்களையும் பயன்படுத்துவார்கள்.
அவர்கள் பகைவரின் இரத்தத்தை வடியச் செய்வார்கள்.
    அது திராரட்சைரசத்தைப் போன்று பாயும்.
    அது பலிபீடத்தின் மூலைகளில் வழியும் இரத்தத்தைப் போன்று இருக்கும்.
16 அந்த நேரத்தில், அவர்களின் தேவனாகிய கர்த்தர்,
    மேய்ப்பன் ஆடுகளைக் காப்பது போல காப்பார்.
அவருக்கு அவர்கள் விலைமதிப்பற்றவர்கள்.
    அவர்கள் அவரது நாட்டில் ஒளிவீசும் நகைகளைப் போன்றவர்கள்.
17 எல்லாம் நல்லதாகவும், அழகானதாகவும் இருக்கும்.
    அங்கே அற்புதமான அறுவடை இருக்கும்.
ஆனால் அது உணவாகவும், திராட்சைரசமாகவும் இருக்காது.
    இல்லை, இது இளம் ஆண்களும், பெண்களுமாய் இருக்கும்.

கர்த்தருடைய வாக்குறுதிகள்

10 மழைக்காலத்தில் மழைக்காகக் கர்த்தரிடம் ஜெபம் செய். கர்த்தர் மின்னலை அனுப்புவார், மழை விழும். ஒவ்வொருவரின் வயலிலும் தேவன் செடிகளை வளரச் செய்வார்.

ஜனங்கள், தங்கள் சிறிய சிலைகளையும், மந்திரத்தையும் பயன்படுத்தி வருங்காலத்தை அறிந்துக்கொள்ள முயல்வார்கள். ஆனால் அவை பயனற்றதாகும். அந்த ஜனங்கள் தரிசனங்களைப் பார்த்து, அவர்கள் கனவுகளைப்பற்றி சொல்வார்கள். ஆனால் இது வீணானது. அவைகள் பொய்கள். எனவே ஜனங்கள் உதவிக்காக அங்கும் இங்கும் அலைந்து ஆடுகளைப்போல் கதறுவார்கள். ஆனால் அவர்களை வழிகாட்டி அழைத்துச் செல்ல மேய்ப்பன் எவரும் இருக்கமாட்டார்கள்.

கர்த்தர் கூறுகிறார்: “நான் மேய்ப்பர்கள் மீது (தலைவர்கள்) கோபமாக இருக்கிறேன். எனது ஆடுகளுக்கு (ஜனங்கள்) என்ன நிகழ்கிறதோ அவற்றுக்கு அத்தலைவர்களைப் பொறுப்பாளர்களாக ஆக்கினேன்.” (யூதாவின் ஜனங்கள் தேவனுடைய மந்தை. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உண்மையிலேயே தமது மந்தையைப்பற்றி அக்கறை கொள்வார். ஒரு போர்வீரன் தனது அழகிய போர்க்குதிரையைக் காப்பது போன்று அவர் காப்பார்.)

“யூதாவிலிருந்து மூலைக்கல், கூடார முனை, போர்வில் முன்னேறும் வீரர்கள் எல்லாம் சேர்ந்து வரும். அவர்கள் தம் பகைவரை வெல்வார்கள். இது வீரர்கள், தெருவில் உள்ள சேற்றில் செல்வது போல் இருக்கும். அவர்கள் போரிடுவார்கள். கர்த்தர் அவர்களோடு இருக்கும்வரை அவர்கள் குதிரை வீரர்களைக் கூடத் தோற்கடிப்பார்கள். நான் யூதாவின் குடும்பத்தை வலிமை உள்ளவர்களாக்குவேன். போரில் யோசேப்பிற்கு வெற்றிப் பெற நான் உதவுவேன். நான் அவர்களைப் பாதுகாப்போடு திரும்பக் கொண்டு வருவேன். நான் அவர்களை ஆறுதல்படுத்துவேன், இது நான் அவர்களை என்றும் புறம்பாக்கிவிடாமல் இருப்பவர்களைப்போல் இருப்பார்கள். நான் அவர்களின் தேவனாகிய கர்த்தர். நான் அவர்களுக்கு உதவுவேன். எப்பிராயீமின் ஜனங்கள் அளவுக்கு மீறி மதுபானம் குடித்த வீரர்களைப்போன்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களது குழந்தைகளும் கூட மகிழுவார்கள். அவர்கள் இதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியடையும்.

