Old/New Testament
பறக்கும் ஓலைச்சுருள்
5 நான் மறுபடியும் மேலே பார்த்தேன். நான் ஒரு பறக்கும் புத்தகச்சுருளைப் பார்த்தேன். 2 தூதன் என்னிடம், “என்ன பார்க்கிறாய்?” எனக் கேட்டான்.
“நான் ஒரு பறக்கும் புத்தகச்சுருளைப் பார்க்கிறேன். அந்த புத்தகச்சுருள் 30 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்டது” என்று நான் சொன்னேன்.
3 பின்னர் தூதன் என்னிடம் சொன்னான்: “அந்த புத்தகச்சுருளில் சாபம் எழுதப்பட்டிருக்கிறது. புத்தகச்சுருளின் ஒரு பக்கத்தில் திருடிய ஜனங்களுக்கான சாபம் எழுதப்பட்டுள்ளது. புத்தகச்சுருளின் இன்னொரு பக்கத்தில் வாக்குறுதி அளிக்கும்போது பொய் சொன்ன ஜனங்களுக்கான சாபம் எழுதப்பட்டுள்ளது. 4 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: நான் இந்தப் புத்தகச்சுருளை திருடர்களின் வீடுகளுக்கும் கர்த்தருடைய நாமத்தால் பொய் சத்தியம் செய்தவர்களின் வீடுகளுக்கும் அனுப்புவேன். அந்தப் புத்தகச்சுருள் அங்கே தங்கி அது அவ்வீடுகளை அழிக்கும். அவ்வீட்டிலுள்ள கற்களும் மரத்தூண்களும் அழிக்கப்படும்.”
பெண்ணும் வாளியும்
5 பின்னர் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் வெளியே போனான். அவன் என்னிடம், “பார்! என்ன வருகிறதென்று காண்கிறாய்?” என்று கேட்டான்.
6 நான் “இது என்னவென்று அறியேன்” என சொன்னேன்.
அவன், “இது ஒரு அளவு பார்க்கும் வாளி” என்று சொன்னான். அதோடு அவன், “அந்த வாளி இந்த நாட்டிலுள்ள ஜனங்களின் பாவங்களை அளக்கும் வாளி” என்று சொன்னான்.
7 வாளியை மூடியிருந்த ஈயத்தினாலான மூடி அகற்றப்பட்டது. வாளிக்குள் ஒரு பெண் உட்கார்ந்துகொண்டிருந்தாள். 8 தூதன், “இப்பெண் பாவத்தின் பிரதிநிதியாய் இருக்கிறாள்” என்றான். பின்னர் தூதன் அப்பெண்ணை வாளிக்குள் தள்ளி, கனத்த மூடியினால் அதை மூடிப்போட்டான். இது பாவங்கள் மிகக் கனமானவை என்பதைக் காட்டும். 9 பின்னர் நான் ஏறிட்டுப்பார்த்தேன். நான் இரண்டு பெண்கள் நாரையைப் போன்ற சிறகுகளுடன் இருப்பதைப் பார்த்தேன். அவர்கள் பறந்து போனார்கள். சிறகுகளிலுள்ள காற்றால் வாளியை தூக்கிப் போயினர். அவர்கள் வாளியை தூக்கிக் கொண்டு காற்றில் பறந்தனர். 10 பின்னர் நான் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “அவர்கள் வாளியைத் தூக்கிக் கொண்டு எங்கே போகிறார்கள்?” என்றேன்.
11 தூதன் என்னிடம், “அவர்கள் சிநெயாரிலே அதற்கு ஒரு வீட்டைக்கட்டப் போய் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த வீட்டைக் கட்டிய பிறகு அந்த வாளியை அங்கே வைப்பார்கள்” என்றான்.
நான்கு இரதங்கள்
6 பின்னர் நான் சுற்றி திரும்பினேன். நான் மேலே பார்த்தேன். நான் நான்கு இரதங்கள் இரண்டு வெண்கல மலைகளுக்கிடையில் செல்வதைக் கண்டேன். 2 சிவப்புக் குதிரைகள் முதல் இரதத்தை, இழுத்துக்கொண்டு சென்றன. இரண்டாவது இரதத்தை கருப்புக் குதிரைகள் இழுத்துக்கொண்டு சென்றன. 3 வெள்ளைக் குதிரைகள், மூன்றாவது இரதத்தை இழுத்துச் சென்றன. சிவப்புப் புள்ளிகளை உடைய குதிரைகள், நான்காவது இரதத்தை இழுத்துச் சென்றன. 4 பின்னர் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “ஐயா, இவற்றின் பொருள் என்ன?” என்று கேட்டேன்.
5 தூதன், “இவை நான்கு காற்றுகள். இவை இப்பொழுதுதான் உலகம் முழுவதற்கும் ஆண்டவராக இருக்கிறவரிடத்திலிருந்து வந்திருக்கின்றன. 6 கருப்புக் குதிரைகள் வடக்கே செல்லும். சிவப்புக் குதிரைகள் கிழக்கே செல்லும். வெள்ளைக் குதிரைகள் மேற்கே செல்லும். சிவப்புப் புள்ளிகளையுடைய குதிரைகள் தெற்கே செல்லும்” என்றான்.
7 சிவப்புப் புள்ளிகளையுடைய குதிரைகள் புறப்பட்டுப்போய் பூமியில் அவைகளுக்கான பகுதிகளைக் காண ஆவலாய் இருந்தன. எனவே தூதன் அவைகளிடம், “பூமி முழுவதும் போங்கள்” என்றான். எனவே அவை பூமியில் தங்கள் பகுதிகளில் நடந்து சென்றன.
8 பின்னர் கர்த்தர் என்னைக் கூப்பிட்டார். அவர், “பார், வடக்கே செல்லும் குதிரைகள் பாபிலோனில் தம் வேலையை முடித்துவிட்டன. அவை எனது ஆவியை அமைதிபடுத்திவிட்டன. இப்பொழுது நான் கோபமாக இல்லை!” என்றார்.
ஆசாரியன் யோசுவா ஒரு கிரீடத்தைப் பெறுகிறான்
9 பின்னர், நான் கர்த்தரிடமிருந்து இன்னொரு செய்தியைப் பெற்றேன். அவர், 10 “எகல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனின் சிறை கைதிகளாய் இருந்து வந்திருக்கின்றனர். அம்மனிதர்களிடமிருந்து வெள்ளியையும், தங்கத்தையும் பெறு. பிறகு செப்பனியாவின் மகனாகிய யோசியாவின் வீட்டுக்குப் போ. 11 அந்தப் பொன்னையும் வெள்ளியையும் பயன்படுத்தி கிரீடம் செய். அந்தக் கிரீடத்தை யோசுவாவின் தலையில் வை. (யோசுவா தலைமை ஆசாரியனாக இருந்தான். யோசுவா யோத்சதாக்கின் மகன்) பிறகு யோசுவாவிடம் இவற்றைச் சொல். 12 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“‘கிளை என்று அழைக்கப்படும் மனிதன் இருக்கிறார்.
அவர் பலத்துடன் வளருவார்.
அவர் கர்த்தருடைய ஆலயத்தை கட்டுவார்.
13 அவர் கர்த்தருடைய ஆலயத்தைக்கட்டி,
அதற்குரியப் பெருமையைப் பெறுவார்.
அவர் தனது சிங்காசனத்தில் அமர்ந்து ஆள்பவனாவார்.
ஒரு ஆசாரியன் அவனருகில் நிற்பான்.
இவ்விரண்டு பேரும் சேர்ந்து சமாதானத்துடன் பணிசெய்வார்கள்.’
14 அவர்கள் இந்தக் கிரீடத்தை ஜனங்களுக்கு நினைவூட்டுவதற்காக ஆலயத்தில் வைப்பார்கள். அந்தக் கிரீடம் எல்தாய், தொபியா, யெதயா, செப்பனியாவின் மகன் யோசுவா ஆகியோருக்கு நினவூட்டும் சின்னமாக இருக்கும். யோசியா, இது அரசனின் வல்லமை தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை அவர்களுக்கு நினைவூட்டும்.”