“நான் அவர்களைப் பார்த்து பரிகசிப்பேன். நான் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பேன். நான் உண்மையாக அவர்களைக் காப்பாற்றுவேன். அங்கே ஏராளமான ஜனங்கள் இருப்பார்கள். ஆம், நான் எனது ஜனங்களை நாடுகள் முழுவதும் சிதறடித்திருக்கிறேன். ஆனால் அத்தொலை நாடுகளிலிருந்து அவர்கள் என்னை நினைவுகூருவார்கள். அவர்களும் அவர்களது பிள்ளைகளும் வாழுவார்கள். அவர்கள் திரும்ப வருவார்கள். 10 நான் எகிப்திலிருந்தும், அசீரியாவிலிருந்தும் அவர்களை மீண்டும் அழைத்து வருவேன். நான் அவர்களை கீலேயாத் பகுதிக்கு கொண்டு வருவேன். அவர்களுக்கு இடம் போதாமல் போவதால், நான் அவர்களை அருகிலுள்ள லீபனோனிலும் வாழச் செய்வேன். 11 தேவன் முன்பு அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தபோது இருந்ததுபோல் இருக்கும். அவர் கடலின் அலைகளை அடிப்பார். கடல் பிளக்கும், ஜனங்கள் துன்பக்கடலை நடந்து கடப்பார்கள். கர்த்தர் நதியின் ஓடைகளை வறண்டு போகச் செய்வார். அவர் அசீரியாவின் கர்வத்தையும், எகிப்தின் அதிகாரத்தையும் அழிப்பார். 12 கர்த்தர் தமது ஜனங்களைப் பலமுள்ளவராகச் செய்வார். அவர்கள் அவருக்காக அவரது நாமத்தில் வாழ்வார்கள்.” கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

தேவன் மற்ற நாடுகளைத் தண்டிப்பார்

11 வீபனோனே, உன் வாசலைத் திற.
    அதனால் நெருப்பு அதன் வழியாக வந்து உன் கேதுரு மரங்களை எரிக்கும்.
சைபிரஸ் மரங்கள் அழும். ஏனென்றால் கேதுரு மரங்கள் விழுந்திருக்கும்.
    அந்தப் பலமான மரங்கள் எடுத்துச் செல்லப்படும்.
    பாஷானிலுள்ள ஓக் மரங்கள், வெட்டப்பட்ட காடுகளுக்காக கதறும்.
அழுதுகொண்டிருக்கும் மேய்ப்பர்களைக் கவனி.
    அவர்களின் ஆற்றல்மிக்க தலைவர்கள் கொண்டுப்போகப்பட்டனர்.
கெர்ச்சித்துக்கொண்டிருக்கும் இளஞ் சிங்கங்களைக் கவனி.
    அவற்றின் அடர்ந்த புதர்கள் யோர்தான் நதிக்கரையில் இருந்தன. அவை அழிந்துப்போயின.