15 தொலைத்தூரத்தில் வாழும் ஜனங்களும் வந்து அங்கு ஆலயம் கட்டுவார்கள். பின்னர் கர்த்தர் என்னை உங்களுக்காக அனுப்பினார் என்பதை உணர்வீர்கள். கர்த்தர் சொல்லுகிறபடி நீங்கள் செய்தால் இவை நிகழும்.
கர்த்தர் இரக்கத்தையும் கருணையையும் விரும்புகிறார்
7 தரியுவின் நான்காவது ஆட்சியாண்டில் கர்த்தரிடமிருந்து சகரியாவுக்கு ஒரு செய்தி வந்தது. இது ஒன்பதாவது மாதத்தின் நான்காம் நாள். (அது கிஸ்லே எனப்படும்) 2 பெத்தேல் ஜனங்கள் சரேத்சேரையும், ரெகெம்மெலேகும், அவனது ஆட்களையும் சில கேள்விகள் கேட்க கர்த்தரிடம் அனுப்பினார்கள். 3 அவர்கள் தீர்க்கதரிசிகளிடமும், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள ஆசாரியர்களிடமும் சென்றனர். அம்மனிதர்கள் அவர்களிடம் இந்த கேள்வியைக் கேட்டனர்: “பல ஆண்டுகளாக ஆலயத்தின் அழிவுக்காக நாங்கள் துக்கம் கொண்டோம். ஒவ்வொரு ஆண்டின் ஐந்தாவது மாதத்திலும் நாங்கள் அழுவதற்கும், உபவாசிப்பதற்கும் தனியான காலத்தை நியமித்திருந்தோம். நாங்கள் இதனைத் தொடரவேண்டுமா?”
4 நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைப் பெற்றேன் 5 “ஆசாரியர்களுக்கும் இந்த நாட்டிலுள்ள பிறருக்கும் இதனைக் கூறு. நீங்கள் ஐந்தாவது மாதத்திலும், ஏழாவது மாதத்திலும், உபவாசம் இருந்து 70 வருடங்கள் உங்கள் துக்கத்தைக் காட்டினீர்கள். ஆனால் அந்த உபவாசம் எனக்காகவா? 6 இல்லை. நீங்கள் உண்ணுவதும், குடிப்பதும் எனக்காகவா? இல்லை. இது உங்கள் சொந்த நலனுக்காக. 7 தேவன் முற்கால தீர்க்கதரிசிகளைக் கெண்டு இதே செய்தியைச் சொல்லியிருக்கிறார். எருசலேம் ஒரு வளமான நகரமாக ஜனங்களால் நிறைந்திருந்தபோது அவர் இவற்றைச் சொன்னார். எருசலேமைச் சுற்றியுள்ள நகரங்களிலும் நெகேவ், மேற்கத்திய மலை அடிவாரங்களிலும் ஜனங்கள் வாழ்ந்த காலத்தில் தேவன் இவற்றைச் சொன்னார்.”
8 இதுதான் சகரியாவுக்கான கர்த்தருடைய செய்தி.
9 சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
“எது நன்மையும் நேர்மையும் கொண்டதோ அவற்றை நீ செய்ய வேண்டும்.
நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையும் இரக்கமும் கொள்ளவேண்டும்.
10 விதவைகளையும், அநாதைகளையும்,
அயல் நாட்டாரையும், ஏழைகளையும் துன்புறுத்தாதேயுங்கள்.
ஒருவருக்கொருவர் தீமைச் செய்ய எண்ணவும் வேண்டாம்!” என்றார்.
11 ஆனால் அந்த ஜனங்கள் கேட்க மறுத்தனர்.
அவர்கள் அவர் விரும்பியதை செய்ய மறுத்தனர்.
அவர்கள் தங்கள் காதுகளை மூடினார்கள்.
எனவே, தேவன் என்ன சொல்கிறார் என்பதை கேட்க முடியவில்லை.
12 அவர்கள் மிகவும் கடின மனமுடையவர்கள்.
அவர்கள் சட்டங்களுக்கு அடிபணிவதில்லை.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தனது ஆவியைக்கொண்டு
தனது ஜனங்களுக்குத் தீர்க்கதரிசிகள் மூலமாக செய்திகளை அனுப்பினார்.
ஆனால் ஜனங்கள் கேட்கவில்லை.
எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மிகவும் கோபமுற்றார்.
13 ஆகவே சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
“நான் அவர்களைக் கூப்பிட்டேன்.
அவர்கள் பதில் சொல்லவில்லை.
இப்பொழுது அவர்கள் என்னைக் கூப்பிட்டால்,
நான் பதில் சொல்லமாட்டேன்.
14 நான் மற்ற நாடுகளை, ஒரு புயலைப்போன்று அவர்களுக்கு எதிராகக் கொண்டுவருவேன்.
அவர்கள் அந்த நாடுகளை அறியமாட்டார்கள்.
ஆனால், இந்த நாடு பிற நாடுகள் வந்து போன பிறகு அழிக்கப்படும்.
இந்த செழிப்பான நாடு அழிக்கப்படும்” என்றார்.
எருசலேமை ஆசீர்வதிக்க கர்த்தர் வாக்குறுதி அளிக்கிறார்
8 இதுதான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வருகிற செய்தி. 2 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “நான் சீயோனை உண்மையாக நேசிக்கிறேன். அவள் என்னை விசுவாசிக்காதபோது நான் மிகவும் கோபங்கொள்ளும் அளவுக்கு அதிகமாக அவளை நேசித்தேன்”. 3 கர்த்தர் கூறுகிறார், “நான் சீயோனுக்கு திரும்ப வந்திருக்கிறேன். நான் எருசலேமில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். எருசலேம் விசுவாசமுள்ள நகரம் என்று அழைக்கப்படும். சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய மலையானது பரிசுத்தமான மலை என அழைக்கப்படும்.”
4 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “எருசலேமின் பொது இடங்களில் வயதான ஆண்களும், பெண்களும் மீண்டும் காணப்படுவார்கள். ஜனங்கள் நீண்டகாலம் கைதடியின் தேவை வரும்வரை வாழ்வார்கள். 5 நகரமானது தெருக்களில் விளையாடும் குழந்தைகளால் நிறைந்திருக்கும். 6 தப்பிப் பிழைத்தவர்கள் இதனை ஆச்சரியமானது என்று நினைப்பார்கள். நானும் இதை ஆச்சரியமானது என்றே நினைப்பேன்!”
7 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “பார், நான் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகளிலிருந்து என் ஜனங்களை மீட்டுக் கொண்டிருக்கிறேன். 8 அவர்களை இங்கே மீண்டும் அழைத்து வருவேன். அவர்கள் எருசலேமில் வாழ்வார்கள். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களின் நல்ல உண்மையுள்ள தேவனாக இருப்பேன்.”
9 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “பலமாயிருங்கள். இன்று ஜனங்களாகிய நீங்கள் அதே செய்தியைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இது, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தனது ஆலயத்தை மீண்டும் கட்ட முதல் அஸ்திபாரக் கல்லைப் போட்டபோது சொன்னது. 10 அந்த நேரத்துக்கு முன்பு, கூலிக்கு வேலை ஆட்களையும், வாடகைக்கு மிருகங்களையும் அமர்த்த மனிதர்களிடம் பணம் இல்லாமல் இருந்தது. ஜனங்களுக்கு வந்து போவது பாதுகாப்பானதாக இல்லை. அவர்களுக்கு எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை இல்லாமல் இருந்தது. நான் ஒவ்வொருவரையும் தன் அயலாருக்கு எதிராக மாற்றியிருக்கிறேன். 11 ஆனால் இப்பொழுது அதுபோன்றில்லை. மீதியானவர்களுக்கு நான் முன்பு போன்று இருக்கமாட்டேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
12 “இந்த ஜனங்கள் சமாதானத்தோடு நடுவார்கள். அவர்களின் திராட்சைச் கொடிகள் திராட்சைகளைத் தரும். நிலம் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். மேகங்கள் மழையைத்தரும். நான் எனது ஜனங்களுக்கு இவற்றையெல்லாம் தருவேன். 13 ஜனங்கள் தமது சாபங்களில் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் பெயர்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால் நான் இஸ்ரவேலையும், யூதாவையும் காப்பாற்றுவேன். அவற்றின் பெயர்கள் ஆசீர்வாதங்களாக மாறும் எனவே அஞ்ச வேண்டாம். உறுதியாய் இருங்கள்.”