எனது தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: “கொலைச் செய்யப்படுவதற்குரிய ஆடுகளைப் பொறுப்புடன் கவனித்துக்கொள்ளுங்கள். அவர்களின் தலைவர்கள் சொந்தக்காரர்களையும், வியாபாரிகளையும்போல உள்ளனர். சொந்தக்காரர்கள் தமது ஆடுகளைக் கொல்கிறார்கள், ஆனால் தண்டிக்கப்படுவதில்லை. வியாபாரிகள் ஆட்டினை விற்று, ‘கர்த்தரைத் துதியுங்கள். நான் செல்வந்தன் ஆனேன்!’ என்பார்கள். மேய்ப்பர்கள் தம் ஆடுகளுக்காக வருத்தப்படுவதில்லை. நான் இந்நாட்டில் வாழ்கிற ஜனங்களுக்காக வருத்தப்படுவதில்லை.” கர்த்தர் இவற்றைச் சொன்னார்: “பார், நான் ஒவ்வொருவரையும் அவர்களது அயலகத்தாரும், அரசனும் அடக்கியாண்டு அவர்களது நாட்டினை அழிக்கும்படி விடுவேன். அப்போது நான் அவர்களைத் தடுப்பதில்லை!”

எனவே, நான் கொல்லப்படுவதற்குரிய அந்தப் பரிதாபத்துக்குரிய ஆடுகளை மேய்ப்பேன். நான் இரண்டு கோல்களை கண்டெடுப்பேன். ஒன்றிற்கு அனுக்கிரகம் என்றும் இன்னொன்றிற்கு ஒற்றுமை என்றும் பேரிடுவேன். பின்னர், நான் ஆடுகளை மேய்க்கத் தொடங்குவேன். நான் ஒரே மாதத்தில் மூன்று மேய்ப்பர்களைக் கொன்றுப்போட்டேன். நான் ஆடுகளின் மேல் கோபமுற்றேன். அவை என்னை வெறுக்க தொடங்கின. பின்னர், “நான் உங்களை கவனியாமல் நிறுத்திவிடுவேன். நான் உங்களை இனிமேல் மேய்ப்பதில்லை. நான் அவற்றில் மரிக்க விரும்புகிறவர்களை மரிக்கட்டும் என்று விடுவேன். நான் அவற்றில் அழிய விரும்புகிறவர்கள் அழியட்டும் என்று விடுவேன். மீதியானவை ஒன்றை ஒன்று அழிக்கும்.” 10 பிறகு நான் அனுக்கிரகம் என்ற கோலை எடுத்தேன். நான் அதனை உடைத்தேன். தேவன் அனைத்து ஜனங்களோடும் செய்த உடன்படிக்கை உடைந்துபோனது என்பதைச் காட்டவே இதனைச் செய்தேன். 11 அந்நாளில் உடன்படிக்கை முடிந்தது. எனக்காகக் காத்திருந்த பரிதாபத்திற்குரிய ஆடுகள், இச்செய்தி கர்த்தரிடமிருந்து வந்தது என்பதை அறிந்தன.

12 பிறகு நான் சொன்னேன், “நீங்கள் எனக்குக் கூலி கொடுக்க விரும்பினால் கொடுங்கள். இல்லாவிட்டால் வேண்டாம்.” எனவே அவர்கள் எனக்கு 30 வெள்ளிக் காசுகளைக் கொடுத்தார்கள். 13 பிறகு கர்த்தர் என்னிடம், “நான் இவ்வளவே மதிப்புள்ளவன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே அத்தொகையை ஆலயக் கருவூலத்தில் எறி” என்றார். எனவே நான் முப்பது வெள்ளிகாசுகளை எடுத்து கர்த்தருடைய ஆலயக் கருவூலத்தில் எறிந்தேன். 14 பின்னர் நான் ஒற்றுமை என்ற கோலை, இரண்டு துண்டுகளாக உடைத்தேன். யூதாவும், இஸ்ரவேலும் கொண்ட ஒற்றுமை உடைந்தது என்று காட்டவே இவ்வாறு செய்தேன்.

15 பிறகு கர்த்தர் என்னிடம், “மதியற்ற மேய்ப்பனொருவன் பயன்படுத்தும் பொருட்களை இப்பொழுது நீ எடுத்துக்கொள். 16 இது நான் இந்த நாட்டுக்குப் புதிய மேய்ப்பனை ஏற்படுத்துவேன் என்பதைக் காட்டும். ஆனால் இந்த இளைஞனால் இழந்துப்போன ஆடுகளைப் பேணிக்காக்க இயலாது. அவனால் காயப்பட்ட ஆடுகளைக் குணப்படுத்தவும் முடியாது. அவனால் மெலிந்தவற்றுக்கு ஊட்ட முடியாது. அவன் கொழுத்தவற்றை முழுமையாக உண்பான். அவற்றின் குளம்புகள் மட்டுமே மீதியாகும்” என்றார்.

17 ஓ! எனது பயனற்ற மேய்ப்பனே,
    நீ என் மந்தையைக் கைவிட்டாய்.
அவனைத் தண்டித்துவிடு.
    அவனது வலது கண்ணையும், கையையும் வாளால் வெட்டு.
    அவனது வலது கை பயனற்றுப்போகும்.
    அவனது வலது கண் குருடாகும்.

யூதாவைச் சுற்றியுள்ள நாடுகளைப் பற்றிய தரிசனங்கள்

12 இஸ்ரவேலைப்பற்றி கர்த்தரிடமிருந்து வந்த துக்கச் செய்தி. கர்த்தர் வானத்தையும், பூமியையும் படைத்தார். அவர் மனிதனின் ஆவியை அவனுக்குள் வைத்தார். கர்த்தர், “பார், நான் சுற்றியுள்ள நாடுகளுக்கு எருசலேமை நச்சு கிண்ணமாகச் செய்வேன். நாடுகள் வந்து அந்நகரத்தைத் தாக்கும். யூதா முழுவதும் வலைக்குள் அகப்படும். ஆனால் நான் எருசலேமைக் கனமான பாறையாக்குவேன். அதனைத் எடுக்க முயல்பவன் சிதைக்கப்படுவான். அந்த ஜனங்கள் உண்மையாகவே சிதைக்கப்பட்டு சிதறடிக்கப்படுவார்கள். ஆனால், பூமியிலுள்ள அனைத்து நாடுகளும் எருசலேமிற்கு எதிராகச் சண்டையிடக் கூடுவார்கள். ஆனால் அந்நேரத்தில் நான் குதிரைகளையும், அதன் மேல் வீரர்களையும் மயக்கமுறச் செய்வேன். நான் பகைவர்களின் குதிரைகளையும், குதிரை வீரர்களையும் பயத்தினால் பேதலிக்கச் செய்வேன். ஆனால் என் கண்கள் திறக்கும். நான் யூதாவின் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டிருப்பேன். யூதாவில் உள்ள குடும்பத் தலைவர்கள் ஜனங்களை உற்சாகப்படுத்துவார்கள். அவர்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே உங்களது தேவன். அவர் நம்மை பலமுள்ளவர்களாக்குகிறார்’ என்றார்கள். அந்நேரத்தில், நான் யூதாவிலுள்ள குடும்பத் தலைவர்களை காட்டில் எரியும் நெருப்பாக்குவேன். அவர்கள் தம் பகைவரை வைக்கோலை எரிக்கும் நெருப்புப்போல அழிப்பார்கள். அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள பகைவர்களை எல்லாம் அழிப்பார்கள். எருசலேம் ஜனங்கள் திரும்பவும் தம் இடமாகிய எருசலேமில் ஓய்ந்திருந்து குடியிருப்பார்கள்” என்றார்.

கர்த்தர் முதலில் யூதா ஜனங்களைக் காப்பாற்றுவார். எனவே, எருசலேம் ஜனங்கள் அதிகமாகத் தற்பெருமை கொள்ள முடியாது. எருசலேமிலுள்ள தாவீதின் குடும்பமும், மற்ற ஜனங்களும் யூதாவின் ஜனங்களைவிடத் தம்மைப் பெரியவர்களாகப் புகழ்ந்துக்கொள்ள முடியாது. ஆனால், கர்த்தர் எருசலேமில் உள்ள ஜனங்களைக் காப்பார். அங்குள்ள தள்ளாடுகின்ற மனிதனும் கூடத் தாவீதைப்போன்று பெரும் வீரனாவான். தாவீதின் குடும்பத்திலுள்ள ஜனங்கள் இரதங்களைப் போன்றும், ஜனங்களை வழிநடத்தும் கர்த்தருடைய சொந்தத் தூதர்களைப் போன்றும் இருப்பார்கள்.