14 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “உங்களது முற்பிதாக்கள் என்னைக் கோபமூட்டினார்கள். எனவே நான் அவர்களை அழிக்க முடிவு செய்தேன். மனதை மாற்றிக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார். 15 “ஆனால் இப்பொழுது நான் என் மனதை மாற்றிக் கொண்டேன். அதே வழியில் நான் எருசலேமிற்கும், யூத ஜனங்களுக்கும் நன்மை செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். எனவே அஞ்சவேண்டாம். 16 ஆனால் நீங்கள் இவற்றைச் செய்யவேண்டும். நீங்கள் அயலாரிடம் உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் நகரங்களில் நீங்கள் முடிவெடுக்கும்போது உண்மையானவற்றையும் சரியானவற்றையும் செய்யுங்கள். அது சமாதானத்தைக் கொண்டுவரும். 17 உனது அயலார்களைத் துன்புறுத்த ரகசியத் திட்டங்களைப் போடவேண்டாம். பொய்யான வாக்குறுதிகளை செய்யவேண்டாம். நீங்கள் அவற்றைச் செய்து மகிழ்ச்சி அடையக்கூடாது. ஏனென்றால், நான் அவற்றை வெறுக்கிறேன்” கர்த்தர் இவற்றைக் கூறினார்.
18 நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து இச்செய்தியைப் பெற்றேன். 19 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “உங்களுக்குத் துக்கம் கொள்ளவும், உபவாசம் இருக்கவும், நாலாவது மாதத்திலும், ஐந்தாவது மாதத்திலும், ஏழவாவது மாதத்திலும், பத்தாவது மாதத்திலும் சிறப்பான நாட்கள் இருக்கும். அந்தத் துக்கத்துக்குரிய நாட்களை மகிழ்ச்சிக்குரிய நாட்களாக மாற்றவேண்டும். அவை நல்ல மகிழ்ச்சிகரமான நாட்களாக இருக்கும். நீங்கள் உண்மையையும் சமாதானத்தையும் நேசிக்க வேண்டும்.”
20 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்,
“எதிர்காலத்தில், எருசலேமிற்கு பல நகரங்களிலிருந்து ஜனங்கள் வருவார்கள்.
21 வேறுபட்ட நகரங்களிலிருந்து ஜனங்கள் ஒருவரையொருவர் வாழ்த்துதல் சொல்லுவார்கள்.
அவர்கள், ‘நாங்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதுகொள்ளப் போகிறோம்’ என்பார்கள்.
மேலும் மற்றவன் ‘நான் உன்னோடு வரவிரும்புகிறேன்’ என்பான்.”
22 சர்வ வல்லமையுள்ள கர்த்தரைப் பார்ப்பதற்காக அநேக நாடுகளிலிருந்து அநேக ஜனங்கள் வருவார்கள். அவர்கள் அவரை தொழுதுகொள்வதற்காக வருவார்கள். 23 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “அந்த வேளையில், வேறு வேறு மொழிகளைப் பேசுகிற ஜனங்கள் யூதரிடம் வருவார்கள். பல அன்னிய நாட்டினர் ஒரு யூதனின் உடையின் ஓரத்தைப் (வஸ்திரத்தொங்கலை) பிடித்துக்கொள்வார்கள். அவர்கள், ‘தேவன் உங்களோடு இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டோம். நாங்கள் அவரை தொழுதுகொள்ள உங்களோடு வரலாமா?’ என்று கேட்பார்கள்.”