கர்த்தர் கூறுகிறார்: “அந்நேரத்தில், எருசலேமிற்கு எதிராகப் போரிட வரும் நாடுகளை நான் அழிப்பேன். 10 நான் எருசலேமில் உள்ள தாவீதின் குடும்பத்தாரையும் மற்ற ஜனங்களையும் கருணையின் ஆவியாலும், இரக்கத்தின் ஆவியாலும் நிரப்புவேன். அவர்கள் தாங்கள் குத்தின ஒருவரான என்னைப் பார்ப்பார்கள். அவர்கள் மிகவும் துக்கமாக இருப்பார்கள். அவர்கள், ஒருவன் தன் ஒரே மகனின் மரணத்துக்காக அழுகிறவனைப் போன்றும், ஒருவன் தன் மூத்த மகனின் மரணத்துக்காக அழுகிறவனைப் போன்றும் துக்கம் கொள்வார்கள். 11 எருசலேமில் பெருந்துக்கத்துக்கும், அழுகைக்கும் உரியகாலம் இருக்கும். இது மெகிதோன் பட்டணத்து பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத் ரிம்மோனின் புலம்பலைப் போன்றிருக்கும். 12 அங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்குள் அழுவார்கள். தாவீதின் குடும்பத்திலுள்ள ஆடவர்கள் தங்களுக்குள் அழுவார்கள். அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். நாத்தானின் குடும்பத்திலுள்ள ஆண்கள் தங்களுக்குள் அழுவார்கள். அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். சீமேயின் குடும்பத்து ஆண்களும் தங்களுக்குள் அழுவார்கள். அவர் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். 13 லேவியின் குடும்பத்திலுள்ள ஆண்கள் தங்களுக்குள் அழுவார்கள். அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். சிமியோன் குடும்பத்திலுள்ள ஆண்களும், அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். 14 அங்குள்ள மற்ற கோத்திரங்களிலும் இது போல் நிகழும். ஆண்களும் பெண்களும் தங்களுக்குள் அழுவார்கள்.”

வெளி 20

ஆயிரம் ஆண்டுகள்

20 பரலோகத்தில் இருந்து ஒரு தூதன் கீழே இறங்கி வருவதைக் கண்டேன். அவனிடம் பாதாள உலகத்தின் திறவு கோல் இருந்தது. அவன் தன் கையில் ஒரு நீண்ட சங்கிலியையும் வைத்திருந்தான். சாத்தான் எனப்படும் பழைய பாம்பாகிய ராட்சசப் பாம்பை அவன் பிடித்தான். அவன் அப்பாம்பை ஆயிரம் ஆண்டு காலத்துக்குச் சங்கிலியால் கட்டிப்போட்டான். அவன் அப்பாம்பைப் பாதாளத்திற்குள் எறிந்து மூடினான். ஆயிரம் ஆண்டுகள் முடியும் வரை பூமியின் மக்களை அது வஞ்சிக்காதபடிக்குப் பூட்டி முத்திரையிட்டான். அதன் பிறகு கொஞ்சக் காலத்துக்குப் பாம்பினை விடுதலை செய்யவேண்டும்.