பரலோகத்தில் தேவனைப் புகழ்தல்
19 இதற்குப்பிறகு பரலோகத்தில் உள்ள ஏராளமான மக்களின் ஓசையைப்போல ஒலித்ததைக் கேட்டேன், அவர்கள்,
“அல்லேலூயா!
தேவனைத் துதியுங்கள், வெற்றியும், மகிமையும், வல்லமையும் நம் தேவனுக்கு உரியது.
2 அவரது நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நேர்மையுமானவை.
நமது தேவன் மாபெரும் வேசியைத் தண்டித்துவிட்டார்.
இந்த உலகத்தை தன் வேசித்தனத்தால் கெடுத்தவள் அவளே.
அவள் கொன்ற தமது ஊழியர்களின் இரத்தத்துக்கு தேவன் பழிவாங்கினார்”
என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
3 பரலோகத்திலுள்ள மக்கள்,
“அல்லேலூயா!
அவள் எரிவதால் வரும் புகை என்றென்றைக்கும் எழும்பிக்கொண்டிருக்கும்” என்றும் சொன்னார்கள்.
4 பிறகு இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் பணிந்து வணங்கி, சிம்மாசனத்தில் வீற்றிருந்த தேவனை வழிபட்டனர்.
“ஆமென் அல்லேலூயா”
என அவர்கள் சொன்னார்கள்.
5 பின்னர் சிம்மாசனத்தில் இருந்து ஒரு குரல் வந்தது. அது,
“நமது தேவனுக்கு சேவை செய்யும் அனைத்து மக்களே, அவரைத் துதியுங்கள்.
நமது தேவனுக்கு மகிமையளிக்கும் பெரியோரும் சிறியோருமான மக்களே, நமது தேவனைத் துதியுங்கள்!”
என்று கூறியது.
6 அதற்குப் பிறகு ஏராளமான மக்களின் ஓசையைப்போல ஒலித்ததைக் கேட்டேன். அது பெரு வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும் இடியோசை போலவும் கேட்டது. அவர்கள் சொன்னார்கள்:
“அல்லேலூயா!
நமது தேவனாகிய கர்த்தர் ஆளுகிறார்.
அவரே சர்வ வல்லமையுள்ளவர்.
7 நாம் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைவோம்.
தேவனுக்கு மகிமையைக் கொடுப்போம்! ஏனெனில் ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்தது.
ஆட்டுக்குட்டியானவரின் மணமகள் தன்னைத் தயாராக்கிக்கொண்டாள்.
8 மெல்லிய ஆடைகள் அவள் அணியும்படியாகத் தரப்பட்டன.
அந்த ஆடைகள் பளபளப்பானவை, சுத்தமானவை.”
(மெல்லிய ஆடை என்பது தேவனுடைய பரிசுத்தமான மக்களின் நற்செயலைக் குறிக்கும்.)
9 பிறகு அத்தூதன், “ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாளில் விருந்துண்ண அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இதனை எழுதி வைத்துக்கொள்” என்றான். “இவை தேவனுடைய உண்மையான வார்த்தைகள்” என்றும் சொன்னான்.
10 பிறகு நான் அந்தத் தூதனை வணங்குவதற்காகக் குனிந்தேன். ஆனால் அந்தத் தூதன் என்னிடம், “என்னை வணங்கவேண்டாம். இயேசுவின் உண்மையைக் கைக்கொண்டுள்ள உன்னைப்போலவும் உன் சகோதரர்களைப் போலவும் நான் ஒரு ஊழியக்காரன். தேவனை வணங்கு. ஏனென்றால் இயேசுவின் உண்மை தீர்க்கதரிசனத்தின் ஆவியாய் இருக்கிறது” என்றான்.
வெள்ளைக் குதிரையின்மேல் சவாரி செய்பவர்
11 பிறகு, நான் பரலோகம் திறப்பதைக் கண்டேன். எனக்கு முன்னால் ஒரு வெள்ளைக் குதிரை நின்றது. அதன்மீது இருந்தவர் நம்பிக்கை என்றும் உண்மையென்றும் அழைக்கப்படுகிறார். அவர் நியாயம் தீர்ப்பதிலும் போர் செய்வதிலும் மிகச் சரியாக இருக்கிறார். 12 அவரது கண்கள் எரிகிற நெருப்புபோல ஜொலித்தது. அவரது தலையில் பல கிரீடங்கள் இருந்தன. அவரது பெயர் அவருக்கு மேல் எழுதப்பட்டிருந்தது. அப்பெயர் அவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. வேறு எவருக்கும் அப்பெயர் தெரியாது. 13 அவர் இரத்தத்தால் நனைக்கப்பட்டிருந்த அங்கியை அணிந்திருந்தார். அவர் பெயரே தேவனுடைய வார்த்தை ஆகும். 14 பரலோகத்தின் படைகள் அவரைப் பின்தொடர்ந்தன. அவர்கள் வெள்ளைக் குதிரைகளின் மேல் வந்தனர். அவர்கள் வெள்ளையும் சுத்தமுமான மெல்லிய ஆடையை அணிந்திருந்தனர். 15 அவரது வாயிலிருந்து கூர்மையான வாள் வெளியே வருகிறது. அவர் பிற நாடுகளை வெல்ல அதனைப் பயன்படுத்துவார். அவர் இரும்புக் கோலால் அத்தேசங்களை ஆள்வார். அவர் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கோபமாகிய ஆலையிலுள்ள திராட்சையை மிதிப்பார். 16 அவரது ஆடையின் மேலும் தொடையின் மேலும்
“இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தர்”
என்னும் பெயர் எழுதப்பட்டிருந்தது.
17 பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்கக் கண்டேன். வானத்தில் பறந்துகொண்டிருந்த அனைத்துப் பறவைகளிடமும் அவன் உரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தான். “தேவனுடைய சிறந்த விருந்துக்கு அனைவரும் சேர்ந்து வாருங்கள். 18 அரசர்கள், சேனைத் தலைவர்கள், புகழ்பெற்ற மனிதர்கள் ஆகியோரின் சரீரங்களை உண்ணமுடியும் வண்ணம் ஒருங்கிணைந்து வாருங்கள். குதிரைகள் மற்றும், குதிரைகளின் மேல் சவாரி செய்தவர்களின் உடல்களைத் தின்னவும், சுதந்தரமானவர்கள், அடிமைகள், சிறியவர்கள், பெரியவர்கள் ஆகிய மக்கள் அனைவரின் சரீரங்களைத் தின்னவும் வாருங்கள்” என்றான்.
19 பிறகு நான் அந்தக் குதிரையின் மேல் ஏறி இருக்கிறவரையும் அவரது படையையும் எதிர்த்துப் போரிட அந்த மிருகமும் தன் படைகளுடன் பூமியின் அரசர்களும் ஒருங்கிணைந்ததைக் கண்டேன். 20 ஆனால், அந்த மிருகம் பிடிபட்டது. போலித் தீர்க்கதரிசியும் பிடிபட்டான். இவனே அந்த மிருகத்திற்காக அற்புதங்களை செய்தவன். மிருகத்தின் அடையாளத்தைக் கொண்டிருந்தவர்களையும் மிருக விக்கிரகத்தை வழிபட்டவர்களையும் இவ்வற்புதங்களால் அவன் வஞ்சித்தான். போலித் தீர்க்கதரிசியும் மிருகமும் கந்தகம் எரிகிற நெருப்புக் கடலில் உயிரோடு போடப்பட்டார்கள். 21 குதிரையின் மேல் வந்தவரின் வாயிலிருந்து வெளிவந்த வாளால் அவர்களுடைய படைகள் கொல்லப்பட்டன. அவர்களின் சரீரங்களைப் பறவைகள் திருப்தியுறும்வரை தின்றன.
2008 by World Bible Translation Center