சாத்தானின் தோல்வி

பிறகு நான் சில சிம்மாசனங்களைப் பார்த்தேன். அவற்றின்மேல் சிலர் அமர்ந்திருந்தனர். நியாயந்தீர்க்கிற அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்த மக்கள் இவர்களே ஆவார்கள். அப்போது இயேசுவைப் பற்றிய சாட்சிக்காகவும் தேவனுடைய செய்திக்காகவும் தலைவெட்டப்பட்டவர்களின் ஆன்மாக்களைக் கண்டேன். அவர்கள் அம்மிருகத்தையோ அல்லது அதனுடைய உருவத்தையோ வழிபடவில்லை. அவர்கள் அம்மிருகத்தின் அடையாளக் குறியை தம் முன் நெற்றியிலோ கைகளிலோ பெற்றிருக்கவில்லை. அவர்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவோடு ஆயிரம் வருஷங்கள் அரசாண்டார்கள். (மற்ற இறந்த மக்கள் 1,000 ஆண்டுகள் முடியும் மட்டும் உயிரடையவில்லை.)

இதுவே முதலாம் உயிர்த்தெழுதல் ஆகும். இந்த முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெற்றவர்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், பரிசுத்தமானவர்களும் ஆவார்கள். அவர்கள் மீது இரண்டாம் மரணத்துக்கு அதிகாரம் இல்லை. அவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் ஆசாரியராய் இருப்பார்கள். அவர்கள் இயேசுவோடு கூட ஆயிரம் ஆண்டுக் காலம் ஆட்சி செய்வார்கள்.

சாத்தான் முறியடிக்கப்படுதல்

ஆயிரம் ஆண்டுக் காலம் முடிந்த பிறகு, சிறையிலிருந்து சாத்தான் விடுதலை செய்யப்படுவான். உலகின் அனைத்து பாகங்களிலும் உள்ள தேசங்களில் இருக்கிற கோகையும் மகோகையும் வஞ்சிக்கச் செல்வான். போர் செய்வதற்காக மக்களை ஒன்று திரட்டுவான். ஏராளமான மக்கள் கடற்கரையில் உள்ள மணலைப் போன்று எண்ணிக்கையில் கூடுவர்.

சாத்தானின் படை எங்கும் பரந்தது. பூமியெங்கும் பரந்து தேவனுடைய மக்களுடைய முகாமையும் தேவன் நேசிக்கிற நகரையும் வளைந்துகொண்டது. ஆனால் பரலோகத்தில் இருந்து நெருப்பு கீழே வந்து சாத்தானின் படையை அழித்துவிட்டது. 10 மக்களைத் தந்திரத்தால் ஏமாற்றி வந்த சாத்தான், கந்தகம் எரியும் நெருப்புக் கடலுக்குள் வீசப்பட்டான். அவனோடு, அந்த மிருகமும், போலித் தீர்க்கதரிசியும் வீசப்பட்டனர். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வதைக்கப்படுவார்கள்.

வெள்ளை சிம்மாசனம்

11 பிறகு, ஒரு பெரிய வெள்ளை சிம்மாசனத்தையும் அதன் மேல் வீற்றிருக்கிறவரையும் நான் கண்டேன். அவர் பார்வையிலிருந்து வானமும், பூமியும் விலகி மறைந்தன. 12 மேலும் இறந்துபோன பெரியவர்களும், சிறியவர்களும் சிம்மாசனத்தின் முன்னே நிற்பதைக் கண்டேன். ஜீவப்புத்தகம் திறக்கப்பட்டது. வேறு சில புத்தகங்களும் திறக்கப்பட்டன. இறந்து போனவர்கள் அவர்களது செயல்களால் நியாயம் தீர்க்கப்பட்டனர். இவை எல்லாம் அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கின்றன.

13 கடல் தன்னுள் இறந்து போனவர்களை ஒப்படைத்தது. மரணமும், பாதாளமும் தங்களிடமிருந்த இறந்தவர்களை ஒப்படைத்தன. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த நற்செயல்களைப் பொறுத்து நியாயம் தீர்க்கப்பட்டான். 14 அப்போது மரணமும் பாதாளமும் நெருப்புக் கடலில் தள்ளப்பட்டன. இந்த நெருப்புக் கடலே இரண்டாம் மரணமாகும். 15 ஜீவப் புத்தகத்தில் எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ, அவன் நெருப்புக் கடலிலே தள்ளப்பட்டான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center